
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
15. கோப்பெருஞ் சோழர்
இவர், பண்டொரு காலத்தில் ஒரு கோழியானது யானை யொன்றைப் போரில் வென்ற இடமாதலின் ‘கோழி’ எனப் பெயர் பெற்றதும், தொன்று தொட்டுச் சோழ மன்னர்கள் வீற்றிருந்து அரசாளப் பெற்ற தலை நகரங்களுள்ளே மிக்க பழமை பொருந்தியதும், அறங்கள் நிலைபெற்ற அவைக்களத்தைத் தன்னகத்தே கொண்டிருந்ததும், ‘ஊரெனப்படுவதுறையூர்’ என ஆன்றோர் பலராலும் சிறப்பித் தோதப் பெறுவதும் ஆகிய உறந்தையம் பதியில் இருந்தவர்; கல்விக் கடலின் எல்லை கண்டவர்; தீஞ்சுவை கெழுமிய செந்தமிழ்ப்பாக்கள் பாடுவதிற் சிறப்புமிக்கவர்; அறத்தின் நுட்பங்களையெல்லாம் அறிந்து தாம் அவ்வாறொழுகுவதோடு, யாவரும் அறம்புரிந்து மேன்மையுறவேண்டு மென்னும் பெரு விருப்பினர்; புலவர் பெருமக்களிடத்துத் தாம் வைத்துள்ள அன்பாலும் மதிப்பாலும் அவர்களுடைய அன்பையெல்லாம் கொள்ளை கொண்டவர்; அவ்வாற்றால் தோலா நல்லிசை மேலோராகிய பிசிராந்தையார், பொத்தியார் என்னும் தண்டமிழ்ப்புலவர்கள் தமக்கு ஆருயிர் நண்பர்களாக அமையப்பெற்றவர்.
பிசிராந்தையார் என்பவர் பாண்டிநாட்டில் பிசிர் என்னும் ஊரிலிருந்த ஒரு புலவர். அவரது பெயரிலிருந்து அவரை ஆதன் என்பானுக்குத் தந்தையார் என்றாவது, ஒரு ஆதன் றந்தையின் வழியில் வந்து அப்பெயரிடப் பெற்றவர் என்றாவது கொள்ளுதல் தகும். ஆதன்றந்தை ஆந்தையென மருவுமாறு தொல்காப்பியத்திற் கூறப்பட்டுளது. பிசிராந்தையார் தமது வாழ்நாளி னிறுதிக் கூற்றில் தமக்கு நரையில்லாததன் காரணத்தை வினாவிய சான்றோர்க்குத் தாம் விடையிறுத்தலாகப் பாடியுள்ள பாட்டிலிருந்து அவரது களங்கமற்ற உயரிய வாழ்க்கை நிலை புலப்படும். அது,
“யாண்டு பலவாக நரையில வாகுதல்யாங்கா கியரென வினவுதி ராயின்மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர்யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும்அல்லவை செய்யான் காக்கு மதன்றலைஆன்றவிந் தடங்கிய கொள்கைச்சான்றோர் பலர்யான் வாழு மூரே“
என்பது. தம் மனைவி மக்கள் அறிவிலும் குணத்திலும் மாட்சி யுடையராதலும், ஏவலாளர் தாம் கருதியதைக் கருதியவாறே செய்து முடித்தலும், தம் நாட்டரசன் முறைவழுவாது குடிகளைப் பாதுகாத்தலும், தம்மூரின்கண் சான்றோர் பலரிருத்தலும் தமக்கு ஆண்டுகள் பல சென்றும் நரையில்லாதிருத்தற்குக் காரணம் எனக் கூறிய அவரது உயரிய மனநிலை நமது புகழ்ச்சிக்கண் எங்ஙனம் அடங்குவதாகும்? இப்பெற்றியராய பாண்டி நாட்டுப் பிசிராந்தையார்க்கும் சோழநாட்டுக் கோப்பெருஞ்சோழர்க்கும் செப்புதற்கரிய நட்பொன் றுளதாகி வளர்ந்து வருவதாயிற்று. ஆனால் அவர்கள் ஒரு பொழுதும் ஒருவரை யொருவர் நேரிற் கண்டவரல்லர். ஒருவர் ஒருவருடைய குணங்களைக் கேள்வியுற்ற மாத்திரையானே அவர்கள் பால் அடங்கியிருந்த உழுவலன்பு வெளிப்பட்டு அவ்விருவரையும் ஒத்த வுணர்ச்சியுடைய நட்பினராக்கி விட்டது. அவர்கள் ஒருவரொருவரைப்பற்றிப் பேசாத நாளும், நினையாத நாழிகையும் இருந்திருத்தல் சாலாது. பிசிராந்தையார் ஒருநாள் மாலைப்பொழுதில் தமதாருயிர் நண்பனை நினைந்து காதல் கைமிக்கு அன்னச்சேவல் ஒன்றை. விளித்துப் பாடுகின்ற பாட்டு அந்நட்பினையும் பெட்பினையும் திட்பமுறக்காட்டும். அது,
“அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல்நாடுதலை யளிக்கு மொண்முகம் போலக்கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும்மையன் மாலையாம் கையறு பினையக்குமரியம் பெருந்துறை யயிரை மாந்திவடமலைப் பெயர்குவை யாயின் இடையதுசோழநன் னாட்டுப் படினே கோழிஉயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇவாயில் விடாது கோயில் புக்கெம்பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிராந்தை யடியுறை யெனினே மாண்டநின்இன்புறு பேடை யணியத்தன்அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே“
என்பது. ‘அன்னச் சேவலே! அன்னச் சேவலே!! எம் அண்ணல் தன் நாட்டினைத் தலையளி செய்யும் முகம்போல மதியம் விளங்கும் மாலைப்பொழுதின்கண் யாம் செயலற்று வருந்தா நிற்கின்றோம்; நீ தான் குமரியாற்றின் பெருந்துறையில் அயிரையை மேய்ந்து வடதிசைக் கண்ணதாகிய இமயமலைக்குச் செல்குதி யாயின், இரண்டிற்கும் இடையிலுள்ளதாகிய சோழநாட்டை அடைந்தவிடத்து, உறையூரின்கண் உயர்ந்து தோன்றும் மாடத் திடத்தே நின் பெடையோடு தங்கி, வாயில் காவலர்க்கு உணர்த்தி விடாதே தடையின்றிக் கோயிலிற் புகுந்து, எம் பெருங்கோவாகிய கிள்ளி கேட்க ‘யான் பிசிராந்தையின் அடியுறை’ என்று சொல்வையாயின் நின் இன்புறும் பேடை அணியத் தன் விருப்பமுள்ள அணிகலத்தை நினக்குத் தருவன்’ என்பது இதன் பொழிப்பு.
இவ்வாறாகிய உத்தம நட்பினால் விளையும் இன்பத்தைப் பார்க்கிலும் இவ்வுலகத்துச் சிறந்த வின்பம் யாதுளது? தலையாயார் தம்முட்செய்த நட்புக் கரும்பை நுனியிலிருந்து தின்றாற் போலவும், பேரறிவாளர்களியற்றிய நூல்களின் நயம் அவற்றிற் பயிலுந் தோறும் வெளிப்பட்டு இன்பம் விளைத்தல் போலவும் மேன் மேல் வளர்ந்து இன்பம் பயப்பதாமெனக் கூறுவர் ஆன்றோர். துறக்க வின்பமும் இதற்கு நிகராகாதெனில் இதன் பெருமையை வேறு கூறுதல் என்? கோப்பெருஞ் சோழரும் பிசிராந்தையாரும் காண்டலின்றியும் இங்ஙனமாக ஈண்டிய நட்பின் பயன் துய்த்து வருங்காலத்தில் நிகழ்வதொரு செய்தி நெஞ்சினையுருக்குந் தன்மையது.
இவ்வரசர் பெருந்தகைக்கு இரண்டு மக்கள் உளராயினர்.
“மகனுரைக்கும் தந்தை நலத்தை“
என்றும்,
“தக்கார் தகவில ரென்ப தவரவர்எச்சத்தாற் காணப் படும்“.
