சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்

16. கோச்செங்கட் சோழர்

சோழர் குலமென்னும் பாலாழியிற் றோன்றி அறனும் மறனும் ஆற்றலுங்குன்றாது தனிச்செங்கோல் நடாத்தித்தம் புகழ் நிறுவிய மன்னர்களில், சைவ நன்மக்களது உள்ளத்தை முழுமணிப் பீடமாகக்கொண்டு வீற்றிருத்தற்குரியோருள் முதன்மையுற்றிருப் போர் கோச்செங்கட் சோழர் என்பார். அப்பெரியாரது சரிதம் சைவர்கட்கு எய்ப்பினில் வைப்பாகக் கிடைத்திருக்கும் ஞான பண்டாரமாகிய பெரிய புராணமென்னும் திருத்தொண்டர் புராணத் திருமுறையகத்தே மிளிர்கின்றது. அதன் சுருக்கம் பின் வருமாறு:

‘புற வொன்றின் பொருட்டாகத் துலை யேறியும் முறை புரிந்த சோழ மன்னர்க்குத் தொன்றுதொட்டு உரிமை வாய்ந்த தாகிய சோணாட்டின்கண்ணே அலையால் மணிகொழிக்கும் அழகிய காவிரியாற்றின் கரையில் சந்திர தீர்த்தத்தின் பக்கத்தே பல தருக்களும் நிறைந்த குளிர் பூஞ்சோலை ஒன்றுளது. அப்பூங்கா வின்கண் வெண்ணாவல் மரத்தின் கீழே தேவ தேவராகிய சிவபெருமான் சிவலிங்க மென்னும் திரு அருளுருத் தாங்கி எழுந்தருளியிருந்தனர். பழம் பிறப்பில் மேலாய தவத்தினைச் செய்த தொரு வெள்ளானை அவ்வருளுருவைக் கண்டு அன்பு மேலிட்டுக் கையால் நீரினை முகந்துவந்து ஆட்டியும், பூங்கொத்துக் களைப் பறித்துச் சாத்தியும் நீலகண்டராகிய பெருமானை நித்தலும் வழிபாடு செய்தொழுகாநின்றது. அதனால் திருஆனைக்கா என்னும் பெயரும் அத்தலத்திற்கு உளதாகி நிலவுகின்றது. இஃதிவ்வாறாக, ஞானமுடையதொரு சிலந்தியானது நம்பரது செம்பொற்றிருமுடிமேல் சருகு முதலியன உதிராவண்ணம் மேல் விதானம் என்னுமாறு வாய் நூலால் வலையொன்று செறியப் புரிந்தது. அருமையாக இழைத்த அச்சிலம்பிவலையினைக் கண்டது ஆண்டவரை வழிபடச் சென்ற அவ்வானை; கண்டதும் ஈதிங்கிருப்பது அநுசிதமாமென்று அதனைச் சிதைத்தது. சிலந்தியோ முன்போல் மீண்டும் பந்தர் இழைத்தது. பிற்றைநாள் அதனையும் ஆனை யழித்தது. பார்த்தது சிலந்தி; சினம் மூண்டது; ‘எம்பெருமான் திருமேனியிற் சருகு விழாமல் யான் வருந்தி யிழைத்த நூலின் பந்தரை இவ்வானை அழிப்பதோ’ என வெம்பிக் கொதித்தெழுந்து யானயின் துதிக்கையுட் புகுந்து கடித்தது. கடிக்கவே யானையானது அதனைப் பொறுக்கலாற்றாது நிலத்திலே கையை மோதிக் குலைந்து வீழ்ந்தது. கையிற் புகுந்த சிலந்தியும் உயிர் துறந்தது. அருமறைப் பொருளாகும் ஐயனும் அம் மதயானைக்கும் தகுமாறு வரமளித்து, சிலந்தியானது சோழர் குலத்துதித்து உலகு புரந்தளிக்க அருள் புரிந்தனர். அக்காலத்தே சோழ குலத்தரசனாம் சுபதேவன் என்பவன் தன் பெருந்தேவியாகிய கமலவதியுடன் தில்லைத் திருப்பதியை அடைந்து திருச்சிற்றம்பலத்தே திரு நிருத்தம் புரியும் சேவடியை வணங்கித் திருப்படியின் கீழ் வழிபாடு செய்துவந்தனன். தேவி கமலவதியும் இறைவரை வழிபட்டு மகப்பேறு கருதி வரம் வேண்டினள். பெருமானும் திருவுள்ளஞ் செய்தனர். முன் திருப்பணி புரிந்த சிலந்தி அரசு மகிழக் கமலவதி திருவயிற்றில் அழகிய மகவாய் வந்தெய்தியது. கமலவதி கருவுற்றுப் பத்துத் திங்களும் நிரம்பி மகப் பெறும் பொழுது அடுத்த காலையில் காலத்தின் இயல்பை அறியும் முதியா ரொருவர் ‘இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமேல் இக்குழந்தை மூன்றுலகமும் புரக்க வல்லதாகும்’ என இயம்பினர். அதனைக் கேட்ட வளவில் அன்னை கமலவதியும் ‘ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் படியாக என் கால்களை மேலேதூக்கிக் கட்டுங்கள்’ என்று சொல்லி, அங்ஙனமே அறிஞருரைத்த நற்பொழுது வந்துற்ற வளவில் காற் பிணிப்பு விடப்பெற்று, அருமணி போலும் புதல்வனைப் பெற்றெடுத்து ‘என் கோச் செங்கண்ணானோ என்றாள்’. தேவி புதல்வனைப்பெற்று உயிர் துறக்கவே, செங்கோல் மன்னனாகிய சுபதேவன் ஆவியனைய அரும் புதல்வனை வளர்த்து முடிசூட்டுவித்துத் தானும் தவநெறி சார்ந்து சிவலோக மெய்தினன்.

கோச்செங்கட் சோழரும் சிவபெருமானது திருவருளால் பழம் பிறப்பினை யுணர்ந்து அரசாண்டு வருகின்றார் ஆகலின் சிவனார் மகிழ்ந்துறையும் திருக்கோயில் பல சமைத்தலாகிய திருத்தொண்டினைக் கடன்மையாக மேற்கொண்டனர். ஆனைக் காவிலே தாம் முன்பு அருள் பெற்றதனை அறிந்து ஞானச்சார் வாகும் வெண்ணாவல் மரத்தினுடன்கூட நலஞ் சிறந்து விளங்கும்படி பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் சமைத்தனர். மற்றும், அமைச்சர்களை யேவிச் சோணாட்டின் பற்பல பகுதிகளிலும் அம்மையப்பர் எழுந்தருளும் செம்மையாய திருக்கோயில்கள் பல சமைத்து அக்கோயில்தோறும் அமுதுபடி முதலானவற்றுக்கு அளவில்லாத செல்வங்களை ஏற்படுத்தினர்; தில்லைத் திருப்பதியை அடைந்து பொன்னம்பலத்தே திருநிருத்தம் புரியும் பெருமானைப் பேரன்புடன் அடிவணங்கி உருகி உளங்களித்து உறையும் நாளில் வாய்மை குன்றாத தில்லைவாழ் மறையவர்க்குத் திருமாளிகை பல சமைத்தனர். இவ்வாறாக, பூவுலகைப் பொதுவறப் புரந்தருளிய கோச்செங்கட் சோழர் சிவபெருமானுக்குரிய திருத்தொண்டுகள் பல புரிந்து, தேவர் போற்றத் தில்லையம்பலவாணரின் திருவடி நீழலை யெய்தினர்.

இனி, இவ்வேந்தர் பெருமானைப்பற்றிய சில ஆரய்ச்சிக் குறிப்புக்கள் இங்கே எழுதுதற்குரியன :

இவர், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேரமன்னனுடன் போர்புரிந்து வாகைசூடி, அவனது கழுமலம் என்னும் ஊரைக் கைப்பற்றியதுடன், சேரமானையும் பிடித்துச் சிறைப்படுத்தினர். அப்பொழுது கணைக்காலிரும்பொறைக்கு உயிர்த்தோழராயிருந்த பொய்கையார் என்னும் புலவர் செங்கட் சோழரது வெற்றித்திறத்தைச் சிறப்பித்துப் பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாகிய களவழி நாற்பது என்னும் நூலினை இயற்றிச் சேரமானைச் சிறை மீட்டனர். சில பிரபந்தங்களிலே இவ்வரலாறு கொண்டு கோச்செங்கட் சோழர் சுட்டப் படுகின்றார்.

களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய வுதியன் கால்வழித் தளையை வெட்டியர சிட்ட வவனும்

என்று கலிங்கத்துப் பரணியும்,

மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும்

என்று விக்கிரமசோழனுலாவும்,

அணங்கு, படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப்பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்

என்று குலோத்துங்க சோழனுலாவும், இங்ஙனமே இராசராச சோழனுலா முதலியனவும் கூறுகின்றன.

