
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
6. சிபி
சந்திர குலத்திலே சிபி எனப் பெயரிய மன்னன் ஒருவன் உளனென்பது புராண இதிகாசங்களால் அறியப்படுகிறது. அவன் யயாதியின் மக்களுள் ஒருவனாகிய அணுவின் வழியில் வந்த உசீநரன் புதல்வனாவான். சிபி, சூரிய குலத்தவனென்றும், சோழர்களின் முன்னோனென்றும் சங்கத்துச் சான்றோராய நல்லிசைப் புலவர்களாலும், இடைக்காலத்தே தோன்றிய சயங் கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர் பெருமக்களாலும் பலவிடங்களிலே கூறப்பட்டிருக்கின்றது. ஆகலின், சூரியகுலத்துச் சிபியும் வேறு சந்திரகுலத்துச் சிபியும் வேறென்றே கொள்ளுதல் வேண்டும். பல அரசர்கள் ஒரே பெயர் தரித்திருப்பதைப் புராணங்களிற் காணலாகும்.
சங்க இலக்கியங்களில் சோழர் குல முன்னோரின் மாட்சியை விளக்க நேர்ந்துழி யெல்லாம் சிபி எனப் பெயரிய மன்னன் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றான். இவ்வேந்தர் பெருமானைக் குறித்து மகா பாரதத்திற் கூறப் பட்டிருக்கும் வரலாற்றின் சுருக்கம் பின் வருவது:
தரும புத்திரர் பேரறிவாளரான பாட்டனாரைப் (வீடுமர்) பார்த்து அடைக்கலம் புகுந்த உயிரைப் பாதுகாத்தலினால் உளதாம் பயனை வினவா நிற்புழி வீடுமர் கூறுகின்றார்: தரும நந்தன! சரணாகதித் தருமத்தின் மேன்மையைக் குறித்து முன்பு நிகழ்ந்ததொரு சரித்திரத்தை நினக்குக் கூறுவேன் கேட்பாயாக; காண்டற்கினிய வனப்புவாய்ந்த ஓர் புறாவானது ஓர் பருந்தினால் எற்றப்படுமெல்லையில் சிபி எனப்படும் மன்னர் பிரானைச் சரண் புகுந்தது. அம்மன்னன் தன் மடியிலே அச்சத்துடன் வந்து வீழ்ந்த அப்புறாவினைக் கண்டுதேற்றி, ‘நீ சிறிதும் அஞ்சற்க; உலகினைப் பாதுகாத்தற்கென்றே அமைந்துள்ள என்பால் அணுகிய நின்னைப் பற்றுதற் பொருட்டு எவனும் மனத்தில் நினைத்தற்கு வல்லனாகான்; நின்னைக் காப்பது பொருட்டாக இத்தேச ஆட்சியையும் என் உயிரையும் விட்டுவிடவேண்டு மென்றாலும் அங்ஙனமே செய்வேன்; நீ கவலையுறல் வேண்டா’ என்று கூறினான். அவ்வளவில் அப்புறாவினைத் துரந்துவந்த பருந்தானது அவ்வேந்தனைப் பார்த்து ‘அரசே! இப்புறாவானது எனக்கு உணவாகத் தெய்வத்தால் ஏற்படுத்தப் பட்டது; இதனைப் பிடிப்பதற்காக யான் விடாது தொடர்ந்து பெரிதும் வருந்திப் பற்றுவான் ஆயினேன்; இப்பொழுது நீ இதனைக் காப்பதென்பது சிறிதும் தக்கதன்று; இதன் இறைச்சி குருதி கொழுப்பு முதலிய அனைத்தும் என் உணவிற்கு அமைந்தவை; நானோ இப்போது கொடிய பசியாலும், நீர் வேட்கையாலும் வருந்துகின்றேன்; இனிச் சிறிதும் ஆற்றியிருக்க வொண்ணாது; ஆகலின் இதனை விட்டுவிடுக; மேலும், நின் நாட்டில் வாழும் மக்களைப் புரப்பதே நின் கடமையாகும்; வானிலே பறக்கும் பறவைக்கு நீ தலைவன் அல்லை; வானத்திலும் நின் ஆற்றலைச் செலுத்துவதென்பது விரும்பத் தக்கதன்று; நினக்குரிய பொருளைக் கவர்வோர் திறத்திலே நின் ஆண்மையைக் காண்பிப்பதே முறையாகும்; அன்றியும், இப்புறாவின்றிறத்தில் அறத்தினைக் கருதுகின்ற நீ பசியால்வருந்துகின்ற என்னைமட்டும் புறக்கணித்திடுதல் பொருந்துமோ?’ என்று இங்ஙனம் கூறி முறையிட்ட.து. அதனைக் கேட்டு வியப்புற்ற வேந்து முனியாகிய சிபி, பருந்தை நோக்கி, ‘அடைக்கலம் புகுந்த இதனை யான் ஒரு பொழுதும் கைவிடுதல் செய்யேன்; நீ நின்பசி யடங்க வேண்டில் காட்டெருமை, பன்றி முதலியவற்றின் இறைச்சியில் எதையேனும் ஏற்றுக்கொள்வாயாக’ என்றனன். என்னலும் பருந்து ‘யான் வேறு எதனையும் தின்பதில்லை; எனக்கு நெடுங்காலமாகக் கடவுளரால் ஏற்படுத்தப் பெற்றிருக்கும் உணவு இதுதான்; பருந்துகள் புறாக்களை உண்ணுவதே எக்காலத்தும் உள்ள இயற்கை என்பதனையறியாயோ? ஒருகால் நினக்குப் புறாவின்பால் அத்துணை அன்பிருக்குமாயின் நின் தசையினை அப்புறாவின் அளவு நிறுத்து இப்பொழுதே கொடுப் பாயாக’ என்று கூறிற்று.
அது கேட்டலும் மன்னன் பெரு மகிழ்ச்சி யுற்று ‘நீ இங்ஙனம் கூறியதே எனக்குப் புரிந்த பேருதவியாகும்; நீ விரும்பியவாறு இப்பொழுதே செய்வேன்’ என்று சொல்லித் தன் தசைகளை அரிந்து துலையில் வைத்து நிறுக்கலானான். அப்பொழுது அந்தப்புர மகளிர், அமைச்சர், பணியாளர் முதலிய யாவரும் ஓடி வந்து கதறுவாராயினர். அரசனோ எதற்கும் சலியாதவனாய்த் தன்னுடைய கைகளிலும், துடைகளிலும், விலாப் புறங்களிலும் உள்ள தசைகளையெல்லாம் அரிந்தரிந்து தராசில் நிரப்பினன்; நிரப்பியும் அவை புறாவின் நிறைக்கு ஒத்திருக்க வில்லை. அதுகண்ட, அருளின் பிறந்தகமாயுள்ள அம்மன்னன் தானே துலையில் ஏறுவானாயினன். அப்பொழுது இந்திரன் முதலிய இமையவர் யாவரும் அங்கு வந்து சூழ்ந்துகொண்டு பாராட்டினார்கள்; தேவ துந்துபிகள் முழங்கின; கற்பகமலர் மழை பொழிந்தன. அரச விருடியாகிய சிபி இத்தகைய சிறந்த புண்ணியத்தால் அப்பொழுதே வானவூர்தியில் ஏறி, என்றும் அழிவில்லாததான துறக்கத்தை யடைந்தனன். தரும நந்தன! நீயும் இப்பெற்றியவான சிறந்த அறங்களைச் செய்யக்கடவை; அன்புள்ளோரையும் அடுத்தோரையும் காப்பாற்றி, எல்லா உயிர் களிடத்தும் இரக்கம் வைத்திருப்பவன் வீட்டுலக இன்பத்தைப் பெற்று விளங்குபவன்; பெரியோர்களால் ஆசரிக்கப்பட்டு வந்த நல்லொழுக்கத்தை யுடையவன் எதைத்தான் அடைய மாட்டான்? சிபி என்னும் வேந்தன் தன் செய்கையால் மூவுலகத்தாரும் கொண்டாடும் புகழையும், உயர் கதியையும் எய்தினன்; என்று கூறி, அவன் போல் சரண்புகுந்த உயிரைப் பாதுகாக்கும் எவனும் அத்தகைய பேற்றினை நிச்சயமாகப் பெறுவான் என்று திருவாய் மலர்ந்தருளினர்.
இம் மன்னனைச் சோதித்தற்பொருட்டு இந்திரன் பருந்தாகவும், அக்கினி புறாவாகவும் இங்ஙனம் வந்தனர் என்றும் கதைகள் வழங்கா நிற்கும். இவ்வரசனது வரலாற்றிலிருந்து இவன் பேரருள் வாய்ந்தவனென்பதும், அடைக்கலங் காத்தலாகிய சீரிய அறத்தைக் கடைப்பிடித்தவ னென்பதும் வெளியாகின்றன. இராம சரித்திரம் முழுதும் இவ்வறத்தினையே எவற்றினும் சிறப்பாக விளக்கலுறுகின்றது. விபீடணன் அடைக்கலத்தைக் கூறும் பகுதியில் இதனை நன்கு காணலாகும். அவ்விடத்தில் இராமபிரான் இச் சிபி வேந்தனை எடுத்துக் காட்டாகக் கொண்டு இவ்வறத்தினை வற்புறுத்துரைப்பதாகக் கம்பர் கூறும் பாட்டு இது;
“பிறந்தநாட் டொடங்கி யாரும் துலைபுக்க பெரியோன் பெற்றிமறந்தநா ளுண்டோ வென்னைச் சரணென வாழ்கின் றானைத்துறந்தநாட் கின்று வந்து துன்னினான் சூழ்ச்சியாலேஇறந்தநா ளன்றோ வென்று மிருந்தநா ளாவதென்றான்“
இனி, சோழர் சிபியின் வழியில் வந்தமையால் செம்பியர் எனப்பட்டனரென்று சிலர் கூறுவர்; சிபி என்பதிலிருந்து சைப்பியர் என்னும் சொல் உண்டாகி, அது செம்பியர் எனத் திரிந்தது என்பது அன்னோர் கருத்து. இங்ஙனம் தாம் வேண்டியவாறு திரிபிலக்கணம் கூறுவது நன்றன்று; சிபியே செம்பியன் என்று கூறப்படுகிறான்;
“புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற்சினங்கெழு தானைச் செம்பியன் மருக“ (புறம்-37:5-6)
என்பது காண்க.
இனி, பண்டைத் தண்டமிழ்ப் புலவர் பலரும் இவ் வரலாற்றினை யெடுத்துப் பாராட்டுதலைப் பின்வரும் மேற் கோள்களான் அறிக:
ஒரு புலவர், ஓர் சோழனை விளிக்குமிடத்து ‘புவியில் வாழ்வோருடைய வருத்தம் தீரும்படி ஞாயிற்றின் வெம்மையைத் தாங்கிக்கொண்டு காற்றையுண்டு வானிலே திரியும் முனிவரும் வியக்குமாறு புறாவின் வருத்தத்திற்கு அஞ்சித் துலாம் புகுந்தோனது வழியில் வந்தோனே’ என்கின்றனர். அது,
“நிலமிசை வாழ்ந ரலமரல் தீரத்தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்காலுண வாகச் சுடரொடு கொட்கும்அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத்தன்னகம் புக்க குறுநடைப் புறவின்தபுதி யஞ்சிச் சீரை புக்கவரையா வீகை யுரவோன் மருக“ (புறம் 43-1:8)
என்பது.
“புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக்குறைவி லுடம்பரிந்த கொற்றவன்“ (வாழ்த்துக்காதை 17-ஆம் பாட்டு)
என்று சிலப்பதிகாரத்திலும்,
“உடல் கலக்கற வரிந்துதசை யிட்டு மொருவன்ஒருதுலைப் புறவொ டொக்கநிறை புக்க புகழும்“
என்று கலிங்கத்துப் பரணியிலும்,
“உலகறியக், காக்குஞ் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து தூக்குந் துலைபுக்க தூயோனும்“
என்று விக்கிரம சோழனுலாவிலும், இங்ஙனமே ஏனையுலாக் களிலும் இவன் தான் புரிந்த செயற்கருஞ் செயல் பற்றிப் பாராட்டப் படுகின்றான்.
“துலையிற் புறவி னிறையளித்த சோழ ருரிமைச் சோணாடு“
என்று சேக்கிழார் கூறுகின்றார். இராமபிரான் குல மேன்மையைக் கௌசிக முனிவர் வாக்கினில் வைத்துக் கம்பர் கூறும் அழகிய பாட்டு இங்கு நோக்கற்பாலது. அது,
“இன்னுயிர்க்கு மின்னுயிரா யிருநிலங்காத் தாரென்று பொன்னுயிர்க்குங் கழலவரை யாம்போலும் புகழ்கிற்பாம்மின்னுயிர்க்கு நெடுவேலா யிவர்குலத்தோன்மேற்பறவை மன்னுயிர்க்குத் தன்னுயிரை மாறாக வழங்கினனால்“
என்பது.



