
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
8. தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன்
இம் மன்னனது பெயரின் பொருள் வானத்தில் அசைந்து கொண்டிருந்த பகைவரது மதிலை யழித்த வீரவளையணிந்த தோளையுடைய சோழன் என்பதாகும். இவனால் அழிக்கப்பெற்ற அரண் மூன்றென்பது சிலப்பதிகாரத்தால் வெளியாகின்றது. சோழர் குலத்தாரது வீரத்திற்கு இவ்வேந்தன் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றான். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடுகின்ற ஓர் புலவர்,
“சார்தல், ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல்தூங்கெயி லெறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்அடுதல் நின்புகழு மன்றே“ (புறநானூறு 39:4-7)
என்று கூறுதல் காண்க. இவன் அகத்திய முனிவருடைய கட்டளையால் காவிரிப் பூம்பட்டினத்தில் முதன் முதல் இந்திரனுக்கு விழாச் செய்தனன் என்பது,
“உலகந் திரியா வோங்குயர் விழுச்சீர்ப்பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇயஓங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத்தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன்விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்றுமண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள்மேலோர் விழைய விழாக்கோ ளெடுத்தநாலேழ் நாளினும் நன்கினி துறைகெனஅமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது“
என்னும் மணிமேகலை விழாவறை காதையால் (1-9) விளங்குகிறது. இம்மன்னன் வானத்தில் அசைந்து கொண்டிருந்த மதிலை அழித்த செய்தியானது,
“ஒன்னார், ஓங்கெயிற் கதவம் உருமுச்சுவல் சொறியும்தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கைநாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்“
எனச் சிறுபாணாற்றுப்படையிலும், (79-82)
“வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பிற்றூங்கு மெயிலுந் தொலைத்தலால்“
எனப் பழமொழியிலும்,
“தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை“
எனச் சிலப்பதிகாரத்தும், (வாழ்த்துக்காதை 16-ஆம் பாட்டு)
“தேங்கு தூங்கெயி லெறிந்த வவனும்“
எனப் பரணியிலும்,
“கூடார்தம், தூங்கு மெயிலெறிந்த சோழனும்“
என உலாவிலும் குறிக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் சோழர் குலத்து முன்னோன் புரிந்த செய்தி பின்னோர் பலர்க்கும் ஏற்றிக் கூறப்படுவதி லிருந்து இச்செயல் எவ்வளவு அருமையுடைத்தாகக் கருதப்பட்டதென்பது விளங்கும்.



