பேசும்பட அனுபவங்கள்
பம்மல் சம்பந்த முதலியார்

இரண்டாவது அத்யாயம் : சதி – சுலோசனாவை டைரெடக்ட் செய்தது

இனி 1934 ஆம் வருஷத்தில் நான் கல்கத்தாவில் சதி- சுலோசனா என்னும் தமிழ் பேசும் படக்காட்சியை “டைரெக்ட்” செய்த கதையை எழுதுகிறேன்.

சென்னை தமிழ் நடிகர் சங்கத்தின் சார்பாக நான் லீலாவதி – சுலோசனா நாடகத்தை ஒத்திகை செய்து கொண்டிருந்த பொழுது ஒருநாள் அதைப் பார்த்த ஒருவர், தான் கல்கத்தாவுக்குப் போயிருந்த சமயம் என்னைப் பற்றி ஏதோ, பாரத்லட்சுமி பிக்சர்ஸ் முதலாளியாகிய பாபுலால் சௌகானியிடம், சிலாகித்துப் பேச, அந்த பாபுலால் என்பவர், தனுது ஸ்டுடியோவில் ஒரு தமிழ் பேசும் படம் எடுக்க வேண்டும் என்றும், அதை நான் டைரெடக் செய்ய வேண்டுமென்றும் விரும்பி எனக்கு, ஒரு நிருபம் எழுதினார். அன்றியும், தனது குமாஸ்தாவாகிய கணேச ஐயர் என்பவரை, கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு அனுப்பினார். அந்த கணேச ஐயரிடம், ஆக்டர்களை நடிக்கும் விஷயத்தில் நான் பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியுமே யொழிய மற்ற படம் பிடிப்பது, ஒலிப்பதிவு செய்வது, முதலிய விஷயங்களில் எனக்கு உதவியாக ஒரு டெக்னிகல் டைரெக்டர் (Technical Director) இருந்தாலொழிய என்னால் சாத்தியப்படாது என்று கண்டிப்பாய்த் தெரிவிக்க, அவர் அவ்வேலைகளுக் கெல்லாம் எனக்கு உதவியாக ஒருவரைத் தாங்கள் ஏற்பாடு செய்வதாக ஒப்புக்கொண்டதின் பேரில், அக்கம்பெனியார் பேசும் படம் பிடிக்க நிர்ணயித்த “சதி – சுலோசனா” என்னும் கதையை டைரெக்ட் செய்ய இசைந்தேன்.

