
அழகி முதலிய கதைகள்
க. நா. சுப்ரமண்யம்
விதியும் மதியும்
நாங்கள் ஐந்தாறு பேர்வழிகள் ஒவ்வொரு நாளும் மாலையில் சேர்ந்து உலாவப் போவது வழக்கம். மழை, வெயில், காற்று, தூசு எதுவும் எங்களுக்கு ஒரு லக்ஷ்யமாகத் தோன்றாது. பேச்சுச் சுவாரஸ்யத்திலே சுற்றுப்புறத்தைக் கவனிக்கக் கூட மனம் வராது. அன்றைய பெரிய மனிதன் பத்திரிகையில் விடுத்திருக் கும் அரசியல் அறிக்கையில் ஆரம்பித்து நித்தியமான தத்துவங்களைப் பற்றிய வரையிலும் பேச்சு நடக்கும்; ஆரம்பக்கல்வி முதல் ரயில்வே லயனுக்கு அப்பால் இருக்கும் சர்வ கலாசாலையின் ‘உள் கலகங்கள் ‘ வரையிலும் பேச்சு சுவாரஸ்யமாகப் போய்த் திரும்பும். தினந்தோறும் இப்படி எல்லா விஷயங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததனால் எங்களுக்கு என்றும் அதில் அசட்டையோ அலுப்போ இருந்தது இல்லை. அதற்கு மாறாக ஒரு நாள் மாலை அந்தக் கோஷ்டி சேராமல், பேச்சும் எக்காரணத்தாலோ நடைபெறாமல் இருந்துவிட்டால் எங்களுக்கு என்னவோ போல் இருக்கும்.
நாங்கள் வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு திருஷ்டிகளுடன், நோக்கங்களுடன் வாழ்க்கை நடத்துபவர்கள். ஒருவர் வக்கீல் ; ஆனால் வக்கீல் அல்லாத பொழுதெல்லாம் அவர் ஓர் லக்ஷ்யவாதி; அவர் பெயர் பொன்னம்பலம்.
இரண்டாவது நண்பர் பி. ஏ., படித்துவிட்டு சில நாள் ஊரூராக உத்தியோகத்துக்கு அலைந்து விட்டுக் கிடைக்காததால், மனம் உடைந்து விடாமல் உத்தியோகம் செய்பவர்களைத் தூற்றிக் கொண்டு, இருக்கும் தம்முடைய சொற்ப நிலபுலங்களை வைத்துக்கொண்டு மானமாக- ஆனால் பிறரைப் பற்றி எப்போதும் ஏதாவது வம்பளந்து கொண்டே – காலங் கழிப்பவர்; அவருக்கு வாழ்க்கையிலே முக்கியமாகப் பிறருடைய வாழ்க்கையிலே இருந்த ஆர்வமும் உற்சாகமும் சொல்லிமுடியா; அவர் பெயர் ராஜ கோபாலன்.
மூன்றாவது நண்பர் சாமிநாதன். அவர் நவீன வேதாந்தி ; சம்ஸ்கிருத பாஷையில் தத்துவார்த்தமாய் உள்ளதையெல்லாம் படித்துவிட்டு வேதாந்தத்திலும் நமது பண்டைய இலக்கியத்திலும் நியூடனையும், ஐன்ஸ்டினையும், மேல் நாட்டில் நடப்பதாகச் சொல்லப்படும் விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளையும் கண்டு கொண்டிருப்பவர் ; ஆனால் அவருடைய தினசரி வாழ்க்கைக்கும் மேல் நாட்டு விஞ்ஞானத்துக்கும் நம் நாட்டு வேதாந்தத்துக்கும் எவ்வித உறவு பாத்தியதையும் இல்லை. அவர் தாலூக்கா ஆபீஸில் ஒரு குமாஸ்தா.
இந்தக் கோஷ்டியில் நாலாவது மனிதர் மாஜி மளிகைக்கடை முதலாளி. அவர் மளிகைக்கடை வைத்து மூன்று நாலு வருஷத்தில் வந்த லாபத்தை எடுத்துக்கொண்டு நஷ்டம் வரும்போல் இருக்கும் சமயம் யாரோ ஏமாந்தவன் தலையில் கடையைக் கட்டிவிட்டு ரிடையராகி விட்டவர்; தற்சமயம் அவரது உத்தியோகம் சமூக சேவை என்ற லக்ஷ்யத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதுதான். ஒரு சமயம் அவருக்கு ரஷ்யாவும், வேறு ஒரு சமயம் பழைய பாரத நாடும், மற்றும் சில சமயம் . வெள்ளையரின் வாசஸ்தலமுந்தான் லக்ஷ்ய பூமி; அவர் பெயர் ராமசாமி.
ஐந்தாவது பேர்வழி நான்தான் ; என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விரசமாக இருக்கலாம் என்றாலும் மற்றவர்களைப் பற்றிச் சொன்ன பாணியில் என்னைப் பற்றியும் சொல்லிக் கொள்ளாதிருப்பது பக்ஷபாதமான செய்கை ஆகிவிடும்; ஆகையினால் சொல்லியே விடுகிறேன்; நான் எதிலும் நம்பிக்கை வைக்காத ஒரு விசித்திரப் பிரகிருதி; தெய்வத்தினிடம் எனக்கு நம்பிக்கை இல்லை ; மனிதனிடம் உள்ள நம்பிக்கை தெய்வத்தினிடம் உள்ளதைவிடச் சற்றுக்குறைவுதான் ; என்னை பெருமையாக இலக்கிய ஆசிரியன் என்று சொல்லிக்கொள்வது வழக்கம். ஆனால் தற்சமயம் நான் பத்திரிகைகளுக்கு எழுதும் தொழிலில் ஈடுபட்டவன்.
அன்று மாலை நாங்கள் ஐந்து பேர்களும் ‘வாக்’ போனோம். எங்களுடன் வழக்கமாக வரும் ஆறாவது பேர்வழி ஆஸ்பத்திரியில் கிடந்தார். டாக்டர் சொன்னதிலிருந்து அவர் பிழைப்பாரா என்பது சற்றுச் சந்தேகமான விஷயமென்றே தோன்றிற்று. நாங்கள் ஐந்து பேரும் வெவ்வேறு சமயங்களில் ஆஸ்பத்திரிக் குப் போய் அன்று அவரைப் பார்த்துவிட்டு வந்திருந்தோம். எங்களுக்கும் அவர் பிழைப்பாரென்ற நம்பிக்கை இல்லை. இடுப்புக்குமேல் உச்சந்தலை வரையில் மருந்தைத் தடவிப் பஞ்சை வைத்து, பாண்டேஜ் போட்டு கட்டிக் கிடத்தி இருந்தார்கள். கழுத்து, வாய், மூக்கு, நெற்றி ஒன்றுமே தெரியவில்லை. அவர் கண்கள் மட்டும் ஜூரத்தாலும், வேதனையாலும் ஏற்பட்ட ஓர் அசாதாரணமான பளபளப்புடன் திறந்து தெரிந்தன. நாங்கள் ஒவ்வொருவராக அவரைப் போய்ப் பார்க்கும்போது அவரும் எங்களைப் போலவே நாலு வருஷமாகப் பழக்கமாகி விட்ட மாலை ‘வாக்கை’ யும் பேச்சையும் பற்றித்தான் எண்ணியிருப்பார்-அதாவது அவருக்கு அந்த வேளையிலும் எதையாவது பற்றி எண்ணச் சக்தியிருந்திருந்தால், அதைப் பற்றித்தான் எண்ணியிருப்பார்.
அன்று மாலை, வழக்கத்துக்கு விரோதமாகச் சற்று நேரங் கழித்து நாங்கள் ‘வாக்’ கிளம்பினோம். நான் போய் ஒவ்வொருவர் வீட்டிலும் புகுந்து புறப்பட்டு அவர்களை அழைத்துக் கொண்டு வழக்கப்படி கிளம்பினேன். நாங்கள் நகரை விட்டு வெளியே செல் லும் ரஸ்தாவில் திரும்பும் போது இருட்ட ஆரம்பித்து விட்டது. பிறைச் சந்திரனும் இரண்டொரு நக்ஷத்திரங்களும் வானத்து ஆழ்ந்த நீலத்திலே மிதந்து கொண்டிருந்தன. அண்ணாந்து பார்த்துவிட்டுப் பூமிக்குக் கண்ணைத் திருப்பும்போது உலகமே அதிகமாக இருண்டிருப்பது போலத் தோன்றிற்று. எங்களுக்கிடையே பேச்சு அன்று அவ்வளவு சுவாரஸ்யமாகவோ உத்ஸாகமாகவோ கிளம்பவில்லை. ஒவ்வொருவரும் இரண்டொரு வார்த்தைகளுக்கு மேல் பேசாதவர்களாக நடந்தோம். எங்கள் ஞாபகமெல்லாம் அந்தச் சமயம் ஆஸ்பத்திரியில் கிடந்த எங்கள் ஆறாவது நண்பரைப் பற்றித்தான் என்பதில் ஆச்சரியமில்லை. அந்த ஞாபக வேகத்தில் சில சமயம் அவர் அன்று ஆஸ்பத்திரியில் கிடந்தார், எங்களுடன் வரவில்லை, என்றே எங்களுக்கு மறந்து போய்விட்டது. நான் இரண்டொருதரம் அவர் எங்களுடன் தான் வருகிறார் என்ற ஞாபகத்தில் அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு ஏதோ சொல்ல வாயெடுத்தேன். நல்ல வேளையாக உரக்கச் சொல்லவில்லை. மற்றவர்களும் அதே நிலை யில்தான் இருந்தார்கள் என்று என்னால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.
திடீரென்று பொன்னம்பலம் சொல்லலானார் : “நேற்று ஐந்து மணிக்குள் திரும்பி வழக்கம்போல நம்முடன் ‘வாக்’ கிளம்புவது என்றுதான் சீநிவாசன் உத்தேசித்திருந்தாராம் ஹும் !……அவர் இன்று ஆஸ்பத்திரியில் கிடக்கிறார் ? “
முதல் நாள் நடந்த விஷயம் இதுதான் : நாலு பேர்வழிகள் காரியமில்லாமல் ஒரு ‘டாக்ஸி’ எடுத்துக் கொண்டு இருபது மைலுக்கு அப்பால் இருந்த ஒரு புராதனமான பாழடைந்த கிராமத்திலுள்ள கோவிலைப் பார்ப்பதற்காகச் சாப்பிட்டுவிட்டு மத்தியான்னம் ஒரு மணிக்குக் கிளம்பினார்கள். அஸ்தமிப்பதற்குள் திரும்புவதாக உத்தேசம். ஆனால் அஸ்தமிப்ப தற்கு வெகு நேரம் முன்னரே, கிளம்பி இரண்டு மணி நேரத்திற்குள் போகும் வழியிலேயே மோட்டார் கவிழ்ந்து விட்டது. எங்களுடைய டவுன் போன்ற சின்ன நகரங்களில் சாதாரணமாக அகப்படும் டாக்ஸிகளை விட நல்ல டாக்ஸிதான் அவர்கள் போனது; புது வண்டி; நல்ல வண்டி ; பிரேக்குகளிலோ, வேறு எதிலோ, அதிகமாகக் கோளாறுகள் இல்லை. அப்படி இருந்தும் வண்டி ரஸ்தாவில் கவிழ்ந்து விட்டது.
பத்திரிகைத் தலைப்புகளில் எழுதுவார்களே அது போலக் கோரமான விபத்து. ஒருவர், கோவில் பார்க்கக் கிளம்பியவர், நேரிலேயே கடவுளைப் பார்க்கக் கிளம்பி விட்டார். இரண்டு பேருக்கு நல்ல அடி; அவர்களில் எங்கள் நண்பரும் ஒருவர்; இருவரும் ஆச்சுப் போச்சு என்று ஆஸ்பத்திரியில் கிடந்தனர். வண்டி ஓட்டியவனுக்கும் அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொருவனுக்கும் உடம்பில் சில கீறல் சிராய்ப்புக்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவர்களுக்கு ரத்தக் காயங்கூட இல்லை.
இத்தனை ரகளைகளிலும் அவர்கள் அப்படித் தப்பிவிட்டது எங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த இடத்திலேயே இறந்தவருடைய முகங் கூடத் தெரியாமல் நசுங்கிவிட்டதாம். அவருடைய உறவினர்களால் கூட அவர் உருவைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நாங்கள் அவரைப் பார்க்கவில்லை. எமன் வாயில் அகப்பட்டதல்லாமல் அவர் போலீஸ்காரன் கையிலும் அகப்பட்டுக் கொண்டு விட்டார் அல்லவா? அதற்கப்புறம் ஒரு நாள் அவரைப் பார்த்திருக்க முடியுமா?
எப்படி அந்த விபத்து நேர்ந்தது, அதற்குக் காரணம் என்ன என்பது பற்றி ஊரில் பலமாக வதந்திகள் உலாவிக் கொண்டிருந்தன. பொதுவாக மேற்கத்திய நாகரிகத்தையும் மோட்டார் எமனையும் வைதவர்கள் பலர்; ரயில், மோட்டார், ஏரோப்ளேன் எல்லாம் அழிக்கும் ஆற்றல் படைத்த பூதங்களாகத் தோன்றின. சிலர், “வண்டி ஓட்டியவன் அஜாக் கிரதையாக ஓட்டினான் ; அவ்வளவு வேகமாக அந்த ரஸ்தாவில் வண்டியை விட்டிருக்கக் கூடாது; அவன் பேரில்தான் குற்றம்” என்று சொன்னார்கள். (சில நாட்களில் வண்டியிலோ, வண்டி ஓட்டியவன் பேரிலோ எவ்விதக் குற்றமும் இல்லை என்று போலீஸார் பல காரணங்களைக் கொண்டு முடிவு கட்டிவிடுவார்கள் என்று எங்களுக்கோ, மற்றவர்களுக்கோ எப்படித் தெரிய முடியும் ?) வேறு சிலர் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்து அடியே படாமல் தப்பி விட்ட நபர் பேரில்தான் குற்றமென்று சாதித்தார்கள்; அவர்தாம் வண்டி எவ்வளவு “ஸ்பீட்” எடுக்கும் பார்க்கலாம், ஓட்டு ஓட்டு என்று தூண்டினாராம் ; அவரைத்தான் கொலைகாரன் என்று சொல்ல வேணும் என்றார்கள். இப்படிக் கொலை காரப் பட்டம் பெற்றவர் ஊரில் கொஞ்சம் “சப்தம் செய்யும் பேர்வழி” என்றும், கட்சிப் பிரதி கட்சிகளிலெல்லாம் ஈடுபட்டவரென்றும், பொது விஷயங்களில் அவருக்குப் பலத்த அக்கறை என்றும், பொதுவாக இதனால் அவரைப் பலருக்குப் பிடிப்பதில்லை என்றும் அவரைப் பற்றிய உண்மைகளுடன் இந்த வதந்தியையும் ஒட்டிப் பார்க்குமிடத்து அவர் இந்தக் கொலைகாரப் பதவிக்குச் சற்றும் லாயக்கில்லாதவர் என்றே தோன்றிற்று.
பொன்னம்பலம் சொன்னார்: “அவர் கொலையாளி என்றால், அவர் மட்டும் சொற்பக் காயங் கூட இல்லாமல் தப்பிவிட்டது எப்படி? கடவுள் என்றும், தர்மமென்றும் ஒரு தத்துவம் உலகில் உண்டென்பது உண்மையானால் இதை நியாயம் என்று சொல்வது தவறாகிவிடுமே!
“தர்மம், நியாயம், கடவுள் என்பவை எல்லா வற்றையும் மீறி விதி என்று ஒன்று உண்டென்பது தான் இதன் அர்த்தம்” என்றார் சாமிநாதன்.
“விதியாவது, சதியாவது ஐயா ! முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்த இருவரும் விபத்து வருவதை உணர்ந்து கெட்டிக்காரத்தனமாக எகிரிக் குதித்துத் தப்பிவிட்டார்கள். ஒரு விநாடி அந்த உணர்ச்சியோ, காரியமோ தப்பி இருந்தால் அவர்களைப் பற்றியும் எல்லோரும் அனுதாபமே காட்ட வேண்டி இருக்கும்” என்றார் ராஜகோபால்.
“அந்த விநாடியில் விபத்து என்ற உணர்ச்சி பிறந்ததையும், அவர்கள் அந்தக் காரியம் செய்யத் தூண்டப் பட்டதையுமே நான் விதி என்று சொன்னேன்” என்றார் சாமிநாதன்.
“விதி என்று அதைச் சொல்லக் காரணம் என்ன? அது அவருடைய நுட்ப மதியைத் தவிர வேறு அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது என்றார் ராஜ கோபால் விடாப்பிடியாக.
“அவர்கள் அந்தச் சமயம் விதியா மதியா என்று யோசிக்கத் தாமதித்திருப்பார்களா?” என்று நான் கேட்டுவைத்தேன்.
“பிரச்னைக்கு வேண்டாத விஷயங்களைப் பேச்சில் இழுத்துக்கொண்டு விடுவதில் நீங்கள் சமர்த்தர் ஐயா” என்றார் மாஜி மளிகைக்கடை ஆசாமி.
“எனக்கு அடுத்த வீட்டில் இருக்கும் காசுக்கடை முருகப்ப செட்டியாரும் அந்த வண்டியில் அவர்களுடன் அந்தக் கோயிலைப் பார்க்கப் போவதாக இருந்தாராம். ஆனால் கடைசி நிமிஷத்தில் கிளம்ப முடியாமல் போய்விட்டதாம்” என்றார் பொன்னம்பலம்.
ராஜகோபால் சிரித்துக் கொண்டே, “அது செட் டியார் விதிப்படி நடந்தது என்று சாமிநாதன் சொல்லிவிடுவார்” என்று சொன்னார்.
சாமிநாதன் இந்த ஏளனத்தைச் சகித்துக் கொண்டிருப்பதாக இல்லை; “அவர் அந்த டாக்ஸியில் போயிருந்தாலும் அவருக்கு வீட்டில் என்ன நேர்ந்ததோ, அதேதான் நேர்ந்திருக்கும்” என்றார்.
இதற்குள் நாங்கள் வழக்கமாக உட்காரும் வாய்க்கால் மதகு வந்துவிட்டது. அங்கவஸ்திரத்தால் மதகிலிருந்த தூசியைத் தட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டோம்.
“அப்பா, என்ன சூடு சுடுகிறது!” என்றார் ராம சுவாமி.
பொன்னம்பலம் சொன்னார்: “நேற்றுச் செட்டியாருக்கும் ஒரு விபத்து நேரத்தான் நேர்ந்தது. சின்ன விபத்துதான். மத்தியான்னம் மூணு மூணரை மணிக்கு அப்பாவுக்குத் தேள் கொட்டிவிட்டதென்று அவர் பெண் என்னிடம் வந்து மருந்து வாங்கிக் கொண்டு போனாள்.”
“கேட்டீரா ஐயா ! உங்கள் கட்சி தோற்று விட்டது என்று எக்களித்தார் ராஜகோபால்.
“எப்படி ?”
ராஜகோபால், “செட்டியாரும் டாக்ஸியில் போயிருந்தால் அவருக்கு வேறு என்ன விபத்து வேண்டுமானாலும் நேர்ந்திருக்கலாம். தேள் மட்டும் கொட்டியிராது. இல்லையா?’ என்றார்.
“ஏன்? கொட்டக்கூடாதா? மோட்டாரில் தேள் இருக்கக்கூடாதா? மோட்டாரில் இல்லாவிட்டாலும் தேள் அவர் மோட்டாரில் ஏறிச் சவாரி செய்தது போல, அவர் சட்டையில் வீட்டிலிருந்தே சவாரி செய்து கொண்டுபோய் வேளை வந்ததும் போட்டிருக்கும் ” என்றார் சாமிநாதன்.
“உம்மோடு பேசிப் பயனில்லை ; போம்” என் றார் ராஜகோபால்.
யாரோடு பேசித்தான் என்ன பயன் ? விதியையும் மதியையும் பற்றிப் பேசும்போது எனக்கு ஒரு மேல் நாட்டு அறிஞர் எழுதியிருப்பது ஞாபகம் வரு கிறது. அவர் விதியும் மதியும் என்றே தம் புஸ்தகத்துக்குப் பெயரிட்டிருக்கிறார். தம் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லி அதிலிருந்து முடிவுகள் காண முடியுமா என்று அலசிப்பார்த்திருக்கிறார். ஸ்விட்ஜர்லந்து மலைப்பிரதேசத்தில் முப்பது முப்பத்தைந்து பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு செங்குத்தான மலைச்சரிவிலே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்ததாம். திடீரென்று டிரைவர், ‘வண்டி இயந்திரம் கட்டுக்கு அடங்கவில்லை. பிரேக்குப் பிடிக்கவில்லை. வண்டி திருப்பங்கள் நிறைந்திருந்த இந்தப் பாதையில் எங்கேயாவது மோதிக் கவிழ்ந்துவிடும்’ என்று சொல்லிவிட்டான். பஸ்ஸில் இருந்தவர்களுக்கெல்லாம் சாவு நிச்சயம் என்று தோன்றிற்று. பஸ் இரண்டொரு விநாடிகளில் ஆழமான பள்ளத்தாக்குப் பக்கம் சாய்ந்து அப்படியே விழுந்துவிடும், அல்லது எதிரே இருந்த பாறைகளி லாவது மோதிச் சுக்கு நூறாகத் தெறித்துவிடும். இந்த இரண்டில் எது நடந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்களின் எலும்பு ஒன்று கூட முழுசாக அகப்படாது என்பது நிச்சயம். பின் ஸீட்டில் கையில் ஒரு வயசுக் குழந்தையுடன் உட்கார்ந்திருந்த ஓர் இளந்தாய் தான் இறப்பது நிச்சயம், தன் குழந்தையாவது பிழைக்கட்டுமே என்று அதை மனத்துணிவுடன் பக்கத்தில் இருபது அடி கீழே தெரிந்த பசும்புல் தரைமேல் போட்டுவிட் டாள் ” என்று நான் சொல்லிவந்தேன்.
“அப்புறம்?” என்றார் சாமிநாதன்.
“அதே விநாடி பஸ் ஒரு சிறு பாறைமேல் மோதி அதிகச் சேதம் இல்லாமல் நகரமாட்டாது நின்றுவிட் டது. பஸ்ஸில் இருந்தவர்கள் ஒருவருக்காவது துளிக் காயங்கூட இல்லை” என்று கதையை மேலே கொஞ்சம் சொல்லி நிறுத்தினேன் நான்.
“குழந்தை மட்டும் இறந்து விட்டதாக்கும் ?” என்றார் பொன்னம்பலம்.
“இதேமாதிரி நம்மூரிலும் ஒரு கதை உண்டு. அது உங்களுக்குத் தெரியாது போல் இருக்கிறது. அந்தக் கதையை நான் என் சிறு வயசில் என் தாத்தா மடியில் உட்கார்ந்து கொண்டு கேட்டதாக ஞாபகம். இன்னும் வீடு திரும்ப நாழிகை ஆகவில்லையானால் சொல்லுகிறேன் ” என்றார் சாமிநாதன்.
சாமிநாதனுக்குத் தாம் கதை சொல்லுவதில் நிபுணன் என்று அசாதாரணமான ஒரு நம்பிக்கை உண்டென்பது எங்களுக்குத் தெரியும். அவர் எவ்வளவு எளிய விஷயமானாலும் தக்க ஆர்ப்பாட்டங்கள் இல்லா மல் சொல்லமாட்டார். “நாழிகைதான் ஆகிவிட்டதே, கொஞ்சம் சுருக்கமாகவே சொல்லுங்கள் ” என்றேன்.
சாமிநாதன் ஆரம்பித்தார்: “இந்தக் கதை பழைய காலத்துக் கதை. மேல் நாட்டு விஞ்ஞானி ஒருவனும் இதைப்பற்றி நான் நேரில் பார்த்தது என்று எழுதி வைக்காததால் இதை நீங்கள் நம்ப மறுத்தாலும் மறுக்கலாம். ஆனால் எனக்கு இந்தக் கதையைச் சொன்ன என் தாத்தா இது உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவம் என்ற நம்பிக்கையுடன் தான் சொன்னார். எனக்கும் இதை நம்பலாம் என்றே அப்பொழுது தோன்றிற்று.
நம் நாட்டு ஞானிகளுக்கும் மேல் நாட்டு ஞானிகளுக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தை நீங்களும் கவனித்திருக்கலாம். மேல்நாட்டார் சாக்ரடீஸ், பிளேடோ, அரிஸ்டாடில் என்றெல்லாம் சொல்லி நம் தலைமேல் ஏற்றி நம்மைப்படிக்க வைத்து விட்டார்கள். ஓர் உதாரணமாகச் சாக்ரடீஸை எடுத்துக் கொள்வோம். அவனுடைய தத்துவ விசார முறை மிகவும் எளியது. யாரையாவது இழுத்து வைத்துப் பேசிக் கழுத்தை அறுத்துவிடுவான். வார்த்தைகள் மூலம் ஒரு கொள்கை சரியானது என்று ஓர் எதிரி ஒப்புக் கொண்டுவிட்டால், அது தன் தத்துவ விசாரத்துக்குப் போதிய பலன் என்று அவன் எண்ணினான் போலும். மேல் நாட்டுத் தத்துவ விசாரத்துக்கெல்லாம் இந்தக் குறை போதுமானது. ஓர் உண்மை, எழுத்தில் வார்த்தையில் வந்துவிட்டால் அவர்களுக்குப் போதுமானது. அவ்வுண்மையை வாழ்க்கையோடு ஒட்டிப் பார்த்துத் தினசரி நடைமுறை வாழ்க்கையில் அதைக் கொண்டு வருவது எப்படி என்று, அங்கு படே படே தத்துவ ஞானிகள் கூடக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. சவப்பெட்டியில் பெட்டிக் கொன்றாக பிரேதங்களை அடைப்பது போல அவர்கள் உண்மையை வாழ்க்கை யினின்றும் பிரித்துத் தத்துவம் என்று ஒரு சீட்டை ஒட்டிக் கிட்டவராதே என்று எல்லோரையும் மிரட்டி ஒதுக்கி வைத்து விட்டார்கள். நம் கலாசாலைகளில் இன்று போதிக்கப்படும் கல்வியையும் அதன் பயனின் மையையும் அறிந்தவர்களுக்கு நான் சொல்லுவது எளிதில் புரியும். இந்த மேல்படிப்புக்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் மேல்நாட்டில் ஞானத்துக்கும் வாழ்க்கைக்கும் இருந்து வந்திருக்கிறது. நமது நாட்டில் என்றுமே இப்படி இருந்தது இல்லை. புத்தரை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.”
அவர் இதைப்பற்றி இன்னும் நிறையச் சொல்லியிருப்பார். ஆனால் ராஜகோபால் குறுக்கிட்டு விட்டார். “நாழிகை யாகிறது. இந்தத் தத்துவ விசாரத்தை எல்லாம் பின்னால் ஒருநாள் வைத்துக்கொள்ளலாம். கதையைச் சொல்லும்” என்றார்.
சாமிநாதனுக்குக் கோபம் ஒன்றும் வரவில்லை. ஏனென்றால் தாம் இவ்வளவு நாழிகை சொல்லிக் கொண்டிருந்ததற்கும் சொல்லப்போகும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று அவருக்கே தெரியாது.அவர் தொடர்ந்து கதையைச் சொல்லலானார்:
“மனிதரைக் கொள்ளை கொள்ளும் எமனுக்குப் போட்டியாக அந்த நாட்களிலெல்லாம் மோட்டாரோ, ரயிலோ இல்லை. ஆனால் இப்பொழுது இருப்பதை விட அதிகமாக ஜனங்களுக்குத் தெய்வ பக்தியும், க்ஷேத்தி ராடனம் செய்யவேணுமென்ற ஆசையும் இருந்தன. போக்கு வண்டியிலோ நடந்தோ தான் போயாக வேணும். இப்பொழுது இருப்பதைப் போலப் போலீஸோ பந்தோப்ஸ்தோ அதிகமாக இல்லை. அதற்காகப் பிரயாணம் செய்பவர்கள் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. யாத்திரிகர்களாகக் கிளம்பி விட்டவர்களிடம் மடியிலும் மடி சஞ்சியிலும் அவ்வளவாகப் பொருள் ஒன்றும் இராது. நிர்ப்பயமாகக் காசி, பூரி, பண்டரீபுரம், ராமேசுவரம் என்றெல்லாம் தைரிய மாகக் கிளம்பிவிடுவார்கள். சம்பாதித்த புண்ணிய மூட்டையுடன் திரும்பிவர மூன்று மாதங்களுக்குமேல் பிடித்தாலும் பாதகம் இல்லை. காசி, பத்ரிநாத் என்று கிளம்பிவிட்டால் திரும்பிவர வருஷக் கணக்காக ஆனாலும் ஆகிவிடும். காசியிலே மரணம் கிடைத்தா லும் புண்ணியந்தான்.
“நான் சொல்ல வந்த இந்தக் கதை இந்த மாதிரி, கால்நடையாக ராமேசுவரம் போய்விட்டு ஆணும் பெண்ணுமாக முப்பது நாற்பது பேர்கள் அடங்கிய ஒரு கோஷ்டியைப் பற்றியது. அவர்கள் எல்லோரும் வாழ்க்கைப் போரில் பலவிதத்திலும் இடிபட்டவர் கள்; கொஞ்சம் வயசானவர்கள் ; ஊரில் அநேகமாய் அவர்கள் எல்லோருக்கும் பேரன் பேத்திகள் இருப்பார்கள். எதற்காக இதையெல்லாம் இவ்வளவு விவரமாகச் சொல்லுகிறேன் என்றால் இந்தச் சம்பவம் உண்மையிலேயே நடந்திருக்குமா என்று உங்களுக்குச் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத்தான்.
“ராஜகோபால் மறுபடியும் என்னைக் கோபித்துக் கொள்ளுமுன் கதையை முடித்து விடுகிறேன். எனக்கும் வீட்டுக்குப் போக நாழிகையாகிக் கொண்டிருக்கிறது. ராமேசுவரம் போகும் போது இதே முப்பத்தேழு பேரும் சேர்ந்து போகவில்லை. சிறு சிறு கோஷ்டிகளாக வெவ்வேறு ஊர்களிலிருந்து கிளம்பி ஆடி அமாவாசைக்கு ராமேசுவரத்தில் இருந்தார்கள். எல்லோருக்கும் தஞ்சாவூர் ஜில்லாவில்தான் சொந்த ஊர். அவரவர்கள் தனியாகப் பொங்கித் தின்று கொண்டு போவதுதான் இந்த மாதிரி யாத்திரிகர்களின் வழக்கம். பலர் சேர்ந்து போவதால் நஷ்டம் இல்லை. வழியில் இருக்கும் க்ஷேத்திரங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு சேர்ந்து திரும்பினார்கள். அப்படிப் பெரிய கோஷ்டியாக வந்ததில் திருடர் பயம் முதலியன கொஞ்சம் குறைவு.
“அவர்கள் பழநி வந்து சேரும்போது புரட்டாசி பிறக்க ஏழெட்டு நாட்களே இருந்தன. பழநியில் இரண்டு நாள் தங்கிவிட்டு மழைக்காலம் வலுக்கு முன் ஊர் திரும்பிவிட வேணுமென்று தீர்மானித்துப் பிரயாணத்தைச் சற்றுத் துரிதமாகச் செய்து கொண்டிருந்தார்கள். வன வனாந்தரங்களை எல்லாம் தாண்டித் தஞ்சையை நோக்கி வேகமாகப் பிரயாணம் செய்தார்கள். ஒரு நாள் திடீரென்று காற்றும் மழையும் அவர்களைச் சூழ்ந்து கொண்டன. நாலைந்து நாளாகவே மழை சற்று மும்முரம் என்றுதான் சொல்ல வேணும். ஆனால் அன்று புயலும், மழையும், மின்னலும் கலந்து கொண்டன. மழை வந்தபோது அவர்களிருந்த இடம் ஒரு நிர்மானுஷ்யமான பொட்டல் சுற்று வட்டத்தில் வெகு தூரத்துக்கு மனுஷ்ய சஞ்சாரமோ, மனிதர்கள் வசிக்கும் வீடுகளோ இல்லை. அந்த முப்பத்தேழு பேரும் மழைக்கு ஒரு பாழடைந்த இடிந்த மண்டபத்தில் ஒதுங்கினார்கள். அந்த மண்டபத்தில் ஓணான் கொடியும் பாசியுந்தான் படர்ந்திருந்தன. முப்பத்தேழு பேரும் நிற்க அங்கே போதிய இடம் இல்லை. ஒருவரை ஒருவர் நெருக்கி அடித்துக் கொண்டு நின்றார்கள். மண்டபத்தின் மேற் கூரை பாதி பிரிந்து கீழே விழுந்து கிடந்தது.
ஆனால் கண்ணுக்கெட்டிய வரையில் சுற்றுப் பிரதேசத்திலே ஒரு கட்டிடம் கூடத் தென்படவில்லை. அந்தப் பிரதேசத்தில் புல் பூண்டைக்கூட காணவில்லை. மண்டபத்துக்கு இருபது கஜத்துக்கப்பால் ஒரு மொட்டைப் பனைமரந்தான் தனியாக நின்றது.
மழை ஓய்வதாக இல்லை. சடசடவென்று சலிக்காமல் கொட்டிற்று. காற்று,பேய் ஊதலாக ஊதிக் கொண்டு சுழன்று சுழன்று அடித்தது. அண்ணாந்து பார்த்தால் ஆகாயம் இரவைப் போல இருண்டிருந்தது. அந்த ஆகாயத்திலே நீலத்துக்கு இடம் எங்கிருந்தது, இருந்திருக்குமா என்று சந்தேகம் தோன்றிவிடும். நாலுபக்கமும் பளீர் பளீர் என்று துவளும் தங்கக் கொடிகளாக மின்னல்கள் மின்னின. காற்றின் குமுறலுக்கு மேலாக இடி முழக்கம் பலமாகக் கேட் டது. மேற்கே வெகுதூரத்தில் ஆரம்பித்த இடி கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வந்து தலைக்குமேலும் தாண்டியும் கீழ்க்கோடியிலும் ஒலித்து ஓய்ந்தது. ஆனால் அது ஓயுமுன் இன்னொரு இடி தன் திருவிளையாட்டை ஆரம்பித்துவிடும்.
இப்படியாக ஒருநாழிகை இரண்டு நாழிகை சென்றன. பயங்கரமான இடம்; பயங்கரமான வேளை ; பயங்கரமான இடியும், மின்னலும், மழையும். தெய்வ பக்தியும், மூடபக்தியும் படைத்தவர்களின் கோஷ்டி அது. ஒவ்வொரு தரமும் இடிவந்து காதில் அறைவது போல ஒலிக்கையில் அந்தக் கோஷ்டியில் ஒவ்வொருவருடைய மனத்திலும் பயங்கரமான எண்ணங்கள் உதித்தன. ராமேசுவரம் போய் அவர்கள் புண்ணியம் சம்பாதித்தார்களே தவிர சாதாரண மனிதர்கள் தாம் அவர்கள்; பயத்தையும் பாவங்களையும் களைந்து விட்டவர்கள் அல்ல.
அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் தெய்வத்திடம் பயப்படக் காரணங்கள் வேண்டியன இருந்தன. அந்த நாட்களில் இடி விழுந்தால் பூமி மட்டத்துக்குச் சற்று உயரமாக நிற்கும் இடத்தில்தான் விழும் என்று ஒரு நம்பிக்கை இருந்ததாம். இன்றைய விஞ்ஞான சாஸ்திரப் படி அது உண்மையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப்பாழும் மண்டபத்தில் இடிக்கும் மழைக்கும் பயந்து நின்றவர்கள் எல்லோரும் இந்த விஷயத்தில் நம்பிக்கை வைத்தவர்களே. சுற்று வட்டத்தில் தாங்கள் நின்றிருந்த மண்டபத்தையும் எதிரிலேயிருந்த மொட்டைப் பனைமரத்தையும் தவிர வேறு ஒன்றும் பூமி மட்டத்துக்கு மேலே உயர்ந்ததாகக் கிடையாது. வானிலே குமுறிய இடி அங்கே எங்காவது விழுந்தாலும் விழலாம். அது பனைமரத்தின் மேல் விழுமா? மண்டபத்தின் மேல் விழுமா? என்று யார் சொல்ல முடியும் ? மண்டபத்தின் மேல் விழுந்தால் அவர்களில் ஒருவராவது தப்பி ஊர் போக முடியாது.
“ஒரு கிழவர் சொன்னார்: ‘நம்மில் யாரோ துர்ப் பாக்கியசாலி இருக்கிறான். தெய்வம் அவனைச் சிக்ஷிக்க இந்தப் புயலை அனுப்பியிருக்கிறது…” இதைச் சொல்லிவிட்டு அவர் அங்கிருந்த எல்லோருடைய முகத்தையும் திரும்பிப் பார்த்தார். எல்லோருடைய முகத்திலும் பீதியும் கலவரமும் குடிகொண் டிருந்தன. அந்தக் கிழவரின் வார்த்தைக்கு என்ன பதில் சொல்லுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கிழவர் மேலும் சொன்னார்: ஆடுகள் மாதிரி நாம் மிரளமிரள விழித்துக் கொண்டு இங்கேயே நிற்பதில் சாரம் இல்லை. இந்த இடியும் மின்னலும் நம்மில் யாருக்காகவோதான் காத்திருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். யாருக்காக என்று தெரிந்துகொள்வது அவசியம். உனக்காகத் தான் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் லாபமில்லை. யாருக்காக இந்த இடியும் மின்னலும் என்று தெரிந்துகொள்ள நான் ஒரு வழி சொல்லுகிறேன். அதைத் கேட்டால் ஒருவர் தவிர மற்றவர்களுக் காவது நலமாயிருக்கும். நாம் ஒவ்வொருவராக இந்த மழையில் இறங்கிப்போய் அதோ இருக்கும் பனை மரத்தைத் தொட்டுவிட்டு வரவேண்டியது. கடவுள் சித்தம் அப்படி இருந்தால் இடி மண்டபத்தில் நம் எல்லோர் பேரிலும் விழுந்து விடாமல் அந்தத் துர்ப் பாக்கியன் பனைமரத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும்போது அவன்மேல் விழட்டும். ஈசன் கருணை மற்றவர்களையாவது காக்கட்டும். நானே முதலில் போய் அந்தப் பனைமரத்தைத் தொட்டுவிட்டு வருகிறேன்.”
“அவர்கள் பதிலை எதிர்பாராமல் கொட்டும் மழையில் இறங்கி விசிறியடித்துக் காற்றில் தள்ளாடித் தள்ளாடி நடந்து போய் அந்தப் பனைமரத்தைத் தொட்டுவிட்டு வந்தார் கிழவர். மண்டபத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு உள்ளத்தில் விவரிக்க வொண்ணாத உணர்ச்சிகளுடன் நின்றார்கள். கிழவர் சொட்டச் சொட்ட மண்டபத்துக்குத் திரும்பி வந்தவுடன் இன்னொருவர் ஒரு வார்த்தையும் பேசாமல் மண்டபத்தைவிட்டு இறங்கிப் பனைமரத்தை நோக்கிப் போனார். அவர் திரும்பியதும் இன்னொருவர் போனார். இடையில் ஒரு பேச்சும் நடக்கவில்லை. இந்தக் காரியம் மௌனமாகவே கடைசி மனிதன் வரையில் நடந்தது. ஒன்றும் நிகழவில்லை. அந்தக் கோஷ்டியில் ஐம்பது வயசான ஒரு பிரம்மசாரியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் – ஸ்திரீகள் கூட – அந்தப் பனைமரத்தைப் போய்த் தொட்டுவிட்டு வந்து விட்டார்கள். பேச்சில்லாமலே இவ்வளவும் நடந்ததற்குக் காரணம் அவர்களுடைய மனத்திலிருந்த பயமும் கலவரமுந் தான் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் கடைசியாகப் போகவேண்டிய பிரம்மசாரி, இதென்ன அர்த்தமற்ற காரியம் என்று கேட்டுக் கொண்டு சிறிது நேரம் மண்டபத்தை விட்டுக் கீழே இறங்காமல் நின்றார். அந்த யுக்தியைச் சொன்ன கிழவர், ‘இது என்னப்பா இது? விதியைத் தப்ப முடியுமா? நாங்களெல்லாம் போகவில்லையா? எங்கள் மனத்தில் மட்டும் தெய்வம் என்ற பயம் இல்லாமலா போய்விட்டது!” என்றார்.
“அந்தக் கடைசி மனிதர் போகத் தயங்குவதைக் கண்டு மற்றவர்கள் எல்லோரும் தாழ்ந்த குரலில் முணுமுணுத்தார்கள். அவரை ஏசினார்கள். ‘போறேன்’ என்று வேண்டா வெறுப்பாகச் சொல்லி விட்டு அந்தக் கடைசி மனிதர் அப்புறமும் சற்றுத் தயங்கினார். அந்த மண்டபத்திலிருந்து வெளியேற அவருக்கு மனமே வரவில்லை. மழை இப்பொழுது சற்றுக் குறைவாகவே தான் தூறிக் கொண்டிருந்தது. ஆனால் இடி முழக்கம் கொஞ்சமும் குறைந்த பாடில்லை. காலை இழுத்து இழுத்து வைத்து அந்த முப்பத்தேழாவது மனிதர் தயங்கித் தயங்கி மொட்டைப் பனைமரத்தை நோக்கிப் போனார். பனைமரத்தை அடைந்தவுடன் அதைத் தொடாமல் ஒரு வினாடி திரும்பி மண்டபத்தைப் பார்த்தார். அதில் நின்றவர்கள் எல்லோரும் அவரையே கவனித்துக் கொண்டிருந்தனர். கையைத் தூக்கி அவர் பனைமரத்தைத் தொட்டார். அதே வினாடி பளீர் என்று ஒரு மின்னல் அடித்தது. இடி காதிற்குள்ளேயே வந்து இடிப்பது போல ஒரு சத்தங் கேட்டது. புலன்கள் எல்லாம் உணர்ச்சி இழந்தன.”
சாமிநாதன் கதையை நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் சும்மா இருந்தார். “ஹும்! பாக்கியையும் சொல்லுங்களேன் ” என்று அவரைத் தூண்டினார் ராஜகோபால்.
“பாக்கியா?” என்றார் சாமிநாதன்; “பாக்கி சொல்ல வேண்டியது ஒன்றுமில்லை. அந்த முப்பத்தேழாவது மனிதராகிய பிரம்மசாரி மறுபடி தம் உணர்ச்சிகளைப் பெற்றுப் பனைமரத்தில் இருந்த கையை எடுத்துவிட்டுத் திரும்பிப் பார்க்கப் பத்து வினாடிகள் தாம் பிடித்திருக்கும். ஆனால் அவர் திரும்பிப் பார்த்தபோது அந்தப் பாழடைந்த மண்டபம் இல்லை. கல்லும் மண்ணும் கருகிப் போய் மேடாக ஓர் இடத்தில் குவிந்திருந்தன. கதை அவ்வளவுதான். நாழிகையும் ஆகிவிட்டது; திரும்பலாமே” என்று சொல்லிவிட்டுச் சாமிநாதன் மதகுமேல் இருந்த தம் துண்டைத் தோளில் எடுத்துப் போட்டுக்கொண்டு கிளம்பினார்.
நாங்களும் கிளம்பினோம். சாமிநாதன் சொன்ன கதையின் அந்தரார்த்தம் எங்களில் யாருக்கும் சரியாகப் புரிந்துவிட்டது என்று சொல்லுவதற்கில்லை.
ராஜகோபால் சொன்னார் : ” தெய்வசித்தம் அப்படி ஒருவன் பிழைக்கவேணும் என்றும் மற்ற முப்பத்து ஆறு பேர்கள் இறக்க வேணும் என்றும் இருந்தது மிகவும் கொடுமையான விஷயமாகத் தோன்றுகிறது எனக்கு. இப்படிக் கொடிய சித்தம் படைத்த தெய்வம் எனக்கு வேண்டியதில்லை என்று சொல்ல நான் தயார்.”
“அதைப்பற்றிச் சாமிநாதனோ அந்தத் தெய்வமோ அதிகமாகக் கவலைப்படவில்லை” என்றேன் நான்.
“இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி ஆழ்ந்து நாம் யோஜிக்கத்தான் யோஜிக்கலாமே தவிர முடிவாக ஒன்றும் சொல்லுவதற்கில்லை ” என்றார் பொன் னம்பலம்.
திடீரென்று ராமசாமி,” ஏனையா? ராஜகோபால் உமது பக்கத்தில் வருபவர் யார் ?” என்று கேட்டார்.
நான்தான் என்றேன்.
“உம்மைச் சொல்லவில்லை. ராஜகோபாலுக்கு அந்தண்டைப் பக்கம் வருபவர் யார் ?”
“யாரும் இல்லையே!” என்றார் ராஜகோபால். ஆனால் அவர் அதைச் சொல்லிவிட்டு உடனே தம் பக்கம் திரும்பிப் பார்த்துக்கொண்டார். நாங்கள் ஐந்து பேரும் ஒருவர் பக்கத்தில் ஒருவராக ரஸ்தாவை அடைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தோம். ராமசாமி ஒரு கோடியிலும், ராஜகோபால் இன்னொரு கோடியிலும் இருந்தார்கள்.
சாமிநாதன் சொன்னார்:”எனக்குக்கூட என்னமோ தோன்றிற்று, ராஜகோபாலுக்குப் பக்கத்தில் யாரோ வருவது போல் இருந்தது. வெள்ளைச் சட்டை தெரிகிற மாதிரி இருந்தது.”
ராஜகோபால் இன்னும் ஒரு தரம் தம் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டுக் கெட்டிக்காரத் தனமாக என்னை ஓரத்துக்குத் தள்ளிவிட்டு நடுவில் நகர்ந்து விட்டார். மற்ற நாட்களில் இது நடந்திருந்தால் அவரை நாங்கள் இதுபற்றி எவ்வளவோ கேலி செய்திருப்போம். ஆனால் இன்று அப்படிச் செய்ய மனம் வரவில்லை. எங்கள் ஞாபகமெல்லாம் மறுபடியும் எங்களுடன் அன்று வந்திருக்க வேண்டிய, ஆனால் ஆஸ்பத்திரியில் உயிருக்கு மன்றாடிக் கொண்டு கிடந்த எங்கள் கோஷ்டியின் ஆறாவது நபரிடமே இருந்தது. மௌனமாக சிந்தனையில் ஆழ்ந்தவர்களாக ஊர் வீதியை அடைந்தோம். பூமியில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த யாரோ சிலரின் வார்த்தைகள் சில எங்கள் காதில் விழுந்தன. “நேற்று மோட்டார் விபத்துக்குள்ளாகி இன்று ஆஸ்பத்திரியில் கிடந்த இருவரில் ஒருவர் இறந்துவிட்டாராம்.”
ஆஸ்பத்திரியில் இறந்தவர் யார் என்று விசாரிக்கத் தேவையில்லை ; எங்களுக்குத் தெரியும்.



