
பேசும்பட அனுபவங்கள்
பம்மல் சம்பந்த முதலியார்
நான்காவது அத்யாயம் : பேசும் படமாக எடுக்கப்பட்ட எனது மற்ற நாடகங்கள் முதலியன
எனது நாடகங்களுள் முதன் முதல் பேசும் படமாக எடுக்கப்பட்டது “காலவ ரிஷி”யாம். இதைப் பேசும் படமாக எடுக்க வேண்டி சில வருடங்களுக்கு முன் எனது நண்பர் டி.சி.வடிவேலு நாயகர் என் உத்திரவைப் பெற்று பம்பாய்க்குப் போய் எடுத்தார். இதை நான் சென்னையில் பார்த்தபொழுது, சுபத்திரை பாத்திரம் நன்றாக நடித்ததுதான் என் மனதிற்குத் திருப்தியைத் தந்தது.
இதற்குப் பிறகு என் உத்தரவின் மீது நான் எழுதியுள்ள “ரத்னாவளி” நாடகமானது பேசும் படமாக்கப்பட்டது. இதில் ரத்தினாபாய் சரஸ்வதிபாய் சகோதரிகள், முக்கிய பாகங்களை எடுத்துக்கொண்டு நடித்தனர். இந்த படமெடுத்த முதலாளிகளுக்கு இப் படத்தினால் ஏராளமான லாபம் கிடைத்ததென அறிகிறேன். இதற்கு முக்கிய காரணம் என் கதைப் போக்கை அதிகமாக மாற்றாது, பெரும்பாலும் நாடகக் கதையைத் தழுவியே பேசும் படமெடுத்ததாம் என நினைக்க இடமுண்டு. இந்த ரத்னாவளி கதை, பழய சம்ஸ்கிருத நாடகக் கதையாயிருந்த போதிலும், அதில் நான் புதிதாகச் சில காட்சிகளை ஏற்படுத்தி யிருந்த படியாலும், ‘பப்பரவாயன்’ ‘டமாரவாயன்’ என்னும் இரண்டு ஹாஸ்ய பாத்திரங்களை புதிதாய் ஏற்படுத்தி யிருந்த படியாலும், இக் கதைக்காக, படம் எடுத்த முதலாளிகள், எனக்கு ரூபாய் 1000 ராயல்டி கொடுக்க வேண்டி வந்தது. பழைய கதையாயிருந்த போதிலும், அதைப் புதிய மாதிரியில் எழுதினாலும், அன்றியும் புதிய பாத்திரங்களை ஏற்படுத்தினாலும், அப்புது மாதிரிப்படி படம் எடுப்பவர்கள், ஆசிரியருக்கு ராயல்டி கொடுத்துதான் தீரவேண்டுமென்பதை, படமெடுக்கும் முதலாளிகள் கவனிப்பார்களாக.
1935 ஆம் வருடம் நான் தஞ்சாவூருக்குப் போயிருந்த பொழுது, சேலம் பிலிம் கம்பெனியார் அங்கு வந்து என்னிடம் என் நாடகமாகிய “லீலாவதி -சுலோசனா” என்பதைப் பேசும் படமாக மாற்றும் உரிமையை, மூன்று வருட காலத்திற்கு, என்னிடமிருந்து ரூபாய் 5000 கொடுத்து வாங்கிக் கொண்டு போயினர். இதை விரைவிலேயே முடித்து சென்னையில் காட்டினர்; இவர்களும் கதையின் போக்கை மாற்றினர்; அதனால், நாடகமேடையில் இக்கதை சோபிப்பது போல் அவ்வளவு சினிமா திரையில் சோபிக்கவில்லை என்பது என் அபிப்பிராயம். இருந்த போதிலும் இம்முதலாளி களுக்கும் நல்ல லாபம் கிடைத்ததாக நான் அறிகிறேன்.
மேற்கண்ட வருஷத்திலேயே எனது “வேதாள உலகம்” என்னும் நாடகத்தை பேசும் படமாக மாற்றும் உரிமையை மூன்று வருட காலத்திற்கு சேலம் மிட்டாதாரர் ஒருவர் வாங்கிக் கொண்டனர். அதைப் படமாக எடுப்பதற்காக சென்ற வருடம், ஒருநாள் சென்னையில் ஆரம்ப விழா வைத்துக்கொண்ட போதிலும், இன்னும் ஒன்றும் நடக்கவில்லை. இன்னும் சில மாதங்களுக்குள் அந்த மூன்று வருட காலவரை யானது முடியப் போகிறது என்பதை அந்த முதலாளி கவனிப்பாராக. அவர் மேற்கண்ட தவணைக்குள் பேசும் படம் எடுக்காவிட்டால், பிறகு அந்த உரிமையை இழந்து விடுவார் என்பதையும் அறிவாராக.
1936 ஆம் வருடம் எனது “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தைப் பேசும் படமாக்க பிரிமியர் சினிடோன் கம்பெனியார் ரூபாய் 2250க்கு மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இச்சமயம் இவர்களிட மிருந்து, கதையின் போக்கை என் அனுமதியின்றி மாற்றக் கூடாது, என்று ஒப்பந்தம் வாங்கிக் கொண்டேன்; சூடுண்ட பூனை அடுப்பங்கரை ஏறாது என்னும் பழமொழி இச்சந்தர்ப்பத்தில் என் ஞாபகத்திற்கு வருகிறது; இப்பேசும் படம் சீக்கிரம் வெளியாகுமென்று நினைக்கிறேன்.
1938 ஆம் ஆண்டாகிய இவ்வருஷ முதலில், சென்னை ஜோதி பிக்சர்ஸ் (Jothi Pictures Co.) கம்பெனியார் ராமலிங்க ஸ்வாமிகளின் சரித்திரத்தை பேசும் படமாக எடுக்க வேண்டி, அதற்கு சினேரியோவுக்குத் தக்கபடி, கதையை நாடக ரூபமாக எழுதிக் கொடுக்கும்படி கேட்க, அதற் கிசைந்து அவ்வண்ணமே எழுதிக் கொடுத்திருக்கிறேன். கூடிய சீக்கிரத்தில் அவர்கள் அதைப் பேசும் படமாக எடுக்க முயற்சி செய்வதாகக் கேள்வி.
பேசும் படமெடுக்க விரும்பும் சில கம்பெனியார், எனது மற்ற நாடகங்களில் எவை பேசும் படமாக மாற்ற உபயோகப்படும் என்று என்னைப் பலர் கேட்டிருந்த படியால், அதைப்பற்றி என் அபிப்பிராயத்தை இங்கு எழுதுகிறேன். புராணக் கதைகளைக் கருதுமிடத்து, நான் எழுதிய “புத்த அவதாரம்”, “யயாதி”, “ஊர்வசியின் `சாபம்” முதலியன உபயோகப்படும் என்று நினைக்கிறேன். சமூகக் கதைகள் வேண்டுமென்றால், “விஜயரங்கம்,’ “பொன் விலங்குகள்,” “பிராம்மணனும் சூத்திரனும்,” “தாசிப்பெண்,” உத்தம பத்தினி” முதலியவைகளைக் குறிப்பேன். ஹாஸ்யக் கதைகள் வேண்டுமென்றால் “சபாபதி நான்கு பாகங்கள், “சந்திரஹரி,” “காதலர் கண்கள், முதலியவைகளை எடுத்துக் கொள்ளலாம். ஷார்ட்ஸ் (Shorts) என்னும் சிறு கதைகளை விரும்பினால், “குறமகள்,” “ரஜபுத்திரவீரன்,” “சந்தையிற் கூட்டம்,” “வைகுண்ட வைத்தியர்,””நற்குல தெய்வம்’ முதலியவைகளை பேசும் படங்களாக மாற்றிக் கொள்ளலாம்; ரோமன்செஸ் (Romances) என்னும் பெரிய கதைகளை எடுப்பதானால் “இரண்டு நண்பர்கள்,”” “சத்ருஜித், ” “பேயல்ல பெண்மணியே” முதலியவைகள் மிகவும் பயன்படுமென எண்ணுகிறேன். மேற் குறித்தவைகளன்றி, “பேசும் படப்பதிவிரதை” “கிழக்கும் – மேற்கும் ” என்னும் இரண்டு புதிய கதைகளை சினிமாவுக்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். ஈஸ்வரன் கிருபையால் அவைகளைச் சீக்கிரம் முடிப்பேனென நினைக்கிறேன்.
1936 வருஷம் டிசம்பர் மாசம் கடைசியில் சென்னையில் இரண்டாவது அகில இந்திய சினிமா மஹாநாடு கூட்டப்பட்ட பொழுது என்னை வரவேற்பு சங்கத்தின் அக்கிராசனாதி பதியாகக் கோரினர்; அதை வகித்து, சினிமாக்களின் தற்கால நிலைமையைப் பற்றியும் அவைகளை எவ்விதம் சீர்திருத்த வேண்டுமென்பதைப் பற்றியும் என் அபிப்பிராயங்களை ஆங்கிலத்தில் பிரசங்க மூலமாகத் தெரிவித்தேன்; எனது சில நண்பர்கள் இதைத் தமிழில் அச்சிட வேண்டுமென்று கேட்டனர்; அதற்குப் பதிலாக என் அபிப்பிராயங்களை யெல்லாம் சேர்த்து “தமிழ் பேசும் படக்காட்சிகள்” என்னும் ஒரு சிறு நூலை அச்சிட்டிருக்கிறேன், மறுவருடமாகிய 1937 ஆம் ஆண்டில்.
1937 ஆண்டின் கடைசியில் சுயராஜ்ய கட்சியைச் சார்ந்த மந்திரிகள் என்னை பேசும் படக் காட்சிகளின் மேற்பார்வை போர்டில் ஒரு சென்சாராக (Censor) நியமித்தனர். இதில் ஒரு வேடிக்கை யென்ன வென்றால் நான் மேற்பார்வையிட்ட முதல் தமிழ்ப் படத்தையே கண்டனம் செய்ய வேண்டி வந்தது!
சென்ற மூன்று வருடங்களாக சென்னை பிலிம் லீக்கில் (Film League) நான் ஒரு உதவி அக்கிராசனாதிபதியாய் நியமிக்கப்பட்டு, அச்சபையார் வருடா வருடம் ஏற்படுத்தும் பிலிம் தேர்தலில், (Film Ballot) ஒரு ஜட்ஜாக இருந்து வருகிறேன்.