இதற்கு முன்பாக சென்னையில் காட்டப்பட்ட முக்கியமான பல தமிழ் பேசும்படங்களையும், சில ஆங்கிலப் படங்ளையும் நான் பார்த்ததுண்டு; அன்றியும், சென்னை கவர்ன்மென்டார் மதுவிலக்குப் பிரசாரக் (Publicity Committee) கமிட்டிக்கு என்னை அக்கிராசனாதிபதியாக நியமித்திருந்த பொழுது, அக்கமிட்டியார் வேண்டுகோளின்படி, “உண்மையான சகோதரன்” என்னும் நாடகத்தை எழுதினேன். அதைப் பேசும்படமாகப் பிடிக்க, கவர்ன்மென்டார் முதலில் 30,000 ரூபாய் ஏற்படுத்தியிருந்தனர். அவ் விஷயமாக எந்த ஸ்டூடியோவில் அதைப் பேசும்படமாகப் பிடிக்கலாமென்று, சென்னையில் அச்சமயம் இருந்த இரண்டு மூன்று ஸ்டூடியோக்களில் போய், படம் பிடிக்கும் விஷயங்களை யெல்லாம் கவனித்திருந்தேன். சென்னை கவர்ன்மென்டில் மந்திரிகள் மாறியபொழுது, இம்மது விலக்கு பிரசார கமிட்டியானது அழிக்கப்படவே, அந்நாடகத்தைப் பேசும்படமாய்ப் பிடிக்க வேண்டும் என்னும் ஏற்பாடு கைவிடப் பட்டது. ஆயினும் இச்சந்தர்ப்பத்தில் பேசும் படம் பிடிக்கும் விஷயத்தில் நான் கற்ற பல விஷயங்கள், பிறகு நான் கல்கத்தாவுக்குப் போயிருந்தபொழுது எனக்கு மிகவும் உபயோகப்பட்டன. இந்த சதி-சுலோசனா விஷயமாக, பாரத் லட்சுமி பிக்சர்ஸ் கம்பெனியார், சென்னை நடிகர் சபை காரியதரிசியாகிய T.N. நடராஜபிள்ளையுடன் அக்ரீமெண்டு செய்து கொள்ளும்படி செய்தேன்; ரெயில் சிலவு, சாப்பாட்டுச் சிலவு, நடிகர் சிலவு, நடிகர் சங்கம் பொறுப்பாகும் என்றும், இதற்காக அவர்களுக்கு ரூபாய் 10,000 பாரத் லட்சுமி பிக்சர்ஸ் கொடுக்க வேண்டுமென்றும், மற்றபடம் பிடிக்கும் செலவெல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் ஏற்பாடாகியது. இதற்காகப் பாதிப் பணம் ரூபாய் 5000 அட்வான்சாக கல்கத்தாவிலிருந்து வர, உடனே நடிகர்களை ஏற்பாடு செய்ய ஆரம்பித்தோம். முக்கிய வேடங்களுக்கு, ஸ்ரீமான் வேலு நாயரையும், ஸ்ரீமதி வேலாம்பாளையும் கல்கத்தாவிலிருந்து பாரத் லட்சுமி பிக்சர்ஸ் ஏஜெண்டாக வந்த கணேச ஐயர் அனுமதியின்படி, ஏற்பாடு செய்தோம். நான் மேற்கூறியபடி டைரெக்ட் செய்ய ஒப்புக்கொண்டேன். T.N. நடராஜ பிள்ளை ஆதிசேஷனாகவும், ஸ்ரீராமராகவும், நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்னும் மற்ற சில்லரை வேடங்களுக்குத் தக்கபடி சில ஆமெடூர்ஸ்களையும், சில தொழிலாளிகளையும் ஏற்பாடு செய்தோம். இதற்குள்ளாக சதி -சுலோசனா கதையை பேசும்படக் காட்சிக்கு ஏற்றபடி எழுதி முடித்தேன். பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து ஒத்திகை என் வீட்டிலேயே ஆரம்பித்து இரண்டு வாரம் நடத்தினேன். எல்லாம் சித்தம் செய்து சீக்கிரம் கல்கத்தாவுக்குப் புறப்பட்டு வருகிறோம் என்று அவ்விடம் தெரிவித்தோம். திடீரென்று ஒருநாள் வேலு நாயரும், வேலாம்பாளும் ஒத்திகைக்கு வராமல் நின்று விட்டார்கள். இதற்குக் காரணம் அவர்களிருவரையும் வேறொரு பேசும் படக்காட்சி கம்பெனியார் தங்கள் தரப்பில் நடிப்பதற்காக ஏற்பாடு செய்து கொண்டதாகப் பிறகு அறிந்தேன். முக்கிய நடிகர்களாகிய இவர்கள் விலகி விட்டதினால் இடி விழுந்தவன் போல் ஆனபோதிலும், எப்படியாவது எடுத்துக்கொண்ட காரியத்தை கைவிடலாகா தெனத் தீர்மானித்தவனாய் உடனே கல்கத்தாவுக்கு, நடந்த செய்தியைத் தெரிவித்து “வேண்டுமென்றால் உங்கள் அட்வான்சு பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறோம், அல்லது சம்மதியானால், வேறு நடிகர்களை ஏற்படுத்திக் கொண்டு, கல்கத்தாவுக்கு வருகிறோம், என்று செய்தி சொல்லியனுப்பினேன். அதன் பேரில் பாபுலால், வேறு ஆக்டர்களுடன் வரும்படி சொல்லியனுப்பினார். பிறகு அவரது ஏஜெண்டாகிய கணேச ஐயர் அனுமதியின் மீது அயன் ராஜபார்ட்டுக்காக மன்னார்குடியில் வசிக்கும் ஸ்ரீமான் நடராஜ பிள்ளையையும், அயன் ஸ்திரீ பார்ட்டுக் காக, நாகர்கோயில் ஸ்ரீமதி சுந்தராம்பாளையும் ஏற்பாடு செய்தோம். அப்புறம் மறுபடி ஒரு வாரம் சென்னையில் ஒத்திகைகளை நடத்தி விட்டு, கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போனோம்.

இதுவரையில் நான் கல்கத்தாவைப் பார்த்தவனன்று; அங்கு எல்லாம் எனக்குப் புதியதாயிருந்தது முதலில்; இரண்டு மூன்று நாள் அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். நான் பிறந்து இதுதான் முதன் முறை ஹோட்டலில் தங்கியிருந்தது; அந்த ஹோட்டல் சாப்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. இதற்குள்ளாக கல்கத்தாவில் ஒருபுறமாயுள்ள டாலி கன்ச், என்னும் இடத்தில் பாரத் லட்சுமி பிக்சர்ஸ் ஸ்டூடியோ இருந்தபடியால், அதற்கருகாமையில் ஒரு மெத்தை வீட்டை வாடகைக்குப் பேசி எங்களை யெல்லாம் அங்கு கொண்டு போய் கணேச ஐயர் சேர்த்தார். இவ்வீடு ஹோட்டலை விட மிகவும் சவுகர்யமாயிருந்தது. இங்கு தென் இந்தியா பிராம்மண சமையல்காரன் ஒருவனை ஏற்பாடு செய்த படியால், சாப்பாடும் சவுகர்யமாயிருந்தது. போன மறுதினம் கம்பெனி புரொப்ரைட்டர், பாபுலால் என்னைப் பார்க்க வேண்டுமென்று சொல்லியனுப்ப, ஸ்டூடியோவுக்கும் போய்ச் சேர்ந்தேன். பாபுலால் வருவதற்குக் கொஞ்சம் நேரமானபடியால், ஸ்டூடியோ முழுதும் கணேச ஐயருடன் சுற்றிப் பார்த்து நான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் சிலவற்றைத் தெரிந்து கொண்டேன். பிறகு பாபுலால் வந்த பிறகு, அவருடன் கலந்து பேசினேன். அவர் தன் ஸ்டூடியோவிலுள்ள காமிராமான், ஒலிப்பதிவாளி, மானேஜர் முதலியோரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மறுநாள் அத்தொழிலாளிகளை யெல்லாம் ஒருங்கு சேர்த்து அவர்களுக்கு சதி-சுலோசனா கதையை நான் எழுதியபடி விவரமாய்த் தெரிவித்தேன். அவர்களெல்லாம் கதையின் போக்கை மெச்சி என்னுடன் ஒத்துழைக்க இசைந்தனர்.

ஒருவாரம் பொறுத்து ஷட்டிங் ஆரம்பித்தோம். இந்த ஒரு வாரத்திற்குள்ளாக அங்குள்ள ஒவ்வொரு தொழிலாளி யிடமும் கலந்து பேசி அநேகம் விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இதற்குள்ளாக பாபுலால், எனக்கு உதவியாக, ஜர்மனிதேசம் போய் பேசும்பட விஷயத்தில் கற்று வந்த புல்லி (Bully) என்பவரை நியமித்தனர். அவர் சிறு பிள்ளை, சுமார் 25 வயது தானிருக்கும், அவருக்கு தமிழ் ஒரு வார்த்தையும் தெரியாது. அவருக்கு ஆங்கிலத்தில் கதையை விவரமாகச் சொல்லி, பிறகு, நான் எழுதிய சினேரியோ வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்தேன்.

முதல் நாள் ஷுட்டிங் நடந்ததைப் பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். அன்று எடுத்த படம் இந்திரஜித், சுலோசனையை அவளது அந்தரங்க அறையில் சந்தித்து, தான் இச்சா தானம் செய்ததைத் தெரிவிக்கும் காட்சி. இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அக்காட்சி மிகவும் அழகாய் ஜோடிக்கப்பட்டது. நான் இதுவரையில் பல ஸ்டூடியோக்களில் ஜோடிக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்திருக்கிறேன்; அன்றியும் பேசும் படங்களில் தோன்றும் பல காட்சிகளின் அழகையும் கவனித்திருக்கிறேன்; ஆயினும் இந்த பாரத் லட்சுமி பிக்சர்ஸ் காட்சிகளில் ஜோடிப்பைப் போல் அத்தனை அழகானவைகளைப் பார்த்ததில்லை. இங்கு இத்தொழிலைப் பார்த்து வந்தவர் ஒரு மகம்மதியர், அவர் பெயர் எனக்கு ஞாபகமில்லை; அவர் இத்தொழிலில் நிரம்ப சாமர்த்தியமுடையவர், அன்றியும் எப்படிப்பட்ட காட்சிகளையும் ஸ்டூடியோவுக்குள்ளேயே, ஜோடிக்க வேண்டிய சவுகர்யங்களெல்லாம் இந்த ஸ்டூடியோவில் நிறைந்திருந்தன; இந்த சாயபு மேற் சொன்ன காட்சியை யன்றி, இன்னும் இக்கதைக்கு வேண்டிய பல காட்சிகளையும் மிகவும் விமரிசையாகவும் அழகாகவும் ஜோடித்தனர்; அவைகளில் நான் முக்கியமாக எடுத்துக் கூற வேண்டியவை, இச்சா தானக் காட்சி, அந்தப்புறக் கோயில் காட்சி, ஆதிசேஷன் கொலு மண்டபம், ராவணன் அந்தப்புறம், நிகும்பலையாகக் காட்சி, முதலியவைகளாம்; எல்லாவற்றையும் விட என் மனதைக் கவர்ந்த காட்சி, சுலோசனா தன் சகிமார்களுடன் நாகலோக உத்யான வனத்தில் வாவிக்கரையோரம் வசந்தோற்சவம் கொண் டாடிய காட்சியாம்; இக்காட்சி நாடகத்தின் முதற் காட்சியா யிருந்த போதிலும், கடைசியாகப் பேசும் படத்தில் எடுக்கப் பட்டது; இக்காட்சியை ஜோடிக்க ஒரு வாரத்திற்கு மேல் ஆச்சுது. சலவைக்கற்களால் நடைவாவியும், மண்டபங களும் கட்டப்பட்டது போல் ஜோடிக்கப்பட்டது; வாவியின் மத்தியில் ஜலமானது சுமார் பதினைந்தடிக்கு மேல் கிளம்பும் படியான ஒரு பவுண்டன் (fountain) ஏற்பாடு செய்யப் பட்டது. வாவியில் தாமரை இலைகளும் புஷ்பங்களும் இருப்பது போல் காட்டப்பட்டது. அன்றியும் அன்னப் பட்சிகள் நீரில் விளையாட விடப்பட்டன. இக்காட்சியைப் படம் பிடித்தபொழுது இதைச் சுற்றிலும் சுமார் 16 நாக கன்னிகைகள், குடங்களைக் கையில் கொண்டு ஆடிப் பாடுவது போலும், வாவியில் சிலர் ஜலக்கிரீடை செய்வது போலும், படிகளில் உட்கார்ந்து சிலர் புஷ்பங்களைக் கொண்டு விளையாடுவது போலும், படம் எடுக்கப்பட்டது.

இக்காட்சி என் மனதைக் கவர்ந்தது. பிறகு சென்னையில் இப்பேசும் படம் காட்டப்பட்ட பொழுது பார்த்தவர் களெல்லாம் இதை மிகவும் சிலாகித்தனர். எனது நண்பர்களில் சிலர், இதைப் பார்ப்பதற்கே ஜனங்கள் வந்தனர் என்று பன்முறை கூறக்கேட்டிருக்கிறேன். மரப்பலகைகளால் ஜோடிக்கப்பட்டு, அவைகளின் மீது வெண்துணியை அடித்து, அதன் பேரில் வர்ணம் பூசப்பட்ட பொழுது, ஆதிமுதல் நான் இதை கவனித்த போதிலும், பூரணமாகி முடிந்தவுடன், இது சலவைக்கல் மண்டபங்களும், நடைவாவியும் அமைந்த வாஸ்தவமான ஒரு உத்யான வனமோ, என்று நானே எண்ணும்படி செய்தது; இதை நான் அதிகமாகப் புகழவேண்டின் இதைத்தான் சொல்லுவேன், இப்படிப்பட்ட அழகிய காட்சியில் நாம் நடிப்பதற் கில்லையே யென்று நானே பொறாமைப்பட்டேன்!

முதல் நாள் இரவு பேசும்படம் பிடிக்க ஆரம்பமாகிறது என்று அறிந்தவுடன், எல்லா நடிகர்களும் மிகவும் குதூஹலமாயிருந்தார்கள். இரவு பிடிக்கப்போகிற பாகத்தை காலையிலேயே நன்றாய் ஒத்திகை செய்து வைத்தேன். சாயங்காலம் எல்லோரும் சீக்கிரம் போஜனம் முடித்துக் கொண்டு ஸ்டூடியோ போய்ச் சேர்ந்தோம். சதி-சுலோசனாவில் நடித்த ஆக்டர்களுக்குள் விபீஷணன் வேடம் பூண்டவரும், நாரதர் வேடம் பூண்டவரும் தவிர, மற்றவர் களெல்லாம் இதுதான் முதன் முறை பேசும் படத்தில் தோன்றுவது. ஆகவே அவர்களெல்லாம் எப்படி யிருக்குமோ வென்று கொஞ்சம் பயப்பட்டனர். அவர்களுக் கெல்லாம் தைரியம் சொல்லி அழைத்துக்கொண்டு போனேன். இந்திரஜித்துக்கும், சுலோசனாவுக்கும் முதல் நாளாகையால், வேஷம் போட இரவு 9 மணிஆயிற்று! பிறகு அக்காட்சியில் பாடவேண்டிய இரண்டொரு பாட்டுகளை அரங்கத்திலேயே ஒத்திகை செய்து முடிக்க, ஏறக்குறைய 11 மணியாயிற்று. ஷூடிங் ஆரம்பிக்க பன்னிரண்டாயிற்று! அன்றிரவு ஷுடிங் செய்ததெல்லாம் 5 நிமிஷத்திய பிலிம்தான். அதை முடிக்க காலை ஐந்து மணியாயிற்று! முதன் முறையாதலால் பன்முறை எடுத்த படங்கள் N.G. நாட் குட் (Not Good) ஆகிப் போயின.

பாட்டு தவிர நடிக்க வேண்டிய வார்த்தை களையெல்லாம் நான் அரங்கத்திலேயே நடித்துக் காட்டி, பிறகு நடிகர்களை நடிக்கச் செய்தேன். இன்றிரவு இரண்டே ஆக்டர்களுக்கு வேலையிருந்தும், மற்ற ஆக்டர் களையும் ஸ்டூடியோவிலிருக்கச் செய்து, அவர்கள் பயம் போகும் படியாக எல்லாவற்றையும் கவனிக்கச் செய்தேன். இதில் எனக்கிருந்த கஷ்டமென்னவென்றால், ஒரு ஆக்டர் தன் வசனத்தைப் பேசச் செய்து, அது சரியாயிருக்கிறதா என்று நான் கேட்டபின், ஒலிப்பதியும் யந்திரம் வைத்திருந்த பெட்டிக்குள் போய் எது எப்படி கேட்கிறதென்று ஒவ்வொரு தரமும் பார்க்க வேண்டிய தாயிற்று. அந்த யந்திரத்தின் வேலையாள் ஒரு பாரசீகர், அவருக்கு தமிழ் ஒன்றும் தெரியாது, ஆகவே ஒவ்வொரு முறையும் அவர் யந்திரத்தைச் சரிப்படுத்தி வைத்தபின், நான் அவரருகிற் போய் வார்த்தைகளும் பாட்டுகளும் சரியாயிருக் கின்றனவா என்று பார்க்க வேண்டியதாயிற்று. தேக கஷ்டமாயிருந்த போதிலும், இக்கலையைக் கற்கிறோமென்ற குதூகலத் தினால், ஒவ்வொரு சிறு விஷயத்தையும் விடாது கவனித்து வந்தேன். இந்த கவனத்தில் காலக் கழிவையும் நான் கவனிக்க வில்லை. அக்காட்சி முடிந்து, வீட்டிற்குப் போகலாமென்று ஸ்டூடியோவுக்கு வெளியில் வந்த பொழுதுதான் பொழுது விடிந்த சமாசாரம் எனக்குப் புலப்பட்டது!

நாங்கள் கல்கத்தாவில் இருந்தது மொத்தம் 45 நாளாகும். அதில் ஷூடிங் நடந்தது 23 நாட்கள்தான். இந்த 23 நாட்களில் எடுத்த பிலிம் நிகளம் சுமார் 25,000 அடிகள். அவற்றுள் நாட் குட் (Not Good) என்று வெட்டப்பட்டது போக, படக்காட்சிக்காக கடைசியில் நின்றது சுமார் 16,000 அடிகள். சாதாரணமாகப் பாதிக்குப் பாதி அல்லது மூன்றில் ஒருபங்கு தான் தேறும்.”இக்கதையை முதலியார் மொத்தத்தில் 25,000 அடிக்குள் முடித்து விட்டதற்காக அவரைப் புகழ வேண்டும்” என்று பாபுலால் தன் சினேகிதர்கள் பலருடன் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். இவ்வாறு அதிகமாக நாட்குட்டாக, வியர்த்தமாகப் போகாததற்குக் காரணம் முன்னதாகவே ஒத்திகைகள் பன்முறை செய்து பார்த்து எல்லாம் சரிபார்த்துக் கொண்டதேயாம் என்பதற்குச் சந்தேகமில்லை.

ஷூட்டிங் நடந்தபொழுது, நேரிட்ட சில முக்கியமான விஷயங்களை இங்கெழுதுகிறேன். இந்திரஜித் துயிலெழுங் காட்சியில், அவரை எழுப்புவதற்காக, ஒரு அந்தப்புரத்துப் பெண், வாத்தியம் வாசிப்பது போல் காட்ட வேண்டியிருந்தது. அதற்காக கொஞ்சம் ரூபவதியான ஒரு ஆங்கிலப் பெண்ணை சித்தார் வாசிப்பது போல் ஏற்பாடு செய்திருந் தோம். இந்தக் காட்சி ஷூஇடிங் செய்ய வேண்டி வந்த பொழுது, எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, கடைசி ஒத்திகை அரங்கத்தில் பார்த்துவிட்டு, ஏதோ கொஞ்சம் வேலையாக ஸ்டூடியோவுக்கு வெளியில் இரண்டு நிமிஷம் போயிருந்தேன். நான் திரும்பி வருவதற்குள், சித்தார் வாசித்துக் கொண்டிருந்த அந்த ஆங்கிலப் பெண், “பப்பா! பப்பா!’ (Papa! papa!) என்று கூச்சலிட்டாள்! அச்சிறுபெண், என்னைத் தந்தையாகப் பாவித்து என்னை பப்பா (Papa) என்று அழைப்பது வழக்கம். என்ன கூச்சலிட்டழைக்கிறாளே என்று ஓடிப்போய் ஸ்டூடியோவிற்குள் பார்க்க, அப் பெண்ணின் உச்சந்தலை ரோமம் தீய்ந்து போக, அவள் அலறுவதைக் கண்டேன்! உடனே அதற்குத் தக்க சிகிச்சை செய்து அவளை சாந்தப்படுத்திய பின், இது எப்படி நேர்ந்ததென விசாரிக்க, இக்காட்சிக்கு மின்சார விளக்குளை ஏற்படுத்தியவர், அஜாக்கிரதையாக, அதிக வெளிச்சத்தை அப்பெண்ணின் தலைமீது விழச் செய்ததாகக் கண்டேன். உடனே அதைத் தக்கபடி குறைத்து, அப்பெண்ணுக்கு ஒரு சிறு டோபாவைப் போட்டு, உட்கார வைத்து, மறுபடி அக்காட்சியை ஷூட்டிங் செய்தேன். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகு மென்றபடி, வெளிச்சமும் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுதான் உபயோகிக்க வேண்டும்.

ஒரு நாள் இரவு நிகும்பிலை யாகக் காட்சி பேசும் படமாகப் பிடிக்க வேண்டி வந்தது. அதில் அனுமார், யாககுண்டத்தில் குதித்து இந்திரஜித் செய்யும் யாகத்தை அழிக்க வேண்டியிருக்கிறது. இதற்காக, சுமார் நான்கடி பள்ளம் வெட்டப்பட்ட யாககுண்டத்தில் அனுமார் வேடம் பூண்டவரைக் குதிக்கச் சொன்னால், அவர் அதற்குப் பயந்தார்! எவ்வளவு சொல்லியும் அவரது பயம் அவரை விடவில்லை; தன்னால் முடியாதென்று மறுத்தார். இதில் ஒன்றும் பயமில்லை, யாராவது இவருக்குக் குதித்துக் காட்டுங்கள் என்றபொழுது, அங்கிருந்த ஒரு நடிகனும் இதைச் செய்யத் துணியவில்லை! இதற்கென்ன செய்வது? என்று யோசித்து, முடிவில் நானே குதித்துக் காட்டினேன். எனக்கப்பொழுது வயது 61, குதிக்கப் பயந்தவருக்கு வயது அதில் பாதியிருக்கும். ஒரு டைரெக்டரானவன் எந்த வேலைக்கும் துணிந்திருக்க வேண்டும் என்பதை அன்று கற்றேன்.

ஒலிப்பதிவைப் பற்றி நான் அங்கு கற்ற ஒரு விஷயத்தை இங்கு எழுதுகிறேன். இக் கதையில் ஒரு காட்சியில் சீதா தேவிக்கு, விபீஷணன் பெண்ணாகிய திரிசடை தேறுதல் சொல்லுகிற சந்தர்ப்பத்தில், இராம நாடகத்திலிருந்து, ஒரு பாட்டைப் பாடச் செய்தேன். திரிசடையாக நடித்த பெண் நல்ல குரலுள்ளவள், பாடவேண்டிய பாட்டு சஹானா ராகத்திலிருந்தது; இது ஒரு ரக்திராகம்; இதில் அனு பல்லவியில் பாடும்பொழுது சாரீரத்தை மிகவும் எழுப்பி, இரண்டாவது ஸ்தாயில் பாடவேண்டியதாயிருந்தது: திரிசடை ஆக்ட்ரெஸ் இப்பாட்டை அப்படியே மிகவும் நன்றாய்ப் பாடினாள், ஷூடிங் காலத்தில், அரங்கத்தில் இதை ஒத்திகை செய்து பார்த்தபொழுது, மைக்கை (mike) மறைவாக ஒரு புறம் வைத்துவிட்டு, ஒலிப் பதியும் பெட்டிக்குள் போய் பாட்டு எப்படி இருக்கிறதென, நான் கவனித்தபொழுது, அத் தொழிலாளி யாகிய பாரசீகன், இது மிகவும் எக்சஸ் ஸ்தாயியி லிருக்கிறது, கீச்சென்று கேட்கிறது, சரியாயில்லை யென்று ஆட்சேபித்தார். பாட்டோ நன்றாயிருந்தது; அதை விடவும் எனக்கிஷ்டமில்லை. இதற்கு ஏதாவது யுக்தி செய்து பாருங்கள் என்று நான் எவ்வளவு வேண்டியும் என்னால் முடியாதென்று மறுத்துவிட்டார். பிறகு நான் அன்றைத் தினம் ஷுட்டிங்கை நிறுத்தி, இரவெல்லாம் யோசனை செய்து பார்த்தேன். திரிசடை ஆக்ட்ரெஸ் “எனக்கிருப்பதெல்லாம் இரண்டு பாட்டுகள்தான், அதில் ஒன்று போய்விட்டால், நான் என்ன செய்வது?” என்று துக்கப்பட்டாள்; அவளுக்கு நான் ஏதாவது யுக்தி செய்து பார்க்கிறேன் என்று சமாதானம் சொல்லிவிட்டு, மறுநாள் காலை ஸ்டூடியோவுக்குப் போய், மைக்ரபோன் (microphone) தொங்கவிட்டிருக்கும் கழியை, நான் கையில் பிடித்துக்கொண்டு, அனுபல்லவி வரும் சமயத்தில், சற்று தூரத்தில் வாங்கி, மறுபடியும் பல்லவி வரும் சமயத்தில் அருகில் கொண்டு போய்ப் பார்த்தேன். ஒலிப்பதியும் பாரசீகர் இப்பொழுது எல்லாம் சரியாயிருக்கிறதென சந்தோஷப்பட்டார். எதையும் அசாத்தியம் என்று கைவிடாது, நம்மாலியன்ற அளவு, ஈசன் நமக்களித்த புத்தியைக் கொண்டு பிரயத்னப்பட்டுப் பார்க்க வேண்டு மென்பதை அன்று நன்கறிந்தேன்.

படம் முடிந்த இரண்டு நாட்களுக்குள் எல்லோரும் பட்டணம் போகப் புறப்பட்டோம். படம் எடுக்கும் வேலையில் என் முழு மனதைச் செலுத்தியபடியால், கல்கத்தாவில் நான் ஏறக்குறைய 45 நாட்களிலிருந்தும், கடைசிநாள் தான், அவ்விடத்திலுள்ள மியூசியம், ஜூ (zoo) முதலிய இடங்களை, (அதுவும் மிகவும் அவசரமாகப் பார்த்தேன். ஆயினும் இந்த நாற்பத்தைந்து தினங்களில் பேசும் படங்களைப் பற்றிய பல விஷயங்களைக் கற்றேன். இவ்விஷயத்தில் அந்த ஸ்டூடியோ டைரெக்டராயிருந்த Mr. கிரீட் (Mr. Creed) என்பவர் எனக்கு தன் சிரமமும் பாராமல் பல நுட்பமான விஷயங்களைக் கற்பித்தார். அவரை நான் மறுபடியும் தெய்வ கடாட்சத்தினால் பார்க்க நேரிடுமோ என்னமோ தெரியாது; ஆகவே அவருக்கு இதன் மூலமாக என் மனமார்ந்த வந்தனத்தை அறிவிக்க வேண்டியவனா யிருக்கிறேன். இந்த ஸ்டூடியோவைச் சார்ந்த அனைவரும், புரொப்ரைட்டர் பாபுலால் முதல் வர்ணக்காரன் வரையில் எல்லோரும் மதித்து என்னைப் பாராட்டினர். ஆகவே அதைவிட்டுக் கடைசி நாள் பிரிந்த பொழுது, மனவருத்தத்துடன் பிரிந்தேன். என்ன உலகம் இது! அங்கு நாற்பத்தைந்து நாள் கஷ்டப்பட்டப் பொழுதெல்லாம், இக்கஷ்டம் எப்பொழுது தீருமென்று, எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன், எல்லா வேலையும் முடிந்தவுடன், ஊருக்குத் திரும்பும்போது, எல்லாம் முடிந்து விட்டதே! என்று துக்கப்பட்டேன்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !