

பேசும்பட அனுபவங்கள்
பம்மல் சம்பந்த முதலியார்
முதல் அத்யாயம் : படத்தில் நான் நடிக்க நேர்ந்ததெப்படி?
எனக்கு அறுபதாண்டு பூர்த்தியானவுடன் நான் நாடக மேடையின் மீது தோன்றுவதையே வர வரக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்த சமாசாரம், எனது நண்பர்களில் பலர் அறிவார்கள். அப்படியிருக்கும் பொழுது, கொஞ்சகாலம் சென்று, நாடகமேடையில் நடிப்பதை விட அதிக கஷ்டத்தைத் தரத்தக்க பேசும் படக்காட்சியில் நான் தோன்றிய சமயம், என்னை அறிந்தவர்களில் பலர், ‘ஏது? இந்த வயதில் இவர் எப்படி இக்கஷ்டமான காரியத்தை மேற்கொண்டார்?’ என்று கேட்டிருக்கின்றனர். ஆகவே, நான் பேசும் படக்காட்சியில் நடிக்கும்படி நேர்ந்த விதத்தை யறிய எனது நண்பர்கள் விரும்புவார்களெனக் கருதி இதை எழுதலானேன்.
சில வருடங்களுக்கு முன் மௌனப் படக்காட்சிகள் தோன்றியபோது, அவைகளை நான் பார்த்து சந்தோஷப் பட்ட போதிலும், அவைகளில் நான் நடிக்க வேண்டு மென்னும் எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. அதற்கு முக்கிய காரணம் குரலைக்கொண்டு ஜனங்களை மகிழச் செய்யாது, கேவலம் பாவங்களினால் மாத்திரம் அவர்கள் மனதைத் திர்ப்தி செய்வதென்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பதே. இரண்டொருவர் அம் மௌனப் படங்களில் தோன்றும்படியாக என்னைக் கேட்டும் நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. பிறகு தமிழில் பேசும் படக்காட்சிகள் ஆரம்பமானதும், அந்தரங்கத்தில் எனக்குப் பேசும் படத்தில் ஒரு முறையாவது நடிக்க வேண்டுமென்னும் ஆர்வம் பிறந்தது. ஆயினும், “நமக்கோ வயதாகிவிட்டது. பேசும் படக்காட்சியில் நடிக்க விரும்புவோர் நல்ல யௌவன முடையவர்களாக இருக்க வேண்டும்; அன்றியும் தேகபலம் பொருந்தியவர்களாக இருக்கவேண்டும். ஆகவே, இந்த ஜென்மத்தில் நமக்கு இது பிராப்தமில்லைபோலும்; ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்று ஒளவையார் கூறியபடி, இவ்வாசையை அடக்கி விடவேண்டும்” என்று எண்ணி அப்படியே செய்தேன்.
இப்படி இருக்க, சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு நாட்காலை, எனது பழைய நண்பராகிய ராவ்ஸாகேப் டாக்டர் யு. ராமராவ் அவர்கள், ஒருவரை அழைத்துக் கொண்டு என்னை என் வீட்டில் வந்து கண்டார். பரஸ்பரம் க்ஷேமவிசாரணை யானவுடன் “ஏது இவ்வளவு தூரம் நீங்கள் வந்தது?” என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர் அடியிற்கண்ட பதில் உரைத்தார். “என்னுடன் வந்திருக்கும் இவர் நடராஜ பிள்ளை என்பவர்; நாடகமாடுவதில் அதிக ஆவலுள்ளவர், இவரும் இவருடைய சில சிநேகதர்களுமாகக் கூடி, ‘சென்னைத் தமிழ் நடிகர் சங்கம்’ என்று ஒரு சபை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். அதில் என்னை அக்கிராசனம் ஏற்கும்படி கேட்கிறார்கள். அதற்கு நான் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவர்தான் அந்த ஸ்தானத்திற்குத் தக்கவர், நான் வேண்டுமென்றால் உதவி அக்கிராசனாதிபதியாக இருக்கிறேன்’ என்று சொன்னேன். அதன் பேரில் உங்களை அப்பதவியை ஏற்கும்படிக் கேட்க இவர் வந்திருக்கிறார்,” என்றார். பக்கத்திலிருந்த நடராஜ பிள்ளை அவர்களும் அச்சங்கத்திற்கு என்னை அக்கிராசனாதிபதியாக இருக்கவேண்டுமென்று வற்புறுத்தினார். அதன்மீது அச்சபை எதற்காக ஏற்படுத்தப் பட்டது என்று நான் விசாரிக்க, தமிழில் நாடகங்களாடு வதற்கும், பேசும்படக் காட்சிகளுக்கு நடிகர்களைப் பயில் விப்பதற்கும் ஏற்படுத்தப்பட்டது என்று தெரிவித்தார். அதற்கு நான் ‘நாடக மாடுவதையே நான் வரவரக் குறைத்துக் கொண்டு வருகிறேன்’ என்பதை அவர்களுக்குச் சொல்ல, ‘நீங்கள் ஆடாவிட்டாலும், மற்றவர்களுக்கு நீங்கள் அக்கலையைப் போதித்தல் தமிழ் நாடக மேடைக்கு மிகவும் அனுகூலமாகுமென்று’ சொல்லி, (என் இடத்தில் அந்த யோக்கியதை இருக்கிறதோ என்னவோ) ‘நடிகர்களை தேர்ச்சி செய்வதில் உங்களுக்குச் சமானமில்லை’ யென்று கூறினர். (நான் இதை ஒப்புக்கொள்ளவில்லை. கேவலம் முகமனாகக் கொண்டேன்.)
பிறகு நான் ‘எனக்கு வயதாகிவிட்டது. இக் கஷ்டங்களை யெல்லாம் என்னால் எடுத்துக்கொள்ள ஏலா’தென்று எவ்வளவு கூறியும் அவர்கள் கேளாது, என்னை நிர்ப் பந்திக்க, ‘வாடித்திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்றோ?’ என்று தாயுமானவர் முறையிட்ட வார்த்தைகள் எனக்கு ஞாபகம் வர, நாம் இத்தனை வருடங்களாக உழைத்து அறிந்ததை, மற்றவர்களுக்குக் கற்பிப்பதை விட, வேறு அதற்குப் பெரும் பலன் என்னுளது என்று எண்ணினவனாய், ‘ஆகட்டும்’ என்று இசைந்தேன்.
பின்பு, யார் யார் அந்தச் சங்கத்தைச் சேர்ந்திருக்கின்றனர். என்று விசாரித்தபொழுது, அதில் நடிகர்களும், நடிகைகளும், சேர்ந்திருக்கின்றனர் என்பதை அவர்கள் எனக்குக் கூறினர். அப்பொழுது ‘இதென்னடா! கஷ்டம்! இதுவரையில் நம் சபையிலும், மதுரை டிராமாடிக் கிளப்பிலும், இன்னும் சில கலாசாலைச் சங்கங்களிலும், ஆண் பிள்ளைகளுக்கு நாடகமாடக் கற்பித்திருக்கிறோமே யொழிய பெண் பிள்ளைகளுக்குக் கற்பித்ததில்லையே! இது என்ன சங்கடம்!’ என்று யோசிக்கலானேன். கடைசியில், ‘கலா சாஸ்திரங்களில் ஆண் பெண் என்ற வித்தியாசம் என்ன? நமது மனத்தில் களங்க மில்லாவிட்டால், இதில் தவறொன்றுமில்லை’ என்று தீர்மானித்து முடிவில் ஒப்புக் கொண்டேன்.
பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து, அச் சங்கத்தின் அங்கத்தினர் அனைவரையும், டாக்டர் யு. ராமராவ் அவர்களுடைய ‘கான மந்திரத்தில்’, சந்தித்தேன். அங்கு மற்றும் சில பெண் பாலர்களுடன் ஸ்ரீமதிகள் ரத்தினாபாய் சரஸ்வதிபாய் சகோதரிகளும் வந்து சேர்ந்தனர். உண்மையைக் கூறுமிடத்து அவர்களுடன் பேசுவதென்றாலும் முதன் முதல் எனக்கு மிகவும் சங்கோசமாய்த்தானிருந்தது.பிறகு அதில் ஒன்றும் தவறில்லை என்று திடசித்தனாய், அங்கு வந்த எல்லா ஆக்டர்களுடனும் ஆக்ட்ரெசுகளுடனும் கலந்து பேசி, என்ன நாடகம் ஒத்திகை செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்க, அவர்களனைவரும் ‘லீலாவதி – சுலோசனா’ நாட கத்தை ஆரம்பம் செய்ய வேண்டுமென்று கோரினர். அதற்கு நான் இசைந்து, லீலாவதி பாத்திரம் சரஸ்வதி பாய்க்கும், சுலோசனா பாத்திரம் ரத்னாபாய்க்கும், இன்னும் மற்ற பாத்திரங்கள் மற்றவர்கட்கும் பகிர்ந்து கொடுத்து, ஒத்திகை செய்ய ஆரம்பித்தேன்.
இவ்வாறு இரண்டு மாதங்களுக்கு மேல் ஒத்திகை நடத்தினேன். அச்சமயம் ஒருநாள் கல்கத்தா ஸ்டூடியோக்களில் சம்பந்தப்பட்ட மிஸ்டர் ராஜு என்பவர், நான் ஒத்திகை நடத்துவதைப் பார்க்க வேண்டுமென்று பிரியப்பட்டு, என் உத்திரவின்மீது ஒத்திகை நடக்குமிடம் வந்து, நான் நாடகப் பாத்திரங்களைப் பயிலுவிப்பதைக் கண்டார். ஒத்திகை முடிந்தவுடன், அவர் என்னுடன் பேசி, என்னைக் கல்கத்தாவுக்கு வந்து பேசும் படக் காட்சியில் ஆக்டு செய்ய வேண்டுமென்று விரும்பினார். அதற்கு நான் “எனக்கு வயதாகி விட்டது. நான் பேசும் படக்காட்சியில் நடிப்பது ஏலாது. ஏதோ எனக்குத் தெரிந்த வித்தையைக் கற்க விரும்பும் இவர்களுக்குக் கற்பிக்கிறேனே ஒழிய வேறொன்று மில்லை” என்று கூற, அவர் “நான் வேஷம் போடுவதில் அதிக தேர்ச்சியுடையவன், புதிய முறைகள் கண்டுபிடித்திருக்கிறேன். அதற்காகப் பல நற்சாட்சிப் பத்திரங்களும் பெற்றிருக்கிறேன். உங்கள் வயது தோன்றாதபடி உங்களுக்கு வேஷம் போட்டுக் காட்டுகிறேன். உங்களுக்கே சம்மதமானால், நீங்கள் ஒப்புக் கொள்ள என்ன தடை?” என்று வற்புறுத்தினார். அதன் பேரில் ‘இவர் இவ்வளவு கூறுகிறாரே, எப்படித் தானிருக்கிறதென்று பார்ப்போம்’ என்று, அவர் எனக்கு வேஷம் போட இசைந்தேன்.
பின்பு ஒருநாள் பாபம்ஸ் பிராட்வே (broadway) யில் ஒரு படம் பிடிக்கும் இடத்தில், பிரத்தியேகமாக எனக்குப் புதிய மாதிரியில் வர்ணங்களை யெல்லாம் சேர்த்து, கூடுமான வரையில் முகத்தில் வரிகள் தோன்றாதிருக்கும்படி ஏதோ யுக்திகளெல்லாம் செய்து வேஷம் போட்டு, அப்படியே ஒரு படம் பிடிக்கச் செய்தார். அத்தருணம் அந்த படம் பிடிக்கும் மனிதனுடைய சினேகிதர்-குமரன் என்னும் கோயமுத்தூரில் ஒரு படம் பிடிக்கும் தொழிலாளர் வந்து சேர்ந்தார். அவர் ராஜு அவர்கள் எனக்கு முகத்தில் வர்ணம் தீட்டிப் படம் பிடித்ததை மிகவும் கவனித்து கடைசியில் தன்னை இன்னானென, எனக்குத் தெரிவித்துக் கொண்டு, ‘நீங்கள் உங்கள் நாடகமாகிய ‘மனோஹரா’வில், பேசும் படக் காட்சியில் நடிப்பதானால் என்ன கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். அதைக் கேட்டவுடன் எனக்குக் ‘கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதை’ போலாயிற்றே! என்று நினைத்தும், ஒரு பெரும் தொகையைக் கூறினால், பிறகு இந்தப் பேச்சை எடுக்கமாட்டார் என்று நினைத்து, ஒரு பெருந்தொகையைச் சொன்னேன். அவர், ‘சரி ஆகட்டும், என் முதலாளிகளுடன் கலந்து பேசி உங்களுக்குத் தெரிவிக்கிறேன்’ என்று சொல்லிப் போய்விட்டார். பிறகு அதைப்பற்றி நான் கவனிக்க வேயில்லை; மறந்துவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.
