
பேசும்பட அனுபவங்கள்
பம்மல் சம்பந்த முதலியார்
ஐந்தாவது அத்யாயம் : தமிழ் பேசும் படங்களில் நடிப்பு அம்சம்
கடைசியாக மேற்கண்ட தலைப்பெயருடன் சுதேச மித்திரன் பத்திரிகையில் சென்ற வருஷம் நான் எழுதிய ஒரு சிறு வியாசத்தை இங்கு அச்சிட்டு இச்சிறு புத்தகத்தை முடிக்கிறேன்.
பேசும் படங்கள் நமது தேசத்தில் தோன்றி சுமார் பத்து வருடங்களாகின்றன என்று கூறலாம். இப்பத்து வருடங் களாக அவை நமது நாடெங்கும் பரவி யிருக்கின்றன என்பதற்குச் சந்தேகமில்லை; அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில், அவை மிகவும் அபிவிருத்தியடைந் திருக்கின்றன என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. அக்கண்டங்களில் சினிமா இல்லாத சிற்றூரே கிடையாது என்றே கூறவேண்டும். நமது தேசத்திலும் பம்பாய், கல்கத்தா,லாகூர், பூனா,கொல்ஹாபூர், சென்னை முதலிய பட்டணங்களில் பல ஸ்டூடியோக்கள் ஏற்பட்டிருக்கின்றன. நமது சென்னை ராஜதானியைக் கருதுமிடத்து, கோயமுத்தூர், சேலம், மதுரை, பெங்களூர், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் ஸ்டூடியோக்கள் கிளம்பிவிட்டன. அன்றியும் படக்காட்சிகளைக் காட்டும் சினிமா சாலைகள் தமிழ்நாட்டில் மாத்திரம் ஏறக்குறைய 250 இருக்கின்றன. இவைகளெல்லாம் பல்லாயிரக் கணக்கான ஜனங்களுக்கு ஜீவனோபாயம் கொடுக்கின்றன என்பதற்குச் சந்தேக மில்லை. பேசும் படங்களைக் கதையாகக் கருதினாலும் சரி, தொழிலாகக் கருதினாலும் சரி, ஜனங்களுக்கு அவைகள் மிகவும் நன்மை பயக்குகின்றன என்பதற்கு ஐயமில்லை.
இன்னும் சில வருடங்களுக்குள் தேசமெங்கும் பரவி, சினிமா இல்லாத சிறிய கிராமமும் கிடையாது என்று சொல்லும் என்று ஆகிவிடும், படியாக ஆட்சேபனையின்றிச் சொல்லிவிடலாம்.
ஆகவே பொதுஜனங்களுக்கு அறிவையும் புகட்டி சந்தோஷத்தையும் தரும் இத்தகைய பேசும் படங்களை கூடிய சீக்கிரத்தில் அபிவிருத்திக்குக் கொண்டு வர வேண்டியது நமது நாட்டு நன்மையைக் கோரும் நமக்கெல்லாம் ஓர் பெருங் கடமையாகும்.
ஒன்றை முன்னேற்றத்திற்குக் கொண்டு வரவேண்டு மென்றால், அதில் தற்காலம் என்ன குறைகள் இருக்கின்றன என்று ஆராய்ந்து,பிறகு அக்குறைகளை எப்படி கடிதினில் நீக்கலாம் என்று கருத வேண்டும். இந்த வகையில் நமது இந்திய பேசும் படங்களில் தற்காலம் என்ன குறைகள் இருக்கின்றன என்று முதலில் ஆராய்வோம்.
முக்கிய குறைகள்
தற்காலத்து இந்திய பேசும் படங்களில் முக்கியமாகக் காணப்படுகின்ற குறைகள், புராதனமான கதைகளையே தயாரித்தல், கதைக்குத் தக்க நடிகர்களைத் தேர்ந் தெடுக்காமை, பேசும் படங்களைச் சங்கீதக் கச்சேரிகளாக மாற்றிவிடல், பாத்திரங்களுக்குக் காலத்திற்கேற்ற ஆடையா பரணங்கள் ஏற்பாடு செய்யாமை, பாத்திரங்களுக்கு வேண்டிய நடிக்கும் திறமை இல்லாமை முதலியனவாம். மேற் குறித்த குறைகளெல்லாம் ஏறக்குறைய எல்லா இந்திய பேசும் படங்களிலும் இருந்த போதிலும், முக்கியமாக அவைகள் சென்னை ராஜதானியில் வெளிவரும் தமிழ் தெலுங்கு படங்களில் செறிந்திருக்கின்றன என்பது பலருடைய அபிப்பிராயம். அயல் நாட்டார் நமது படங்களைப் பார்க்கும் பொழுது மேற்கண்ட குறைகளை எடுத்துக் கூறுகின்றனர் என்பது நிச்சயம். அவைகளிலும், பேசும் படங்களில் தக்கபடி நடிக்கும் திறமை மிகவும் குறைவாயிருக்கிறதென குறிப்பிடுகின்றனர். ஆகவே நமது கடமை முக்கியமாக இக்குறையை நீக்கி நமது படங்களை விருத்திக்குக் கொண்டுவர வேண்டியதாகும். இதை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி முக்கியமாக இச்சிறு வியாசத்தில் என் சிற்றறிவிற் கேற்றபடி எழுதுகிறேன்.
நடிப்புக்கலையைக் கற்க வேண்டும்
நடிப்புக் கலையைப் பற்றி சாதாரண ஜனங்கள் மிகவும் தவறான எண்ண முடையவர்களாயிருக்கின்றனர். அதாவது, அதைக் கற்க வேண்டியதில்லை, அது சுபாவமாகவே வந்து விடும் என்பதேயாம், இதைவிட தவறான எண்ணம் வேறொன்றும் கிடையாது. வயித்தியனாகவோ, இஞ்ஜினிய ராகவோ, லாயராகவோ, உபாத்தியாயராகவோ ஒருவன் ஆகவேண்டுமென்றால், பல வருடங்கள் சாதாரண கல்வி பயின்று, பிறகு சில வருடங்கள் அந்தந்த சாஸ்திரங் களுக்குரிய பள்ளிகளில் பயின்று, பரீட்சையில் தேறி, பிறகே டாக்டராகவோ, இஞ்ஜினியராகவோ, அட்வகேட்டாகவோ, உபாத்தியாயராகவோ ஆகின்றான். அன்றியும் சிற்ப சாஸ்திரம், சங்கீதம், பரத சாஸ்திரம் முதலியவைகளில் தேர்ச்சி பெற வேண்டுமென்றால், அந்தந்த சாஸ்திரங் களுக்குரிய நூல்களைப் படித்து அவற்றுள் வல்லர்களிடம் பல வருடங்கள் சிஷ்யனாயிருந்தே பிறகு அக்கலையில் வல்லவனாகி ஜீவனோபாயம் தேடுகிறான். சுருக்கிச் சொல்லுமிடத்து, இவ்வாறு செய்ய வேண்டியது அவசிய மென எல்லாக் கலைகளிலும் தொழில்களிலும் எண்ணப் படுகிறது நடிப்புக் கலையில் தவிர! தற்காலத்தில் “அரங்கங் களில் நடிப்பதற்கும் தற்காலத்தில் பேசும் படங்களில் நடிப்பதற்கும் ஒருவன் கற்க வேண்டிய தொன்றுமில்லை, நூலாராய்ச்சி செய்ய வேண்டிய தொன்றுமில்லை, அக்கலையில் வல்ல ஒரு உபாத்தியாயனிடம் தெரிந்து கொள்ள வேண்டிய தொன்றுமில்லை, எல்லாம் தானாக வந்துவிடும்” என்று பெரும்பாலர் எண்ணுகிறார்கள். இந்தத் தப்பான எண்ணம் அறவே ஒழிகிற வரையில் நமது தேசத்தில் நடிப்புக் கலை விருத்தி யடையாது, நமது பேசும் படங்களும் முன்னேற்ற மடையமாட்டா.
மேல் நாடுகளில் நிலைமை
ஐரோப்பா, அமெரிக்கா முதலிய கண்டங்களில் இக்கலையைப் பற்றி என்ன அபிப்பிராயம் பரவி யிருக்கிறதென்பதைப் பற்றி சற்று ஆராய்வோம். அவ்விடங் களிலெல்லாம் மற்ற கலைகளைக் கற்பதுபோல் நடிப்புக் கலையையும் ஒருவன் கஷ்டப்பட்டுக் கற்க வேண்டிய வனாயிருக்கிறான். பிரான்சு, ஜர்மனி, ருஷ்யா முதலிய தேசங்களில் இதற்காகப் பல கலாசாலைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. சாதாரணமாக அக்கலாசாலைகளில் தேர்ச்சி பெற்றவர்களையே
சினிமா நாடக மேடையிலும் மேடையிலும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். இக்கலாசாலைகளில் பரீட்சைகள் வைத்து தேர்ந்தவர்களுக்கு பட்டங்கள் கொடுக்கின்றனர். அமெரிக்காவிலும் இவ்வழக்கமுண்டு, அங்கு மேடையின் மீதிருந்து நன்றாய்ப் பேசுவதற்கும் பாடுவதற்கும், நடிப்பதற்கும், பல பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய பள்ளிக் கூடங்களில் முத்தம் கொடுப்பதற்கும், கண் சமிக்ஞை செய்வதற்கும் கூட இக்கலையைக் கற்க விரும்புவோர்களை தேர்ச்சிபெறச் செய்கின்றனர்!
நம் நாட்டின் நிலைமை
நமது நாட்டிலோ ஒரு நடிகரோ நடிகையோ கொஞ்சம் அழகு வாய்ந்திருந்தாலும் அல்லது கொஞ்சம் பாடத் தெரிந்திருந்தாலும், உடனே மேடை மீதேற வேண்டியது தான்; அல்லது தக்க சிபார்சு இருந்தால் உடனே பேசும்படக் காக்ஷியில் ஸ்டாராக (நட்சத்திரமாக)த் தோன்ற வேண்டியதுதான்! நமது பேசும் படங்களில் தற்காலம் தோன்றும் பல நடிகர்களுக்கு நடிப்பு என்பது பூஜ்யமாயிருக்கிறதென இக்கலை வல்லவர்கள் பலர் அறிவார்கள். நமது படங்களைப் பார்க்கும் மேல் நாட்டாரும் இக்குறையை எடுத்துக் காட்டுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் இதைப் பற்றிய நானறிந்த ஒரு சிறு கதையைக் கூறுகிறேன். வட இந்தியாவிலிருந்து ஒரு தனவந்தன் பேசும் படங்களுக் தென் இந்தியாவிலிருந்து இரண்டு நடிகைகளைத் தேர்ந்தெடுக்க வந்தார். இங்கு நாடக மேடையில் பெயர் பெற்ற இரண்டு நடிகைகளை அவருக்கு ஒருவர் சிபார்சு செய்தார். அவர் இவர்கள் நடிப்பதை ஒருமுறை கண்டு, இவர்களுக்கு நடிப்பு பூஜ்யமாயிருக்கிறது; முதலில் இவர்கள் அக்கலையைக் கற்றுக் கொள்ளட்டும்; பிறகு இவர்களை நான் பேசும் படங்களில் நடிகைகளாகத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தைப் பற்றி யோசிக்கிறேன், என்று கூறிப் போயினர். நாடகமேடையில் கொஞ்சம் பெயர் பெற்ற இவர்களுக்கே இப்படியானால், நாடகமேடையை ஏறியறியாத மற்றவர்கள் திடீரென்று சினிமா நட்சத்திரங்களாவது எப்படி யிருக்கும்! அவர்களுள் பெரும்பாலர்க்கு சரியாகப் பேசுவதற்கும் தெரிவதில்லை. நடிப்பதற்கும் தெரிவதில்லை -நடப்பதற்குக் கூட தெரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். ஆயினும் ஏதோ மிகவும் சிலர் பிறப்பிலேயே இக்கலை வல்லவர்களாகி, அக்கலை அவர்களுக்கு சுபாவமாக இருந்துவருகிறது என்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்; அப்படிப்பட்டவர் கள் ஆயிரத்திலொருவர் இருக்கலாம். அத்தகைய அபூர்வமான அதிர்ஷ்டசாலிகள் திடீரென்று பேசும் படக்காக்ஷிகளில் தோன்றி பெயர் எடுக்கக் கூடும். மற்றவர்களெல்லாம் இக்கலையைக் கஷ்டப்பட்டுக் கற்றுத்தான் ஆகவேண்டும் என்பது என் துணிவு. பேசும் படங்களில் இந்தியா முழுவதும் பெயர் பெற்ற ஸ்ரீமதி தேவகிராணியவர்கள், பேசும் படங்களில் நடிப்பது சுலபமான காரியம் அல்ல, இக்கலையை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எல்லோரும் கற்க வேண்டும், என்று தன் அபிப்பிராயத்தை சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார்.
நடிகர்கள் கற்கவேண்டிய தென்ன?
முக்கியமாகப் பேசும் படங்களில் நடிக்க விரும்புவோர் கற்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால், தெளிவாகப் பேசும் திறமை, வார்த்தைகளுக் கேற்றவாறு அங்கவின்யாசம், முகக்குறிப்பு, கண்ஜாடை, இவைகளை மொத்தமாகக் கற்ற பின், தான் மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு பாத்திரத்தின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் தன்மையைக் கற்க வேண்டும். அன்றியும் ‘பை பிளே’ – அதாவது மற்றொரு நடிகன் பேசும்பொழுது பேசாமல் அரங்கத்தின் மீதிருக்கும் ஒரு நடிகன் செய்ய வேண்டியது – என்பதையும் நன்கறிய வேண்டும். மேற்சொன்னவைகளை எல்லாம் தக்கபடி கற்றறிந்த பிறகு, நாடக மேடையில் ஆடுவதற்கும், சினிமா மேடையில் நடிப்பதற்கும் உள்ள முக்கியமான பேதங்களை ஒவ்வொரு நடிகரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஸினிமா கலை கற்பிக்க கலாசாலை வேண்டும்
இவைகளை எல்லாம் கற்பதற்கு நமது நாட்டில் தக்க பள்ளிக்கூடங்கள் மேல் நாடுகளிலிருப்பது போல் கிடையா. இது ஒரு பெரும் குறையாம். மற்றக் கலைகளைக் கற்பதற்கு கலாசாலைகள் ஏற்பட்டிருக்கிறபடி, இக்கலையையும் கற்பதற்கு கலாசாலை நம் நாட்டில் ஏற்பட்டால்தான் இக்கலை விருத்தியடைந்து நமது பேசும் படங்கள் முன்னேற்ற மடையும்.
ஐரோப்பா அமெரிக்கா கண்டங்களிலிருப்பன போல் நமது நாட்டிலும் ஆங்காங்கு முக்கியப் பட்டணங்களில் நடிப்பு தனவந்தர்கள் ஏற்படுத்தினால், அவற்றில் இக்கலையில் தேர்ச்சி பெற விரும்பும் ஆயிரக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும், கற்கத் தொடங்குவார்கள் என்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. அக்கலாசாலைகளை ஏற்படுத்தும் முதலாளிகளுக்குச் செலவு போக லாபம் கிடைக்குமே யொழிய நஷ்டம் வராது என்பது என் தீர்மானமான எண்ணம். இப்படிப்பட்ட கலாசாலைகள் ஏற்பட்டால் உயர்குலத் துதித்த ஆடவர்களும் பெண்மணிகளும், நடிப்புக்கலையைச் சரிவரக் கற்று பேசும் படங்களில் நடிக்கலாம்.
மேற்சொன்னபடி நடிப்புக் கலைக்காக கலாசாலைகள் ஏற்படுமளவும் சினிமாவில் நடிக்க விரும்புவோர் அக்கலை யில் பெயர்பெற்ற சிறந்த நடிகர்களை அடுத்து அவர்களிட மிருந்து கற்க வேண்டும். அன்றியும் மேல் நாட்டு சிறந்த நடிகர்கள் அத்தேசங்களிலிருந்து வரும் பேசும் படங்களில் எப்படி நடிக்கின்றனர் என்று பார்த்தாவது தெரிந்து கொள்ளுதல் தகுதி. சிறந்த நடிப்பு அடங்கிய படங்களைப் பார்த்தபின் அதன் நுட்பமான பாகங்களை யெல்லாம் தாங்கள் அப்யசித்துப் பார்க்க வேண்டும். கண்ணாற் பார்த்தால் மாத்திரம் வரும்படியான கலையல்ல இது; பன்முறை பழக்கத்திற்குக் கொண்டு வந்தால்தான் இதில் தேர்ச்சி யடையலாம்.
கடைசியாகப் பேசும் படங்களில் நடிக்கவேண்டிய நுட்பங்களைப் பற்றிய பல ஆங்கிலப் புஸ்தங்கள் இருக்கின்றன; அன்றியும் இரண்டொரு தமிழ் புத்தகங்களும் அச்சிடப்பட்டி ருக்கன்றன. அவைகளைப் படித்துக் கற்கலாம்.
முற்றிற்று.
★ ★ ★



