
அழகி முதலிய கதைகள்
க. நா. சுப்ரமண்யம்
வாஸவதத்தை
1
புத்த தேவன் ராஜக்ருஹத்தை அணுகும்போது அஸ்தமன சமயம் ஆகிவிட்டது. வானத்திலே சிறு சிறு மேகங்கள் பொன்னாலான படகுகள் போல மிதந்து கொண்டிருந்தன. நாள் முழுவதும் மேய்ந்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த மந்தைகள் ஆகாயத்துக்கும் பூமிக்குமாகப் பொன்னிறமான புழுதிப் படலங்களை எழுப்பிக் கொண்டிருந்தன. நாலு பக்கமும் இருந்த உயர்ந்த குன்றுகளுடன் போட்டியிட்ட நகரத்து மாளிகைகளும் கோபுரங்களும் சூரியன் ஒளியால் பொன் முலாம் பூசப்பெற்று மனத்தை மயக்கும் ஒரு சித்திரமாக அமைந்திருந்தன. மலைச் சரிவுகளிலிருந்த தோட்டங்களிலெல்லாம் பூவும் பொன்னும் பழமுமாகக் குலுங்கின. மலை அடிவாரத்தில் பசந்து பரந்திருந்த நெல் வயல்களின் அந்தத் தோற்றம் தேஜோ மயமாக, ஆனந்தமாக, இருந்தது.
அந்தக் காட்சியிலே கண்ணையும் மனத்தையும் லயிக்க விட்டு விட்டுப் புத்த தேவன் சிறிது நேரம் ஒரு மர நிழலில் நின்றான். அந்தக் காட்சி அவன் மனத்தில் எவ்வளவோ ஞாபகங்களை எழுப்பிற்று. அங்கே சுற் றுப் பிரதேசத்தில் ஒவ்வோர் அடி மண்ணும் அவன் காலடிப்பட்ட மண்ணாகத்தான் இருக்கும். சாக்கியர்களின் இளவரசன் அவன்; மனைவியையும், இளம் பிள்ளையையும், கிழத் தகப்பனையும், அரசையும், இன்பங்களையும் துறந்து அவன் தன் அரண்மனையை விட்டுக் கிளம்பிவந்த போது ராஜக்ருஹத்தில்தான் முதல் முதலாகத் தங்கினான்; ஒரு குன்றின் சரிவிலே மாந்தோப்பிலே ஆசிரமம் அமைத்துக்கொண்டு தங்கினான். இப்பொழுது அது ஐம்பது வருஷத்துக்கு முந் திய கதையாகப் போய்விட்டது. சம்ஸாரத்திலிருந்து நிர்வாணம் நோக்கிச் செல்லும் பாதையிலே அவ னுடைய முதல் ஆசிரமம், தங்குமிடம், அதுதான். அப்பொழுது அவன் இளைஞன் ; புத்தனாகாதவன். அவன் தலை மயிரிலே காக்கைக் கறுப்பும், உடம்பிலே வாலிபத் துடிப்பும் இருந்தன. அவன் மனத்தில் புயல் அடித்து அடித்து ஓய்வது அப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயம். இப்பொழுது அவன் ஞானம் பெற்றுவிட்டான். அந்த அஸ்தமனக் காட்சியில் இருந்ததுபோன்ற ஒரு சாந்தியும் தேஜஸும் அவன் மனத்திலே தோன்றிவிட்டன.
அவனுக்கும் அது அந்திப்பொழுதுதான். அவனுடைய மரண தினம் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தி வேளையின் அழகு சூழ ராஜக்ருஹத்தைத் தான் காண்பது அதுதான் கடைசித்தரமாக இருக்கலாம் உணர்ச்சி என்று அவன் உணர்ந்தான். ஆனால் அந்த உ யினால் அவன் மனத்திலே எவ்விதமான துக்கமும் பிறக்கவில்லை. உலகில் அவன் செய்யவேணுமென்று எண்ணிய காரியத்தையெல்லாம் ஒரு வழியாகச் செய்து முடித்துவிட்டான். உண்மையென்னும் மாளிகையை அன்பென்னும் அசையாத அஸ்திவாரத்தின் மேல் நிர்மாணித்து எழுப்பி விட்டான். இனி ஒன்றும் அவன் இருந்துதான் நடக்கவேணுமென்பது இல்லை. அவனுடைய சிஷ்யர்கள் தர்மத்துக்கும் உண்மைக்கும் சரியானபடி சேவை செய்யத்தக்க பக்குவம் பெற்று விட்டார்கள். ஒரு கவலையுமின்றி இனி இறக்கலாம் புத்ததேவன்.
அங்கிருந்து சுற்றுமுற்றும் தெரிந்த தனக்கு மிகவும் பழக்கமான இடங்களையெல்லாம் புத்ததேவன் திரும்பித் திரும்பிப் பார்த்தான். அவன் பார்வையிலே அவைகளிடம் விடைபெற்றுக்கொள்ள விரும்பியவன் அவன் என்ற ஒரு பாவம் தெரிந்தது. சூரியனின் கடைசி மஞ்சள் கிரணங்கள், நகரில் மற்றெல்லாக் கட்டிடங்களையும் விட உயரமாகத் தெரிந்த இரண்டு கோபுரங்களின்மேல் விழுந்தன.
அவைகளில் ஒன்று பிம்பிசார மன்னனின் அரண்மனைக் கோபுரம். கையில் ஓடெடுத்து ஒருநாள் நகருக்குள் பிக்ஷைக்காகப் பிரவேசித்து வந்துகொண் டிருந்த பால சந்நியாசி ஸித்தார்த்தனைப் பிம்பிசாரன் அந்தக் கோபுரத்திலிருந்து தான் கண்டான் ஐம்பது வருஷங்களுக்கு முன். அந்தச் சந்நியாசியினுடைய பருவமும், முகமும் அவன் யாரென்று விசாரித்து ஆளனுப்ப மன்னனைத் தூண்டின. அவன் யாரென்று அறிந்து கொண்ட பிம்பிசாரன் ஒரு நாள் பால சந்நியாசியைத் தேடிக்கொண்டு அவன் ஆசிரமத்துக்கே வந்தான். சாக்கிய நாட்டில் செங்கோல் செலுத்த வேண்டிய ராஜகுமாரன் அப்படி எல்லாம் துறந்த காஷாயதாரியாக வந்துவிட்டது தவறு என்றும், அவன் தனக்குரிய பதவியை ஏற்றுத் தக்க வயசுவரும் வரையில் கபிலவாஸ்துவிலிருந்து அரசு செலுத்துவதே தர்மம் என்றும், அவன் திரும்பிவிட வேணுமென்றும் அவனுக்குப் புத்தி சொல்லவந்திருந்தான் பிம்பிசாரன். ஸித்தார்த்தனின் மனத்தை மாற்றவந்த மன்னன், அவன் பேச்சைக் கேட்டுத் தானே மனம் மாறி, தன் பதவியிலும், மகத தேசத்து மன்னன் என்னும் பெருமையிலும் நம்பிக்கை இழந்தவனாக அரண்மனை திரும்பினான். பிறகு புத்தன் ஞானம் பெற்றபின், பிம்பிசாரன் அவனுடைய பிரதம சிஷ்யர்களில் ஒருவன் ஆனதற்கு முக்கிய காரணமாக இந்தச் சம்பவத்தைச் சொல்லலாம்.
அந்தக் கோபுரத்தருகில் தெரிந்த மற்றொரு கோபுரம் மிகவும் புராதனமான கோயில் கோபுரம். அதுவும் மகா உன்னதமானது தான். அதிலே தெய் வமே குடியிருந்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆனால் புத்ததேவன் தோன்றுமுன் அந்தக் கோயிலில் ஆண்டவன் பெயரால் பலியாயிருக்கும் ‘பசு’க்களின் எண்ணிக்கை கணக்கில் அகப்படாத கோடிகள்.
சூரியன் மேற்கே விழுந்து மறைந்த பின்னும் வெகு நேரம் அந்த இரண்டு கோபுரங்களும் புத்த தேவனின் வெற்றிக்குரிய இரு சின்னங்கள் போல நிமிர்ந்து பெருமையுடன் நிற்கும். நகருக்கு வலது பக்கத்திலிருந்த கிரிதரகூட மலையும் புத்ததேவனின் வெற்றிக்கு ஒரு சின்னந்தான். அந்த மலைச்சரிவிலே, ராஜமருத்துவன் ஜீவகன் உவந்து தந்திருந்த மாந் தோப்பிலே அமைந்திருந்தது பெளத்த ஆசிரமம். ஆனந்தனும் மற்றச் சிஷ்யர்களும் ஆசிரமத்தை இவ்வளவு நேரம் சென்று அடைந்திருப்பார்கள் என்று எண்ணினான் புத்தன். அவன் அவர்களுடன் போயிருக்க வேண்டியவன் தான். என்னவோ அவன் மனம் திடீரென்று தனிமையை நாடிற்று; அவன் கால்கள் தனி வழியே சென்றன. நாள் முழுவதும் மனம் போன படி சுற்றிவிட்டு, கால்கள் சோர, அவன் இப்பொழுது நகர்க்கோட்டை வாயிலில் ஒரு மரத்தடியில், நடந்த களை தீர, சிறிது நேரம் நின்று பழைய இன்பமான ஞாபகங்களில் ஈடுபட்டவனாயிருந்தான்.
புத்த தேவன் வெகுநேரம் அப்படி அங்கே நின்றான். அவன் கடைசியில் நகர்ந்து நகருக்குள் பிரவேசிக்கும் போது நன்றாக இருட்டி விட்டது. அவன் கால்கள் கெஞ்சின. ஆசிரமத்தை அடையச் சுருக்கு வழி நகருக்குள் புகுந்து போவதுதான். நகரவீதிகளிலெல்லாம் பிரகாசமாகத் தீவட்டிகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. பல வீதிகளைக் கடந்து புத்ததேவன் திடீரென்று தன்முன் எதிர்ப்பட்ட ஒரு பளிங்கு மாளிகையின் வாசலில் நின்று சற்றுத் தயங்கினான். அவன் காதில் தெய்விகமான அழைப்பொன்று ஒலித்தது. சட்டென்று திரும்பி மாளிகைக்குள் பிரவேசித்தான்.
அது தாசி வாஸவதத்தையின் மாளிகை.
2
ராஜக்ருஹம் மட்டுமல்ல ; மகத தேசம் மட்டுமல்ல; பாரதவர்ஷம் முழுவதுமே தாசி வாஸவதத்தையின் புகழ் பரவி இருந்தது. சங்கீதமா ? நாட்டியமா? அழகா? ? எதிலுமே அவளுக்கு ஈடு அவளேதான். அவள் மாளிகையின் வாசலிலே பல தேசத்து மன்னர்களின் ரதங்களும், பரிகளும், பரிவாரங்களும் காத்துக் கிடக்கும். மன்னர்களும், மன்னர் குமாரர்களும் அவள் முன்கூடத்தில் அவளது தரிசனம் வேண்டித் தவம் கிடந்தார்கள். அவர்கள் அவள் முக தரிசனத்துக்காக, அவளுடன் ஒருவார்த்தை பேசுவதற்காக, எவ்வளவோ முக்கியமான ராஜீய அலுவல்களையெல்லாம் விட்டுவிட்டு வந்திருந்தவர்கள்; தங்கள் ராஜ்யங்களையே அவளுக்காகத் தியாகம் செய்யச் சொன்னாலும் தயாராக இருந்தவர்கள்.
வழக்கமாக அவர்களைச் சரியானபடி வரவேற்று உபசரிக்க வாஸவதத்தை தவறுவதில்லை. அவள் தாசி; ஆனால் சகல கலா பண்டிதை ; கலைக்கு உள்ளத்தை அர்ப்பணம் செய்தவள்; உடலை இன்பத் துக்கு அர்ப்பணம் செய்தவள். தாசியின் கடமை அவளுக்குத் தெரியும். ஆனால் இன்று அவளுடைய மாளிகையின் முன்கூடத்திலே யாரும் கவனிப்பாரின்றி விட புருஷர்கள், புமான்கள் வந்து குவிந்து கொண்டிருந்தனர். உள்ளே வீணையின் இனிய நாதம், சுகந்தப்புகை போலப் பரவி ஒலித்துக் கொண்டிருந்தது. சில பெண்களின் உரத்த விஷமப் பேச்சும் சிரிப்பும் முன்கூடத்திலிருந்தவர்கள் காதில் விழுந்தன. வெற்றிலைக் காவி ஏறிய கீற்றுப்போன்ற பற்களையுடைய பெண்கள் பலர், பல் தெரியச் சிரித்துக் கொண்டே குறுக்கும் நெடுக்கும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் மன்னர் மன்னனையும் விசாரிக்க அவர்கள் தாமதிக்கவில்லை. இன்று விசாரிக்க வேண்டாம் என்று வாஸவதத்தையே தன் சேடியருக்கு உத்தரவிட்டிருந்தாள்.
மாலை நேரம் வந்துகொண்டிருந்தது. வாஸவதத்தையின் வரவுக்காகக் காத்திருந்தவர்கள் பொறுமை இழந்து கொண்டிருந்தார்கள். சிலர் கோபித்துக் கொண்டு கிளம்பிப் போகவும் போய்விட்டார்கள். ஆனால் அவர்கள் மறுநாள் வருவார்கள்; வாஸவதத்தையின் அழகென்னும் விளக்கு அவர்களுடைய விட்டில் பூச்சியாகிய உள்ளங்களுக்குச் சதா ஓர் அழைப்பாக இருந்தது.
வாஸவதத்தை அந்த நேரத்தில் வழக்கமாகச் செய்து கொள்ளும் அலங்காரம் எதுவுங் கூடச் செய்து கொள்ளாமல் தன் அறையில் தனியாக உட்கார்ந் திருந்தாள். நாவன்மை படைத்த கவிஞனால் கூட வர்ணிக்க முடியாத அவளுடைய அழகிய நெற்றி சுருங்கி இருந்தது. அவளுடைய இந்த நிலைமைக்குக் காரணம் அவளுக்கு மிகவும் பிரியமான மாதவி என்ற பாங்கிக்குக் கூடத் தெரியாது. யாரும் வந்து தன்னைத் தொந்தரவு செய்யாத வண்ணம் தாசி வாஸவதத்தை கதவை அடைத்துக்கொண்டு தனிமையில் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
நேற்று அந்திப்பொழுது முதலே அவள் மனம் சரியாக இல்லை. அஸ்தமித்தவுடன் ரதிதேவியின் படத்துக்கு எதிரே விளக்கேற்றி வைத்துவிட்டு, கை கூப்பி அஞ்சலி செய்தான பின் அவள் திரும்பிப் பார்த்தபோது திடுக்கிட்டுவிட்டாள் ! தன் வாசலில் நின்ற காஷாயம் தரித்த அந்தப் பிக்ஷு யார்? அவர் முகத்திலேதான் என்ன தேஜஸ் ! அவர் கண்களிலேதான் என்ன அமைதி கிணற்றில் விழுந்ததைப் பற்றியெடுக்கும் பாதாளக் கரண்டி போல, தன் உள்ளத்தை ஒரு விநாடியில் அவர் கவர்ந்து இழுத்து விட்ட மாயந்தான் என்ன !
ஆனால் அவள் மயக்கம் ஒரு விநாடிதான் நீடித்தது. அவள் பாங்கியர் சிலர் அந்தப் பிக்ஷுவைச் சூழ்ந்து கொண்டு பரிகாச வார்த்தையாடிக் கேலி செய்து கொண்டிருந்தனர். அவருடைய காஷாயத்தைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவருடைய முகத்திலே அதனாலெல்லாம் சிறிதும் சலனம் ஏற்படவில்லை. நின்று, நிலைத்து, கண்களை வாஸவதத்தையின் பக்கம் ஓட்டி, குழந்தையை அன்புடன் அருகில் அழைத்து அணைய விரும்பும் தாயைப் போலக் கையைக் காட்டி அவளை அழைத்தார். ஆனால் அவள் வரும் வரையில் அவர் அங்கே தாமதிக்கவில்லை. போய்விட்டார். எங்கே போனார்? அவள் தன் சேடியர்களை அவசர அவசரமாக அவரைத் தேட அனுப்பியும் அவர் யார் கண்ணிலும் படாமல் போய்விட்டார். எதற்கு அவளை அழைத்தார் அப்படி?
அன்றிரவு நாட்டியத்திலோ, சங்கீதத்திலோ வாஸவதத்தையின் மனம் செல்லவில்லை. எங்கே நோக்கினாலும், அந்தக் கருணை பொழியும் முகமும், அன்பு பொழியும் கை அழைப்புமே அவள் கண்ணில் பட்டன. யாரோ பாங்கி ஒருத்தி சொன்னாள், அவன் புத்த தேவன் என்று. ஆமாம், வாஸவதத்தையும் கேள்விப்பட்டிருந்தாள். பாரத வர்ஷத்தில் அந்த அன்பு ஒளியைப்பற்றிக் கேள்விப்படாதவர் யார் ? வாஸவதத்தையின் அழகைப் பற்றிக் கேள்விப் படாதவன் யார்? எங்கேயாவது ஒரு மூலையில் ஓர் ஏழை இருக்கலாம். புத்த தேவனைப் பற்றி அறியாதவன் யார்?
புத்ததேவன் தன் பிரதம சிஷ்யன் ஆனந்தனுடனும், வேறு பல பிக்ஷுக்களுடனும், கிரிதரகூட மலையில் மாந்தோப்பில் ஆசிரமத்தில் தங்கியிருந்தான் என்று தாசி வாஸவதத்தை விசாரித்து அறிந்து கொண்டாள். பௌத்த தர்மத்தை யும், பெளத்த மார்க்கத்தையும் பற்றி அவள் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். சகலகலா வல்லியாகிய அவளுக்குப் புத்தனுடைய தர்மத்திலே புதிதாக எதுவும் இருந்ததாகத் தோன்றவில்லை. ஆனால் அந்த முகம் ? அந்த அழைப்பு?
மிகவும் சாதாரணமான ஆடை ஒன்றை அணிந்து கொண்டு, நகைகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு, முகத்தைத் திரையிட்டு மூடிக் கொண்டு, அறைக் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். நல்ல வேளையாக அச்சமயம் யாரும் அங்கில்லை. தன் அறைக் கதவை இழுத்துச் சார்த்திப் பூட்டிக்கொண்டு, யார் கண்ணிலும் படாமல் கொல்லைப்புற வழியாக வெளியேறினாள் வாஸவதத்தை.
அவள் கிரிதரகூட மலையை நோக்கி நடந்தாள். அஸ்தமிக்க இன்னும் நாலு நாழிகை நேரம் இருந்தது.
3
புத்ததேவனைத் தரிசித்துச் சில விநாடிகள் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தாசி வாஸவதத்தை கிரிதரகூட மலைச் சரிவில் இறங்கிக்கொண்டிருந்தாள். வெகு தூரம் நடந்து பழகி அறியாத அவள் கால்கள் அந்தக் கரடுமுரடான பாதையிலே தள்ளாடின. அவ்வளவு தூரம் நடந்து வந்தது தவறு; புத்த தேவனைத் தரிசிப்பதற்குக் கூட அவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்க வேண்டாமென்று அவளுக்கு அப்பொழுது தோன்றிற்று. நேற்றைய மன மயக்கம் இப்பொழுது நீங்கிவிட்டது. ஏதோ வெளிச்சமும் வேஷமும் சேர்ந்து நேற்று அவளை மயக்கிவிட் டன. அந்த மாயக்கட்டினின்றும் விடுபட்டுவிட்டாள்.
அவள் புத்ததேவனைத் தரிசித்துப் பேசிவிட்டு வந்து கொண்டிருந்தாள். அவர் உள்ளத்திலே உலகை யெல்லாம் தழுவும் அன்பு இருந்தது உண்மைதான். ஆனால் அவர் புதிதாக என்ன சொல்லிவிட்டார்? உடலழகு நிலைக்காது என்றார் ; இன்பங்கள் நிலையற்றவை என்றார்; அன்பு வேணும் என்றார். இதெல்லாம் முன்னரே மகா பண்டிதையான வாஸவதத்தை அறியாத விஷயங்களா? தன் உடல் அழகு நிலைக்காதது என்று அவளுக்கும் தெரியாதா? அதனால்தானே அது உள்ள போதே அதை உபயோகப் படுத்திக்கொள்ள வேணுமென்று பாடுபட்டாள்?
“எனக்குப் பிரம்மதேவன் கொடுத்திருக்கும் இந்த அழகை அவன் ஒரு குலஸ்திரீக்குக் கொடுத்திருந்தானானால் நான் வருத்தப்படுவேன். அழகு உலகுக்கெல்லாம் பொதுவான ஒரு பொக்கிஷம். அதைப் பூட்டிவைத்துக் கொள்வது கொடுமை” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள் வாஸவதத்தை.
இதற்குள் அவள் மலையடிவாரத்தை அடைந்து விட்டாள். அங்கிருந்து அவள் மாளிகை அதிகத் தூரம் இல்லை. யாராவது தெரிந்தவர் வந்தால் தன் ரதத்தைக் கொண்டு வரச் சொல்லி அனுப்பலாம். அஸ்த மிக்கவும் இன்னும் சிறிது நேரம் இருந்தது. ஒரு தடாகக் கரையிலே, ஒரு மரத்தடியில் இளைப்பாறலாம் என்று உட்கார்ந்தாள் வாஸவதத்தை. அமைதி நிலவிய குளநீரில் விழுந்த அவள் முகநிழல் அவளை நிமிர்ந்து நோக்கியது. அதைப் பார்த்துக்கொண்டே மறுபடியும் யோசனையில் அவள் ஆழ்ந்தாள்.
அவள் தன்னுடைய சிஷ்யை ஆகிவிட வேணுமென்று புத்த தேவன் வற்புறுத்தினானா என்ன ? அது ஒன்றும் இல்லை. ஏதோ பார்க்க வந்தாள்; தாசி என்று எவ்விதமான உதாசீனமும் காட்டாமல், முகம் கொடுத்துச் சில வார்த்தைகள் பேசினான். அவள், “போகிறேன்” என்றாள்; “போய் வா” என்று பிரியத்துடன் விடைகொடுத்தான். அவ்வளவுதான்.
நேற்று வந்து “வா” என்று தன்னைக் கையைக் காட்டி அவன் அழைத்த விஷயத்தைப்பற்றிக் கேட்க அவள் உண்மையில் மறந்தே போய்விட்டாள். அவள் அந்த அரை நாழிகைச் சம்பாஷணையில் பத்து வார்த்தைகள் கூடச் சரியாகப் பேசியிருக்க மாட்டாள். அவன் பேசியதில் கூட எல்லா வார்த்தைகளும் அவள் காதில் சரியாக விழுந்திருக்குமா என்பது சந்தேகந்தான். அவள் அவனுடைய முகத்தையும் பாவத்தையும் கவனிப்பதிலேயே ஈடுபட்டவளாக உட்கார்ந்திருந்து விட்டாள்.
அவன் என்ன சொன்னான்? ஐம்பது வருஷங்களுக்கு முன்னே அவன் ராஜக்ருஹத்தில் முதல் முதலாக ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கியபோது அவள் பாட்டியின் தாயைப் பார்த்திருந்ததாகச் சொன்னான். அவள் அழகெல்லாம் அவள் பேத்திக்கும் இருந்தது என்று புகழ்ந்து சொன்னான். அவள் பாட்டியையும், அவளுடைய தாயையுங் கூடத் தனக் குத் தெரியும் என்றான். பின்னர் வெகு நாள் கழித்து அவன் மறுபடி ஒருதரம் ராஜக்ருஹம் வந்தபோது வாஸவதத்தையே நாலு வயசுச் சிறுமியாக இருக்கும் போது, ஒரு நாள் தான் வந்து பிக்ஷை ஓட்டுடன் அவர்கள் வீட்டு வாசலில் நின்றதாகவும், அவள் தன் குஞ்சுக்கைகளால் பிக்ஷை கொண்டுவந்து போட்ட தாகவும், திரும்பிப் போகும் போது அவள் கால் தடுக்கிக் கீழே விழுந்ததாகவும், தான் உடனே அவளைத் தூக்கி எடுத்து ஆசுவாசப்படுத்தியதாகவும் சொன்னான். வேறு என்ன சொன்னான் ?
யோசனைகளில் லயித்து மெய்ம்மறந்திருந்த தாசி வாஸவதத்தை கனவு கண்டு விழித்துக்கொள்ளுவது போலத் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். குளத்தில் அவளையே நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததே, அது அவள் நிழல்தானா ? அவள் பக்கத்தில் வேறு யாரும் இல்லையே! அவள் கண் முன்னேயே அந்த நிழல் முகம் என்ன என்ன மாறுதல்கள் அடைந்தது! சகிக்க முடியவில்லையே! தன் அழகிய கைகளால் கண்ணைப் பொத்திக்கொண்டாள் வாஸவதத்தை. நெற்றி சுருங்கிவிட்டது. எவ்வளவு விகாரமான கோடுகள் தோன்றிவிட்டன ! ஒரே விநாடியில் கண்கள் குழிந்து, ஒளி இழந்து, உயிரற்றுப் போய்விட்ட கன்னத்துச் சதை, ஹா என்ன கோரம்!… அழகி வாஸவதத்தையின் முகநிழலா அது! கண்களைப் பொத்திய கைகளை விலக்கிவிட்டு மறுபடியும் தன் நிழலைப் பார்த்தாள் அவள். ஹா ! இது அவள் முகந்தான். ஆனால் அவள் கண் முன்னேயே மறுபடியும் இப்படி மாற ஆரம்பித்து விட்டதே ? என்ன விகாரம்?
ஓ வென்று தன்னையும் மறந்து அலறியவளாக எழுந்தாள் வாஸவதத்தை. ஒரு தரம் ராஜக்ருஹ நகரையும், தன் மாளிகை இருந்த பக்கத்தையும் பார்த்தாள். அப்புறம் கிரிதரகூட மலை உச்சியிலிருந்த பெளத்த ஆசிரமத்தை நோக்கி ஏற ஆரம்பித்தாள்.
பாதை இப்பொழுது அவ்வளவு கரடுமுரடான கடினமான பாதையாகத் தோன்றவில்லை.



