அழகி முதலிய கதைகள்
க. நா. சுப்ரமண்யம்

அழகி முதலிய கதைகள்
க. நா. சுப்ரமண்யம்

முன்னுரை

1941-ல் எழுதிய கதைகளுக்கு 1944-ல் முன்னுரை எழுதுவ தென்பது சற்றுச் சிரமமான காரியமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் அதிலும் ஒரு லாபம் இருக்கிறது என்ப து எழுத ஆரம்பித்த பின்தான் தெரிகிறது. அப்பவே புஸ்தகம் வெளி வந்திருந்தால் நான் மீண்டும் ஒருமுறை அதைப் படித்தே பார்த்திருக்க மாட்டேன். இப்பொழுது இந்தக் கதைகளை மறுபடியும் ஒருதரம் படிக்க நேர்ந்தது. “தேவலையே அந்தக் காலத்தில் நான்கூட நல்ல கதைகளாகச் சில எழுதியிருக் கிறேனே !” என்று எனக்கே ஒரு திருப்தி ஏற்பட்டது. எதிர்பாராமல் எனக்கு ஏற்பட்ட இந்தக் திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் மூலகாரணமான அல்லயன்ஸ் கம்பெனியாருக்கு எனது நன்றியை ஆரம்பத்திலேயே தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அல்லயன்ஸ் கம்பெனியாருக்கு இன்னும் பல விதங்களிலும் நான் கடமைப்பட் டிருக்கிறேன். “ஆசிரியர் கதைகளைத்தான் சிரமப்பட்டு எழுதினார்; அச்சுப் பார்த்துத் திருத்தும் சங்கடமான வேலையையும் அவரிடம் தந்து அவரைச் சிரமப்படுத்துவானேன்;?” என்று பிரசுராலயத்தார் தாங்களே பார்த்து அச்சிட்டுவிட்டார்கள். அதற்கும் எனது நன்றி. இதில் உள்ள கதைகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு.

இன்னொரு விஷயம். பல்வேறு சமயங்களில் எழுதி, பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரித்த கதைகளைப் பின்னர் திரட்டிப் புஸ்தகமாக வெளியிடுவதுதான் இன்று தமிழ்நாட்டில் சகஜமான காரியம், அந்த ‘அழகி’ கதைகளின் விஷயம் வேறு. அவை ‘அழகி’ என்று ஒரு புஸ்தகமாக வெளிவருவதற்கென்றே ஒரே மூச்சில் (உண்மையில் பத்து நாட்களில்) எழுதப்பட்டவை. பல காரணங்களால் புஸ்தகம் வெளிவரச் சற்றே தாமதமாயிற்று. தாமதமானதைப் பயன்படுத்திக் கொண்டு நான் இதில் சில கதைகளை அல்லயன்ஸ் கம்பெனியாரின் சம்மதத்துடன் சில பத்திரிகைகளில் வெளியிட்டேன். இட வசதிக் குறைவையும், பேப்பர் கிராக்கியையும் பொருட்படுத்தாமல் என் கதைகளுக்கு இடம் கொடுத்து என்னைக் கௌரவித்த கலைமகள், கல்கி, சக்தி, கலாமோகினி பத்திரிகை ஸ்தாபனங்களுக்கும் அவற்றின் ஆசிரியர்களுக்கும் எனது நன்றி உரியதாகிறது. இவற்றைப் பத்திரிகைகளில் வெளியிட அனுமதித்த அல்லயன்ஸ் கம்பெனியாருக்கும் எனது நன்றி.

பத்து நாட்களில் இந்த ‘அழகி’ முதலிய கதைகளை பதினைந்து கதைகளை – எழுதினேன். அவற்றில் ஒன்று ‘நசிகேதன்’ கதையாக அமையவில்லை என்று நானே ஒதுக்கிவிட்டேன். இன்னொன்றை – ‘கிறுக்கெழுத்து’ என்னும் கதையை இடம் இல்லை என்று பிரசுராலயத்தார் ஒதுக்கிவிட்டார்கள். எஞ்சியுள்ளது ‘அழகி’யில் பதிமூன்று கதைகள். இந்தக் கதைகளைப் படிப்பவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையாவது பிடிக்கும் என்றே நான் நம்புகிறேன். என்னைக் கேட்டால் “ ஏன் ? இந்தப் பதிமூன்று கதைகளுமே நன்றாகத்தான் இருக்கின்றன” என்று சொல்வேன்.

இந்தக் கதைகளில் இரண்டுக்கு ஆதாரம் சொல்வது இங்கு அவசியமாகிறது. ஒன்று சரித்திரக் கதை. “நாரீ திலகம் ” – லாங்கேடியோ ஹியார்ண் என்னும் ஆங்கில ஆசிரியரின் வார்ப்பு. மற்றது கடைசிக் கதையான – “முதல் கதை” அநடோல் பிரான்சு என்னும் மேதையின் ஒரு சிறு கட்டுரையைத் தழுவியது. இவ்விரண்டையும் தவிர மற்றக் கதைகளெல்லாம் என் சொந்தக் கற்பனையே.

கற்பனை என்று வார்த்தை வருகிறதே அதையொட்டி இன்னொரு விஷயமும் சொல்லிவிடுகிறேன். இந்தக் கதைகள் வெறும் கற்பனை – உபயோகமானவை, உபயோகமற்றவை, கலை அழகு கூடியவை, அப்படியல்லாதவை என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இவை வெறும் கற்பனை ; அதாவது உண்மையில் வாழ்க்கையில் யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல; யாரையும் எதையும் தாழ்மைப் படுத்தவோ பெருமைப்படுத்தவோ எழுதியவை அல்ல.

. நா. சுப்ரமண்யம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !