

வேங்கடம் முதல் குமரி வரை (மூன்றாம் பாகம் )
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
முன்னுரை
“வேங்கடம் முதல் குமரிவரை” என்ற தொடரின் மூன்றாவது புத்தகம் இது. ‘பாலாற்றின் மருங்கிலே’ என்ற முதல் புத்தகத்தையும், ‘பொன்னியின் மடியிலே’ என்ற இரண்டாவது புத்தகத்தையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்தனர். அது காரணமாகவே இந்த மூன்றாவது புத்தகத்தைக் ‘காவிரிக் கரையிலே’ என்ற தலைப்போடு வெளியிட முற்படுகிறேன் நான்.
தமிழ்நாட்டில் கோயில்கள் பல இடங்களிலும் பரந்து கிடந்தாலும், காவிரியின் இருகரையிலும் தான் அவை அதிகமாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன என்பதை அன்பர்கள் அறிவார்கள். இந்த மூன்றாவது புத்தகத்தில் கும்பகோணத்திலிருந்து தல யாத்திரை துவங்குகிறது. தெற்கே திருப்பெருந்துறை வரை சென்று மேற்கு நோக்கித் திரும்பி, கொங்குநாட்டுத் தலங்களுக்கு எல்லாம் சென்று கோவையை அடுத்த போரூரில் தலயாத்திரை நிறைவுறுகிறது. அடுத்த நான்காவது புத்தகம் பழநியில் துவங்கி பாண்டி நாட்டுத் தலங்கள் வழியாக, கன்னியாகுமாரியில் நிறைவுறும்.
கட்டுரைகள் தொடர்ந்து கல்கியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவைகளைப் பாராட்டி எழுதும் அன்பர் பலர். குறை கூறுவாரும் இல்லாமல் இல்லை. அதிலும் ஒன்றிரண்டு ஸ்ரீ வைணவர்கள், நான் சைவத்தையே உயர்த்திப் பேசுகிறேன் என்றும் வைணவத்தைத் தாழ்த்துகிறேன் என்றுகூடக் கருதுகிறார்கள். நான் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என்ற வேறுபாடுகளை எல்லாம் பாராட்டாதவன். எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையுடையவன். கலைகளைக் கொண்டே கடவுளரை எல்லாம் கண்டு களிப்பவன். ஆதலால் இந்த ஆதாரமற்ற புகாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.
சமீபத்தில் டில்லியில் இருந்து தென்னாடு வந்திருந்த தமிழ் அன்பர் ஒருவர் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதி வந்து திரும்பியிருக்கிறார். அவர் டெல்லி திரும்பிய பின் கல்கியில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. அதனைப் படித்துவிட்டு ‘அடடா! இக்கட்டுரை முன்னரே வராமல் போய்விட்டதே! கட்டுரையைப் படித்தபின், அக்கோயிலில் பார்க்க வேண்டியவை என்ன என்னவோ இருக்கிறதே! அத்தனையையும் பாராமல் அல்லவா திரும்பிவிட்டோம்’ என்று ஆதங்கத்தோடு கடிதம் எழுதியிருக்கிறார். உண்மைதான். கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை வைத்துக்கொண்டு சென்றிருந்தால் பார்க்க வேண்டியவைகளை எல்லாம் பார்த்து அனுபவித்திருப்பார். இப்போது தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது; ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று, அந்த மாதத்தில் வெளிவந்த நான்கைந்து கோயில்களையும் பார்த்து வருவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு தலயாத்திரை துவங்குகிறார்கள் இவர்கள். இவர்களுக்கு எல்லாம் இப்புத்தகம் மிக உதவியாக இருக்கும் அல்லவா!
இந்த மூன்றாம் தொகுதிக்கு, ஒரு நல்ல முன்னுரையை, கலைமகள் ஆசிரியர், நண்பர் திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. சில மாதங்களுக்கு முன் அவர்கள் என்னிடம், உன் கட்டுரைகளை யார் யார் எல்லாம், படிக்கிறார்கள் தெரியுமா? காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சுவாமிகள் ஒழுங்காய்ப் படிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள் என்றார். இதைக் கேட்டு நான் அப்படியே மூர்ச்சித்துவிட்டேன். நாட்டில் ஆஸ்திகத்தை வளர்க்கவும் சமய அறிவைப் பரப்பவும் குருமூர்த்தியாக எழுந்தருளிய ஆச்சார்ய சுவாமிகளே படிக்கிறார்கள் என்றால் அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும் எனக்கு. இந்தப் புத்தகத்தை ஜகத்குரு ஆச்சார்ய சுவாமி அவர்களுக்கே சமர்ப்பித்து அதனால் மகிழ்ச்சி அடைகிறேன்.
புத்தகம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள், புத்தகத்தை அழகாக அச்சிட்டுக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லாவற்றிக்கும் மேலாக இக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தக உருவாய் வெளியிட அனுமதி தந்த கல்கி ஆசிரியர் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.
இத்தொகுதியின் வெளியீட்டைப் பெரிய விழாவாகவே நடத்தத் திட்டமிட்டுள்ள கோவை நன்னெறிக் கழகத்தாருக்கும் என் நன்றியும் வணக்கமும்.
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.



