சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்

3. சோழர் குடி

தமிழ் நாட்டின் பழங்குடிகளினின்றும் தோன்றி அரசு நிலையிட்டுத் தலைவராயினாரே மூவேந்தரும் எனல் வேண்டும். உலகிலே எவ்வகுப்பினரும் சிறிது நாகரிகமுற்ற காலையில், தம்மை ஏனைய வரினும் மேம்பட்டவர் என்று காட்டிக்கொள்வதற்காக, சூரியன், சந்திரன், அக்கினி என்பவரில் ஒருவரிடத்திலிருந்தோ அல்லது வேறு யாதாவது ஒரு தெய்வத்தினிடமிருந்தோ தமது மரபு தோன்றியதாகக் கற்பித்துக் கொள்வது வழக்கமாக வுள்ளது. இத்தகைய எண்ணம் தமிழ் நாட்டாரையும் பற்றாமல் விடவில்லை. சூரிய சந்திர குலக் கற்பனை வட நாட்டரசரிடமும், தமிழ் நாட்டரசரிடமும் ஒருபெற்றியே காணப்படுகிறது. இது முதலில் எங்கே தோன்றியதென்பது ஐயப்பாடே. வடமொழிப் புராண இதிகாசங்களிற் சில, வடவரசரையும், தமிழ்மன்னரையும் சேர்த்துப் பிணைப்பனவாக வுள்ளன.

பாரத அரி வமிசம் கூறுவது பின் வருமாறு காண்க: திருமால் உந்தியில் பிரமன் தோன்றினன்; பிரமன் மகன் அத்திரி; அவன் புதல்வன் சந்திரன்; சந்திரனுக்குப் புதனும், அவனுக்குப் புரூரவனும் தோன்றினர்; புரூரவன் மக்கள் ஆயு முதலானவர்கள்; ஆயுவின் மக்கள் நகுடன் முதலானோர்; நகுடன் மக்கள் யதி, யயாதி, சம்யாதி, ஆயாதி, உத்தமன் என்ற ஐவருமாவர்; அவருள் யயாதியின் மக்கள் யது, துருவசு, துருகியன், அணு, பூரு என்னும் ஐவரும்; அவருள் துருவசு என்பான் மகன் வன்னி; அவன் மைந்தன் கோபாநு; அவன் புதல்வன் திரை சாநு; அவன் மகன் காந்தமன் என்பான்; அவனுக்கு மகன் மருத்தன்; அவனுக்குத் தத்துமைந்தன் பூருமரபில் உதித்த துட்டியந்தன்; அவன் மகன் கருத்தாமன்; அவன் மகன் ஆக்கிரீடன்; ஆக்கிரீடன் மக்கள் பாண்டியன், கேரளன், சேரன், சோழன் என்போர். இப்பெயர்களிற் சில, வெவ்வேறு புராணங்களிற் சிறிது திரிந்துங் காணப்படுகின்றன. வழி முறைகள் சில கூடக் குறையவும் உள்ளன. விட்டுணு புராணமானது துட்டியந்தன் வரையிற் கூறி, மேற் செல்லாது நின்று விட்டது. அதில் வன்னிக்கும் கோபாநுக்கு மிடையே பார்க்கன் என்பான் ஒருவன் கூறப்படுகின்றான்.

அரிவமிசத்தில் கேரளன் வேறு, சேரன் வேறு கூறப்படுவ தென்னையோ? இந்நூல் கூறுகின்றபடி தமிழரசர் யாவரும் சந்திரகுலத்தவராதல் வேண்டும். தமிழ் நூல் ஒன்றிலாவது சோழர் சந்திர குலத்தவராகக் கூறப்படவில்லை. கலிங்கத்துப்பரணி, விக்கிரமசோழனுலா முதலியவற்றினெல்லாம் சோழர் சூரிய குலத்தவராகக் கூறப்படுகின்றனர்.

செங்கதிர்ச் செல்வன் றிருக்குலம் விளக்கும்கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட

(மணிமேகலைப் பதிகம் 9-10)

என்று மணிமேகலையும் சோழரைச் சூரிய குலத்தவராகவே கூறுகின்றது. இங்ஙனமே பாண்டியர் சந்திர குலத்தவராகக் கூறப்படுகின்றனர்.

திங்கட் செல்வன் றிருக்குலம் விளங்கச்செங்கணா யிரத்தோன் றிறல்விளங் காரம்பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி

(சிலப்பதிகாரம் 11:23-25)

என்று சிலப்பதிகாரம் கூறுவது காண்க. இவற்றிலிருந்து, தமிழரசர் யாவரையும் சந்திர குலத்தவர் என்று கூறும் அரிவமிசக்கதை பிற்காலத்தில் கற்பிக்கப்பட்டதென்று துணிய வேண்டியிருக்கிறது. இனி, சோழர் சூரிய குலத்தவராதல் எப்படியென்று பார்ப்போம். கலிங்கத்துப்பரணி, அரசபாரம்பரியத்திற் கூறியிருக்கும் சோழ மன்னர் வழிமுறை பின் வருவது:

திருமால், பிரமன், மரீசி, காசிபன், சூரியன், மனு, இக்குவாகு, புரந்தரனை வாகனமாகக் கொண்டு தானவரை வென்றவன் (ககுஸ்தன்), புலியும் மானும் ஒரு துறையில் நீருண்ண அரசுபுரிந்தவன், முசுகுந்தன், தேவர்களுக்கு அமுதமளித்தவன், புறாவுக்காகத் துலைபுக்கவன் (சிபி), சோழ மண்டலம் அமைத்தவன் (சுராதிராசன் முதலாக வரு சோழன்), இராசகேசரி, பரகேசரி, காலனிடத்தே வழக்குரைத்தவன், காவிரிப்புனல் கொணர்ந்தவன் (காந்தன்), அகிலலோகமும் வென்று கொண்டவன், இந்திரனைப் புலியாகக் கொடியில் வைத்தவன், ஒரு கடலில் மற்றொரு கடலைப் புகவிட்டவன், தன் குருதியை உண்ணுமாறு அளித்தவன், வாதராசனை (காற்றினை) வலிந்து பணிகொண்டவன், தூங்கெயிலெறிந்தவன், வானத்தில் விமானங்களைச் செலுத்தினவன், பிலத்தின் வழியே சென்று நாககன்னியை மணந்தவன், பொய்கையார் பாடிய களவழிக்கவிதை கேட்டுச் சேரனைச் சிறையினின்றும் விட்டவன் (செங்கணான்), பதினாறு நூறாயிரம் பொன் கொடுத்துப் பட்டினப்பாலை என்னும் பாட்டினைக் கொண்டவன் (கரிகாலன்), சேரமண்டலத்தை வென்று சதையநாள் விழாவை ஏற்படுத்தியவன், கங்கையும் கடாரமுங் கொண்டவன், கல்யாணியை வென்றவன், கொப்பத்துப் போரிலே வென்று போர்க்களத்தில் முடி கவித்தவன், குந்தளரைக் கூடல் சங்கமத்து வென்றவன், அபயன்.

விக்கிரம சோழனுலாவும் இது போன்றே கூறிவந்துளது. எனினும், இரண்டிலும் சிற்சில வேறுபாடுகள் உள்ளன. காசிபன் மகன் மரீசி என உலாக்கூறுகிறது. உலாவில் கரிகாலன் முன்னும், பரணியில் செங்கணான் முன்னும் கூறப்படுகின்றனர். வேறு சில வேற்றுமைகளும் உள்ளன. இரண்டிலும் பல அரசர்கட்குப் பெயர் கூறாமல் அன்னோர் புரிந்த அருஞ் செயல்கள் மாத்திரமே கூறப்பட்டுள.

திருவாளர் டி. ஏ. கோபிநாத ராவ், எம். ஏ, அவர்கள் எழுதிய சோழ வமிச சரித்திரத்தில் பின் வருமாறு கூறப் பெற்றுளது.

“சோழர்கள் சூரிய வமிசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வைவச்சுதமனுவினிடமிருந்து பரம்பரையாயிழிந்தவர்கள் என்று அடியில் வரும் பௌராணிக வழியைத் தமக்குக் கற்பித்துக் கொள்கின்றனர். வைவச்சுதமனு, சூரிய வமிசஸ்தாபகனான இக்ஷ்வாகு, முசுகுந்தன், (இவன் மகனாகிய) வல்லபன், சிபி. இச்சிபியின் பின்பு சோளன், இராசகேசரி, பரகேசரி, இராஜேந்திர மிருத்துஜித், வியாக்கிரகேது, அரிகாலன் முதலியவர்கள் ஆண்டதாகச் சொல்வது வழக்கம்.”

இவை எல்லாம் சோழர் சூரிய வமிசத்தவர் என்று தொடர்பு படுத்திக் காட்டுதல் காண்க. சூரிய வமிசத்தில் மாந்தாதா என்னும் சக்கரவர்த்திக்கு மக்கள் மூவரென்றும் அவருள் முசுகுந்தன் ஒருவனென்றும் பாகவதம் முதலிய புராணங்களிலிருந்து தெரிகிறது. மாந்தாதாவின் மகனாகிய புருகுச்சனுடைய வழியில் வந்தோரே அரிச்சந்திரன், சகரன், பகீரதன், ரகு, தசரதன், இராமன் முதலானவர்கள். மற்றொரு மகன் அம்பரீடன் என்பான். முசுகுந்தன் வழி எவ்வாறு பெருகிற்று என்பதை விட்டுணு, பாகவத, கூர்ம புராணங்கள் கூறவில்லை. சோழகுல முன்னோரில் முசுகுந்தனும் ஒருவனாகக் கூறப்பட்டதிலிருந்து முசுகுந்தன் வழியினர் சோழரென்று நாம் கருதலாம். முசுகுந்தனுக்கும் தென்னாட்டிற்கும் உள்ள தொடர்பு மிகுதியைப் பின்பு அன்னோன் வரலாறு கூறும் வழிக் காணலாகும். ஒருக்கால் சோழமன்னரைப் பிறப்பால் சூரிய குலத்திலே பிணைக்கக் கருதியோர், சோழர் முன்னோனாய முசுகுந்தனை மாந்தாதாவுக்கு மகனாக்கி விட்டனரோ என்று சிலர் கருதவும் கூடும். எனினும் புராணங்கள் கூறுகிறபடி முசுகுந்தன் சூரிய குலத்து மாந்தாதாவின் மகனே என்றும், அவன் வழியினரே சோழரென்றும் இப்பொழுது வைத்துக்கொண்டு பார்த்தலே சால்புடைத்தாம். பரணி, உலா முதலியவற்றிற் கூறப்படும் சோழகுல முன்னோரைப்பற்றிய செய்திகள் பல சரித்திர எல்லைக்கு அப்பாற்பட்டன. இப்பொழுது உண்மை யென்று நிலை நாட்டவும் காலத்தால் வரையறைப் படுத்துரைக்கவும் அருமையாயிருப்பது கொண்டு அவற்றை யெல்லாம் பொய்ம்மை என்று தள்ளுதலோ, ஆராய்ச்சி இன்றியே எல்லாவற்றையும் முழு உண்மைகளாகக் கொள்ளுதலோ நேரிதன்று. பழைய நூல்களில் புனைந்துரை வகையாற் கூறப்பட்டனவும், சிறிதைப் பெரிதாகவும், ஒன்றைப் பலவாகவும் கூறியுள்ளனவும் இவை இவை என நுண்ணறிவாளர்கட்கு ஒருவாறு புலனாகக் கூடும். அவ்வாறு கூறியனவும் சில நன்மையின் பொருட்டெனின் அவை இகழற்பாலவல்ல. இப்பொழுது உண்மை காணும் நோக்கத்துடன் ஆராய்ந்து வெளிப்படுப்பன பழங்கொள்கையுடன் ஒரோ வழி மாறுபடின் இவையும் வெறுக்கத் தக்கனவல்ல.

இனி, பரணி முதலியவற்றால் அறியப்பட்ட பழைய மன்னருள் மனு, முசுகுந்தன், சிபி, காவிரி கொணர்ந்தவன், தூங்கெயிலெறிந்தவன், நாக கன்னியை மணந்தவன், கரிகாலன், செங்கணான் என்போர் புறநானூறு முதலிய பழைய தமிழ்ச் செய்யுட்களிற் குறிக்கப்படுதலின் இன்னோர் செய்திகளும், சங்கச் செய்யுட்களால் அறியப்படுகின்ற வேறு சில சோழ மன்னரைப் பற்றிய செய்திகளும் முதற் பகுதியில் முறையே கூறி வரலாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *