

சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
“வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு“
எனப்பெற்ற தமிழகத்தின் வரலாறு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த தென்பதனைச் சரித்திர அறிஞர் நாளுக்குநாள் நன்குணர்ந்து வருகின்றனர். தமிழ் நாட்டின் சரித்திரம் தொன்று தொட்டு அதனை ஆண்டுவந்த சேர சோழ பாண்டிய வேந்தர்கள், இடைக் காலத்தே ஆட்சி புரிந்த பல்லவர்கள் என்போரின் வரலாறுகளில் பெரும்பாலும் அடங்கியிருக்கிறது. சரித்திர நோக்கில் ஏனை மன்னர்களின் வரலாற்றினும் சோழர் வரலாறு விரிவுடையதாகத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் எழுதிப் பயிலப்பெற்று வருகின்ற இந்திய தேச சரித்திரப் புத்தகங்களில் தமிழ் நாட்டின் வரலாறு எங்கோ ஒரு மூலையில் சிறிதளவாகக் காணப்படுகின்றது. தமிழ்நாட்டின் வரலாற்றினை அறிந்கொள்ளுதற்குரிய சாதனங்களும் சில பெரியார்களின் அரிய முயற்சியால் முப்பது நாற்பது ஆண்டுகளாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் நாட்டின் பழைய வரலாறு, நாகரிகம், முதலியவற்றைத் தாய்மொழி வாயிலாக நம் இளைஞர்கட்கு நன்கு கற்பிக்க வேண்டுமென்னும் உணர்ச்சி இக்காலத்தில் இந்நாட்டுப் பெரியார் பலரிடை உண்டாகி யிருப்பது வெளிப்படை. இந்நிலையில்,
“குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத்தான்
புரண்டிட் டோடித் தரங்கநீர் அடைக்க லுற்ற”
அணில் போன்று, யானும், சோழர் சரித்திரத்தின் முதற் பகுதியாக இதனை எழுதலாயினேன்.
பத்து ஆண்டுகளின் முன் நாட்டுக்கோட்டை வணிகர்களின் ஊர் ஒன்றில் தமிழன்னையின் தவப் புதல்வராகிய மகா மகோபாத்தியாயர் ஸ்ரீமத் உ.வே.சாமிநாதையர் அவர்கள் தலைமையின் கீழ் நடந்த பேரவையில் யான் சோழர் சரித்திரம் என்னும் பொருள் குறித்துப் பேச நேர்ந்தது. ஐயரவர்கள் முடிப்புரையில் அதனைச் சிறிது பாராட்டிப் பேசியதுடன், சென்னையிலிருந்து என் நண்பராகிய பண்டிதமணி திருவாளர் மு. கதிரேசச் செட்டியாரவர்கட்கு விடுத்த கடிதத்திலும் அதனைக் குறிப்பிட்டெழுதியிருந்தார்கள். தலைமை சான்ற புலமையுடைய பெரியாரொருவரின் மதிப்பிற்கு அச் சிற்றுரை இலக்காயினமையின், பின்பு அதனை எழுத்துருவிற் கொணரும் ஊக்கம் எனக்கு உளதாயிற்று. சிற்சில பகுதிகளைச் சில தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியிட்டேன். அங்ஙனம் வெளியானவற்றைப் பின்பு செப்பஞ் செய்தும், முன் எழுதாதிருந்த பகுதிகளை எழுதிச் சேர்த்தும் இப்புத்தகத்தை வெளியிடலானேன்.
இதிற் கூறப்பெற்ற வேந்தர்களில் மனு, முசுகுந்தன், சிபி, காந்தன், தொடித்தோட் செம்பியன் என்போர் கால வரையறைக்கு உட்படாதோராவர். அவருள்ளும் முசுகுந்தனானவன் சரித்திரக் காரர்க்கு முற்றிலும் புறம்பான பழம்பிறப்பு, வானவர், அவுணர் என்னும் செய்திகளுடன் தொடர்புடையனாகின்றான். எனினும், அன்னோர் சோழகுல முன்னோராகக் கொள்ளப்பெற்று அவர் வரலாறுகள் நல்லிசைப்புலவரின் செய்யுட்களிற் பயின்றிருத் தலானும், பல நற்பொருளை அறிவுறுத்துவன ஆகலானும் இந்நூலிற் கூறப்படுதற்கு அவர்கள் முற்றிலும் உரிமையுடையராவர். அன்றியும்,
“கொற்ற வள்ளை யோரிடத் தான“
என்னும் தொல்காப்பியப் புறத்திணையியற் சூத்திரவுரையில், `அவுணரான் முற்றப்பட்ட துறக்கத்தினை அகத் துழிஞையானாகி மனுவழித்தோன்றிய முசுகுந்தனோடு இந்திரன் காத்தாற் போல்வனவும் பிறவும் தேவர்க்குக் கூறுதலால்’ என நச்சினார்க்கினியர் உரைப்பது போன்றவற்றின் பொருள் விளக்கத்திற்கும் அவர் வரலாறுகள் தமிழ் மக்களால் ஒருதலையாக அறியத்தகு வனவாகும். கரிகாலன் முதலிய ஏனை மன்னர்களின் வரலாறுகட்கு அவர்கள் காலத்தில் விளங்கிய புலனழுக்கற்ற சான்றோராகிய நல்லிசைப் புலவர்கள் நேரிற் கண்டு கூறியனவும், சிறிது பிற்காலத்திருந்த புலவர்கள் அறிந்து கூறியனவுமாகிய புறச்சான்றுகளும், ஒரோவழி அம்மன்னர்களே கூறியனவாகிய அகச்சான்றுகளும் உண்மையின் அவற்றை உறுதியுடைய சரித்திர மாகக் கொள்ளல் தகும். கல்வெட்டும், செப்புப் பட்டயமுமாகிய கருவிகள் கிடைக்கப் பெறாமையொன்றானே அறிவுடையோர் இவை சரித்திரமாகா என ஒருபொழும் கூறத்துணியார்.
கல்லூரி மாணவர்களுக்கேயன்றி உயர்தரப் பள்ளியிற் (ஹைஸ்கூலில்) படிப்போர்க்கும் நன்று விளங்க வேண்டுமென்னும் எண்ணத்தினால் எளிய நடையில் கூடியவரையிற் சந்தி பிரித்தெழுதியும், மேற்கோள் பலவற்றுக்குப் பொருள் மாத்திரம் தந்தும், எடுத்துக் காட்டிய செய்யுட் பகுதிகட்குப் பொருள் விளக்கியும் இதனை எளிதாக்கியிருக்கின்றேன்.
இறுதியிற் குறிப்புரையும் எழுதிச் சேர்த்துளேன். கல்வி கேள்விகளில் மிகவும் குறைபாடுடையயான் எழுதிய இதன்கண் பல பிழைகள் இருத்தல் கூடும். அறிவுடையோர் அவற்றைப் பொறுத்து, இத்தகைய பணியில் சிறியேற்கு மேன்மேல் ஊக்க முண்டாக்குவார்கள் என்னும் துணிபுடையேன்.
இதனை அச்சிடுதற்கு எழுதும் பொழுது கீழைச்சிவற்பட்டி, மீனாட்சிசுந்தரேசர் கலாசாலைத் தலைமையாசிரியரும் என் நண்பரும் ஆகிய திருவாளர் அ.மு.சரவண முதலியாரவர்கள் புரிந்த உதவி பாராட்டற்குரியதாகும். வழக்கம் போல் ஊக்கமெடுத்து இதனை நன்கு அச்சிட்டுத்தந்த டாட்சன் அச்சுக்கூடத் தலைவர் திருவாளர் வி.பி. ஜெகநாத பிள்ளையவர்கட்கு நன்றியறிதலுடையேன்.
ந. மு. வேங்கடசாமி.