புறநானூற்றிலுள்ள ‘குழவியிறப்பினும்’ என்னும் பாட்டின் கீழ்க்குறிப்பு “சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானோடு போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சியபாட்டு” என்றுளது. தமிழ் நாவலர் சரிதையில் இப்பாட்டின் கீழ்க்குறிப்பு “சேரன் கணைக்காலிரும் பொறை செங்கணானாற் குணவாயிற் கோட்டத்துத்தளைப் பட்டபோது பொய்கையாருக் கெழுதி விடுத்த பாட்டு” என்றிருக் கிறது. இவை ஒன்றினொன்று சிறிது முரண்படினும் சேரமான் கணைக்காலிரும் பொறை கோச் செங்கண்ணராற் சிறைப்பட்ட செய்தி எல்லாவற்றினும் கூறப்பெற்றுளது.

இனி, திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகத்தில்

கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றகழன்மன்னர் மணிமுடிமேற் காக மேறத்தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்ததிருநறையூர் மணிமாடஞ் சேர்மின் களே

என்றும்

பாராள ரவரிவரென் றழுந்தை யேற்றபடைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்ததேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்திருநறையூர் மணிமாடஞ் சேர்மின் களே

என்றும் இவ்வரசரைக் குறிப்பிட்டிருத்தலால், சோழநாட்டிலுள்ள வெண்ணி, அழுந்தூர் என்னும் ஊர்களில் நிகழ்ந்த போரிலும் இவர் பகையரசரை முறியடித்தன ரென்பது தெரிகின்றது. இவ்வாற்றால் சேர, பாண்டிய மன்னர்கள் இவருடன் போர்புரிந்து தோற்றுக் கீழ்ப்படிந்தாராதல் வேண்டும். மேற்குறித்த பதிகத்தில் திருமங்கை மன்னன் இவரைத் ‘தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம்’ என்பதனால் மூன்று நாட்டிற்கும் உரியராகக் கூறுவதும், சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையில் ‘தென்னவனா யுலகாண்ட செங்கணார்க் கடியேன்’ என்று கூறுவதும் இங்கே கருதற்பாலன.

திருமங்கை மன்னன் இவரைப் புகழ்ந்து கூறுவதிலிருந்து, இவர் அரசராதற்கேற்ப வேறு மதங்களையும் புரந்துவந்தன ரென்பது பெறப்படும்; எனினும் இவர்செய்த தொண்டுகளெல்லாம் சிவபெருமானுக்கேயாகும். இவர் சிவபெருமானுக்கு ஆனைக்கா முதல் அம்பர் இறுதியாக அறுபத்துநான்கு மாடக்கோயில்கள் கட்டினரென்று சில பெரியோர் கூறுகின்றனர். திருமங்கையாழ்வாரே இவரது கோயிற் றிருப்பணியைக் குறித்து “இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற் கெழின்மாடம் எழுபது செய்துலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன்” என்று கூறியிருக்கின்றார். இதனால் எழுபது மாடக்கோயில் எடுத்தனரென அறியலாகும். மாடக் கோயில் என்பது பெருங்கோயில் என்றும் வழங்கப்பெறும். பெருங்கோயில் எல்லாம் கோச்செங்கண்ணர் கட்டியவே எனின், ‘பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயி லெழுபதினோ டெட்டும்’ என்று திருநாவுக்கரசர் அடைவு திருத் தாண்டகத்திற் கூறியிருத்தலின், எழுபத்தெட்டுப் பெருங்கோயில் செங்கட் சோழர் எடுத்தனரென்று கொள்ளவேண்டும். இவர் சிலந்தியாயிருந்து இறைவனை வழிபட்டு அரசாயின உண்மையையும், இவர் பல திருக்கோயில்கள் எடுப்பித்த வண்மையையும் திருநெறித் தமிழ்வேதம் அருளிய சைவசமய குரவர்கள் தம் பதிகங்களில் பலவிடத்தும் பாராட்டியிருக்கின்றார்களென்றால் இவரது பெருமையை நாம் எங்ஙனம் அளவிட்டுரைக்கலாகும்?

செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்அங்கட் கருணை பெரிதா யவனேவெங்கண் விடையா யெம்வெணா வலுளாய்அங்கத் தயர்வா யினளா யிழையே.”

– திருஞானசம்பந்தர்

புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயி னூலாற்பொதுப்பந்த ரதுவிழைத்துச் சருகான் மேய்ந்தசித்தியினா லரசாண்டு சிறப்புச் செய்யச்சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளா வன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேயபரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே.”

– திருநாவுக்கரசர்

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்திசித்திரப் பந்தர் சிக்கென வியற்றச்சுருண்ட செஞ்சடை யாரது தன்னைச்சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்போற்றி போற்றியென் றன்பொடு புலம்பிஅருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்ஆவடு துறை யாதியெம் மானே.”

– நம்பியாரூரர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *