சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்

17. அரசியல்

சோழநாட்டின் எல்லையும் அளவும் இவை யென்பதனை.

கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள்வெள் ளாறுகுடதிசையிற் கோட்டைக் கரையாம் வடதிசையில்ஏணாட்டு வெள்ளா றிருபத்து நாற்காதம்சோணாட்டுக் கெல்லையெனச் சொல்

என்னும் தனிப்பாடல் உணர்த்தா நிற்கும். சோணாடேயன்றித் தொண்டை நாடு முதலியனவும் பழையசோழமன்னர்களின் ஆட்சியில் அடங்கியிருந்தன என்றாவது, அவர்கள் ஆணைக்குக் கீழ்ப்பட்டிருந்தன என்றாவது கூறுதல் பொருந்தும். 1அந்நாளில், நாட்டின் (மண்டலத்தின்) பிரிவுகட்குக் கூற்றம், கோட்டம், நாடு என்னும் பெயர்கள் வழங்கின. குறிச்சி, பாடி, ஊர், குடி, பதி, பாக்கம், பட்டினம், நகர் முதலியன ஊர்கட்கு வழங்கிய பெயர் களாகும். இவற்றுள் பட்டினம், நகர் என்பன பேரூர் அல்லது அரசன் உறையும் ஊரைக்குறிக்கும். இவ்விரண்டினுள் பட்டினம் என்பது கடற்கரையிலுள்ள நகராகும். நாடு என்பதுதேம் என்னும் பெயரானும் வழங்கிற்று. சங்கச் செய்யுட்களினால் அறியலா கின்ற சோழர் தலைநகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்னும் இரண்டுமாம். சிலப்பதிகார வேனிற் காதையில்,

மாட மதுரையும் பீடார் உறந்தையும்கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும்

எனச் சோணாட்டிற்கு இவ்விரண்டு தலைநகர் இளங்கோவடிகளால் ஒருங்கு குறிப்பிடப்படுதல் காண்க. இவற்றுள் உறையூர் உறந்தை எனவும் கோழி எனவும் வழங்கப்படும். ஓர் கோழியானது யானை யொன்றைப் போரிலே தொலைத்த இடத்தில் அமைக்கப்பெற்றதாகலின் இந்நகர்க்குக் கோழியெனப் பெயருண்டாயது என்பர்;

முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கியபுறஞ்சிறை வாரணம் புக்கனர்

என இளங்கோவடிகள் கூறுதலுங் காண்க.

மற்றொரு தலைநகர்க்குச் சம்பாபதி, காவிரிப்பூம்பட்டினம் என்னும் பெயர்கள் உண்டாய வரலாறு மணிமேகலையிற் கூறப் பட்டிருத்தல் முன் சோணாட்டின் பழமை கூறியவிடத்தும், அதற்குக் காகந்தி என்னும் பெயருண்டாயது காந்தன் வரலாறுரைத்த விடத்தும் போந்தமை காண்க. புகார் என்னும் பெயர் அதற் குண்டாயது மரக்கலங்கள் புகும் துறைமுகமுடைமையாலாம். பெரிப்ளஸ் ‘கமாரம்’ என்றும், டாலமி ‘கபேரிஸ்’ என்றும் கூறியது இந்நகரையே என்பர். இத் தலைநகரின் அமைப்பும், சிறப்பும் கரிகாலன் வரலாறுரைத்த விடத்துக் காட்டப்பெற்றன.

சோழர் தமிழகத்து முடிகெழுவேந்தர் மூவருள் ஒருவராகலின், இவர்,

படையும் கொடியும் குடையும் முரசும்நடைநவில் புரவியும் களிறும் தேரும்தாரும் முடியும் நேர்வன பிறவும்தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய

என்று தொல்காப்பியம் கூறுமாறு படை முதலிய அனைத்தும் உடையராவர். இவற்றுள் முரசானது வீரமுரசு, நீதிமுரசு, ஈகைமுரசு என மூவகைப்படும். வீரமுரசினை இவர்கள் மிக மதித்து நீராட்டி மாலைசூட்டிப் பூசிக்கும் வழக்கமுடையர். சோழர் குலத்தார்க்குப் பொதுவாக வழங்கும் பெயர்கள் இவை யென்பதனை,

சென்னி வளவன் கிள்ளி செம்பியன்பொன்னித் துறைவன் புலிக்கொடிப் புரவலன்நேரியன் ஆர்க்கோன் நேரிறை அபயன்சூரியன் புனனாடன் சோழன் பெயரே

என்னும் திவாகரத்தால் அறிக. இவற்றுள் சென்னி, வளவன், கிள்ளி, செம்பியன், சோழன் என்பன குடிபற்றிய சிறப்புப் பெயராகவும், அடையடுத்து இயற்பெயராகவும் சங்கச் செய்யுட்

களிற் பயின்றுள்ளன. இப்பெயர்களும், அபயன் என்பதும் ஒழிந்த ஏனைய பெயர்கள் சோழருடைய நாடு, நகர், மலை, யாறு, கொடி, மாலை, குலமுதல்வன் என்பவை பற்றியன. புலி இவர்கட்குக் கொடியாதலோடு இலச்சினையும் ஆம். ஆர் (ஆத்தி) கண்ணியும் தாரும் ஆகும். நேரிமலை சேரர்க்குரியதாகப் பதிற்றுப்பத்தில் கூறப்பட்டிருப்பது சிந்திக்கற்பாலது.

சோழ மன்னர்கள் அரசியல் நடாத்துதற்கு அமைச்சர் குழு, புரோகிதர் குழு, தானைத்தலைவர் குழு, தூதுவர் குழு, ஒற்றர் குழு என்னும் ஐந்து பெரிய கூட்டங்களைத் துணையாக வைத்துக் கொண்டிருந்தனர்; இவர்களன்றி, கரணத்தியலவர், அரசனது ஆணையை நிறைவேற்றும் கரும விதிகள், பண்டாரம் வகிப்போ ராகிய கனகச் சுற்றம், வாயில் காவலர், நகர மாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர் என்போரும் அவர்கட்கிருந்தனர். நட்பாளர், அறிவர், மடைத்தொழிலாளர், மருத்துவக்கலைஞர், நிமித்திகப் புலவர் என்பார் உறுதிச்சுற்றமாக விளங்கினர்.

இவை,

ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்

எனச் சிலப்பதிகாரத்தும், மணிமேகலையிலும் வருதலானும்,

அமைச்சர் புரோகிதர் சேனா பதியர்தவாத்தொழிற் றூதுவர் சாரணர் என்றிவர்பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே

கரணத் தியலவர் கரும விதிகள்கனகச் சுற்றம் கடைகாப் பாளர்நகர மாந்தர் நளிபடைத் தலைவர்யானை வீரர் இவுளி மறவர்இனையர் எண்பே ராயம் என்ப

எனத் திவாகரம் முதலிய நிகண்டுகள் அவற்றை விரித்துரைத் தலானும், பிறவாற்றானும் பெறப்படும். உறையூரிலும், காவிரிப் பூம்பட்டினத்திலும் குடிகளின் வழக்குகளைக்கேட்டு நூனெறி பிழையாது தீர்ப்பளிக்கும் உயர் நீதிமன்றங்கள் (அறங்கூறவையம்) இருந்தன. இவற்றிலிருக்கும் நீதிபதிகள் தருமாசனத்தார் எனப்படுவர்.

அறங்கெழு நல்லவை உறந்தை யன்ன

என அகத்திலும்,

உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற்று

எனப் புறத்திலும்,

அரசுகோல் கோடினும் அறங்கூ றவையத்துஉரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்

எனச் சிலப்பதிகாரத்தும் வருதல் காண்க. மற்றும் அரசியல் நடாத்துதற்கு இன்றியமையாத பலதிறப்பட்ட வினைஞர்களும் இருந்தனராவர் எனக் கொள்ளுதல் வேண்டும்.

இவர்கள் யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படையும் உடையராயிருந்தனர். இவற்றை நடாத்தும் தானைத் தலைவர் சோழிய ஏனாதி என்னும் பட்டம் பெறுதற்குரியராவர். இவர்கள் வேற்று நாட்டின்மீது போருக்குச் செல்லும்பொழுது வெற்றிவாள், கொற்றக் குடை, வீரமுரசு இவற்றை நன் முழுத்தத்திற் புறப்படச் செய்தல் வழக்கம். இங்ஙனம் செய்தல் வாணாட்கோள், குடைநாட்கோள், முரசுநாட்கோள் எனப்படும். இவர் வஞ்சி சூடிப் பகைமேற் செல்லும்பொழுது தம் படையாளர்க்குப் படைக்கலம் முதலியனவும், பரிசிலர்க்குப் பொருளும் கொடுப்பர். போரினை மேற்கொண்ட பின்னாளிலே படைத்தலைவர்க்கும் படைகட்கும் பெருவிருந்து செய்து மகிழ்விப்பர். இதனை,

பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை

என்பர் தொல்காப்பியர். ‘வேந்தன் போர்தலைக்கொண்ட பிற்றை ஞான்று தானே போர் குறித்த படையாளரும் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ் சோற்று நிலை’ என்பர் நச்சினார்க்கினியர். இங்ஙனமாய போர் முறைகள் பலவும் தொல்காப்பியப் புறத்திணையியல் முதலியவற்றான் அறியப் படும். இவை போல்வன ஏனைச் சேர பாண்டிய வேந்தர்கட்கும் பொதுவாவன என்க.

இவர்கள் சேனைத் தலைவர்க்கு ஏனாதி என்னும் பட்டம் அளித்தல் போன்றே அமைச்சர், கணக்கர், வேளாளர் முதலாயினார்க்குக் காவிதி என்னும் பட்டமும், வணிகர்க்கு எட்டி என்னும் பட்டமும் அளித்து அதற்கு அடையாளமாகப் பொன்னாற் செய்யப்பட்ட பூவினை அளிப்பர். அவை எட்டிப்பூ, காவிதிப்பூ எனப்படும்.

இவ்வேந்தர்கள் பிறந்தநாள் ஒவ்வோராண்டிலும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும். அப்பொழுது இவர்கள் மங்கல வண்ணமாகிய வெள்ளணி அணிந்து, செருச்செய்தல், சிறைசெய்தல், கொலைசெய்தல் முதலிய செற்றச் செயல்கள் செய்யாதொழிந்து, சிறைவிடுதல், இறைதவிர்தல், புலவர் முதலிய தக்கார்க்கு வேண்டுவன தருதல், இரவலர்க்கீதல் முதலிய அறச் செயல்கள் செய்யா நிற்பர். இது பெருமங்கலம் எனவும், வெள்ளணி எனவும் கூறப்படும். இங்ஙனமே இவர்கள் முடிபுனைந்த நாள்தொடங்கி ஒவ்வோராண்டினும் முடிசூட்டு நாளும் கொண்டாடப்பெறும். இது முடிபுனைந்து நீராடுதலின் மண்ணுமங்கலம் எனப்படும். இவற்றை முறையே,

சிறந்த நாளணி செற்றம் நீக்கிப்பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்

சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும்

எனத் தொல்காப்பியர் கூறுதல் காண்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *