
அழகி முதலிய கதைகள்
க. நா. சுப்ரமண்யம்
அழகி
1
சாரதாவுக்கு வயது பதினாருகிறது; இன்னும் கல்யாண மாகவில்லை.
இந்தக் காலத்திலே அவசரம் என்ன என்பது ஒருபுறம். ஆனால் அவளுக்குக் கல்யாணமாகாததற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. தக்க இடமாகப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க அவள் தகப்பனார் நடேச ஐயரிடம் வேண்டிய பசையில்லை. ஜாதகங்கள் தேடிக்கொண்டு ஊர் ஊராகப் போக ரயில் செலவுக்குக்கூட அவரிடம் பணம் அகப் படாது. அவருக்கு எப்போதும் பணமுடைதான். ஆனால் அவர் தம்மாலானதை யெல்லாம் செய்து கொண்டுதான் இருந்தார். ஜாதகங்கள் கொடுத்து வாங்கியதிலே குறைவில்லை. ஊரிலே சுற்றி அலைய அவர் சளைப்பதே கிடையாது. என்றாவது அவர் அப்படி அசிரத்தையாக இருந்துவிட்டார் என்று தெரிந்துவிட்டால் அவர் மனைவி அலமேலு அம்மாள் வீட்டிலே ரகளை பண்ணிவிடுவாள். தமக்கு ஒரு பெண் இருக்கிறாள் என்றும் அவள் மூக்கும் முழியுமாகச் சிவப்பாய் அழகாயும் இருப்பாள் என்றும், அவளுக்கு அந்த வருஷம் கல்யாணம் ஆகவேண்டியது அவசியம் என்றும் நடேச ஐயர் கண்டவர் கேட்டவரிடமெல்லாம் பிரஸ்தாபித்து வைப்பார்.
ஏதாவது நூறில் ஒன்று பிடித்துக்கொண்டு விடாதா என்று அவருக்கு ஆசை. ஆனால் இந்த இரண்டு வருஷங்களில் ஒன்றுகூடப் பிடித்துக்கொள்ளாதது பெண்ணின் துரதிருஷ்டந்தான். அதற்கு அவரென்ன செய்வார்? ஜாதகத்தை வாங்கிக்கொண்டவர்களில் சிலர் வந்து பெண்ணைப் பார்த்துவிட்டும் போனார்கள். அப்படிப் பார்த்தவர்களுக்குப் பெண் பிடித்துத்தான் இருந்தது. ஆனால் பெண்ணின் தகப்பனாருக்கும், பிள்ளை வீட்டா ருக்கும் ‘லௌகிகந்’தான் ஒத்துவரவில்லை.
பெண் கொஞ்சம் சாதுதான்; அசடு என்றுகூடச் சொல்லலாம். ஆனால் எவ்வளவு சாதுவாக, எவ்வளவு அசடாக இருந்தாலும் தனக்கு வாய்க்கப் போகும் கணவனைப்பற்றி எந்தப் பெண்ணாலும் கனவுகள் காணாமல் இருக்கமுடியுமா? இரண்டு மூன்று வருஷங்களாக, ஒருநாள் இரவு தவறாமல், சாரதா கனவுகள் கண்டு வருகிறாள். அவளுடைய நாயகன் ஓர் இரவு வந்ததுபோல மறு இரவு வருவதில்லை. அவளுக்கு அதுபற்றி அவ்வள வாகக் கவலையில்லை. கனவுகள் வெறும் கனவுகள் தாமே? உண்மை நாயகன் ஒருவன் வந்து கனவுக் கோட்டையைத் தகர்க்கும்வரையில் அதில் யார் வந்து தங்கிப்போனால் என்ன என்றுதான் அவளுக்குத் தோன்றிற்று.
தற்காலத்திய அவள் வயதுப் பெண்களுக்கெல் லாம் சாதாரணமாகத் தெரிந்த விஷயங்கூட அவளுக்குச் சரியாகத் தெரியாது. பள்ளிக்கூடம் ஒரு வருஷத்துக்குமேல் அவள் போனதில்லை ; அவளுக்குக் கல்வியறிவு போதாது; எழுத்துக்கூட்ட மட்டுந்தான் வரும் என்பதே இந்த அறிவின்மைக்குக் காரணமாக இருக்கலாம். பெண்களும், ஆண்களுக்குச் ‘சரிநிகர் சமான’மாக உலகறிந்திருக்க வேணுமென்ற தற்போதைய அவ்வளவு நவீன மல்லாத கொள்கையைப் படைத்தவர்களுக்குச் சாரதாவைப் பற்றி எண்ணும்போது ஆத்திரமும் அனுதாபமும் தோன்றலாம். ‘பெண் கல்வி’ யைப் பற்றிச் சொல்லவேண்டியதை யெல்லாம் மூட்டை கட்டித் தூக்கிக்கோண்டுபோய் எந்த எந்தப் பிரசங்க மேடையிலிருந்து இறக்க முடியுமோ ஆங்காங்கு இறக்கிவிடலாம் என்று தோன்றலாம். ஆனால் சாரதாவின் தகப்பனாரால் அவளுடைய அண்ணனைக் கூடச் சரியாக ஐந்தாறு வருஷங்களுக்கு மேல் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியவில்லை; இப்பொழுது அவன், பதினேழு வயது ஆகுமுன்னரே, ஒரு மளிகைக் கடையில் ஆறு ரூபாய் சம்பளத்துக்குச் சிற்றாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
நடேச ஐயருக்குக் கும்பகோணத்தில் ஒரு சின்ன ஜவுளிக் கடையில் ஒரு சின்ன உத்தியோகம். மாதம் மேல் வரும்படி, உள்ள வரும்படி எல்லாமாகச் சேர்ந்து பதினெட்டு இருபது ரூபாய்தான் வரும். அவருடைய பையன் ஓர் ஆறு ரூபாய் கொணர்ந்தான். இந்த இருபத்தாறு ரூபாயை நம்பிப் பிழைக்க அவருடன் நிரந்தரமாக வசித்தவர்கள் அவருடைய மனைவி ஒருத்தி, பையன்கள் மூவர், பெண்கள் இரண்டு. இதைத்தவிர அங்கு ஒண்ட இடம் கிடைக்காதா என்று ஏங்கிச் சில சமயம் வருபவர்கள் அவருடைய விதவைத் தமக்கை ஒருத்தி, ‘வாழ்ந்த’ தங்கை ஒருத்தி, சில சமயம் அவர்களுடைய கணக்கில் அகப்படாத சந்ததிகள். ஆனால் ஒன்று; என்றும் அவருடைய இருபத்தைந்து ரூபாயை நம்பி அவருடன் பதினைந்து நபர்களுக்கு மேல் இருந்தது இல்லை.
ஜட்கா வண்டிக்காரர்களுக்கும், பஸ் கண்டக்டர்களுக்கும் உண்மையிலே அநேகமாக யாருக்குமே தெரியாத ஒரு விசாலமான வீதியில் இருந்தது அவர்கள் குடியிருந்த வீடு. அந்த வீதியிலே நாலு வீடுகளுக்கு மேல் இல்லை. முனிசிபாலிடி நாகரிகம் தோன்றுமுன், அதாவது பண்டைக் காலத்தில், அந்தத் தெருவில் பல பெரிய மனிதர்கள் வசித்து வந்தார்கள். இப்பொழுது அந்த வீதிக்கு அந்தக் கௌரவம் கிடையாது. நடேச ஜயர் குடியிருந்த வீடு ரொம்பப் பெரிய வீடுதான். அதில் அவருக்கென்று ஒதுக்கிவிடப்பட டிருந்த இடம் பின்கட்டில் ஒரு சிறிய பகுதி. அதில் காற்று என்ற வாசனையே கிடையாது, காற்றுக்குப் பழகி உறுதிப்படாத அந்தப் பகுதியின் தூண்கள் யாராவது இரைந்து பேசினால் புயல்தான் வந்துவிட்டதாக்கும் என்று பயந்து ஒட்டடை மழை நடுவே தலைசாய்த்து விடும்.
வீடு என்னவோ பழைய வீடுதான். அதன் சொந்தக்காரரான விசுவநாதராவைப் போலவே, அதுவும் நமது பண்டைய நாகரிகத்தின் ஒரு சின்னமாகக் காட்சி அளித்தது. கொஞ்சம் கொஞ்சமாக எவ்விதத் திட்டமுமின்றி அந்த நாட்களில் மனம் போனபடிக் கட்டப்பட்ட வீடு; இரண்டு-மாடி வீடு. இரண்டாவது, மொட்டை மாடிக்குப் போனால் பிரம்மானந்தமாகக் காற்று வரும். ஆனால் மொட்டை மாடிக்குப் போக விசுவநாதராவின் வீட்டார் தயவு வேணும். விசுவநாதராவின் வீட்டுக்காரர்களுக்குச் சாரதா உண்மையிலேயே ரொம்பவும் வேண்டியவள்தான். தன் வீட்டுக்காரியங்களையெல்லாம் செய்து முடித்துவிட்டு, போதிருந்த போது, அவள் அவர்கள் வீட்டுக் காரியங்களையும் தானாகவே போய் வலியச் செய்து தருவாள். ராயரின் மனைவி சகுந்தலாபாய்க்குச் சாரதாவிடம் ஒரு தனிப்பிரியம். தனக்கு நாலு பிள்ளைகள் இருந்தும் ஒரு பெண்கூடப் பிறக்கவேயில்லையே என்று அவளுக்கு ரொம்பக் குறை. ஆனால் தனக்குப் பெண்ணிருந்தால் அதை எவ்வளவு பிரியமாக நடத்துவாளோ அவ்வளவு பிரியத்துடன் சாரதாவை அவள் நடத்தினாள் என்று சொல்லுவதற்கில்லை, என்ன இருந்தாலும் யார் வீட்டுப் பெண்ணோதானே! ஆனால் வீட்டில் ஒரு பெண் இல்லாவிட்டால் வீடே ஒரு பாழாகத் தோற்றமளித்தது என்ற கொள்கையையுடைய சகுந்தலாபாய்க்குத் தன் வீட்டில் தன்னுடன் பேசிப் பழகி நடமாட சாரதா என்ற அந்தப் பதினாறு வயதுப் பெண் இருந்தது ரொம்ப ஆறுதலாக இருந்தது. சாரதாவின் தங்கை மீனா மாடிப்பக்கமே போகாது; அது கொஞ்சம் தீசல் என்றுதான் சொல்லவேணும்; அவளுக்கும் சகுந்தலாபாய்க்கும் ஆகவே ஆகாது.
