
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
5. முசுகுந்தன்
மாந்தாதாவின் மக்கள் மூவரிலொருவனாகப் பாகவத முதலிய புராணங்களிற் கூறப்பெற்றுள்ள இம்மன்னனைக் குறித்துக் கந்தபுராணத்தால் அறியலாகும் செய்திகள் பின்வருவன:
பண்டொரு காலத்தில் வெள்ளியங்கிரியில் வானளாவிய பூங்காவிலே ஓர் வில்வ மரத்தடியில் சிவபெருமான் உமாதேவி யாரோடும் எழுந்தருளியிருந்தனர். அப்பொழுது மரங்களில் வாழும் இயல்புடைய ஓர் முசுக்கலையானது அவ் வில்வ மரத்தின் இலை களைப் பறித்து அம்மையப்பர் திருமேனி மறையுமாறு போட்டுக் கொண்டிருந்தது. அது கண்டவளவில் அம்மைக்குக் குரங்கின் மீது சீற்றமுண்டாயிற்று. பரங்கருணைத் தடங்கடலாய பெருமான் அம்மையாரின் சீற்றத்தை மாற்றி யருளி, அம்முசுவிற்கு நல்லுணர் வளித்து, ‘நீ புரிந்த பூசனையுவந்தனம்; வில்வத்தழை கொண்டு இங்ஙனம் எம்மைக் குற்றமறப் பூசித்தமையால், நீ, பகலவன் குலத்திற் றோன்றிப் பார் முழுதும் அரசாளுவை’ என்று அருள் புரிந்தார். அங்ஙனம் அருள் பெற்ற முசுவும் பெருமானது திருவருளை என்றும் மறவாமைப் பொருட்டு, தான் அரசனாய காலத்தும் முசு முகத்துடன் இருக்க வரம்பெற்றுக் கருவூரின் கண்ணே அரசர் குலத்திலே தோற்றஞ் செய்தது. பெற்றோர்கள் முசுமுகத்துடன் தோன்றிய தம் குழந்தைக்கு முசுகுந்தன் எனப் பெயரிட்டுச் சிறப்பியற்றி, இளம் பருவத்திலேயே சகல கலைகளையும் கற்குமாறு செய்து, அரசவுரிமையை அவனிடம் ஒப்புவித்து விட்டுத் தவமியற்றச் சென்றனர். முசுகுந்த மன்னனும் சிவபெருமான் திருவருளைக் கணப்பொழுதும் மறத்தல் இலனாய், அளியும் ஆற்றலும் மிக்கு, மன்னுயிர்களைத் தன்னுயிர்போல் ஓம்பி முறை வழுவாது ஆட்சி நடாத்தி வருவானாயினன்.
இப்படி இருக்கும் நாளில், முருகப்பெருமானானவர் சூரபன்மனைச் சங்கரித்துவிட்டுத் திருப்பரங்குன்றமெய்தித் தெய்வ யானையாரைத் திருமணம் புரியும் செய்தியைத் தேவேந்திரனுடய ஒற்றரால் அறிந்து, அவன் சென்று திருமணத்தினைத் தரிசித்துக் குமாரக் கடவுளின் திருவருள் பெற்றுத் திரும்பினன்.
பின்னும், கந்தபிரானுக்குரியவாகும் வெள்ளிக்கிழமை, கார்த்திகை, கந்த சஷ்டி என்னும் விரதங்களின் மேன்மையும், பெரியோர் பலர் அவற்றை அநுட்டித்துப் பேறு பெற்ற வரலாறுகளும் விசிட்ட மிக்க வசிட்ட முனிவரால் அறிந்து தானும் அவ்வாறே அவற்றை அநுட்டித்துச் சிறப்பெய்தினன். மற்றும் இம் மன்னர் பெருந்தகை, பொன்னுலகாளும் புரந்தரனானவன் வலன் முதலிய அவுணர்களுக்கு ஆற்றானாகித் தன்னைத் துணைவேண்டிய காலத்தில் வானுலகடைந்து அவுணர்களை வென்று வாகை மிலைந்தனன். அப்பொழுது இந்திரன், தனக்குச் செய்த உதவிக்குக் கைம்மாறளிக்க விரும்பி, கற்பகத்தரு முதலிய சிலவற்றைத் தவிர்த்து யாது வேண்டினும் தருவதாகக் கூறினன். கூறலும், இம்மன்னன், முன்பு திருமாலால் பூசிக்கப் பெற்றதும், பின் திருமாலிடமிருந்து பெற்று இந்திரன் பூசித்து வருவதுமான தியாகேசர் திருவுருவைத் தருமாறு பரமசிவனுடைய திருக் குறிப்பின்படி வேண்டினன். இந்திரனோ ஆன்மலாபப்பேறு கருதித் தான் வழிபட்டு வரும் அவ்வருட் குறியினைத் தருதற்கு மனமிலனாய், அதுபோலும் வேறு ஆறு திருவுருவங்களைத் தேவதச்சனைக் கொண்டு இயற்றி வைத்து, ‘இவற்றுள் யாது வேண்டினும் பெறுக’ என மொழிந்தனன். முசுகுந்தன் இவ்வேழினுள் எதனைப் பெறுவ தென்று தடுமாற்றமெய்தி, பின்பு, திருமாலும் இந்திரனும் வழிபாடு செய்த அவ்வுருவையே திருவருட்பாங்கால் உணர்ந்து வேண்ட, புரந்தரன் வேறு செய்வதற்குரிய வழியிலனாய் அவ்வேழு படிவங்களையும் பெறுமாறு அளித்தனன். முசுகுந்த வேந்தனும் அவைகளைப் புவியின்கட் கொணர்ந்து, திருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்காறாயல், திருக்கோளிலி, திருமறைக் காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் என்னும் ஏழு திருப்பதிகளிலும் முறையே ஒரோ வொன்றாகப் பிரதிட்டை செய்தனன்.
இங்ஙனம் ஏழு தியாகராச மூர்த்திகளும் எழுந்தருளப் பெற்ற இவ்வேழு திருப்பதிகளும் சத்த விடங்கத்தலம் என்று கூறப்படும். இதனை,
“சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறுகாரார் மறைக்காடு காறாயல் – பேரானஒத்ததிரு வாய்மூர் உவந்ததிருக் கோளிலிசத்த விடங்கத் தலம்“
என்னும் வெண்பாவானறிக.
இனி, முசுகுந்தனைப்பற்றி விண்டு புராணத்தில் ஓர் கதை கூறப்பெற்றுள்ளது. அது,
“யவன தேசத்ததிபனான காலயவனன் என்பான் ஒருவன் பல்கோடி மிலேச்சர்களுடனும், நால்வகைப் படையுடனும் புறப்பட்டுவந்து கண்ணபிரான் இருந்த மதுரா புரியை முற்றுகை யிட்டனன். அவன் படையெடுத்து வருதலை முன்னமே யறிந்த கண்ணன், துவாரகையை உண்டாக்கி, மதுரையிலுள்ளாரனைவரையும் அவன் வருதற்கு முன்பே அங்கே அனுப்பிவிட்டு, தான் மாத்திரம் மதுரையில் தனித்திருந்து, யவனன் மதுரையை முற்றிய பொழுது அஞ்சியோடுவான் போன்று கையிற் படைக் கலமின்றியே ஓடி ஓர் மலைமுழைஞ்சினுள் நுழைந்தனன். காலயவனனும் கண்ணனைப் பின்றொடர்ந்து சென்று குகையினுட்புக்கு, அங்கே துயின்று கொண்டிருந்த முசுகுந்தனைக் கண்டு, `இவன்றான் கண்ணன்; பொய்த்துயில் புரிகின்றான்’ என்று எண்ணிக் காலால் உதைத்தான்; உடனே முசுகுந்தன் தூக்கத்தினின்றெழுந்து அவனை நோக்கினான். அவ்வளவில் யவனன் விளிந்து சாம்பராயினன். அவ்வாறு அவன் விளிந்தமைக்குக் காரணம் யாதெனில், முசுகுந்தச் சக்கரவர்த்தி யானவன் தேவாசுர யுத்தத்தில் தான் வானவர்க்குத் துணையாய் நின்று அவுணர்களை மடித்த காலையில் அமரர்கள் மகிழ்வுற்று `நினக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று வினவ, அவன், தான் போர்த் தொழிலால் நெடுநாள் உறக்கமின்றியிருந் தமையால் களைப்புற்று, `யான் நெடுங்காலம் துயிலும்படி வரம்கொடுமின்.’ எனக் கேட்டனன். அன்னவரும் அப்படியே வரங்கொடுத்து `நின்னைத் துயிலினின் றெழுப்புவோன் யாவனாயினும் அவன் சாம்பராவன்’ என்று கூறிவிடுத்தனர். இதுவே காலயவனன் மாண்டமைக்குக் காரணம் என்க. பின்பு, முசுகுந்தனானவன் கண்ணனைப் பார்த்து `நீ யார்?’ என்று வினவி, `யான் யதுகுலத்து வசுதேவர் மைந்தன்’ என்று அவன் கூறக்கேட்டு, `இருபத்தெட்டாம் சதுர்யுகத்தில் துவாபரத்தின் முடிவில் யதுகுலத்திலே திருமால் அவதரித் தருளுவன்’ என்று முன்பு விருத்த கார்க்கிய முனிவர் தனக்குச் சொல்லியிருப்பதை நினைவு கூர்ந்து, அவன் பகவனாகிய திருமாலே என்று துணிந்து துதித்தனன். அப்பொழுது கண்ணபிரான் முசுகுந்த மன்னனை நோக்கி `நீ விரும்பிய உத்தம லோகங்களை யடைந்து, திப்பிய போகமெல்லாம் நுகர்ந்து, முடிவில் ஓர் பெருமை வாய்ந்த குலத்திலே பழம் பிறப்புணர்ச்சி யுடையவனாய்த் தோன்றி முத்தியடைவாய், என்று அருளிச்செய்தனன். அங்ஙனம் அருள் பெற்ற முசுகுந்தனும் குகையினின்றும் வெளிப்போந்து குறிய வடிவுடன் திரிகிற மனிதரைப் பார்த்து, கலியுகம் வந்துவிட்ட தென்று தெரிந்துகொண்டு தவம் புரிதற் பொருட்டுக் கந்தமாதனம் என்னும் குன்றத்தை அடைந்தனன் என்பது.
முசுகுந்தன் என்பவன் பேராற்றலும் பெரும் புகழும் வாய்ந்த தென்னாட்டு மன்னர்களில் ஒருவன் என்பதும், அவன் பூர்வ புண்ணியத்தால் அளவுகடந்த சிவ பத்தியும், தவயோக சித்தியும் கைவரப் பெற்றவன் என்பதும் மேற்காட்டிய கதைகளினின்றும் வடித்தெடுக்கற்பாலவாய உண்மைகளாம்.
இனி, இம்மன்னன் தேவர்கள் பொருட்டாக அவுணர் களோடு போர் புரிந்த செய்தி சில வேறுபாட்டுடன் சிலப்பதிகாரம் முதலியவற்றினின்றும் அறியக் கிடக்கின்றது.
ஒரு காலத்தில் கலுழனானவன் விண்ணுலகத்தை யடைந்து அங்கே சேமத்தில் வைக்கப்பட்டிருந்த அமிழ்தத்தை எடுத்துச் சென்றானாக, அதனை மீட்கக் கருதிய இந்திரன், யான் சென்று வருங்காறும் இந் நகரைக் காப்போர் யார் என நினைத்தலும், முசுகுந்த மன்னன் எழுந்து `யான் பாதுகாத்தல் கடன்’ என மொழிந்தான். புரந்தரன் அதுகேட்டு மகிழ்ந்து `இது நின்வழி நிற்பதாக’ என ஓர் பூதத்தை நிறுத்திச் சென்றனன். அக்காலை அவுணர்கள் பெருந்திரளாகக் கூடிவந்து பொருது, போரில் ஆற்றாது நிலைகெட்டோடியவர்கள், பின்பு ஓருங்கு கூடிச் சூழ்ச்சி செய்து, இவனை வஞ்சத்தாலன்றி வெல்லுதல் அரிதெனத் துணிந்து, பேரிருட்கணை யொன்றை விடுத்தார்கள். அதனால் எங்கணும் இருள் சூழலும், முசுகுந்தன் செய்வதறியாது நெஞ்சம் திகைத்து நிற்புழி அப்பூதமானது ஓர் மந்திரத்தை யருள, அவன் அதுபெற்று வஞ்சனையைக் கடிந்து அவுணர் படையைக் கொன்று குவித்து நின்றனன். மீண்டுவந்த இந்திரன் நிகழ்ந்த வற்றையறிந்து, உற்றவிடத்து உதவி புரிந்த அப்பூதத்தினை அம்மன்னனுக்கே மெய்க்காவலாகுமாறு பணிக்க, அஃது ஆங்கு நின்றும் போந்து காவிரிப்பூம்பட்டினத்தில் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரு பகுதிகளுக்கும் இடையேயுள்ள நாளங்காடியில் (காலைக் கடைத் தெரு) இருந்து பலியுண்டு வருவதாயிற்று, இதனை,
“கடுவிசை யவுணர் கணங்கொண் டீண்டிக்கொடுவரி யூக்கத்துக் கோநகர் காத்ததொடுகழன் மன்னற்குத் தொலைந்தன ராகிநெஞ்சிருள் கூர நிகர்த்துமேல் விட்டவஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்திருந்துவே லண்ணற்குத் தேவ னேவஇருந்துபலி யுண்ணு மிடனுங் காண்கும்.”
என்னும் சிலப்பதிகாரக் கடலாடு காதைப் (7-13) பகுதியானும், அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை, மேற்கோள்களானும் அறிக. மேற்கோளில்,
“காவ லழித்துச் சேவல்கொண் டெழுந்தவேட்கை யமுதம் மீட்க வெழுவோன்“
என்று இந்திரன் பொன்னகரை விடுத்துச் சென்றதன் காரணம் குறிப்பிடப்பட்டுளது. சேவல் என்பது பறவையின் ஆணுக் கெல்லாம் பொதுப்பெயராயினும் தன் தாயின் அடிமைத் தனத்தைப் போக்குதற்குக் கருடனானவன் தேவலோகம் புக்கு அமுதினை எடுத்துச்சென்றனன் என்று மகாபாரதம் முதலிய வற்றிற் கூறப்படுதலால் சேவல் என்பதனைக் கலுழனென்றே கொள்ளல்வேண்டும். தன் தாய் மாற்றாளுக்கு அடிமையாயினாள் என்பதை அறிந்தவளவில் ஆண் மகனாய கலுழன் சிறிதும் பொறுக்கலாற்றானாய், உடனே எவ்வாற்றானும் தாயின் அடிமையைப் போக்குவ தென்று உறுதி செய்து கொண்டு, அதன் பொருட்டு நிலவுலகில் எவராலும் அடைய வொண்ணாத தேவாமிர்தமாகிய மருந்தினைக் கொணர்ந்து தாயை மீட்டனன்; தாயின் அடிமையைப் போக்கியவனே எஞ்ஞான்றும் கடவுளுடனிருந்து பணி செய்யும் பேற்றையும், அதனால் பெரிய திருவடி என்னும் பெயரையும் எய்துதற்குரியனாயினான்.
இனி, புகார் நகரில் முற்கூறிய நாளங்காடிப் பூதமன்றி மற்றொரு பூதமும் உள்ளது. அது நான்கு தெருக்கள் கூடுமிடத்தில் உள்ளதாகலின் சதுக்கப்பூதம் எனப்படும். புகாரில் உள்ள ஐவகை மன்றங்களில் பூத சதுக்கமும் ஒன்று. அம் மன்றங்களைப் பற்றிய அரிய செய்திகளை இந்திரவிழ வூரெடுத்த காதையா னறியலாகும். இனி, முசுகுந்தன் துயரைப் போக்கிய தான நாளங்காடிப் பூதமானது காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரவிழாச் செய்யப்படா தொழியின் வெகுண்டு துன்பம் விளைவிக்கும் என்று கூறப்படுகின்றது. இதனை,
“…………………………வான்பதி தன்னுள் கொடித்தேர்த் தானைக் கொற்றவன் றுயரம் விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்மடித்த செவ்வாய் வல்லெயி றிலங்கஇடிக்குரல் முழக்கத் திடும்பை செய்திடும்“
என்னும் மணிமேகலை விழாவறை காதையான் (6, 19-22) அறிக. முசுகுந்தன் தேவருலகத்தைப் பாதுகாத்த செய்தி,
“பொருது றைத்தலை புகுந்துமுசு குந்த னிமையோர்புரம டங்கலும் அரண்செய்து புரந்த புகழும்“
என்று கலிங்கத்துப் பரணியிற் குறிக்கப்பெற்றுள்ளது. திருவாரூரில் தியாகேசப்பெருமான் முசுகுந்தனால் கொண்டு வரப்பட்ட செய்தியை,
“பூவசம் செய்துவிண் ணாடு புணர்பகை போக்கியவோர்கோவசம் செய்வள ராரூர்த் தியாகர்“
என்று திருவாரூர் ஒருதுறைக்கோவை கூறுகின்றது.



