
பேசும்பட அனுபவங்கள்
பம்மல் சம்பந்த முதலியார்
மூன்றாம் அத்யாயம் : மனோஹரன் பேசும் படத்தில் நான் நடித்தது
இனி 1935 ஆம் வருஷம் நான் பம்பாய்க்குப் போய், ‘மனோஹரன்’ நாடகத்தில் புருஷோத்தமனாக பேசும் படத்தில் நடித்த கதையை எழுதுகிறேன்.
ஒரு நாள் கோயமுத்தூர் வாசியாகிய ஸ்ரீமான் பொன்னுசாமி செட்டியார் என்பவர் என் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்தார்; அவரை எனக்கு முன்பு தெரியாது; அவர் பெயர் பொன்னுசாமி செட்டியார் என்றும் அவர் கோயமுத்தூர் வாசி யென்றும் அப்பொழுதுதான் அறிந்தேன். அவர், தான் எனது “மனோஹரன் நாடகத்தைப் பேசும்படமாக மாற்ற விரும்புவதாகவும் அதில் நான் மனோஹரனாக நடிக்க வேண்டுமென்றும், கேட்டார். அதன் பேரில் “நான் மனோஹரன் நாடகத்தைப் பேசும்படமாக்க உங்களுக்கு உத்திரவு கொடுக்க ஆட்சேபனையில்லை. ஆனால் நான் மனோஹரனாக நடிக்க முடியாது” என்று கூறினேன். அதன் மீது அவர் வற்புறுத்த, “மனோஹரன் வேடம், 16, அல்லது 18 வயதுடைய வாலிபன் நடிக்க வேண்டும், எனக்கோ 62 வயதாகிறது அது உசிதமல்ல” என்று நான் மறுத்ததற்குக் காரணம் கூறினேன். அதன் பேரில் அவர், நான் எப்படியாவது அக்கதையில் நடிக்க வேண்டுமென்று பலவந்திக்க வேண்டுமென்றால், புருஷோத்தமராஜன் வேடம் பூணத் தடையில்லை என்று தெரிவித்தேன். அவர் அதற்குக் கொஞ்சம் மனவாட்டத்துடன் சம்மதித்தார். பிறகு நாடகத்தின் ராயல்டிக்கும், நான் நடிப்பதற்கும், எனக்கு ஹானரேரியம் (Honorarium) ரூபாய் 8000 என்று முடிவாயிற்று. சில தினங்கள் பொறுத்து அவரது மாமனாராகிய என். மருதாசலம் செட்டியார் சென்னைக்கு வந்து எல்லா விஷயங்களையும் முடிவு செய்து கொண்டார். அச்சமயம் நான் இக்கதையை டைரெக்டும் செய்ய வேண்டுமென்று கேட்டார். அதற்கு நான் கதையை டைரெக்ட் செய்யச் சொன்னால் என்னால் நடிக்க முடியாது, நடிப்பதானால் டைரெக்ட் செய்ய முடியாது, என்று கண்டிப்பாய்க் கூறினேன்; ஒரே கதையில் இவ்விரண்டு தொழிலையும் செய்ய புத்திசாலியான ஒருவனும் ஒப்புக்கொள்ள மாட்டான் என்பது என் அபிப்பிராயம். ஏதோ சார்லி சாப்ளின் அவ்வாறு செய்ததாக நான் அறிவேன்; இது ஏகதேசமாம்; மற்றவர்கள் சார்லி சாப்ளினைப் போல் கதையில் நடித்து, கதையை டைரெக்ட் செய்யவும் முன் வருவது, புலியைப் பார்த்து பூனை சூடிக் கொள்வது போலாம்.
முடிவில் நடிகர்களின் ஒத்திகையை நான் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் கேட்க, வேண்டு மென்றால் இரண்டொரு ஒத்திகைகளைப் பார்க்கிறேன் என்று இசைந்தேன். அதன்படியே அவர்களுடன் ஒப்பந்தமாகி, அக்ரீமெண்டு ரிஜிஸ்டரும் செய்யப்பட்டது. ஒப்பந்தம் முடிந்த தினமே, சாயங்காலம் மற்றொரு பிலிம் கம்பெனியாரின் சார்பாக இருவர் என்னிடம் வந்து மனோஹரன் நாடகத்திற்கு ராயல்டிக்காகவும், நான் புருஷோத்தமனாக நடிப்பதற்காகவும் ஹானரோரியமாக 8500 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லினர். ஒரு முறை வாக்குக் கொடுத்தபின், நான் எவ்வளவு பெரும் தொகை வருவதானாலும் மாறமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல்லி யனுப்பி விட்டேன்.
ஸ்ரீமான் மருதாசலம் செட்டியார் பொன்னுசாமி செட்டியார், இன்னும் அவர்களுடைய இரண்டு பந்துக்கள் சேர்ந்து,”பாரத் பிலிம்ஸ்” என்று அக் கம்பெனிக்குப் பெயர் வைத்தனர். இந்த பாரத் பிலிம்ஸ் கம்பெனியாருடன் நான் அக்ரீமெண்டு செய்து கொண்டதில் ஒரு பெரும் தப்பிதம் செய்தேன்; அதை நான் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். கதையைப் பேசும் படமாக்கும் பொழுது, கதையின் போக்கை என் அனுமதியின்றி மாற்றக்கூடாது என்று, ஒரு நிபந்தனையைக் குறிக்க மறந்தேன்; மிகவும் தெரிந்த கதையாயிற்றே, நாற்பது வருடமாக இக்கதை தென்இந்தியா தமிழ் நாடக மேடையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட முறை ஆடப்பட்டிருக்கிறதே, இக்கதையை இவர்கள் மாற்றப் போகிறார்களா என்ன, என்று நான் அவ்வாறு கண்டிப்பாய்க் கேட்கவில்லை. இதன் பலனை நான் பிறகு அனுபவிக்க வேண்டியதாயிற்று.
பாரத் பிலிம்ஸ் கம்பெனியார் பிறகு நடிகர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்டனர். இதற்கு முன் சதி-சுலோசனாவில் நடிகர்களுடன் நான் பட்ட கஷ்டம் என் ஞாபகத்திற்கு வர, அது முடியாது என்று கண்டிப்பாய்க் கூறிவிட்டேன். வேண்டுமென்றால் நீங்கள் நடிகர்களைக் கொண்டுவந்தால், இன்னின்ன வேஷத்திற்கு இவர்கள் லாயக்கானவர்கள், லாயக்கானவர்களல்ல, என்று கூற ஆட்சேபனையில்லை யென்று தெரிவித்தேன். உடனே பாரத் பிலிம்ஸ் கம்பெனியார் நடிகர்களையும் நடிகைகளையும் தேட ஆரம்பித்தனர். நான் பட்டணத்திலிருந்தால் ஏதாவது எனக்கு வேலை வந்து கொண்டிருக்கும், வேறு எங்கேயாவது போய், உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டு மென்று தீர்மானித்தவனாய், என் நண்பர் நாகரத்தினம் ஐயர் அச்சமயம் தஞ்சாவூரில் டெபுடி ரிஜிஸ்டிரராக இருந்தபடியால், அங்கு போய்ச் சேர்ந்தேன்.
அங்கு எங்கள் கம்பெனியார் ஒரு ஆமெடூர் நாடகக் கம்பெனியைக் கொண்டு மனோஹரன் நாடகம் என் முன்பாக ஆட வைத்தார்கள். அங்கு நடித்தவர்களுள் ஒருவரையும் பேசும் படக் காட்சிக்கு ஆக்டர்களாகத் தேர்ந்தெடுக்கக் கூடாமற் போயிற்று. இதற்கு முன்பாக சென்னையில் இரண்டொரு ஆக்டர்களை மனோஹரன் வேடத்திற்கு தகுந்தவர்களாயிருப்பார்களாயென்று என்னைக் கேட்க, நான் அதற்கிசையவில்லை. இப்படி ஒவ்வொரு ஆக்டராகப் பொறுத்தமில்லை பொறுத்தமில்லை யென்று சொல்லிக் கொண்டிருந்தால் நாங்கள் எப்படி ஆரம்பிப்பது என்று கஷ்டப்பட்டவர்களாய், கடைசியாக சேலத்திலிருக்கும் ஒரு ஆமெடூர் ஆக்டரை, மனோஹரன் வேடத்திற்காகப் பொறுக்கியெடுத்து, தஞ்சாவூருக்கு நானிருக்குமிடம் அழைத்துக்கொண்டு வந்தனர். “உங்கள் அபிப் பிராயப்படி 18 வயது வாலிபனான ஆக்டர் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இவர்தான் கிடைத்தார்’ என்று தெரிவித்தனர். அந்த ஆக்டர் பெயரை இங்கு நான் எழுத இஷ்டமில்லை. அவர் மனோஹரன் வேடத்தில் சேலம் முதலிய இடங்களில் பெயர் பெற்றவராம். ஆனால் நான் அவரை அதற்கு முன் பார்த்தவனல்ல. அவரை நான் இரண்டொரு காட்சிகள் நடிக்கச் செய்து இதுவரையில் நான் பார்த்தவர்களுக்குள் இவர் சுமாராக நடிக்கிறார், இவரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், என்று கூறினேன். கம்பெனி டைரெக்டர்களும் இசைந்து அவரை மனோஹரன் வேடத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டனர்.
பிறகு, சென்னையில் ஒத்திகைகள் ஆரம்பிக்க வேண்டும் நீங்கள் சென்னைக்கு வரவேண்டுமென்று எனக்கு தஞ்சாவூருக்கு கடிதம் வர, உடனே புறப்பட்டு பட்டணம் வந்து சேர்ந்தேன். இங்கு, பத்மாவதியின் வேஷத்திற்குக் கொண்டிதோப்பு சாரதாம்பாளையும், வசந்தசேனை வேடத்திற்கு திருச்சிராப்பள்ளி கமலவேணியையும் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தார்கள். அவர்களிருவரையும் நடிக்கச் செய்து பார்த்து, அவ்வேடங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்று நான் ஒப்புக்கொண்டேன். குரு வேடத்திற்கும் பௌத்தாயனர் வேடத்திற்கும் நீலவேணி வேடத்திற்கும் கம்பெனியார் பொறுக்கியெடுத்த நடிகர்களை யும் நடிகையையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதன்மீது அதற்காக வேறு பெயரை ஏற்பாடு செய்வதாக ஒப்புக்கொண்டனர். வசந்தன் வேடத்திற்காக நான் ஒரு ஆக்டரைக் குறிப்பிட, அந்த ஆக்டர் கிடைக்கவில்லை யென்று பிறகு அவ்வேடத்தில் நடித்த கணேச ஐயர் என்பவரைக் கொண்டு வந்து காட்டினர். இவர் போதும் என்று ஒப்புக்கொண்டேன். சத்தியசீலர் வேடத்திற்கும் விகடன் வேடத்திற்கும் விஜையாள் வேடத்திற்கும், முன்பே சில பேசும் படங்களில் நடித்திருந்த இரண்டு ஆக்டர்களையும், ஆக்ட்ரெசையும், ஏற்பாடு செய்ய, அவர்களை ஒத்திகை செய்து பார்த்து நானும் ஒப்புக்கொண்டேன்.
மேற்கண்டபடி எல்லாப் பாத்திரங்களும் ஏற்பாடான பிறகு கம்பெனியார் ஒரு நல்ல நாள் பார்த்து ஒத்திகை நடத்த ஆரம்பித்தார்கள். பாரத் பிலிம்ஸ் கம்பெனியார், பம்பாயில் படத்தை டைரெக்ட் செய்யப் போகிறவர் பேசும்படத்திற்காகச் சுருக்கியபடி கதையிதுவென்று ஒன்றை என் கையிற் கொடுத்தனர். அது நான் எழுதிய கதையையே பெரும் பாலும் தழுவியதாயிருந்தது; ஆரம்பத்தில் மாத்திரம் சிறிது மாற்றியிருந்தது. அது வாஸ்தவமென்றெண்ணி, அதன் படியே ஒத்திகைகளை சுமார் இரண்டு வாரம் நடத்தினேன். நான் ஒப்புக்கொண்டது இரண்டொரு ஒத்திகைகள் நடத்துவதாக; இருந்தபோதிலும் படம் நன்றாயிருக்க வேண்டுமேயென்று என்தேக சிரமத்தையும் பாராமல், பல ஒத்திகைகளை நடத்தினேன். முக்கிய ஆக்டர்களும் ஆக்ட்ரெஸ்களும் நான் கற்பித்தபடியே கற்று வந்தனர்.
இதற்குள்ளாகக் கம்பெனியார், பம்பாயில் “பிலிம்சிடி” ஸ்டூடியோவில், பேசும்படம் பிடிப்பதற்காக ஏற்பாடு செய்தனர்.
பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து எங்களையெல்லாம் பம்பாய்க்கு அழைத்துச் சென்றனர். அங்கே பிலிம் சிடிக்கு அருகாமையில் ஒரு வீட்டின் நான்காவது மாடியில், எங்களுக் கெல்லாம் ஜாகை ஏற்படுத்தினர். நாங்கள் குடியிருந்த அறை களுக்குப் போக, கீழ் இருந்து 80 படி ஏற வேண்டியிருந்தது! முதல் நாள் காலை அப்படிகளின் மீது ஏறிப் போனவுடன், இப்பொழுது ஒன்றும் கஷ்டமாயில்லை, இனி ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு, தினம் ஸ்டூடியோவில் நமது வேலையை முடித்துக் களைத்திருக்கும் பொழுது, இந்த 80 படியையும் எப்படி ஏறிப் போகப்போகிறோம்?’ என்று கொஞ்சம் கவலை யுற்றேன். எனக்கப்பொழுது வயது 62 பூர்ணமாயிற்று; இருந்தும் ஷூடிங் நடந்த ஒவ்வொரு தினமும் இந்த 80 படிகள் ஏறித்தான் என் அறையைப் போய்ச் சேர்ந்தேன். இது என்ன ஒரு கஷ்டமாவென்று இதைப் படிக்கும் என் இளைய நண்பர்கள் நினைக்க வேண்டாம்; ஒரு உதாரணம் கொடுக்கிறேன்; அதனின்றும் இந்தச் சிரமம் இப்படிப்பட்டதென்று அவர்கள் அறிந்து கொள்ளலாம். நாங்கள் இங்கு போய்ச் சேர்ந்த சில தினங்களுக்கெல்லாம் எனது நண்பர் பல்லாரி ராகவாசார்லு “துரௌபதி மான சம்ரட்சணம்” என்னும் தெலுங்கு பேசும் படத்தில் நடிப்பதற்காக பம்பாய்க்குத் தானும் வந்து சேர்ந்தார். அவர் ஒரு நாள் என்னைப் பார்க்க வேண்டி, நானிருந்த இந்த மேல் மெத்தைக்கு அந்த 80 படிகளையும் ஏறி வந்த பிறகு, ”அப்பா! இனிமேல் இந்தப் படிகளை ஏறிவர என்னால் முடியாது, உன்னைப் பார்க்க நான் வந்தால் நான் கீழிருந்து சொல்லியனுப்புகிறேன், நீதான் இறங்கி வரவேண்டும் என்று எனக்குத் தெரிவித்தார்! அவர் என்னைவிட சுமார் 15 வருடம் வயதில் சிறியவர்!
பம்பாய் போய்ச் சேர்ந்த இரண்டாம் நாள், அருகாமை யிலுள்ள பிலிம்சிடி ஸ்டூடியோவைப் போய்ப் பார்த்தேன்; ஸ்டூடியோ மிகவும் அழகாயும் விசாலமாயும் இருந்தது; சவுகர்யங்களெல்லாம் நிறைந்திருந்தன; முக்கியமாகக் காமிராக்கள் முதலிய கருவிகள் எல்லாம் எத்தனை வேண்டு மென்றாலும் கிடைக்கக் கூடியதாயிருந்தது. கல்கத்தாவில் படம் பிடிக்கும் காமிரா ஏதாவது கொஞ்சம் கெட்டுப் போனால் அது மராமத்து ஆகும்வரையில் ஷுட்டிங் வேலை நிற்க வேண்டியிருந்தது; இங்கே பிலிம்சிடி புரொப்ரைடர்கள் இந்த காமிரா முதலிய கருவிகளில் வியாபாரமே செய்து வந்தபடியால், எத்தனை காமிராக்கள், மைக்ரோ போன்கள், விளக்குகள் முதலிய வேண்டிய போதிலும் ஒரு நிமிஷத்தில் கிடைக்கக் கூடியவைகளாயிருந்தன; அன்றியும் கட்டடத்தில் இரண்டிடத்தில் ஷூட்டிங் நடத்தும்படியான வசதியு மிருந்தது; இதனால், ஒரு இடத்தில் ஷூட்டிங் நடக்கும் பொழுது, மற்றொரு இடத்தில் மேல் நடக்கவேண்டிய காட்சியை ஏற்பாடு செய்ய சவுகர்யமாயிருந்தது; வேண்டு மென்றால் ஏககாலத்தில் இரண்டு காட்சிகளையும் ஷுட்டிங் செய்யலாம்; அல்லது இரண்டு கம்பெனியார் பேசும் படம் பிடிக்கலாம் – மேல்மாடியில் ஒருவரும் கீழே ஒருவரும். அன்றியும் பேசும் படம் பிடிப்பதற்கு வேண்டிய எல்லா வசதிகளும் அமைந்திருந்தன. இதன் சொந்தக் காரர்களாகிய பசுல்பாய் (Fazulbhoy) பிரதர்ஸ், மிகவும் கௌரவம் பொருந்திய மனிதர்கள்; நான் பம்பாயில் கழித்த ஐந்து மாதமும் அவர்கள் என்மீது மிகவும் அன்பு பாராட்டினர், அவர்களுக்கு இதையே என் வந்தனமாக எழுதுகிறேன்.
இனி மனோஹரன் பேசும் படத்தை டைரெக்ட் செய்ய கம்பெனியார் ஏற்படுத்திய டைரெக்டரைப் பற்றி சற்று விவரமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.
அவர் ஒரு மஹாராஷ்டிர பிராமணர்; அவர் பாஷை மராத்தி, இங்கிலீஷில் கொஞ்சம் பரிசயம் உண்டு; ஏதாவது சொன்னால் தெரிந்து கொள்ளுவார்; தமிழில் ஒரு வார்த்தையும் தெரியாது; இதை அவரது குறையாகக் கூறவில்லை, இருந்த சமாசாரத்தை எழுதினேன். இவருடன் பிறகு கலந்து பேசியதில், சென்னையில் நான் ஒத்திகை செய்த சினேரியோ வசனத்திற்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமில்லை யென்று தெரிவித்தார்! பிறகு நான் மனோஹரன் கதையை ஆங்கிலத் தில் ஒருவாறு அவருக்குத் தெரியும்படி சொன்னேன்; அது போதாது அந்த தமிழ் வசனத்தை யாரையாவது கொண்டு மஹாராஷ்டிர பாஷையில் எழுதித் தரவேண்டுமென்று கம்பெனியாரிடம் கூற, அவர்கள் பூனாவிலிருந்து ஒருவரை வரவழைத்து, மஹாராஷ்டிரத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்தனர். அம்மொழி பெயர்ப்பு சரியாயிருந்ததோ எப்படியிருந்ததோ நான் அறியேன்! இந்த மொழிபெயர்ப்பு பூர்த்தியாக ஒரு மாதத்திற்கு மேலாகியது. இதற்குள்ளாக ஆக்டர்களாகிய எங்களையெல்லாம் டைரெக்டர் முன்பாக நடிக்கச் செய்தார்; நாங்கள் எல்லாம் நடித்தோம். நாங்கள் தமிழில் நடித்ததை அவர் பார்த்து எவ்வளவு தெரிந்து கொண் டாரோ நான் அறியேன். முதல் ஒத்திகையை முழுவதும் பார்த்த பிறகு, முதலாளிகளிடம் மஹாராஷ்டிர பாஷையில் “இதெல்லாம் உதவாது, இதையெல்லாம் முற்றிலும் மாற்ற வேண்டும்,” என்று தெரிவித்தாராம். மஹாராஷ்டிர பாஷை யறிந்த ஒரு ஆக்டர் இதை எனக்குத் தெரிவித்தார். நான் என்ன செய்வது? மனோஹரன் நாடகத்தை மூன்று வருட காலத்திற்கு, பேசும் படமாக மாற்ற, பாரத் பிலிம்ஸ் கம்பெனியாருக்கு நான் ஒப்பந்தம் கொடுத்த பொழுது, நான் முன்பே கூறியபடி கதையை என் அனுமதியின்றி மாற்றக் கூடாது என்று நான் குறிப்பிடவில்லை. ஏறக்குறைய 40 வருட காலமாக தென் இந்திய மேடைகளிலெல்லாம் ஆடப்பட்டு, எல்லோருக்கும் தெரிந்திருக்கும் கதையை மாற்றுவார்களென்று நான் கனவிலும் நினைக்கவில்லை! நம்முடைய தப்பிதத்தின் பலனை நாம் அனுபவித்துத்தான் தீரவேண்டும், ஆயினும் முதலாளிகளிடமும், டைரெக்டரிடமும் நம்முடைய அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டியது நம்முடைய கடமை, இல்லாவிட்டால் முன்பே ஏன் எங்களிடம் தெரிவிக்கவில்லை, தெரிவித்திருந்தால் மாற்ற மாட்டோமே, என்று பிறகு அவர்கள் சொல்வதற்கு இடங் கொடுக்கலாகாதென்று கருதினவனாய், அவர்களெல்லாம் ஒருங்கு சேர்ந்திருந்த பொழுது ஒருநாள், அவர்களிடம் போய் கண்டிப்பாய் அடியிற் கண்டவாறு தெரிவித்தேன். ‘நான் எனது மனோஹரன் நாடகத்தை நீங்கள் பேசும் படமாக மாற்ற உங்களுக்கு 3 வருட காலம் உரிமையை விற்றது உண்மைதான். கதையை என் அனுமதியின்றி மாற்றக்கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை, வாஸ்தவமே. ஆயினும் ஒரு முக்கியமான விஷயம் நீங்கள் யோசிக்க வேண்டும். இது புதிதாய் இன்றைக்கு ஏற்பட்ட கதையல்ல. 40 வருட காலமாக தென் இந்தியாவிலும், ரங்கூன், கொழும்பு, யாழ்ப்பாணம் முதலிய தமிழ் பேசும் தேசங்களிலெல்லாம், தமிழர்கள் நன்றாய்ப் படித்தும் கேட்டும் பார்த்தும் அறிந்த கதை; கதையின் போக்கை நீங்கள் கொஞ்சமும் மாற்றுவீர்களானாலும் அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். பிறகு உங்கள் பேசும் படம் ஜனங்களை ரமிக்கச் செய்யாது என்பது என் அபிப்பிராயம். புதிய கதையை எவ்வளவு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்; பழைய கதையை மாற்றுதல் ஜனங்களுக்கு வெறுப்பை உண்டு பண்ணும்; இது என் கதையாயிற்றே என்று நான் சொல்லவில்லை, மொத்தத்தில் இந்த உண்மையை நீங்களே பிறகு அறிவீர்கள்! என் கடமையை நான் ஒழித்துவிட்டேன்; பிறகு உங்கள் இஷ்டம்!” என்று கூறிவிட்டு, என் விடுதிக்குப் போய்விட்டேன்.’ இதன் பிறகு சுமார் இரண்டு மாதம் வரையில் நான் ஸ்டூடியோவை எட்டிப் பார்க்கவில்லையென்றே கூறவேண்டும்.
மஹாராஷ்டிர பாஷையில் கதையை மொழி பெயர்த்துக் கொடுப்பதற்கு சுமார் ஒரு மாதமாயிற்று; இதற்குள்ளாக, சென்னையிலிருந்து மனோஹரன் வேஷத்திற்கும், விஜயாள் வேஷத்திற்கும் சத்தியசீலர் வேஷத்திற்கும் ஏற்படுத்தி அழைத்துக்கொண்டு போன மூன்று முக்கியமான ஆக்டர் களையும், அவ்வேடங்களுக்குப் பொருத்தமான வர்களல்ல வென்று தீர்மானித்து, அவர்களுக்குச் சேர வேண்டிய ஏறக்குறைய முழுத் தொகையையும் கொடுத்து, முதலாளிகள் பட்டணம் அனுப்பி விட்டனர். முதலாளிகள் இவ்வண்ணம் செய்தது டைரெக்டருடைய தூண்டுகோலின் மீது என்று எனக்கு மற்ற ஆக்டர்கள் தெரிவித்தனர். முதலாளிகள் இதைப்பற்றி என் அபிப்பிராயத்தைக் கேட்டபோது, “இது உங்கள் பாடு, ஆயினும், இவர்களை விட சிறந்த ஆக்டர்களைக் கண்டு பிடித்தபின் இவர்களை நீங்கள் அனுப்பி விடுவதே நியாயம்; என் அபிப்பிராயத்தைச் சொல்லி விட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்” என்று தெரிவித்தேன். என் வார்த்தையைக் கேளாமல் அவர்கள் இஷ்டப்படி செய்ததின் பலனை பிறகு அவர்கள் அனுபவித்தார்கள்.
மனோஹரன் ஆக்டரை பட்டணம் அனுப்பத் தீர்மானித்த பிறகு மனோஹரன் வேஷத்திற்கு, அந்த மஹாராஷ்டிர டைரெக்டர் பம்பாயில் அச்சமயம் இருந்த சாண்டோ, (Sandow) என்னும் குறிப்புப் பெயரையுடைய ஒரு ஆக்டரை சிபாரிசு செய்தார்; இவர்தான் பிறகு சத்யசீலராக நடித்த ஆக்டர்; இவருக்குத் தமிழ் பாஷை படிக்கவும் தெரியாது, நன்றாய்ப் பேசவும் தெரியாது; இவர் மனோஹரன் வேடத்திற்குத் தகுமா என்று என் அபிப் பிராயத்தை முதலாளிகள் கேட்க, அவருக்கு, சிருங்கார பாகத்தில் நான்கு வரியும், ரௌத்திர பாகத்தில் நான்கு வரியும், சோக பாகத்தில் நான்கு வரியும் கொடுத்து அவைகளைப் படிக்கச் சொன்னேன்; சில தினங்கள் கழித்து அவரை ஒத்திகை செய்து பார்க்கப் போகிறோம், நீங்கள் வந்து கொஞ்சம் பார்க்க வேண்டும் என்று முதலாளிகள் கூற, அதற்கிசைந்து, பிலிம் சிடியில் ஒத்திகை நடத்தும் அறைக்குப் போயிருந்தேன். மேற்குறித்த வரிகளைத் தெலுங்கு எழுத்திலோ, மஹாராஷ்டிர எழுத்திலோ எழுதிக்கொண்டு குருட்டுப்பாடம் செய்து, சாண்டோ அவைகளை என்முன் ஒப்புவித்தார். அதைக் கேட்டதும் எனக்கு ஒரு புறம் நகைப்பும் மற்றொரு புறம் துக்கமுமுண்டாக, அதை அடக்கிக் கொண்டு முதலாளிகளிடம் “இவருக்கு நீங்கள் மனோஹரன் வேஷம் கொடுத்தால், அவ்வேடத்திற்கு தென் இந்தியா முழுவதும் தமிழ் பேசத் தக்க ஒரு மனிதனும் உங்களுக்குக் கிடைக்கவில்லையா என்று ஏளனம் செய்வார்கள்! பிறகு உங்கள் இஷ்டம்!” என்று கண்டிப்பாய்த் தெரிவிக்க, மறு நாள் அந்த ஆக்டரை தங்கள் முன் நடிக்கச் செய்து, அவரது கொச்சைத் தமிழைக் கேட்டு, நான் கூறிய வார்த்தைகளின் உண்மையை அறிந்தவர்களாய், உடனே சென்னைக்கு தங்களுள் ஒருவரை அனுப்பி, மனோஹரன் வேஷத்திற்கு ஒரு நடிகரைத் தேர்ந்து கண்டுபிடித்து வரச் சொன்னார்கள். இந்த “சாண்டோ” ஆக்டர் மிகுந்த பலசாலி, நன்றாய் நடிக்கும் திறமையுடையவரே. ஆயினும் அவருக்கு தமிழ் பேச நன்றாய் வராவிட்டால் என்ன செய்வது? பிறகு, முதலாளிகள் இந்த ஆக்டரை ஒப்பந்தம் செய்தாய் விட்டது, ஏதாவது வேடம் கொடுக்க வேண்டுமே யென்று, அவருக்கு சத்தியசீலர் வேஷம் கொடுத்தனர். அதில் அவர் சுமாராக நடித்தார் என்றே நான் சொல்ல வேண்டும்.
அப்புறம் சென்னைக்குப் போன முதலாளி மனோஹரன் வேடத்திற்காக மிஸ்டர் செல்லம் என்பவரை ஒப்பந்தம் செய்துகொண்டு அவருடன் பம்பாய் வந்து சேர்ந்தார். இவர்தான் பேசும் படத்தில் மனோஹரனாக நடித்தவர்; ஆகவே இவரைப் பற்றி சற்று விவரமாய் நான் எழுத வேண்டியவனாயிருக்கிறேன். இவரை இதற்கு முன் ஒருமுறை நான் பார்த்ததுண்டு. இவர் இங்கு பம்பாய்க்கு வந்த பிறகுதான், எனக்கு அறிமுகமானார் என்று நான் கூறவேண்டும். இங்கு நாங்கள் சந்தித்த பிறகு, நாங்களிரு வரும் மிகுந்த சிநேகிதர்கள் ஆனோம். இவர் கவர்ன்மென்ட் உத்தியோகத்திலிருந்து பென்ஷன் வாங்கிக் கொண்டவர்; சுமார் 50 வயதுக்கு மேலிருக்கும் என் உத்தேசப்படி; கொஞ்சம் ஸ்தூல தேகமுடையவர். இருந்தும் நடிப்புக் கலையில் நல்ல தேர்ச்சி பெற்றவர்; இவர் பூனாவிலிருந்த போது, அங்குள்ள “பூனா மனோஹர சபை”யில் ஆமெடூராக என் நாடகங்களில் சிலவற்றுள் நடித்திருந்தனராம்; முக்கியமாக மனோஹரன் வேடத்தில் பெயர் பெற்றவர் என அறிந்தேன்; அப்பாத்திரத்திற்குரிய வசனத்தையெல்லாம் எப்பொழுது வேண்டுமென்றாலும் தலைகீழாக ஒப்புவிப்பார். என் அபிப்பிராயப்படி இவரிடம் அவ்வேடம் தரிக்க என்ன குறை யிருந்ததென்றால், இவர் பதினாறு வயதுடைய சிறுவனாகத் தோன்ற முடியாததேயாம். என் அபிப்பிராயப் படி அவ்வேடம் புனைபவன் அதிபால்யனாகத் தோற்ற வேண்டும்; அதிபால்யனாயிருந்தும் அவனிடம் அத்தனை வீரம் தோன்றுவதுதான் அப்பாத்திரத்தின் விசேஷம்; அச்சிறு வயதில் அவ்வளவு வீரம் ஒருவனுக்கு இருக்குமா என்று கேட்டால், மஹாபாரதத்தில் அபிமன்யுவை உதாரணமாகக் கூறுவேன். அபிமன்யுவுக்குப் பாரதப் போர்க்களத்தில் 14 வயதெனக் கூறப்பட்டிருக்கிறது; அபிமன்யுவைப்பற்றி அனைவரும் கௌரவமும் பரிதாபமும் கொள்வது
அச்சிறுவயதில் அவன் காட்டிய ரோஷமும், வீரமுமே! அம் மாதிரி மனோஹரன் வேடம் பூணும் நடிகன், பால்யனாகத் தோன்றி, அதி வீரத்தைக் காட்டத்தக்கவனாயிருக்க வேண்டும். மேற் கண்டபடி பால்யனாகத் தோன்றக் கூடாமைதான் எனது நண்பர் செல்லத்திடம், ஒரு முக்கிய குறையாயிருந்தது. கேவலம் நடிப்பு விஷயத்தில் என் அபிப்பிராயப்படி அப்பாத்திரத்தை நன்றாகத்தான் நடித்தார். அப்படி யிருந்தும் பேசும் படத்தில் இவர் மிகவும் நன்றாய் ஏன் சோபிக்கவில்லை யென்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கேட்கலாம். அதற்கு பதில் என்னவென்றால், மிஸ்டர் செல்லம் அவர் மனப்பாங்கின்படியும், அவர் வழக்கமாய் நடித்து வந்தபடியும் நடிக்க விடாது, அவரது வசனங்களையும் நடிப்பையும் மாற்றி, இக்கதையை டைரெக்ட் செய்த இரண்டு டைரெக்டர்களும் நடிக்கச் செய்ததேயாம் என்பது என் ஸ்திரமான அபிப்பிராயம். பதினெட்டு வயதுடைய ஒரு பிள்ளைக்கு மிஸ்டர் செல்லத்தைப் போல் நடிக்கும் திறமிருந்து, நான் எழுதிய வசனத்தையும் கதையின் போக்கையும் மாற்றாது, என் சொற்படி நடிக்க உத்திரவு கொடுத்திருந்தால், இப்பேசும் படம் மிகவும் நன்றாய்ச் சோபித்திருக்கும், என்பது என் அபிப்பிராயம் மாத்திரமன்று இக்கதையை நாடகரூபமாக நாற்பது வருடங்களாகக் கண்டு களித்த, என் நண்பர்கள் அனைவர்களுமுடைய அபிப்பிராயமுமாம்.
எனக்கு நன்றாய் பரிசயமானவுடன், மிஸ்டர் செல்லம், மனோஹரன் வேஷத்திற்கு முன்பே ஒருவரை ஏற்படுத்திய வுடன், அவரை நீக்கி விட்டு, அவரது ஸ்தானத்தில் தன்னை நியமித்த விஷயமும், தனக்கு முன்பே தெரிந்திருக்குமாயின், தான் பம்பாய்க்கு வந்திருக்க மாட்டார், என்று என்னிடம் தெரிவித்தார்.
மிஸ்டர் செல்லம் பம்பாய்க்கு வந்தபிறகு, அவரை மனோஹரனாக ஏற்படுத்திக் கொண்டு, எங்கள் மஹாராஷ்டிர டைரெக்டர், மனோஹரன் கதையின் போக்கை முற்றிலும் மாற்றி, ஒத்திகை நடத்திக்கொண்டிருந்தார். முதலாளிகள் இந்த ஒத்திகையை நான் பார்க்கவேண்டுமென்று என்னை வரும்படி ஒருமுறை அழைத்தனர். நான் ஒத்திகை நடக்குமிடம் போய், ஒத்திகையைப் பார்த்த பொழுது, நான் எழுதியதற்கு மிகவும் மாறுதலான வசனங்களுடன் முதற்காட்சி ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சரி, இதில் நாம் பிரவேசிக்கக் கூடாது, முதலாளிகள் இஷ்டம், என்று தீர்மானித்து, சும்மா உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அக்காட்சி ஒத்திகை முடிந்தவுடன், என்னடா இவன் சும்மா பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறான், என்று எண்ணி னாரோ என்னவோ, ஆங்கிலத்தில், “ஏன், முதலியார், எப்படி இருக்கின்றது? உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார். அவர் கேட்ட பிறகு நாம் பதில் கூறாதிருப்பது நியாயமன்று, நம்முடைய அபிப்பிராயத்தைத் தெரிவிப்போம், பிறகு அவர் பாடு, என்று, அடியிற் கண்டவாறு கூறினேன். “நீங்கள் என் வசனத்தை முற்றிலும் மாற்றியிருக்கிறீர்கள், அதைப்பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியிருக்கிற விஷயம் ஒன்றுண்டு; இக்கதை புதியகதையல்ல, தென் இந்தியா முழுவதும், தமிழ் பேசுபவர்களெல்லாம் நன்றாய்ப் படித்தும் பார்த்தும் இருக்கிற கதை, இதிலுள்ள வசனத்தை உங்கள் சவுகர்யப்படி பேசும்படக்காட்சிக்காக, எவ்வளவு வேண்டுமென்றாலும் குறுக்கிக் கொள்ளுங்கள், ஆயினும் அதை மாற்றினீர் களானால், உடனே பேசும் படத்தைப் பார்க்கும் ஜனங்கள், அந்த வசனம் எங்கே, இந்த வசனம் எங்கே, என்று கேட்க ஆரம்பிப்பார்கள்; அன்றியும் கதையை யேன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்பார்கள், அதற்கு நீங்களும் முதலாளிகளும் தான் ஜவாப்தாரி!” என்றேன்.
இதற்கொன்றும் பதில் சொல்லாமல், “ஆக்டிங்கைப் பற்றி உங்கள் அபிப்பிராயத்தை தெரிவியுங்கள்” என்று கேட்க “சரி, அதையும் சொல்லிவிடுகிறேன்; பத்மாவதி தன் மகன் மனோஹரனை ஆலிங்கனம் செய்வது இப்படி இருக்கக் கூடாது; சாதாரணமாக ஸ்திரீ புருஷர்கள் ஆலிங்கனம் செய்து கொள்வதற்கும், தாய் மகனை ஆலிங்கனம் செய்து கொள்வதற்கும் வித்யாசம் இருக்க வேண்டும். இன்னொரு விஷயம் – மனோஹரன் தன் தாயார் கரத்தினின்றும் தன் பாட்டன் வாளை உறையுடன் பெற்றவுடன், சுத்த வீரனாகிய அவன், உறையிலிருக்கும் வாள் எத்தன்மையது என்று, அதை வுடனே உருவிப் பார்ப்பான்; இதுதான் சுபாவம். ஒரு அம்பட்டனிடம் ஒரு புதிய கத்தியைக் கொடுத்தால் உடனே அதன் கூர் எப்படி யிருக்கிறதென பார்ப்பான், ஒரு டெனிஸ் ஆடும் வாலிபனிடம் புதிய ஒரு டெனிஸ் பாட்டை (Tennis Bat)க் கொடுத்தால், அது தன்கைக்கு எப்படியிருக்கிறதெனத் தூக்கிப் பார்ப்பான்; ஒரு புல்லாங்குழலை ஒரு சங்கீத வித்வானிடம் கொடுத்தால், அதன் நாதம் எப்படியிருக் கிறதென, உடனே அதை ஊதிப்பார்ப்பான்; அதுபோல சுத்த வீரனிடம் புதிதாய் ஒருவாளைக் கொடுத்தால், அதை உடனே உறையினின்றும் எடுத்து, வீசிப்பார்ப்பான்; நான் இந்த வேடத்தில் ஏறக்குறைய 50 முறை நடித்திருக்கிறேன். இப்படித்தான் இதை நடித்திருக்கிறேன்” என்று கூறி, அதை நடித்துக் காட்டினேன். அன்றியும் பத்மாவதி மனோஹரனை ஆலிங்கனம் செய்து கொள்வதில், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று, ஒரு தாய் தன் மகனை எப்படி ஆலிங்கனம் செய்து கொள்வாளோ அப்படி பத்மாவதி வேடம் எடுத்துக்கொண்ட ஸ்ரீமதி சாரதாம்பாளைக் கொண்டு நடித்துக் காட்டச் செய்தேன். அங்கிருந்த ஆக்டர்களெல்லாம் நான் செய்தது சரி என்று ஒப்புக்கொண்டபோதிலும், எங்கள் டைரெக்டருக்கு ஒரு சம்மதமாயில்லை; சரி, இனி நாம் இதில் பிரவேசிப்பதில் பயனில்லையென்று, நான் வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டேன்.
மற்றொரு நாள் டைரெக்டர் ஒத்திகை நடத்திக்கொண்டிருந்த பொழுது, ஏதோ ஒரு விஷயத்தில் ஆக்டர்களுக்கும், டைரெக்டருக்கும், ஒரு காட்சியை எப்படி நடிப்பது என்பதைப்பற்றி ஒரு சந்தேகம் வர, முதலியாரை வர வழைத்துக் கேட்டுப்பார்க்கலாம் எது சரி யென்று, என்று ஒருவர் சொன்ன பொழுது, “முதலியார் வந்தால் இதற்கெல்லாம் ஆட்சேபனை செய்து விடுவார், ஆகவே அவரை அழைக்க வேண்டியதில்லை” என்று டைரெக்டர் சொன்னாராம். இந்த விஷயமும் என் காதிற் கெட்டியது. அதையும் வாங்கி என் ஜேபியில் போட்டுக்கொண்டு சும்மா இருந்து விட்டேன். இதன் பிறகு ஒரு ஒத்திகைக்கும் நான் போகவில்லை.
சுமார் இரண்டு மாதம் கழித்து, நாளை ஷூட்டிங் ஆரம்பிக்கப் போகின்றோம், நீங்கள் வரவேண்டும் என்று முதலாளிகளில் ஒருவர் எனக்குத் தெரிவிக்க, மறுதினம் ஸ்டூடியோவுக்குப் போய்ச் சேர்ந்தேன். தெய்வவணக்கம் செய்துவிட்டு ஆரம்பித்தால் நல்லது என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, என் மனதுக்குள், வினாயகர் துதியையும் சரஸ்வதி துதியையும் பாடிக்கொண்டேன். பிறகு இன்று என்னகாட்சி ஷூட்டிங் நடக்கப்போகிறதென வினவ, வசந்தனும் விகடனும் நீலவேணியும் வருகிற காட்சி ஆரம்பிக்கப்போகிறோம், என்று தெரிவித்தார்கள். அதற்காக வசந்தனுக்கு வேடம் சுமாராகத் தானிருந்தது; விகடவேஷ தாரியைப் பார்த்தவுடன், மனம் குன்றினேன். விகடனுக்கு, திருப்பதி மொட்டையைப் போல் முழுமொட்டை யடித் திருந்தது! இதென்ன கோலம் என்று வினவ, டைரெக்டர் அவர்கள் இப்படித் தானிருக்க வேண்டுமென்று சொன்னார், அதன்படி மொட்டையடித்துக் கொண்டேன், என்றார் அந்த வேஷதாரி! அதன் பேரில் முதலாளிகள் தரப்பில் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு செட்டியாரிடம் போய், “இதென்ன கோலம்! இப்படியும் செய்யலாமா? கதை நிகழிடம் சோழ பாண்டிய தேசம்; அங்கே பிரார்த்தனைக்காகத் தவிர யாராவது முழுமொட்டையடித்துக் கொள்ளுகிறார்களா? சம்ஸ்கிருத நாடகப் பிரகாரம் விதூஷகர்கள் பிராம்மணர்களாயிருந்த போதிலும், எந்த பிராம்மணனாவது உச்சிக்குடிமி யில்லாமல் மொட்டை யடித்துக்கொள்கிறானோ? அன்றியும் விகடன் பாத்திரத்தின் உடையும் சரியாயில்லை என்று கூறி விகடனுக்கு உடையிப்படி யிருக்க வேண்டுமென்று என் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க, அவர், இதை நீங்கள் முன்னமே ஏன் சொல்லவில்லை என்று கேட்டார், அதற்கு நான் உடனே, நீங்கள் முன்பு என்னைக் கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன், என்றேன். “நீங்கள் சொல்வது சரிதான், ஆயினும் இப்பொழுது இதை மாற்ற முடியாது, அவகாசமில்லை, ஷூட்டிங்கை யெல்லாம் நிறுத்தி வைக்க வேண்டும், அது கஷ்டம்’ என்றார். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன், பிறகு உங்களிஷ்டம்” என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டேன்.
அதற்கப்புறம், டிசம்பர் மாதம் முதலில் நான் புருஷோத் தமனாக வரும் காட்சிகள் ஆரம்பிக்கும் வரையில், ஷூட்டிங் நடக்கும் பொழுது நான் ஸ்டூடியோவுக்குப் போகாது நின்று விட்டேன்.
நடிகர்களும் நடிகைகளும் மாத்திரம் அன்றாடம், டைரெக்டர் கதையை யெல்லாம் மாற்றிவிடுகிறார், நாங்கள் கற்ற நடிப்பை யெல்லாம் விட்டு வேறு மாதிரியாக நடிக்கச் சொல்லுகிறார், நாங்கள் கற்ற பாட்டுகளையும் மாற்றி விடுகிறார்,” என்று என்னிடம் முறையிடுவார்கள்; அவர்களுக் கெல்லாம், “கதையை என் அனுமதியின்றி மாற்றக்கூடாது என்று ஏற்பாடு செய்து கொள்ளாதது என் தவறு; இனி இதைப்பற்றி நான் பிரவேசிக்க முடியாது, நீங்கள் வேண்டு மென்றால் முதலாளிகளிடம் போய் முறையிடுங்கள், என்று பதில் சொன்னேன். அவர்களெல்லாம், ஏறக்குறைய ஒருவர் தவறாது எல்லோரும் முறையிட்டும், முதலாளிகள் நம்பிக்கையினாலோ, அல்லது டைரெக்டரிடமிருந்த அவரிடமிருந்த பயத்தினாலோ, இவர்கள் சொன்னதை ஒன்றும் கவனிக்கவில்லை.
ஒரு முறை மாத்திரம் இதில் பிரவேசிப்பதில்லை என்னும் என் தீர்மானத்தினின்றும் மாறினேன். ஒரு நாள் பத்மாவதி வேடம் பூண்ட சாரதாம்பாள், என்னிடம் வந்து “இது என்ன ஐயா! மனோகரனை யுத்தத்திற்கனுப்பும் காட்சியில், என்னைத் தலைமயிரை விரித்துப்போட்டுக் கொண்டு நடிக்கும்படி சொல்கிறார் டைரெக்டர்! இதென்ன அநியாயமாயிருக்கிறது! இந்த பத்மாவதி வேடத்தில் என் தாயார் பல முறை நடித்திருக்கிறார்கள். நானும் பலர் நடித்ததைப் பார்த்திருக்கிறேன். தலை மயிரை விரித்துப் போட்டுக் கொண்டு, இக்காட்சியில் துக்கித்த பத்மாவதியை நான் பார்த்ததேயில்லை. நீங்கள் எப்படியாவது இதைத் தடுக்கவேண்டும்,” என்று மிக்க வருத்தத்துடன் என்னிடம் வந்து முறையிட, மனம் பொறாதவனாய், முதலாளிகளிருந்த அறைக்குப் போய் அவர்களிடம், என் மனதிலிருந்ததை யெல்லாம் கொட்டியளந்தேன். இது நாம் வாழும் தென் இந்தியாவில் நடந்த கதையாக எழுதப்பட்டிருக்கிறது; அங்கு எங்காவது ஒரு சுமங்கிலி, தன் பிள்ளையை ஊருக்கு அனுப்புவதானால், தலை மயிரை விரித்துப்போட்டுக் கொண்டு அனுப்பும் வழக்கம் உண்டா? நம்முடைய நாட்டில் சுமங்கிலியான ஒரு ஸ்திரீ, தன் கணவன் அல்லது நெருங்கிய பந்துயாராவது, இறந்தால்தான், தலை மயிரை விரித்துப் போட்டுக் கொண்டு துக்கிப்பாள். கதாநாயகியாகிய பத்மாவதியோ மிகவும் திடமான சித்தமுடையவள், நான் எழுதிய கதையில் ‘இறந்தாலுமென்? சுத்த வீரனா யுத்தத்தில் இறந்தான் மனோஹரன் என்னும் கீர்த்தி என்றும் நிலைத்திருக்குமல்லவா?’ என்று தன் மருமகளுடன் கூறுவதாக யுத்தத்திற்கு ஜெயம்பெற்று வரும்படி ஆசீர்வாதம் கூறியனுப்பும் சமயத்தில், தலையை விரித்துப் போட்டுக்கொண்டு துக்கிப்பாளா? இது முற்றிலும் தவறாகும். இப்பொழுதே சொன்னேன். பிறகு இப்படம் சென்னையில் காட்டப்படும் பொழுது பார்க்கும் ஜனங்களெல்லாம் பூனாவிலிருக்கும் டைரெக்டரையும் தூற்ற மாட்டார்கள், கோயமுத்தூரிலிருக்கும் உங்களையும் கேட்க மாட்டார்கள்; இப்படி நடிக்கும்படி எப்படி விட்டாய்? என்று என்னைத்தான் கேட்பார்கள்! பிறகு இதற்கு நான் உத்தரவாதமல்லவென்று உண்மையைக் கூறவேண்டி வரும். அன்றியும் இப்படி டைரெக்டர் சொற்படி மாற்றிக் கொண்டு போனால், உங்கள் படம் தமிழ்நாட்டில் சோபிக்கவே சோபிக்காது’ என்று கோபத்துடனும் மனவருத்தத்துடனும் மொழிந்தேன். அப்படிச் செய்தும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாய் முடிந்தது.
சுமார் டிசம்பர் மாதம் முதலில், நான் நடிக்கவேண்டிய காட்சிகள் எடுக்க ஆரம்பிக்கப்பட்டன. எனக்கு என்ன மனஸ்தாபமிருந்த போதிலும் ஒப்பந்தப்படி நான் புருஷோத்தமனாக நடிக்கவேண்டியது என்கடமை யென்றெண்ணி நடிக்க ஆரம்பித்தேன்.
எனக்காக டைரெக்டர் ஏற்படுத்திய உடை மிகவும் பொருந்தியதாயும் அழகாயும் இருந்ததென நான் ஒப்புக் கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். அவர் மீது சில குறைகள் நான் எடுத்துக்கூறிய போதிலும், அவரிடமுள்ள நற் குணங்களையும் எடுத்துக்கூறக் கடமைப் பட்டிருக் கிறேன். இவர் டைரெக்டராகுமுன் சித்திரம் வரைவதில் தேர்ச்சி பெற்றிருந்தவராம். அக்கலையில் தேர்ச்சியடைந்தது, பேசும் படத்தில் நாடக பாத்திரங்களுக்குத் தக்க உடைகளை செய்விப்பதிலும், காட்சிகள் நிர்மாணிப்பதிலும், மிகவும் உபயோகப்பட்டது. மேற் கண்டபடி விதூஷகன் ஒருவனுக்குத் தவிர, மற்றவர்களுக்கெல்லாம் இவர் நியமித்த உடைகள் மிகவும் பொருந்தினவையாயிருந்தன. உடைய மைப்பில், இதுவரையில் நான் பார்த்த தமிழ் பேசும் படங் களுக்கெல்லாம் இதுவே சிறந்ததாயிருந்தது. உடைகளைப் பற்றியும் காட்சிகளின் அமைப்பைப் பற்றியும் பிறகு இப்படத்தைப் பார்த்த பலர் மிகவும் புகழ்ந்து பேசியதை நான் கேட்டிருக்கிறேன். இதில் நடிகர்களுக்கு டைரெக்டர் ஏற்படுத்திய உடையைப் போல், இதற்குப் பிறகு எடுத்த பேசும் படக்காரர்கள், பலர் காபி (Copy) செய்ததை நான் அறிவேன்.
ஆயினும் இந்த உடை விஷயத்திலும் அவருக்கும் எனக்கும் ஒரு விதத்திலும் தர்க்கம் நேரிட்டது. இப் பேசும் படத்தில் முதல் காட்சி, புதிதாய் இதற்கென்று என்னால் எழுதப்பட்டது. அக்காட்சி, பத்மாவதி மனோஹரன் ஐந்து வயது குழந்தையாயிருக்கும் பொழுது, புருஷோத்தமன் வசந்தசேனையின் வலைக்குட்பட்டதைக் கண்டு பிடித்து, இனி தன் புருஷனைப் பார்ப்பதில்லை என்று சபதம் செய்யும் காட்சியாம். இக்காட்சியில் புருஷோத்தமனான நான் சுமார் 23 அல்லது 24 வயதுடையவனாய்த் தோன்ற வேண்டி வந்தது. அதற்குத் தக்கபடி கறுப்பு டோபா வொன்றை எனக்கு ஏற்படுத்தி யிருந்தார்கள். பிறகு வரும் காட்சிகள் இதற்குப் பதினெட்டு வருடம் கழித்தனவாம். ஆகவே அப்பொழுது புருஷோத்தமனுக்கு வயது சுமார் 41 அல்லது 42 இருக்கவேண்டும். இக்காட்சியில் நடிக்க வேண்டி வந்தபொழுது, எங்கள் டைரெக்டர் நான் நரைத்த டோபாவைப் போட்டுக்கொள்ள வேண்டுமென்று, ஒன்றை ஏற்பாடு செய்தார். இதற்கு நான் ஆட்சேபித்து, “நியாயமாயிருந்தால் மேடையில் முற்றிலும் வெண்மையான டோபாவைப் போட்டுக்கொண்டு பல வயோதிக வேடங்களை நான் நடித்திருக்கிறேன். ஆயினும் சுமார் 42 வயதுடைய புருஷோத்தமன் கிழவனன்று,” என்று எவ்வளவு கூறியும் டைரெக்டர் கேட்கவில்லை. இதற்காக என் 46 ஆம் வயதில் எடுத்த புகைப்படமொன்றை சென்னையிலிருந்து வரவழைத்து அதில், அவ்வயதில் எனக்கு ஒரு கேசமும் நரைக்க வில்லை என்பதை ரூபித்துக் காட்டினேன். அன்றியும் 40 வருடங்களாக தென் இந்தியா நாடகமேடையில் புருஷோத்தமராஜன் வேடம் பூண்டவர்களில் ஒருவனாவது நரைத்த கேசத்துடன் தோன்றியதில்லை என்பதையும் எடுத்துக் காட்டினேன். என்ன சொல்லியும் டைரெக்டர் ஒப்பாதபடியால் அவர் நியமித்த டோபாவையே போட்டுக்கொண்டு நடித்தேன். அன்றியும் அந்த நரைத்த டோபாவுக்குத் தக்கபடி என் மூகத்தில், இருப்பதைவிட, அதிக வயதைக் குறிக்கும் கோட்டு வரிகளைத் தீட்டவேண்டி வந்தது! “உங்களுக்கு இயற்கையிலேயே வயதாயிருக்கிறது, இன்னும் அதிக “வயதாகத் தோன்றும்படியாக உங்களுக்கு யார் வேஷம் போட்டது?” என்று கோயமுத்தூரிலும், சென்னையிலும் பிறகு இப்படத்தைப் பார்த்தவர்கள், பலர் என்னைக் கேட்டனர். அவர்களுக்கெல்லாம் மேற் கூறியதைத் தெரிவித்து, இது எங்கள் டைரெக்டருடைய பிடிவாதத்தின் பலன் என்று கூறினேன். தமிழ் பாஷை தெரியாது, இந்த தமிழ் கதையையும் நன்றாயறியாத டைரெக்டரின் கீழ் நடிக்க வேண்டிவந்த விதியின் பலனாம் இது! இனியாவது தமிழ் பேசும் படங்களை எடுப்பவர்கள், தமிழ் நன்றாயறிந்த டைரெக்டர்களை ஏற்படுத்திக் கொள்வார்களாக!
டிசம்பர் மாதம் முதல் வாரம் வரையில், இந்த டைரெக்டர் எடுத்த பேசும் படம், கதையில் நான்கில் ஒரு பங்காம். இதற்கு மூன்று மாதங்கள் பிடித்தன! இதற்குள் எல்லா நடிகர்களும் நடிகைகளும், “எங்களுக்கு ஏற்படுத்திய காலம் கடந்துவிட்டது, வேறு ஒப்பந்தம் செய்தாலொழிய நாங்கள் நடிக்க மாட்டோம்” என்று சொல்லத் தொடங்கினர்! முதலாளிகள் அவர்களுக்கெல்லாம் ஏறக்குறைய முன்பு பேசிய ஊதியத்தை மறுபடியும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. இதன்பேரில் முதலாளிகள் விழித்துக் கொண்டு என்னிடம் வந்து, இதுவரையில் எத்தனை காட்சிகள் எடுத்தாயிற்று, இன்னும் எடுக்க வேண்டிய காட்சிகள் எத்தனையிருந்தன என்று கேட்டனர்; அதற்கு நான் இதுவரையில் எடுத்தது கால்பாகமாம் இன்னும் முக்கால் பாகமிருக்கிறது என்று கூறினேன். அன்றியும் “நான் பம்பாய் வந்து மூன்று மாதங்களாய் விட்டன; நான் டிசம்பர் மாதம் 24 ந் தேதி சென்னையில் போய்ச் சேரவேண்டும்” என்று தெரிவித்தேன். இதைக் கேட்டவுடன் பயந்தவர்களாய் பிலிம் சிடி புரொப்ரைடர் பசுல்பாயிடம் (Fazulbhoy) போய் முறையிட்டனராம். அவர் மகாராஷ்டிர டைரெக்டரை, வரவழைத்து இப்பேசும்படத்தை முடிக்க உனக்கு இன்னும் எத்தனை நாள் பிடிக்கும் என்று கேட்க, இன்னும் ஆறுமாதம் பிடிக்குமென்று அவர் விடை பகர்ந்தனராம்!
அதன் மீது, இந்த டைரெக்டர் எங்களுக்கு உதவாது, வேறு டைரெக்டரை ஏற்பாடு செய்யுங்கள் என்று முதலாளிகள் முறையிட, பசுல்பாய் என்பவர், காபூலி சாஹெப் என்பவரை டைரெக்டராக ஏற்பாடு செய்தனர்.
இவர்தான் மனோஹரன் கதையின் பின்பாகத்தை யெல்லாம் பேசும்பட மெடுத்து முடித்தவர். ஆகவே இவரைப் பற்றி கொஞ்சம் விஸ்தாரமாக எழுதவிரும்புகிறேன்.
இவர் காபூல் நகரத்தவர், ஆகவே இவருக்கு காபூலி சாஹெப் என்று பெயர் வழங்கலாயிற்று. இவரது முழுப் பெயர் எனக்குத் தெரியாது; இவர் ஒரு நாடக கம்பெனி வைத்து அதில் பல வருடங்களாக நடித்து வந்தவராம்; பேசும் படக்காட்சிகள் வந்த பிறகு, அவைகளிலும் நடிக்க ஆரம்பித்து, டைரெக்ட் செய்யவும் கற்றுக் கொண்டனர்; ஹாஸ்ய பாகங்களில் நடிப்பதில் மிகவும் நிபுணர்,ஆங்கிலம் சுமாராகப் பேசத் தெரிந்தவர், ஆனால் தமிழ் பாஷை முற்றிலும் தெரியாது; தமிழில் பேசினால், ‘குடு குடு ஜில்லா, கடுபிடி ஜில்லான்! முதலியார், இதென்ன பாஷை?” என்று ஆங்கிலத்தில் ஏளனம் செய்வார். இவர் நடிகரைப் பலவருடங்கள் பழக்கி யிருந்தபடியால், ஆக்டர்களுக் கெல்லாம் இப்படி இப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுக்கும் திறமைவாய்ந்தவர்; முக்கியமாக ஹாஸ்யப் பாத்திரங்களுக்கு மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொடுத்தார்.
இவர் ஒர் இரவு என்னிடமிருந்து கதை முழுவதையும் கேட்டுக் கொண்டார், மறுநாள் அதுவரையில் எடுத்த பேசும் படத்தை யெல்லாம் ஸ்கிரீனில் (Screen) பார்வையிட்டு விட்டு, டிசம்பர் மாதம் 24 ஆம் தேதிக்குள் ஒப்புக் கொண்டார். சொல்லியவண்ணமே அத்தேதிக்குள், ஏறக்குறைய முக்கால் பாகத்தை விரைவில் எடுத்தார். தானே சில பேசும் படங்களில் நடித்திருந்தபடியாலும், சில பேசும் படங்களை டைரெக்ட் செய்திருந்தபடியாலும், இவர் தன் வேலையை சுறுசுறுப்பாகச் செய்தார் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இவரது வேலைத்திறத்திற்கும் முன்பிருந்த டைரெக்டர் வேலைத்திறத்திற்கும், வித்யாசம் பார்க்க வேண்டுமென்றால், இப்பேசும் படத்தில் முன் பகுதிக்கும் பின்பகுதிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்தால் போதும்; முக்கியமாக முதல் தர்பார் காட்சியிலும், வசந்தசேனை மடியும் காட்சியிலும், புருஷோத்தமன் பத்மாவதியிடம் விடைபெற்றுச் செல்லும் காட்சியிலும், யுத்த காட்சிகளிலும், இவர் தனக்குள்ள படமெடுக்கும் திறத்தை நன்றாய்க் காட்டியுள்ளார். ஆயினும் சங்கிலி யறுக்கும் காட்சியை மாத்திரம் இவர் சரியாக எடுக்கவில்லை யென்பது என் அபிப்பிராயம். அதைப்பற்றி பிறகு எழுதுகிறேன். இவர் மாத்திரம், முதலிலிருந்து டைரெக்ட் செய்திருப்பாரானால், இப்பேசும்படம், இரண்டு மாதத்திற்குள் முடிந்து, செலவும் அதிகமில்லாமல், பார்ப்பவர் மனதை கவர்ந்து, முதலாளிகளுக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கும், என்பது என் அபிப்பிராயம்.
சங்கிலியருக்கும் காட்சியானது சரியாக எடுக்கப்பட வில்லை என்று நான் மேலே கூறியதற்கு இனி காரணம் சொல்லுகிறேன்.
மனோஹரன் கதையில் இக்காட்சிதான் மிகவும் முக்கியமான காட்சி; இதில் வீர ரசமும் சோக ரசமும் நிறைந்திருக்கிற தென்பது இக்கதையைப் படித்தவர்களுக்கும், நாடக ரூபமாய்ப் பார்த்தவர்களுக்கும், நன்றாய்த் தெரியும். இந்நாடகத்தில் நான் மனோஹரனாக நடித்து பெயர்பெற்றதெல்லாம் ஏறக்குறைய இக்காட்சியில் நடித்த திறத்தினாலேயே யென்று சொல்லவேண்டும். சாதாரணமாக, ஜுவனோபாயத்திற்காக நாடகம் நடிப்பவர்கள், இக்கதையைப் போடும் போதெல்லாம், பெரும்பாலரான ஜனங்கள் இக்காட்சி எப்பொழுது வருகிறதென காத்திருந்து, இக்காட்சி முடியும் வரையில் பார்த்து விட்டு, நாடகசாலையை விட்டுப் போய் விடுவார்கள்.
இக்காட்சியின் பிரா தான்யம் எங்கள் இரண்டாவது டைரெக்டருக்கு எக்காரணத்தினாலோ மன்தில் நன்றாய்ப் படவில்லை போலும்; இக்காட்சியைப் படம் எடுக்கவேண்டிய தினம், மனோஹரன் வேஷதாரியை, இரண்டு மெல்லிய சங்கிலிகளை மார்பில் கோர்த்து, பக்கத்தில் அவரைப் பிடித்துக்கொள்ளவும் சேவகர்களின்றி, புருஷோத்தமன் தர்பாருக்கு எதிரில் நிறுத்திவைத்தார்! ஏதோ சிறு விலங்கில் பூட்டப் பட்டகைதியைப் போல் தோன்றினான் மனோஹரன். இதைக் கண்டதும் என் பக்கத்திலிருந்த நடிகர்களும் நடிகைகளும், இதென்ன இப்படி ஆபாசமாயிருக்கிறதேயென உரக்கப் பேசினார்கள். மனோஹரன் வேடம் பூண்டவரும் என்னிடம் வந்து முறையிட்டனர். இப்படி நடித்தால் நான் இந்த நாடகத்தில் பெற்ற பெயர் போகுமென்று எனக்கும் மனம் தாளவில்லை. இக்காட்சி கெட்டு போனால் படமே கெட்டுப் போகுமே யென்று வருந்தினேன். உடனே முதலாளிகளில் ஒருவரை அழைத்து, இக்காட்சியில் இப்படி படம் எடுக்கக் கூடாது, இதுசரியல்ல, இது மிகவும் முக்கியமான காட்சி இக் கதையிலேயே, இது கெட்டால் உங்கள் படமே சோபிக்காது, என்று கூறி, இதை இப்படி இப்படி எடுக்க வேண்டுமென்று விவரமாய்க் கூறினேன், அதன் பேரில் அவரும் நான் சொன்னது சரியென்று ஒப்புக்கொண்ட போதிலும் டைரெக்டரிடம் இதைக் கூற பயந்தவராய், “நீங்களே அவரிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று என்னை வேண்டினார். இவ்விஷயத்தில் நாம் பிரவேசிக்கக் கூடாது என்று நான் தீர்மானித்திருந்த போதிலும்,”சரி, நமது அபிப்பிராயத்தை சொல்லிப் பார்ப்போம், அதை அவர் எடுத்துக்கொள்ளாவிட்டால் அவர் பாடு!” என்று யோசித்து, டைரெக்டரிடம் போய், – ஆங்கிலத்தில்- “நான் உங்கள் வேலையில் என் தலையை நுழைத்துக்கொள்கிறேன் என்று எண்ண வேண்டாம். இக்கதை இதுவரையில் சென்னை ராஜதானியில் ஆயிரம் முறைக்குமேல் ஆடப்பட்டிருக்கிறது, இம்மாதிரியாக இக்காட்சியை ஒருவரும் ஆடினதில்லை. பிறகு நாடகக் கதையைப் பார்த்தவர்களெல்லாம், இது என்ன இப்படி யிருக்கிறதே என்று குறை கூறுவார்கள். இந்த வேடத்தை நானும் 50 முறை பூண்டிருக்கிறேன். இக்காட்சியில் மனோஹரன் வேறு மாதிரி நடிக்க வேண்டும்” என்று நயமாய்க் கூறினேன். அவர் சற்று கோபம் கொண்டு “ஆனால் இதை எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி நடித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்!” என்று சொன்னார். உடனே, மனோஹரனுக்கு பூட்டியிருந்த சிறு (நாய்) சங்கிலியை எடுத்து எறிந்து விட்டு, ஸ்டூடியோவில், ஊஞ்சல் சீனுக்காக வைத்திருந்த நான்கு பெரிய இரும்புச் சங்கிலிகளைக் கொண்டு வரச்சொல்லி, அவைகளால் மனோகஹரனைக் கட்டி, அவற்றின் முனைகளை நான்கு ஜவான்களைக் கொண்டு பிடித்துக்கொள்ளச் செய்தேன். இதைக் கண்டதும், ஓகோ இதில் ஏதோ இருக்கிறதெனக் கண்டவராயினும், அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கக் கூடாதென்று நினைத்தனராய், “ஆனால் இதை எப்படி அறுப்பது?” என்று கேட்டார். அதன் பேரில், புருஷோத்தம ராஜன் ‘நீ என் மகனா?’ என்று மனோஹரனைக் கேட்கும் பொழுது, கோபாவேசத்துடன் அச்சங்கிலிகளையெல்லாம் ஒரு ஜிம்பலில் அறுப்பது போல், அறுத்து கீழே தெறித்து விழும்படியாக, நான் நடிக்கும் போதெல்லாம் செய்த சூழ்ச்சியை, நடித்துக் காண்பித்தேன். இருந்தவர்களெல்லாம் இது தான் சரியென்று பேசிக்கொள்ள, அதன் பேரில் எங்கள் டைரெக்டர் “ஆமாம் இதை முன்பே நான் அறிந்திருந்தால் வேறு மாதிரி ஏற்பாடுகள் செய்திருப்பேன். இப்பொழுது, அதையெல்லாம் செய்வதற்கு அவகாசமில்லை,” என்று என்னுடன் கூறி, மனோஹரனை ஒருவிதமாக நடிக்கச் செய்து இக்காட்சியைப் படமெடுத்தார்.
அன்றியும் இங்கு மனோஹரன் வீரா வேசங்கொண்டு பேசும் வார்த்தைகள், ஆதியில் நான் புஸ்தகத்தை அச்சிட்ட பொழுது சுமாராக 100 வரிகள் இருந்தன. பிறகு நடிக்கும் பொழுது, அதைக் குறைத்து 50 அல்லது 60 வரிகளாக்கினேன். பம்பாயில் டைரெக்டர் அவ்வரிகளின் மகிமை அறியாததினாலோ, எக்காரணத்தினாலோ, நான்கு ஐந்து வரிகளாகக் குறுக்கினர்! இதையறிந்து மனோகரன் ஆக்டர் என்னிடம் வந்து முன்பே முறையிட்டிருந்தனர்; இதைக் கேட்டவுடன் “என்னடா இது, ஒவ்வொரு விஷயத்திலும் டைரெக்டருடன் சச்சர விடுவதா?” என்று கவலைப்பட்ட வனாயினும், எனது நண்பர் செல்லம் அவர்கள் வற்புறுத்துதலுக்கிசைந்து, இதைப்பற்றி டைரெக்டரிடம் பேசினேன். அவர் முதலில் அவ்வளவு நிகளமாகக் கூடவே கூடாதென்று கூறியபோதிலும், கடைசியில் சுமார் 20, 25 வரிகளாவது பேச இடங் கொடுத்தார்! இதன் பேரில் தன் எண்ணப்படியே பேசி நடிப்பதற்கில்லையே யென்று செல்லம், மனம் தளர்ந்தவராய், முக்கியமான இக்காட்சியில் ஏதோ ஒருவாராய்த்தான் நடித்தனர் என்று நான் கூற வேண்டும்.
மனோஹரன் நாடகமானது சென்னை ராஜதானியில் நடிக்கப்படும் போதெல்லாம் இக்காட்சியைப் பார்க்கும் ஜனங்கள் எவ்வளவு குதூகலத்துடன் கவனித்து களிப்புறு கின்றனர் என்பதை இப்புதிய டைரெக்டர் பார்த்தனு பவித்திருப்பாராயின், இக்காட்சியில் மனோஹரன் வசனத்தையும் நடிப்பையும் மழுங்கச் செய்திரார் என்பது திண்ணம். இது புத்திசாலியான இந்த இரண்டாவது டைரெக்டருடைய குற்றமன்று, அவர் தமிழ் அறியாக் குறையின் பலனேயாம்.
இக்காட்சியில் இந்த டைரெக்டருக்கும் எனக்கும் நடந்த ஒரு சிறு வாக்குவாதத்தை இங்கு எழுத வேண்டியவனாயி ருக்கிறேன். இக்காட்சியில், மனோஹரன் தன் தகப்பனாரின் தலையை வெட்ட வாளை ஓங்கும் தருணத்தில், பத்மாவதி திடீரென்று விரைந்து வந்து, அதைத் தடுக்கிறாள். நாடகத்தில் தன் முகம் தன் கணவனுக்கும் தெரியக்கூடாதென்று முக்காடிட்டுக் கொண்டு வந்த பத்மாவதியின் முக்காடு, அவள் வந்த வேகத்தில் விலகுவதாகவும், 18 வருடங்களுக்கப்பால், புருஷோத்தமன் அன்றுதான் அவள் முகத்தைப் பார்க்க நேரிடுகிறதெனவும் கண்டிருக்கிறது. இதைப் படம் பிடிக்க நேரிட்ட சமயம், புதிய டைரெக்டர், இது அசாத்தியமான காரியம், முக்காடு தானாக விழச் செய்ய முடியாதென்று ஆட்சேபித்தார். அதன் பேரில் அப்படித் தான் இக்காட்சி அநேகதரம் நடிகர்களால் நடிக்கப் பட்டிருக்கிறதெனச் சொல்லவேண்டி வந்தது. இதைக் கேட்டு அவர் கோபங் கொண்டு “நான் இருபத்தைந்து வருடங்களாக ஆக்டர் ஆக யிருக்கிறேன் எனக்கு இவர், இதைக் கற்றுக் கொடுக்கப்போகிறாரோ?” என்று இந்துஸ்தானியில் தன் சிநேகிதர்களுக்குச் சொன்னார். இந்துஸ்தானி பாஷை கொஞ்சம் நான் கற்றவன் என்பதை அவர் அறியவில்லை; உடனே நான் என் கோபத்தை அடக்கிக்கொண்டு, ஆங்கிலத்தில் அவரிடம், “நீங்கள் 25 வருடம் ஆக்டராக இருந்தது உண்மையாயிருக்கலாம், நான் 44 வருடங்களுக்கு மேல் ஆக்டராயிருந்திருக்கிறேன், இது எப்படி முடியும் என்று செய்து காட்டச் சொன்னால் செய்யச் சித்தமாயிருக்கிறேன்” என்றேன். “ஆனால் நீர் செய்து காட்டும் பார்ப்போம்” என்றார். “அப்படிக் கேட்பதானால், ஆகட்டும்” என்று சொல்லி, பத்மாவதிக்கு ஏற்படுத்தியிருந்த முக்காடு பட்டாடையை எடுத்து நான் முக்காடிட்டுக் கொண்டு, வேகமாய் வந்து மனோஹரன் கையைத் தடுக்கும் பொழுது, அம்முக்காடு அகஸ்மாத்தாய் விழுவது போல் விழச்செய்தேன். இது எனக்கு ஒரு கஷ்டமாயில்லை; பலதரம் என்னுடன் பத்மாவதியாக நடித்த ஆக்டர்களுக்கு இதன் சூட்சமத்தை கற்பித்திருந்த படியால் எனக்கு சுலபமாயிருந்தது. இதன் மீது மனம் பொறாதவராய் “நீங்கள் செய்யலாம், பத்மாவதி நடிகையைச் செய்து காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார். அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, பத்மாவதியாக நடித்த சாரதாம்பாளுக்கு நான் செய்தபடி செய்யும்படிச் சொன்னேன். அந்தம்மாளும் சூட்சமத்தை யறிந்து அப்படியே செய்யவே, டைரெக்டருக்கு கோபம் அதிகரித்தது. ”ஆனால், இதை நீங்களே டைரெக்ட் செய்யுங்கள்!” என்று இரைந்து மொழிந்துவிட்டு ஒருபுறம் போய் உட்கார்ந்தார். நான் அதற்கு “எனக்கு டைரெக்ட் செய்யத் தெரியாது என்று எண்ண வேண்டாம்; முன்பே கல்கத்தாவில் ஒரு தமிழ் பேசும் படத்தை நான் டைரெக்ட் செய்திருக்கிறேன். நான் புருஷோத்தமனாக நடித்துக் கொண்டே இக்கதையை டைரெக்ட் செய்வதென்றால், வயது முதிர்ந்த எனக்கு கஷ்டமாயிருக்கிறதென்றே முதலாளிகள் வேண்டுகோளுக்கு நான் இணங்கவில்லை” என்று நானும் கொஞ்சம் கோபத்துடன் மொழிந்தேன். அதன்பேரில், அங்கிருந்த முதலாளிகள், இருவரையும் சமாதானப் படுத்தினர். அது அவர் வரையில், நான் நாடக கர்த்தாவென்பதை அறிந்திருந்தனரே யொழிய நான் ஏதோ கொஞ்சம் பெயர் பெற்ற நடிகன் என்பதை அப்பொழுதுதான் அவருக்கு என் நண்பர்கள் தெரியப்படுத்தினர். அது முதல் என் நடிப்பைப் பற்றி என் இச்சைப்படி செய்ய விட்டனர். பிறகு அன்று நடந்ததை மறந்து இருவர்களும் சிநேகிதர்கள் ஆனோம் என்றே சொல்ல வேண்டும்.
இந்த இரண்டாவது டைரெக்டர் டிசம்பர் மாதம் 20 தேதிக்குள், முதல் டைரெக்டர் இரண்டு மாதமாக எடுத்ததை விட, இரண்டு பங்கு அதிகம் படம் எடுத்தார்; விரைவாயெடுத்தது மன்றி, மிகவும் புத்தி சாதுர்யத்துடன் எடுத்தார். அன்றியும், இவர் ஒவ்வொரு நடிகருக்கும். நடிகைக்கும் இப்படி இப்படி நடிக்க வேண்டுமென்று அநேக இடங்களில் மிகவும் புத்தி சாதுர்யமாகக் கற்பித்தார்.
இவர் எடுத்த பேசும் படத்தில் ஒரு முக்கியமான காட்சி, புருஷோத்தமன் பத்மாவதியிடம் திரைக்கு வெளியிலிருந்து விடைபெற்று, யுத்தத்திற்குப் போகும் காட்சியாம். இதை மிகவும் கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்து, மிகவும் விமரிசையாக எடுத்தார் என்று நான் கூறவேண்டும். புரு ஷோத்தமன் திரையைக் கிழித்து அதன் வழியாக நீட்டப்பட்ட பத்மாவதியின் கரத்திற்கு முத்தமிடும் ஒரு சந்தர்ப்பத்திற்கு,பதினொன்று ஷாட்டுகள் அதிக புத்தி சாதுர்யமாய் எடுத்தார். மற்ற பாகங்களையும் நடிகர்களுக்கு அதிக கஷ்டம் கொடுக்காமலும், காலவிரய மில்லாமலும், பிலிம்கள் அதிகமாக வியர்த்தமாகாமலும் எடுத்தார். இவ் விஷயங்களில் மற்ற டைரெக்டர்கள் இவரிடமிருந்து பல விஷயங்கள் கற்கக்கூடும். ஸ்தூல சரீர முடையவராயிருந்த போதிலும் தன் தேக சிரமத்தைப் பாராமல் உழைத்து வந்தார்.
யுத்தக் காட்சிகள் தவிர ஏறக்குறைய நான் வரவேண்டிய காட்சிகளெல்லாம் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதிக்குள், எடுக்கப்பட்டன. ஆகவே நான் கோரியபடி முதலாளிகள் என்னை சென்னைக்கு 23 ஆம் தேதி அனுப்பினர். பீபில்ஸ்பார்க் சவுத் இண்டியன் அசோசி யேஷன் நடத்தும் பார்க்பேர் (Park-Fair) வேடிக்கைக்காக, அந்த சொசைட்டியின் ஒரு வைஸ் பிரசிடெண்டாய் நான் இருந்தபடியால், இங்கு 24 ஆம் தேதி வரவேண்டியதாயிற்று. இங்கு 10 நாள் தங்கியிருந்து, மறுபடியும் பம்பாய் போய்ச் சேர்ந்தேன். இதற்குள்ளாக நான் வராத சில மிகுதியான காட்சிகளை யெல்லாம், பூர்த்தி செய்திருந்தனர். நான் திரும்பிப் போன பிறகு யுத்த காட்சிகள் எடுக்கப்பட்டன.
இந்தியாவில் பேசும் படங்களில் எடுக்கப்பட்ட எல்லா யுத்தக் காட்சிகளை விட, இக்கதையில் எங்கள் இரண்டாவது டைரெக்டர், காபூலி சாயபு அவர்கள் எடுத்தவையே மிகவும் மேலானவை என்பது என் சொந்த அபிப்பிராயம்.
பம்பாய்க்கு சில மயிலருகாமையில் மாஹிம் எனும் ஓர் சிற்றூரில், ஒரு சிறு கோட்டையிருக்கிறது; இது மஹாராஷ் டிரர்களால் கட்டப்பட்டதெனத் தோன்றுகிறது. இது கொஞ்சம் பாழடைந்திருந்த போதிலும், பார்வைக்கு அழகா யிருக்கிறது. முக்கியமாக ஒரு புறம் மதில் சுவர் சமுத்திரக் கரையோரம் இருக்கிறது. ஒரு தினம் இதைப் போய்ப் பார்த்து இது தக்க இடம் என்று எல்லோருமாகத் தீர்மானித்தோம். யுத்தம் செய்ய வேண்டிய சேவகர்களுக்கெல்லாம் ஆடைகள் சித்தமானவுடன், கவர்ன்மென்ட் உத்திரவைப் பெற்று, ஒரு நாள் இங்கு யுத்தக் காட்சிகளை யெல்லாம் இக்கோட்டையிலேயே எடுக்கத் தீர்மானித்தோம். அதிகாலையில் எழுந்து, வேடம் பூண்டு, மோடார் கார்களில் அவ்விடம் போய்ச் சேர்ந்தோம். வேடத்துடன் திறந்திருக்கும் மோட்டார் வண்டியில் பல மயில் தூரம் போவதென்றால் எனக்குக் கொஞ்சம் சங்கோசமாய்த்தானிருந்தது. அப்படி சென்னையில் செய்திருப்பேனாயின் ஜனக் கூட்டமானது பரிஹாசத்துடன் பின் தொடர்ந்திருக்கும்; பம்பாயில் இது சாதாரணமாகிப் போனபடியால், இதை அதிகமாகக் கவனிப் பாரேயில்லை! சண்டை செய்ய வேண்டிய நூற்றுக் கணக்கான நடிகர்கள் முன்பே அங்கு வேடம் பூண்டு வந்து சேர்ந்திருந்தனர். எட்டு மணிக்கெல்லாம் ஷுடிங் ஆரம்பித்தார்கள். இதில் முக்கியமாக நான் எடுத்துக் கூறவேண்டிய விஷயம் ஒன்றுண்டு. சமுத்திரக் கரையோரம் அக் கோட்டை யிருந்தபடியால், எங்கள் காபூலி சாயபு டைரெக்டர், மிகுந்த புத்தி சாதுர்யமாய் கதையைச் சிறிது மாற்றி, சோழ சைனியங்கள் கப்பல்களின் மீது வந்து அங்கு இறங்குவதாக ஏற்படுத்தி, அங்கிருந்த கப்பல்களின் மீது சைனியங்களையும் எங்களையும் ஏற்றி, அக் கோட்டையைத் தாக்குவது போல் ஏற்பாடு செய்து, படம் பிடித்தார்;
இது மிகவும் மெச்சத்தக்கதாம். சைனியங் களெல்லாம் தண்ணீரில் குதித்து நீந்திக்கொண்டு போய்க் கோட்டையைத் தாக்குவது மிகவும் அழகாக எடுக்கப் பட்டது. பிறகு இப்பேசும் படத்தைப் பார்த்தவர்களெல்லாம் இந்த பாகத்தை மிகவும் புகழ்ந்தனர் என்று கூறுவது மிகையாகாது. இதற்காக எங்கள் இரண்டாவது டைரெக்டருக்கு என் மனமார்ந்த வந்தனத்தை அளிக்க வேண்டியவனாயிருக்கிறேன். முக்கியமாக கதையின் போக்கை மாற்றாது, இக்காட்சியை அழகுறச் செய்தது சிலாகிக்கத் தக்கது. இவ்வாறு கதையின் போக்கை மாற்றாது, கதையை ஆதியோடந்தமாக முழுவதும் ஒட்டி மாற்றியி ருந்தால், படம் மிகுந்த நற்பெயரெடுத்திருக்கும் என்பது என் துணிவு. கதையின் போக்கைத் தழுவாது மாற்றிய ஒரு சந்தர்ப்பத்தை எடுத்து எழுதி, இவ்விரண்டின் தாரதம் யத்தை இதைப் படிப்பவர்களே தீர்மானிக்கும்படி விடுகிறேன். இச்சண்டையில் மனோஹரன் மாறுவேடம் பூண்டு, தன் தகப்பனுக்கு உதவி செய்து அவரைக் காப்பாற்றியதாக கதை; இதை மாற்றி, இத்தொழிலை சத்யசீலருக்குக் கொடுத்தார், எங்கள் டைரெக்டர்! – என் வார்த்தையைக் கேளாமல். இதற்கு முக்கிய காரணம் சத்யசீலர் வேஷம் பூண்டவர் “சாண்டோ” என்று பெயர் பெற்ற நான் முன்பு கூறிய பலசாலியான ஆக்டர் என்பதேயாம். தென் இந்தியாவில் தமிழ் நாட்டில் இக்காட்சி காட்டப்பட்ட பொழு தெல்லாம் கதையை முன்பே அறிந்திருந்த பலர், இக் குறையைப் பற்றிப் பேசினர், என்னையும் கேட்டனர்; இதற்கு நான் பதில் கூறியதெல்லாம், “இது என் அனுமதியின்றி செய்யப்பட்டது, இதற்கு நான் உத்தரவாத மல்ல,” என்பதேயாம்.
இச்சண்டையில் முக்கியமான ஆக்டர்களுக்கெல்லாம் காயம் உண்மையில் பட்டது! எனக்கும் நான்கைந்து காயங்கள் பட்டன! உடனே டிஞ்சர் ஆப் அயொடீன் (Tincture of Iodine) தயாராக வைத்திருந்து எல்லோருக்கும் காயத்தின் மீது பூசும்படிச் செய்தேன். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நடிக்கும் ஆக்டர்களும், முதலாளிகளும் டைரெக்டர்களும் இதை முக்கியமாகக் கவனிப்பார்களாக. சாதாரணமாக இப்படிப்பட்ட சண்டைகளில் உபயோகிக்கப் படும் கத்திகள் முதலியன, பழையனவும் துருப்பிடித் தனவாயுமிருக்கும். எவ்வளவுதான் அவைகளைத் துலக்கிய போதிலும், அத்துரு அவைகளை விட்டு முற்றிலும் அகலாது; இப்படிப்பட்ட கத்திகளினால் ஏதாவது காயம் ஏற்பட்டால், பிறகு பிளட் பாய்சனிங் (Blood poisoning) உண்டானாலும் உண்டாகும்; அக்கெடுதி உண்டான பின் அதற்கு சிகிச்சை தேடுவது அரிதாம்; ஆகையால் அது உண்டாகாமற்படி காத்துக் கொள்வதே உசிதமாம்; இதற்காக டிஞ்சர் ஆப் அயொடீன் முதலிய ஏதாவது டிஸ்இன்பெக் டென்ட் (Disinfectant) உடனே காயத்தின் பேரில் பூசுவது மிகவும் அவசியமாம்.
சண்டைக் காட்சிகளெல்லாம் எடுப்பதற்கு சாயங்காலம் 6 மணியாயிற்று! நான் நடிக்க வேண்டிய பாகங்களெல்லாம் முடிந்தவுடன் எனக்கு மிகவும் களைப்பாயிருந்தது; ஆயினும் அச்சிரமத்தை நான் கவனிக்கவில்லை. எங்கள் டைரக்டர் இந்த வயதான ஆக்டருக்கு சண்டை செய்ய என்ன தெரியும் என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந் தனராம்; எதற்கும் பார்க்கலாம் என்று என்னை வாள் யுத்தம் செய்யும்படி கேட்டனராம். நான் சிறுவயதில், சிலம்பம் பழகி இருந்தபடியால் இதைக் கஷ்டமின்றிச் செய்தேன்; அதன் மீது அவர் ஆச்சரியப்பட்டு, மற்றெல்லோரையும் விட இந்தக் கிழவர் சண்டை செய்வது தான் மிகவும் நன்றாயிருக்கிற தெனக் கூறி, நான்கைந்து முறை நான் சண்டை போடுவது போல் படம் பிடித்தனர். இதை அன்றிரவு எல்லோரும் வீட்டுக்கு வந்த பிறகு எங்கள் முதலாளிகள் என்னிடம் தெரிவித்தனர்.
மேற்குறித்த காட்சிகள் எடுத்தானவுடன் எடிடிங் (Editing). வேலை தவிர மற்ற வேலையெல்லாம் முடிந்ததெனவே கூற வேண்டும். ஆகவே இரண்டொரு நாளைக்குள் பம்பாயில் என் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினேன் ஈசன் கருணையினால் ஏதோ எடுத்த வேலையை ஒருவாறு முடித்தோமே என்னும் சந்தோஷத்துடன்!
1936 ஆம் வருடம் மார்ச்சு மாதம் 4 ஆம் தேதியில் “மனோஹரா’ பேசும் படத்திற்கு கோயமுத்தூரில் திறப்பு விழா வைத்துக் கொண்டனர். அதற்காக முதலாளிகள் என்னை கோயமுத்தூருக்கு வரும்படி கேட்க அப்படியே அங்கு போயிருந்தேன். அன்றைத் தினம் ம-ள-ள-ஸ்ரீ திவான்பஹதூர் ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் தலைமையின் கீழ் திறப்பு விழா நடந்தது. பேசும் படக் காட்சி முடிந்தவுடன், முதலியார் அவர்களும், கோயமுத்தூரில் மாஜி டிஸ்டிரிக்ட் ஜட்ஜாயிருந்த சங்கர ஐயர் அவர்களும், தற்காலம் சென்னை கவர்ன்மென்டார் மந்திரிகளில் ஒருவராயிருக்கும் திருவாளர் ராமநாதன் அவர்களும், இன்னும் இரண்டொருவர்களும் அப்படத்தையும் அதில் நான் நடித்ததையும் பற்றி புகழ்ந்து பேசினர். அச்சமயம் பட முதலாளிகள் எனக்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பையும் (Silver Cup) மைக் கூடுகள் வைக்கும் பாத்திரமும் (Ink Stand) என்னை கௌரவித்துக் கொடுத்தனர். நான் நடித்த பேசும் படத்தை இதுதான் முதன் முறை முற்றிலும் நான் பார்த்தது; இதற்கு முன்பாகத் துண்டு துண்டுகளாக பம்பாயில் எனக்குக் காண்பித்த போதிலும், முற்றிலும் ஒரே விசையாக நான் இதுவரையில் பார்த்ததில்லை. இது எனக்கு ஒரு விதத்தில் சந்தோஷத்தைக் கொடுத்த போதிலும், கதையைப் பல இடங்களில் மாற்றியிருப்பதால் சாதாரண ஜனங்களுக்கு இது திருப்தி அளிப்பது கடினம் என்னும் எண்ணம் மாத்திரம் என்னை விட்டகலவில்லை.
நான் நினைத்தவண்ணமே இதைப் பார்த்த பலர், இவ்விடத்திலும் பிறகு சென்னையிலும், கதையை என்ன இப்படி மாற்றிவிட்டிருக்கிறார்களே, என்று குறை கூறினர். என் நண்பர்கள் “என்ன இப்படி இக்கதையை மாற்றி விட்டாயே?” என்று பலர் கேட்டனர். எனக்குப் பின்னால், சிலர் கதையை இவ்வாறு மாற்றியதற்கு நான்தான் உத்தரவாதம் என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன். அவ்வாறு எண்ணங் கொண்டவர்களுக்கெல்லாம் பதில் கூறவே பம்பாயில் நடந்த பல விஷயங்களை விசிதமாக மேலே எழுதியுள்ளேன். இதை வாசிக்கும் எனது நண்பர் களாவது, இதற்கு நான் கொஞ்சமேனும் உத்தரவாதமல்ல என்று அறிவார்களாக! நான் புருஷோத்தமனாகப் பேசியதற்கும், நடித்ததற்கும் நான் உத்தரவாதமே யன்றி, மற்ற எந்த விஷயத்திற்கும் நான் உத்தரவாதமல்ல; நான் பேசிய வார்த்தைகள் கூட, டைரெக்டர்கள் கதையை மாற்றியபடி, நான் மாற்ற வேண்டியதாயிற்று. நான் அச்சடித்த, தென் இந்தியா மேடையில் இந்த நாற்பது வருடங்களாக நடிக்கப்பட்ட, மனோஹரன் புத்தகத்திலுள்ள வார்த்தைகளுக்கும், பேசும் படத்திலுள்ள வார்த்தை களுக்கும் நூற்றிற்கு 5 பங்கு சம்பந்தந் தானுண்டு! இது என் துர் அதிர்ஷ்டம்! நான் முதலாளிகளுக்கு இம்மனோஹர நாடகத்தை மூன்று வருடங்களுக்குப் பேசும் படக் காட்சியாக மாற்றும் உரிமையை விற்றபொழுது கதையை என் அனுமதியின்றி மாற்றலாகாது என்று. நான் நிபந்தனை ஏற்படுத்திக் கொள்ளாதது என் தவறு என்று முன்பே கூறியுள்ளேன்; அத்தவறுக்கு தக்க பிராயச்சித்தம் கிடைத்தது. இதன் பிறகு நான், பேசும் படமாக மாற்ற, “கள்வர் தலைவன்” என்னும் எனது மற்றொரு நாடகத்தை, 3 வருடங்களுக்கு விற்ற பொழுது, இந்நிபந்தனையை ஸ்பஷ்டமாய்க் குறிப்பிட்டிருக்கிறேன். இதர நாடக ஆசிரியர்களும் இவ்வாறே செய்வார்களாக. ஒரு நாடகக் கதையை பேசும் படமாக மாற்றுவதென்றால், மேடையின் பேரில் நடிப்பது போலன்றி, சில விஷயங்களில் மாற்ற வேண்டியது நியாயம்தான். ஆயினும் அப்படிச் செய்வதில், கதையின் போக்கையும், சாராம்சங்களையும், நாடகப் பாத்திரங்களின் குணா குணங்களையும், மாற்றவே கூடாது. அன்றியும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இன்னொன் றுண்டு; அதாவது, நாடகமேடையில் எந்தெந்த கட்டங்களில் ஜனங்கள், மிகவும் ரசமமைந்தன என்று களித்தனரோ, அந்த கட்டங்களை யெல்லாம் கொஞ்சமேனும் மாற்றக் கூடாதென்பதாம்; அவைகளில்லா விட்டால், என்ன அந்த முக்கியமான பாகங்களெல்லாம் காணோமே, என்று குறை கூறுவார்கள்; பேசும்படம் சோபிக்காது, ஆகவே இவ்விஷ யங்களை யெல்லாம், இனிமேலாவது, முதலாளிகளும், டைரெக்டர்களும், நடிகர்களும் கவனிப்பார்களாக.,
இம் மனோஹரன் பேசும் படம் பல வெளியூர்களிலும் காட்டப்பட்டது.இக்கதை நாடகமாக ஆடப்பட்டதைப் பாராதவர்களெல்லாம் இது நன்றாயிருக்கிறதென மெச்சினர்; நாடக ரூபமாகப் பார்த்தவர்களெல்லாம், கதை முற்றிலும் மாற்றப்பட்டது என்று குறை கூறினர். இதைப்பற்றி பல இடங்களிலிருந்து எனக்கு நிருபங்கள் வந்திருக்கின்றன. படம் எடுக்கப்பட்ட தோரணையை மாத்திரம் கருதுங்கால், இது ஒரு மிக்க நல்ல படமே யென்று, இதைப் பார்த்த பல டைரெக்டர்களும் புகழ்ந்திருக்கின்றனர். ஆயினும் கதையை மாற்றினது தவறு என்று கண்டித்திருக்கின்றனர். அன்றியும் படக்காட்சியாக மாற்றியதில், கதைப் போக்கின் வேகம் (Tempo) குறைவென்று கூறியிருக்கின்றனர். அவர்கள் இவ்வாறு கூறியது சரியென்று கொள்ள நானும் ஒப்புக் வேண்டியவனே.
இப்பேசும் படமெடுத்த முதலாளிகளுக்கு நான் கொடுத்த தவணையாகிய மூன்று வருடங்கள் இவ்வருடம் ஆகஸ்டு மாதத்துடன் தீர்ந்து போய் விடுகிறது. மறுபடியும் இதைப் பேசும் படமாக எடுக்க வேண்டுமென்று எந்த முதலாளி களாவது முன் வருவார்களானால், அவர்களுக்கு நான் இதைத்தான் சொல்லுவேன். கதையின் போக்கை கொஞ்ச மேனும் மாற்றாது, நாடகமாக ஆடும்பொழுது இதைப் பார்த்த ஜனங்களை சந்தோஷிக்கச் செய்த இடங்களை யெல்லாம் ஒன்றையும் விடாது, கதை செல்லும் வேகம் முதன் முதல் கடைசி வரையில் குறைவுபடாதபடி, பேசும் படமாக எடுத்துப் பாருங்கள், ஜனங்கள் எப்படி இதைக் கண்டு சந்தோஷிக்காமலிருக்கிறார்களோ பார்ப்போம், என்பேன். அன்றியும் மனோஹரன் வேடத்திற்கு பதினெட்டு முதல் இருபது வயது வரையிலுள்ள அழகிய திடகாத்தி ரமுள்ள வாலிபனான நடனையும், விஜையாள் வேடத்திற்கு 15 முதல் 18 வயது வரையிலுள்ள அழகிய பெண் மணியையும் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்வேன்.



