
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
20. சமயம்
தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்பே உயிர் உடல்களை வெவ்வேறாக உணர்ந்திருந்தனர் என்பது தமிழ் எழுத்துக்களுக்கு உயிர் என்றும் மெய் என்றும் பெயரிட்டிருத் தலானே பெறப்படும். எவ்வளவு பழங்காலத்திற் சென்று நோக்கினும் தமிழர்கள் உலகம், உயிர், கடவுள் என்னும் மூன்று பொருளையும் உணர்ந்திருந்தமையோடு, உலகம் ஐம்பூதங்களாலாயதென்றும், உயிர்கள் வினைக் கட்டுடையன என்றும், கடவுள் வினைக் கட்டில் லாதவர் என்றும் அறிந்திருந்தனர் என்பது புலனாகின்றது. மிக்க பழமை வாய்ந்ததாகிய தொல்காப்பியத்தில்,
“காலம் உலகம் உயிரே உடம்பேபால்வரை தெய்வம் வினையே பூதம்“
எனவும்,
“நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்கலந்த மயக்கம் உலகம்“
எனவும்,
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின்முனைவன்“
எனவும் கூறப்பட்டிருத்தல் காண்க. மற்றும் அதிலே கடவுள் என்னும் பெயரும், கடவுளை வாழ்த்துதலும் கூறியிருப்பதினின்று பரம்பொருளானது எல்லாவற்றையும் கடந்து நிற்கும் இயல்பின தென்பதும், அதனை நினைந்து வாழ்த்தி வழிபடுதலே உயிர்கள் கட்டினின்றும் நீங்கி இன்புறுதற்குரிய நெறி என்பதும் அவர்கள் அறிந்திருந்தமை போதரும். இயல்பாகவே கட்டின்மையும், முற்றுணர்வும், வரம்பிலின்பமும் உடைய அம் மெய்ப் பொருளையே பல்வேறு காலங்களில் பற்பல தேயத்தினுமுள்ள மாந்தர்கள் தாம்தாம் அறிந்தவாறு வெவ்வேறு பெயரானும், வெவ்வேறு நெறியானும் வழிபட்டு வருகின்றனர்.தமிழ் நாட்டிலே குறிஞ்சிநில மக்கட்கு முருகக்கடவுளும், முல்லைநில மக்கட்குத் திருமாலும், மருதநில மக்கட்கு இந்திரனும், நெய்தல் நில மக்கட்கு வருணனும் தெய்வங்கள் எனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. திணைப்பிரிவும், திணைமக்கட் பிரிவும் இயற்கை யானவையே எனினும், திணைகட்குத் தெய்வ அடைவு ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளின் முன்பு ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. கண்ணபிரான் ஆயர்பாடியில் வளர்ந்து ஆயர் களுடன் சேர்ந்து ஆவினம் மேய்த்தல் முதலிய விளையாடல்களைச் செய்து போந்த பின்னரே முல்லை மக்களிடத்து மாயோன் வழிபாடு சிறந்து விளங்கிற்று என்னலாம். ஆரியவேதங்களில் மிகுத்துக் கூறப்படும் இந்திரன் வழிபாடும், வருணன் வழிபாடும் அக்காலத்திற்றான் தமிழர்களாலே கைக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். முருகன் வழிபாடு அங்ஙனம் இடையில் உண்டாய தென நினைக்கக் காரணமில்லை.
இனி, பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகக் கூறப் படும் கடவுளர் நால்வர். நக்கீரர் பாடிய 56-ஆம் புறப்பாட்டிலே இடபக்கொடியும் கணிச்சிப்படையும் மணிமிடறும் உடைய சிவபெருமானும், வால்வளைமேனியும் கலப்பைப்படையும் பனைக்கொடியும் உடைய பலராமனும், நீலமணியொக்கும் மேனியும் கலுழக்கொடியும் உடைய கண்ணனும், மயிலாகிய கொடியும் மயிலூர்தியும் உடைய முருகவேளும் முறையே கூறப்பெற்றுளர். அதில்,
“ஞாலங் காக்கும் கால முன்பின்தோலா நல்லிசை நால்வர்“
என இவர்கள் உலகத்தைப் புரப்போராகக் கூறியிருப்பதும் சிந்திக்கற்பாலது. கபிலர் பாடிய இன்னாநாற்பதிலும்,
“முக்கட் பகவன் அடிதொழா தார்க்கின்னாபொற்பனை வெள்ளையை உள்ளா தொழுகின்னாசக்கரத் தானை மறப்பின்னா ஆங்கின்னாசத்தியான் றாடொழா தார்க்கு“
என இந்நால்வரும் இம்முறையே கூறப்பெற்றனர். சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையில்,
“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்வால்வளை மேனி வாலியோன் கோயிலும்நீல மேனி நெடியோன் கோயிலும்“
எனவும், ஊர்காண் காதையில்,
“நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும்கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்“
எனவும் காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் இந்நான்கு தேவர்களின் கோயில்கள் இருந்தனவாக முறையே கூறப் பெற்றுள. இவற்றில் நால்வரின் முறை முற்கூறியவாறன்றிச் சிறிது பிறழ்ந்துளது. எனினும், யாண்டும் சிவபெருமானே முதலில் வைத்துக் கூறப்படுகின்றனர். அன்றியும், அவர், பிறவாயாக்கைப் பெரியோன் எனவும், பகவன் எனவும் இறையோன் எனவும் தலைமை தோன்றக் கூறப்படுதலும் சிந்திக்கற்பாலது. வேறிடங் களில் இன்னும் வெளிப்படையாகவும் சிவபிரானுக்கு முதன்மை கூறப்பெற்றுளது.
“நீரும் நிலனும் தீயும் வளியும்மாக விசும்போ டைந்துட னியற்றியமழுவாள் நெடியோன் தலைவ னாகமாசற விளங்கிய யாக்கையர்“
என மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிலும்,
“நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப்பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக“
எனக் கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலையிலும் கூறியிருத்தல் நோக்குக. இவ்வாற்றால், தொன்றுதொட்டுத் தமிழ்மக்கள் முழுமுதற் கடவுளாகக்கொண்டு வழிபட்டு வந்த தெய்வம் சிவபெருமானே என்பது வெள்ளிடை மலைபோல் தெள்ளிதின் விளங்கும். பிற்காலத்துச் சமணவாசிரியர் முதலாயினாரும் தமிழ் வழக்கின் இவ்வுண்மையுணர்ந்தே தம் நூல்களில் பல கடவுளரையும் கூறுமிடத்துச் சிவபெருமானை முதற்கண் வைத்துக் கூறிப் போந்தனர். நச்சினார்க்கினியர், அடியார்க்குநல்லார் முதலிய உரையாசிரியன்மாரும் இந்நெறி பிழையாமலே உரைவரை வாராயினர். இங்ஙனமாயினும், பண்டைத் தமிழ் மக்கள் திருமாலிடத்தும் செவ்வேளிடத்தும் நிறைந்த அன்புடைய ராகவே விளங்கினர். இன்னோரையும் உலகங்காக்கும் கடவுள ராகப் போற்றிப் புகழ்ந்தனரே யன்றி ஒரு சிறிதும் குறைவுபடக் கூறினாரல்லர். மற்றும், தொகை நூல்களின் கடவுள் வாழ்த்திலும், பரிபாடலிலும் சிவபிரானோடு வேற்றுமையில்லாத முதற் றெய்வங்களாகவே இவர்கள் பரவப்படுகின்றனர். இன்னும், சிவ வழி பாட்டினும் செவ்வேள் வழிபாடு விஞ்சியிருந்த தெனக் கூறுதலும் சாலும். பத்துப்பாட்டில் ஒரு பாட்டும் (திருமுருகாற்றுப் படையும்), பரிபாடலில் முப்பத்தொரு பாட்டும் முருகப் பிரானுக்கு உரியவாயிருத்தலே இவ்வுண்மையை விளக்கும்; முருகவேள் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் பல சங்கச் செய்யுட்களிற் பயின்றிருத்தலும் அதற்குச் சான்றாகும். திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம் முதலிய திருப்பதிகளைத் திருமுருகாற்றுப் படை கூறுகிறது. பரிபாடலும், பிற தொகைகளும் அவற்றைப் புகழ்ந்துரைக்கின்றன; சிலப்பதிகாரமும்,
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்“
என்றேத்துகின்றது.
இனி, பழைய தமிழ் மக்களின் சமயக்கோட்பாடு இதுவெனக் கூறவே சோழர்களின் சமயமும் இத்தன்மைத் தென்பது கூறாமலே விளங்கும். சோழமன்னர்கள் சிவபெருமானையே முதற்கடவுளாகக் கொண்டு வழிபடுவோர் என்பதும், திருமாலிடத்தும் செவ்வேளிடத்தும் பேரன்புடையார் என்பதும் கடைப்பிடிக்க. கரிகால்வளவன், கோச்செங்கண்ணர் என்னும் சோழ வேந்தர்கள் பற்பல சிவாலயத் திருப்பணிகள் செய்து போந்தமையும் அவர்கள் சமயம் சைவம் என்பதனை நிலை நிறுத்தும். சோழர்கள் இந்திரனுக்குப் பெரியதோர் திருவிழாச் செய்து போந்ததிலிருந்து அவர்கள் நாட்டின் நலங்கருதி இந்திரனையும் அன்புடன் பூசித்து வந்தனரென்பது பெறப்படும். அவர்கள் இந்திரனைப் பெருஞ் சிறப்புடன் கொண்டாடி வந்த காரணத்தால் அவனுடைய கற்பகத்தரு, வெள்ளையானை, வச்சிரப்படை என்பவற்றிற்கும் புகார் நகரிலே தனித்தனியாகக் கோயில்கள் ஏற்படுவன வாயின.
இனி, வட நாட்டிற் செங்கோலோச்சிய பெருவேந்தனாகிய அசோகன் தன் மக்களாகிய சங்கமித்திரை, மகேந்து என்பவர் களுடன் புத்தமத போதகர் பலரைத் தேயந்தோறும் விடுத்து அம் மதத்தைப் பரவச் செய்தமையால், கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தமதம் தமிழ் நாட்டிலும் இடம் பெற்று வளரத் தொடங் கிற்று. சமண மதமும் அக்காலந்தொடங்கியே பரவலுற்றது என்னலாம். சிலப்பதிகாரம் முதலியன கொண்டு நோக்குமிடத்து, கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளிலே, தமிழ் நாட்டின் தலை நகரங்களாகிய புகார், உறந்தை, மதுரை, வஞ்சி, காஞ்சி என்னும் இடங்களில் சமண பௌத்த மதங்கள் மிக்க வலிமை யுற்றிருந்தமை புலனாகின்றது. அருகன் கோட்டமும், புத்த சைத்தியமும் நகர்ப்புறங்களில் கட்டப் பட்டிருந்தன; சமண முனிவர்களும், பௌத்தமுனிவர்களும் உறையும் பள்ளிகள் ஆங்காங்கிருந்தன; சாரணர்கள் இடையறாது மதபோதனை புரிந்து வந்தார்கள்; ஆடவர்களும் பெண்டிர்களும் மிகுதியாக அம்மதங்களிற் புகுவாராயினர். அக்காலத்துத் தமிழ் வேந்தர்கள் நடுவுநிலையுடன் இத்தனைக்கும் இடந்தந்து அவர்களையும் புரந்து வந்தமை பெரிதும் பாராட்டற் குரியது. சிவன், திருமால் முதலிய தெய்வங்களை எள்ளுதலின்றியே அவர்கள் தம் மதங்களைப் போதித்து வந்தமையாற்றான் அவை விரைந்து பரவலுற்றன எனக்கருதல் பொருந்தும்.
இனி, அக்காலத்திலுள்ள புலவர்களாயினும் பிறராயினும் அவர்கள் தம்மின் வேறுபட்ட சமயத்தார்களின் உணர்ச்சியை மதித்து அவற்றைச் சிறிதும் இகழாது பாராட்டி வந்தனர் என்பதும், ஓர் குடும்பத்திலுள்ள பலர் தத்தம் விருப்பத்திற் கியைந்தவாறு வெவ்வேறு மதங்களைக் கைக்கொண்டும் தம்முள் வேற்றுமை சிறிதுமின்றி ஒழுகி வந்தனர் என்பதும் பழைய இலக்கியங்களி னின்றும் அறியலாகின்ற உண்மைகளாம். எச்சமயத்தையும் இகழாது போற்றும் பெருந்தன்மையுடைமைக்குத் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரையும் இளங்கோவடிகளையும் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளல் தகும். வள்ளுவனார்,
“நூலோர் தொகுத்தவற்று ளெல்லாம் தலை“
“பல்லாற்றால் தேரினு மஃதே துணை“
என்றிங்ஙனம் எல்லா நூலினும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறிச் செல்வர்; எம் மதத்தையும் இகழார்.