இது நடந்து சில நாட்கள் சென்றபின், கல்கத்தாவிலிருந்து ஒரு ஸ்டூடியோ சொந்தக்காரர் நான் சதி-சுலோசனா என்னும் கதைக்குத் தமிழில் சினேரியோ (Scenario) எழுதி நடிகர்களைத் தயார் செய்து, டைரெக்ட் செய்ய வேண்டுமென்று, கடிதம் எழுதினார். அதற்கு நான் இசைந்து சதி- சுலோசனாவை எழுதி, கல்கத்தாவுக்கு ஆக்டர்களுடன் போய் டைரெக்ட் செய்தேன். இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு அக்கதையை பிறகு தெரிவிக்கிறேன்.
சதி- சுலோசனாவைப் பேசும் படக்காட்சியாக முடித்துக் கொண்டு கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நான் வந்த பிறகு, ஒரு நாள் காலை கோயம்புத்தூரிலிருந்து ஸ்ரீமான் பொன்னுசாமி செட்டியார் என்பவர், திடீரென்று என் வீட்டிற்கு வந்து என்னைக் கண்டார்; தாம் ஒரு பேசும் படக்காட்சி கம்பெனி ஏற்படுத்தியிருப்பதாயும், அதற்கு ‘மனோஹரா’ நாடகம் வேண்டுமென்றும், அதில் நான் மனோஹரனாக நடிக்க வேண்டுமென்றும் கேட்டார். ‘எனக்கு வயதாகிவிட்டது, மனோகஹரன் பாத்திரம் நல்ல யௌவன முள்ள பதினெட்டு வயது வாலிபனைப் போல் நடிக்க வேண்டும். அது என்னால் முடியாது’ என்று மறுத்தேன். ‘நீங்கள் புருஷோத்தமனாகவாவது நடிக்க வேண்டு’மென்று கோரினார். ‘பிறகு யோசித்துச் சொல்லுகிறேன்’ என்று அவரை அனுப்பி விட்டேன். அதன் பேரில் இவ்விஷயத்தை என் நண்பர்கள் பந்துக்களுக்குத் தெரிவிக்க, அவர்கள் எல்லோரும், ‘இதை நீங்கள் ஒப்பக்கொள்ள வேண்டும், உங்களுக்குப் பிற்காலம் உங்கள் ஞாபகார்த்தமாக நாங்கள் பார்ப்பதற்காவது நீங்கள் இப்பேசும் படக்காட்சியில் தோன்ற வேண்டுமென்று வற்புறுத்தினர். அதன்மீது இறைவன் திருவுளப்படியாகிற தென்று அவர் மீது பாரத்தைச் சுமத்தி, அவ்வண்ணமே செய்யத் தீர்மானித்தேன். ஒரு வாரத்திற்கெல்லாம் பொன்னுசாமி செட்டியார் அவர்களிட மிருந்து, நான் கேட்ட தொகைக்கு இசைந்த தாயும், நான் புருஷோத்தமன் வேடம் தரிக்க வேண்டுமென்றும் தந்தி வர, சரிதான் என்று பதில் தந்தி கொடுத்தேன்.
இதுதான் இந்த வயதில் நான் தமிழ்ப் பேசும் படக் காட்சியில் தோன்ற நேரிட்ட விவரம்.



