
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
9. கரிகாலன்
இம் மன்னனுடைய வரலாற்றை அறிதற்குக் கருவியாக இருப்பன பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பழமொழி முதலியன வாகும். அவற்றானறியப்படும் இவன் வரலாற்றின் சுருக்கம்: இவ்வேந்தன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன்; நாங்கூர் வேளிடை மகட்கொண்டோன்; இரும்பிடர்த்தலையாரை அம்மானாக வுடையவன்; இவன் மகள் ஆதிமந்தி என்பாள்; இவன் இளமைப் பருவத்துப் பிறராற் சுடப்பட்டு உயிருய்ந்தனன்; அப்பொழுது கால் கரிந்தமையால் கரிகாலன் எனப் பெயரெய்தினான்; கருவூரிலிருக்கையில் கழுமலம் என்னும் ஊரிலிருந்த யானையாற் கொண்டு வரப்பட்டு அரசாட்சிக்குரியனாய், பின் பகைவராற் சிறைப்படுத்தப் பெற்று மதிலைக் கடந்து பகைவர் சேனையை வென்று மீண்டு முறையாலே அரசுரிமை யெய்தி, உறையூரிற் கோயிலும் மதிலும் முதலியன அமைத்து அதனை அரசிருக்கை யாகக் கொண்டனன்; காவிரிப்பூம் பட்டினத்தையும் தலை நகராக்கி வீற்றிருந்தனன்; தன்னிடம் வழக்குக் கொணர்ந்த முதியோர்கள் தன்னை நோக்கி ‘இளைஞனாகிய இவன் உரை முடிவுகாணான்’ எனக் கருதியதனைக் குறிப்பாலுணர்ந்து, தான்நரைமுடித்து முதுமைக்கோலந் தாங்கிவந்து அம்முதியோர் உவக்கும்படி அவர்கள் சொற்கொண்டே முறை செய்தனன்; வெண்ணிப் பறந்தலையில் பதினொரு வேளிரொடு இரு பெரு வேந்தர் அழியப் பொருதனன்; வாகைப்பறந்தலையில் ஒன்பது மன்னரை ஒரு பகலில் வென்றனன்; ஒரு கால் இமயமலை வரையிற் சென்று வடநாட்டரசர் பலரை வென்று திறைபெற்று, மேலும் வடக்கே செல்லாவாறு அம்மலை குறுக்கிட்டுத் தடுத்தமையிற் அதனைக் செண்டாலடித்துத் திரித்து அதன் தலையிலே தனது புலிக்கொடியை நிறுத்தி மீண்டனன்; காடு கெடுத்து நாடாக்கி நீர்நிலைகளைப் பெருக்கி நாட்டை வளப் படுத்தினன்; வாணிகத் துறையை மேம்படுத்தினன்; கைத் தொழில்களைப் பேணி வளர்த்தனன்; பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் அளித்து அப்பாட்டினைப் பெற்றனன்; என்பது.
இனி இவனது பிறப்பினைக் குறித்து ஓர் கதை கூறுவர்; அது, இவன் தாய் கருவுயிர்த்தற்கு வருந்துகையில் ஓர் அறிவர் வந்து ‘இன்னம் ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறப்பின் பெரு நலம் உண்டாகும்’ என்று கூறக்கேட்டு, அவளும் அந் நற்பொழுது வருங்காறும் கால்கள் மேலாக நின்று பின் குழவியை ஈன்றனள் என்பது. இவன் மீது முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப் படையில் “தாய்வயிற் றிருந்து தாய மெய்திப்பிறந்து” என்பதற்குத் ‘தான் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயுடைய வயிற்றிலேயிருந்து பிறக்கையினாலே அரசவுரிமையைப் பெற்றுப் பிறந்தென்றார்’ என உரையாளர் கூறுவது காண்க. கோச்செங்கட் சோழர் இங்ஙனம் பிறந்தனரென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியலாவது. செவ்வந்திப் புராணம் பராந்தகன் மகனாகிய (ஒரு) கரிகாலனுக்கு இச்செய்தியை உரிமையாக்குகின்றது. இவ்வாறாய கதைகளில் ஒன்றை யுட்கொண்டே நச்சினார்க்கினியரும் இங்ஙனம் பொருள் கூறினாராவர். ஆனால் தாய் வயிற்றிலிருந்து பிறக்கு முன்னரே தந்தை விண்ணுலகெய்தினன் ஆகலின் அப்பொழுதே அரசுரிமையெய்திப் பிறந்தனன் என்று கூறுவது ஏற்புடைத்தாகத் தோன்றுகிறது.
“கழுமலத் தியாத்த களிறுங் கரு வூர்விழுமியோன் மேற்சென் றதனால்– விழுமியவேண்டினும் வேண்டா விடினும் உறற்பாலதீண்டா விடுத லரிது“
என்னும் பழமொழி வெண்பாவாலும், ‘கழுமலமென்னும் ஊரின் கண்ணே பிணித்து நின்ற களிறும், கரு வூரின் கண்ணே யிருந்த கரிகால் வளவன் கடிது இளையனாயினும் அவன் சிறப்புடையனாதலால் அவன் மேற் சென்று தன்மிசை யெடுத்துக்கொண்டு அரசிற்குரிமை செய்தது’ என்னும் அதன் உரைப் பகுதியாலும், இவன் இளைஞனாயிருந்த பொழுது தனது நாட்டிலன்றி வேறிடத்திற் கரந்து வதிந்து வந்தனனென்பதும், அப்பொழுது சோணாட்டிலே அரசுரிமைபற்றிக் குழப்பம் ஏற்பட அமைச்சர் முதலாயினார் அக்கால வழக்கப்படி யானைய விடுத்து அரசனைத் தேடுமாறு துணிந்து கழுமலம் என்னும் ஊரிலிருந்த பட்டத்து யானையைக் கட்டவிழ்த்து விட்டன ரென்பதும், அக்களிறு கரு வூரை யடைந்து ஆங்கிருந்த கரிகாலனைத் தன் முதுகின்மேல் எடுத்து வைத்துக் கொண்டு வந்து அவனை அரசிற்குரியனாக்கிற்று என்பதும் பெறப்படுகின்றன. உறையூர் மண்மாரி பெய்து அழிந்தகாலை பராந்தகன் மகனாகிய கரிகாலனை அமைச்சர்கள் இங்ஙனமே யானையை விடுத்துக் கொணர்ந்தனரென்று செவ்வந்திப் புராணம் கூறுகின்றது. ஒருவனோடியை புடைய வரலாறு பெயரொற்றுமையால் உண்மை யுணரமாட்டாது மற்றொருவனுக் குரியதாக்கிக் கூறப்பட்டிருக்கலாம் என்று கருதுவது இழுக்காகாது. யானை சென்று அரசுக் குரியானை எடுத்து வருவதென்பது சிறிது தெய்வத்தன்மை கலந்த செய்திபோற் றோன்றுகிறது.
இனி, இவன் அரசாளத் தொடங்கிய பொழுது முன்பே இந்நாட்டினைத் தாம் கைப்பற்றி ஆளக் கருதியிருந்த பிறர் சிலர் இவனுடன் பகைமை கொண்டு கரவால் இவனைப் பற்றிச் சிறைப் படுத்தி விட்டனர் என்பதும், மிக்க இளம் பருவத்தினனாகிய இவன் அச்சிறையகத்தே சில காலம் இருந்து வளர்ந்து செவ்வி நோக்கிச் சிறைக்கோட்ட மதிலையிடித்து வெளிப்போந்து எதிர்ந்த பகைவரைக் கொன்று, சென்று அரசு கட்டிலேறினான் என்பதும் பட்டினப்பாலை முதலியவற்றாற் பெறப்படுகின்றது.
“கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றிஅருங்கரை கவியக் குத்திக் குழிகொன்றுபெருங்கை யானை பிடிபுக்காங்குநுண்ணிதி னுணர நாடி நண்ணார்செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்துஉருகெழு தாயம் ஊழி னெய்தி“
என்று பட்டினப்பாலை (221-227) கூறுகின்றது. புலிக்குட்டி கூட்டிலே அடையுண்டிருந்து வளர்ந்தாற் போலப் பகைவரது காவலிடத்தே யிருந்து வலியும் பெருமையும் முற்றி தனது கூரிய அறிவாலே இதுவே செயற்பாலது என ஆராய்ந்து, ஓர் மதவேழ மானது தன்னை அகப்படச் செய்த குழியினைக் கோட்டினாற் கரைகள் இடியும்படி தூர்த்துவிட்டுப் பெண்யானையின் பக்கல் சென்றாற்போல அப்பகைவருடைய மதிலைக் கடந்து, வாளாற் பகைவரைக் கொன்று, உட்குப் பொருந்திய தன் அரசுரிமையை முறையாலே பெற்றனன்; என்பது இதன் பொருள்.
இவ்வாண்டகை சிறையைக் கடந்து வெளியேறுவ னென்ப துணர்ந்த வன்கண்மையுடைய பகைவர் இவனைக் கோறல் கருதிச் சிறையின்கண் தீக்கொளுவினர் எனவும், இவன் அத்தீயினை அஞ்சாது மிதித்து வெளிப்போந்தனன் எனவும், அதனால் இவனதுகால் கரிந்தமையின் இவனது வீரத்தைப் பாராட்டி யாவரும் கரிகால் எனவே இவனுக்குப்பெயர் கூறிவந்தனரெனவும் கருதப்படுகிறது. பொருநராற்றுப் படையின் ஈற்றிலே காணப்படும்,
“முச்சக் கரமும் அளப்பதற்கு நீட்டியகால்இச்சக் கரமே யளந்ததால் – செய்ச்செய்அரிகால்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்கரிகாலன் கானெருப் புற்று“
என்னும் வெண்பாவிலே காலில் நெருப்புற்றமை கிளந்தோதப் பெற்றது. நச்சினார்க்கினியரும் ‘கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்’ என்னும் பொருநராற்றுப்படை யடிக்குப் பொருள் கூறுமிடத்தே “முச்சக்கரமும் என்னுங் கவியானே கரிகாலாதல் உணர்க” என்றனர்.
“சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் – கடைக்கால்செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லைஉயிருடையா ரெய்தா வினை.”
என்னும் பழமொழி வெண்பாவாலும், அதன் உரையாலும் இவன் தீயாற் சுடப்பட்டு உய்ந்தமையும், இரும்பிடர்த் தலையார் என்பவர் இவனுக்கு அம்மானாதலும், இவன் செங்கோலோச்சுதற்கு அவர் துணையாயிருந்தமையும் பெறப்படுகின்றன. இவ்வரலாற் றுண்மை யுணராத சிலர் கரிகாலன் என்பதனை வடசொற்றொடராகக் கொண்டு ‘யானைப்படைக்குக் காலன் போன்றவன்’ என்று தாம் வேண்டியவாறு பொருளுரைத்தனர். கரிகால் வளவன் முதலிய தொடர்களில் கால் என்றே இருத்தலையும் அவர் நோக்கிற்றிலர். அகநானூற்றிலே பல பாட்டுக்களில் ‘கரிகால்’ என்றே இவன் கூறப்படுகின்றான். இவன் தன் நாட்டை வளம்படுத்திய பெருமை நோக்கி, கரிகால் வளவன், கரிகாற் பெருவளத்தான், திருமாவளவன் எனப் பின்பு வழங்கப் பெற்றானாதல் வேண்டும். பெருவீரனாகிய இவ்வேந்தன் பெயரை இவன் வழியிலே பின் வந்தார் சிலர் தரித்துக் கொள்ளுதல் இயல்பாகலின் அன்னாரை நோக்கி இப்பெயர்க்கு வேறு காரணங் கூறவேண்டுவதும் இன்று. பராந்தகன் மகனாகிய கரிகாலனை யானை எடுத்துச் செல்லும் பொழுது அவன் தாய் அவனது உள்ளங்காலிலே கரிக்கோடு கீறினள் எனச் செவ்வந்திப் புராணம் கூறுவது கரிகாலன் என்னும் பெயரை வைத்துக் கற்பித்ததென்றே தோன்றுகிறது.
