சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்

12. தித்தன்

இவ்வரசன் உறையூரிலிருந்தவன். இவன் மகன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்பான்.

இழையணி பணைத்தோள் ஐயை தந்தைமழைவளந் தரூஉ மாவண் டித்தன்

என அகத்திலே பரணரால் இவன் பாராட்டப்படுவதிலிருந்து இம்மன்னன் பெருங் கொடையாளி என்பதும், கற்பிற் சிறந்த ஐயை என்பாள் இவனுக்குப் புதல்வி என்பதும் வெளியாகின்றன.

தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை

நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்கன்முதிர் புறங்காட் டன்ன

பலநல்ல புலனணியும்சீர்சான்ற விழுச்சிறப்பிற்சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்உறந்தை

எனப் புறநானூற்றிலும் முறையே பரணரும் நக்கீரரும் உறந்தையை இவனுக் குரிமைப்படுத்துரைப்பது முதலியவற்றால் இவன் உறையூரைச் சிறந்த மதிலரணும் காட்டரணும் உடையதாகச் செய்து பகைவென்று குடிகளை நன்கு புறந்தந்து புகழ்சிறந்து விளங்கினன் எனப் புலனாகின்றது. வடுக அரசனாகிய கட்டி என்பவன் ஒருகால் இத்தித் தனுடன் போர்செய்யக் கருதி வடநாட்டில் அரசுபுரிந்த பாணன் என்னும் வீரனுடன் சேர்ந்து உறையூரையடைந்து ஓர் புறத்தில் இருக்கையில் அவனது நாளவைக்கண் ஒலிக்கப்பெறும் கிணையோசை கேட்டு அச்சமுற்றுப் பொராது ஓடினன். இது,

வலிமிகு முன்பிற் பாணனொடு மலிதார்த்தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்பாடின் றெண்கிணைப் பாடுகேட் டஞ்சிப்போரடு தானைக் கட்டிபொராஅ தோடிய வார்ப்பினும் பெரிதே

என அகப்பாட்டிற் கூறப்படுகின்றது. இத்தகு சிறப்பு வாய்ந்த இவ்வேந்தன் தன் மைந்தனாகிய போர்வைக்கோப்பெருநற்கிள்ளி யுடன் எக்காரணத்தாலோ பகைமை கொண்டிருந்தான். அவன் தன்போலும் தாளாண்மையும் வீரமும் இலனாய் மடிந் திருந்தமையால் வெறுப்புற்று அவனைத் தனது நாட்டினின்றும் ஓட்டிவிட்டனன்போலும்? எனினும், தந்தையால் நாடிழந்தோடி வறுமையாற் புல்லரிசிக் கூழ் உண்டிருந்த பெருநற்கிள்ளி பின்பு மிக்க வலிமையும் போர்த்திறலும் வாய்ந்தவனாயினான்; முக்கா வனாட்டு ஆமூர்மல்லன் என்பானொடு மற்போர் பொருது அவனைக் கொன்று புகழ்பெற்றான். இச்செய்திகள் சாத்தந்தையாரும் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையாரும் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியின்மீது அருமையாகப் பாடியுள்ள புறப் பாட்டுக்களால் வெளிப்படுகின்றன.

இனி, தித்தன் என்னும் இச்செம்பியர் குரிசில் சிறந்த புலவனாகவும் திகழ்ந்தனன் என்பது இவன் பாடிய பாட்டொன்று அகநானூற்றில் இருப்பதனால் அறியப்படும். இவன் தித்தன் வெளியன் எனவும் வீரைவெளியன் தித்தன் எனவும் கூறப்படுவன். இவனது காலம் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியின் காலத்திற்கு முற்பட்டதாகுமென்று கருதப்படுகிறது. இவனைப் புகழ்ந்து பாடினோர் பரணரும், நக்கீரருமாவர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *