சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்

7. காந்தன்

இவன் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த ஓர் சோழ மன்னன்; அகத்திய முனிவர்பால் மிக்க பத்திமையுடையோன். இவன் வேண்டுகோளுக்கிரங்கியே அகத்தியர் தமது கமண்டலத்திலிருந்த காவிரியை நதி வடிவாக நிலத்திற் பெருகச்செய்து சோழ நாட்டை வளமுறச் செய்தனர் என்ப. இதனை,

செங்கதிர்ச் செல்வன் றிருக்குலம் விளக்கும்கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்டஅமர முனிவன் அகத்தியன் றனாதுகரகங் கவிழ்த்த காவிரிப் பாவை

என்னும் மணிமேகலைப் பதிகத்தான் (9-12) அறிக. அகத்தியர் மேருவிலிருந்து தென்னாட்டிற்கு வரும்பொழுது, கங்கை யாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு வந்தா ரென்று தொல்காப்பியப் பாயிரவுரையில் நச்சினார்க்கினியர் கூறுகின்றார். அவர் இமயத்தினின்றும் தெற்கில் வருங்கால், திருக்கைலையில் இருந்த காவிரியைச் சிவபெருமான் பாற் பெற்றுக் கமண்டலத்திலே தரித்துக்கொண்டு வந்து கொங்கு நாட்டிற் றங்கியிருக்கும் பொழுது, சீகாழிப்பதியிலே தவமியற்றிய தேவேந்திரன் வேண்டுகோட்கிரங்கி விநாயகப் பெருமானானவர் காக்கை யுருவெடுத்து அகத்தியரது கமண்டலத்தைக் கவிழ்த்துக் காவிரியைப் பெருகச் செய்தனரென்று கந்த புராணம் கூறுகின்றது. இங்ஙனம் சில வேறுபாடுகள் காணப்படினும் காவிரி அகத்தியர் கமண்டலத்தினின்றும் போந்ததென்பது பொதுவாக ஒத்துக் கொள்ளப்படுகின்றது.

இனி, காந்தன் எனப் பெயரிய இம்மன்னன், அரசர் குலத்தை வேரறுத்தலையே தனக்கு விரதமாகக் கொண்ட, பரசுராமன் தன்மீது போர் குறித்து வருதலைத் துர்க்கா தேவியால் அறிந்து, அவ்வம்மையின் கட்டளைப்படி, தனக்குக் கணிகை வயிற்றுப் பிறந்தவனாகிய காந்தன் என்பானை யழைத்து ‘நினக்கு அரசாளும் உரிமை யின்மையால் பரசுராமன் நின்பால் அணுகான்; நான் அகத்திய முனிவன் அருள்பெற்று மீண்டு வருமளவும், நீ இப்பட்டினத்தை நின் பெயராற் காகந்தி என்று பெயரிட்டுப் பாதுகாத்திருப்பாயாக’ என்று சொல்லி, அங்கு நின்றும் வேற்றுருக் கொண்டு சென்று சிலநாள் வேறிடத்திருந்தனன்; என்று மணிமேகலை 22-ஆவது காதையால் அறியப்படுகின்றது.

காவிரிப் புனல் கொணர்ந்த வவனும்

எனக் கலிங்கத்துப் பரணியிலும்,

மேக்குயரக், கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியத் தள்ளும் திரைப்பொன்னி தந்தோனும்

என விக்கிரமசோழனுலாவிலும் குறிக்கப் பெற்றவன் இம் மன்னனே யாதல் வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *