சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்

14. நல்லுத்தரன்

இவனது வரலாறொன்றும் தெரிந்திலதேனும், இவன் பாடிய ஓர் அழகிய புறப்பாட்டிலிருந்து இவன் விரிந்த உள்ளமுடையாருடன் நட்புச் செய்தலில் மிக்க விருப்பமுடையன் என்பதும், செய்யுளியற்று வதில் வல்லன் என்பதும் புலனாகின்றன. அச்செய்யுள்,

விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்வல்சி கொண்டளை மல்க வைக்கும் எலிமுயன் றனைய ராகி உடையதம்வளன்வலி யுறுக்கும் உளமி லாளரொடுஇயைந்த கேண்மை இல்லா கியரோ கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தெனஅன்றவண் உண்ணா தாகி வழிநாள்பெருமலை விடரகம் புலம்பவேட் டெழுந்துஇருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும்புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்துஉரனுடை யாளர் கேண்மையோடுஇயைந்த வைகல் உளவா கியரோ

என்பது. “விளைந்த செவ்வியை யுடைய சிறிய இடத்தை நோக்கி வளைந்த கதிராகிய உணவைக் கொண்டுபோய் வளையில் வைக்கும் எலிபோலும் சிறு முயற்சியினராகித் தம் செல்வத்தை இறுகப் பிடிக்கும் உள்ள மிகுதி யில்லாருடன் பொருந்திய நட்பு எனக்கு இல்லையாகுக; தறுகண்மையுடைய பன்றியேறு இடப்பக்கத்தே வீழ்ந்ததாகலின் அதனை உண்ணுதல் புல்லிதென்று கருதி அன்று அதனை யுண்ணாதிருந்து அடுத்தநாள் மலைமுழையினின்றும் புறப்பட்டுச் சென்று பெரிய ஆண் யானையை வலப்பக்கத்தே வீழச்செய்து உண்ணும் புலி பசித்தாற் போலும் மெலிவில்லாத உள்ளமுடைய உரவோர் நட்புடன் பொருந்திய நாட்கள் உளவாகுக’ என்பது அதன் பொழிப்பு. கற்றறிந்தாரேத்தும் கலித்தொகையில் முல்லைக்கலி பாடினான் இவனென்றால் இவ்வரசனது புலமையின் பெருமையை யாரால் அளவிட்டுரைக்கலாகும்?

இனி, குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன், குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி, நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி முதலிய சோழ மன்னர்கள் சங்க இலக்கியங்களிற் கூறப்பட்டிருக் கின்றனரேனும் அவர்களைப்பற்றி மிகுதியாக அறியலாவன இல்லை. சிறப்புடைய இரு சோழ வேந்தரின் வரலாறுகளே இனி இப்பகுதியில் வெளியிடற் குரியவாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *