
சோழர் சரித்திரம்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
1. தமிழகத்தின் பழமை
“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமேதெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்“
(மனோன்மணீயம் தமிழ்த்தாய் வாழ்த்து)
என்றாற்போல அறிஞர்களாற் புகழப் பெற்ற நம் தமிழகத்தி லிருந்து தொன்றுதொட்டு அரசுபுரிந்து வந்தோர் சேர, பாண்டிய, சோழர் என்னும் மூவேந்தராவர். தமிழகம் என்பது ஒருகாலத்தே தெற்கில் கடல் கொள்ளப்பட்ட குமரி (லெமூரியா)க் கண்டத்தின் தென்கோடியிலிருந்து விந்தமலை வரையில் தொடர்புற்றுக் கிடந்த பெருநிலப் பரப்பாகும் என்று இப்பொழுதைய ஆராய்ச்சிவல்லார் துணிகின்றனர். குமரிக் கண்டமானது மிக்க பழமை வாய்ந்ததென்றும், அவ்விடத்திற்றான் முதன் முதல் மக்கள் தோன்றி யிருக்க வேண்டுமென்றும் நில நூல் வல்லாரும், வான நூல் வல்லாரும், தொல்லுயிர் நூல் வல்லாரும் ஆராய்ந்து கூறுகின்றனர். தென்னாடு கடல் கொண்ட செய்தி, பிறநாட்டு ஆராய்ச்சியாளராற் கூறப்படுவதேயன்றி, நம் பழைய தமிழ் நூல்களிலும் கூறப்பட்டிருக்கின்றது. கலித்தொகை, சிலப்பதிகாரம், இறையனாரகப்பொருளுரை, தொல் காப்பிய உரை, சிலப்பதிகாரவுரை என்பன கடல்கோளைத் தெரிவிக்கின்றன. சுருங்கச் சொல்லின் தமிழகம் என்பது பல்லூழிக் காலமாக நன்மக்களின் பிறப்புக்கும், வாழ்க்கைக்கும் நிலைக் களனாய் விளங்கிவருவதொரு நாடு என்று கூறுதல் அமையும். பரதகண்ட முழுவதுமே தமிழகம் என்பது ஒரு சாரார் கொள்கை. பிற்காலத்தில் (பிற்காலம் எனினும் இப்பொழுதைக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வடக்கில் வேங்கடமும், தெற்கில் குமரியாறும், கிழக்கிலும் மேற்கிலும் கடலும், எல்லையாகவுடைய நிலமே தமிழகம் எனப்படுவதாயிற்று. இவ்வெல்லையிலிருந்து ஆட்சிபுரிந்தோரே மூவேந்தராவர்.
கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளின் முன்பே தமிழ் மன்னர் ஆட்சியில் தமிழகமானது செல்வத்திலும், நாகரிகத்திலும் சிறந்திருந்த தென்பதற்கும், எகிப்து, கிரீசு முதலான தேயங்களோடு வாணிகம் நடத்தி வந்ததென்பதற்கும் கிறிஸ்தவர்களுடைய பழைய மத நூலும், மேல் நாட்டு யாத்திரைக்காரர்களின் குறிப்புகளும் முதலானவையே சான்றாகவுள்ளன. பாரத காலத்திலே சேர பாண்டிய சோழ நாடுகள் மிக உயர்ந்த நிலையில் இருந்தன. பாண்டு மைந்தனான அருச்சுனன் பாண்டி நாட்டரசன் மகளை மணஞ்செய்து கொண்டான். பாரதப் போரிலே மூவேந்தரும் பாண்டவர்க்குத் துணையாய் நின்று போர் புரிந்த செய்தியைப் பாரதத்திலிருந்தே அறியலாகும். உதியன் சேரலாதன் என்னும் சேரமன்னன் பாண்டவர் சேனைக்குப் போர் முடியும்வரைப் பெருஞ்சோறு அளித்துக் காப்பாற்றி, சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என வழங்கப் பெற்றான் என்பதனை,
“அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇநிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பைஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்“
(புறநானூறு 2:3-16)
என்னும் புறப்பாட்டு அறிவுறுத்தும். பாண்டியன் ஒருவன் பாண்டவர் வெற்றிக்குக் காரணமாயிருந்தான் என்பது,
“பாரதப்போர், செற்றானுங் கண்டாயிச் சேய்“
என்று நளவெண்பாவிற் குறிக்கப்பெற்றுள்ளது. சோழன் ஒருவன் பாண்டவ சேனைக்கு முழு உதவியும் புரிந்தனன் என்னும் செய்தியை,
“தாங்கள் பாரத முடிப்பளவு நின்று தருமன்றன் கடற்படை, தனக்குதவி செய்த வவனும்“
என்று கலிங்கத்துப்பரணி எடுத்துக்காட்டுகிறது. இவைகளி லிருந்தே, நூற்றுவர், ஐவர் என்னும் இருதிறத்தாரில் யாவர் பக்கம் நீதியிருந்திருக்க வேண்டு மென்பதும், பாண்டவரது வெற்றியில் பெரும் பங்குக்குரியவர் யாவர் என்பதும் ஒருவாறு துணியலாகும்.
இராமாயண காலத்திலும் மூவரசர் நாடுகள் மிகமேன்மை யுற்றிருந்தன என்பதற்கு ஆதரவுகள் உள்ளன. பாண்டியரது தலைநகரம் கபாடபுரம் எனப் பெயர் சிறக்குமாறு, அதன் கோட்டை வாயிற் கதவு பொன்னாற் செய்யப்பட்டு, முத்தாலும் மணியாலும் அலங்கரிக்கப் பெற்று விளங்கியதனை வால்மீகி தம் இராமாயணத்துக் கூறுவரேல், அக்காலத்தில் தமிழகம் அடைந்திருந்த மேன்மைக்கு வேறென்ன சான்று வேண்டும்? அதற்கு முன்னும் எத்துணைத் தூரம் சென்று பார்க்கினும், மூவேந்தருடைய ஆட்சியின் தொடக்கம் கண்டுபிடிக்கக் கூடியதாயில்லை. அதனாலன்றோ தமிழ்க்கடலும், வடசொற் கடலும் நிலைகண்டுணர்ந்த பெரும் புலவராகிய பரிமேலழகர்,
“வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று“ (குறள் – 955)
என்னுங் குறளுரையில், `பழங்குடி’ என்பதற்குச் `சேர சோழ பாண்டியர் என்றாற்போலப் படைப்புகாலந்தொடங்கி மேம்பட்டுவருங்குடி’ என்று பொருள் விரித்தார்.



