
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
4. மனு
சோழர் குல முன்னவனாகிய இம் மன்னவன் திருவாரூரிலிருந்து அரசு புரிந்தவன். தனது செங்கோன்மையினால், மனுவினால் உண்டாக்கப்பட்ட நீதியைத் தன் பெயராகச் செய்து கொண்டவன்; மண்ணில் வாழும் உயிர்கட்குக் கண்ணும் ஆவியும் போன்றவன். இக்காவலன் நெடுநாள் மகப்பேறின்றி யிருந்து அருந்தவமுழந்து ஓர் ஆண் பிள்ளையைப் பெற்றான். அவ்விறைமகன் நிறைமதி போல் வளர்ந்து பல கலைகளும் கற்றுணர்ந்து, படைக்கலப் பயிற்சியிலும், யானை யேற்றம், குதிரை யேற்றம் முதலியவற்றிலும் சிறந்து விளங்கினன். அன்னவன் ஓர் நாள் தேரூர்ந்து வீதியிற் செல்லும் பொழுது ஓர் ஆன் கன்று அவனறியாதபடி துள்ளியோடி வந்து தேர்க்காலிற் பட்டு உயிர் துறந்தது. உடனே கன்றை யிழந்த தாய்ப் பசுவானது விரைந்து வந்து கதறிப்பதறி வருந்தா நின்றது. அந்நிகழ்ச்சியைக் கண்ட அரசிளங்குமரன் எய்திய துயரம் அளவிடற்பாலதன்று. அறிவு கலங்கித் தேரினின்றும் வீழ்ந்தவனாய், அலறுகின்ற ஆவினை நோக்கி உயிர் பதைத்துச் சோர்வான்; நிலத்தில் உயிர் துறந்து கிடக்கும் கன்றை நோக்கிப் பெருமூச்செறிந்து இரங்குவான்; மலர்தலை யுலகம் காக்கும் மனுவெனும் எங்கோமானுக்கு இப்பழி வந்தெய்த யான் ஒருவன் பிறக்கலுற்றேனே என்று தன்னை வெறுப்பான்; இவ்வாறு வருந்தி இதற்குச் செய்யலாவதோர் கழுவாய் உளதெனில் எந்தை இதனை அறிதற்கு முன்பே செய்வேன் என்றெண்ணி, மறைவல்ல அந்தணர் இருப்பிடம் அடைந்தான். கன்றை யிழந்த பசுவும் சும்மா இருந்திலது. அளவற்ற துயரத்துடன் அங்குமிங்கும் ஓடியது; அலறியது; அரசனுடைய கோயில் முற்றத்தை யடைந்து அங்கே தூங்கியதாகிய மணியினைக் கொம்பாற் புடைத்தலும் செய்தது என்றும் அசையாத நாவினையுடைய அம் மணியின் ஓசை பழிப்பறை முழக்கெனவும், பாவத்தின் ஆர்ப்பெனவும் அரசன் செவிகளிற் சென்று புக்கது. உடனே நெஞ்சம் துணுக்குற் றோடி வந்தான்; நிகழ்ந்ததனை அறிந்துளோர் கூறக்கேட்டான்; ஆவின் உறுதுயர் கண்டான்; தானும் துயரக் கடலில் மூழ்கிக் கரை காணானாயினான். அத்தன்மையனான அரசன் பின்பு ஒருவாறு தெளிந்து அமைச்சர்களோடும் சூழ்வுற, அவர்கள் இவ்வழுவினை ஆய்ந்து கழுவாய் உஞற்றுதல் தகவெனக் கூறினர். அதனை உறுதி யென்று கொண்டிலன்; அமைச்சர் என்ன கூறியும் மன்னன் கொள்கையை மாற்றக் கூடவில்லை. கன்றை யிழந்த பசுவினது துயரத்தைத் தானும் எய்துவதே கடனெனத் துணிந்தானாய், மகனைத் தேர்க்காலில் வைத்தூருமாறு ஓர் அமைச்சனுக்குக் கட்டளையிட்டான். அன்னவன் சென்று அது செய்யானாய்த் தன்னுயிர் துறக்கவே, அரசன் தானே சென்று தன் அருமருந்தனைய ஒரே மகனைத் தேர்க்காலிற் கிடத்தி ஊர்ந்தனன். அப்பொழுதே கருணை யங்கடலாகிய சிவபெருமான் உமையம்மையாருடன் இடபவாகனத்திலே தோன்றி அரசனுக்குக் காட்சியளித்து அருள்புரிவாராயினர்; ஆன்கன்றுடன் அரசகுமாரனும் அமைச்சனும் உயிர் பெற்றெழுந்தனர்; தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர்; யாவர்களும் களிப்புற்றனர்.
இவ்வரலாறு தெய்வ மணக்குஞ் செய்யுள் பாடவல்ல சேக்கிழார் பெருமானால் பெரிய புராணத்தில் மிக அழகாகக் கூறப்பெற்றுளது; அதன் பெருமையை அறிதற்கு அரசனுடைய நீதியைப் புலப்படுத்தும் சில பாடல்களை இங்கே தருதும்.
“மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்தானதனுக் கிடையூறு தன்னாற்றன் பரிசனத்தால்ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மால்ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ.”
“என்மகன்செய் பாதகத்துக் கிருந்தவங்கள் செயவிசைந்தேஅன்னியனோ ருயிர்கொன்றா லவனைக்கொல் வேனானால்தொன்மனுநூற்றொடைமனுவாற்றுடைப்புண்டதெனும்வார்த்தைமன்னுலகிற் பெறமொழிந்தீர் மந்திரிகள் வழக்கென்றான்.”
“ஒருமைந்தன் றன்குலத்துக் குள்ளானென் பதுமுணரான்தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்மருமந்தன் றேராழி யுறவூர்ந்தான் மனுவேந்தன்அருமந்த வரசாட்சி யரிதோமற் றெளிதோதான்.”
(பெரியபுராணம் – திருநகரச் சிறப்பு 36,37,44)
இனி, கறவையின் பொருட்டு மகனை முறைசெய்த இவ்வரலாற்றினைச் சயங்கொண்டாரும் ஒட்டக்கூத்தரும் முறையே,
“அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதினிபுரந்தரிய காதலனை யாவினது கன்றுநிகரென்றெவ்வ ருக்கமும் வியப்ப முறைசெய்த கதையும்“
எனவும்,
“சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரின்மைந்தனை யூர்ந்த மனுவோனும்“
எனவும்,
பரிதி மைந்தனாகிய வைவச்சுத மனுவுக்கே உரியதாக்கிக் கூறுகின்றனர். அவன் பொன்னி நாட்டிருந்து அரசு புரிந்த ஓர் சென்னியா மென்பதே சேக்கிழார் கருத்தும், இளங்கோவடிகள் முதலிய பண்டைச் சான்றோர் கருத்துமாகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பழைய இலக்கியங்களில் மனு, மனுநீதி, மனுநூல் என்னும் பெயர்கள் யாண்டும் காணப்படவில்லை. அவைகள் வேதத்தைப் பற்றிக் கூறுகின்றன. அவற்றில் மறை யென்றும், கேள்வி யென்றும் வேதம் கூறப்படுகின்றது. அதற்குப் பல நூற்றாண்டுகளின் பின் பெழுந்த தமிழ்த் திருமுறைகளில் நான்மறை, ஆறங்கம் என்பன பலவிடத்துக் கூறப்பட்டுள. திருமுறைகள் சிலவற்றில் ஆகமங் களும் கூறப்படுகின்றன. அவற்றுள், ஓரிடத்தும் வடமொழி மிருதிகளைப் பற்றிய குறிப்பு யாதொன்றுங் காணப்பட வில்லை. பிற்காலத்தனவாகிய பிங்கல முதலிய நிகண்டுகளில் மனு முதலிய பதினெட்டு நூல்கள் தருமநூ லென்னும் பெயருடன் காணப்படுகின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த கலிங்கத்துப்பரணி, பெரிய புராணம் முதலியனவே மனுநீதி யென்னும் ஒன்றைக்குறித்துப் பேசுகின்றன. ஆகையால், அது வடமொழியில் எழுந்தது எக்காலத்தாயினும், ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளின் பின்பே தமிழ்மக்களுள்ளும் பயிலப்படுவதாயிற்றென்று கருதலாகும்.
இனி, சோழர்குல முதல்வன் புரிந்த மகனை முறைசெய்ததாகிய இவ் வருஞ்செயலைப் பண்டைப் புலவர் பெருமக்கள் ஒரோவழி எடுத்துக்காட்டிச் சோழரது குலப்பெருமையை நிலைநாட்டிச் செல்கின்றனர்; அவற்றுள் சில காட்டுதும்:
“வாயிற் கடைமணி நடுநா நடுங்கஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன்அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன்பெரும்பெயர்ப் புகாரென் பதியே“
(சிலப்பதிகாரம் 20:53-56)
“மகனை முறைசெய்த மன்னவன் வழியோர்துயர்வினை யாளன் றோன்றின னென்பதுவேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம்“
– மணிமேகலை.
இவற்றுள் முன்னது, கோவலனை யிழந்த நங்கை கண்ணகி நெடுஞ்செழியன் முன் சென்று அவனது தவற்றினைக் கட்டுரைப் பான்புக்கவள் தனது ஊர் இன்னதெனக் கூறுங் கூற்றாக வுள்ளது. ஓர் மாது அரசன் முன் சென்று சிறிதும் அஞ்சாது அவனது தவற்றினை எடுத்துக்காட்டி இடித்துரைப்பான் புக்கதும், அதினும், தன் ஊர்ப்பெயர் கூறும் பொழுதே, `என்னூர் நின்போலும் நீதியற்ற மன்னரால் ஆளப்படுவதன்று’ என்பது போதர `ஓர் பசு வுற்ற துயரினையும் சகிக்கலாற்றாது தன் அருமந்த மகனைத் தேர்க் காலில் வைத்தூர்ந்து நீதி செலுத்திய மன்னனால் ஆளப்படுவது காண் என்பதி’ என்றுரைத்ததும் எவ்வளவு பெருமித உணர்ச்சியை விளைவிப்பன பாருங்கள்!
பின்னது, புகார் நகரிலிருந்த கிள்ளிவளவன், தன் மகனாகிய உதய குமரனென்பான் மணிமேகலை என்னும் தவமகளைக் காதலித்து ஓர் விஞ்சையனால் வெட்டுண்டிறந்தான் என்பது தெரிந்து அவனை உடனே புறங்காடடைவிக்கு மாறு கூறியது. தன் மகன் புரிந்த தீமை பிறவேந்தர் செவியை யடையுமுன் அவனை ஈமத்தேற்றுக என்கிறான்! மகனை முறை செய்த மன்னவன் வழியில் வந்து, தன் குலத்திற்கு ஓர் சிறு மறுவும் உளதாகாது காத்தல் கருதிய இம் மன்னனது மாட்சியை என்னென்றுரைப்பது!



