
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
18. கைத்தொழில், வாணிகம்
இனி, அந்நாளிலே சோணாட்டில் கைத்தொழில்களும் வாணிகமும் எங்ஙனம் பல்கியிருந்தனவென்பது கரிகாலன் வரலாறு கூறிய வழிக் காணப்படும். அங்கே ‘அரியவும் பெரியவும்’ எனச் சுருங்கக் கூறியவற்றை இங்கே காட்டுதும். சிலப்பதிகாரம் ஊர் காண்காதை உரையில் அடியார்க்கு நல்லார் கூறிய அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகில் எனப்பட்ட அகிலின் தொகுதியும், கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்பி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி எனப்பட்ட துகிலின் தொகுதியும், மலையாரம், தீமுரண் பச்சை, கிழான் பச்சை, பச்சைவெட்டை, அரிசந்தனம், வேர், சுக்கொடி எனப்பட்ட ஆரத்தொகுதியும், அம்பரேச்சம், கத்தூரி, சவாது, சாந்து, குங்குமம், பனிநீர், புழுகு, தக்கோலம், நாகப்பூ, இலவங்கம், சாதிக்காய், வசுவாசி, நிரியாசம், தைலம் எனப்பட்ட வாசத்தொகுதியும், மலைச்சரக்கு, கலை, அடைவுசரக்கு, மார்பு, இளமார்பு, ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப்பற்று, வாராசான், குமடெறிவான், உருக்குருக்கு, வாறோசு, சூடன், சீனச்சூடன் எனப்பட்ட கருப்பூரத்தொகுதியும் புகார் முதலிய நகரங்களில் வாணிகம் செய்யப்பட்டவாதல் ஒருதலை.