இனி,
“உரைமுடிவு காணா னிளமையோ னென்ற நரைமுது மக்க ளுவப்ப – நரைமுடித்துச்சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சைகல்லாமற் பாகம் படும்“
என்னும் பழமொழிச் செய்யுளாலும், ‘தம்முள் மறுதலையாயினார் இருவர் தமக்கு முறைமை செய்ய வேண்டி வந்து சில சொன்னால் அச்சொல்லின் முடிவுகண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப் பருவத்தானென்றிகழ்ந்த நரைமுது மக்கள் உவக்கும் வகை நரைமுடித்து வந்து, முறைவேண்டி வந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே ஆராய்ந்தறிந்து முறை செய்தான் கரிகாற் பெருவளத்தானென்னுஞ் சோழன்; ஆதலால் தத்தம் குலத்துக்குத் தக்க விச்சைகள் கற்பதற்கு முன்னே செம்பாகமுளவாம்’ என்னும் அதன் பழைய உரையாலும் இம்மன்னன் இளமையில் முதுமைக்கோலம் பூண்டு முறை செய்தமை பெறப்படுகின்றது. இச்செய்தி மணிமேகலையுள்ளும்,
“இளமை நாணி முதுமை யெய்திஉரைமுடிவு காட்டிய வுரவோன்“
(மணிமேகலை 4:107,108)
எனத் தண்டமிழாசானாகிய சாத்தனாரால் சோழர் குலத்தாரின் நீதியை அறிவுறுத்தற்கு எடுத்துக் காட்டப் பெற்றது. இஃதும், முன் குறித்துப் போந்த சிறையைக்கடந்த செய்தியும் இவ்வரசன் மிக இளையனாயிருந்தபொழுதே யாவரும் வியக்கும்படியான உயர் நீதியும் பெருவீரமும் உடையனாயிருந்தமையைத் தெரிவிக்கும் சிறந்த சான்றுகளாம்.
இவன் நாங்கூர் வேளிடை மகட் கொண்டான் என்பதும், இவன் தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ் சேட் சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கொண்டான் என்பதும்,
“மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப“
(பொருள். அகம் – 32)
என்னும் தொல்காப்பியச் சூத்திரவுரைக்கண் நச்சினார்க்கினியர் உரைத்தலாற்பெறப் படுகின்றன. அங்கு அது செவியாறற் செய்தியாகவே அவராற் குறிப்பிடப்படுகின்றது. இளஞ்சேட் சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கொண்டான் என்பதிலிருந்து அவள் வயிற்றுப் பிறந்தோனே கரிகாலன் எனத் துணிதல் இயலாது; என்னை? அரசர்க்கு மனைவியர் பலருளராகலின் என்க. இனி, இவ்வேந்தனது வீரத்தைச் சிறப்பித்து, பொருநராற்றுப் படையானது, இவன், முருகன் போலும் சீற்றமும் உட்கும் பொருந்தியவனென்றும், கூற்றுவனைக் காட்டிலும் மிக்க வலியுடையவனென்றும், தன் வலியறியாத பகைவர் பின்பு வலியறிந்து ஏவல் கேட்பவும் ஏவல் செய்யாத பகைவர் தேயம் கவற்சி பெருகவும் இளஞாயிறு கடலின் மேலே கதிர்களைப் பரப்பி விசும்பிடைச் சென்றாற் போலப் பிறந்து தவழ்தல் கற்ற நாள் தொடங்கித் தோள் வலியாலே பகைவென்று நாடுகாத்தவன் என்றும், சிங்கக் குட்டியானது பாலுண்டல் கைவிடாத இளம்பருவத்தே முதல் வேட்டையிற் களிற்றினைக் கொன்றாற்போலச் சேரனும் பாண்டியனும் ஒரு களத்தே படும்படி வெண்ணி என்னும் ஊரிலே தாக்கியவன் என்றும் கூறுகின்றது. இதிலிருந்து இவனது கன்னிப்போர் வெண்ணிப் போர் என்பது பெறப்படுகின்றது. இவன் மலையை அகழ்க்குவன், கடலைத் தூர்க்குவன், வானை வீழ்க்குவன், வளியை மாற்றுவன் என உலகம் மீக்கூறும்படித் தான் கருதிய போர்த்துறைகளை யெல்லாம் பொருது முடித்தானென்று பட்டினப்பாலை கூறுகின்றது.
இவன் வெண்ணிப் பறந்தலையில் சேரமான் பெருஞ் சேரலாதனோடு பொருது அவனை வென்றான் என்பதும், சேரலாதன் அப்போரிலே தனக்குண்டாகிய புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்தான் என்பதும், 55-ஆம் அகப்பாட்டு 65, 66-ஆம் புறப்பாட்டுக்கள் ஆகியவற்றாலும், அப்போரின்கண் சேரனோடு பாண்டியனொருவனும் தோல்வி யுற்றான் என்பது,
“இருபெரு வேந்தரும் ஒருகளத் தவியவெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்“
என்னும் பொருநராற்று அடிகளாலும், (146-148) அவ்வேந்தர்களோடு வேளிர் பதினொருவர் தோற்றனர் என்பது, 246-ஆம் அகப்பாட்டில்,
“காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகால்ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்பதினொரு வேளிரொடு வேந்தர் சாயமொய்வலி யறுத்த ஞான்றைத்தொய்யா வழுந்தூ ரார்ப்பினும் பெரிதே“
என்று கூறப்படுதலாலும் பெறப்படுகின்றன.
வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் இவனுடன் போர் குறித்து வந்த ஒன்பது மன்னர்கள் இவனெதிரிற் செல்லவும் அஞ்சினராய் ஒரு பகலிலே தங்கள் குடைகளைப் போகட்டு ஓடினர் என்பது, 125-ஆம் அகப்பாட்டில்,
“பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் சூடா வாகைப் பறந்தலை யாடுபெறஒன்பது குடையும் நண்பக லொழித்தபீடின் மன்னர் போலஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே“
என்று கூறப்படுதலாற் போதருகின்றது. தென்னவனும், ஒளியர், அருவாளர், வடவர், குடவர், பொதுவர், இருங்கோவேள் என்பாரும் இவனால் வெல்லப்பட்டு ஒடுங்கினர் என்று பட்டினப் பாலை கூறுகின்றது. இங்ஙனம் தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டையடுத்த இடங்களிலுமிருந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் வென்று அடிப்படுத்திய கரிகாலன் போர் விருப்பங்கொண்டு வட நாட்டிற்குச் சென்றான். தமிழகத்திலே தன்னுடன் பொருவாரைப் பெறாத திருமாவளவன் போரிலே பெருவிருப் புடையனாகலின் வடதிசையிற் பகைவரைப்பெறலாமெனக் கருதி, வாளும் குடையும் வீரமுரசும் நாட்கொண்டு, இத்திசை யிலாயினும் நான் பகைவரைப் பெறவேண்டுமெனத் தெய்வத்தை வணங்கி அத்திசை நோக்கிச் சென்றான் என்றும், அங்ஙனம் செல்லுகையில் இமயமலை குறுக் கிட்டுத் தடுத்தமையின் ‘என் நசை யொழிய இது தடுத்தது’ என முனிந்து அதன் பிடரிடத்தே தனது புலியைப் பொறித்து மீண்டான் என்றும், மீளுகையில், பகை நண்பு இலனாகிய வச்சிர நாட்டரசன் ஓர் முத்துப் பந்தரைத் திறையாகத் தந்தனன், பகைவனாகிய மகத நாட்டரசன் பொருது தோற்றுப் பட்டி மண்டபமொன்றைத் தந்தனன், நட்பாளனாகிய அவந்தி வேந்தன் ஓர் வாயிற்றோரணத்தை உவந்தளித்தனன் என்றும், அவ்வேந்தர்களின் முன்னோர் புரிந்த உதவிக்குக் கைம்மாறாக மயனால் நிருமித்துக் கொடுக்கப்பட்ட அப்பந்தர் முதலியன வளவர் பெருமானாற் புகார் நகரின்கண் கொணர்ந்து வைக்கப்பட்டன என்றும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இமயமலையிற் புலிபொறித்தலாகிய செய்தி “இலங்குவேற் கரிகாற் பெருவளத்தோன் வன்றிறற்புலி யிமயமால் வரைமேல் வைக்க வேகுவோன்” எனப் பெரிய புராணத்திலும் கூறப்பெற்றுளது. கரிகாலன் இமயமலையைச் செண்டால் அடித்துத்திரித்தனன் என்றும், அச் செண்டு கச்சிப்பதியிலே காமகோட்டம் காவல் பூண்டிருந்த சாத்தனார் என்னும் தெய்வத்தால் அளிக்கப்பட்டதென்றும்,
“செண்டு கொண்டுகரி காலனொரு காலி லிமயச்சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்பாய் புலிப்பொறி குறித்தது மறித்த பொழுதே“
(கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் -1)
“கச்சி வளக்கைச்சி காமகோட் டங்காவன்மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் – கைச்செண்டுகம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்செம்பொற் கிரிதிரித்த செண்டு“
(இந்திரவிழவு : 95-98 அடியார்க்கு நல்லார் மேற்கோள்)
என்னும் செய்யுட்களாற் பெறப்படுகின்றது. அடியார்க்கு நல்லாரும் இவ்விரு செய்யுட்களையும் மேற்கோளாகக் காட்டி, ‘சாத்தனதருளால் தான் பெற்ற செண்டினாலே அதனை அடித்துத் திரித்தனன்’ என உரை கூறினார். இமயமலையைச் செண்டால் அடித்ததென்னும் செய்தி இத்தகையதென நம்மால் அறியக்கூடவில்லை. இதுபோல்வதொரு செய்தி திருவிளையாடற் புராணத்திலும் கேட்கப்படுகின்றது. அஃது உக்கிர குமார பாண்டியர் மேருவைச் செண்டால் அடித்தார் என்பது. கரிகாலன் இலங்கை மீதும் படையெடுத்துச் சென்று அந்நாட்டு மன்னனை வென்று சிங்களக் குடிகள் பலவற்றைச் சிறைப்படுத்து மீண்டனன் என்று மகா வமிசம் என்னும் இலங்கைச் சரித்திரத்தால் அறியப்படுகின்றது.
இனி, இவ்வேந்தர் பெருமானது வள்ளன்மையை, இவன், பட்டினப்பாலை பாடிய உருத்திரங் கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பைம்பொன் பரிந்தளித்தமையே புலப்படுத்தா நிற்கும். இவன் இன்ன பரிசில் அளித்ததனை,
“தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்பத்தொ டாறுநூ றாயிரம் பெறப்பண்டு பட்டினப் பாலை கொண்டதும்“
என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. இங்ஙனம் நீதியினும் வீரத்தினும் வண்மையினும் மேன்மையுற்று விளங்கிய மன்னர் பெருமானாகிய கரிகாலன் தனது நாட்டை வளம் படுத்துவதிற் கண்ணுங் கருத்துமாய் இருந்தானாவன். நாட்டை வளம்படுத்துதலாவது வேளாண்மை வாணிகம் கைத்தொழில் என்பவற்றால் நாட்டின் செல்வத்தைப் பெருக்குதலாகும். இவற்றுள்ளும் வேளாண்மையே முதலாகக் கருதப்படற் பாலது.
“தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்செல்வருஞ் சேர்வது நாடு“
என்று தெய்வப் புலவர் நாட்டிலக்கணம் கூறினமையும் நோக்குக. வேளாண்மை செழிப்புற வேண்டுமேல் காடு கரம்புகளைத் திருத்தி விளைநிலங்களாக்குதலும், ஆறுகுளம் ஏரிகளை அமைத்தலும், உழு தொழில் செய்வாரைப் போதிய வளவு குடியமைத்துப் பாதுகாத்தலும் செயற்பாலனவாம். கரிகாலனால் இவை செய்யப்பட்டனவென்பது,
“காடுகொன்று நாடாக்கிக்குளந்தொட்டு வளம்பெருக்கி
… … … …
கோயிலொடு குடிநிறீஇ“
என்னும் பட்டினப்பாலை யடிகளாற் பெறப்படுகின்றது. மற்று, இவன் தன்னாட்டில் வெள்ளப்பாழ் உண்டாகாமலும் நாட்டின் எம்மருங்கும் நீர்ப்பாய்ச்சல் உளதாகவும் காவிரியின் கரையை உயர்த்திக் கட்டினன் எனவும் தெரிகின்றது. காவிரிக்குக் கரைகட்டிய இச்செய்தி,
“சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப்பொன்னிக் கரைகண்ட பூபதியும்“
என விக்கிரமசோழன் உலாவிற் கூறப்பெற்றுளது. தத்தம் ஆட்களுடன் போந்து காவிரிக்குக் கரை கட்டவேண்டித் தன் கீழடங்கிய அரசர் பலர்க்குக் கரிகாலன் கட்டளையிட்டனன் என்றும், அப்பொழுது தெலுங்கு நாட்டையாண்ட மூன்று கண்களையுடைய அரசனொருவன் அவன் பணியை மதித்துக் கரைகட்ட வாராது செருக்குற்றிருக்க, கரிகாலன் அவனது உருவைப் படத்தில் எழுதிவரச்செய்து படத்திலுள்ள அவனது நெற்றிக் கண்ணையழிக்க உடனே அவன் தனது நெற்றிவிழியை இழந்து தருக்கடங்கினான் என்றும்,
“மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதாற்கண்கொண்ட சென்னி கரிகாலன்“
என்னும் குலோத்துங்கன் உலாவாலும்,
“தொழுது மன்னரே கரைசெய் பொன்னியிற்றொடர வந்திலா முகரி யைப்படத்தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்றிங்க ழிக்கவே யங்க ழிந்ததும்“
என்னும் கலிங்கத்துப் பரணியாலும் விளங்குகின்றது.
காவிரியின் கிளை நதிகளாகிய வெட்டாறு, அரிசிலாறு முதலியன இவனால் வெட்டப்பட்டன என்றும் சிலர் கருதுகின்றனர். இங்ஙனமாகக் காவிரியின் நீர் எஞ்ஞான்றும் வற்றாது பாய்ந்து வளஞ் செய்தலின், சோணாட்டிலே நெல்லையறுத்துச் சூட்டை மலையாக அடுக்கி நாடோறும் கடாவிட்டு மேரு வென்னும் படி திரட்டின நெற்பொலி நெருங்கத் தெற்றின சேர் (நெற்கூடு) களிலே இடமின்றிக் கிடக்கும்படி வேலி நிலம் ஆயிரக்கலமாகிய செந்நெல் விளைவுடையதாயிற்று.
“கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்துசூடு கோடாகப் பிறக்கி நாடொறுங்குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பைசுடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்கும்சாலி நெல்லின் சிறைகொள் வேலிஆயிரம் விளையுட் டாகக்காவிரி புரக்கு நாடுகிழ வோனே” (பொருநாறு)
“ஏரியும் ஏற்றத்தி னாலும் பிறநாட்டுவாரி சுரக்கும் வளனெல்லாம் – தேரின்அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும்கரிகாலன் காவிரிசூழ் நாடு“ (மேற்படி இறுதிவெண்பா)
என்பன காண்க.
இனி, இவ்வேந்தனால் வாணிகம் எவ்வளவு மேன்மையடைந் திருந்த தென்பது காவிரிப்பூம் பட்டினத்தின் ஏற்றுமதி இறக்குமதி முதலியன குறித்துப் பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் கூறுவனவற்றால் அறியலாகும். புகார் நகரின் மருவூர்ப் பாக்கத்து நடுவிடத்தும், கடலோரத்திலும்
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்காலின் வந்த கருங்கறி மூடையும்வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும்கங்கை வாரியும் காவிரிப் பயனும்ஈழத் துணவும் காழகத் தாக்கமும்“
சீனம் முதலிய இடங்களினின்றும் வந்த கருப்பூரம் பனி நீர் குங்குமம் முதலிய அரிய பொருள்களும், மற்றும் பெருமையுடைய பல பொருள்களும் நிலத்தின் முதுகு நெளியும்படி திரண்டு பொருந்தியிருக்கும் என்றும்; கடலோரத்தில் பண்டசாலை யினின்றும் கடலில் ஏற்றுதற்காகவும் கடலினின்றும் பண்ட சாலையில் இறக்குதற்காகவும் சரக்குகளின் பொதிகள் சோழனுடைய புலி முத்திரையிடப்பட்டு வரம்பின்றி மலை போலத் திரண்டு கிடக்கும் என்றும்; அப்பொதிகளின் அளவு முதலியவற்றிற்கும் ஏற்றபடி ஆயக்கணக்கர்கள் இரவு பகல் ஓயாது சுங்கம் கொள்வார்கள் என்றும்; பட்டினப்பாலை கூறுகின்றது. கூலம்விற்கும் மறுகுகளில் இன்ன சரக்கு ஈண்டு உளதென்று அறிவிக்கும் அடையாளமாகக் கொடியெடுத் திருத்தலும், கப்பல்கள் திசைமயங்கிச் செல்லாது அழைக்கும் கலங்கரை விளக்கம் கடலோரத்தில் நிறுவப்பட்டிருத்தலும் போல்வன சிலப்பதிகாரத்திலும், புகார் நகரின் வணிகர்களும், வேறு பல தேயங்களினின்றும் அங்கு வந்த பல மொழி பேசும் வணிகர்களும் கலந்து இனிதுறைதலும், அங்கே வாணிகஞ் செய்வோர் பிறர் பொருளையும் தம் பொருளையும் ஒப்ப நாடித் தாம் கொள்ளுஞ் சரக்கைக் கொடுக்கும் பொருட்கு மிகையாகக் கொள்ளாமலும், கொடுக்குஞ் சரக்கை வாங்கும் பொருட்குக் குறையக் கொடாமலும் இலாபத்தை வெளிப்படையாகச் சொல்லிக் கொடுத்து நல்ல வாணிகம் நடாத்துதலும் பட்டினப்பாலையிலும் கூறியிருத்தலினின்று அற்றை நாள் அங்கு நடை பெற்ற வாணிகத்தின் நாகரிக முறையும், அறந்திறம்பாமையும் புலனாகின்றன.
இனி, காவிரிப்பூம் பட்டினத்தில்,
“பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்கட்டு நுண்வினைக் காருக (மாக்களும்)
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும்துன்ன காரரும் தோலின் றுன்னரும்கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்“
முதலாயினோர் மறுவின்றி விளங்கினர் எனச் சிலப்பதிகாரம் கூறுதலினின்று பல்வகையான கைத் தொழில்களின் பெருக்கம் புலனாகின்றது.
இனி, திருமாவளவனாற் பல நகரங்கள் சிறந்த முறையில் நிருமிக்கப் பட்டனவாகும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
“பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்கோயிலொடு குடிநிறீஇவாயிலொடு புழையமைத்துஞாயில்தொறும் புதைநிறீஇ“
என அவன் உறையூரைப் புதுப்பித்த செய்தி பட்டினப்பாலையிற் சுருங்கக் கூறப்பெற்றுளது. காவிரிப்பூம் பட்டினமும் கரிகாலனால் நன்கு திருத்தியமைக்கப் பட்டிருக்கவே வேண்டும்.
காவிரியின் வடகரையில், கடலையடுத்திருந்த இப்பட்டினம் மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என இருகூறாயிருந்தது. இவற்றுள், கடலோரத்திலிருந்த மருவூர்ப் பாக்கத்திலே கலங்கரை விளக்கமும், பண்டசாலைகளும், சுங்கச்சாவடிகளும், கண்ணைக் கவரும் அழகுடைய யவனர் இருக்கைகளும், மற்றும் வேறு பல தேயங்களினின்றும் வாணிகப் பொருட்டால் வந்தவர்களின் இருப்பிடங்களும், வண்ணம் சுண்ணம் சாந்தம் பூ புகை விரை என்பன விற்போர் இடங்களும், சந்தனம் அகில் பட்டு பவளம் முத்து பொன் என்பனவும் பொற்பணிகளும் விற்கும் மறுகுகளும், பட்டுச்சாலியர், வெண்கலக்கன்னார், செம்புகொட்டிகள், தச்சர், கொல்லர், சித்திரகாரிகள், சிற்பாசாரிகள், உருக்குத்தட்டார், இரத்தினப்பணித்தட்டார், தையற்காரர், கிழியானும் கிடையானும் பூ வாடாமாலை பொய்க் கொண்டை முதலியன செய்வோர், குழலினும் யாழினும் இசைபாடும் பாணர் முதலாயினோர் இருப்பிடங்களும் இருந்தன; பட்டினப்பாக்கத்திலே அரசவீதியும், தேரோடும் வீதியும், ஆவணவீதியும், வணிகர், மறையோர், காணியாளர், மருத்துவர், சோதிடர் என்பாரின் தனித்தனி மறுகுகளும், சூதர், மாகதர், நாழிகைக் கணக்கர், கூத்தர், குயிலுவர், கணிகையர் முதலாயினாரின் வேற்றுமை தெரிந்த இருப்பிடங்களும் இருந்தன; மகத வினைஞரும் மராட்டக்கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத்தச்சரும் தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூடி இயற்றிய மண்டபம் முதலியவற்றையுடைய அரசன் கோயில் நடுவண் இருக்க, அதனைச் சூழ்ந்து கடும்பரிகடவுநர், களிற்றின் பாகர், நெடுந்தேர் ஊருநர், கடுங்கண்மறவர் என்பார் பரவியிருக்கும் இருப்பிடங்கள் இருந்தன; தேவ கோட்டங்களும். அம்பலங்களும், பொதியில்களும், கலைக்கழகங்களும், வெள்ளிடை மன்றம், இலஞ்சிமன்றம், நெடுங்கல்மன்றம், பூதசதுக்கம், பாவைமன்றம் என்னும் மன்றங்களும், இலவந்திகை, உய்யானம், சம்பாதிவனம், கவேரவனம், உவவனம் என்னும் பூஞ்சோலைகளும் அங்கே விளங்கின; அரசன் அரண்மனையை யடுத்த எந்திரவாவியையுடைய இலவந்திகை என்னும் சோலையின் மதிற்புறத்தினின்றும் காவிரிக்குப் புதுப் புனலாடப் போம் பெருவழி இருமருங்கும் நிழன் மரச்சோலை சூழ்ந்திருந்தது; மரு வூர்ப்
பாக்கத்திற்கும் பட்டினப் பாக்கத்திற்கும் இடையே நிரைபடச் செறிந்த சோலை மரங்களின் கால்களே தூணாகக் கட்டப்பட்ட கடைகளையுடைய நாளங்காடி (காலைக் கடைத்தெரு) ஒன்று இருந்தது; என, சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப் பாலைகளால் அறியப் படுதலினின்று புகார்நகரின் அமைப்பும் சிறப்பும் ஒருவாறு புலனாகும்.
இனி, காஞ்சிமா நகரமும் கரிகால் வேந்தனால் நன்கு திருத்தியமைக்கப்பட்டதென்று,
“என்று முள்ளவிந் நகர்கலி யுகத்தி லிலங்கு வேற்கரிகாற்பெரு வளத்தோன்வன்றி றற்புலி யிமையமால் வரைமேல் வைக்க வேகுவோன்றனக்கிதன் வளமைசென்று வேடன்முன் கண்டுரைசெய்யத் திருந்து காதநான்குட்பட வகுத்துக்குன்று போலுமா மதில்புடை போக்கிக் குடியிருத்தினகொள்கையின் விளங்கும்“
என்னும் பெரியபுராணச் செய்யுளால் அறியப்படுகின்றது. கச்சி நாற்காத அளவினதென்பதும், மலைபோல் உயர்ந்த மதில் சூழ்ந்த தென்பதும் இச்செய்யுளால் விளங்குகின்றன. அஃது அகழியாலும் மதிலாலும் சூழப்பட்டிருந்ததென மணிமேகலையும் கூறுகின்றது. மற்றும் காவிரிப் பூம்பட்டினத்தின் பல்வேறு வீதிகளும், பற்பல தொழில் செய்வார் இருப்பிடங்களும் சிலப்பதிகாரத்திற் கூறப் பட்டிருத்தல் போன்றே காஞ்சியின் வீதிகளும், குடியிருப்புக்களும் மணிமேகலையிற் கூறப்பட்டிருக்கின்றன. இவ்விரு காப்பிய ஆசிரியர்களும் இத் தலைநகரங்களை நேரிற் பார்த்திருத்தல் ஒருதலையாகலின் இவைகளைப் பற்றி அவர்கள் கூறுவதிற் சிறிதும் பிறழ்ச்சி யிருக்கக் காரணமில்லை. இரண்டிலும் காணப்படும் இவ்வொற்றுமையானது இவ்விரு நகரங்களையும் கரிகாலன் திருத்தியமைத்தனன் என்பதனையே வலியுறுத்துகின்றது. இன்னும், கரிகாலனே தொண்டை மண்டலத்தை இருபத்து நான்கு கோட்டங்களாகப் பகுத்தனன் என்றும், பலவிடங்களிலுள்ள உழுதொழில் புரியும் வேளாளரை அங்கே குடியேற்றினன் என்றும், கச்சியிற் காமகோட்டத் திருப்பணி செய்தனன் என்றும் கூறுகின்றனர். இக்கூற்றுகட்கும் சிற்சில ஆதரவுகள் உள்ளன. “நாடெங்குஞ் சோழன்முனந் தெரிந்தே யேற்று நற்குடி நாற்பத் தெண்ணாயிரம்” எனச் சேக்கிழார் புராணத்துக் கூறியிருப்பது கரிகாலன் வேளாளரைக் குடியேற்றியதையே குறிப்பதாகல் வேண்டும். இங்ஙனம் தொண்டை நாட்டைச் சீர்படுத்திய சோழன் கரிகாலன் அந்நாட்டினைத் தொண்டைமான் இளந்திரையன் தனக்குப் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வரும்படி செய்தனன் என்று கருதுவது பொருத்தமாகத் தோன்றுகிறது.
இனி, சோணாட்டிலுள்ள அழுந்தூர், இடையாறு, கழார் என்னும் பதிகளை இவனோடு இயைபு படுத்தி அகநானூற்றிலே பரணர், நக்கீரர் முதலிய நல்லிசைப் புலவர்கள் பாராட்டியிருத்தலின் இவனால் அப்பதிகள் சிறப்பெய்தி யிருக்கவேண்டுமென்று கருதலாகும். இங்ஙனமாக உறையூர், காவிரிப்பூம்பட்டினம், காஞ்சி என்னும் நகரங்களையும், பல ஊர்களையும் திருத்தமுறப் புதுக்கிய வளவர் பெருமான் பல கோயில்கள் எடுப்பித்தும், திருவிழாக்கள் செய்வித்தும், கல்விக்கழகங்கள் நிறுவியும், நீதிமன்றங்கள் ஏற்படுத்தியும், கிராம சபை (பஞ்சாயத்து)கள் தோற்றுவித்தும் பலவாற்றானும் நாட்டிற்கு நலஞ் செய்தனன் என்று கருத ஏதுக்கள் உண்டு. இவை பின் கூறப்படும் வேறு சில சோழர்க்கும் பொதுவாவன ஆகலின், இந்நூலின் இறுதியிற் கூறப்படும். இவனது ஆட்சிக் காலத்திலே ஒவ்வோராண்டிலும் இளவேனிற் பருவத்தில் இருபத்தெட்டு நாள் நடைபெற்ற பெரிய திருவிழா இந்திரவிழாவாகும் என்றும், புதுப்புனல் விழவு இவனால் மிக்க சிறப்புடன் கொண்டாடப்பெற்றதென்றும் இங்கே கூறுதல் அமையும். இவன் புனல்விழாக் கொண்டாடிய சிறப்பு,
“விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்தண்பதங் கொள்ளுந் தலைநாட் போல“
எனச் சிலப்பதிகாரத்துக் கடலாடு காதையில் உவமையாகக் கூறப்பட்டிருப்பதனால் வெளியாகும்.
இனி, புதுப்புனல் விழவோடும் இவனோடும் இயைபுடைய மற்றொரு வரலாறும் ஈண்டே அறியற்பாலது. அது, கரிகால் வளவனுக்கு ஆதிமந்தி எனப்பெயரிய புதல்வியொருத்தி இருந்தனள்; இவள் நல்லிசைப் புலமை வாய்ந்தவள்; கற்பிற் சிறந்தவள்; இவள் கணவன் சேரமன்னனாகிய ஆட்டனத்தி என்பான். இவ்விருவரும் சோணாட்டிலுள்ள கழார் முன்றுறையில், புதுப்புனல் விழாவிற்குச் சென்று கரிகாலன் காண நீரில் விளையாடுகையில், காவிரியானது அத்தியை வவ்விச் சென்றது. ஆதிமந்தி, தன் காதலனைக் காணப்பெறாது வருந்தி, காவிரி வழியே ஓடிக் கடல் மருங்கெய்திக் கூவி அரற்றி, பின்பு மருதி யென்பாளால் அவனைக் கண்டு தழுவிக்கொண்டு போந்தனள்; என்பது. இச்செய்தி, சோணாட்டிற் பிறந்த பத்தினிப் பெண்டிர் சிலருடைய பெருமை களை எடுத்துக்காட்டி, அங்கே பிறந்த யானும் ஓர் பத்தினியாயின் இவ்வரசரோடு இந்நகரையும் ஒழிப்பேன் என்று கண்ணகி வஞ்சினங் கூறுமிடத்தில் இளங்கோவடிகளால் உரைக்கப் பட்டுளது.
“மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்றன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்றுகன்னவி றோளாயோ வென்னக் கடல்வந்துமுன்னிறுத்திக் காட்ட வவனைத் தழீஇக்கொண்டுபொன்னங் கொடிபோலப் போதந்தாள்“
(சிலப்பதிகாரம், வஞ்சினமாலை)
என்பது காண்க. ஆதிமந்தியின் கணவன் பெயர் ஆட்டனத்தி என்றும் அத்தி என்றும் அகப்பாட்டுகளிற் கூறப் பெற்றுளது.
இனி, இவ்வேந்தர் பெருமான் வேதங்கூறும் வேள்வி பலவுஞ் செய்து முடித்தவனென்பது 244-ஆம் புறப்பாட்டால் விளங்குகிறது. இவன் தமிழ்ப்புலமை சான்று தமிழைப் பொன்னேபோற் போற்றி வளர்த்தவனென்பது நல்லிசைப் புலவருள் கருங்குழலாதனார், வெண்ணிக்குயத்தியார் என்போர் புறத்திலும், பரணர், நக்கீரர் மாமூலர் என்போர் அகத்திலும் இவ்வரசனைப் புகழ்ந்து பாடியதுடன், முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுப் படையும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையும் இவன் மீது பாடியிருத்தலானும், உருத்திரங்கண்ணனார்க்கு இவன் பதினாறு நூறாயிரம் பொன் பரிந்தளித்தமையானும் பெறப்படும். இவனைப் பாடியவருள் வெண்ணிக்குயத்தியார் பெண்பால ராயிருத்தலும், இவன் மகள் ஆதிமந்தி நல்லிசைப் புலமை வாய்ந் திருத்தலும் மகளிர் கல்வியிற் சிறந்து விளங்குவதில் இம் மன்னனுக்கிருந்த ஆர்வத்தைப் புலப்படுத்தும். கற்பிற் சிறந்த மனைவியர் பலர் இவனுக்கிருந்திருக்க வேண்டுமென்பது,
“தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடுவேத வேள்வித் தொழின்முடித் ததூஉம்அறிந்தோன் மன்ற அறிவுடை யாளன்“
என்று புறப்பாட்டிற் கூறியிருத்தலான் அறியலாகும். இவனுக்கு ஆதிமந்தி என்னும் புதல்வியை யன்றி, கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்னும் புதல்வர் மூவர் இருந்தனர். இவனுக்கு அம்மானாகிய இரும்பிடர்த் தலையாரும் நல்லிசைப் புலவர்; புதல்வரும் புதல்வியும் புலமை சான்றவர்; எனவே, இவன் குடும்பமும் சுற்றமுமெல்லாம் தெண்டிரை யமிழ்து மொவ்வாத் தீஞ்சுவை கெழீஇய, செவ்வித் தண்டமிழ் இன்பமாருந்தகையன என்பது போதரும். வீரம், வண்மை, நீதி, சூழ்ச்சித் திறன், ஆட்சிவன்மை முதலியவற்றுக் கெல்லாம் எடுத்துக்காட்டாகும் பெருமையுடைய கரிகாற் பெருவளத்தான் என்னும் இவ்வேந்தர் பெருமான் புவியிலே தன் பருவுடலோடு விளங்கிய காலம் கி. பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதி யென்பது பலவாற்றானும் வலியுறுகின்றது.



