
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
13. பெருங்கிள்ளி
இவ்வரசன் உறையூரில் இருந்தவன்; செங்குட்டுவன் என்னும் சேரர் பெருமானுக்கு அம்மான் மகன். இவன், சோழன் கிள்ளி வளவனுக்கும் நலங்கிள்ளிக்கும் பகைவனாயிருந்த நெடுங் கிள்ளியின் மைந்தன் என்றும், இவனே இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி எனப் பின்பு வழங்கப் பெற்றானாவன் என்றும் கருதுவர் திருவாளர் மு. இராகவையங்கார் அவர்கள். 125,174-ஆம் புறப்பாட்டுக்களை நெடுங்கிள்ளியின் வரலாற்றோடு இயைய வைத்து நோக்குமிடத்து அங்ஙனம் கருதுவது பொருத்தமாகவே தோன்றுகிறது. இவன் பெயர் பெருநற்கிள்ளி யெனவும் வழங்கும். இவன் ஆண்டில் இளையனாய்ப் பட்டமெய்திய பொழுது சோணாட்டிலிருந்த இவனுடைய ஞாதியரசர் பலர் கூடி இவனுக்கு மாறாகக் கலகம் விளைப்பாராயினர். அதனால், இவன், தனக்குத் துணைவனாகவிருந்த மலையமானது முள்ளூர்மலையில் ஓடி ஒளிக்கும்படி நேர்ந்தது. அப்பொழுது மலையமான் திருமுடிக்காரியின் மகனும், சோழற்குப் படைத் தலைவனாகவிருந்து சிறப்புப் பெற்றவனுமாகிய சோழியவேனாதி திருக்கண்ணன் என்பான் இவனைப் பாதுகாத்து இவன் குடை நிலைபெறும்படி செய்தான். இச்செய்தி, திருக்கண்ணனை மாறோகத்து நப்பசலையார் பாடிய புறப்பாட்டால் இனிது விளங்குகிறது. அதில்,
“அரசிழந் திருந்த வல்லற் காலைமுரசெழுந் திரங்கு முற்றமொடு கரைபொருதிரங்குபுன னெரிதரு மிகுபெருங் காவிரிமல்லல் நன்னாட் டல்லல் தீர
… …. ….
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசைஅருவழி யிருந்த பெருவிறல் வளவன்மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந“
என்று திருக்கண்ணன் பாராட்டப்படுகின்றான்.
இங்ஙனம் இளையனாகிய பெருங்கிள்ளிக்கு நேர்ந்த இடுக்கணைக் கேள்வியுற்றான் வீரருள் வீரனாகிய சேரன் செங்குட்டுவன்; உடனே சோணாட்டின்மீது படையெடுத்துச் சென்று, தம் மைத்துனற்குப் பகைவராயிருந்த சோழர் ஒன்பதின்மரை ஒரு பகற்பொழுதில் உறையூரின் தெற்கு வாயிற் புறத்ததாகிய நேரிவாயில் என்னும் இடத்திற் பொருதுவீழ்த்தி, அவனது ஆணை இனிது நடக்குமாறு செய்தனன். இச்செய்தி,
“மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தாஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்வளநா டழிக்கு மாண்பின ராதலின்ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன் பொன்புனை திகிரி யொருவழிப் படுத்தோய்“
எனச் சிலப்பதிகார நீர்ப்படைக்காதையிலும்,
“ஆர்புனை தெரிய லொன்பது மன்னரைநேரி வாயில் நிலைச்செரு வென்று“
என நடுகற்காதையிலும் செங்குட்டுவனை நோக்கி மாடலன் கூறுங் கூற்றாக இளங்கோவடிகள் உரைத்தலால் நன்கு புலனா கின்றது. பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்துப் பதிகத்திலும்,
“ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர்ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து“
என இது குறிக்கப்பெற்றுளது. இவன் உறையூரின் கண்ணே கண்ணகிக்குக் கோயில் எடுத்து விழாச் செய்தனன் என்பது “அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தருமிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித் தோனே” என்னும் சிலப்பதிகார உரைபெறு கட்டுரையாற் பெறப்படும்.
இனி, இவன் மலையனைத் துணையாகக் கொண்டு சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையுடன் பொருதுவென்றான் என்பது “பருத்திப் பெண்டின் பனுவ லன்ன” என்னும் புறப்பாட்டி னாலும், சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப் பேர்தந்த உக்கிரப் பெருவழுதியும் இவனுக்கு நட்பாளர் என்பது ஒளவையார் பாடிய “நாகத் தன்னபாகார் மண்டிலம்” என்னும் புறப் பாட்டினாலும் பெறப்படுகின்றன. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என இவனுக்கு வழங்கும் பெயரானே இவன் அவ்வேள்வி புரிந்தனன் என்பதும் பெற்றாம். இவனைப் பாடிய புலவர்கள் பாண்டரங்கண்ணனார், ஒளவையார், உலோச்சனார் என்போர்.



