
வேங்கடம் முதல் குமரி வரை (மூன்றாம் பாகம் )
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
முகவுரை
தல யாத்திரை செய்வதென்பது இந்த நாட்டுக்கே உரிய நல்ல பழக்கங்களில் ஒன்று, மற்ற நாடுகளில் உல்லாச யாத்திரை போவதுண்டு. தல யாத்திரை அவர்களுக்குத் தெரியாதது. மற்ற நாடுகள் இருக்கட்டும்; நம்முடைய பாரத நாட்டிலே கூட வட நாட்டுக்குப் போனால் தீர்த்த யாத்திரை தான் நன்றாகச் செய்ய முடியும். ஏதோ அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகச் சில தலங்கள் உண்டு. அவற்றிற்கும் எத்தனையோ சிறப்புக்கள் இருக்கின்றன. இருந்தாலும் அங்கே போனால், மற்றவர்கள் துதிப்பதைக் கொண்டும் மனத்தில் மதிப்பும் பக்தியும் உண்டாகி வழிபட வேண்டும்.
ஆனால் தமிழ் நாட்டுத்தலங்கள் அப்படியா இருக்கின்றன? கோவிலின் தோற்றமே ஆளைப் பிரமிக்கவைத்து விடுகிறது, எத்தனை மேல் நாட்டினர்கள் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலைக் கண்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றிருக்கிறார்கள்!
கோயிலைக் கட்டுவதும் சிற்பங்களைக் கொட்டுவதும் கல்லெழுத்து வெட்டுவதும் இந்த நாட்டு அரசர்களுக்கெல்லாம் பரம்பரை வழக்கங்களாக இருந்து வந்துள்ளன. முன்பேதான் கோயில் இருக்கிறதே என்று இராமல் மேலும் மேலும் பின்வந்த அரசர்கள் கோயில்களை விரிவாக்கினார்கள், தங்கள் தங்கள் காலத்து வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுக்களைப் பொறித்தார்கள். ஊர் சிறியதாக இருந்தாலும் கோயில் பெரியதாக இருப்பதைப் பார்த்தால் “அந்தக் காலத்தில் இதை எப்படிக் கட்டினார்கள்!” என்று வியப்படையத்தான் தோன்றும்.
தமிழ் நாட்டு நாகரிகமே கோயிலைச் சுற்றி வளர்ந்தது என்று சொல்லிவிடலாம். சிற்பக்கலை, இசைக்கலை, நாட்டியக் கலை, காவியக்கலை, அலங்காரக்கலை, பூத்தொடுக்கும் கலை – ஏன், மடைப்பள்ளிக்கலை கூடத்தான் – கோயில்களிலே வளர்ந்தன. கோயிலில் ஊர்ச்சபை கூடியது; உடையவர் பண்டாரமாகிய கிராமப் பாங்கி இருந்தது; கல்விச்சாலை நடைபெற்றது. தேவாரமும் திவ்யப் பிரபந்தமும் இந்தக் கற்கோயில்களின் பெருமையை இலக்கியச் சுவையும் பக்திச் சுவையும் இணைந்த பாக்களால் புலப்படுத்தும் சொற்கோயில்களாக விளங்குகின்றன.
அயல் நாட்டினர் வந்து இவற்றைக் கண்டால் வியக்கிறார்கள்; படம் பிடிக்கிறார்கள் ; புத்தகம் எழுதுகிறார்கள்; நாம் அவர்கள் எழுதியதைக் கண்டு, ‘அப்படியா’ என்கிறோம். கோயிலுக்குள்ளே புகுந்து தீபாராதனையைக் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு விபூதி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் அளவில் நம் வழிபாடு நிற்கிறது. திருக்கோயில்களில் உள்ள கலையுருவங்களைக் காணக் கண்ணும் அவற்றின் பெருமையைக் கேட்கக் காதும் எல்லோருக்கும் இருப்பதில்லை.
ஆனால், சில காலமாகக் ‘கல்கி’ பத்திரிகையில் வாரந்தோறும். திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதி வரும் ‘வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற தொடர் கட்டுரைகளைப் படித்து வருகிறவர்களில் பலர் கோயிலுக்குப் போனால் தீபாராதனை கண்டு கன்னத்தில் போட்டுக் கொள்வதோடு நிற்பதில்லை. அந்தக் கோயிலில் என்ன என்ன விக்கிரகங்கள் இருக்கின்றன, என்ன சிற்பங்கள் இருக்கின்றன என்று சிறிது ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள். பிறகு மறுபடியும் வந்து, “இதுவரையில் இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தது பிசகு” என்று கன்னத்திலும் போட்டுக் கொள்கிறார்கள்.
கோவிலில் உள்ள கலை அழகை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதை அன்பர் பாஸ்கரன் அவர்களுடைய கட்டுரை நன்றாக நமக்குக் காட்டுகிறது. அவர் எழுதும் கட்டுரைகளைப் படித்தால் நாமே அவருடன் அங்கங்கே சென்று எல்லாவற்றையும் காண்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது.
இந்தக் கட்டுரைகளை இப்போது தொகுத்துப் புத்தகமாக வெளியிடுவது மிகவும் உபகாரமான காரியம். இது மூன்றாம் தொகுதி.
தொண்டைமானவர்கள் ஒவ்வொரு கோயிலாக நமக்கு அறிமுகப்படுத்தும் பாணி அவருக்கு என்றே அமைந்தது. ஊருக்குச் செல்லும் வழிகளைச் சொல்லி அழைத்துச் சென்று கோயில் முன் நிறுத்துகிறார். கோபுரம் முதலிய அமைப்புகளைக் காட்டுகிறார். புராணக் கதைகளை ரசமாகச் சொல்கிறார். அங்கே உள்ள சிற்பவடிவங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுகிறார். தேவாரத்தையும் திவ்யப் பிரபந்தத்தையும் எடுத்துச் சொல்கிறார்.
புராணங்களில் காணாத பல கதைகளையும் வழக்கங்களையும் பழமொழிகளையும் அங்கங்கே சொல்கிறார். இது மிக மிகப் பயனுள்ள தொண்டு சொல்வதைச் சுவைபட நுட்பமான நகைச்சுவை சில இடங்களில் மலர, சொல்கிறார்.
இந்தத் தொகுதியில் நாம் எத்தனையோ மூர்த்திகளைத் தரிசித்துக் கொள்கிறோம்; எத்தனையோ தீர்த்தங்களில் நீராடுகிறோம், புராண புருஷர்களையும் சரித்திரத்தில் வரும் மக்களையும் சந்திக்கிறோம். ‘கட்டுரையின் எடுப்பும் தொடுப்பும்’ முடிப்பும் கச்சிதமாக அமைந்து ஒரு சிற்ப வடிவைப் போலக் கட்டுரையை ஆக்குகின்றன.
தலங்களைப் பற்றிப் பல நுட்பமான உண்மைகளையும், மூர்த்திகளின் அமைப்பிலுள்ள சிறப்பான பகுதிகளையும் சொல்கிறார். இவற்றை, பல முறை அவற்றைத் தரிசித்தவர்கள் கூட அறிந்து கொள்வதில்லை.
குடந்தைக் கீழ்க் கோட்டமாகிய நாகேசுவரன் கோயிலில் சித்திரை மாதத்தில் மூன்று நாட்களில் சூரியன் கருவறையில் தன் கதிர்களை வீசுகிற உண்மையை ஓரிடத்தில் சொல்கிறார்; கும்பேசுவர சுவாமி கோயிலில் உள்ள அம்பிகை மந்திர பீடேசுவரி மங்களாம்பிகை என்ற சிறப்பைப் புலப்படுத்துகிறார். சுவாமி மலையில் மகாமண்டபத்தில் வடக்குச் சுவர்ப்பக்கம் ஒரு பீடத்தில் சபாபதி என்ற பெயரோடு இருப்பவர் நடராஜர் அல்ல, பாகுலேய மூர்த்தி என்று தெரிவிக்கிறார்.
தாராசுரத்தில் அர்த்தநாரி உருவத்தில் மூன்று தலைகளுடன் நிற்பவர் விசுவரூப மூர்த்தி என்று காட்டுகிறார். நாச்சியார் கோவில் கல்கருடன், கண்ணமங்கையிலுள்ள தேன்கூடு, திருவாரூரில் மூக்குத்தி தீர்த்தம் என்று வழங்கும் முக்தி தீர்த்தம், சூர சங்காரத்துக்கு முதல் நாள் முகத்தில் வேர்வை அரும்பும் சிக்கல் சிங்காரவேலன், ஆவுடையார் கோயிலில் பதினோரு கரத்தோடு வீற்றிருக்கும் வல்லப கணபதி – இப்படிப் பலவற்றைப் பற்றிய நுட்பமான செய்திகள் இதில் வருகின்றன.
வரலாற்றோடு பொருந்திய பலகதைகளை விசாரித்து அறிந்து நயமாகச் சொல்கிறார். செம்பியன் மாதேவியின் வரலாறு, வடுவூருக்கு. ராமன் வந்த கதை, தஞ்சையில் தளிக்குளத்துப் பெருமான் பெரிய கோயிலைப் பெற்றது, கிழவி நிழலில் பெருவுடையார் எழுந்தருளியது, துலுக்க நாச்சியார் சரிதை, பவானியில் காரோ என்ற ஆங்கிலேயர் வேதநாயகியை வணங்கியது முதலியவற்றைக் காண்க.
கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகள், கோயில் கட்டிய மன்னர்களின் பெருமை, புராணங்களில் வரும் வரலாறுகள், கர்ண பரம்பரைச் செய்திகள், தலத்தின் பெருமையைப் பற்றிய பாடல்கள் முதலிய பலவற்றையும் கோவையாக இணைத்துப் படிக்கப் படிக்க இனிக்கும் வகையில் இந்தக் கட்டுரைகள் ஓடுகின்றன. அந்த ஓட்டத்தைத்தானே விறுவிறுப்பு என்று இக்கால எழுத்தாளர்கள் சொல்கிறார்கள்?
இந்தப் புத்தகத்தைக் கோயிலுக்குப் போவதற்கு முன்பு படித்தால் ஒருவகை இன்பம் உண்டாகும்; போய் விட்டு வந்து படித்தால் அந்த இன்பம் பின்னும் பன் மடங்காகும். வெறும் ஆராய்ச்சியானால் அலுப்புத் தட்டும்; புராணமானால் சுவை இராது. சமய நூலானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றும்; சரித்திர நிகழ்ச்சியானால் அவசியமான போது புரட்டிப் பார்க்கலாம் என்று வைத்து விடுவோம்; பாடல்களானால் அமைதியாக இருந்து பார்த்தால் தான் விளங்கும் என்ற அச்சம் உண்டாகும்.
இந்த நூலில் இவை எல்லாம் இருக்கின்றன. ஆனால் படித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன; படித்த பிறகோ பல தலங்களுக்குப் போய்ப் பல மூர்த்திகளை வழிபட்டு வந்த மனநிறைவு உண்டாகிறது. காசு இல்லாமல், பிரயாண அலுப்பு இல்லாமல், தேங்காய்பழம் இல்லாமல் இந்தப்பயன் நமக்குக் கிடைக்கிறது. நாம் அங்கே போய்த் தரிசித்தாலும் இத்தனை விவரங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காது.
நாவுக்கரசருக்குத் திருவையாற்றில் சிவபெருமான் கைலைத் தரிசனம் காட்டியதை, ‘இந்த விஞ்ஞானிகளுக்கெல்லாம் மேலான விஞ்ஞானி, ஆம்! ‘டெலிவிஷன் எக்ஸ்பர்ட்’ ஆக ஒருவன் அன்றே இருந்திருக்கிறான். நம்மிடையே அவன் யார்?” என்று கேள்வி கேட்டுக்கொண்டு விளக்குகிறார். நாவுக்கரசராவது திருவையாற்றுக்குப் போய்க் கைலைக் காட்சியைக் கண்டார்.
நாமோ இருந்த இடத்தில் இருந்தபடியே இத்தனை தலங்களையும் காணுகிறோம்; சொல்லால் படித்துச் சொல்வது போதாதென்று அழகழகாகப் படங்களையும் எடுத்து இணைத்திருக்கிறார் அன்பர் திரு. பாஸ்கரன்.
இவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய இயலும்? மனமார நாவார, “சபாஷ்” என்று ஆனந்தப் பொங்கலுக்கு அறிகுறியாக ஒரு வார்த்தையைச் சொல்வதையன்றி வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.
கி. வா. ஜகந்நாதன்.



