
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
11. நலங்கிள்ளி
இவன் கிள்ளிவளவனுக்குத் தம்பி யென்பது `சிலைக்கயல் நெடுங்கொடி ஆர்புனைதெரியல் இளங்கோன் றன்னால் காரியாற்றுக் கொண்ட மாவண் கிள்ளி’ எனக் கிள்ளிவளவன் மணிமேகலையிற் கூறப்படுவதால் அறியலாவது. இவன் தம்பி மாவளத்தான் என்பது 43 ஆம் புறப்பாட்டின் கீழுள்ள பாடினோர் பாடப்பட்டோரைக் குறிக்கும் தொடரில், `சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத் தானும்’ என்றிருப்பதாற் பெறப்படுகின்றது. இவன் (நலங்கிள்ளி) சேட்சென்னி, புட்பகை, தேர்வண் கிள்ளி என்னும் பெயர்களானும் கூறப்படுவன். இவன் ஆவூரிலும் உறையூரிலும் முற்றுகையிட்டு நெடுங்கிள்ளியை வென்றதனோடு, அவனைக்காரியாறு என்னு மிடத்திற் பொருது கொன்றான். அவ்விடத்திற்றானே சேர பாண்டியர்களையும் வென்று அவர்கள் கொடியைக் கைப் பற்றினான். இவன் பாண்டி நாட்டிலுள்ள ஏழு அரண்களை வென்று கைப்பற்றி, அவற்றின்கண் தனது புலிக்கொடியை நாட்டினான் என்று 33ஆம் புறப்பாட்டினால் தெரிகிறது. இவன் அளவிடற்கரிய தனது தானையுடன் வலமாகப் புறப்பட்டு முன் பாண்டியனையும், பின் சேரனையும் வென்று அவ்வளவில் அமையானாய் வடநாட்டரசர்களையும் வென்று வலியழித்து மீள்வன் எனப் புலவர்கள் இவனைப் பாராட்டியுள்ளார்கள்.
“தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசையஇடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகரநிலமலர் வையத்து வலமுறை வளைஇவேந்துபீ டழித்த ஏந்துவேற் றானையொடு“
என ஆலத்தூர்கிழார் இவனது படைப்பெருமையையும், வெற்றித் திறத்தையும் அழகாகப் புனைந்துரைத்தனர். ‘முன் செல்லும் தூசிப்படையோர் பனையின் நுங்கினை உண்ண, இடையே செல்வோர் அதன் பழத்தினை நுகர, பின் செல்வோர் பனையின் சுட்ட கிழங்கினை உண்ண இங்ஙனம் உலகத்து வலமுறையாகச் சூழ்ந்து மாற்றரசரை வலிகெடுத்த சேனையோடு’ என்பது இதன் பொருள். இக்கருத்தே கோவூர்கிழாரால் வேறு வகையாகக் கூறப்பெற்றுளது. அவர், ‘கீழ்கடல் பின்னதாக மேல் கடலின் வெள்ளிய அலை நின் குதிரையின் குளம்பை யலைப்ப வலமாக முறையே வருதலு முண்டாமென்று வடநாட்டுள்ள அரசுகள் கலங்கி நெஞ்சிலே அவலம் மிகத் துயிலாத கண்களை யுடையவாயின’ என்றனர்.
இங்ஙனம் ஒப்பற்ற வீரனாகிய இம்மன்னன் புலவர்களை நன்கு மதித்து, அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அவ்வாறொழுகி வந்தனன் என்று தெரிகிறது. இவன் உறையூரை முற்றுகை யிட்டிருந்த பொழுது, கோவூர் கிழார் என்னுஞ் சான்றோர் ஓர் பாட்டியற்றிக் கூறி, இவனையும் இவன் பகைவனாகிய நெடுங்கிள்ளியையும் சந்து செய்வித்தார். அவ்வரிய செய்யுள்,
“இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன்நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே, நின்னொடுபொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றேஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியேஇருவீர் வேற லியற்கையு மன்றே, அதனால்குடிப்பொரு ளன்று நுஞ் செய்தி கொடித்தேர்நும்மோ ரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே“
என்பது. ‘பெரிய பனையின் தோட்டினைச் சூடினோனல்லன்; கரிய கொம்பினையுடைய வேம்பினது மாலையை உடையோனல்லன்; நினது கண்ணியும் ஆத்தியாற் கட்டப்பட்டது; நின்னுடன் போர் செய்வானது கண்ணியும் ஆத்தியாற் கட்டப்பட்டது; ஆதலால் நும்முள் ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியன்றோ? இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; ஆதலால் நுமது செய்கை நும் குடிக்குத் தக்கதன்று; இம்மாறுபாடு நும்மைப்போலும் தேர்வேந்தர்க்கு உடம்பு பூரிக்கும் உவகையைச் செய்யும்; இது தவிர்தலே நுமக்குத் தக்கது.’ என்பது அதன் பொருளாகும்.
இவ்வரசனை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய முதுமொழிக்காஞ்சி என்னும் துறையமைந்த செய்யுட்கள் படித்தறிந் தின்புறற்பாலன. ‘நூறு இதழ்களையுடைய தாமரை மலரின் நிரை போல் ஏற்றத்தாழ்வில்லாத சிறந்த குடியிற்பிறந்து வீற்றிருந் தோர்களை எண்ணுமிடத்துப் புகழும் பாட்டும் உடையோர் சிலர்; தாமரையின் இலையையொப்பப் பயன்படாது மாய்ந்தோர் பலர்; புலவராற் பாடப்படும் புகழுடையோர் தாம் செய்யும் நல்வினையை முடித்து, விசும்பிலே பாகனாற் செலுத்தப் படாத விமானத்தைப் பொருந்துவர் என்று அறிவுடையோர் கூறுவர்; எந்தையே, நலங்கிள்ளி, தேய்தலுண்மையும் பெருகலுண்மையும் மாய்தலுண்மையும் பிறத்தலுண்மையும் கல்வி முகத்தால் அறியாதவரும் அறியும்படி காட்டித் திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற உலகத்தில் ஒன்றில் வல்லராயினும் அல்லராயினும் வறுமையால் வருந்திவந்தோர்க்கு அருள் புரிவாயாக’ என்றும்; ‘தீயோரை ஒறுத்தலும் நல்லோர்க்கு அருள்பண்ணுதலுமாகிய முறைமையின் மடிந்திராது, நல்லதன் நலனும் தீயதன் றீமையும் இல்லயென்போர்க்கு இனமாகா தொழிக; விழவின்கண் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம்போல முறை முறையே தோன்றி இயங்கி இறந்து போகின்ற இவ்வுலகத்தில் நின்சுற்றம் மகிழ்ச்சியிடத்ததாக; நீ பாதுகாத்த பொருள் புகழிடத் ததாக’ என்றும்; பிறவாறும் அவற்றிற் கூறப்பட்டுள்ளன. முன்பு போர் செய்து வெற்றி கொள்ளுதலையே பொருளாகக் கொண்டிருந்த இம்மன்னன் முதுகண்ணன் சாத்தனாரால் அறிவுறுத்தப் பெற்று அறஞ் செய்தலை மேற் கொண்டானாவன்.
இனி, இவ்வேந்தன் கவிதை யியற்றும் வளமுடைய சிறந்த புலவனாகவும் விளங்கினனென இவன் பாடிய இரண்டு அழகிய செய்யுட்கள் புறநானூற்றில் உள்ளமையால் அறியப்படுகிறது. அவ்விரண்டு செய்யுட்களில் ஒன்று மாற்றாரை நோக்கி வஞ்சினங் கூறுவதாக வுள்ளது. அதிலே, ‘மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி ஈயவேண்டுமென்று இரப்பராயின் அவர்க்கு என் அரசாட்சி கொடுத்தலோ எளிது; இனிய உயிரேயாயினும் கொடுப்பேன்; ஆற்றலுடையோரது வலியைப் போற்றாது என் உள்ளத்தையிகழ்ந்த அறிவில்லாதோன் துயில்கின்ற புலியை யிடறிய குருடன் போல உய்ந்து போதலோ அரிது; மூங்கிலைத் தின்னும் யானையின் காலில் அகப்பட்ட நீண்ட மூங்கின் முளையையொப்ப அவ்விடத்து வருந்தும்படி மேற்சென்று பொருதிலேனாயின், குற்றமற்ற நெஞ்சத்தாற் காதல்கொள்ளாத பொது மகளிரது பொருந்தாத முயக்கத்தால் என்மாலை துவள்வதாக’என்று கூறியிருப்பது கிள்ளியின் பெருமித வுணர்ச்சியையும், உளத்தூய்மையையும் நன்கு புலப்படுத்துகின்றன. மற்றொரு செய்யுள் ‘தம் குடியின் முதியோர்களைக் கூற்றம் கொண்டுபோக, ஊழினாலே தம்பால் வந்த, முன்னோரின் வெற்றியாலுண்டாகிய அரசுரிமையைப் பெற்றேமாயின் இத்தலைமையைப் பெற்றேமெனக் கொண்டு தம் குடிமக்களை இறை வேண்டியிரக்கும் ஆண்மையில்லாத உள்ளஞ்சிறியோன் பெறின், அவ்வரசுரிமை அவனுக்குத் தாங்க வொண்ணாதாம்படி மிகவும் கனத்தது; மனவெழுச்சியும் முயற்சியுமுடைய சீரியோன் பெறுவனாயின், வெண்குடையும் முரசுமுடைய அரசாட்சியைப் பொருந்திய செல்வம் தாழ்ந்த நீரையுடைய வற்றிய குளத்திடத்துச் சிறிய நெட்டியின் உலர்ந்த சுள்ளிபோலப் பெரிதும் நொய்தாகும்’ என்னும் பொருளுடையது. இதிலிருந்து அவனுடைய உள்ளமிகுதியும், குடிகளைப்புரக்குங் கொள்கையும் நன்கு வெளிப்படுகின்றன.
இவ்வரசனைப் பாடிய புலவர்கள் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர்கிழார், ஆலத்தூர்கிழார் என்போர். இவருள், இவன் துஞ்சியபின் இருந்து இரங்கிப்பாடியவர் ஆலத்தூர் கிழார். கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரன் என்னும் புலவராற் பாடப்பட்ட இலவந்திப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளிசேட்சென்னி யென்பான் இம்மன்னனேயாயின் இவன் இலவந்திப்பள்ளி என்னுமிடத்தில் உயிர் துறந்தானாவன். மதுரைக் குமரனாரும் இவனைப் பாடினாராவர்.



