வேங்கடம் முதல் குமரி வரை (இரண்டாம் பாகம் )
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

முகவுரை

ஒரு கூனன், ஒரு குருடன், ஒரு முடவன், ஓர் ஊமை ஆக நான்குபேர் வட வேங்கடமலை ஏறிய கதையை நண்பர் பாஸ்கரத் தொண்டைமான் சொல்லக் கேட்டிருப்பீர்கள். நான்கு பேரில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறை, உடற் குறைதான்; ஆனால் வேங்கடவன் அருள் கிட்டியதும் உடற் குறைகள் நீங்கியது இதுவே கதை.

உடற்குறைகளைப் போக்க, உள்ளத்தில் இருந்த பக்தி உதவியது. ஆனால் உள்ளமே கூனாக, குருடாக, முடமாக, ஊமையாக இருந்து விட்டாலோ? அப்படித்தான் நம்மில் பலருக்கு இருக்கிறது. மற்றவர்களைச் சொல்வானேன்? எனக்கு அப்படி இருக்கிறது.

உடலில் குறையில்லை. கண்ணபுரத்திற்கோ, கடவூருக்கோ, தேரழுந்தூருக்கோ, திருப்புன்கூருக்கோ என்னால் போகமுடியும், போயும் இருக்கிறேன். போய் என்ன செய்ய? கோயில் வாசலில் நின்றால் போதுமா? கோயில் என்ற அற்புதம் விளக்குகின்ற உண்மை உலகத்திற்கு, அந்த வான் முகட்டுக்கு என்னால் ஏறிவிட முடியுமா? முடியாது. ஏன் தெரியுமா? தினசரி வாழ்க்கைச் சிறுமைகளில் சிக்கி என் உள்ளம் கூனிக் குறுகிவிட்டது. அதுவே காரணம். கோபுரங்களையும், மண்டபங்களையும், சிலைகளையும், கல்வெட்டுக்களையும் நானுந்தான் பார்க்கிறேன். பார்த்து? அவற்றின் பொருளைக் காண வேண்டாமா? அதற்கு, வரலாறும், இலக்கியமும், சமயமும், தத்துவமும், எல்லாவற்றிற்கும் மேலாக அழகுணர்ச்சியும் நிறைந்த கலைக்கண் வேண்டியிருக்கிறது. அது இல்லாத உள்ளம் குருடுதானே! இது போலவே, காண்பதை எட்டிப் பிடித்துத் தன்னுடையதாக, அநுபூதியாக மாற்றிக் கொள்ள இயலாத உள்ளம் முடந்தானே! இப்படித் தவிக்கும் உள்ளம் என்னத்தைப் பேசிவிடப் போகிறது? பேசினால் ஊமையன் பேச்சுத்தான்.

இந்நிலையில்தான் நண்பர் தொண்டைமான் வருகிறார். மெல்ல நம்முடைய கையைப் பிடித்துக்கொண்டு கோயிலின் கோபுர வாசலுக்கு அழைத்துக்கொண்டு போகிறார். இது பெரிய காரியமில்லை.

நமது உள்ளத்தைக் கோயிலின் அடித்தலமாக, அதன் பொருளாக, அதன் சோபையாக விளங்கும் சத்திய உலகத்தின் வாசலுக்கே, அதன் கருவறைக்கே அழைத்துப் போக முயல்கிறார். அங்கே, புராணமும், வரலாறும், சமயமும், கலையும், இலக்கியமும் ஒன்றாகக் கலந்து, ஒரு ஞானக் காட்சியை அமைக்கின்றன. அதைத் தொண்டைமான் காட்டுகிறார். இந்தக் காட்சியை அனுபவமாக மாற்றும் சித்து விளையாட்டும், தொண்டைமான் உதவியால் நமக்குக் கிடைக்கிறது. அப்போதுதான் நம்முடைய ஊமை உள்ளமும் பேசத் தலைப்படுகிறது. இதையெல்லாம் நமக்குக் கொஞ்சங்கூட சிரமமில்லாமல், ஆயாசமில்லாமல் இந்த மனிதர் செய்து விடுகிறார் என்றால், அதை ஒரு சாதனை என்று பாராட்டுவதிலே தவறென்ன? ஆம். நண்பர் தொண்டைமான் கையில், சமயம் வெறும் சித்தாந்தமாக இல்லாமல் சுவை பொருந்திய அனுபவம் ஆகிறது. தலைவலியைத் தவறாமல் தரக்கூடிய தத்துவ விசாரமும், வரலாற்று ஆராய்ச்சியும், தெளிந்து, எளிமையினும் எளிமையாகி, தேனாக ஓடுகின்றன. கல்வெட்டு கூட கதையாகிறது. அப்படியென்றால் இலக்கியத்தைப் பற்றிக் கேட்பானேன். அது மணங்கமழும் மெல்லிய பூங்காற்றாக நம் இதயத்தை வருடுகிறது.

“அதெல்லாம் சரிதான், ஐயா! இருந்தாலும் ஏதோ எளிமைக்காக, சுவைக்காக இப்படிக் கடவுளரை பற்றி

யெல்லாம் வேடிக்கை வேடிக்கையாகப் பேசி விடலாமா? பாருங்களேன் அவர் சொல்வதை: ‘மனைவியுடன் பிணங்கிக் கொண்டதன் பலன் வேங்கடேசனுக்குச் செருப்பு தேய்கிறது.’ இது என்ன பேச்சு? இப்படி ஒரு நண்பர் என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டார். என்ன சொல்வது என்று நான் தீர்மானிப்பதற்குள் நண்பர் ஒரு போடு போட்டார்.

“திருப்பதி ஆசாமியைப் பற்றி வேண்டுமானால் எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும். எங்கள் முழு முதற்கடவுளாகிய சிவபெருமான் தலையிலேயே உங்கள் தொண்டைமான் கைவைத்து விட்டாரே என்ன சொல்கிறார் தெரியுமா, சொன்னவாறு அறிவார், அவர்தான் ஐயா! எங்கள் சிவபெருமான், ஒரு ‘மாட்ரிமோனியல் பீரோ’ நடத்து கிறாராம். கேட்டீர்களா கதையை!”

இப்படி நண்பர் கசப்பைக் கக்கியதும், இத்தாலிய நாட்டுப் பாதிரி ஒருவர் சொன்னது எனக்கு நினைவு வந்தது. பாதிரியார் நமது நாட்டிற்குப் புதியவர், ஏதோ தற்செயலாய் ரயிலில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்னார். ‘உங்கள் நாட்டுத் தத்துவஞானம் உலகப் புகழ் பெற்றது, உண்மைதான். ஆனால் இவ்வளவு தத்துவ உணர்வு பெற்ற நீங்கள் எப்படி ஆண்டுதோறும் உங்கள் கோயில்களில் திருக்கலியாண உற்சவம் கொண்டாடுகிறீர்கள்? மனவாக்குக் கடந்த அருவமாய் உள்ள இறைவனுக்கு மனைவி ஏது? கலியாணம் ஏது? இதுதான் எனக்குப் புரியவில்லை .’

எப்படி அவருக்குப் புரியும்? நம்முடைய நாட்டில் பிறந்து, நம்முடைய மரபிலே வளர்ந்த என் நண்பருக்கே புரியவில்லையே!

கடவுள் எங்கும் இருக்கிறான் என்று பேச்சளவில் சொல்லுகிறோம். ஆனால் அவன், இங்கே நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், இருக்கிறான் என்பதை உணர்ந்து, ஏற்றுக் கொள்வதற்கு தயங்குகிறோம். இந்தத் தயக்கமே, புராணக்கதைகளை உள்ளவாறு அறிவதற்குத் தடையாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் இப்படித் தயங்கவில்லை. இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தான்; பிரம்பால் அடிபட்டான், மாமனாக வந்து வழக்குரைத்தான் என்று பேசினார்கள். மீனாக, ஆமையாக, ஏன் ஆண்டாள் சொல்வது போல் ‘மானமிலாப் பன்றி’ யாகக்கூட இங்கே வந்தான்; ‘அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தில் பிறந்து’ வெண்ணெய் திருடி, கடை கயிற்றால் கட்டுண்டு, நந்த கோகுலத்தில் விளையாடினான் என்று நம்பினார்கள். கடவுள் எங்கேயோ நெடுந்தொலைவில் கைலாசத்திலோ, பரமபதத்திலோ, பரலோகராஜ்யத்தில் மட்டும் இருப்பதாக அவர்கள் எண்ணவில்லை. எல்லா இடங்களும், எல்லா நிலைகளும், அவனைக் காணத் துடிக்கும் இந்த மனித உள்ளமும், அவனுடைய இராஜ்யம் என்றே கருதினார்கள். அவர்களுக்குத் திருவையாறு கைலாயம் ஆயிற்று. திருக்கோவலூர் வீட்டு இடைகழி பரமபதமாக மாறியது. பல்வேறு காலங்களில், பல்வேறு தலைமுறைகளில், தமது வாழ்க்கையோடு பின்னிக்கிடக்கும் கடவுள் என்ற சத்தியத்தை, அந்த வாழ்க்கையை ஒளியாகக்கொண்டு, நமது முன்னோர்கள் தொட முயன்றார்கள். ‘ஒரு நாமம், ஓருருவம், ஒன்றுமிலார்க்கு’ ஆயிரம் ஆயிரம் பெயர். சூட்டித் தெள்ளேணம் கொட்ட முற்பட்டார்கள். எல்லா உறவுகளையும் கடந்த ஒன்றை அது இங்கும் உள்ளது என்ற உணர்வோடு, மனித உறவுகளைக் கொண்டு தேடிக் கண்டார்கள். அன்பெனும் வலையில் அகப்படும் இறைவனுடைய எளிமையை வியந்து பரவினார்கள்.

எத்தனை எத்தனையோ உருவகங்களால், மனித வாழ்க்கைச் செய்திகளால் அலகிலா அவனை அலகிட்டுச் சிக்கெனப் பிடித்தார்கள். இந்த முயற்சியின் விளைவுதான் புராணக்கதை.

நண்பர் தொண்டைமான் இதை நன்றாக அறிந்தவர். ஆகவேதான், இறைவனைத் தொட்டுத் தொட்டு விளையாடும் புராணக் கதைகளின் விதவிதமான உணர்ச்சிகளை யெல்லாம்,

கனிவோடு, நகைச்சுவையோடு, அவரால் காண முடிகிறது. இதனால், ஏதோ இறைவனுக்குக் குறைவு வந்து விடும் என்று அவர் எண்ணவில்லை.

கண்ண புரமாலே கடவுளரின் நீ அதிகம்;
உன்னிலுமோ யானதிகம்; ஒன்றுகேள்

என்ற பாடல் நிந்தையில்லை. நிந்தாஸ்துதி என்பதை அவர் உணர்கிறார். இது போன்ற வேடிக்கையாகக் கடவுளைப் பற்றிப் பேசுவதெல்லாம், பக்தியின் முதிர்வினால் ஏற்படக் கூடும். அப்படித்தான் மனிதன் தன் முழு ஆற்றலையும், தன் வாழ்வு முழுவதையும் கடவுளை நோக்கித் திருப்பமுடியும் என்பதை அனுபவிக்கிறார், சொல்கிறார். உண்மையான பக்தியும் கவிதை உள்ளமும் படைத்தவர்களுக்கே இது கைகூடும்.

இவர்களில் ஒருவர் நண்பர் தொண்டைமான். அதோடு, தமது பேரறிவையும், தாம் பலகாலம் முயன்று சேர்த்த செய்திகளையும், கலை, தத்துவ, நுணுக்கங்களையும், நம்மோடு நேருக்கு நேர் நின்று பேசுகின்ற பாவனையில் பழகு தமிழில் அமைத்து விளம்புகிறார். தொண்டைமான் படைக்கும் ‘வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற கட்டுரைத் தொடர், கலை, இலக்கியம், வரலாறு, பக்தி என்ற எல்லாம் விளங்கும் சுவை விருந்து. இந்த விருந்தே, நமது உள்ளக் குறைகளைப் போக்கும் அருமருந்தாகவும் அமைகிறது. இதனால்தான், தமிழகம் திரண்டு, இதை வரவேற்று மகிழ்கிறது. தமிழனுக்குத் தெரியாதா, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, சிறந்த பண்பாட்டோடும் பக்தியோடும் வாழ்ந்து வந்திருக்கும் அவனுக்குத் தெரியாதா, எதை எப்படிப் பாராட்டவேண்டும் என்று?

. சீநிவாசராகவன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !