

வேங்கடம் முதல் குமரி வரை (இரண்டாம் பாகம் )
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
முன்னுரை
வேங்கடம் முதல் குமரிவரை என்ற தொடரின் முதல் புத்தகம் பாலாற்றின் மருங்கிலே என்ற தலைப்போடு வெளிவந்து ஒன்பது மாதங்கள் தாம் ஆகின்றன. அதற்குள் அதே தொடரில் ‘பொன்னியின் மடியிலே’ என்ற தலைப்போடு இரண்டாவது புத்தகமும் வெளிவருகிறது. இவ்வளவு விரைவில் இப்புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்தவர்கள் தமிழ்நாட்டு ரஸிக நண்பர்களே. ‘கல்கி’யில் வெளிவரும் தொடர் கட்டுரைகளைப் படித்துவிட்டு அவற்றையெல்லாம் தொகுத்து புத்தக உருவில் எப்போது வெளியிடப் போகிறீர்கள் என்று கடிதத்திற்குமேல் கடிதம் எழுதிய அன்பர்கள் பலர். முதல் புத்தகம் வெளிவந்த உடனே ‘இந்த ஆண்டின் அருமையான புத்தகம் இது’ என்று பாராட்டி அதற்கு ஆயிரம் ரூபாய் பரிசொன்றையும் தந்து ஊக்குவித்தவர் சென்னை அருணாசலம் படத்தயாரிப்பாளர் திரு.ஏ.கே.வேலன் அவர்கள். இவர்கள் எல்லாம் காட்டிய ஆர்வமும், தந்த ஊக்கமுமே பொன்னியின் மடியிலே இச்சிறு குழந்தையையும் தவழவிடும் பாக்கியத்தைத் தந்திருக்கிறது எனக்கு.
வேங்கடத்தில் ஆரம்பித்து மதுராந்தகம் வரை தொண்டை நாட்டில் நடத்திய தல யாத்திரையே பாலாற்றின் மருங்கிலே என்ற தலைப்பில் வெளிவந்தது. அத்தலயாத்திரையின் இரண்டாவது சுற்று, நடு நாட்டில் உள்ள மயில மலையில் துவங்கி, தெய்வப் பொன்னி பாய்ந்து பெருகும் சோழநாட்டின் வடகீழ்ப் பகுதிகளை யெல்லாம் கடந்து, கும்பகோணத்தை அடுத்த திரிபுவனத்தில் நிறைவுற்றிருக்கிறது. ‘பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து இருப்பிலே
இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்தவள்’ தமிழ் அன்னை. நமது தல யாத்திரையும் பாலாற்றின் மருங்கிலே பிறந்து, பொன்னியின் மடியிலே தவழ்ந்து, காவிரிக் கரையிலே நடந்து, பொருநைத் துறையிலே கொலுவீற்றிருக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதனால் இனிவர இருக்கும் இரண்டு புத்தகங்களும் காவிரிக் கரையிலே பொருநைத் துறையிலே என்ற தலைப்புகளோடு வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறேன்.
‘இந்தக் கட்டுரைகளில் சொல்லப்படுகிற வரலாறு, விளக்கப்படுகிற கலை விமர்சனம் எல்லாவற்றையும் பாராட்டுகிறவர்கள் பலர். இக்கட்டுரைகள் மூலம் எடுத்துக் கூறும் இலக்கிய வளத்தையும், பக்தி அனுபவத்தையும் அனுபவிப்பவர்களும் அநேகர் என்றாலும் சில குறைபாடுகளையும் காணுகின்றார்கள் ஒரு சிலர்.
அவற்றில் முக்கியமானது, ‘நாம் பக்தியோடு வணங்கும் தெய்வங்களை நையாண்டிக்கு உரிய பொருளாக்கி, அவர்களைக் கேலி பண்ணிப் பேசுவது பொருத்தமன்று. நகைச்சுவை வேண்டும்’ என்பதற்காக இப்படி எல்லாம் எழுதுவது தவறு என்பதுதான்.
இந்தக் குற்றச் சாட்டிற்கு நானே பதில் சொல்லவேண்டும் என எண்ணியிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தை எனக்கு கொடுக்க விரும்பவில்லை இந்நூலுக்கு முகவுரை எழுதியிருக்கும் பேராசிரியர் அ.சீநிவாசராகவன் அவர்கள். அவர்களிடமும் பலர் இப்படிக் குறைப்பட்டிருக்கிறார்கள் போலும்.
அது காரணமாக அவர்களே அந்த பக்தர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள் அவர்களது முகவுரையிலே. அந்த ‘ரஸிக’ நண்பர்களது மனம் கோணாதபடி இவ்வளவு அழகாக என்னால் பதில் சொல்ல முடிந்திருக்காது என்பது எனக்கு இப்பொழுது தான் விளங்குகிறது. இந்தத் திருத்தொண்டைச் செய்ததற்காகவும் நல்ல முகவுரை ஒன்றையும் வழங்கியதற்காகவும் பேராசிரியருக்கு, ‘செந்தமிழ்ச் செம்மலுக்கு’ என் இதயம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘இத் தொடர் கட்டுரைகள் எழுதுவதன் நோக்கம் என்ன?’ என்று எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர் கேட்கிறார். அப்படி பெரிய நோக்கம் ஒன்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு நான் இந்தக் கட்டுரைகளை எழுதவில்லை தல வரலாறுகளைப் படிப்பவர்கள் உள்ளத்தில் ‘நாம் இந்தக் கோயிலைப் போய்ப் பார்க்கவேண்டும்’ என்ற ஆவலை இக்கட்டுரைகள் தூண்டுமானால், அது போதும் என்றே கருதுகிறேன் நான்.
மேலும் கோயில், குளம், மூர்த்தி, தீர்த்தம் இவைகளைக் காணச் செல்லும் அன்பர்கள் அங்குள்ள சிற்பச் செல்வங்களையும் கண்டு மகிழத் தெரிந்து கொண்டார்கள் என்றால் அதைவிட மகிழ்ச்சி தருவது வேறு ஒன்றும் இல்லை. கட்டுரைகளைப் படிக்கிறவர்கள், பாராட்டுகிறவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.
எங்கள் தலைவர் ரஸிகமணி அவர்கள் சொல்கிறபடி பக்தி, பண்பாடு எல்லாம் அவர்களிடம் தானே இன்றும் நிலைத்து நிற்கிறது தமிழ் நாட்டில். இவர்கள் காட்டும் அன்பும் ஆதரவுமே தெம்பு தருகிறது மேலும் மேலும் தொடர்ந்து எழுத. அவர்களுக்கு எல்லாம் என் நன்றியும் வணக்கமும்.
இந்த இரண்டாவது புத்தகத்திலே தருமபுரம் ஆதீனத்தார் கோயில்கள் பல இடம் பெற்றிருக்கின்றன. அக்கோயில் நிர்வாகத்தைத் திறம்பட நடத்துகிறவர்கள் ஆதீன கர்த்தர் குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகபராமாச்சார்ய சுவாமிகள், என்னிடம் மிக்க அன்புடையவர்கள் அவர்கள். அவர்களுக்கு இந்நூலைச் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
புத்தகம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள், புத்தகத்தை அழகாக அச்சிட்டுக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, இக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக உருவில் வெளியிட அனுமதி தந்த ‘கல்கி’ ஆசிரியர் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்