விசுவநாத ராவுக்கு உத்தியோகம் ஒன்றுமில்லை. ஆனால் அவர்களுடைய முன்னோர்களில் பலர் தலைமுறை தலைமுறையாக ஹிந்து, மராட்டிய அரச வம்சங்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். அவர்கள் குடும்பம் பங்களூரிலிருந்து சிவாஜியின் அண்ணா ஏகொஜி தஞ்சை வந்தபோது அவனுடன் வந்தது. தஞ்சையில் மராட்டியர்கள் ஆண்ட காலத்தில் அவர்கள் குடும்பத்தினர் சமஸ்தானத்தில் பல உயர்ந்த உத்தியோகங்களை வகித்தவர்கள். இந்தியா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்கீழ் வந்த பிறகும் விசுவநாதராவின் தகப்பனின் தகப்பனார், ராஜ வம்சத் தொடர்பை விட்டுவிடாமல், பிரிட்டிஷ் ராஜ்யத்தின் தென்னிந்தியத் தூண்களில் ஒன்று என் று புகழ்பெற்று, ‘ஸர்’ பட்டமும் பெற்றவர். அவருக் கப்புறம் குடும்பத்தின் ஸ்தாயி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவிட்டது. அவருடைய பிள்ளை வயதாகி, நல்ல உத்தியோகத்துக்கு ஏற்பாடு செய்து கொள்ளுமுன் தகப்பனார் இறந்துவிட்டபடியால் எங்கும் நுழைந்து கொள்ளப் போதிய தீவிரமோ ஞானமோ இன்றி ‘ஸர்’ பெரியாரின் பிள்ளை என்ற கௌரவத்துடன், புகழுடன் திருப்தி அடைய வேண்டியதாகிவிட்டது.
ஆனால் ஏராளமான சொத் திருந்தது. அவருக்குப்பின் அவருடைய ஏகபுத்திரன் விசுவநாதராவ் குடும்ப பாரத்தை ஏற்றுக்கொள்ளும். போது குடும்பச் சொத்து ஏராளம் என்பதிலிருந்து படிப்படியாகக் குறைந்து, அவர்கள் சாதாரணமாகப் பணக்காரர்கள் என்று சொல்லும் நிலைமைக்கு வந்து விட்டது. ‘ஸர்’ ராவின் மகனின் மகன் என்ற கொஞ்சம் சந்தேகாஸ்பதமான கௌரவந்தான் விசுவநாத ராவுக்கு உண்டு. அவர் பீ.ஏ.கூட (ஏனோ!) பாஸ் பண்ணவில்லை. ஆனால் ரொம்பவும் நல்ல மனிதர். வயசு ஆக ஆக அவருடைய புத்தியும் விசாலித்துக் கொண்டு வந்தது; தம் பிள்ளைகளுக்கும், மனைவி சகுந்தலாபாய்க்கும் அடங்கி நடப்பதுதான் புத்திசாலித்தனமான காரியம் என்று அவர் உணர்ந்திருந்தார்; அவர் தம் நல்லதனத்தை எப்பாடுபட்டும் நிலை நிறுத்திக்கொண்டு விடுவது விடுவது என்று தீர்மானித் திருந்தார். சகுந்தலாபாயின் கெட்டிக்காரத்தனத் தால், நிர்வாகத் திறமையினால் குடும்பமும் சற்றுச் சீரடையும் போலத்தான் இருந்தது. விசுவநாதராவின் பிள்ளைகள் நால்வரும் பி.ஏ., வரையில் படித்துப் பாஸ் பண்ணிவிட்டு, இந்தியாவில் மூலைக்கொருவராக உத்தியோகத்திலிருந்தார். மிகவும் சமீபத்திலிருந்த பையன் -மூன்றாவது பையன் – சென்னைக் கஸ்டம்ஸில் நாற்பது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தான். மற்ற மூவரும் தபாலில்கூட இரண்டு நாட்களில் எட்டிப்பிடிக்க முடியாத பிரதேசங்களில், ஆனால் சாசுவதமான சர்க்கார் உத்தியோகங்களில் இருந்தனர்; ஊர் திரும்பும்போது பென்ஷனுடன் தான் திரும்புவார்கள். எது எப்படிப் போனாலும் ஏதாவது ஒரு விடுமுறைக்கு ஒருவராக அவர்கள் வந்து கும்பகோணத்தில் தங்கள் தாய் தந்தையருடன் சில நாள் தங்கிப் போவார்கள்.
சென்னைக் கஸ்டம்ஸில் வேலையாயிருந்த பையனின் மூத்தபிள்ளை பிறந்து இரண்டு வயசிலிருந்து கும்பகோணத்தில் சகுந்தலாபாய் வீட்டில்தான் வளர்ந்துவந்தான். அவன் பெயர் குண்டுராவ். சாரதா அந்த வீட்டிற்குக் குடிவந்த போது குண்டுராவுக்கு வயது மூணு. வெறும் குறும்பன் ; துஷ்டப்பிள்ளை ; கையும் காலும் துருதுருவென்று சதா ஏதாவது விஷமம் செய்யத் துடித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பார்க்க மிகவும் சாது போலப் பால் வடியும் முகத்துடன், அழகாயிருப்பான். சாரதாவிடம் அவனுக்கு உயிர். சாரதாவுக்கும் அவனிடம் அலாதிப் பிரியந்தான். சகுந்தலாபாய் கூட என்றைக்காவது ஏதாவது சந்தர்ப்ப விசேஷத்தால் சிடுசிடுப்பாக முகத்தைக் கோணிக் கொண்டிருந்து விட்டால், சாரதா குண்டுராவிடம் பேசுவதில், விளையாடுவதில் அதை மறக்க முயலுவாள்.
சகுந்தலாபாய்க்கும் அவனிடம் ரொம்பப் பிரியம். அவனை ஏதாவது கேள்விகேட்டு அவன் கொச்சைத் தமிழிலும் மராட்டியிலும் மழலையாகப் பதில் சொல்லுவதைக் கேட்டுக்கொண்டு சாரதாவும் சகுந்தலாபாயும் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பார்கள். சாரதாவின் தினசரி நாயகக் கனவுகளிலே குண்டுராவைப்போன்ற ஒரு குழந்தைக்கும் எங்காவது ஓர் இடம் இருக்கும் என்பதிலிருந்து அவள் அவனிடம் வைத்திருந்த அன்பின் ஆழத்தை ஒருவாறு அறியலாம். குண்டுராவ் சாரதாவுக்கு வைத்திருந்த பெயர்தான் அழகி. அந்தப் பெயர் அவளுக்கு வந்தது ஒரு கதை.
விசுவநாதராவின் வீட்டில் அவருடைய முன்னோர்களின் ராஜவம்சத் தொடர்பின் சின்னமாக மிகுந்திருந்த சாமான்களில் அநேகமாக எவ்விதத்திலும் இன்று உபயோகிக்க முடியாத சாமான்களே அதிகம்.
வெறும் அலங்காரமாக, உபயோகப்படா விட்டாலும் விற்றுத் தொலைத்துவிட முடியாது என்ற காரணத்தினால், அவை எல்லாவற்றையும் வீட்டில் பல பாகங்களில் சேமித்து வைத்திருந்தார்கள். அபூர்வ விசிறிகள், பொம்மைகள், வேலைப்பாடமைந்த சிறு சிறு பெட்டிகள் குளோபர் விளக்குகள், நிலைக் கண்ணாடிகள், தஞ்சாவூர் சித்திரகாரர்களின் படங்கள், இவைபோன்ற பல சாமான்கள் அவர் வீட்டில் பாகங்களை அலங்கரித்தன. கடைசியாகச் சொன்ன படங்களில் ஒன்று ஒரு ஸ்திரீயின் படம். பழைய பாணியில் தலைவாரிச் சீவி, இன்று வழக்கிலில்லாத நகைகள் அணிந்த ஒரு ஸ்திரீயின் படம். அந்த ஸ்திரீயின் முகத்திற்குச் சித்திரகாரன் எப்படியோ ஒருவித அழகும் கவர்ச்சியும் அளித்திருந்தான். இந்தப் படம், சாரதாவின் மனத்தை ரொம்பவும் கவர்ந்தது. அவள் அதற்கெதிரே நின்றுகொண்டு பத்து நிமிஷம், இருபது நிமிஷம் என்று நாழியானதே தெரியாமல் ஏதோ அந்தரங்கமான யோசனைகளில் ஆழ்ந்தவளாக, அசையாது நிற்பாள். சில சமயம் குண்டு ராவையும் இடுப்பில் வைத்துக்கொண்டு அவனுக்கும். படத்தைக் காட்டி, “பாத்தியா…படம்… அழகி படம் …அழகி” என்பாள். குண்டுராவுக்குப் பாக்கி ஒன்றும் வாயில் வராது. “அழகி, அழகி ” என்று மட்டும் நாலு தரம் திருப்பித் திருப்பிச் சொல்லுவான். சாரதாவைக் கண்டவுடன் ‘அழகி’ என்ற வார்த்தைதான் அவனுக்கு முதலில் ஞாபகம் வரும். படத்திலிருந்த முகத் துக்கும் சாரதாவினுடைய முகத்திற்கும் ஏதோ ஒரு வித ஒற்றுமை இருக்கத்தான் இருந்தது. அவ்வளவு தான். அதிலிருந்து விசுவநாதராவ், முதல் பெஷாவரிலிருந்த அவருடைய மூத்த மகனின் சம்சாரம் வரையில் எல்லோரும் நாளடைவில், அதாவது விடுமுறை நாட்களடைவில், சாரதாவை அழகி என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
தன் வீட்டுக் காரியத்தையும், சகுந்தலாபாய் வீட்டுக் காரியத்தையும் செய்து முடித்தான பிறகு சாரதாவுக்குத் தன்னுடையது என்று சொல்லிக் கொள்ளக்கூடிய போது ரொம்ப ஸ்வல்பந்தான். அந்த ஸ்வல்பப் போதிலும் பெரும் பகுதி சாரதாவும் அறியாமலே குண்டுராவுடையதாகப் போய் விடும். இரண்டு வருஷங்களாக இரவில் மட்டும் கனவு கண்டு வருவது போதாது என்று சாரதா பகலில், வெயிலோ, நிழலோ என்று கூடக் கவனியாமல், ஒழிந்த நேரமெல்லாம் மொட்டை மாடிக்குப்போய் கைப்பிடிச் சுவரின் மேல் சாய்ந்துக்கொண்டு, உயர அங்கே வீசும் காற்றைச் சகித்துக்கொண்டு, கண்கள் திறந்தபடி எதையும் காணாதிருக்க, பகற் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுவாள்.
இரவுக் கனவுகளும், பகற் கனவுகளும் சாரதாவைப் பற்றிய வரையில் ஒரே விஷயத்தைப் பற்றித்தான் என்று சொல்ல வேண்டிய அவசிய மில்லை. ஒரு நாயகன் தான் அதில் முற்றிலும் சரியான படி உருவமாகாத முக்கிய பாத்திரம்; சில சமயம் குண்டுராவைப் போன்ற குழந்தை ஒன்று ; ஒரு வீடு வாசல் குடித்தனம் எல்லாம் அவள் கனவுகளின் முக்கிய அங்கங்கள். கனவு என்று எவ்வளவுதான் கேலியாகச் சொன்னாலும் சாரதாவுக்கு அந்த நாட்களில் வாழ்க்கையை ஏதோ கூடிய மட்டும் சகிக்கக் கூடியதாகச் செய்தது இந்தக் கனவுகள்தாம் என்று சொல்ல வேணும். வீட்டிலே எவ்வளவோ தொல்லைகள் ; கல்யாணமாகாத பெண், பெரிய பெண், வீட்டிலிருக்கிறாள் என்றால், அவளுடைய பெற்றோருக்கும். பொறுப்பு அதிகம் என்பதனால், அவர்களுக்கே அகாரணமாகக் கோபமும் ஆத்திரமும் வந்துவிடும். ஏதாவது சொல்லிக் காட்டிச் சீண்டிக் கொண்டே இருப்பார்கள் ; பெண்ணின் வாழ்க்கையை எவ்வளவு கசப்புள்ளதாகச் செய்யலாமோ அவ்வளவும் செய்து விடுவார்கள்; அதையெல்லாம் தப்பிச் சுமுகமாக இருப்பதற்காக என்றேதானோ என்னவோ, ஈசுவரன் கன்னிகளுக்கே பிரத்தியேகமான இந்தக் கனவுகளைப் படைத்திருக்கிறான் !
மிகவும் ரம்மியமான அவ்ளுடைய பகற் கனவுகளினூடே சில சமயம் அதில் பட்டும் படாமலும் கலந்து அவள் நின்றிருந்த மாடிக்கெதிரே இருந்த மாடியில் மனம்போனபடி நடமாடித் திரிந்து கொண்டிருந்த சில ஆண் உருவங்கள் அவள் கண்ணில் படும். ஆனால் அந்த ஆண்களை விட அவளுக்குத் தன் பகற் கனவுகள் தான் முக்கியம். அந்த ஆண்கள் அந்த மாடியில் அப்படி நடமாடித் திரிந்துகொண்டிருந்ததற்குக் காரணம் தான்தான் என்று அவள் அறிந்து கொள்ளவில்லை; அவ்வளவு சாது அவள்.
எதிரேயிருந்த மாடி வேறு ஒரு தெருவிலிருந்த பெரிய வீட்டின் பின்புறம். அதன் கீழ்த்தளத்தில் ஒரு ஜவுளிக்கடையும், பாத்திரக்கடையும் இருந்தன. முதல் மாடியில் சில அறைகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சில கல்லூரி மாணவர்கள் வசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த மாணவர்களின் உருவந்தான் சில சமயம் அப்படிச் சாரதாவின் பகற்கனவுகளில் குறுக்கிட்டன. ஏதாவது காரணமாக வந்தா லொழிய அந்த மாடியின் பின்பக்கம் யாரும் வர வேண்டிய அவசியமே கிடையாது. பெரிய விசாலமான மாடி அது. முன்புறம் நின்றால்தான் கடை வீதியும், கடைக்கு வந்து போய்க் கொண்டிருப்பவர் கூட்டமும் கோலாகலமாக, உத்ஸாஹமாகக் கண்ணில் படும். பின்புறம் ஒரு ‘குருட்டு’ வீதியும், ஈ காக்காய் இல்லாத பாலைத் தோற்றமுந்தான். ஆனால் வளர்ந்த மாணவர்களுக்குப் பதினாறு வயதுப் பெண்ணைவிடப் பெரிய காரணம் வேறு ஒன்று வேணுமா என்ன ? அந்தப் பெண்ணுக்கும் பெயர் அழகி. அது ஒரு குழந்தை இட்ட பெயர்தான்; அதனாலென்ன? அந்தக் குழந்தை ஆண் குழந்தை அல்லவோ? உண்மைதான்;
அழகி அந்த மாணவர்களுக்கு அந்தப் பெயர் வெகு நாள் வரையில் தெரிந்திருக்க நியாயமில்லை. எனினும் அவள் பார்ப்பதற்கு அழகிதான் என்று எவ்வளவு தூரத்தி லிருந்தாலுந்தான் அவர்கள் தெரிந்துகொண்டு விடுவார்களே !
எதிர் மாடி அழகி மாடிக்கு வந்திருக்கிறாளா என்று பார்க்கப் பகலில் எந்த நேரத்திலும யாராவது ஒருவன் கனத்த காரியமாக அந்த மாடியில் பின்புறம் வந்து உலாத்திவிட்டுப் போவான். அவன் தனியாயிருக்கும்போது சாரதா அவன் கண்ணில் பட்டுவிட் டால் அன்று ஒரு பீரியடோ, இரண்டோ, மத்தியான்னமோ, காலை வேளையோ அல்லது அன்று முழுவதுமேயோ கல்லூரியிலிருந்து மட்டந்தான். மாலை வேளைகளில் அந்த மாடியில் கொஞ்சம் கூட்டமாகவே இருக்கும். சாரதாவுக்கு ஐந்து மணி ஆவதற்குள் அநேகமாக வேலையெல்லாம் ஆகிவிடும். மாடியில் போய், கைப்பிடிச் சுவரின்மேல் சாய்ந்து கொண்டு நின்றுவிடுவாள். என்றைக்காவது அவளுக்கு அதிக வேலையிருந்து அவள் அந்தச் சமயம் மாடிப் பக்கம் வராதிருந்து விட்டால் சூரியாஸ்தமனத்துடன் மாணவன் ஒவ்வொருவனுக்கும் தன் வாழ்க்கைச் சூரியனும் அஸ்தமித்து இருட்டிவிட்டது போல ஓர் ஏக்கம் பிறந்துவிடும். ஆனால் சாரதா இரண்டு மூன்று மாத காலத்தில் ஓரிரண்டு நாட்கள்தான் அப்படி மாடிக்குப் போகாதிருந்த நாட்கள். மாடியிலிருந்து தெருவிலே பார்க்க ஒன்றுமே கிடையாது: அத்வானந்தான். தங்களைப் பார்க்கத்தான் அவள் தினம் அப்படி வருகிறாள். அப்படித்தான் இருக்கும் என்று மாணவர்கள் தங்களுக்குள்ளேயே நினைத்துக்கொண் டிருந்தார்கள் போலும்.
ஆனால் சாரதாவுக்கு அங்கு யாரும் தன்னைக் கவனிப்பார்கள் என்ற உத்தேசமோ, ஆசையோ, பயமோ இல்லை. சகுந்தலாபாயிடம் எண்ணெய் தடவித் தலைவாரிப் பின்னிப் பூ வைத்துக்கொண்டு, முகத்தைக் கழுவிப் பொட்டிட்டு, கூடியவரையில் அலங்காரமாகவேதான் அவள் மாடிக்கு வருவாள். அவளுடைய சாதாரணப் பெண்சுபாவம் அது. தவிரவும் கனவில் தன் நாயகனைச் சந்திக்கப்போகிறவள் அல்லவா? அவளை அந்த மாணவர்கள் கவனித்து எவ்வளவோ நாட்களாகி விட்டன எனினும் அவள் இன்னும் அந்த மாணவர்களைக் கண்ணெடுத்தும் சரியாகப் பார்த்ததில்லை. தனக்காகத்தான் அவர்கள் அங்கு அப்படிப் பள்ளிக்கூடம் போடுகிறார்கள் என்று அவளுக்குத் தெரியவும் தெரியாது. தாங்கள் அங்கிருப்பதை அந்த மாணவர்கள் அவளுக்குத் தெரிவிக்க முயலவில்லை. பாதி நாள் அவள் மாடிக்கு வந்துசேரு முன்னரே அவர்கள் அங்குவந்து சுவரில் இஷ்டப்படி சாய்ந்துகொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருப்பார்கள். பாட்டும், சீட்டியும், பேச்சும் பலமாக இருக்கும். சாரதாவின் உருவம் தென் பட்டதும் இதெல்லாம் கொஞ்சம் அடங்கும். ஆனால் மறுபடியும் சிறிது நேரத்துக்கெல்லாம் பழைய கூச்ச லும் ஆரவாரமும் ஆரம்பித்துவிடும். தெருவில் நட மாட்டமோ வீடுகளோ அதிகமில்லாததால் அவர்கள் கூச்சலையும் சாரதாவின் தனிமையையும் யாரும் கண்டு, தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு வம்பளக்க வில்லை.
ஊரையே எழுப்பிவிடக்கூடிய அந்தக் கூச்சலின் ஓய்ந்த சப்தந்தான் சாரதாவின் காதில் விழுந்தது. அவள் மாடிப்பாடி ஏறி வரும்போதே தன் கனவுகளுக்குத் தயாராகிக்கொண்டு வருவாள். உண்மை நாயகன் ஒருவன் தோன்றும் வரையில் அவள் கனவுகள் எதனாலும் கலைபடாதவை. ஆனால் அந்த வாலிப மாணவர்களுக்குத் தங்கள் பாட புஸ்தகத்தில் இருந்ததைத் தவிர வேறு என்ன தெரியும் ? கன்னிப் பெண் புனிதமானவள், அவள் கனவுகள் புனிதமானவை என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளுவார்களா என்ன? அவர்களுக்கு எல்லாம் கேலியும் நகைப்பும் கூத்துந்தான். அவள் கற்சிலைபோல நின்றிருப்பாள். அந்த மாணவர்களின் கூச்சல், பேச்சு, மனம் எல்லாம் சதா அவள் பக்கமே சென்று கொண்டிருக்கும்.
ஒரு நாள் மாலை ஐந்தரைமணி சுமாருக்கு மேலே இந்த ‘நடி’ இல்லாத நாடகம் நடந்துகொண்டிருக் கையில் தன் அழகியைத் தேடிக்கொண்டு குண்டுராவ் மொட்டை மாடிக்கு வந்தான். அவன் நாலைந்து வாரமாகப் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்துப் போய்க் கொண்டிருந்தபடியால் சாரதாவும் அவனும் நாள் பூராவும் சேர்ந்திருப்பதற்கில்லை. ஸ்லேட்டையும் புஸ்தகங்களையும் கூடத்தில் எறிந்துவிட்டு, சாரதா எங்கே என்று விசாரித்துக் கொண்டு மேல் மாடிக்கு வந்தான். படிகளில் ஏறும்போதே அவன், “அழகி! அழகி!” என்று உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டே தான் வந்தான். மாடியிலும் முதலில் அவள் அவன் கண்ணில் படாததால் இரண்டு முன்று குரல் “அழகி!” அழகி!” என்று ஊர் முழுதும் கேட்கும் படியாகக் கூப்பிட்டான்.
அவனுடைய முதல் குரல் நிச்சயமாக எதிர்மாடி வரையில் எட்டியிராது. ஏனென்றால் மாணவர்களின் கூச்சல் பலமாக இருந்தது. குண்டுராவ் இரண்டாவது தரம் கூப்பிட்ட போது கூச்சல் அடங்கிவிட்டது. அவனுடைய மூன்றாவது “அழகி!” எதிர்மாடியில் நின்ற எல்லோருடைய காதிலும் ஸ்பஷ்டமாக விழுந்திருக்கும்.
சாரதா கனவுகள் கலைந்து திரும்பிய சமயமும், எதிர்வீட்டு மாடியிலிருந்து ஒரு வினாடி ஆழ்ந்த மௌனத்துக்குப்பின் ‘கொல்’ என்று பலருடைய உரத்த நகை ஒலி எழுந்த சமயமும் ஒத்துக் கொண்டன. அந்த நகைப்புச் சப்தங் கேட்டுத் திடுக்கிட்டு, சாரதா திரும்பி அந்த மாணவர் கூட்டத்தை ஏறிட்டுப் பார்த்தாள். ஒரு வினாடி அவளுக்கு ஒன்றும் புரியவில்லை; ஏன் அவர்கள் அப்படி உரக்கச் சிரித்தார்கள் தன்னைப் பார்த்துக்கொண்டு என்று முதலில் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. சட்டென்று, விஷயம் புரிந்ததும், தலை குனிந்தாள்; அவள் முகம் குப்பென்று சிவந்தது; அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. என்னவோ போலிருந்தது.
இனிமேலும் தான் அங்கு நின்றுகொண்டிருப்பது தவறு என்று சாரதா, தன்னைத் தேடிக்கொண்டு ஆவலுடன் வந்த குண்டுராவுடன் கூடப் பேசாமல், அவன் வருகிறானா என்று பார்க்கக்கூடத் தாமதிக்காமல், சடசடவென்று மாடிப்படி இறங்கிக் கீழே போய்விட்டாள்.
2
சாரதாவுக்கும் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. பெண்ணென்று ஹிந்துக்களிடையே பிறந்துவிட்ட அவளுக்கென்று பிரம்மதேவன் ஓர் ஆண் மகனைச் சிருஷ்டிக்காமலா விட்டிருப்பான்?
சாரதாவுக்குக் கல்யாணம் நிச்சயமான விஷயத்தில் தெய்வமேதான் இரங்கிக் கண்ணெடுத்துப் பார்த்துக் குறுக்கிட்டிருக்க வேணும். இல்லாவிட்டால் நடேச ஐயரின் முயற்சியால்மட்டும் அது அவ்வளவு சீக்கிரம் நடந்திராது. எப்படியோ வேளையும் போதும் காரியமும் ஒத்துக்கொண்டன. அது மட்டுமல்ல: நடேச ஐயரின் கையை எதிர்பார்க்காமலே கல்யாணம் நிறைவேறிவிடும் போலிருந்தது. பையன் வீட்டுக்காரருக்கு அவர் நேரில் போயோ, தபால் மூலமாகவோ சாரதாவின் ஜாதகத்தைக் கூட அனுப்பி வைக்கவில்லை. நடேச ஐயரிடம் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் யாரோ நண்பர் ஜாதகத்தை அவர்களிடம் கொடுத்திருந்தாற் போல் இருந் தது. ஜாதகம் ஒத்திருந்தது என்றும், பையனும் தாமும் திருவாரூரிலிருந்து பெண்ணைப் பார்க்க வருவதாகவும் பையனின் மாமா ஒருநாள் காலை கடிதம் எழுதிப்போட்டுவிட்டு மறுநாள் மாலை மூன்று மணிக்கெல்லாம் வந்து சேர்ந்துவிட்டார். நடேச ஐயரிடம் அன்று சோதனையாகக் காபி பலகாரம் செய்து வைக்க ஏதாவது வாங்கக் கூடக் கையில் காசில்லை. அதற்காக நடக்க வேண்டிய காரியம் நின்றுவிடுமா என்ன ? அலமேலு அம்மாள் சகுந்தலாபாயிடம் விஷயத்தைச் சொல்லி வேண்டிய சாமான்களை எல்லாம் வாங்கித் தயார் செய்து வைத்து விட்டாள்.
மாலை மூன்று மணிக்கு மாப்பிள்ளைப் பையனும் அவனுடைய மாமாவும் குதிரை வண்டியில் வந்து அவர்கள் வீட்டுவாசலில் இறங்கினார்கள். நடேச ஐயர் அவர்களைத் தக்கபடி வரவேற்று உபசாரங்கூறி உள்ளே அழைத்துக் கொண்டு போனார். பையனின் பெயர் சிவசுப்பிரமணியன். இருபத்திரண்டு வயதிருக்கும். பி. ஏ. பரீக்ஷைக்கு அந்த வருஷந்தான் பணங்கட்டிப் போயிருந்தான்; ரிஸல்ட் தெரிய வேணும்: அநேகமாகப் பாஸாகிவிடலாம். கும்ப கோணத்தில்தான் அவன் பி. ஏ.க்கும் படித்தானாம். தான் பெண்ணை ஏற்கனவே பார்த்திருந்ததாகவும், தன்னைப் பற்றிய வரையில் திருப்திதான் மாமாவும் பார்க்கட்டும் என்றுதான் அவரை அழைத்து வந்ததாகவும் பையன் சொன்னான். மாமாவைத் தவிர அவனுக்குக் கிட்டிய பெரிய உறவினர் யாரும் இல்லை. தாயும் தகப்பனும் இறந்து பல வருஷங்களாகி விட்டன. பதினைந்து வயதில் ஒரு தம்பியும், பன்னிரண்டு வயதில் ஒரு தங்கையும் மட்டுந் தான் அவனுக்கு இருந்தார்கள். அவர்கள் இருவரும் மாமாவிடந்தான் வளர்ந்து வந்தார்கள். ஆனால் அவன் கல்யாணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்த ஆரம்பித்தால் தம்பி தங்கை இருவரையும் தன்னுடன்தான் கொண்டுவந்து வைத்துக்கொள்ள வேணும் என்றான் பையன். சொத்து ஏதோ பதினாயிரம் பெறுமானது இருந்தது. கொஞ்சம் நில புலன்களும் திருவாரூரில் சொந்தவீடொன்றும் இருந்தனவாம்.
இதெல்லாம் பையன் தன்னைப் பற்றித் சொல்லிக் கொண்டதுதான். வாயைத் திறந்து எதுவும் தானாகவே விசாரிக்க நடேச ஐயருக்குத் தைரியமில்லை; உபசாரமாக ஏதாவது வார்த்தை சொல்லுவதுடன் நிறுத்திக்கொண்டு விட்டார். நல்ல வரன்போலத்தான் பட்டது. ஆனால் ‘லௌகிகத்தை ‘ப் பற்றித் தாமாக எதுவும் ஆரம்பிக்க அவருக்குத் தைரியமில்லை. எத்தனையோ தடவை பட்டவர்; அதனால் இதுவும் நழுவிவிடுமோ என்று அவருக்குப் பீதி.
ஆனால் தெய்வசித்தம், இந்த வரன் நழுவுவதாக இல்லை. பையனுடைய மாமாவே நடேச ஐயரைத் தனியாக அந்தண்டை அழைத்துப்போய் விஷயத்தைச் சொல்லிவிட்டார். அவன் எங்கேயோ அகஸ்மாத்தாக அவர் பெண்ணைப் பார்த்ததாகவும், அவளையே கல்யாணம் பண்ணிக் கொள்ளுவது என்று தீர்மானித்திருந்ததாகவும், அந்த விஷயத்தில் அவன் பிடிவாதமாகவே இருந்தான் என்றும், கல்யாணத்தை உப்பிலியப்பன் கோயிலில் ஒருநாள் சகல செலவையும் தாமே ஏற்றுக்கொண்டு செய்துகொள்ள அவன் தயாராக இருந்ததாகவும் சொன்னார். நடேச ஐயருக்குத் தம் காதுகளையே நம்ப முடியவில்லை. வந்தவர்கள் இருவரையும் கூடத்தில் உட்கார்த்திவைத்து விட்டு அவர் தம் மனைவியுடன் சமயலறைப்பக்கம் போய்க் குசு குசுவென்று பேசிவிட்டு வந்தார். நல்ல வரன் போலத்தான் இருந்தது; ஆனால் இவ்வளவு எளிதாக முடியும்போலிருக்கிறதே, அதில் ஏதாவது சூதிருக்குமோ என்று அவர்களுக்குச் சந்தேகமாயி ருந்தது. சமையலறை சின்ன ஜன்னல் வழியாக வெளியே கூடத்தில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சாரதாவை அழைத்து, அவள் என்ன சொல்லுகிறாள் என்று கேட்டார்கள். அவள் முதலில் ஒன்றும் சொல்லவில்லை ; மென்று முழுங்கித் தயங்கினாள்; கடைசியில் “ஏதாவது கல்யாணம்னு ஆயிடட்டும்; அப்புறம் விதி விட்டவழி விடறது! ” என்று சொல்லிவிட்டுச் சரேலென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டாள்.
விதியின் தலையில் பாரத்தைப்போட நடேச ஐயரும் தயாராகவேதான் இருந்தார். ஆனால் அவர் மனைவிக்கு மட்டும் கடைசிவரையில் கொஞ்சம் மன சு கஷ்டமாகவே இருந்தது. இப்பொழுது சத்தியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தது போலக் காட்டிக்கொண்டு விட்டு, பின்னால் திருவாரூர் போய் நேரில் பையனைப் பற்றிச் சகல விஷயங்களையும் விசாரித்துக் கொண்டே- கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைக்க வேணுமென்றாள் அலமேலு அம்மாள்.
சாரதாவுக்கு என்னவோ அந்த வரன் வந்து கூடத்தில் உட்கார்ந்த போதே அவரே தன் கணவராகப் போகிறவர் என்று மனத்தில் சந்தேகத்துக்கே இடமில்லாமல் தட்டிவிட்டது. எப்படி என்று அவளுக்கே தெரியவில்லை. வந்திருந்தவர் தன் கனவுகளில் வந்த எந்த நாயகனையும் போல இல்லை. கொஞ்சம் கறுப்புத்தான். சப்பட்டை மூக்கு; செம்பட்டையான மயிர்; இந்தக் காலத்திய சாதாரணக் கல்லூரி மாணவர்களைப் போல அவர் கிறாப் வைத்துக் கொண்டிருக்கவில்லை ; குடுமிதான்; முதுகும் கொஞ்சம் கோணலாகக் கூனியிருந்தது. ஆனால் அவரே தன் கணவர் என்பதில் சாரதாவுக்கு ஆரம்ப முதலே சந்தேகம் சிறிது கூடத் தோன்றவில்லை. தன் தாயும் தகப்பனாரும் தன் கணவராகப் போகிறவரைப் பற்றிக் காரணமில்லாமல் இப்படிச் சந்தேகப்பட்டது அவளுக்குக் கோபம் வந்தது. ஆனால் அவர்கள் தன் நன்மையை உத்தேசித்தே இதையெல்லாம் யோசித்தார்கள் என்றும், தனக்கு அதுபற்றி ஆத்திரம் வந்தது தெரிந்தால் அவர்கள் கேலிக்கு ஒரு முடிவே இராது என்றும் அறிந்து அவள் எதுவும் பேசாமல் இருந்துவிட்டாள்.
நடேச ஐயர் மறுபடியும் கூடத்தில்போய் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டார். “அம்மா, சாரதா, வந்து நமஸ்காரம் பண்ணேன்” என்றார். சாரதா நாணிக் கோணிக் குறுக முயலாமல், சாதாரணமாக நடந்து வந்து முதலில் சுவாமி படத்துக்கும், பின்பு சிவசுப்பிரமணியத்தின் மாமாவுக்கும், சிவசுப்பிரமணியத்துக்கும், தன் தகப்பனாருக்கும் நமஸ்காரம் பண்ணிவிட்டு உள்ளே போனாள். அவள் மனத்தில் உள்ளூற ஒரு கொந்தளிப்பு இருந்தது. எனினும் அதைக் கூடியவரையில் அவள் அடக்கிக்கொண்டு, சின்னப் பெண்ணாகப் பயந்தவள் போலக் காட்டிக்கொண்டு வந்தவர்களை ஏமாற்ற முயலாமல் சுபாவமாகவே நடந்துகொண்டாள். அன்றைக்கென்று அவள் தாயாரும் சகுந்தலாபாயும் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அவள் விசேஷ அலங்காரங்கள் கூடச்செய்து கொள்ள மறுத்து விட்டாள். வழக்கமாகச் செய்யாத காரியம் ஒன்றுதான் அவள் அன்று செய்தாள்; என்றும் நாலுமணிக்கு முன் தலைவாரி, முகம் கழுவியதில்லை அவள்; இன்று இரண்டரை மணிக்கே. அதையெல்லாம் செய்து கொண்டிருந்தாள். தினசரி உடுத்துக்கொள்ளும் புடைவையைத் தான், தினசரி உடுத்துக்கொள்ளுவது போல அமரிக்கையாக அணிந்து கொண்டிருந்தாள். அவள் அம்மாவுக்கு இதெல்லாம் பற்றி ரொம்பக் கோபம். ஆனால் சாரதா, இந்த வேஷமெல்லாந்தான் சென்ற மூன்று வருஷமாகப் போட்டுப் பார்த்தும் பலிக்கவில்லையே !
“இன்று வேஷம் வேண்டாம்” என்று கசப்புடன் சொல்லி விட்டாள். அவள் தாயார், “என்ன பிடிவாதம் !” என்று முணுமுணுத்தாள்; பெண்ணின் கன்னத்தை இழைக்காத குறைதான். ஆனால் வரன் வந்து கூடத் தில் உட்கார்ந்ததைக் கண்டது முதலே சாரதாவுக்குத் தான் அன்று செய்ததற்கெல்லாம், பிடித்த பிடிவாதத்துக்கெல்லாம் காரணம் மனக்கசப்பு அல்ல, தெய்வாதீனமாகத் தானே அறியாமல் பெற்றுவிட்ட ஒரு நிச்சயந்தான் என்று தோன்றிவிட்டது.
டிபனைக் கொண்டுபோய் வைக்க ஒருதரம், தீர்த்தம் கொண்டு போய் வைக்க ஒருதரம், காபி கொண்டு போய் வைக்க ஒருதரம், வெற்றிலை பாக்கு கொண்டு போய் வைக்க ஒருதரம் ஆக நாலுதரம் சாரதா கூடத்துக்குப் போய்விட்டு வந்தாள். ஒவ்வொருதரமும் சிவசுப்பிரமணியத்தின் பார்வை தன் மேல் இருந்ததை அவள் உணர்ந்தாள். இரண்டொரு தரம் அவளும் தைரியமாகத் தலையை நிமிர்த்தி அவரைப் பார்க்க, நேருக்கு நேர் பார்ப்பது என்று தீர்மானித்து, நிமிர்ந்தாள். ஆனால் சுபாவமாகவே உள்ள ஒரு நாணம் அதைச் செய்யவெட்டாமல் அவளைத் தடுத்தது.
சாரதாவின் தம்பிகளும், தங்கையும் கிடைத்த காபியையும், சொஜ்ஜியையும் ஒரு கை பார்த்துக் கொண்டு நடேச ஐயருக்குப் பக்கத்தில் வேறு எதையும் பற்றிக் கவலையின்றி உட்கார்ந்திருந்தார்கள். அந்தச் சமயம் பள்ளிக்கூடத்திலிருந்து குண்டு ராவ் எக்காரணத்தாலோ சீக்கிரமே வீடு திரும்பித் தன் வீட்டில் சட்டை எல்லாவற்றையும் கழற்றிப் போட்டுவிட்டுத் தன் சாரதாவைத் தேடிக்கொண்டு உள்ளே வந்தான். அவன் இப்பொழுதெல்லாம் அவளை அழகி என்று அழைப்பதில்லை; “அழகி” என்று தன்னை அழைக்கக்கூடாது, என்று நாலு மாசத்துக்கு முன் ஒரு ஒரு நாள் அவள் உத்தரவிட்டாள் ; ஏன் என்று குண்டுராவுக்குத் தெரியாது. சாரதா என்ற பெயரைவிட அழகி என்ற பெயர்தான் அவளுக்கு ரொம்பவும் பொருத்தமான பெயர் என்று அவனுக்குத் தோன்றிற்று.
ஆனால் “அழகி” என்று கூப்பிட்டால் அவள் ஏனென்று கேட்கமாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். அவளை, சாரதா என்று கூப்பிடவே அவன் இப்பொழுது பழகிக்கொண்டிருந்தான். சாரதாவைத் தேடிக்கொண்டு வந்த குண்டுராவின் கண்ணில் அங்கே புதுசாக யாரோ உட்கார்ந்து கொண்டிருந்தது படவே “சாரதா! சாரதா!” என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே ஒடி வந்தான். நடேச ஐயர் அவனைக் கூடத்திலேயே நிறுத்திக்கொள்ள முயன்றார். ஆனால்,அவன் அவர் கையில் படாமல் தப்பி ஓடிவிட்டான். சமையலறைக்குள் ஓடினான்.
“யார் அது பையன்?” என்று விசாரித்தான் சிவசுப்பிரமணியன்.
வீட்டுக்காரராத்துப் பையன். அவனுக்குச் ‘சாரதாவிடந்தான் உயிர்’ என்றார் நடேச ஐயர்.
குண்டுராவ் சாரதா வீட்டுச் சமையலறையில் தன் பாட்டியையும் கண்டு திகைத்துப் போனான். அவன் அதற்குமுன் அவளை அங்கே கண்டதே இல்லை. ஜன்னலண்டை தன் சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு நிற்க முயன்ற சாரதாவிடம் போய் அவன், “சாரதா! சாரதா!” என்று அவள் புடைவைத் தலைப்பைப் பிடித்திழுத்துத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். சகுந்தலாபாய்தான் அவனைப் பிடித்து இழுத்துவந்து, சாரதாவைத் தொந்தரவு பண்ணா தேடா, குண்டு. அதோ பார் கூடத்திலே, ஒரு மாமா புதுசாக உட்கார்ந்திருக்கா பாரு. அந்த மாமாதான் சாரதாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு தம்மோடு ஊருக்கு அழைத்துக்கொண்டு போகப்போ கிறார்……” என்று மெதுவாகச் சொன்னாள்.
சமையலறைக்குள்ளிருந்து குண்டுராவ் வெளியே கூடத்துக்குள் எட்டிப்பார்த்தான். யாரோ இரண்டு பேர் புதுசாக உட்கார்ந்திருப்பது அவன் கண்ணில் இப்போதுதான் பட்டது. மெதுவாக அவன் கூடத்துக்கு வந்தான். நடேச ஐயரிடம் வந்து உட்கார்ந்து கொண்டு எதிரே இருந்தவர்களை மிரள மிரளப் பார்த்தான்.
சிவசுப்பிரமணியன் அவன் பக்கம் கையை நீட்டி, “என்னடா பேரு உனக்கு? ‘ என்று கேட்டான்.
என் பேர் குண்டுராவ். “உன் பேரென்ன ?” என்று கேட்டான் குண்டுராவ்.
சிவசுப்பிரமணியன் சிரித்தான். “போக்கிரிப் பயலே ! எந்தக் கிளாசு வாசிக்கறே நீ ?”
“நான் ஒண்ணும் போக்கிரிப் பயலில்லே; சாரதாவைக் கேட்டுப்பாரு…..நீதான் போக்கிரிப் பயல் ; கேட்டால் பதில் சொல்லமாட்டேன்கிறாய்!” என்று தைரியமாக வார்த்தையாடினான் குண்டுராவ்.
“வந்தவர் கோபித்துக் கொண்டுவிடப் போகிறாரே என்று நடேச ஐயர் பயந்துவிட்டார். எதிர்த்துப் பேசக்கூடாதடா, குண்டு” என்றார்.
ஆனால் சிவசுப்பிரமணியன் கோபித்துக் கொள்ளவில்லை; சிரித்துக் கொண்டே கெட்டிக்காரப் பையனுடன் தகுந்தபடி பேச அறியாதவனாக உட்கார்ந்திருந்தான். குண்டுராவ் நடேச ஐயர் பக்கத்திலிருந்து எழுந்து, “நீதான் எங்க சாரதாவை அழைச்சிண்டு போக வந்திருக்காயாமே! நான் ஒன்னோடே பேச மாட்டேன் போ!” என்றான்.
“நீயும் என்னோடே வரயா?”
சற்றுநேரம் அவனைப் பார்த்துக்கொண்டே தயங்கினான் குண்டுராவ். அப்புறம் ஒன்றும் தீர்மானிக்க முடியாமல், “நான் சாரதாவைக் கேட்டுச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடி விட்டான்.
இத்தனையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் சாரதா சமையலறை ஜன்னலில்தான் நின்றுகொண்டிருந்தாள். தான் நின்றுகொண்டிருந்தது கூடத்திலிருந்தவருக்குத் தெரியாதென்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால் சிவசுப்பிரமணியன் கடைக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டே தான் உட்கார்ந்திருந்தான். தனக்குக் கணவனாகப் போகும் அவர் குண்டுராவிடம் கோபங் கொள்ளாமல் அப்படிச் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது சாரதாவுக்கு ஒரு சுப குசகமாகப் பட்டது. அந்த மனிதருடன் வாழ்க்கை நடத்துவது சுலபம்; தன்னைச் சரியாக வைத்துக் கொள்ளுவார் அவர் என்று எண்ணினாள் அவள்.
சாரதாவின் புடைவைத் தலைப்பைப் பிடித்திழுத்துக்கொண்டு நின்றான் குண்டுராவ், அவனுக்கு உண்மையிலேயே தன் சாரதா ஊருக்குப் போய் விடப்போகிறாளோ? போய்விட்டால் என்ன பண்ணுவது ? என்று பயம் வந்துவிட்டது. மனத்தில் இருந்த ஏக்கத்தில், ஆசையில், அழகி என்று தன்னை இனி மேல் கூப்பிடக்கூடாது என்று அவள் உத்திரவிட்டி ருந்தது மறந்து போய்விட்டது. வீடு முழுவதும் ஒலிக்கும்படியாக அவன் கணீரென்று கேட்டான்: “அழகீ! என்னையும் உன்னோடே அழைச்சுண்டு போறயா அழகீ?”
அது கூடத்திலிருந்தவர்கள் காதிலும் நிச்சயமாக விழுந்திருக்கும். ஆனால் அழகி குண்டுராவைக் கோபித்துக் கொள்ளவில்லை. சட்டென்று அவனை வாரி யெடுத்து அணைத்து முத்தமிட்டாள். குழந்தையின் மனத்திலே ஓர் ஆறுதல் பிறந்தது.
சாரதாவுக்கும் சிவசுப்பிரமணியனுக்கும் கல்யாணம் ஒரு வழியாக நிச்சயமான மாதிரிதான். முகூர்த் தம் மட்டும் பின்னால் சந்தித்து ஒரு நாள் ஏற்பாடு செய்யலாம், என்று தீர்மானிக்கப்பட்டது.
அவர்கள் போனபின் சாரதாவின் தாயார் அலமேலு அம்மாளும், குண்டுராவின் தாயார் சகுந்தலாபாயும், குண்டுராவையும் சாரதாவையும் இல்லாதபடி யெல்லாம் பரிஹாஸம் செய்தார்கள். ஆனால் குண்டுராவ் எதையும் லக்ஷியம் பண்ணவில்லை ; சாரதா தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்று அன்று ஏற்பட்ட பயத்தால் அவனுக்கு அவளிடம் ஒட்டுதல் அதிகரித்தது. பெண்மைக்கு மட்டும் உள்ள உரிமைகளுடன் அவர்கள் சாரதாவிடம் வாயைக் கொடுத்து மாப்பிள்ளையைப் பற்றி அவளுக்கும் பூரண சம்மதந்தான் என்று அறிந்துகொண்டு விட்டார்கள்.
நடேச ஐயர் திருவாரூருக்குப் போய்ப் பையனுடைய பூர்வோத்தரங்களை யெல்லாம் விசாரித்துக் கொண்டு வந்தார். அவர்கள் சந்தேகப்பட்டது போல ஒன்றுமில்லை. மட்டமான ஜாதிதான். ஆனால் இந்தக் காலத்தில், அதை யார் பார்க்கிறார்கள்? பையன் தம் பெண்ணைக் கண்டு அவளிடம் அன்புகொண்டு அவளையே கல்யாணம் பண்ணிக் கொள்ளுவது என்று தீர்மானித்திருந்த விஷயம் பற்றி அவருக்கே பெருமையாக இருந்தது. பையனும் ரொம்ப நல்லவன்தான். அவனுடன் பழகப் பழக அவன் தங்கக் கம்பி, அவனை ஆரம்பத்தில் தாம் சந்தேகித்தது தவறு என்று அவருக்கே தோன்றிவிட்டது. பெருமையுடன் இதெல்லாம் பற்றி அவர் தம் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது சாரதா பக்கத்து அறையிலிருந்து ஆனந்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். இடையில் பி.ஏ., பரீக்ஷை முடிவுகளும் வந்துவிட்டன. சிவசுப்பிரமணியன் இரண்டாவது வகுப்பில் தன் கல்லூரியிலேயே முதல் பையனாகத் தேறியிருந்தான். ஏற்கெனவே அழகியான சாரதா அடையாளந் தெரியாத படி புதுப்பூரிப்புடன் இன்னும் அழகு பெற்று விளங் கினாள். இப்பொழுதெல்லாம் அவள் கனவு நாயகன் ஒரே உருவத்துடன்தான் வருகிறான் ; முடிந்த செம்பட்டைச் சிண்டும், கூனல் முதுகும், சப்பட்டை மூக்கும், சிவசுப்பிரமணியன் என்ற பெயருந்தான் இந்த உருவத்தின் முக்கிய சின்னங்கள்.
உப்பிலியப்பன் கோவிலில் தெய்வ சந்நிதியில் திருமணம் நிறைவேறிற்று. அதிக தடபுடலோ, ஆடம்பரமோ இல்லாத கல்யாணம். ஒரு நாள் கல்யாணத்துக்கு இருதரப்பாருக்கும் சேர்த்து ஆறுநூறு ரூபாய்க்கு மேல் செலவிராது. அதில் இருநூறு ரூபாய் தான் நடேச ஐயரின் செலவு மற்றதெல்லாம் பையன் செலவு. கலியாணமான மறுநாளே தன் பெண்டாட்டியை ஊருக்கு அழைத்துச் சென்று விட வேணுமென் றான் சிவசுப்பிரமணியன். திருவாரூரில் அவன் வீட்டில் கிருஹப்ரவேசத்துக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் ஆயிருந்தது. கணவனும் மனைவியும் முதல் ரயிலில் திருவாரூர் போவது என்றும், மற்றவர்கள், அதாவது மனைவியின் குடும்பத்தார் கும்பகோணம் போய் விட்டு இரவே அங்கிருந்து கிளம்பிக் கிருஹப்ர வேச முகூர்த்தத்துக்கு வரவேண்டிய தென்றும் ஏற்பாடாயிற்று. நடேச ஐயர் முதலில் சம்பிர தாயத்துக்கு ஒவ்வாதே என்று இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்க மறுத்தார். ஆனால் கடைசியில் பையனுக்கும் பெண்ணுக்கும் இது ரொம்ப இஷ் டமான விஷயம் என்று அறிந்ததும் குறுக்கே நிற்காமல் சம்மதித்துவிட்டார். பதினேழு வயதுப்பெண்; ஐந்து வருஷமாகத் தன்னை அலையவிட்டுக் கவலைக்குள்ளாக்கிய பெண் – தன் கையை விட்டுப் போய் விட்டது பற்றி அவருக்கும் திருப்திதான். எனினும் அவருக்கும் “அழகி” இல்லாமல் தம் வீடே வெறிச் சென்றுதான் இருக்கும்! குண்டுராவ் அவர்கள் தன்னை அழைத்துக் கொண்டு போவதாக உத்தேசிக்கவில்லை என்று கண்டு அழவே ஆரம்பித்துவிட்டான். ஆனால் சாரதா அவனை வெகுநேரம் சமாதானப்படுத்தி, இன்னும் இரண்டுநாள் கழித்து வந்து அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லி, சாந்தப் படுத்திவிட்டுத்தான் ரயிலேறினாள்.
கணவனும் மனைவியும் ரயிலில் “எதிரும் புதிருமாக” உட்கார்ந்திருந்தனர். சாரதா புது நாட்டுப் பெண்ணாகச் சிறிதும் வேஷம் போட முயலவில்லை. அப்படி வேஷம் போடாமலிருப்பதுதான் தன் கணவனுக்கும் பிடித்தமான விஷயம் என்று அவளுக்கு எப்படித்தான் தெரிந்ததோ !
ரயிலில் கூட்டம் அதிகமில்லை. சாரதாவும் சிவ சுப்பிரமணியனும் திருநாகேசுவரத்திலிருந்து குற்றாலம் வரும் வரையில் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை. என்ன பேசுவது, எப்படிப் பேசுவது, யார் பேச ஆரம்பிப்பது என்று அவர்களுக்குச் சங்கோசமாக இருந்தது. ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டனர். அதுவும் நேரில் பார்த்துக்கொள்ளக் கூட இன்னும் தைரியம் வரவில்லை ; ஒருவர் பார்க்காதிருக்கும் போது மற்றவர் பார்ப்பது என்ற போட்டிக் காரியத்தில் அவர்கள் கண்கள் ஈடுபட்டன. ரயில் குற்றாலத்தைத் தாண்டியவுடன் வெகுநாழியாக அவளையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த சிவசுப்பிரமணியன் திடீரென்று மெதுவாக, “உனக்குக் குண்டுராவ் வைத்திருந்த பெயர்தான் சரியான பெயர்….. நான் உன்னை அழகி என்றேதான் கூப்பிடப்போகிறேன்” என்றான்.
சாரதா நிமிர்ந்து அவனை ஒரு வினாடி பார்த்தாள். அவன் கண்களிலே தன் மனைவி அழகி என்பது பற்றி மிதந்த ஒரு பெருமிதம், பூரிப்பு, ஆனந்தம் அவள் உள்ளத்திலே பளீர் என்று மின் வெட்டுப்போல வெட்டி என்னவோ செய்தன; குப்பென்று உடம்பிலிருந்த ரத்தமெல்லாம் அவள் முகத்தில் ஏறிக்கொண்டு விட்டது; நாணித் தலையைக் குனிந்துகொண்டாள். சிவசுப்பிரமணியன் மேலும் சொன்னான்: ” நீ ஒரு நாள் மேல் மாடியில் நின்று கொண்டிருக்கும் போது குண்டுராவ் வந்து உன்னை ‘அழகி!’ என்று அழைத்தான். ஞாபகமிருக்கிறதா ? எதிர்வீட்டு மாடியில் தினம் நின்றுகொண்டு கூத்தடித்த மாணவர் களில் நானும் ஒருவன்தான். அந்தச் சம்பவத்துக்கப் புறம் நீ மாடிக்கு வருவதே இல்லை… இல்லையா? அன்று சாயங்காலமே நான் இந்த அழகியைக் கல்யாணம் செய்து கொண்டால் செய்துகொள்ளுவது, இல்லா விட்டால் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருந்து விடுவது என்று பிரதிக்ஞை செய்துகொண்டேன். தெய்வ சித்தம், என் பிரதிக்ஞை நிறைவேறியது.
உள்ளத்தில் நிரம்பிய ஒரு கனிவுடன் சாரதா பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.
3
நாமும் இவ்வளவு நாழிகை அவளை அழகி, அழகி யென்றே சொல்லிவந்து விட்டோம். ஆனால் அவள் இப்போது அழகி அல்ல. கையில் ஒரு சிறு கண்ணாடியை வைத்துக் கொண்டு அதில் தன் முகத்தைப் பார்த்தபடியே யோசனைகளில் ஆழ்ந்தவளாகப் படுத்திருந்தாள்.
யமன் வாயிலிருந்து எப்படியோ தப்பி வந்து, ஆனால் இன்னமும் படுக்கையை விட்டு அசையச் சக்தி இல்லாமல் கிடப்பவர்களின் மனத்திலே என்ன என்ன சிந்தனைகள் தான் தோன்றும், அவை எப்படி எப்படி உருவமெடுத்து முக்யத்வம் பெறும் என்று யாராலும் கண்டுபிடித்துச் சொல்ல முடியாது. சர்வ சாதாரணமான சின்ன விஷயத்தைக்கூடப் பெரிதாக்கி அலசி அலசிப் பார்க்க அவர்களுக்குப் போதிய அவகாசம் கிடைத்து விடுகிறது. உடல் ஓய்ந்து அசைவற்றுக் கிடக்கும் போது மனம் மட்டும் சுறு சுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது. ஆசைகள், பாசங்கள், வெறுப்புகள், துன்பங்கள், இன்பங்கள் எல்லாம் புத்துயிர் பெற்று மறுபடியும், மறுபடியும் அவர்களைப் பாதிக்க ஆரம்பித்து விடுகின் றன. எவ்வளவு ஞாபகங்கள்/ என்ன உணர்ச்சி வெள்ளம்!
சாரதா யமலோகம் வரையில் போய் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டாள். பிறந்தகத்துக்கு வந்திருந்த இடத்தில் அவளுக்குப் பெரியம்மை போட்டி, இறங்க இருபத்தெட்டு நாள் பிடித்தது. முதலில் கடுமையான ஜுரம்; பின்பு கடுமையான் வைசூரி – அவள் எப்படியோ அந்தப் பூட்டுக்குத் தப்பிப் பிழைத்துவிட்டாள். ஆனால் அவளை இனி மேல் அழகி என்று யாரும் சொல்ல முடியாது. மறுபடிம் ஒரு தரம் அவள் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். பழைய சாரதாவின் முகம் அல்ல அது ! அகன்று பரந்து முன்னெல்லாம் நீலம் பாய்ந்திருந்த கண்கள் இப்போது மஞ்சள் படர்ந்து பூ விழுந்தவை போல் இருந்தன. முகமெல்லாம் விகாரமான தழும்புகள் ; மூக்கு நுனியிலே எவ்வளவு ஆழமாக, ஆணி ஆணியாகக் குழிகள் விழுந்திருந்தன ! தலையணைக்குப் பதில் எடுத்துக் கட்டித் தலைக்கு வைத்துக் கொள்ளலாம் அவள் தலைமயிர் ; அதில் முக்கால் வாசிக்குமேல் உதிர்ந்து போய் விட்டது. கன்னத்து எலும்புகள் சதைக்கு அடியில் முண்டிக் கொண்டு வந்திருந்தன.
கண்ணாடியைப் படுக்கையில் போட்டுவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டாள் சாரதா. அவளுக்குக் கல்யாணமாய் ஆனியோடு ஆனி சரியாக மூன்று வருஷகாலம் ஆகிவிட்டது. அவள் கணவன் நல்ல சம்பளத்தில் வடக்கே வேலையில் இருந்தான். தன்னைப் போன்ற ஓர் அழகான பெண்ணைப் பெற்றெடுத்துக் கொண்டு தன் ‘அழகி’ திரும்பி வரப்போகிறாள் என்றுதான் அவன் எண்ணிக் கொண்டிருந்திருப்பான். வைசூரி கண்டு தன் ‘அழகி’ உருத்தெரியாமல் மாறி விட்டாள் என்று அவனுக்கு இன்னும் தெரியாது. ஆனால் அவர்களுடைய பெண், முன்னெல்லாம் சாரதா இருந்ததுபோல அழகாகத்தான் இருந்தாள். அது ஒன்றுதான் இப்போது திருப்திகரமான விஷயம்.
‘கோகிலா தூங்கிக்கொண்டிருக்கிறாள் போல் இருக்கிறது. அதன் சப்தமே காணோம்’ என்று எண்ணினாள் சாரதா. நல்ல வேளை ! மகமாயியின் திரு விளையாடல் அந்தக் குழந்தையையும் பாதிக்கவில்லை. ஆறு மாதம் நிரம்பாத பச்சிளங் குழந்தைமேல் மகமாயி தன் கையை வைக்கவில்லை; அந்தக் காரணத் துக்காகவேனும் அவள் பூஜிக்கத் தக்கவள் தான்.
அவள் கணவன் சிவசுப்பிரமணியன் வேலையா யிருந்த ஊரிலே தமிழர்களுக்கெல்லாம் அவன் தன் மனைவியை அழகியென்று அழைத்தது நன்றாகத் தெரியும். யார் கண் பட்டதோ ? அவள் இப்பொழுது தன் அழகை இழந்துவிட்டாள். அவள் அழகி என்பதிலே சிவசுப்பிரமணியனுக்கு அளவற்ற பெருமை. ‘அவன் தன்னிடம் பிரியம் வைத்திருந்தான்; தன்னிடம் அனன்யமான அன்பு செலுத்தினான்’ என்று அவளுக்கு அளவற்ற பெருமை. இளந்தம்பதிகளின் வாழ்க்கை ஒரு லக்ஷ்ய வாழ்க்கையாகவே பல விதங்களிலும் அமைந்திருந்தது. தன் அழகெல்லாம் போய்விட்டது என்று அறிந்து தன் கணவன் எப்படி வருத்தப்படுவான், என்ன எண்ணுவான் என்று யோசித்துப் பார்க்க முயன்றாள் சாரதா.
“அம்மா! அம்மா!” என்று மிகவும் பலஹீன மான குரலில் கூப்பிட்டாள்.
அவள் அம்மா வந்தாள். “ஏன் சாரதா ! சித்த முன்னாடி வந்து பார்த்தேன். நன்னாத் தூங்கிண்டிருந்தே. என்னத்துக்கு ஸதா அந்தக் கண்ணாடியைப் பாத்துண்டிருக்கே? மகமாயி இந்த மட்டும் உன்னை எனக்கு உசிருடன் வச்சுவிட்டுப் போனாளே என்று திருப்திதான்” என்றாள். அப்புறம், “காபி கொண்டுவந்து தரேன். மனசையோ உடம்பையோ ரொம்ப அலட்டிக்காதே” என்று சொல்லிவிட்டு அலமேலு அம்மாள் அறையைவிட்டு வெளியேறினாள்.
ஓட்டு இடுக்கால் உள்ளே புகுந்த ஒரு சூரிய கிரணத்திலே தூசி அணுக்கள் விதவிதமாக நாட்டிய மாடி விளையாடிக் கொண்டிருந்தன. அதைக் கவனித்துக்கொண்டு சிறிது நேரம் சாய்ந்திருந்தாள் சாரதா. அவள் அம்மா இரண்டு தம்ளர்களில் சாப்பிடும் பதமாகக் காபி கொண்டுவந்தாள். அதைச் சாப்பிட் டுக்கொண்டே சாரதா, “மீனாவை ஒரு கடுதாசும் பென்சிலும் கொண்டுவரச் சொல்லு. அவருக்குக் கடிதம் எழுதவேணும்” என்றாள்.
“ அதுக்கு அவசியமில்லை ” என்றாள் அவள் தாய்.
“மாப்பிள்ளை இன்னிக்குக்கார்த்தாலை மெயிலில் இங்கே வருவதாக ராத்திரி தந்தி அடிச்சிருக்கார். உனக்குத் தலைக்கு ஜலம் விட்டவுடனே அவருக்குக் கடிதம் எழுதித்து. இன்னிக்கிக் கார்த்தாலைதான் தந்தி கிடைத்தது. ஏழரை மணிக்கு வண்டி. உன் அப்பா அவரை அழைச்சுண்டு வரத்தான் ஸ்டேஷனுக்குப் போயிருக்கார்.”
திடீரென்று கேட்ட இந்தச் செய்தி சாரதாவின் மனத்திலே ஒரு கலவரத்தை எழுப்பியது. அவள் தொண்டையை யாரோ இறுக்கிப் பிடிப்பது போன்ற ஓர் உணர்ச்சி தோன்றிற்று. அவளால் பாக்கிக் காபியைச் சாப்பிட முடியவில்லை. தடுமாறிய குரலில், “போதும் அம்மா” என்றாள்.
‘”அவாளுக்கும் காபி தயார் செய்து வைக்கிறேன். நாழி யாயிடுத்து. வந்துவிடுவார்” என்று சொல்லிக் கொண்டே அவள் தாய் காபித் தம்ளருடன் அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் கணவன் அன்றே அவளை வந்து பார்த்து விடுவான். அவள் முகம் எவ்வளவு மாறிப்போயிருந்தது? மறுபடியும் ஒரு தரம் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள் சாரதா. அவளுக்குக் குலப்பெருமை, பணப்பெருமை இல்லை; அது வரையில் அழகு என்ற ஒரு பெருமைதான் இருந்தது. அதுவும் போய்விட்டது இப்போது. என்ன நேருமோ என்று அவள் மனம் பக்கென்றது. அவள் கணவன் அவளிடம் அன்பு வைத்திருந்தது வாஸ்தவந்தான். அவன் மனத்தில் பொங்கித் ததும்பிய உணர்ச்சிக்குத் தெய்விகமான காதல் என்றுதான் பெயர் சொல்ல வேணும். ஆனால் என்ன இருந்தாலும் அவன் முதல் முதலில் அவளைக் கல்யாணம் செய்துகொள்ள வேணும் என்று ஆசைப்பட்டதெல்லாம் அவள் அழகால்தானே? அவளுக்குப் படிப்பிருந்ததா? பணம் இருந்ததா? குலம் இருந்ததா? ஒன்றும் இல்லை. ஆனால் அதற்கெல்லாம் ஈடாக, மேலாக, அவன் அவளுடைய அழகை மதித் திருந்தான். கணவனுக்கு என்று அளிக்க அவள் மனத்திலிருந்த உணர்ச்சியைத் தவிர அவளிடம் வேறு இப்போது என்ன இருக்கிறது? உண்மையில் அவன்தான் அவள் குடும்பத்துக்கு மிகவும் ஒத்தாசையாகச் சமய சந்தர்ப்பங்களில் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். இப்பொழுது அவளுடைய அழகும் போய்விட்டது; அவன் தன்னைக் கண்டவுடன் என்ன நினைப்பானோ?
அவள் மனம் குழம்பிற்று. ஆயாசமடைந்தவள் போல ஒருதரம் படுக்கையில் புரண்டு பெருமூச்சு விட்டாள். இன்னும் அவள் இரத்த ஓட்டம் சரிப்பட்டு வரவில்லை ; பலநாள் படுக்கையில் கிடக்க வேண்டியவள் தான் அவள்.
வாசலில் வண்டி வந்து நின்ற சப்தம் கேட்டது. சாரதாவின் இருதயம் பக் பக்கென்று அடித்துக் கொண்டது. இன்னும் இரண்டு விநாடிகளில் அவன் தன் அறைக்குள் நேரே வந்து தன்னைப் பார்த்துவிடுவான். அவன் பார்வையே, “என் அழகி எங்கே?’ என்று கேட்குமே ! சாரதாவின் கையிலிருந்த கண்ணாடி நழுவிக் கீழே விழுந்து நூறு சுக்கலாகத் தெறித்து உடைந்தது. அழகை இழந்த அவளைத் தன் மனைவி என்றே அவன் இனி அழைக்க மறுத்தாலும் மறுக்கலாம். அவளை நிராகரித்தாலும் நிராகரித்துவிடலாம். “நான் இறந்து போயிருக்கக் கூடாதா?” என்று எண்ணினாள். அந்த அறையி லிருந்து, படுக்கையிலிருந்து எழுந்து ஓடி எங்கேயாவது அவன் கண்ணில் படாமல் தப்பி ஒளிந்து கொண்டு விட்டால் தேவலை போலிருந்தது. ஆனால் கால்கள் அவள் சொற்படி கேட்க மறுத்தன.
வெளிக்கூடத்தில் அவர்களுடைய காலடிச் சப்தம் கேட்டது. வந்துவிட்டார்கள். இன்னும் ஒரே விநாடி; கதவைத் திறந்து கொண்டு அவன் உள்ளே வருவான். தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் சாரதா. அவளுடைய மார்பகம் விம்மிற்று. ஆனால் சிறிது நேரம் யாரும் உள்ளே வரவில்லை. அவளுக்குத் தலை சுற்றிற்று. வெளியே கூடத்தில் கோகிலாவின் அழுகுரல் கேட்டது. அவள் அப்பா நடேச ஐயர், “குழந்தையில் சாரதா இருந்த மாதிரியே இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது. குழந்தைக்கு ஆறு மாதந்தான் வயசு ஆச்சு ; அதைத் தன் கணவன் இப்போதுதான் முதலில் பார்க்கிறான் என்பது அவளுக்கு ஞாபகம் வந்தது. ஒரு விநாடி அவள் பிற கவலைகளை மறந்தாள்.
அடுத்த விநாடியே அவன் தன் அறையை நெருங்கி வரும் காலடிச் சப்தம் கேட்டது. பூட்ஸ் சப்தம் அவன் அணிந்திருந்த பூட்ஸின் சப்தமாகத்தான் இருக்கும். அதைக் கழற்றக்கூடத் தாமதியாமல் தன் ‘அழகி’யைக் காண வந்துகொண்டிருந்தான்.
திடீரென்று அவள் தாயின் குரல், “மகமாயி விளையாடின இடம். பூட்ஸைக் கழட்டி வைச்சு விட்டே போங்களேன், மாப்பிள்ளை” என்று சொன்னது சாரதாவின் காதில் விழுந்தது.
இந்தத் தடவை இன்னும் இரண்டே விநாடிகளில் தன் கணவன் உள்ளே வந்து தான் இருந்த அலங்கோலத்தைப் பார்த்துவிடுவான்! அப்புறம் …? சாரதா கண்ணை இறுக மூடிப் படுத்துக்கிடந்தாள்.
அந்த இரண்டு விநாடிகளும் அவளுக்கு இரண்டு யுகங்களாகத் தோன்றின !



