
அழகி முதலிய கதைகள்
க. நா. சுப்ரமண்யம்
மார்க்கண்டன்
அர்த்தஜாம பூஜையெல்லாம் ஆகிவிட்டது. குளிர்ந்த இரவுக் காற்றில் மணிகளின் கம்பீரநாதம் பூஜையின் போது எழுந்தது இன்னும் அலையடித்து ஓயவில்லை. அமிருதகடேசுவரரின் சந்நிதியிலிருந்து எல்லோரும் வெளியேறி விட்டனர். கோவிலில் கடைசியாகச் செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் முடித்துக் கொண்டு அர்ச்சகரும் அவருடன் இருந்தவர்களும் கர்ப்பக்கிருகத்தின் கதவை இறுகச் சார்த்தி மூடிப் பூட்டிக் கொண்டு கோவிலின் மற்ற இடங்களையும் பார்த்துக்கொண்டு வீடு போய்விட்டார்கள். மார்க் கண்டனுக்கு அன்றிரவுடன் பதினாறு வயசு நிரம்புவது அவர்கள் யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் அப்படி அவர்கள் நிம்மதியாக வீடு திரும்பியிருக்க மாட்டார்கள்; அர்த்த ஜாம பூஜையைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருந்தாலும் போட்டிருப்பார்கள்.
மார்க்கண்டச் சிறுவன் அன்றும் வழக்கம் போல அர்த்தஜாம பூஜைக்கு வந்திருந்தான். ஆனால் அவன் மற்றவர்களைப் போலப் பூஜை ஆனதும் உடனே வெளியேறி விடவில்லை. தனக்குப் பதினாறு வயசு அன்றுடன் நிரம்பி விட்டதென்றும், அன்றிரவு எமன் தனக்காக வருவான் என்றும் அவனுக்குத் தெரியும். அவன் யார் கண்ணிலும் படாமல் கர்ப்பக்கிருகத்துக்குள் நழுவிச் சிவனது நிழலில் ஒளிந்து கொண்டிருந்தான். விடிவிளக்கு ஒன்றைத் தவிர மற்ற எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டுக் கோவில் அர்ச்சகர் ஒருதரம் கர்ப்பக்கிருகத்தைச் சுற்றிக் கண்ணை ஓட்டிவிட்டுக் கதவை சார்த்திக்கொண்டு போய்விட்டார். கர்ப்பக் கிருகத்தில் இப்போது அச் சிறு ஒளியையும், சர்வ வியாபியான சிவனையும், எமனை எண்ணித் திகிலுற்ற தன்னையும் தவிர யாரும் இல்லை என்று மார்க்கண்டன் எண்ணினான். ஆனால் அந்த ஒரு விளக்கின் வெளிச்சமும் அதனால் சுவர்களில் விழுந்த நிழலும் விதவிதமான உருவங்கள் எடுத்து, சிவகணங்கள் என்று சொல்லும் படியாகக் கோர தாண்டவம் ஆடின. ஆசிரமத்திலே அவனுக்குப் பழக்கப்பட்ட பல்லி, கரப்பு முதலிய ஊரும் ஜாதிக்கும் இங்கு குறைவில்லை. தலைக்கு மேலே விர் என்று ஒரு கரப்புப் பறந்தது. எமன்தான் வந்துவிட்டானாக்கும் என்று மார்க்கண்டன் பயந்து ஓவென்று அலறிக்கொண்டு ஆவுடைமேல் விழுந்தடித்து அமிருதலிங்கத்தைக் கட்டிக் கொண்டான். தன்னை அப்படிப் பயமுறுத்தியது எமன் அல்ல, ஒரு கரப்புத்தான் என்று கண்டவுடன் அவனுக்கே வெட்கமாக இருந்தது. நிமிர்ந்து அமிருதலிங்கத்தைப் பார்த்தான். சிவபிரான் அவன் பயத்தைக் கண்டு நகைக்கவில்லை என்றே தோன்றிற்று. சிவபிரானுக்குத்தான் பக்தர்களின் பக்தியைக் கண்டு பரவசமடையும் சக்தியும், அவர்கள் தம்மைப்பற்றிய வரையில் எவ்வளவு அசட்டுத்தனம் செய்தாலும் சகித்துக் கொள்ளும் சக்தியும் உண்டு; அவர்கள் மட்டும் அவருடைய அழிக்கும் சக்தியில் முழுநம்பிக்கை வைத்து விடவேண்டும் ; அவ்வளவுதான் அவர் கேட்டது.
லிங்கத்தைக் கட்டிக் கொண்டு மண்டியிட்டுச் சிறுவன் எழுந்திருக்கவில்லை. அவன் வாய் சதாசிவ நாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தது. அவனை எமன் அணுகிக் கொண்டிருந்தானே தவிர அவன் உண்மையில் இன்னும் சரியானபடி வாழ்க்கையை அறியாத பாலகன். பதினாறு வயசு ஆவதற்கு வெகு காலம் முன்னரே அவன் சிவபக்தனாகப் பழுத்துவிட் டான். படிகளின் உதவியேயில்லாமல் அவன் எப்படியோ ஏணியின் உச்சியில் இருந்தான். அந்தப் பக்தி ஒன்றுதான் தன்னை எமன் கையிலிருந்து காப்பாற்றக் கூடியது என்ற ஒரே நம்பிக்கைதான் அந்த பக்திக்குக் காரணம். வாழ்க்கையை அறியாத பாலகன்தான் எனினும் அவன் உள்ளமும், உடலும், வாழ விரும்பின. எமனை வரவேற்கத் தயாராக இல்லை.
மிருகண்டு மஹரிஷி பல தடவைகளில் அவனிடமே அவன் பிறந்த கதையைச் சொல்லியிருக்கிறார். பிள்ளைக்காகத் தாமும் தம் பத்தினியும் தவம் செய்ததையும், பகவானே வந்து நூறு வயசு வாழக் கூடிய அசட்டுப் பிள்ளை வேணுமா, சிவ பக்தனாக பதினாறு வருஷம் வாழ்ந்து இறந்து விடக்கூடிய பிள்ளை வேணுமா என்று கேட்டதையும், தம் பத்தினி தம்மிடம் ரகசியமாக அசட்டுப் பிள்ளையானாலும் தீர்க்காயுசாக இருக்கும் பிள்ளைதான் வேணுமென்று சொன்னதையும், தாம் அவள் சொன்னது அசட்டுத்தன மென்று, கெட்டிக்காரப் பிள்ளையாக வேணுமென்று கேட்டதையும் சொல்லியிருக்கிறார்.
மார்க்கண்டனும் அவன் தாயும் இந்த விஷயத்தில் ஒரு கட்சி. மிருகண்டு மஹரிஷி எதிர்க்கட்சி. ஆனால் அவரும் தம் கெட்டிக் காரப் பிள்ளை, அல்பாயுஸ்தான் என்று விதிக்கப்பட்ட பிள்ளையும், தன் கெட்டிக்காரத்தனத்தினால் எமனையும் அவருக்கு வரமளித்த பகவானையும் ஏமாற்றி விடலாகாதா என்றுதான் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் பொருட்டு அவர் சிவபக்தி என்னும் மார்க்கத்தை அவனுக்கு உபதேசித்து அமிருதகடே சுவரரிடம், நான் செய்வது இனியாதுமில்லை என்று ஒப்படைத்துவிட்டார்.
ரத்தத்தில், உடன்பிறந்து ஓடும் வாழ்க்கைப் பற்றுதல் என்பது யாருக்கும் உள்ளதுதான். மார்க்கண்டச் சிறுவனின் உள்ளத்திலே என்ன நேருமோ, கடவுள் காப்பாற்றுவாரா என்ற சந்தேகமும் அதன் பக்கத்திலேயே காப்பாற்றுவார், விட்டுவிட மாட்டார் என்ற ஒரு திடமான நம்பிக்கையும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு வியாபித்து நின்றன.
பதினாறு வயசுக்குள் இவ்வளவு சிவபக்தி காட்டியவன், மார்க்கண்டனைப் போல ஒரே லக்ஷ்யமாகச் சிவநெறி நின்றவன் வேறு யாரும் இல்லை என்று உலகெலாம் போற்றிற்று. அது மார்க்கண்டனுக்கும் தெரியும்; சிவபிரானுக்கும் தெரிந்திருக்க வேணும். அவர் இப்படிப்பட்ட பக்தனைக் கைவிட்டு விடுவாரானால் உலகமே அவரைத் தூற்றும்; சைவ மதமே, சிவ பக்தியே, மற்ற எவ்வளவோ பக்திகள் மதங்களைப் போல உலகிலிருந்து மறைந்துவிடும். என்ன சொன்னாலும் கெட்டிக்காரனாக, மூளையுடன் மனிதனாகப் பிறந்த குற்றத்தினாலோ என்னவோ,மார்க்கண்டன் மனத்தில் இந்த விசேஷமான முக்கியமான வினாடியிலும் எவ்வளவோ அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் பேய்க் களியாட்டம் ஆடின. ஆனால் அவன் வாய் சிவநாமங்களை உச்சரிப்பதை நிறுத்தவில்லை; அவன் கை அமிருத லிங்கத்தைப் பிடித்திருந்த பிடியைத் தளர்த்தவில்லை.
நள்ளிரவில் எமன் வந்தான். உதை பட்டான். மார்க்கண்டனின் உயிரைக் கவரச் சக்தியில்லாதவனாகப் பாசக்கயிற்றைச் சுருட்டி எடுத்துக் கொண்டு தலை இறங்கியவனாகத் திரும்பி விட்டான். தேவலோகத்தில் போய் யாருடைய ஆத்மாவையோ காட்டி, “இது மார்க்கண்டனுடையது” என்று அவன் சொன்னதாகவும் சிவபிரானே, “மார்க்கண்டன் இறக்கவில்லை” என்று நிரூபிக்க வேண்டி வந்தது என்றும் கொஞ்ச காலம் உலாவிய வதந்தி நிஜமல்ல என்றே நாம் நம்பலாம். தேவலோகத்துச் செய்தி எப்படியானாலும், பூலோகத்தில் சைவ மதமும், சிவபக்தர்களுக்குத் தங்கள் மார்க்கமுமே சிறந்த மார்க்கமென்று நிரூபிக்க இன்னொரு ருசுவும் கிடைத்துவிட்டது. அதுவும் எப்படியானாலும் பாதகமில்லை. மார்க்கண்டனைப் பற்றிய வரையில் அவன் பதினாறு வயசைத் தாண்டி விட் டான். என்றும் பதினாறு வயசாக வாழ வரம் பெற்றுவிட்டான். அன்றிரவு எமன் வந்து போன பின் அவன் எப்பொழுது காலையில் கர்ப்பக் கிருகத்தின் கதவைத் திறப்பார்கள், அங்கிருந்து வெளியேறலாம் என்று காத்திருந்தான். அப்பொழுதும் அவன் நாக்குச் சிவபெருமான் திருநாமத்தை உச்சரிப்பதை நிறுத்திவிடவில்லை.
யுகங்கள் எவ்வளவோ வந்து கழிந்துவிட்டன. பிரம்ம வருஷங்கள் சென்றுவிட்டன. எவ்வளவோ பிரம்மாக்கள் தோன்றி மறைந்து விட்டார்கள்.
மாயூரத்திலிருந்து தரங்கம்பாடி போகும் ரயிலில் நான் சென்றவாரம் மார்க்கண்டனைச் சந்தித்தேன். அவனுக்கு வயசு இன்றும் பதினாறுதான். அவனைப் பார்த்தால் எவ்வளவோ யுகங்கள் வாழ்ந்து விட்டவனாகத்தான் தோன்றிற்று. ஒரு நாளைப் பசியும் பட்டினியும் ஒரு மனிதனுக்கு வயசை ஒரு யுகம் அதிகப் படுத்திக் காட்டப் போதாவா? அவன் ஒரு நாளல்ல, ஒரு மாசமல்ல, ஒரு வருஷமல்ல இப்படிக் கடத்திக் கொண்டு வந்திருக்கிறான்.
நான்தான் மார்க்கண்டன். அமிருதகடேசுர ரிடம் அன்று பக்தி செலுத்தி எமனை விரட்டிச் சிரஞ்சீவியானேன். இன்று எமன், அந்தப் பழைய ஞாபகத்தால் என்னை அணுகப் பயப்படுகிறான்.
“என்னை அழைத்துப் போக எமனுக்கு அந்தச் சிவனே உத்தர விட்டாலொழிய என்னை அணுகமாட்டான் போலிருக்கிறது. பக்தி செய்து சிவனிடம் அந்த உத்தரவு வரத்தைப் பெற நான் போகிறேன்” என்றான்.
அவன் யாரோ பைத்தியம் என்று எண்ணினேன் நான். “காலணா இருந்தால் கொடு சாமி” என்று அவன் கேட்ட பிறகுதான் அவன் கெட்டிக்காரப் பிச்சைக் காரன் என்று எனக்குத் தெரிந்தது.
ஆனால் அவன் திருக்கடையூரில் தான் இறங்கினான்!