என்றும் ஆன்றோர் கூறும் பொதுநீதிக்கு விலக்காக ஒரோ வழித் தகவிலார்க்கு நன் மக்களும், தகவுடையார்க்குத் தீய மக்களும் உண்டாகின்றனர். கோப்பெருஞ்சோழரின் மக்களும் பாற்கடலிற் றோன்றிய ஆலாலம்போலும் கொடிய பண்பினராயிருந்தனர். அன்பிற்கே நிலைக்களமாகிய தம் அருமைத் தந்தையுடன் போர் செய்யவும் எழுந்தனரென்றால் அன்னவரின் தீயபண்பை என்னென் றெடுத்துரைப்பது? கொடியவர்களான மக்கள் போர் குறித்து வருதலைக் கோப்பெருஞ்சோழர் கண்டார்; சினங்கொண்டார்; தாமும் போர் செய்தற்கு அக்கொடியார்மேற் சென்றார். அப்பொழுது அங்கிருந்து அந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர்க்கு ஓர் நல்லெண்ணம் உண்டாயிற்று. அஃது அவருக்கு இயற்கையுமாகும். அருஞ்சீர்த்திப் பெருஞ்சோழரைப் போர் செய்யாது தடுக்க வேண்டுமென்பதே அவரது எண்ணம். பெருங்கோவைப் பார்த்துப் பின்வருமாறு கூறுவாராயினர்:
‘அமரின்கட் பகைவரை அடுதல்செய்த வென்றியையும், வலிய முயற்சியையும், நில முழுதும் நிழல்செய்யும் வெண் கொற்றக் குடையினையும் உடைய வேந்தே, நின்னுடன் போர் செய்தற்கு வந்த இருவரையும் பார்க்குமிடத்து அவர்கள் நின் பகை வேந்தர்கள் அல்லர்; நீயும் அவர்க்குப் பகைவன் அல்லை; தோன்றலே, நீ இவ்வுலகத்துப் பரந்த புகழை யெய்தித் தேவருலகத்தையடைந்த பொழுது நின்னால் ஒழிக்கப்பட்ட அரசாட்சியுரிமை அவர்க் குரியது; அதனையும் நீயே அறிவை; புகழை விரும்புவோனே, நின்னுடன் போர்செய்தற்கெழுந்த சூழ்ச்சியற்ற அறிவினை யுடைய நின் புதல்வர் தோற்பின் நின் பெரிய செல்வத்தை அவருக்கன்றி யாவர்க்குக் கொடுப்பாய்? நீ அவருக்குத் தோற்பின் நின்னையிகழும் பகைவர் உவக்கும்படியாக இவ்வுலகத்தே பழியை நிறுத்துவாய்; ஆதலால் நினது மறன் ஒழிவதாக; விண்ணோர்கள் விருப்புடன் நின்னை விருந்தாக எதிர்கொள்ளுமாறு நல்வினை செய்தல்வேண்டும்; அதற்கு விரைந்து எழுக; நின் உள்ளம் வாழ்வதாக.’
இவ்வாறாக நல்லிசைப்புலவரால் தெருட்டப்பெற்ற பின், பெருங்கோவின் உள்ளத்திற் பொங்கியெழுந்த சினம் ‘இடுநீற்றாற் பையவிந்த நாகம்போல்’ அடங்கிவிட்டது. எனினும் மானம் என்பது அரசர்க்கு உயிரினுஞ் சிறந்ததாதலின் அவர் பின் உயிர் வாழ ஒருப்பட்டிலர்.
“மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே“
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்உயிர்நீப்பர் மானம் வரின்“
என்பன ஆன்றோரின் முதுமொழிகளல்லவா? தம் மக்களால் தமது குலத்திற்கும், தமக்கும் பழியுண்டாதலையுன்னி உயிர் துறக்கத் துணிந்தார் பெருஞ்சோழர். தற்கொலை செய்து
கொள்வதில் பழியில்லாததொரு வழியை முற்காலத்தவர் கைக் கொண்டிருந்தனர். அதுதான் வடக்கிருத்தல் என்பது. வடக்கிருத்தல் என்றால் யாதேனும் இன்றியமையாக் காரணம்பற்றி உயிர் துறக்கத் துணிந்தவர் ஆற்றிடைக்குறைபோலும் தூயதொரு தனியிடத்தையெய்தி, வடக்குநோக்கியிருந்து, உணவு முதலியன துறந்து, கடவுட் சிந்தையுடன் உயிர்விடுதலாம். பெருங்கோவும் அங்ஙனமே வடக்கிருத்தலை மேற்கொள்வாராயினர். வடக்கிருக் குங்கால் உலகத்தார்க்கு அறத்தின் மேன்மையைத் தாம் தெளிந்த வாறு அறிவுறுத்திச் செல்லவேண்டுமென்று அவர்க்கு விருப்பமுள தாயிற்று. தாம் உயிர் துறக்கும்பொழுதும் உலகத்தார்க்கு உதவிசெய்வதே உயர்ந்தோரின் நோக்கமென்பதற்கு இஃதொரு சான்றாம். தாம் அறிவுறுத்தக் கருதியதனை நாம் என்றும் போற்றுவதொரு செந்தமிழ்ச் செய்யுளாகப் பாடித்தந்தனர் நம் புவிக்கரசாகிய கவிக்கரசர். அது,
“செய்குவங் கொல்லோ நல்வினை யெனவேஐய மறாஅர் கசடீண்டு காட்சிநீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரேயானை வேட்டுவன் ஆனையும் பெறுமேகுறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமேஅதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்செய்வினை மருங்கி னெய்த லுண்டெனில்தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்மாறிப் பிறவா ராயினும் இமயத்துக்கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே” (புறம்)
என்பது. இதன்பொருள்; ‘அழுக்கு நிறைந்த தெளிவில்லாத உள்ளத்தினையுடையோர் அறத்தினைச் செய்வோமோ செய்யா திருப்போமோ என்று கருதி ஐயம் நீங்காதவராகின்றனர்; யானை வேட்டைக்குச் செல்வோன் யானையையும் எளிதாகப் பெறுவன்; காடை வேட்டைக்குச் செல்வோன் அது பெறாமல் வெறுங்கை யுடனும் திரும்புவன்; அதனால், உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத் தாம் செய்த நல்வினைப் பகுதியால் அதனை நுகர்தல் உண்டெனின், அவர் இருவினையும் செய்யாத உம்பருலகத்தின் கண் இன்பமனுபவித்தலும் கூடும்; அவ்வுலகத்து நுகர்ச்சியில்லையாயின், மாறிப்பிறக்கும் பிறப்பு இல்லையாகவும் கூடும்; மாறிப்பிறத்தலென்பதேஇல்லையென்று சொல்வாருள ராயின் இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது புகழை நிலைபெறுத்தி வசையில்லாத உடம்போடு கூடி நின்று இறத்தல் மிகவும் பெருமையுடையது; அதனால், எவ்வாற்றானும் நல்வினை செய்தல் அழகிது’ என்பது.
இங்ஙனம் அறிவுறுத்தருளி, அங்கே குழுமியிருந்த சான்றோர் களைப் பார்த்து ‘என் நண்பன் பிசிராந்தை இப்பொழுது வருவன்’ என்று பெருஞ்சோழர் கூறினர். சான்றோர்களோ அவர் வாரார் என்றனர். அதுகேட்டதும் பெருங்கோவானவர் ‘என் உயிரைப் பாதுகாக்கும் நண்பன் பாண்டி நாட்டுள்ளும் சேய்மையிலுள்ளதாகிய பிசிர் என்னும் ஊரிடத்தான் என்று சொல்லுவர்; எனினும், நாம் செல்வம் உடைய காலத்து அவன் வாராதிருப்பினும் யாம் துன்புறுங்காலத்து வாரா திருப்பானல்லன்’ என்றனர். சான்றோர்கட்கோ ஐயந்தீர்ந்தபாடில்லை. கோப்பெருஞ் சோழர் பின்னரும் கூறுகின்றார் : “நிறைந்த அறிவினை யுடையீர், ‘அவன் நின்னைக் கேள்வியுற்றிருப்பதல்லது சிறிதுபொழுதும் கண்டதில்லை; பல ஆண்டுகள் தவறாது பழகிப்போந்த உரிமை யுடையாராயினும் நீ கூறியவாறு வழுவுதலின்றி யொழுகுதல் அரிதேயாகும்’ என்று கருதி ஐயுறாதொழிவீராக; அவன் என்றும் என்னைப் புறக்கணித்தவனல்லன்; இனிய குணங்களை யுடையன்; பிணித்த நட்பினை யுடையன்; புகழை யழிக்கும் பொய்ம்மையை விரும்பான்; தன் பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது `என் பெயர் கோப்பெருஞ்சோழன்’ என்று என் பெயரையே தன் பெயராகச் சொல்லும் அன்பின் உரிமையையும் உடையன்; அதன்மேலும் இப்படி யான் துயர முறுங்காலத்து ஆண்டு நில்லான்; இப்பொழுதே வருவன்; அவனுக்கு இடமொழித்து வைப்பீராக” என்றனர்.
இங்ஙனங்கூறிக் கோப்பெருஞ்சோழர் வடக்கிருக்கவே, பிசிராந்தையாரும் அவர் கூறியாங்கு அப்பொழுது அவண் வந்து சேர்ந்தனர். பிசிராந்தையார் போன்றே பெருங்கோவுக்கு ஆருயிர் நண்பரும், உறையூரிலிருந்தவரும் ஆகிய பொத்தியார் என்னும் புலவர் அதனைக் கண்டார்; அளவிடமுடியாத வியப்பினையும், அடக்கவொண்ணாத துயரத்தினையும் உடையராயினார். அப்பொழுது அவர் கூறியது,
“நினக்குங் காலை மருட்கை யுடைத்தே எனைப்பெருஞ்சிறப்பினோ டீங்கிது துணிதல்அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத்தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றிஇசைமர பாக நட்புக் கந்தாகஇனையதோர் காலை யீங்கு வருதல்வருவனென்ற கோனது பெருமையும்அதுபழு தின்றி வந்தவ னறிவும்வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றேஅதனால், தன்கோ லியங்காத் தேயத் துறையுஞ்சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசைஅன்னோனை யிழந்த விவ்வுலகம்என்னா வதுகொல் அளியது தானே” (புறம்)
என்பது.
இதன் பொருள் : ‘இவ்வரசன் எத்துணையும் பெரிய சிறப்புக் களுடன் கூடியும் அவற்றையெல்லாம் கைவிட்டு இவ்விடத்தே இப்படி வரத் துணிதல் நினைக்குமிடத்து வியப்பினையுடையது; வேற்று வேந்தனது நாட்டின்கண் விளக்கமமைந்த சான்றோன் புகழ் மேம்பாடாக நட்பே பற்றுக்கோடாக இன்னதோர் இன்னாக்காலத்து வழுவின்றி இவ்விடத்து வருதல் அதனினும் வியப்பையுடையது; இவ்வாறு வருவனென்று துணிந்து சொல்லிய வேந்தனது பெருமையும், அவன் சொல்லிய சொற் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு எல்லைகடந்துளது; ஆதலால், தன் செங்கோல் செல்லாத தேயத் துறையும் சான்றோனது நெஞ்சைத் தன்னிடத்தே உரித்தாகப் பெற்ற பழைய புகழையுடைய அத்தன்மையுள்ள பெரியோனை யிழந்த இத்தேயம் என்ன துன்பமுறுங் கொல்லோ! இதுதான் இரங்கத்தக்கது!’ என்பது.
இங்ஙனம் பொத்தியார் வியந்தும் கையற்றும் கூறுமாறு சென்ற பிசிராந்தையாரும் வடக்கிருந்தனர்.1 மற்றும் வடக்கிருந்தார் பலராவர். என்னே அன்பின் தகைமை! அன்பென்பது பல உடம்பிலுள்ள உயிர்களை ஒன்றாகப் பிணிக்குந் தன்மையாற்றான் அதற்கு நார் என்று பெயர் உண்டாயிற்றாதல் வேண்டும். இங்ஙனம் பெருங்கோவுடன் ஒருங்கே வடக்கிருந்தார் பலராகவும், அவர்க்கு உயிர் நண்பராகிய பொத்தியார் மாத்திரம் உடன் வடக்கிருந் தாரல்லர். அதற்குக் காரணம் அவர் மனைவி கருவுற்றிருந் தமையால் கோப்பெருஞ்சோழர் அவரைத் தடுத்து ‘நினக்கு மகன் பிறந்தபின் வருக’ என்று கூறிய மொழியை மறுக்கலாற்றாமையே யாகும். எனவே அவர் உடனுயிர் துறவாமைக்கும் நண்பன் சொல்லை மறுக்கலாற்றாத அவரது நட்புரிமையே காரணமாயிற் றென்பது தெளிவு. பிசிராந்தையாரும், பெருங்கோவும் வடக்கிருந்தமை கண்டு முறையே கண்ணகனார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் என்னும் புலவர்கள் இரங்கிப் பாடியுள்ளார்கள். கண்ணகனார் பாடியது,
“பொன்னுந் துகிரு முத்து மன்னியமாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்துஅருவிலை நன்கல மமைக்குங் காலைஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர்சான்றோர் பால ராபசாலார் சாலார் பாலரா குபவே” (புறம்)
என்னும் அழகிய பாட்டாகும். ‘பொன்னும் பவளமும், முத்தும், மணியும் நிலம், கடல், மலை என்பவற்றில் ஒன்றுக் கொன்று நெடிய சேய்மையிலிருப்பினும், அரிய விலையினையுடைய நல்ல அணிகலன்களைச் செய்யும் பொழுது அவை ஓரிடத்துத் தோன்றினாற் போல எப்பொழுதும் சான்றோர் சான்றோர் பக்கத்தினராவர்’ என்பது இதன் பொருளாம்.
பொத்தியார் என்னும் புலவர் தம் நண்பர் சொல்லை மறாது சென்று உறையூரைக் கண்டபொழுதும் பின் பொருகால் அரசனது நடுகல்லைக் கண்டபொழுதும் இரங்கிப்பாடிய பாட்டுக்கள் நெஞ்சினையுருக்குந் தன்மையன. ‘செங்கோலினன், திண்ணிய அன்பினன், மகளிர்க்கு மெல்லியன், வீரர்க்கு வீரன், உயர்ந் தோர்க்குப் புகலிடம்; அவனை அத்தன்மையனென்று கருதாது கூற்றம் உயிர் கொண்டுபோயிற்று; ஆதலால் வாய்மையுடைய புலவர்களே, நம் துன்புற்ற சுற்றத்தையும் சேர்த்துக்கொண்டு அக் கூற்றத்தை வைவோம் வாரீர்’என்று கூறுகின்றார். இவ்வாறு தம் ஆருயிர் நண்பனைப் பிரிந்து ஒருநாளும் பொறுத்திருக் கலாற்றாத பொத்தியாரும், தமக்கு மகன் பிறந்த பின்னரும் வாளா அமைந் திருப்பரோ? மகனும் பிறந்தான்; அவருஞ் சென்றார்; சென்று நடுகல்லைக்கண்டு அவர், `நிழலைக் காட்டிலும் நின்னைப் பிரியாதுறையும் நின் விருப்பமுள்ள மனைவி வயிற்று மகன் பிறந்தபின் வா’ எனச்சொல்லி என்னை இங்கு நின்றும் போக்கிய அன்பிலாதவனே, நின்னோடு என்னிடையுள்ள நட்பினை நீ எண்ணா திருப்பாயல்லை; புகழை விரும்புவோனே, எனக்கு நீ குறித்துள்ள இடம் யாது? சொல்வாயாக’ என்றனர். கோப்பெருஞ்சோழரோ கல்லாகியும் அவர்க்கு இடங் கொடுத்தனர். அவரும் ‘இன்னுயிர் விரும்புங் கிழமைத் தொன்னட்புடையோர் தம்முழைச்செலின், அவர் நடுகல் ஆகியக் கண்ணும் இடங்கொடுத்
தளிப்பர்’ என்று அதனை வியந்து கூறி, வடக்கிருப்பாராயினர். இவ்வரசரைப் பாடிய புலவர்கள் பிசிராந்தையார், எயிற்றியனார், பொத்தியார், பூதநாதனார் என்போர்.



