
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
19. கல்வி
இம்மன்னர்கள் காலத்தில் அரசியல் முதலிய யாவும் தமிழ் மொழி வாயிலாக நடைபெற்று வந்தமையாலும், பாண்டி நாட்டிலும் சோணாட்டிலும் சங்கங்கள் நிறுவித் தமிழ் ஆராயப் பெற்றமையாலும், மூவேந்தர்களும் வள்ளல்களும் வரையாத வண்மையுடன் புலவர்களை மிக மதித்துப் போற்றிவந்தமை யாலும் தமிழ்க் கல்வியானது மிக உயரியநிலையில் இருந்தது; புலவர் பல்லாயிரவர் திகழ்ந்தனர்; இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் இலக்கணமாகிய அகத்தியமும், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், பனம்பாரம், பன்னிருபடலம், அவினயம், காக்கைபாடினியம், சிறு காக்கைபாடினியம், சங்கயாப்பு, நற்றத்தம், பல்காயம், மயேச்சுரம், வாய்ப்பியம், இறையனார் களவியல் முதலிய இயற்றமிழ் நூல்களும், பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம், பெருங்கலம், இந்திரகாளியம், பஞ்சபாரதீயம், பஞ்சமரபு முதலிய இசைத்தமிழ் நூல்களும், பரதம், குணநூல், கூத்தநூல், முறுவல், சயந்தம், செயிற்றியம், பரத சேனாபதீயம், மதிவாணனார் நாடகத்தமிழ்நூல் முதலிய நாடகத்தமிழ் நூல் களும் தழைத்து விளங்கின; எண்ணிறந்த பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை உள்ளிட்டன தலைச்சங்கத்தாராலும், கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலையகவல் என இத்தொடக் கத்தன இடைச் சங்கத்தாராலும், நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பதுகலி, எழுபது பரிபாடல், பத்துப்பாட்டு, முத்தொள்ளாயிரம், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என்று இத்தொடக்கத்தன கடைச் சங்கத்தாராலும் பாடப்பெற்று நிலவின; தெய்வப்புலமைத் திருவள்ளுவ தேவரால் திருக்குறள் என்னும் செந்தமிழ்த் திருமறையும், சேரமுனியாகிய இளங்கோவடிகளால் சிலப்பதிகாரமும், கூலவாணிகன் சாத்தனாரால் மணிமேகலையும், கபிலர் முதலிய நல்லிசைப் புலவர்களால் இன்னா நாற்பது முதலிய ஏனைய கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பெற்று ஒளிர்ந்தன; வானநூல், எண்ணூல், மருத்துநூல் முதலிய கலைகளும் வழக்கில் இருந்தன. மற்றும், அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலைமுழவு என ஏழுவகையாற் பகுக்கப் படும் பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலிய தோற்கருவிகளும், வங்கியம் என்னும் துளைக்கருவியும், பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நரப்புக்கருவிகளும், கஞ்சக்கருவியும் பயிலப் பெற்று வந்தன; ஆயிரம் நரம்புடைய ஆதியாழ் என்பதும் இருந்தது; குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையானும் பிறக்கும் பண் விகற்பங்களும், பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகளும் தமிழ்ப்பாணர்களால் அறிந்து பாடப்பெற்று வந்தன; வேத்தியல், பொதுவியல் என்னும் இருதிற முடைய அகக்கூத்து, புறக்கூத்துகளும், குரவை, கலிநடம், குடக் கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்னும் விநோதக் கூத்து
களும், அம்மனை, பந்து, கழங்காடல், உந்தி, சாழல், பல்லாங்குழி, அவலிடி, கொற்றி, பிச்சி, வாரிச்சி, சிந்துப்பிழுக்கை, குடப்பிழுக்கை, பாண்டிப் பிழுக்கை, பாம்பாட்டி, ஆலங்காட்டாண்டி முதலிய பல்வரிக் கூத்துகளும், பிறவும் நடிக்கப்பெற்று வந்தன.
இப்பொழுது வெளிவந்துள்ள எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய கடைச்சங்க இலக்கியங்களிலிருந்து அறியப்படும் புலவர் ஏறக்குறைய எழுநூற்றுவர் ஆவர். இவர்களில் ஒளவையார், ஆதிமந்தியார், காக்கைபாடினியார் நச்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளிவீதியார், வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி, குறமகள் குறியெயினி, காவற்பெண்டு, குன்றியாள், கழார்க்கீரன் எயிற்றியார், காமக்கணிப் பசலையார், நக்கண்ணையார், நன்னாகையார், பூங்கண்ணுத்திரையார், பொன்மணியார், மாறோகத்து நப்பசலையார், போந்தைப் பசலையார், அள்ளூர் நன்முல்லையார், பாரிமகளிர் முதலாயினார் நல்லிசைப் புலமை வாய்ந்த மெல்லியலாராவர். இவற்றிலிருந்து அக்காலத்தே கல்வியில் இருபாலாரும் எங்ஙனம் சிறப்படைந்திருந்தன ரென்பது புலப்படும்.



