
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
10. கிள்ளிவளவன்
இவன் கரிகாலனை யடுத்துக் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தானாகத் தெரிதலானும், இவன் தம்பியாகிய நலங்கிள்ளிக்கு வழங்கும் சேட் சென்னி என்னும் பெயர் பாட்டன் பெயராக இருத்தல் கூடுமாகலானும் இவ்வரசன் கரிகால் வளவன் மகனென்று கருதப்படுகின்றான். நலங்கிள்ளி, மாவளத்தான் என்னும் இருவரும் இவன் தம்பியர் என்பது பின் காட்டப்பெறும். புகாரில் இருந்தவனாக மணிமேகலையிற் கூறப்படுகின்ற சோழ மன்னன் இவனே. அக்காப்பியத்திலிருந்து இவனுக்கு நெடுமுடிக் கிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்னும் பெயர்களும் வழங்கினவென்பதும், இவனது தேவியாகிய சீர்த்தி என்பாள் மாவலிவமிசத்திற் பிறந்தவள் என்பதும், இவள் வயிற்றுப் பிறந்தோன் உதயகுமரன் என்பதும் அறியப்படுகின்றன. இவன் நாக நாட்டரசனாகிய வளைவணன் என்பானது மகளாகிய பீலிவளையை மணந்து ஓர் மகனைப் பெற்ற செய்தியும் அதிலிருந்து தெரிகிறது.
பல புலவர்கள் இவனைப்பாடிய புறப் பாட்டுக்களிலிருந்து இவன் மிக்க வீரமும், வண்மையும் உடையவனென்றும், புலவர்கள் தன்னை, நெருங்கிக்கூறும் அறிவுறூஉக்களைச் செவிமடுத்து அந்நெறி யொழுகுதலால் தன் குறைகளைப் போக்கிவந்தனன் என்றும் தெரிகிறது.
ஆலத்தூர்கிழார் என்னும் புலவர் இவன்பாற் பரிசில் பெற்றுச் செல்லும்பொழுது, ‘எம்மை நினைத்து வருவீரோ’ என இவன் வினவா நிற்புழி, அவர், ‘பாணர்க்குக் கரவில்லாத உள்ளத் துடன் இனிய மொழி கூறி அமலைக் கொழுஞ்சோறு அளித்து அகலாச் செல்வம் முழுதுஞ் செய்தருளிய எம் வேந்தனாகிய வளவன் வாழ்வானாக என்று காலையந்தியும் மாலையந்தியும் நினது பெருமை பொருந்திய தாளைப் பாடேனாயின் ஆதித்தன் தோன்றுதலறியான்; யானோ எளியேன்; இவ்வுலகின்கண் சான்றோர் செய்த நல்வினையுண்டாயின், இமயமலையிலே திரண்டு கொண்டல்கள் சொரிந்த மழைத்துளியினும் பலகாலம் வாழ்வாயாக’ என்று கூறினர். இவ்வரசன் சேரனது கருவூரை ஒருகால் முற்றுகையிட்டிருந்தான். சேரனோ இவனோடு எதிர்த்து மலையும் ஆற்றலின்றி மதிலையடைத்துக் கொண்டு உள்ளிருந்தனன். அடைமதிற்பட்டிருக்கும் நகரத்து மக்கள் எய்தும் இன்னல் அளவிடற்கரியதன்றே? அதனை யறிந்தார் அருண்மிக்க புலவராகிய இவ்வாலத்தூர் கிழார்; உடனே வளவனிடத்துச் சென்று, அவனை நோக்கி, `அரசே, காக்கள்தோறும் காவன் மரங்களை வெட்டும் ஓசை தன் ஊரிலே தனது கோயிற்கண் சென்று ஒலிக்கவும் அவ்விடத்து மானமின்றி இனிதாக விருந்த வேந்தனுடன் இவ்விடத்து நின் முரசு ஒலிக்க நீ பொருதாயென்பது கேட்டார் நாணுந் தன்மையுடையது; நீ அவனைக் கொல்வாயாயினும் கொல்லாது ஒழிவாயாயினும் அவற்றால் நினக்குண்டாகும் உயர்ச்சியை யாம் `கூறவேண்டுவதின்று; நீயே எண்ணியறிவாய்’ என்னுங் கருத்துள்ள ஓர் பாட்டினைக் கூறினார். அதனைக் கேட்டு வளவனும் போரொழிந்து மீண்டனன்.
வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் இவ்வரசனைப் பாடிய செவியறிவுறூஉ உயர்ந்த கருத்துக்கள் பலவுடையது. `பெரும, தமிழ் நாட்டிற்குரிய முரசுமுழங்கு தானையையுடைய மூவேந்தருள்ளும் அரசென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது நின்னுடைய அரசே; ஞாயிறு நான்கு திக்கினும் தோன்றினும், வெள்ளிமீன் தென்றிசைக்கட் செல்லினும் அழகிய காவிரி இடையறாது நீர் பெருகிவந்து பல கால்களால் ஊட்டுதலின் தொகுதி கொண்ட வேற்படையின் தோற்றம் போலக் கரும்பின் வெளிய பூக்கள் அசையும் நாடென்று சிறப்பித்துச் சொல்லப் படுவது நின்னுடைய நாடே; அத்தகைய நாடு கெழு செல்வத்தை யுடைய பீடுகெழு வேந்தே, நினக்குரியன சில சொல்வேன்; என் வார்த்தைகளைக் கேட்பாயாக; அறக்கடவுளே ஆட்சி புரிவது போல் செங்கோலால் ஆராயும் ஆராய்ச்சியையும், முறை கேட்க வேண்டுங்காலத்து எளிய செவ்வியையும் உடையோர் மழை வேண்டுங் காலத்து அதனைப் பெற்றோராவர்; வானை முட்டிய நினது பரந்த வெண்கொற்றக் குடையானது வெயிலை மறைத்தற்குக் கொண்டதோ எனின், அன்று; அது, வருத்தமுற்ற குடியை நிழல் செய்தல் காரணத்தாற் கொள்ளப்பட்டது; போர்க்களத்திலே வருகின்ற மாற்றார் படையை எதிர்நின்று பொறுத்து அது சரிந்து மீளும் புறக்கொடைகண்டு ஆரவாரித்து நின் படைவீரர் தரும் வெற்றியும் கலப்பை நிலத்தின்கண் உழுத சாலிடத்து விளைந்த நெல்லினது பயனே; மாரி பொய்ப்பினும் வாரிகுன்றினும் இயற்கையல்லன செயற்கையிற் றோன்றினும் இவ்வுலகம் காவலரைப் பழித்துரைக்கும்; அதனை அறிந்தாயாயின், நீயும் நொதுமலாளரது உறுதியில்லாத மொழியைக் கொள்ளாது உழுவார் குடியைப் பாதுகாத்து அதனால் ஏனைக் குடிகளையும் புரப்பாயாயின் நின் பகைவர் நின் அடியைப் போற்றுவாராவர்’ என்னும் பொருள்கள் அதிற் கூறப்பட்டுள்ளன. இப்பாட்டினைக் கேட்ட கிள்ளிவளவன் அப்புலவரால் இறுக்கப்படாதிருந்த அவருடைய நிலவரி முழுதையும் விடுவித்துவிட்டான்.
ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர்,
“நீ, உடன்று நோக்கும்வா யெரிதவழநீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பசெஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும்வேண்டியது விளைக்கும் ஆற்றலை“
என்று பாடுவாராயினர்.
மாறோகத்து நப்பசலையார் என்னும் புலவர், `நீ, தன்னை யடைந்த புறவின் பொருட்டுத் துலைபுக்க செம்பியன் மரபினுள்ளா யாதலால் இரந்தோர்க்கீதல் நினக்கு இயல்பாவதன்றிப் புகழ் அன்று; வானத்திலே தூங்கெயிலை யழித்த நின் முன்னோரை நினைப்பின் ஈண்டுள்ள பகைவரைக் கொல்லுதலும் நினக்குப் புகழ் அன்று; சோழரது உறந்தை அவையத்து அறம் நின்று நிலை பெற்றதாதலால் முறைமை செய்தலும் நினக்குப் புகழ் அன்று’ என்று கூறினர்.
மணிமேகலையிலுள்ள ஓர் வரலாறு முறை செய்தலில் இவனுக்கிருந்த உயர்ந்த கருத்தைப் புலப்படுத்துகிறது. இவன் மைந்தனாகிய உதய குமரன் பௌத்த சமயத்தைச் சார்ந்து துறவு பூண்டிருந்த மணிமேகலை என்னும் தவமகளைக் காதலித்து அவளைக் கைப்பற்றுவான் இரவிற்சென்ற பொழுது ஓர் விஞ்சை யனால் வெட்டுண்டிறந்தனன். இச்செய்தி அந்நகரத்திருந்த முனிவர்களால் இவனுக்கு அறிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டலும், இவ்வளவன், தன் அமைச்சனும் படைத் தலைவனுமாகிய சோழிய வேனாதியை நோக்கி, ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றாகும்; தன் மகனைப் புவியிலே கிடத்தி அவன்மீது தேர்க்காலைச் செலுத்தி முறை செய்த அரசர் பிரான் வழியில் ஒரு தீவினையாளன் பிறந்தானென்பதை மற்றை அரசர்கள் கேட்குமுன்னம் அவனைப் புறங்காடடைவிக்க’ என்று கூறினன். தன் மகன் இறந்ததற்குச் சிறிதும் துயருறாது இவன் கூறிய இம்மொழிகள் முறையினை முட்டாமற் செலுத்தும் பண்பு இம் மரபினர்க்கு இயல்பாதலைக் காட்டுகின்றன. எனினும், குற்றமற்ற வளாகிய மணிமேகலையை இவன் சிறைப்படுத்தியதும், இவனது தேவி வஞ்சத்தால் அவளைத் துன்புறுத்தத் தொடங்கியதும் இவர்கட்கு இழுக்கே. கதாநாயகியான மணிமேகலை இராசமா தேவிக்குப் பௌத்த சமய உண்மைகளை அறிவுறுத்தனளாகக் கூறக்கருதிய சாத்தனார் அதற்கொரு வாயிலாகக் கதையை இங்ஙனம் அமைத்துக் கொண்டனர் எனலுமாம்.
புறப்பாட்டிற் காணலாவதொரு செய்தி இம் மன்னற்குப் பெரிய மறுவினையுண்டாக்குவ தென்பதில் ஐயமில்லை. அச்செய்தியாவது, வரையாத வள்ளண்மையால் உலகமுள்ளளவும் அழியாத புகழினைப் படைத்த கடையெழு வள்ளல்களில் ஒருவனும், திருக்கோவலூரை அரசிருக்கையாக வுடையவனுமாகிய மலையமான் திருமுடிக்காரியின் மிக்க இளமையுடைய மக்களைப் பற்றிக் கொணர்ந்து யானைக்காலில் இடறுவிக்கத் துணிந்தமையே யாகும். இவன் அங்ஙனம் செற்றங் கொண்டமைக்குக் காரணம் இதுவாகுமென்று கருதப்படுகிறது; கிள்ளிவளவன் புகாரிலிருந்து அரசாண்டபொழுது நெடுங்கிள்ளி என்னும் சோழமன்னன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனன். கிள்ளி வளவனுக்கும் நெடுங்கிள்ளிக்கும் பகைமை மூண்டது. கிள்ளி வளவன் தம்பியும் இளவரசனுமாகிய நலங்கிள்ளி நெடுங்கிள்ளி யுடன் பல இடங்களிற் பொருது, முடிவில் கரியாறு என்னு மிடத்தில் நடந்த போரிலே அவனைக்கொன்றனன். அப்பொழுது நெடுங்கிள்ளிக்குத் துணையாக அங்கு வந்தெதிர்த்த சேர பாண்டிய மன்னர்களும் நலங்கிள்ளியால் முறியடிக்கப்பட்டனர். காரியாற்றில் இவைநிகழ்ந்தமை, நெடுங்கிள்ளியானவன் காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி என வழங்கப் படுதலானும்,
“வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி
… … …
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர்சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கைஆர்புனை தெரியல் இளங்கோன் றன்னால்காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடைவலிகெழு தடக்கை மாவண் கிள்ளி“
எனக் கிள்ளிவளவன் மணிமேகலையிற் கூறப்படுதலானும் புலனாகின்றது. இங்ஙனம் நெடுங்கிள்ளியை வென்றபின்பு உறையூரும் கிள்ளிவளவற்கும் நலங்கிள்ளிக்கும் உரியதாயிற்று. அதனாற்றான்,
“பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே“
எனக் கிள்ளிவளவனும்,
“உறந்தை யோனே குரிசில்“
என நலங்கிள்ளியும் புறப்பாட்டுக்களிற் கூறப்படுகின்றனர்.இது நிற்க. – திருமுடிக்காரியானவன் பெருவள்ளலாக விளங்கியதன்றி, ஒப்பற்ற வீரனாகவும் திகழ்ந்தான். அதனால், மூவேந்தர்கள் தமக்குள்ளே போர் நேர்ந்த காலையில் காரிக்குப் பெரும் பொருள் கொடுத்து அவனைத் தமக்குப் படைத் துணையாகும்படி தனித்தனி வேண்டுவர். காரியும் தளர்ந்தவர் பக்கல்துணையாகச் சென்று பொருது, தான்பெற்ற பொருளனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கிவிடுவான். இதனை,
“வீயாத் திருவின் விறல்கெழு தானைமூவரு ளொருவன் றுப்பா கியரெனஏத்தினர் தருஉங் கூழே நுங்குடிவாழ்த்தினர் வரூஉம் இரவல ரதுவே“ (புறம், 122)
என்பதனால் அறியலாகும். இச்செயல் காரிக்கே யன்றி அவன் குடியிற் பிறந்தார் பிறருக்கும் இயல்பாயிருந்தது. காரியானவன் நெடுங்கிள்ளிக்குத் துணைபுரிந்தமையாலோ, அவன் மக்களு
ளொருவன் நெடுங்கிள்ளியின் மகனுக்கு அரசுநிலையிட முனைந்தமையாலோ கிள்ளிவளவனுக்கு மலையமான் மக்களிடத்துத் தகுதியில்லாத சீற்றமுண்டாயது. இக்கொடுஞ் செயல் நிகழ்வுழி அங்கு வந்திருந்த கோவூர்கிழார் என்னும் புலவர் கண்டு பதைபதைத்து இரங்கி, அரசனை நோக்கி ‘நீ தான், ஓர் புறாவின் அல்லலன்றியும் பிறவுயிர்களுக்குற்ற துன்பத்தையும் தீர்த்தற்கு உயிர்க்கொடை பூண்ட சோழன் மரபிலுள்ளாய்; இவர் தாம், அறிவால் உழுதுண்ணும் கற்றோரது வறுமைத் துன்பத்திற்கு அஞ்சித் தம்முடைய பொருளைப் பகுத்துண்ணும் தண்ணிய அருளையுடையாரது மரபிலுள்ளார்; இவர் இப்பொழுது களிற்றைக் கண்ட வியப்பால், முன்பு வெருவியழுத அழுகையை மறந்திருக்கின்ற சிறு பிள்ளைகள்; இம்மன்றினை வெருண்டு நோக்கி முன்பு அறியாத புதியதோர் வருத்தத்தையும் உடையர்; இதனைக் கேட்டனையாயின் நீ விரும்பியதைச் செய்க’ என்னும் பொருளமைந்த ஓர் பாட்டினைக் கூறினர். இதனைக்கேட்ட கிள்ளிவளவன் தன் குற்றத்திற்கு நாணி, அப்பிள்ளைகளைக் கொல்லாது விடுத்தனன். வளவன் முதலிற் செய்யத் துணிந்த காரியம்பற்றி அவனை எத்துணையும் எள்ளுதல் பொருந்துமேனும், பின்பு சான்றோர் சொற்கேட்டு அதனைச் செய்யாதொழிந்தமை கருதி அவனைப் பாராட்டவே வேண்டும்.
இனி, கிள்ளிவளவன் தான் கருவூரை முற்றுகையிட்டுச் சேரனை வென்றதும், தன் தம்பியால் நெடுங்கிள்ளியையும், சேர பாண்டியர்களையும் வென்றதுமன்றி, தான் மதுரையிற் சென்று பழையன் மாறன் என்பானை வென்றானென்று ஓர் அகப்பாட்டினால் தெரிகிறது. இவன் கூடல் மறுகிலே பழையன் மாறனை வென்ற பொழுது கோதைமார்பன் என்பான் பேருவகையுற்றனன் என்றும் அப்பாட்டுக் கூறுகிறது.
இனி, இவனுக்குச் சிறுகுடிகிழான் பண்ணன் என்பான் சிறந்த நட்பாளனாயிருந்தான். பண்ணன் மீது இவ்வரசர் பெருந்தகை பாடிய செய்யுளொன்று புறநானூற்றில் உள்ளது. அச் செய்யுளிலிருந்து பண்ணனுடைய ஈகைத் தன்மையும், அவன்பால் வளவன் பூண்ட நட்பின் பான்மையும், வளவனது கவிபாடுந்திறலும் நன்கு விளங்கும். அச்செய்யுள்,
“யான்வாழு நாளும் பண்ணன் வாழியபாணர் காண்கிவன் கடும்பின திடும்பையாணர்ப் பழுமரம் புள்ளிமிர்ந் தன்னஊணொலி யரவந் தானுங் கேட்கும்பொய்யா வெழிலி பெய்விடம் நோக்கிமுட்டை கொண்டு வற்புலஞ் சேரும்சிறு நுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்சோறுடைக் கையர் வீற்றுவீற் றியங்கும்இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும்மற்று மற்றும் வினவுந் தெற்றெனப்பசிப்பிணி மருத்துவ னில்லம்அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே“
என்பது பண்ணனிடத்திற் பரிசில் பெற்று மீண்டு வருகின்ற பாணனொருவன் அவன்பாற் பரிசில்பெறுதற்குச் சுற்றத்துடன் வந்துகொண்டிருக்கிற பாணனை வழியிற் கண்டு, அவன் வினாவிய தனைக் கேட்டு, தன் பக்கப்பாணரை நோக்கிக் கூறியதாகப் பண்ணனது ஒப்பற்ற ஈகை புலப்படப் பாடப் பெற்றது இப்பாட்டு. இதன் பொருள்; ‘பழுத்த மரத்தின் கண்ணே புள்ளினம் ஒலித்தாற் போன்ற ஊணாலுண்டாகிய ஆரவாரந்தானுங் கேட்கும்; மழை பெய்யுங் காலத்தை நோக்கித் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தை யடையும் சிற்றெறும்பின் ஒழுக்குப்போலச் சோற்றுத் திரளையைக் கையிலுடையராய் வெவ்வேறு வரிசையாகச் செல்கின்ற பெரிய சுற்றத்தோடுங் கூடிய பிள்ளைகளையும் காண்கின்றேம்; அங்ஙனம் கேட்டும் கண்டும், எம் பசி வருத்தத்தால், பசி நோய் தீர்க்கும் மருத்துவனது மனை அணிமையிலுள்ளதோ சேய்மையினுள்ளதோ கூறுங்கள் எனப் பின்னும் பின்னும் விரைந்து வினவுகின்றேம்; என்று இப்பாணன் கூறுகின்றான்; பாணரே இப்பரிசிலனது சுற்றத்தின் வறுமையைக் காண்பீராக; இங்ஙனம் என் வறுமையும் தீர்த்து இவன் வறுமையும் தீர்க்க விருக்கின்ற பண்ணன் யான் உயிர் வாழு நாளையும் பெற்று வாழ்வானாக’ என்பது. இதிலுள்ள உவமை நயம் முதலிய அழகுகள் கற்றோர் நெஞ்சைப் பிணிக்குந் தன்மையன.
இனி, காவிரிப்பூம் பட்டினம் இவன் காலத்திலேயே கடலாற் கொள்ளப்பட்டதென்றும், இவன் வேறிடத் தையடைந்தானென்றும் மணிமேகலை கூறுகிறது. இவன் அடைந்த வேறிடம் உறையூரோ காஞ்சிநகரோ தெரியவில்லை. புகார் கடல்கோட்பட்டபின் மாதவி மகளாகிய மணிமேகலை காஞ்சிப்பதியை அடைந்த பொழுது அந்நகரத்தில் தொடுகழற்கிள்ளி யென்னும் சோழ னொருவனும் அவனுக்குத் தம்பியாகத் துணையிளங்கிள்ளி யென்பானும் இருந்தாராக அக்காப்பியம் கூறுகிறது. அன்னார் கிள்ளிவளவனும் அவன் றம்பியுமாயின் அவர்கள் காஞ்சியை அடைந்தாராவர்.
இவ்வேந்தன் முடிவில், சேர நாட்டிலுள்ளதாகிய குளமுற்றம் என்னும் இடத்தில் நடந்த போரில் உயிர் துறந்தானாவன். அதனால் இவன் பெயர், சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் எனப் பின்பு வழங்குவதாயிற்று. இவனைப் பாடிய புலவர்கள், புறத்தில், ஆலத்தூர் கிழார், வெள்ளைக்குடி நாகனார், மாறோகத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், கோவூர்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், நல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் என்போரும், அகத்தில், நக்கீரரும் ஆவர். இவருள் நப்பசலையார் பெண்பால ராயிருத்தல் வேண்டும். இவர்களில், இவ்வரசன் துஞ்சியபின்னரும் இருந்து பிரிவாற்றாது வருந்திப் பாடியவர்கள் மாறோகத்து நப்பசலையாரும், ஆடுதுறை மாசாத்தனாரும், ஐயூர் முடவனாரும் ஆவர். இன்னோர் இரங்கிக் கூறியவை நெஞ்சை உருக்குந் தன்மையன. நப்பசலையார், ‘பொன்னானியன்ற மாலையினையும், நெருங்கிய போரின்கண் எதிர்நின்று வெல்லும் படையினையும், திண்ணிய தேரினையுமுடைய வளவனைக் கொண்ட கூற்று, தன் மனத்துளே கறுவு கொண்டதாயினும், எய்தி நின்று கையோடு மெய் தீண்டி வருத்திற்றாயினும் அதற்குப் பிழைத்தல் இல்லை; அது, பாடுவார் போலத் தோன்றி நின்று கையாற்றொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டதாகல் வேண்டும்’ என்றும்; மாசாத்தனார், ‘ஈரமில்லாத கூற்றமே, நீ மிகவும் அறிவிலியா கின்றாய்; வாட் போரில் வல்ல வீரரும் யானையும் குதிரையும் போர்க்களத்தில் மாய எதிர்நின்று கொன்று நாடோறும் நினது பசியைத் தீர்த்தற்கு ஊட்டிய வசையற்ற வலியையுடைய வளவனை நீ கொண்டாயாயின் இனி நின் பசியைப் போக்குவோர் யார் சொல்வாயாக; விரகு இல்லாமையால் மேல் விளைந்து பயன்படும் விதையைக் குத்தியுண்டாய்; நினக்கு யான் கூறிய இவ்வார்த்தை பிறழாத மெய்யாதலை இன்னமும் காண்பை’ என்றும்; கையறு நிலையாகக் கூறினர்.
முடவனாரோ, சுற்றத்தார் இரங்கிக் கூறும் ஆனந்தப் பையுள் என்னும் துறையில் வைத்து, `கலம் வனையும் வேட்கோவே, கலம் வனையும் வேட்கோவே, இருள் ஓரிடத்தே செறிந்து நின்றாற் போலத் திரண்ட புகைவானின்கட் சென்று பொருந்தும் சூளையை யுடைய மூதூரிற் கலம் வனையும் வேட்கோவே, நிலமுழுதும் பரப்பிய பெரிய தானையினையும், புலவர் புகழ்ந்த பொய்யாத நல்ல புகழினையும் உடைய செம்பியர் மருகனாகிய வளவன் தேவருலகத்தை அடைந்தானாகலான், அத்தன்மையுடை யோனைக் கவிக்கும் இடமகன்ற தாழியை1 நீ வனைய விரும்பினாயாயின் பெரிய நிலவட்டம் திகிரியாக மேருமலைமண்ணாக நினக்கு வனைய இயலுமோ; இயலாமையின் எத்தன்மையை யாகுவை; நீ இரங்கத்தக்காய்’ என்று கூறினர். இங்ஙனம், கிள்ளிவளவன் துஞ்சியபின் பாடிய இச்செய்யுட்களிலிருந்து, நல்லிசைப் புலவர்
கட்கு அவன் மேல் எத்துணை அன்பிருந்ததென்பது நன்கு புலனாகின்றது.



