
அழகி முதலிய கதைகள்
க. நா. சுப்ரமண்யம்
வரவேற்பு
தஞ்சாவூர் ஜில்லாவில் சரீத்தனூர், சாத்தனூர் என்று ஒரு சின்னக் கிராமம் உண்டு. ரெயில்வே அட்டவணை, ஜில்லாப்படம், சர்க்கார் கெஜட் எதிலும் அதன் பெயரைக் காணமுடியாது ; அவ்வளவு சின்ன ஊர். மோட்டார் நாகரிகம் அதற்கு மூன்று மைல் மேற்கே நின்றுவிடுகிறது. ஜில்லா முழுவதும் கால் நடையாகச் சுற்றி வருபவன் கண்ணிற் கூட அந்தக் கிராமம் படுவது சற்றுச் சிரமந்தான். அது காவேரியின் கிளை நதிகளில் ஒன்றன் கரையில் இருப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் நதிக்கும் ஊருக்கும் இடையே ஒரு மைலுக்குமேல் இருக்கும். தஞ்சாவூரிலே நாயக்கர்கள் அரசு புரிந்த காலத்தில் ஒரு சங்கீத வித்துவானுக்கு மான்யமாக அளிக்கப்பட்ட கிராமம் அது. வித்துவான் அவ்வளவு உயர்ந்த வித்துவான் அல்ல. ஏதோ ஒரு சமயம் அரசன் அவனிடம் சந்தோஷமடைய முடிந்தது; நாலு வேலிக் கிராமத்தை மான்யமாகத் தந்தான். இன்னும் அந்த மண்ணிலே வளம் குன்றிவிடவில்லை. ஆனால் பொழுது ஊரிலே சுபிக்ஷம் இல்லை.
சாத்தனூரின் இன்றைய நிலைமையின் சின்னம் போல நிற்கிறது சிவன் கோயில். இரண்டடுக்கு இடிந்து விழுந்துவிட்ட மொட்டைக் கோபுரம்; அதன்மேல் கொத்துக் கொத்தாகச் செடி கொடிகள், புல்லும், நெருஞ்சியும், அரச ஆல வேப்பங் கன்றுகளும் முளைத்திருக்கும் மாஜி கல்தளம்; ஏராளமான பழந்தின்னி வௌவால்களின் வாசஸ்தலம்-இதுதான் சாத்தனூர்ச் சிவன் கோயில். இதிலுள்ள சிவனுக்கு விளக்குக்கோ நைவேத்தியத்துக்கோ ஒன்றும் அவசியம் இல்லை போலும்! இருந்தால் அதற்கான ஏற்பாடுகளை அவன் செய்து கொண்டிருக்க மாட்டானா? கோயிலுக்குப் பக்கத்தில் இருப்பதுதான் அக்கிரகாரம். இப்பொழுது அங்கே ஆறு வீடுகளே இருக்கின்றன. ஊரிலே சுபிக்ஷம் இருந்த காலத்திலே பதினாறு பதினேழு வீடுகள் இருந்திருக்கும்.
கும்பகோணத்தில் பஸ் ஏறிப் புளி அடைவது போல அடைபட்டு அரைமணி நேரம் நகரின் புழுதியையும் திவ்யமான சந்தங்களையும் அநுபவித்து விட்டு வெளியேறி ஒரு மணி நேரம் ஆன பிறகு, பஸ் ஒரு நிதானமாக எவ்வித ஆபத்திற்கும் உள்ளாகாமல் ஓடி வந்திருந்தால், சாத்தனூர் போக விரும்புகிறவனைச் சாலைக்கு அருகில் இருக்கும் பனங்காட்டில் இறக்கிவிடும். அந்தப் பனங்காட்டுக்கு நேர் வடக்கே மூன்றாவது மைலில் இருக்கிறது சாத்தனூர் அக்கிர காரம். பாதிவழி ஒற்றையடிப் பாதையிலும், மற்றப் பாதி வழி வயல் வரப்பின்மேலும் நடக்க வேணும். வழி தவறிவிட்டால் விசாரிக்க அங்கே யாரும் அகப்பட மாட்டார்கள் ; ஊர் போய்ச் சேருவது அவரவர் அதிருஷ்டத்தைப் பொறுத்தது. சாதாரணமாக, சாத்தனூர் போகவேணுமென்று கிளம்புகிறவர்கள் மத்தியான்ன வேளையில் கிளம்ப மாட்டார்கள். முன் ஜாக்கிரதையாக விடியற் காலையிலேயே கிளம்பி விட்டால், எவ்வளவு துர்ப்பாக்கியசாலியும் அஸ்த மனத்துக்குள் ஊர்போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால் வெயில் காலத்தில் வெயிலுக்கும், மழைக் காலத்தில் மழைக்கும் பயப்படாதவனாக இருக்க வேண்டும். ஊருக்கு வடவண்டைப் பக்கத்தில் கும்பகோணத்திலிருந்து மண் ரஸ்தா ஒன்று நேரே வருகிறது. அதில் கட்டை வண்டிதான் நகர முடியும். மழை நாளில் அதுவும் முடியாது.
ஒரு நாள் மத்தியான்னம் நடு வெயிலில் ஒரு மணி சுமாருக்குப் பஸ்ஸிலிருந்து இறங்கினான் அண்ணா சாமி. அந்தப் பனங்காட்டைக் கண்டவுடனே அவனுக்குப் பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்து மூண்டன. அவன் சாத்தனூரை விட்டுப் போய் எட்டு வருஷங்களுக்கு மேலாகி விட்டன. அந்தப் பிரிவைப் பற்றிய ஞாபகம் அவ்வளவாக இன்பகரமானது அல்ல. இப்போதும் அவன் சாத்தனூர் போக வேண்டிய அவசியமே இல்லை. எட்டு வருஷங்களுக்கு முன்னே தன்னை, ” போ! போ!” என்று வீட்டையும் ஊரையும் விட்டு விரட்டியவர்கள், அவன் உறவினர்களும் ஊராரும், இப்போது கோபம் தணிந்து தன்னை அன்புடன் வரவேற்பார்கள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. அவனை வரவேற்க யார் யார் ஊரில் உயிருடன் இருந்தார்கள் என்று கூட அவனுக்குத் தெரியாது. உயிருடன் இருப்பவர்களும் அவனை வரவேற்று அங்கீகரிக்க அவ்வளவாக உத்ஸாகமோ, ஆர்வமோ காட்டமாட்டார்கள் என்பது நிச்சயம்.
அண்ணாசாமியின் கையில் குடையோ காலில் செருப்போ இல்லை; அவனிடம் மூட்டை முடிச்சுக்களும் இல்லை. சோப்புப் போட்டுத் தினம் வெளுத்து உலர்த்தி அணியும் பழுப்பேறியிருந்த அவனுடைய கதர் ஜிப்பாவின் பைகளிலும் கனம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. இருந்த கனத்திலும் பெரும் பகுதி காலணாக்களும் பீடிகளும் நெருப்புப் பெட்டியுந்தான். அந்தவெயிலிலும் ஒற்றை யடிப் பாதையில் நிழல் இல்லாத இடத்தில் கால் சுட நின்று கொண்டு அண்ணாசாமி ஒரு பீடியை எடுத்து, இரண்டு மணி நேரமாகப் பீடியே பிடிக்காமல் அவஸ் தைப்பட்டவனே அறியக்கூடிய ஆனந்தத்துடன், அதைப் பற்றவைத்துக் கொண்டு நடந்தான். அந்தப் பக்கம் அவன் வந்து நாளாகி விட்டது என்றாலும், அதற்கு முன் வெகுநாள் அங்கெல்லாம் ஓடியாடித் திரிந்து பழகியவனாதலால், வழி தவறி விடுமோ என்ற கவலை அவனுக்கு இல்லை. அவன் கால்கள் தாமாகவே சரியான வழியில் சென்றன. அந்தப் பக்கத்து மனிதர் களைப் போலவேதான் அந்தப் பக்கத்துப் பூமியும்; நித்தியமானது; நிரந்தரமானது; கேவலம் எட்டு வருஷங்களிலா மாறிவிடப் போகிறது?
பீடியை நாலுதரம் இழுத்தானதும் தூக்கி எறிந்துவிட்டு மெள்ள நடந்தான் அண்ணாசாமி. பழைய ஞாபகங்கள் அலை அலையாக வந்து மோதின. எட்டு வருஷங்களுக்கு முன் தனது என்று சொல்லிக் கொள்ள அவனுக்கு ஒரு வீடு இருந்தது; உற்றார் உறவினர்கள் இருந்தார்கள். குச்சு வீடுதான் ; ஆனால் இப்போது அண்ணாசாமி அதைக் கூடத் தனது என்று சொல்லிக் கொள்ள முடியாது. அவன் இப்போது ஒரு நாடோடி; தங்க இடங் கிடையாது; ஏனென்று கேட்பார் இல்லை. மற்றச் சாதாரண மக்களைப் போல அவனை வாழ விடாமல் அந்தக் காலத்தில் குறுக்கே நின்றவை அவனுடைய தடித்தனமும் மாற்றாந்தாயுந் தான். அவனுக்கு இருபது வயசு ஆகு முன்னரே ஊரில் அவனுடைய அட்டஹாஸங்கள் அடக்க முடியாதனவாகி விட்டன. ஊரில் ஒவ்வொருவரும் தனித்தனிக் காரணங்களுடன் அவனுக்கு எதிரிகளாகி விட்டனர். அக்கிரகாரத்தார் மட்டுமல்ல; குடியானத் தெரு, பள்ளித் தெரு, பறைத் தெரு, எங்கும் அவன் விரோதிகளே. அகப்பட்டுக்கொண்டு அவன் உதையும் அடியும் பட்டிருப்பது எவ்வளவு என்பது ஈசுவரனுக்குத்தான் வெளிச்சம். வீட்டிலும் எல்லோரும் அவனுக்கு வைரிகளே; இருவர் விஷயந் தெரிந்த பெரிய வைரிகள்; கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கும் நாலைந்து பேர் வைரிக் குஞ்சுகள். அவன் தகப்பனாரும் ஊராரும் சேர்ந்து அவனை ஊரை விட்டுத் துரத்தாத குறைதான். பிது ரார்ஜிதமான ஆஸ்தி அந்த ஓட்டைக் குச்சு வீட்டைத் தவிர வேறு இல்லை. அந்தச் சிறு கிராமத்தில் தன் பிரதாபத்தை இன்னும் வளரவிடுவானேன், பரந்த உலகமே இல்லையா தன் திருவிளையாடலுக்கு என்று அண்ணாசாமி, ஒரு நாள் மனமும் அடிபட்டு உடலும் அடிபட்டு, நொந்தவனாகத் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டான்.
எட்டு வருஷங்களில் எவ்வளவோ காரியங்கள் நடந்தேறி விட்டன. அண்ணாசாமி மூன்று தரம் சிறைக்குள் வாசம் செய்து வந்துவிட்டான். ஒரு தரம் காங்கிரஸ்காரனாக ; ஒருதரம் ஏதோ கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு ; ஒரு தரம் ரஷ்யாவை லக்ஷ்யமாகக் கொண்ட புரட்சியாளனாக. ஆனால் அதிகாரிகள் சிறையிலும் அவனை நிம்மதியாக இருக்க விடவில்லை. “இங்கே இருக்காதே, இனி மேல்! போ வெளியே” என்று அவர்களும் மறுபடியும் மறுபடியும் உலகில் கெட்டுத் திரிந்து அலைய வெளியே உந்தித் தள்ளி விட்டார்கள். சிறையில் இப்படிக் கழிந்த மூன்று நான்கு வருஷங்களைத் தவிர, மற்ற வருஷங்கள் அவன் எப்படிக் கழித்தான் என்பது அவனுக்கே தெரியாது. இன்னும் உயிருடன் இருந்ததுதான் அவன் மற்ற வருஷங்களிலும் வாழ்ந்தான் என்பதற்கு ஒரு ருஜு. மற்றப்படித் திட்டுத் திட்டாக ஒன்றிரண்டு ஞாபகங்களே அவனுக்கு இருந்தன. அல்லல்களிலிருந்து விடுபட்டுத் தர்ம ஆஸ்பத்திரியில் கிடந்த ஒரு பத்து நாட்களே தன் வாழ்வில் மிகவும் ஆனந்தமான நாட்களாக அவனுக்குத் தோன்றின. இன்னும் ஒரு சிறிய சம்பவமும் ஓர் இன்ப ஞாபகமாக அவன் சிந்தனையில் தட்டியது. கையில் காசேயில்லாமல் திரிந்து கொண் டிருக்கையில் பட்டணத்தில் ஒரு நாள் தெருவில் தனியாக விளை யாடிக் கொண்டிருந்த ஒரு சின்னக் குழந்தையின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு போய்விடலாமா என்று வெகு நேரம் யோசித்து விட்டுக் கடைசியில் திருடாமல், அதிக ஆதரவுடன் அந்தக் குழந்தையை அதன் பெற்றோரைத் தேடிப் பிடித்து ஒப்பித்து விட்டுப் போனான். இந்த இரண்டையும் தவிர அவனுக்கு வேறு எந்த நல்ல அனுபவமோ ஞாபகமோ இல்லை. தினம் போர், போர், போர்தான்; எப்படியோ அவனும் அந்த எட்டு வருஷங்களையும் ஒரு நாள் நின்ற ஊரில் மறுநாள் நில்லாமல் சுற்றிக் கழித்து வாழ்ந்து விட்டான்.
இந்தச் சமயத்தில்கூட அண்ணாசாமியின் மனத்தில் அதையெல்லாம் பற்றி எண்ணிப் பார்க்கும் போது வருத்தம் தோன்றவில்லை. ஏதோ தலைச்சுழி, அவனை எங்கெல்லாம் இழுத்ததோ அங்கெல்லாம் போக அவன் தயாராகவே இருந்தான். தன்னூரில் தங்கி வீடும் உத்தேசத்துடனா அவன் அங்கே போய்க் கொண்டிருந்தான்? அதெல்லாம் ஒன்றும் இல்லை. தற்செயலாகக் கும்பகோணம் வந்தவன் ஏதோ ஆதி காலத்தில் பழக்கமான தன் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டுப் போகலாமே என்று கிளம்பினான் ; அவ்வளவு தான். பீடி குடிக்க வேணுமென்று சில சமயம் தாகமும் ஆத்திரமும் தோன்றுவது போல இப்போது அவனுக்கு ஊரைப் பார்த்து விட்டுப் போக வேணுமென்று தோன்றியது. அவன் தன் சொந்த ஊரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தான். சொந்த ஊர்! சொந்த ஊர்! அண்ணாசாமிக்குத் தன்னையும் அறியாமலே சிரிப்பு வந்தது; உரக்கச் சிரித்துவிட்டான்.
ஊரில் யாரும் அவனை அடையாளம் கண்டு கொண்டுவிட மாட்டார்கள். எட்டு வருஷங்களுக்கு முன் ஊரை விட்டு ஓடிப்போன அண்ணாசாமிதான் அவன் என்று யாரும் அறிந்து கொண்டு விடமாட்டார் கள். அவன் தலைமயிர் எல்லாம் நரைத்துப் போய் விட்டது; முகம் காய்த்துப் பழுத்துக் கிழடு தட்டி விட்டது; கண்கள் குழிவிழுந்து ஒளியிழந்து ஏக்கம் பெற்றுவிட்டன. பார்த்தால் அவனுக்கு வயசு ஐம்பதுக்குமேல் இருக்குமென்றுதான் சொல்வார்களே தவிர, யாரும் முப்பது வயசு இன்னும் நிரம்பாதவன் என்று நம்பமாட்டார்கள். தான் யார் என்று சொல்லிக் கொள்வதாக அண்ணாசாமிக்கும் உத்தேசமில்லை. ஊர், அப்பா, மற்றவர்கள் எல்லோரையும் எட்டி நின்றே பார்த்து விட்டுத் திரும்பித் தன் வழியே செல்லுவதாகத்தான் அவன் உத்தேசம். அப்படி யாராவது அகஸ்மாத்தாக அவனை அடையாளம் கண்டுகொண்டு விட்டால் அப்புறம் பார்த்துக் கொள்லாம். முதல் காரியம் சட்டை கழற்றுமுன், அவன் ரகஸியமாக ஒரு பூனூல் சம்பாதித்து மாட்டிக் கொண்டாக வேணும். பையிலிருந்து இன்னும் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு நடந்தான் அண்ணாசாமி.
ஊர் வந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக அந்தப் பக்கத்திலிருந்து வருபவர்கள் கண்ணில் முதல் முதலாக ஊர்ச் சுடுகாடு தான் தென்படும். அண்ணா சாமியின் முரட்டுப் பருவத்தின் திருவிளையாடல்களில் பல அந்தப் பக்கத்தில் நடந்தவைதாம். இப்போது சுடுகாட்டில் திகுதிகென்று ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. ‘எனக்கேற்ற வரவேற்புத்தான். யார் பிணமோ ? ஊரிலுள்ள ஏழெட்டுக் குடும்பத்தில் யார் குடும்பத்துப் பிணமோ?’ என்று சிந்தித்தவாறே அண்ணாசாமி மேலே நடந்தான். திடீரென்று அவன் குரல்வளையை யாரோ பலமாகப் பிடித்து அமுக்குவதுபோல் இருந்தது. வேறொன்றுமில்லை அது ; திடீரென்று தோன்றிய ஒரு சிந்தனையின் சேஷ்டைதான். இலுப்பைத் தோப்பு, புளியந்தோப்பு மாந்தோப்பு மூன்றையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்து குளக் கரையை அடைந்தான். குளத்துக் கடுத்தாற்போலத் தான் அந்தச் சிவன் கோவிலும், அக்கிரகாரமும். நல்ல வெயில்; ஆகையால்தான் குளத்துக்கு யாரும் பத்துத் தேய்க்க வரவில்லை’ என்று எண்ணிக் கொண்டான் அண்ணாசாமி. ஒரு மர நிழலில் உட்கார்ந்து இரண்டு மூன்று சிறுமிகள் புளியம் விதையை வைத்துக் கொண்டு ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்களில் ஒருத்தி – அவளுக்கு ஏழெட்டு வயசிருக்கும்-அண்ணாசாமியைக் கண்டவுடன் விளையாட்டைவிட்டு எழுந்து ஓடிவந்து, “யாராத்துக்கு மாமா நீங்க வந்திருக்கேள் ?” என்று கேட்டாள்.
கிராமத்துக் குழந்தையின் சாதாரணமான கேள்விதான் அது. ஆனால் சுருக்கென்று ஏனோ அது அண்ணாசாமியின் உள்ளத்தில் தைத்தது. திரும்பிக் குனிந்து அந்தக் குழந்தையின் கபடற்ற முகத்தைப் பார்த்தான். அந்தச் சிறுமியின் முகம் அவனுக்கு எதையோ ஞாபகப்படுத்தியது. அவன் முகத்தில் ஒரு நிழல் படர்ந்தது. அந்தக் காலத்தில் தன் வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டில் இருந்த பெண்ணின் பெயர் அலமுதானே?… தலையை ஒருதரம் உதறி ஆட்டிவிட்டுத் தடுமாற்றத்துடன், நாராயணசாமி ஐயர் ஆத்துக்குப் போறேன், அம்மா ” என்று அண்ணாசாமி பதிலளித்தான். தடுமாற்றத்திலே தனது தீர்மானத்தை மறந்து தன் தகப்பனாரின் பெயரையே அவன் சொல்லிவிட்டான். அந்தக் குழந்தையிடம் கோபம் வந்தது அண்ணாசாமிக்கு, ஆனால்…..
“நாராயணசாமி ஐயர்…… ஆரு மாமா அது? இங்கே நாராயணசாமி ஐயருன்னு ஆருமே இல்லையே !” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள் சிறுமி.
ஒரு காரணமும் இல்லாமலே அண்ணாசாமிக்குப் பக்கென்றது.
அந்தப் பெண்ணிடம் சற்று முன் தோன்றிய கோபம் சட்டென்று மறைந்தது. “தெருவில் நான் போய் விசாரிக்கிறேன். சிவன் கோயிலுக்கு எதிரே இருக்குமே, அந்த நாராயணசாமி ஐயர் வீடு ” என்றான் அண்ணாசாமி.
இந்தத் தடவை சற்றும் தயங்காமல் பதிலளித்தாள் சிறுமி; “சிவன் கோயிலுக்கு எதிர்த்தாப்பலே வீடே கிடையாதே, மாமா.”
அண்ணாசாமி பதில் ஏதும் சொல்லாமல் தெருவை நோக்கி நடந்தான். அந்தப் பெண் அவனையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் அங்கேயே நின்றுவிட்டுத் தன் தோழிகளுடன் புளியம் விதை ஆடப் போய் விட்டாள். அண்ணாசாமி தன் நினைவு இழந்தவனாகத் தெருவுக்குப் போகும் ஒற்றையடிப் பாதையிலே நடந்தான். பூவரச மரக்கிளைகளிலிருந்து நாலுபக்கமும் கம்பளிப் பூச்சிகள் தொங்கி ஊசலாடிக் கொண்டிருந் தன. அந்த இருபது கெஜத்தையும் கடக்க அவனுக்கு இருபது நிமிஷத்துக்குமேல் பிடித்தன. தெரு வந்ததும் திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் சொன்னது வாஸ்தவந்தான் ; சிவன் கோவிலுக்கு எதிரே வீடே இல்லை. மேடிட்ட ஒரு பாழ் மனை தான் இருந்தது. அவனால் நிற்க முடியவில்லை; கால்கள் கெஞ்சின ; இரண்டெட்டில் சிவன் கோயில் கோபுரத்துப் படியில்போய்ச் சாய்ந்து கொண்டு உட்கார்ந்து விட்டான். அவனுடைய அவசர வரவினால் ஏழெட்டு வௌவால்கள் தியானம் கலைபட்டுச் சிறகடித்துப் பறந்தன. ஓர் ஓணான் ஒரு கல்லில் இருந்து மற்றொரு கல்லுக்குத் தாவச் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு நின்றது .
தெருவிலேயே ஒரு கிழவர் மூங்கில் கழியை ஊன்றிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அண்ணாசாமி மெதுவாக நிதானித்து எழுந்து அவரை அணுகிக் கேட்டான்: “இங்கே நாராயணசாமி ஐயர்னு ஒத்தர் இருந்தா ராமே! அவர் எந்த வீட்டில் இருக்கார்?”
பதில் சொல்லுமுன் கிழவர் சிறிது தயங்கினார். அப்புறம், “இங்கே யாரும் இல்லையே, நாராயணசாமி ஐயர்னு… ஆமாம்.. நாராயணசாமி ஐயர்னு ஒத்தர் இருந்தார் முன்னே. இப்போ அவாள்ளாம் ஊரை விட்டுப் போயே ஏழெட்டு வருஷம் ஆகப்போறதே” என்றார்.
அண்ணாசாமியும் கொஞ்சம் தயக்கத்துடனேயே கேட்டான்: “அவா இப்போ எங்கே இருக்கா, தெரியுமோ?”
“கடனுக்குப் பயந்துண்டு ஓடிப்போறவா விலாசம் சொல்லிவிட்டுப் போவாளா? கடனும் உடனுமாகப் போய், ஒருநாள் ராத்திரி ஊரிலே யார் கிட்டேயும் சொல்லிக்காமே போயிட்டா. எங்கே இருக்காளோ யார் கண்டா?…… எங்கேயாவது சந்திலே நிப்பா. பெத்த பிள்ளையை வைச்சுப் பராமரிக்கத் தெரியாமல் இளையா பேச்சைக் கேட்டுண்டு வீட்டை விட்டு விரட்டுகிறவன் குடும்பம் உருப்படுமா என்ன? ஏண் டாப்பா நீ யாரு?” என்றார் கிழவர். அவருக்கு மனசில் ஏதோ பழைய ஞாபகம் தட்டுப்பட்டு விட்டது என்று அண்ணாசாமி அறிந்து கொண்டான்.
“அவர் பையனாம்; பட்டணத்திலே இருக்கான். அவன்தான் இந்தப் பக்கம் போனால் போய்ப் பார் என்று சொல்லி அனுப்பினான். வந்தேன் ” என்று அண்ணாசாமி சொன்னான்.
பையனாவது க்ஷேமமா இருக்கானா? என்ன பண்ணிண்டிருக்கான் ?….. போகட்டும்; க்ஷேமமா யிருந்தா சரிதான். அவன் தங்கமான பையன். படிச்சிண்டு இருந்தான். அந்தக் குடும்பத்திலேயே அவன் ஒத்தன்தான் உருப்படுவான்னு எனக்கு அப்பவே தெரியும்.
கிழவர் தன்னைப்பற்றித்தான் பேசிக்கொண் டிருந்தார் என்று அண்ணாசாமிக்கு முதலில் தெரியவில்லை. அவன் ஒன்றும் பேசாமல் போய்ச் சிவன் கோவில் மொட்டைக் கோபுரத்துப் படியிலே தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.
எவ்வளவு நாழிகை அப்படி உட்கார்ந்திருந்தான் என்று அவனுக்கே தெரியாது. ஆனால் அவன் கிளம்பும்போது வெயிலின் உக்கிரம் தணிந்தபாடில்லை. குளத்தங்கரை, மாந்தோப்பு, புளியந்தோப்பு, இலுப்பைத்தோப்பு, சுடுகாடு, வயல், பனங்காடு எல்லாம் தாண்டி மூன்று மைல் நடந்தாக வேணும். ஜிப்பாவின் பையில் கையை விட்டுத் தடவிப் பார்த்தான். நாலு பீடிகள் இருந்தன.
கோவிலுக்குள் யாரோ சிரிப்பது போல் இருந்தது. அண்ணாசாமி திரும்பிப் பார்த்தான். கர்ப்பக் கிருகத்தின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் இருட்டில் அந்தப் பரமசிவன் என்னதான் பண்ணிக்கொண்டிருந்தானோ !