இளங்கோவடிகள், தம் தமையனாகிய செங்குட்டுவன் சிவபெருமான் திருவருளாற் பிறந்தவன் என்றும், அவன் இமயஞ் செல்லப் புறப்பட்டபொழுது உலகுபொதியுருவத் துயர்ந்தோனாகிய சிவபெருமான் சேவடியை முடிமேற் கொண்டு யாரையும் இறைஞ்சாச் சென்னியால் இறைஞ்சி வலங்கொண்டு போந்து யானையின் பிடரில் ஏறியருளி பின்பு ஆடகமாடத்து அறிதுயிலமர்ந்த திருமாலின் சேடங் கொண்டுவந்து சிலர் நின்று துதித்தகாலையில் தான் சிவபெருமான் திருவடியை மணிமுடி மேல் வைத்திருத்தலின் அதனை வாங்கித் தோளின்மீது தரித்தனன் என்றும் கூறுமுகத்தால் செங்குட்டுவன் சிவபெருமானையே முழுமுதலாகக்கொண்டு வழிபடுவோன் என்பது பெறவைத்து, தம்கொள்கையும் அதுவாதலை ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ என்பது முதலியவற்றாற் குறிப்பிட்டனர். அன்னராயினும், அவர், கவுந்தியடிகள் அருக தேவனை வாழ்த்துதல் கூறுமிடத்து,
“ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத்திருமொழிக் கல்லதென் செவியகம் திறவாகாமனை வென்றோன் ஆயிரத் தெட்டுநாமம் அல்லது நவிலா தென்னாஐவரை வென்றோன் அடியிணை யல்லதுகைவரைக் காணினும் காணா என் கண்அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லதென்பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது“
என்றிங்ஙனமும்;
வேட்டுவவரியில் அவர்கள் கொற்றவையைப் பரவுமிடத்து,
“அமரி குமரி கவுரி சமரிசூலி நீலி மாலவற் கிளங்கிளைஐயை செய்யவள் வெய்யவாட் டடக்கைப்பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவைஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை“
“ஆனைத்தோல் போர்த்துப் புலியி னுரியுடுத்துக்கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்வானோர் வணங்க மறைமேன் மறையாகிஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்“
என்று இவ்வாறாகவும்;
ஆய்ச்சியர் குரவையில் அவர்கள் திருமாலைப் பரவுமிடத்து,
“மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்துசோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்தசேவகன்சீர் கேளாத செவியென்ன செவியேதிருமால்சீர் கேளாத செவியென்ன செவியே“
“பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்திருவடியும் கையும் திருவாயும் செய்யகரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணேகண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே“
என்று இத்தன்மையாகவும்;
குன்றக்குரவையில் குறவர்கள் முருகவேளைப் பாடுமிடத்து,
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றேபாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள்சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே“
“அணிமுகங்க ளோராறும் ஈராறு கையும்இணையின்றித் தானுடையான் ஏந்தியவே லன்றேபிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே“
என்று இன்னணமும்; அவரவர் உணர்ச்சியுடன் கலந்து எல்லாத் தெய்வங்களையும் வாயார மனமார வழுத்துவாராயினர்.
இனி, சிவபிரான் திருக்கோயில் முதலாக முன் கூறிப்போந்த கோயில்களன்றி, மாசாத்தன், ஞாயிறு, திங்கள் என்னும் தெய்வங் கட்கும், திருக்கைலை, செவ்வேளின் கைவேல் என்பவற்றுக்கும் தனித்தனியாக இயற்றப்பெற்ற கோயில்கள் அந்நாளிலே நிலவின வென்க.
முற்றும்.
★ ★ ★



