சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்

2. சோழ நாட்டின் பழமை

இனி, சோழ நாட்டின் பழமையைத் தனியே விளக்கலுறும் சில மேற்கோளும் இங்கே காட்டுதும். கடைச்சங்கப் புலவருள் ஒருவரான கூலவாணிகன் சாத்தனாரால் இயற்றப்பட்ட மணிமேகலைக் காப்பியத்தின் பதிகத்தில், முதல் முப்பத்திரண்டு அடிகளில் புகார் நகரின் பழமை மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. சம்புத்தீவின் தெய்வமாகிய சம்பு என்பாள் சம்பாபதியில் (புகாரில்) தவஞ் செய்து கொண்டிருக்கும் பொழுது, அகத்திய முனிவர் தமது கமண்டலத்தினின்றும் கவிழ்த்து விடுத்த காவிரிப் பாவையானவள் நேர் கிழக்கே சென்று, சம்பாபதியின் பக்கத்தையடைந்து, அகத்தியரால் அறிவுறுத்தப் பட்டு, சம்புத்தெய்வத்தை வணங்கி நிற்ப, அவள் மிக மகிழ்ச்சியுற்று அருகணைத்து, ‘தெய்வகண பிண்டங்களையும் பிரமகண பிண்டங்களையும் பிரமதேவர் படைத்தகாலத்தில் என் பெயருடையதாகச் செய்த பெரும் புகழ்வாய்ந்த இம்மூதூரை இப்பொழுது நின் பெயருடையதாக்கினேன்; நீ வாழ்வாயாக’ என, அன்று தொட்டுச் சம்பாபதி எனவும், காவிரிப்பூம்பட்டினம் எனவும் இரு பெயருடையதாக விளங்குகின்ற பழைய பதி; என்பது அதன் சுருக்கம்.

பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கியகோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடிகோனிலை திரிந்து கோடை நீடினும்தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவைதொழுதனள் நிற்பவத் தொன்மூ தாட்டிகழுமிய வுவகையிற் கவாற்கொண் டிருந்துதெய்வக் கருவும் திசைமுகக் கருவும்செம்மலர் முதியோன் செய்த வந்நாள்என்பெயர்ப் படுத்தவிவ் விரும்பெயர் மூதூர்நின்பெயர்ப் படுத்தேன் நீவாழிய வெனஇருபாற் பெயரிய வுருகெழு மூதூர்

(மணிமேகலைப் பதிகம் 22-32)

என்பது காண்க. பழமையும், பெருமையும் வாய்ந்த பரத கண்டத்திலே சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினம், தனக்கு முந்திய தொன்றின்றித் தானே எவற்றினும் முந்திய பழமையுடைய தென்னும் கருத்தன்றோ தண்டமிழ் ஆசானாகிய சாத்தனாரால் இவ்வளவு அழகாக வருணிக்கப்பெற்றுள்ளது.

இளங்கோவடிகளும், சிலப்பதிகார மங்கல வாழ்த்தின் கண்ணே,

பொதியி லாயினும் இமய மாயினும்பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇயபொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும்நடுக்கின்றி நிலைஇய வென்ப தல்லதைஒடுக்கங் கூறார் உயர்ந்தோ ருண்மையின்முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே

(சிலப்பதிகாரம் 1:14-19)

என்று புகார் நகரைப் பொதியிலோடும், இமயத்தோடும் ஒப்புமைப்படுத்து, அதனைப் பொதுவறு சிறப்புடையது என்றும் கூறி வைத்தார். சோழ நாட்டின் கண்ணதாகிய திருவாரூர்த் திருப்பதியின் பழமையை, திருநாவுக்கரசு நாயனார் திருத்தாண்டகத்து ஓர் பதிகம் முழுவதிலும் வைத்துப் பாராட்டியிருப்பது சிந்திக்கற்பாலது.

ஒருவனா யுலகேத்த நின்ற நாளோ வோருருவே மூவுருவ மான நாளோகருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோகாமனையுங் கண்ணழலால் விழித்த நாளோமருவனாய் மண்ணும்விண்ணும் தெரித்த நாளோமான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகம்திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோதிருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே

என்பது காண்க. இங்ஙனமே இந்நாட்டின் பழமையைக் குறிப்பன மற்றும் பலவுள்ளன. இனி, சோழரது மரபு வரலாறு ஆராய்தற்பாலது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *