கண்ணகி வரலாறும், கற்புமாண்பும்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்

1. கண்ணகி வரலாறு

நில மடந்தைக்கு நெற்றியிலிட்ட திலகம்போலும் நற்றமிழ் வரைப்பில், ‘நாடெல்லாம் நீர்நாடு தனை யொவ்வா நலமெல்லாம்’ என்று தெய்வத் தன்மையுடைய பெரியோராற் புகழ்ந்துரைக்கப்பட்ட சோழநாட்டின்கண், சோழ மன்னர்கள் முடிசூடி அரசு வீற்றிருக்கும் தலை நகரங்களுள் காவிரிப் பூம்பட்டினம் என்பது ஒன்று; அது காவிரி கடலொடு கலக்குமிடத்தில் உள்ளது; மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்தது; அதற்குப் புகார் என்றும் ஒரு பெயருண்டு. அப்பதியிலே வணிகர் குலத்தில் ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முன்பு வண்மையிற் சிறந்த மாநாய்கன் என்பான் ஒருவன் இருந்தான். அவன் மகள் கண்ணகி யென்பாள், திருமகளின் மிக்க பொற்பும், அருந்ததியின் மிக்க கற்பும் உடையவள். அக்காலத்து அப்பதியில் அக்குலத்திலே பெருஞ்செல்வமும் பெருங் கொடையும் உடையவனாயிருந்த மாசாத்துவான் என்பவன் மகன் கோவலன் என்னும் பெயருடையான்; அழகாலும் இளமையாலும் அவனைச் செவ்வேள் என்று பலரும் பாராட்டுவர். அவ்விருவருடைய பெற்றோர்களும் அவர்களுடைய மணக்கோலத்தைக் காண விரும்பினர்; பெருஞ்சிறப்புடன் இருவர்க்கும் மன்றல் நடந்தது. கோவலன் கண்ணகியுடன் கூடி இன்பந் துய்த்து.

மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே யென்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ யாழிடைப் பிறவா இசையே யென்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை“.

என்று இங்ஙனமாக அவளுடைய நலங்களைப் பாராட்டிக் களிப்புற்றிருந்தான். இருக்கும் நாளிலே, கோவலன் தாயாகிய பெருமனைக்கிழத்தி யென்பவள். கோவலனும் கண்ணகியும் இல்வாழ்க்கையைச் செவ்விதாக நடத்தி உயர்ச்சி பெற்று விளங்கு தலைக் காண விரும்பி, வேறொரு மாளிகையில் இல்லறம் நடத்துதற்கு வேண்டும் பொருள்களை நிரப்பி, ஏவல் செய்வோரையும் திரளாக ஏற்படுத்தி, அவர்களை அதில் இருக்கச் செய்தனள். அவர்களும் அதிலிருந்து அன்பும் இன்சொல்லும் முதலியன உடையராய், விருந்தோம்பல் முதலிய அறங்களைச் செய்து இல்வாழ்க்கையை நடத்தி வருவாராயினர்; இவ்வாறு சில ஆண்டுகள் சென்றன.

இங்ஙனம் நிகழ்ந்துவருங்கால், மிக்க அழகும், ஆடல் பாடல்களில் மேம்பட்ட தேர்ச்சியும் உடைய மாதவியென்னும் நாடகக் கணிகைபால் கோவலன் விருப்பஞ் சென்றது. செல்லவே, உள்ள பல்வகைப் பொருள்களையும் நாடோறும் அவட்குக் கொடுத்து, தன் மனைவாழ்க்கையை மறந்து, அவளுடன் மருவி மகிழ்ந்திருப்பானாயினன். கண்ணகி தன் கணவனது பிரிவுக்கு வருந்தினளாயினும், அவ்வருத்தத்தைச் சிறிதும் வெளிப்படுத் தாமலும், கோவலனை வெறுத்தலில்லாமலும் ஒழுகிவந்தாள்.

அக்காலத்தில், சோழமன்னர்களால் ஆண்டுதோறும் இந்திரனுக்குச் செய்யப்படும் இந்திர விழாவானது நடைபெற்றது. விழாவின் முடிவில் நிறைமதி நாளில் அந்நகரத்து ஆடவரும் மகளிரும் வழக்கம்போலக் கடலாடச் சென்றனர். மாதவியும் கோவலனுடன் கடற்கரையை அடைந்தாள். அடைந்து, தாழை வேலியின் நடுவே புன்னை மர நிழலில் புதுமணற் பரப்பிலே சித்திரத் திரையைச் சுற்றிலும் வளைத்து, விதானித்து அமைத்த தந்தக் கட்டிலின்மீது கோவலனுடன் சேர அமர்ந்து, தான் பாடுதற்கேற்பச் சமைத்த யாழை அவன் கையில் நீட்டினள். அவன் அதனை வாங்கிப் பலவகை வரிப் பாட்டுக்களைப் பாடி அதனை வாசித்தான். அவன் பாடியவற்றுள்,

திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே இருகய லிணைவிழியே யெனையிடர்செய்தவையே’

என்பது. இங்ஙனம் அவன் பாடியவெல்லாம் அவனுக்கு வேறு மகளிர்பால் விருப்பமுண்டென்று கருதக்கூடியவாறு அகப் பொருட்சுவை தழுவி யனவா யிருந்தமையின், மாதவியானவள், ‘இவன் வேறு குறிப்புடையன்’ என்றெண்ணிப் புலந்து, அவன் கையிலுள்ள யாழை வாங்கி, தான் வேறு குறிப்பில்லாத வளாயினும் அக்குறிப்புடையாள்போல் அகப்பொருட்சுவை தழுவிய பலவகை வரிப்பாட்டுக்களைப் பாடி அதனை வாசித்தாள். அதனைக் கேட்ட கோவலன், ‘வேறொருவன்மேற் காதல்கொண்டு இவள் பாடினள்’ என்றெண்ணி, ஊழ்வயத்தால் அவள் மேல் வெறுப்புற்று விடுத்துப் போயினன். மாதவியும் மிக்க வருத்த மெய்திய மனத்தினளாய்ப் பண்டியிலேறித் தன் மனையை அடைந்து, வானை யளாவிய மேனிலையிலே வேனிற் பருவத் திற்குரிய நிலா முற்றத்தை யெய்தி, வீணையைக் கையிலேந்தி மிடற்றாற் பாடுதலுற்று, அது மயங் கினமையின், பின் வீணையை வாசிக்க அதுவும் மயங்கிற்று. அப்பொழுது மாதவி கோவலனுக்குத் திருமுகம் விடுக்கும் கருத்தினளாகி, தான் அணிந்திருந்த சண்பகம் முதலியவற்றால் நெருங்கத் தொடுத்த மாலையின் இடையேயுள்ள தாழம்பூவின் வெள்ளிய தோட்டிலே, அதற்கு அயலதாகிய பித்திகையின் முகைகொண்டு செம்பஞ்சிக் குழம்பிலே தோய்த்து ‘இப்பொழுது இளவேனில் என்பான் இளவரசாளன்; அவன் பிரிந்துறைவார்க்கு நலம்புரியான்; அவனே யன்றி, அந்திப் பொழுதாகிய யானையின் பிடரிற்றோன்றிய திங்கட் செல்வனும் செவ்வியனல்லன்; இதனை அறிவீராக’ என்று தன் மழலைச் சொல்லாற் பேசிப்பேசி எழுதி, அதனை வசந்தமாலை என்னுந் தோழி கையிற்கொடுத்து, ‘இதிலுள்ள வாசகங்களை யெல்லாம் கோவலற்கு ஏற்பச் சொல்லி, அழைத்து வருக’ என்று கூறிவிடுத் தாள். அவள் சென்று அதனைக் கோவலற்கு அளித்து, அவன் அத்திருமுகத்தை மறுக்கவே வாட்டத்துடன் விரைந்து சென்று அதனை மாதவிக்கு உரைத்தாள். மாதவி ‘மாலை வாராராயினும் காலையில் அவரைக் காண்போம்’ என்று சொல்லி, மலர் அமளியின் கண்ணே செயலற்ற நெஞ்சமுடன் வீழ்ந்து, இமை பொருந்தாது கிடந்தனள். இஃது இங்ஙனமாக, கண்ணகி தீக்கனவு கண்டு, அக்கனவின் திறங்களைத் தன் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தி யென்பாளுக்குக் கூற, அவள், ‘காவிரி கடலொடு கலக்குமிடத்தில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் என்னும் பொய்கைகளில் முழுகிக் காமவேள் கோட்டத்தை வணங்கின மகளிர் இம்மைக்கண் வாழ்நாள் முழுதும் கணவருடன் கூடி இன்பந் துய்த்து மறுமையிலும் போகபூமியிற் போய்ப் பிறந்து அவருடன் இன்பம் நுகர்வர்; ஆகலின், நாமும் ஒருநாள் சென்று நீராடக்கடவோம்’ என்றுரைக்கக் கேட்டு, ‘அங்ஙனம் தீர்த்த மாடித் தெய்வந்தொழுதல் எங்கட்கு இயல்பன்று’, என்று சொல்லியிருந்தாள். அவ்வாறிருக்கும் பொழுது, கோவலன் அங்கு வந்து மனையினுள்ளே சென்று, கண்ணகியின் வாடிய மேனியைக் கண்டான். ‘பொய்யை மெய்யாகக் காட்டியொழுகும் பரத்தையை மருவி, என் முன்னோர் தேடிவைத்த பொருட் குவியல்களை யெல்லாம் தொலைத்து வறுமையுற்றேன்; அஃது எனக்கு மிக்க நாணைத் தருகின்றது’ என்றான். கண்ணகி, மாதவிக்குக் கொடுத்தற்குப் பொருளின்மையால் இங்ஙனம் தளர்ந்து சொன்னானென்று கருதி, மலர்ந்த முகத்துடன், ‘அடியேனிடத்தில் இன்னும் இரண்டு சிலம்புகள் உள்ளன; அவற்றைக் கைக்கொண்டருள்க’ என்று சொன்னாள். அது கேட்ட கோவலன், ‘மதுரையை அடைந்து இச்சிலம்பை முதலாகக் கொண்டு வாணிகஞ் செய்து இழந்த பொருள்களைத் தேடுதற்கு எண்ணினேன்; நீயும் உடன் வருக’ என்றான். கண்ணகியும் அதற்கு இசைந்தனள். இருவரும் இரவின் கடையாமத்தில் ஒருவரும் அறியாவகை புறப்பட்டு நகர் வாயிலைக் கடந்து, காவிரியின் வடகரை வழியாக மேற்கு நோக்கிச் சென்றனர். ஒரு காததூரஞ் சென்றதும் மெல்லியலாகிய கண்ணகி அடிவருந்தி இளைப்புற்று, ‘மதுரை மூதூர் யாது? என வினவினள். அது கேட்டலும் கோவலன், ‘நங்காய் மதுரை நம் நாட்டிற்கு அப்பால் ஆறைந்து காதவளவில் உள்ளது; இனி நணித்தே,’ என்று கூறி வருத்தத்தால் நக்கு, அவளுடன் சென்று, அங்கே ஒரு பூஞ்சோலையில் தவஞ்செய்து கொண்டிருந்த ஆருகத சமயத் தவமுதியாளாகிய கவுந்தியைக் கண்டு அடிபணிந்து, தாம் மதுரைக்குச் செல்லுதலைத் தெரிவித் தான். கவுந்தியடிகள் ‘மதுரையிலுள்ள பெரியோர்கள்பால் அறவுரை கேட்கும் கருத்துடையேன் ஆகலின், யான் மதுரைக்குச் செல்வேன்; நீவிரும் உடன் வருக,’ என்ன, மூவரும் வழிக்கொண்டு சென்றனர். செல்லும் வழியில், காவிரியின் நீர் வாய்த்தலைக் கிட்ட கதவின் மீதெழுந்து குதிக்கும் ஓசையும், செந்நெல்லும் கரும்புஞ் சூழ்ந்த பழனங்களிலே தாமரைக் காட்டில்,

கம்புட் கோழியும் கனை குரல் நாரையும் செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும் கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்’

என்னும் பறவைகள் ‘வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்’ பல்வேறு வகைபடக் கூடியிருந்து ஒலிக்கும் ஓசையும், பொன்னேர் பூட்டி நின்றோரின் ஏர்மங்கலப் பாட்டோசையும், நாற்றை நடுகின்ற கடைசியரின் குரவைப் பாட்டோசையும், களத்தின்கண் கிணைப் பொருநரின் முழவோசையும் முதலிய ஓசைகள் அவர்கட்கு இன்பத்தை விளைத்து நடத்தலாலுண்டாம் வருத்தத்தை மாற்றின. இங்ஙனம் நாளைக்கொரு காதமாக நடந்துசென்று, ஒருநாள் ஆற்றிடைக்குறையை அடைந்து அங்கு வந்த அறமுரைக்கும் சாரணரை வணங்கி, ஓடமேறிக் காவிரியின் தென்கரை யெய்தி ஒரு பொழிலின்கண் இருந்தனர். அப்பொழுது அங்கு வந்த பரத்தை யொருத்தியும் தூர்த்தனொருவனும் கோவலன் கண்ணகி இருவரையும் இகழ்ந்துரைக்க, அது பொறாத கவுந்தியடிகள் நரி வடிவமாகும்படி அவர்களைச் சபித்து, அவர்கள் அவ்வாறானதைக் கோவலனும் கண்ணகியும் அறிந்து இரக்கமுற்று அவர்கட்கு உய்திக்காலம் உரைத்தருளுமாறு வேண்டிக் கொண்டமையால், ‘இவர் பன்னிரு திங்கள் நோயுழந்த பின் முன்னை யுருவம் பெறுக’ எனச்சாப விடை செய்தார். பின் மூவரும் உறையூரை அடைந்தனர்.

அடைந்தவர் அன்று அந்நகரிற் றங்கி, மறுநாள் வைகறையிற் புறப்பட்டுச் சிறிதுதூரஞ் சென்று. அங்கு வந்த ஓர் அந்தணனால் மதுரைக்கு வழி தெரிந்துகொண்டு அப்பாற் சென்றனர். செல்லும் வழியிலே ஐயை கோட்டம் ஒன்றிருந்தது. அதிற் சென்று தங்கினர். அங்கே, சாலினி யென்னும் தேவராட்டியானவள் தெய்வ மேறப்பெற்று, வேட்டுவர்க்கு வெற்றியும் வளமும் சுருங்கினமையும் அது தீர்தற்பொருட்டுக் கொற்றவைக்குப் பரவுக் கடன் கொடுக்க வேண்டு மென்பதுங் கூறிவருமிடையே, அங்கிருந்த கண்ணகியை நோக்கி,

இவளோ, கொங்கச் செல்வி குடமலையாட்டி தென்றமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து’

என்றுரைத்தாள். மேல் நிகழவிருக்குஞ் செய்தியை உட்கொண்டு கூறியவிதனைக் கண்ணகி முதலானோர் அப்பொழுது உணரக் கூடவில்லை.

அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி மாலவற் கிளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாட் டடக்கைப் பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை’

ஆகிய கொற்றவையைப் பரவிய பாட்டுக்களில்,

விண்ணோ ரமுதுண்டுஞ் சாவ வொருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்’

என்றும்,

மருதி னடந்துநின் மாமன்செய் வஞ்ச உருளுஞ் சகட முதைத்தருள் செய்குவாய்’

என்றும் சிவபிரானும், திருமாலும் செய்த செயலெல்லாம் அவளால் நிகழ்ந்தனவாகக் கூறப்பட்டுள. சாலினியின் கோலமும் கூத்தும் முடிந்தன. கண்ணகி வெயிலின் வெம்மை பொறாளென்றும், பாண்டியனுடைய செங்கோல் ஆட்சியில் எவ்வகை ஏதப்பாடும் நிகழாவாகலின், இரவிற் செல்லுதல் தக்கதென்றுங் கோவலன் கூறக் கவுந்தியடிகளும் அதற்கிசைந்தமையின், மூவரும் இரவில் நிலவு தோன்றியவுடன் புறப்பட்டுச் சென்று, கோழி கூப்பிடும் வைகறைப் பொழுதில் ஒரு பார்ப்பனச் சேரியின் பக்கத்துள்ள தோர் கோயிலை யடைந்தனர். கோவலன் ஓர் ஒதுக்கமாகிய அடைப்பிடத்தில் கண்ணகியையும் கவுந்தியடிகளையும் இருக்கச் செய்து, தான் காலைக்கடன் கழித்தற்பொருட்டு, நீண்ட வழியிலுள்ள ஒரு நீர் நிலைக்குச் சென்றான். அப்பொழுது, மாதவியால் அனுப்பப்பட்டு வந்த கௌசிகன் என்னும் மறையவன் அங்கே கோவலனைக் கண்டு, அவன் தந்தை தாயாராகிய இருநிதிக் கிழவனும் பெருமனைக்கிழத்தியும் அருமணி யிழந்த நாகம் போன்று வருந்தி யொடுங்கியதும், உயிரை யிழந்த உடம்புபோல் சுற்றமெல்லாம் துயர்க்கடலில் மூழ்கியதும், ஏவலாளர்கள் எல்லாத் திசையிலும் தேடச் சென்றதும், இராமன் பிரிந்த அயோத்தியர் போலப் புகாரிலுள்ளார் அனைவரும் வருத்த முற்றதும், மாதவி யானவள் தன் திருமுகத்தை மறுத்துக் கூறிய மாற்றத்தை வசந்தமாலை சொல்லக் கேட்டுப் பசந்த மேனியளாய் வருந்திப் படுக்கையில் வீழ்ந்ததும், அவளுற்ற துயரினைக் கேட்டுத் தான் அங்கே சென்றிருந்ததும், அவள் ஒரு முடங்கல் வரைந்து ‘இதனை என் கண்மணி யனையாற்குக் காட்டுக’ என்று கூறி அளித்ததும், அதனைத் தான் ஏற்றுப் பல நாடுகளுந் தேடிக் காணாமல் வந்ததும் ஆகிய செய்திகளைக் கூறி மாதவியின் ஓலையை நீட்டினான். அவ்வோலையோ, மடிப்புறத்து மண்ணின் மேல் மாதவியின் கூந்தலால் ஒற்றப்பட்ட இலச்சினையுடன் கூடியிருந்தது. அஃது அவளுடன் கூடியிருந்த காலத்தே உரைத்த நெய்யின் வாசத்தை அவனுக்கு உணர்த்திற்று; ஆதலால், விரைவில் அதனைப் பிரிக்க மன மிலனாய்ப் பின்பு பிரித்து வாசித்தான். ‘அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்’ என்பது ஓலையின் முகவரியாக இருந்தது; பின் எழுதப்பெற்ற வாசகம்,

வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோ(டு) இரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி’

என்பது. இதன் பொருளெல்லாம் உணர்ந்தான் கோவலன்; மனங் குழைந்தான்; மாதவி பிழையிலளெனத் தெளிந்து தளர்ச்சி யொழிந்தான். பின், அவ்வோலையே தன் தந்தைக்குத் தான் அனுப்புதற் கேற்றவாறு உரையும் பொருளும் சிறந்து விளங்குதல் கண்டான்; ‘மறையோனே, மாசில் குரவர் மலரடி தொழுதேன் எனச் சொல்லி, என் தந்தைக்கு இவ்வோலையைக் காட்டு,’ என்று கூறி அதனைக் கொடுத்து,’ என் பொருட்டாக அவரெய்தும் நடுக்கத்தைப் போக்குதற்கு விரைந்து செல்வாய்,’ எனக் கௌசிகனை விடுத்தான். விடுத்தபின், கண்ணகியும் கவுந்தியடிகளும் இருக்கு மிடத்தை யடைய, மூவரும் புறப்பட்டுச் சென்று இடையிற் சந்தித்த பாணர்களால் வழியினளவு முதலின தெரிந்துகொண்டு, அற்றைநாள் ஓரிடத்திற்றங்கி, முன்போலவே மீட்டும் இரவிலே பெயர்ந்து செல்வாராயினர். செல்லும்பொழுது புலவர் செந்நாவிற் பொருந்திய மதுரைத் தென்றல் வந்து வீசிற்று. சொக்கலிங்கப் பெருமானாகிய முன்னவன் கோயிலிலும் பாண்டி மன்னவன் கோயிலிலும் காலை முரசொலிக்கும் ஓசையும், மாதவர்கள் காலையில் மந்திரமோதும் இசையும், யானை முழக்கமும், குதிரையின் ஆர்ப்பும் முதலிய ஒலியெல்லாம் கடலொலிபோல எதிர்கொண்டன. கோவலன் முதலிய மூவரும்,

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக வோங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர்’

விரிந்தவை மேலே யுடுத்த பூந்துகிலாகவும்,

குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் பிடவமும் மயிலையும்’

பின்னி நெருங்கியவை மேகலையாகவும், முருக்கிதழும் முல்லையும் முதலியன செவ்வாயும் வெண்ணகையும் முதலியவாகவும் பொருந்தப்பெற்ற ‘வையை யென்ற பொய்யாக் குலக்கொடி’யின் மருங்கே வந்து தொழுது, ‘பரிமுக வம்பியும் கரிமுகவம்பியும், அரிமுகவம்பியும்’ என்னும் ஓடங்களிலேறிப் பலருஞ் செல்லா நிற்க, தாம் அவற்றில் ஏறிச் செல்லாது மரப்புணையிற் சென்று தென்கரையடைந்து, வலமாகப்போந்து, மதிலின்புறத்தே கீழ்த் திசை வாயிற்கு அயலதாகிய முனிவர் இருக்கையொன்றில் வந்து தங்கினர். மறுநாள் வைகறையில் சிவபிரான், திருமால், பலதேவன், முருகவேள் ஆகிய இக்கடவுளர் கோயில்களிலும், அறவோர் பள்ளியிலும் அரசன் கோயிலிலும் காலை முரசம் சங்குடன் முழங்கா நிற்க, கோவலன் எழுந்து கவுந்தியடிகளை யடைந்து தொழுது தங்கட்கு நேர்ந்த துன்பங்களைக் கூறி வருந்தி, ‘யான் சென்று இந்நகரிலுள்ள வணிகர்க்கு எனது நிலைமையை உணர்த்தி வரும் வரையில் இவள் நுமது பாதக் காப்பினளாகலின், இவட்கொரு துன்பமுண்டாதல் இல்லையே,’ என்றனன். என்றலும், கவுந்தியடிகள், அறஞ் செய்யாதார் எய்தும் துன்ப முதலிய வற்றையும், பண்டு இராமனும் நளனும் தம் காதலியரைப் பிரிந்து வருந்திய வரலாறு’ களையும், அவற்றின் காரணத்தையும் கோவலற்குக் கூறி, ‘நீ நின் காதலியுடன் பிரியாவாழ்க்கை பெற்றனையாகலின் அத்தன்மை யுடையா யல்லை’, எனச் சொல்லித் தேற்றி, ‘வருந்தாது சென்று வருக’ என விடுத்தார். கோவலன் சென்று மதுரையில் பற்பல வீதிகளிலுமுள்ள வளங்களையெல்லாம் கண்டு மகிழ்ச்சியுற்று மீண்டு வந்து, மதுரையின் சிறப்பையும் பாண்டி மன்னவன் கொற்றத்தையும் கவுந்தியடிகட்குக் கூறி, அப்பொழுது அங்கு வந்த தன் பழைய நட்பாளனாகிய மாடலன் என்னும் மறையவனைக் கண்டு அவனுடன் அளவளாவிக் கொண்டிருந்தான். அப்பொழுது, அங்கு வந்த ஆயர் முதுமகளாகிய மாதரியைக் கவுந்தியடிகள் கண்டு, ஆவினைப் பாதுகாக்கும் கோவலர் வாழ்க்கை ஒரு கொடுமையுடைய தன்றென்பது உன்னியும், மாதரியின் முதுமையையும் நல்லொழுக்கத்தையும் உணர்ந்தும், கண்ணகியை அவள்பால் அடைக்கலமாக ஒப்புவிப்பது இழுக்கின்றென எண்ணினார். எண்ணி, மாதரியை விளித்து, ‘இம்மடந்தையின் கணவனின் தந்தை பெயரைக் கேட்பின், இந்நகரிலுள்ள இவர் குலத்தினர், அரும்பொருள் பெற்றாரைப்போல மகிழ்ந்து, நல்விருந்தாக எதிர்கொண்டு அழைத்துச் சென்று, இவர்களைத் தங்கள் மனையகத்தே வைத்துக்கொள்வர்; அங்ஙனம் செல்வர் மனையகம் சென்று புகுமளவும், நான் இவளை நினக்கு அடைக் கலமாகத் தருகின்றேன்; இவளுக்குத் தோழியரும் செவிலியரும் நற்றாயும் நீயேயாகி இவளைப் பேணுவாயாக; இவள், முன்பு நிலமகள் கண்டறியாத அடியினை யுடையளாயினும், வழி நடக்கும் பொழுது, கதிரின் வெம்மையாற் காதலன் மெய் வருந்தியதென்று நடுங்கி, வாட்டமுற்று, தனது துயரென வேறுகாணாத கற்பின் தகுதி யமைந்தவள்; கற்புக்கடம் பூண்ட இத் தெய்வமல்லது வேறு பொற்புடைத் தெய்வத்தை யாம் கண்டதில்லை யென்றும், பத்தினிப் பெண்டிர் இருந்த நாட்டில் வானம் பொய்யாது, வளஞ் சுருங்காது, அரசர் கொற்றஞ் சிதையாது என்றும் நல்லோர் உரைப்பர்; அன்றியும் தவத்தினர் அடைக்கலம் சிறிதாயினும், பின்பு மிகப் பெரிய இன்பம் பயப்பதாம்’ என்று கூறி, கண்ணகியை மாதரிபால் ஒப்புவித்தார். அவள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, கவுந்தியடிகளை வணங்கி விடைபெற்று, கண்ணகியைக் கோவலனுடன் அழைத்துச் சென்று, ஆயர்பாடியிலுள்ள தன் மனையை அடைந்து, அவ்விருவரையும் பூவல் ஊட்டிய புதிய மனையொன்றில் இருக்கச் செய்து, கண்ணகியைப் புதுநீரால் மஞ்சனஞ் செய்வித்து, முகமன் மொழிந்து, தன் மகள் ஐயை என்பவளைக் கண்ணகிக்குத் துணையாக வைத்து, அடிசில் அடுதற்குரிய புதிய கலங்களையும், பலாக்காய், வெள்ளரிக்காய், கொம்மட்டி, மாதுளங்காய், மாங்கனி, வாழைக்கனி, ஆவின் பால், நெய் முதலியவற்றையும் விரையக் கொடுப்பித்தனள். கண்ணகி அவள் அளிப்பித்த பல்வேறு பசுங்காய்களையும் மெல் விரல் சிவப்ப அரிந்து, தன் கைவன்மைக் கேற்றவாறு, கண் சிவப்பவும் முகம் வியர்ப்பவும் கருத்துடன் காதலற்கு உணவாக்கி, வெள்ளியே பனந்தோட்டினால் அழகுபெறப் புனைந்தியற்றிய தவிசின் மேலே தனது செல்வன் வந்திருந்தபின்பு, அவன் அடிமலர் கழுவிய நீரைத் தன் கையாலே தொழுது மாற்றி, புவி மடந்தையின் மயக்கத்தைப் போக்குவாள் போலத் தரையிலே தண்ணீர் தெளித்துத் தடவி மண்டிலமிட்டு, குமரிவாழையின் குருத்தை விரித்து, அதனகத்தே அமுதைப் பெய்து, ‘அடிகள், ஈங்கு அமுது செய்தருளுக,’ என்று கூறி, அங்ஙனமே முறையால் அமுதுண்டு இனிதிருந்த கோவலற்குப் பாக்கினையும் அழகிய மெல்லிய வெற்றிலைச் சுருளையும் கொடுத்துக் கொண்டு நின்றனள்.

கோவலன், கண்ணகியை அருகழைத்து அணைத்து, ‘நின் மெல்லிய அடிகள் கற்கள் பொருந்திய காட்டு நெறியில் நடத்தற்கு வன்மையுடையனவோ! நீ இப் பாலைவழியில் வந்ததற் கிரங்கி எம் தாய் தந்தையர் என்ன துன்பமுற்றார்களோ! யாம் இங்ஙனம் துன்ப முற்றது கனவோ! நனவாயின், இதற்குக் காரணமாக முன்பு செய்த தீவினை யாதோ? என்னுள்ளங் கலங்குதலால் யான் ஒன்றும் அறிந்திலேன்; வீணரோடும் விடரோடுங் கூடிப் பிறரைப் புறங்கூறுங் கூட்டத்திற் புகுந்து, நல்லொழுக்கத்தைத் துறந்த தீவினையாளனாகிய எனக்கும். இனி, தீக்கதியன்றி நற்கதி யுண்டாமோ? இருமுது குரவர்க்கும் ஏவல் செய்தலை யொழிந்தேன்; நினக்கும் இடுக்கண் விளைத்தேன்; இக்கூடா வொழுக்கம் தீதெனச் சிறிதும் எண்ணிலேன்; இங்ஙனமாகவும், இங்கு வருவதற்கு ‘எழுக’ வென்று நான் கூறியவளவில் நீ மறாது எழுந்தாய்’, என்று பலவாறிரங்கிக் கூறினான். இவற்றைக் கேட்ட கண்ணகி, ‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணரை யோம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், விருந்தினரை ஏற்றுக்கோடலும் என்னும் இவற்றை இழந்திருந்த என்னை, நும் தாய் தந்தையர் கண்டு, நீர் என் முன்பு நில்லாமையால் வந்த வெறுப்பை யான் கரந்தொழுகுதல் அறிந்து, அன்புடன் அருள் கலந்த மொழியால் என் பொறையைப் பாராட்டி, என் பொய்ம்முறுவல் கண்டு, அஃது என் உளத்தே மறைத்த வருத்தத்தையும் கவலையையும் வாய்திறந்து சொல்லுவது போலே யிருந்ததென்று கொண்டு வருந்தும்படியாக நீர் போற்றா வொழுக்கத்தை மேவினீர்; எனினும், நுமது மொழியைச் சிறிதும் தப்பி நடவாத உள்ள வாழ்க்கையை உடையே னாகலின், நும்முடன் வருவதற்கு ஒருப்பட்டெழுந்தேன்’ என்று கூற, அவளை நோக்கி, ‘சுற்றம் முதலியவற்றை நீங்கி, நாண் முதலிய குணங்களும் கற்புமே பெருந்துணையாக, என்னுடன் வந்து என் தனிமையைத் தீர்த்த,

பொன்னே கொடியே புனைபூங் கோதாய் நாணின் பாவாய் நீணில விளக்கே கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வீ’

இனி, நின் சிலம்புகளுள் ஒன்றைக் கொண்டுபோய் விற்று வருவேன்; வருமளவும் தனிமையால் வருந்துதலை யொழிவாயாக,” என்று சொல்லி, காதலியின் மெய்ம் முழுதும் தழுவி, ஒரு சிலம்பை வாங்கிக் கொண்டு, அவள் தனித்திருத்தலைக் கண்டு மனம் வெதும்புதலாலே பெருகிய தன் கண்ணீரை அவள் காணின் வருந்துவா ளென்று மறைத்தவனாகி, அவ்விடத்தை விட்டு அரிதிற் பெயர்ந்து, எதிரே கொல்லேறு பாய வந்ததனைத் தீ நிமித்த மென்று அறியாது சென்று, மதுரையின் ஆவண வீதியினுள்ளே புகுந்தான்.

அப்பொழுது, உருக்குத் தட்டாரும், பணித்தட்டாரும் ஆகிய நூற்றுவர் தன் பின் வர, முன்னே, அரச வரிசையாகிய சட்டையிட்ட பொற்கொல்ல னொருவன் ஒதுங்கி நடந்து சென்றனன், அவனைக் கோவலன் கண்டு, ‘இவன் அரசனாற் சிறப்புப்பெற்ற பொற்கொல்லனாவன்’ எனக் கருதி, அவனருகிற் சென்று, ‘அரசன் தேவி அணிதற்கு ஏற்றதோர் சிலம்பினை நீ விலைமதிக்கற்பாலையோ? என்று அவனை வினாவி, அவன் தான் வல்லவனாதலைப் பணிவுடன் தெரிவிக்கவே, தான் கொணர்ந்த சிலம்பினை அவனுக்குக் காட்டினன். பொய்த்தொழிலையுடைய அப்பொற்கொல்லன் அச்சிலம்பின் தொழிலருமையை யெல்லாம் புரிந்து நோக்கி, ‘இது கோப்பெருந்தேவிக்கல்லது பிறர்க்குப் பொருத்தமுடைய தன்று; இதனை அரசற்கு யான் தெரிவித்து வருமளவும் நீவிர் என் புன்குடிலுக் கருகாகிய இவ்விடத்தில் இருப்பீராக,’ என்று கூறி, ஓரிடத்தைக் கோவலனுக்குக் காட்டிச் சென்றான். சென்ற பொற்கொல்லன், முன்பு அரசன் மனைவியின் சிலம்புள் ஒன்றை வஞ்சித்துத் திருடிக்கொண்டவன் ஆதலால், ‘யான் முன் கவர்ந்துகொண்ட சிலம்பு என்னிடத் திற்றானே உள்ளதென்று அரசற்கு வெளிப் படுவதன் முன்னே, அதனோடு ஒத்த சிலம்பைக் கொணர்ந்த இப்புதியவனால் என்மீது உண்டாகும் ஐயத்தைப் போக்கிக் கொள்வேன்,’ என்று தனக்குள்ளே துணிந்து, அரண்மனையை அடைந்து, தன் தேவியின் ஊடல் தணிந்து இன்புறுவதற்கு வேட்கை மீதூர்ந்து அவள் கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பாண்டியன் நெடுஞ்செழியனைக் கண்டு வணங்கித் துதித்து, ‘கன்னக்கோல் முதலியன இல்லாமலே அரண்மனையிலிருந்த சிலம்பைத் திருடியவன் அடியேனுடைய குடிலில் அச்சிலம்புடன் வந்திருக்கிறான்,’ என்று கூறினான். கூறலும், அரசன், வினை பலிக்குங் காலமாதலால் யாதும் ஆராய்ச்சியின்றியே, காவலாளரை அழைத்து, ‘என் மனைவியின் சிலம்பு இவன் கூறிய கள்வன் கையிடத்ததாயின், அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணருதிர்,’ என்று கட்டளையிட்டான். பொற்கொல்லன் தன் எண்ணம் பலித்ததென்று அகமகிழ்ந்து, காவலாளருடன் சென்று கோவலனை யடைந்து, ‘இவர்கள் அரசன் கட்டளையாற் சிலம்பு காண வந்தவர்கள்’, என்று கூறி, அதனை அவர்கட்குக் காட்டுவித்து, அவர்களை வேறாக அழைத்து, அதன் அருமைகளைக் கூறுவான் போன்று அரசன் மனைவியின் சிலம்புடன் ஒப்புமை கூறிக் காட்டி, கோவலன் முகக்குறி முதலிய வற்றை நோக்கி, ‘இவன் கொலைப்படுதற்குரிய னல்லன்’, என்று கூறிய காவலாளரை இகழ்ந்துரைத்து, ‘இவன் கள்வனே’ எனப் பல ஏதுக்கள் எடுத்தியம்பி வற்புறுத்தி நின்றான். அப்பொழுது அவர்களுள்ளே கொலையஞ்சா னொருவன் விரைந்து சென்று, கோவலனைத் தன் கைவாளால் எறிந்தான்; நிலமகள் துயர் கூரவும், அரசன் செங்கோல் வளையவும், பண்டைத் தீவினை உருத்து வந்தமையாவ் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தான்.

இப்பால், கண்ணகியிருந்த இடைச்சேரியில் பல வகையான உற்பாதங்கள் நிகழ்ந்தன. அதனைக் கண்ட மாதரி முதலியோரால் உற்பாத சாந்தியாகத் திருமாலைக் குறித்துக் குரவைக் கூத்து நிகழ்த்தப்பட்டது. அக்கூத்திலே அவர்கள் படர்க்கைப் பரவலாகப் பாடிய பாட்டுக்கள்.

1. மூவுலகு மீரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே.

2. பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே.

3. மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே நாராயணா வென்னா நாவென்ன நாவே.

என்பன. கூத்தின் முடிவில் மாதரி நீராடுதற் பொருட்டு வையை யாற்றுக்குச் சென்றாள். அப்பொழுது சிலம்பு திருடியவனென்று துணிந்து கோவலனை அரச னேவலாளர் கொன்ற செய்தியை, மதுரையுள் ளிருந்து வந்த ஒருத்தி சொல்லக் கேட்டு, கண்ணகி, பதைபதைத்து இனைந்து ஏங்கி அழுது மூர்ச்சித்துப் பலவாறு புலம்பி, தானும் அவனுடன் இறக்கத் துணிந்து, ஆய்ச்சியர் நடுவே நின்று, சூரியனை நோக்கி, ‘செங்கதிர்ச் செல்வனே! நீ யறிய என் கணவன் கள்வனோ? என்றாள். ‘நின் கணவன் கள்வனல்லன்; அவனைக் கள்வனென்ற இவ்’d2வூரைத் தீயுண்ணும்,’ என ஒரு குரல் உண்டாயது. ஆதித்தன் கூறிய அம்மொழியைக் கேட்ட பின்பு, கண்ணகி, அங்கு நில்லாது, மிகுந்த சீற்றத்தோடும் தன்னிடமிருந்த மற்றொரு சிலம்புடனே புறப்பட்டு, கண்டார் நடுங்கும்வகை வீதிவழியே சென்று, அங்குள்ள மகளிரை நோக்கிப் பலவாறு புலம்பி, ‘என் கணவனை முன்போலக் கண்டு அவன் சொல்லும் நல்லுரையைக் கேட்பேன்; அங்ஙனம் கேளேனாயின் என்னை இகழுமின்,’ எனச் சூளுரைத்தேகி, வெட்டுண்டு கிடந்த கோவலனைச் சிலர் காட்டக் கண்டு, அளவில்லாத துயரத்தில் ஆழ்ந்து, அவனை முன்னிலைப் படுத்திப் பலவாறாகப் புலம்பி அழுது அவன் உடம்பினைத் தழுவிக் கொண்டனள். அவ்வளவில் அவன் உயிர் பெற்றெழுந்து நின்று, ‘மதிபோன்ற முகம் வாடியதே,’ என்று சொல்லித் தன் கையாலே அவள் கண்ணீரை மாற்றி, அவள் இரண்டு கையாலும் தன் பாதங்களைப் பூண்டுகொண்டு வணங்கா நிற்க, ‘நீ இங்கிருக்க,’ என்று சொல்லி, அவ்வுடம்பை யொழித்து விட்டு, துறக்கம் புகுதற்குத் தேவர்களோடு கூடிச் சென்றான்.

இஃது இங்ஙனமாக, பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவி தான் கண்ட தீக் கனாக்களைக் கணவனுக்கு உரைத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது கண்ணகி சினந் தணியாதவளாய் அரண்மனை வாயிலை யடைந்து, வாயில் காப்போனால் தன் வரவை அரசனுக்கறிவித்து, அவன் அநுமதியைப் பெற்று அரசன்முன் சென்று நின்றாள். மன்னவன் அவளை நோக்கி, ‘கண்ணீர் வார்தர எம் முன் வந்து நிற்கும் நீ யார்?’ என வினவலும், கண்ணகி, ‘ஆராய்தலில்லாத அரசனே கூறுகின்றேன்; வானுலகத் தாரும் வியக்குமாறு, ஒரு புறாவின் துயரினைப் போக்குதல் கருதித் துலைபுக்க சிபி என்னும் வேந்தனும், கன்றினை யிழந்த ஆவின் கண்ணினின் றொழுகிய நீர் தன் நெஞ்சினைச் சுட, ஆன்கன்றுக் கீடாகத் தன் அருமந்த மைந்தனைத் தேர்க்காலில் வைத்தூர்ந்து முறைசெய்த மனு என்னும் வேந்தனும் செங்கோல் செலுத்திய பெரும்புகழ் வாய்ந்த புகார் என்பது என் பதியாகும்; அப்பதியிலே பழிப்பில்லாத சிறப்பினையுடைய பெருங்குடியிற் றோன்றி மாசாத்துவான் என்னும் வணிகன் மகனாகி, வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப நின்னகரடைந்து, என் சிலம்பினை விற்க வந்து நின்னாற் கொலைக்களப்பட்ட கோவலனுக்கு மனைவியாவேன் யான்; என் பெயர் கண்ணகி என்பது,’ என்று கூறினாள். கூற, அரசன், கள்வனைக் கோறல் கடுங்கோலன்று; வெள்வேற் கொற்றங் காண்,’ என்றியம்பினன். கண்ணகி, தன் கணவன் கள்வனல்லனென்று தெரிவித்தற் பொருட்டு, தன் சிலம்பி னுள்ளிருக்கும் பரல் மாணிக்கம் என்றாள். அரசன் தன் தேவி சிலம்பின் பரல் முத்தென்று சொல்லி, கோவலனிடமிருந்து பெற்ற சிலம்பை வருவித்து வைப்ப, கண்ணகி அதனை யுடைத்தாள். உடைக்கவே அதனுள்ளிருந்த மாணிக்கப் பரல் அரசன் வாயடியிற் சென்று தெறித்தது. அதுகண்டு அரசன் தாழ்ந்த குடையனாய்த் தளர்ந்த செங்கோலனாய் நடுநடுங்கி, ‘இழிந்த பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட கொடுங்கோலனாகிய யானோ அரசன்! யானே கள்வன்! ஐயோ! மிகப் புகழ்பெற்ற இந்த அருமந்த குலம் என்னாற் பழியடைந்ததே! என் ஆயுள் இன்றே அழியக்கடவது என்று சொல்லித் துயரினால் மங்கித்தானிருந்த அரசுகட்டிலிற் றானே வீழ்ந்து உயிர் துறந்தான். அரசன் துஞ்சியதறிந்தவுடன் துன்பமிகுதியால் கோப்பெருந்தேவியும் உயிர் நீத்தாள்.

இங்ஙனம், கண்ணகி தன் கணவன் சிலம்பு திருடியவனல்லன் என்பதைப் பாண்டியன் முன் வழக்காடி மெய்ப்பித்தும், முன்கொண்ட வெகுளி தணியாளாய், ‘யான் பத்தினி யென்பது உண்மையாயின் இவ்’d2வூரை அழிப்பேன்,’ என்று சபதம் செய்து கொண்டு, அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, மதுரையை மும்முறை வலம் வந்து தன் இடக் கொங்கையைக் கையாலே திருகியெடுத்து வீதியினுள்ளே சுழற்றி யெறிந்தாள். அப்பொழுதே அந்நகரில் அவள் சொல்லிய வண்ணம் தீப்பற்றிக் கொண்டு பல இடங்களையும் எரித்தது. அவ்வெம்மையை ஆற்றாத மதுரையின் அதிதேவதையானவள் கண்ணகியிடம் வந்து நின்று அவளை நோக்கி, ‘யான் இந்நகரின் தெய்வம்; உனக்குச் சிலவற்றைக் கூறவந்தேன்; அவற்றைக் கேட்பாயாக; இந்நகரத்தில் முன்பிருந்த பாண்டியர்களுள் ஒருவரேனும் சிறிதும் கொடுங்கோன்மை யுடையவரல்லர்; அரசு கட்டிலிற் றுஞ்சிய இந்நெடுஞ்செழியனும் அத்தன்மையனே; ஆயினும் இத்துன்பம் உனக்கு வந்த காரணத்தைக் கூறுவேன். முன்பு கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத் தரசனாகிய வசு என்பவனும் கபிலபுரத் தரசனாகிய குமரன் என்பவனும் தம்முட் பகை கொண்டு ஒருவரை யொருவர் வெல்லக்கருதி யிருந்தனர்; அப்பொழுது சிங்கபுரத்துக்கடை வீதியில் சென்று பண்டம் விற்றுக் கொண்டிருந்த சங்கமன் என்னும் வணிகனை, அந்நகரத் தரசனிடம் தொழில் செய்து கொண்டிருந்த பரதன் என்பவன் ‘இவன் பகைவனுடைய ஒற்றன்’ என்று பிடித்து அரசனுக்குக் காட்டிக் கொலை செய்துவிட்டான்; அப்பொழுது அந்தச் சங்கமனுடைய மனைவியாகிய நீலியென்பவள் மிக்க துயரமுற்றுப் பதினான்கு நாள் பலவிடத்தும் அலைந்து, பின்பு ஒருமலையின் மீதேறிக் கணவனைச் சேர்தற் பொருட்டுத் தன் உயிரை விட நினைத்தவள், ‘எமக்குத் துன்பம் விளைத்தோர் மறு பிறப்பில் இத்துன்பத்தையே அடைவார்களாக,’ என்று சாபமிட்டிறந்தனள்; அப் பரதனே கோவலனாகப் பிறந்தான்; ஆதலால் நீங்கள் இத்துன்பம் அடைந்தீர்கள்! நீ இற்றைக்குப் பதினான்காவது நாளில் பகல் சென்ற பின்பு உன் கணவனைக் கண்டு சேர்வாய்’, என்று சொல்லி அவளைத் தேற்றிச் சென்றனள். பின்பு, கண்ணகி மதுரையை நீங்கி, வையைக் கரைவழியே மேற்றிசை நோக்கிச் சென்று, மலைநாடடைந்து, அங்குள்ள நெடுவேள் குன்ற மாகிய திருச்செங்குன்றென்னும் மலைமேலேறி, ஒரு வேங்கைமரத்தின் நிழலில் நின்று பதினான்காவது நாளின் பகல் சென்ற பின், அங்கே தெய்வ வடிவுடன் வந்த கோவலனைக் கண்டுகளித்து, அவனுடன் விமானமேறித் தேவர்கள் போற்றும்படி விண்ணுலகடைந்தாள்.

கண்ணகி வேங்கை மரத்தின் கீழ் நின்றபொழுது ‘நீ யார்? என உசாவி, அவள் மணமதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து உருத்தகாலை, கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் யான்’, என்று கூறியதைக் கேட்டும், பின்பு வானவர் வந்து மலர் மழை பொழிந்து கோவலனைக் கண்ணகிக்குக் காட்டி, அவளையும் உடனழைத்துக் கொண்டு சென்றதனைத் தம் கண்களாற் கண்டும், வியப்பும் உவகையு மெய்திய மலைவாணராகிய வேடுவர்,’ இவள் நம் குலத்துக்கே ஒரு பெருந்தெய்வமாவள்; இவள்பொருட்டுக் குரவை யாடக்கடவோம்,’ என்று துணிந்து, தமரையெல்லாம் ஒருங்கழைத்து, தமது சிறுகுடியிடத்தே, தொண்டகம், துடி என்னும் பறைகளை முழக்கியும், கோடு வாய்வைத்தும், கொடுமணி இயக்கியும், நறும்புகை யெடுத்தும், விரவுமலர் தூவியும், குறிஞ்சி பாடியும் குரவைக்கூத்து நிகழ்த்துவா ராயினர். குரவையுள், குறிஞ்சிக் கிழவனாகிய செவ்வேளின் வெள்வேலைச் சிறப்பித்து அவர்கள் பாடிய பாட்டுமடை,

1. சீர்கெழுசெந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே;

2. அணிமுகங்க ளோராறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம் மணிவி சும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே;

3. சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மாரறுவர் திருமுலைப்பா லுண்டான் திருக்கைவேலன்றே வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க் குன்றங் கொன்ற நெடுவேலே.

என்பன. பின்பு அவ்வேடர்கள், இவ்வதிசயத்தைத் தங்கள் நாட்டு அரசனாகிய சேரன் செங்குட்டுவனுக்குத் தெரிவிக்க எண்ணி,

‘யானைவெண் கோடும் அகிலின் குப்பையும் மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும் சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும் அஞ்சனத் திரளும் அணியரி தாரமும் ஏல வல்லியும் இருங்கறி வல்லியும் கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும் தெங்கின் பழனும் தேமாங் கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும் காயமும் கரும்பும் பூமலி கொடியும் கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும் ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும் குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும் வரையாடு வருடையும் மடமான் மறியும் காசறைக் கருவும் மாசறு நகுலமும் பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் கானக் கோழியும் தேமொழிக் கிள்ளையும் என்பனவற்றைக் காணிக்கையாகச் சுமந்துகொண்டு சென்று, மலைவளங் காண்டல் வேண்டித் தன் தேவியாகிய வேண்மா ளோடும் தம்பியாகிய இளங்கோவடிகளோடும் நால்வகைத் தானையும் சூழப் புறப்பட்டு வந்து பேராற்றங் கரையிலுள்ள மணற்றிட்டையின் மேலிருக்கும் செங்குட்டுவன் திருமுன்பெய்தி, ‘ஏழ்பிறப்படியோம், வாழ்க நின் கொற்றம்,’ என்று அவனடி பணிந்து வாழ்த்தி, நிகழ்ந்தவற்றைக் கூறினார்கள். அப்பொழுது, அங்கு வந்திருந்த மதுரைத் தமிழாசிரியராகிய கூலவாணிகன் சாத்தனார் மதுரையிற் கோவலன் கொலையுண்டதும், கண்ணகி பாண்டியன்முன் வீசியெறிந்துவிட்டு, வஞ்சினங் கூறிவந்து மதுரை மூதூரைச் சுட்டெரித்ததும், நெடுஞ்செழியன் தான் செய்த தவறு காரணமாகத் தன்னை வெறுத்துக் கொண்டு அரியணைமீதே வீழ்ந்து உயிர் துறந்ததும், அவன் மனைவியாகிய பெருங்கோப்பெண்டு, ‘மன்னவன் செல்வழிச் செல்க யான்,’ என்று, தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடுவாள் போல ஒருங்குடன் மாய்ந்ததும் முதலியவற்றைச் செங்குட்டுவற்கு விரித்துரைத்து, ‘பாண்டியனது கொடுங்கோன்மை இத்தன்மைத்து என்பதைப் பெருவேந்தனாகிய நின்னிடத்துக் கூறவந்தவள்போல அந்நங்கை தனக்குரிய சோணாடு செல்லாது நின்னாட்டினை அடைந்தாள்; நின் கொற்றம் ஊழியூழி சிறப்பதாக,’ என்று கூறினார்.

இங்ஙனம் பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைத் திறங்களைக் கேட்ட செங்குட்டுவன், வருத்த மிக்கவனாய், எம்மையொத்த அரசர் செவிகளிற் செம்மையின் வழுவிய சொல் சென்று பொருந்துவதன் முன்னே பாண்டியன் உயிர் நீங்கியதானது, அவனது தீவினையால் வளைக்கப்பட்ட கோலை உடனே நிமிரச் செய்து செங்கோலாக்கிவிட்டது; அரசராயுள்ளார்க்குத் தம் நாட்டிலே காலத்தில் மழை பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் தவறு செய்யுமாயின் அச்சம்; கொடுங்கோற் கஞ்சி மன்னுயிர் களைக் காத்தற்குரிய உயர்குடியிற் பிறத்தல் துன்பமேயல்லது இன்பமன்று,’ என்று சாத்தனார்க்குக் கூறி, தன்தேவியை நோக்கி, ‘நன்னுதால், கணவனுடன் உயிர் நீத்த பாண்டியன் தேவியும், சினத்துடன் நம் நாடு நோக்கிவந்த கண்ணகியும் என்னும் இவ்விரு பெரும் பத்தினிகளுள்ளே யாவர் வியக்கத்தக்கவராவர்? என்று உசாவ, அதுகேட்ட வேண்மாள், ‘தன் காதலனது துன்பத்தைக் காணாது உயிர் நீத்த பாண்டியன் பெருந்தேவி விண்ணுலகத்தே பெருந்திரு வுறக்கடவள்; அது நிற்க, நம் நாட்டை நோக்கி வந்த பத்தினியை நாம் வழிபடுதல் இன்றியமையாதது,’ என்று கூறினாள். அதுகேட்ட அரசர் பெருந்தகை அவள் கூறியதை விரும்பியேற்று, அமைச்சரை நோக்க, அவர்கள், ‘பத்தினிக் கடவுளின் படிவஞ் சமைத்தற்குரிய சிலையைப் பொதியிலினின்றேனும் இமயத் தினின்றேனும் கொணர்தல் தக்கது; அவ் விருமலைச் சிலைகளும் முறையே காவிரியினும் கங்கையினும் நீராட்டித் தூய்மை செய்தற் குரியன,’ என்றார். என்றலும், அவன், ‘பொதியின் மலையிற் கல்லெடுத்துக் காவிரித்துறையில் நீராட்டுதல் வீரராகிய சேரர் குடிப்பிறந்தோர்க்குச் சிறப்பொடு பொருந்துஞ் செய்கையன்று; மலையரையன் நம் விருப்பிற் கிணங்கானாயின் வஞ்சிசூடிச் சென்று மலைந்து பெறுவோம்’ என்று கூறினன். அது கேட்ட வில்லவன்கோதை என்ற சேனாதிபதி, அரசனை வாழ்த்தி, ‘நும்போலும் வேந்தராகிய சோழபாண்டியர் நும்முடன் மாறு பட்டுக் கொங்கர்செங்களத்திலே தம் புலிக்கொடியையும் கயற் கொடியையும் தந்து தோல்வியுற்ற செய்தி திசையானைகளின் செவி வரையில் சென்றுற்றது; கொங்கணர் கலிங்கர் கருநாடர் பங்களர் கங்கர் கட்டியர் வடவாரியர் என்னும் இவர்களுடன் தமது தமிழ்ப்படை கலந்து பொருத செருக்களத்தில் தாம் யானைமேற் சென்று பகைவரை யழித்த அரிய செய்கை இன்னும் எங்கள் கண்களை விட்டகலவில்லை; அன்றியும், எம் கோமகளாகிய தம் தாயின் சிலையைக் கங்கையில் நீர்ப்படை செய்த காலத்தே எதிர்த்துவந்த ஆரியமன்னர் ஆயிரவர்முன் தாம் ஒருவராக நின்று பொருத செருவெங்கோலத்தைக் கடுங்கட் கூற்றமும் கண்விழித்து நோக்கியதே; இங்ஙனம் கடல் சூழ்ந்த நிலவுலக முழுதையும் வென்று தமிழ்நாடாகச் செய்த நீவிர் இது செய்யக் கருதின் நும்மை எதிர்த்து நிற்க வல்லவர் உலகில் யாருளர்? இப்பொழுது எங்கோன் இமயமலைக்குச் செல்லக் கருதியது கடவுளுருச் சமைத்தற்குரிய கற்கொள்ளுதற் பொருட்டே யாகலின், அது குறித்து வடதிசையிலுள்ள மன்னர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டின் வில்லும் கயலும் புலியும் எனுமிவற்றை இலச்சினையாகக் கொண்ட நும் திருமுகத்தை முன்னே விடுத்தருளல் வேண்டும்,’ என்று கூறினான். அப்பொழுது அழும்பில்வேள் என்னும் அமைச்சன், “நாவலந் தீவிலுள்ள பகைவருடைய ஒற்றுக்கள் நம் வஞ்சிமாநகரில் நீங்கா திருப்பன; அவைகளே இச்செய்தியை அவ்வரசர்களுக்கு அறிவிக்குந் தன்மையன; ஆதலால், வடதிசைச் செலவு குறித்து நமது பதிக்கண் பறையறைந்து தெரிவித்த லொன்றே அமைவதாகும்,’ என்ன, அரசனும் அதற்கு நேர்ந்து, அங்குநின்றும், புறப்பட்டு வஞ் மாநகரடைந்தான். உடனே, செங்குட்டுவனது வடதிசைச் செலவு குறித்தும், ஆங்குள்ள மன்னர்கள் திறை கொண்டுவந்து பணியாராயின் அவர்க்கு நேரும் இன்னல்கள் குறித்தும் யானை மேலேற்றி நகரெங்கும் முரசறையப் பட்டது.

அன்று மாலையில், அமைச்சர் முதலாயினார் சூழ்ந்து வாழ்த்த, அரசர் பெருமானாகிய சேரன் செங்குட்டுவன் அரியணை மேல் வீற்றிருந்து, தன் தானைத் தலைவர்களை நோக்கி, ‘ஆரிய மன்னர் பலர் தம் நாட்டில் மன்றல் ஒன்றின்பொருட்டுக் கூடியிருந்த கூட்டத்திலே, ‘தமிழ் நாடாளும் வேந்தர் இமயமலையின் நெற்றியில் வில் புலி கயல் பொறித்த நாளில் எம்போலும் வேந்தர் ஈங்கில்லை, என்று கூறித் தமிழரசை நகைத்திகழ்ந்தனர்’ என இங்கு வந்த இமயத் தாபதரால் அறிந்தோம்; அவ்விழி மொழி நம்பாலே தங்குவ தாயின், அஃது, நமக்கேயன்றி, நம்போலும் சோழ பாண்டிய வேந்தர்கட்கும் இகழ்ச்சியை விளைவிப்பதாகும்; ஆகலின், அங்ஙனம் இகழ்ந்த அவ்வாரிய அரசர் முடிமேல் கடவுளுரு அமைத்தற்குரிய கல்லினையேற்றிக் கொண்டு வருவேன்; அங்ஙனஞ் செய்யேனாயின், குடிமக்களை நடுங்கச் செய்யும் கொடுங்கோலனாகக்கடவேன்,’ என்று வஞ்சினங் கூறினான். அப்பொழுது நிமித்தம் வல்லானாகிய நிமித்திகன் எழுந்து நின்று, ‘அரசே! பகைவேந்த ரெல்லாரும் நின் திருவடியை வணங்குதற்குரிய முழுத்தம் இதுவாகும்; நீ கருதிய வடதிசைச் செலவிற்கு இப்பொழுதே எழுதல் சிறந்தது,’ என்றான். செங்குட்டுவன் நிமித்திகன் கூறிய அந்நன் முகூர்த்தத்திலே தன் வாளினையும் குடையையும் பெயர்த்து நாட்கொள்ளும்படி செய்து, தன்னுடன் வருதற்கமைந்த தானைகட்கும், தானைத் தலைவர்களுக்கும் பெருஞ்சோறளித்து உபசரித்து, இரவினைக் கழித்து, அரண்மனை வாயிலில் காலை முரசம் ஒலியாநிற்கையில், எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய சந்திரமௌலிப் பெருமான் திருவடிப் பாதுகைகளை, யாவர்க்கும் வணங்காததும் வஞ்சி மாலை சூடியதுமான தன் சென்னியால் வணங்கி, உச்சியிற்றரித்துக் கொண்டு, தமது பட்டவர்த்தனக் களிற்றின்மேல் ஏறியருளினான். அப்பொழுது, ஆடக மாடத்து அறிதுயிலமர்ந்த திருமாலின் சேடங் கொண்டு வந்து, சிலர் அரசன் முன்னேநின்று ஏத்த, அரசன், தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுளின் வண்ணச் சேவடியை மணிமுடியில் வைத்திருந்தானாகலின், அத்திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் மணிப்புயத் தேந்தியவனாய்ப் புறப்பட்டுச் செல்வானாயினன். நால்வகைத் தானைகளும் மலைகளின் முதுகு நெளியவும் நாடெல்லாம் வழி யுண்டாகவும் பரந்து சென்றன. இங்ஙனம் பெருஞ் சேனையுடன் சென்ற செங்குட்டுவன் நீலகிரியை அடைந்து அதன் புறத்தே அமைந்த பாடியிற் றங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தனன். அப்பொழுது இமயத்தினின்றும் விசும்பின் வழியாகப் பொதியிலுக்குச் சென்று கொண்டிருந்த முனிவர்கள் அங்கே இறங்கி, செங்குட்டுவனால் வணங்கப்பெற்று. ‘வஞ்சி வானவனே,’ என அவனை விளித்து, ‘இமயமலையில் வாழும் அருமறை யந்தணர்களைப் பாதுகாக்க வேண்டும்’ என அவனைக் கேட்டுக்கொண்டு, வாழ்த்திச் சென்றனர். பின், கொங்கணக் கூத்தரும், கொடுங்கருநாடரும் தத்தமக்குரிய அணிகளுடன் தங்கள் மகளிரோடும் போந்து ஆடல் பாடல் களைச் செய்து பரிசில் பெற்றுச் சென்றனர். பின்பு, நாடக மகளிர் ஐம்பத்திருவரும், குயிலுவர் இருநூற்றெண்மரும், தொண்ணூற்றறு வகைப் பாசண்ட நூல்களில் வல்ல நகைவேழம்பர் நூற்றுவரும், நூறு தேர்களும், ஐந்நூறு களிறுகளும், பதினாயிரம் குதிரை களும், பண்டங்கள் ஏற்றப்பட்ட இருபதினாயிரம் சகடங்களும் என்னும் திறைப் பொருள்களோடு சஞ்சயன் முதலாகிய தன் தூதுவர் ஆயிரவர் வந்து கண்டு, ‘தேவரீர் வடதிசைச் செல்வது பத்தினிக் கடவுளின் உருவமைத்தற்குரிய சிலை யொன்றின் பொருட்டேயாயின், யாங்களே இமயத்திற் கல்லெடுத்து அதனைக் கங்கையில் நீர்ப்படை செய்து தரவல்லோம்,’ என்று தம் நட்பரசராகிய நூற்றுவர் கன்னர் தெரிவித்திருக்கின்றனர் என்று கூறினர். அது கேட்ட வஞ்சி வேந்தன், ‘பாலகுமரன் மக்களாகிய கனகனும் விசயனும்வேறு பல மன்னரொடுங் கூடித் தமிழராகிய எம்முடைய ஆற்றலறியாது இகழ்ந்து கூறினர் எனக்கேட்டு இச்சேனை சீற்றங்கொண்டு செல்லா நின்றது,’ என்பதனை நூற்றுவர் கன்னர்க்குக் கூறி, அவருதவி கொண்டு கங்கையாறு கடத்தற்குரிய நாவாய்களை அமைத்து வைக்க என்று சஞ்சயனை முன்னர் அனுப்பினன். பின் பாண்டியர் விடுத்த சந்தனம் முத்து முதலிய திறைகளைக் கண்டு, அவர்கட்குத் தன் இலச்சினை யிட்ட திருமுகம் அளித்தனன். யாவரும் சென்ற பின்பு செங்குட்டுவன் அங்கு நின்றும் புறப்பட்டு வடநாடு நோக்கிச் சென்று கங்கைக் கரையை அடைந்து, முன்பு சஞ்சயனுக்குத் தான் கூறி விடுத்தவாறே, தன் நட்பரசர்களாகிய கன்னர்களால் கொணர்ந்து வைக்கப் பட்டிருந்த மரக்கலங் களிலேறித் தானையுடன் அக்கரை சேர்ந்து, அவர்களால் உபசரிக்கப் பெற்று, அந்நாட்டி னீங்கி, தன் பகைவர் நாடாகிய உத்தர கோசலத்தை யடைந்து பாசறையமைத் திருந்தனன். அது தெரிந்தவுடன், அத்திசைக்கண் உள்ள உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் என்னும் அரசர்களோடு கனகவிசயர் என்ற வேந்தர் ‘தமிழராற்றலைக் காண்போம்,’ என்று தருக்கி, பெரிய சேனையுடன் போருக்கு எதிர்த்தனர். இங்ஙனம் வடவரசர் திரண்டு வருதலைக் கண்ட செங்குட்டுவன், இரையைநாடி வேட்டத்தின் மேற்சென்ற ஆண் சிங்கமானது யானைக் கூட்டத்தைக் கண்டு பாய்ந்தவாறு போல, எதிர்த்து வந்தவடவேந்தர் சேனைகளின் மேற்பாய்ந்து கொன்று குவித்து நூழிலாட்டினன். போரில் துறந்தார் ஒழிந்த ஏனைய பகைவர்கள், தத்தம் படைக்கலங்களை யெறிந்துவிட்டு, சடைமுடியும் காவியுடையும், சாம்பற்பூச்சுமுடைய துறவோராகவும், கையிற் பீலியேந்திய சமண முனிவராகவும், பாணராகவும், கூத்தராகவும் வல்லவாறு வேடம்பூண்டு ஓடி யொளிப் பாராயினர். தமிழரை யிகழ்ந்த கனகன் விசயன் என்னும் அரசர் களோடு ஐம்பத்திருவர் தேர் வீரர் செங்குட்டுவன் சினத்திற் கிலக்காகி யகப்பட்டனர். தேவாசுர யுத்தம் பதினெட்டு ஆண்டிலும், இராம இராவண யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனக விசயரும் புரிந்த யுத்தம் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தன வென்று உலகினர் ஒருங்கெண்ணுமாறு ஒரு பகற்பொழுதில் ஆரியச் சேனைகளைக் கொன்று குவித்து மாற்றாரை வென்று தும்பை சூடிய வேந்தர் பெருமானாகிய சேரன் செங்குட்டுவன், பின்பு, தன் தானைத்தலைவனாகிய வில்லவன் கோதையைப் படையுடன் அனுப்பி, இமயமலையினின்றும் பத்தினிக் கடவுளின் படிவம் சமைத்தற்குரிய சிலையைக் கொணர்வித்து, அதனைக் கனக விசயரின் முடிமேல் ஏற்றிக்கொண்டு கங்கையாற்றை யடைந்து, நூல் வல்லோரால் முறைப்படி சிலையினை நீர்ப்படை செய்து, தென்கரையெய்தி, அங்குள்ள வெளியில் அரசர்க்குரிய கோயிலும், மண்டபங்களும், அரங்குகளும், பூம்பந்தர்களும், பூஞ்சோலைகளும் பூம்பொய்கைகளும் முதலியவற்றுடன் கன்னரால் அமைக்கப் பட்டிருந்த அழகிய பாடியிற்றங்கித் தன் படைத்தலைவர் களுக்கும், படை வீரர்களுக்கும், போரில் இறந்து துறக்கமெய்திய வீரர்களின் மைந்தர்களுக்கும், அவர்கள் பேராண்மைக்கும், வெற்றிக்கும் அறிகுறியாக, பொன்னாலாகிய வாகைப்பூக்களைத் தான் பிறந்த நாளிற் செய்யும்பெருங் கொடையினும் மிகுதி யாக நெடும் பொழுதிருந்து கொடுத்து, அரசிருக்கையில் வீற்றிருப் பானாயினன். இவ்வாறிருக்க, அப்பொழுது கங்கையாடி வந்த மாடலன் என்னும் மறையோன் செங்குட்டுவனைக் கண்டு வாழ்த்தி, ‘மாதவியின் கானல்வரிப் பாட்டானது கனக விசயரின் முடித் தலையை நெரித்தது,’ என்று கூற, செங்குட்டுவன் அவனை நோக்கி, ‘நான்மறையாள! இங்குள்ள பகைப்புலத்தரசர் பலரறியாத நகைத்திறம் ஒன்றுமொழிந்தனை; மொழிந்ததன் பொருளை விளங்க வுரைக்க,’ என்றனன். என்றலும், அவன், காவிரிபூம் பட்டினத்தில் கோவலனும் மாதவியும் கடல் விளையாடச் சென்றது முதலாக நிகழ்ந்த வரலாறுகளை எடுத்துக்கூறி, தான் முன்பு மொழிந்ததன் பொருளை விளங்கவைத்தான். பின்னும் அவன் மதுரையில் கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற ஆய்ச்சியர் தலைவியாகிய மாதரி எரியிற் புகுந்து மாய்ந்ததும், கவுந்தியடிகள் உண்ணா நோன்பு கொண்டு உயர்கதி யடைந்ததும், தான் காவிரிபூம் பட்டினஞ் சென்று மதுரையில் நிகழ்ந்தவற்றைக் கூறிய காலையில் கோவலன் தந்தையாகிய மாசாத்துவான் பொருள் முழுவதையும் தானஞ் செய்துவிட்டுப் பௌத்த முனிவரைச் சரணடைந்து துறவியானதும், அவன் மனைவியாகிய பெருமனைக்கிழத்தி தன் புதல்வனுக்குண்டாகிய இடுக்கணைப் பொறாது வருந்தி உயிர் நீத்ததும், கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கன் சமண் சமயஞ் சார்ந்து துறவு பூண்டதும், அவன் மனைவி வாழ்நாளை விட்டு உயிர்விடுத்ததும், இவற்றை யெல்லாம் அறிந்ததும் மாதவி பிக்குணிக்கோலம் பூண்டு பௌத்த விகாரமடைந்து அறவுரை கேட்டதும் ஆகிய இவ்வரலாறு களையும் எடுத்தியம்பி, ‘மதுரையினின்றும் போந்து நான் கூறிய கொடுஞ் செய்தி சிலர் இறத்தற்கு வாயிலாக இருந்தமையால் அத்தீது தீர்தற் பொருட்டுக் கங்கையாட வந்தேன்,’ என்று கூறினான். மற்றும் அவன் செங்குட்டுவன் வினாவிற்கு விடையாக, நெடுஞ்செழியன் துஞ்சியபின் கொற்கையிலிருந்த வெற்றி வேற் செழியன் கண்ணகிக்குப் பலியூட்டி, அரசின்றி வருந்திய மதுரையை அடைந்து அரசு கட்டிலேறிச் செங்கோலோச்சுவதும், குட்டுவற்கு மைத்துனனாகிய சோழனால் சோணாட்டின் ஆட்சி செவ்வனே நடைபெற்று வருவதும் கூறினான். இவற்றையெல்லாம் கேட்டு வியந்திருந்த வஞ்சிவேந்தன் மாலைப் பொழுதிலே வானின்கண் தோன்றிய பிறையை நோக்க, அவன் குறிப்பறிந்த நிமித்திகன் அரசனை வாழ்த்தி, ‘வஞ்சியினின்றும் புறப்பட்டு முப்பத்திரண்டு திங்கள் ஆகின்றன,’ என்று கூறினன். பின்பு, சேரர்பெருமான் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன்னை மாடலனுக்குத் தானஞ் செய்து தனக்கு உதவி புரிந்த நட்பரசராகிய நூற்றுவர் கன்னரை அவர்கள் நாட்டிற்குச் செல்லுமாறு விடுத்து, தமிழரின் ஆற்றலை யறியாது போரில் எதிர்த்துத் தோல்வியுற்ற கனகன் விசயன் என்னும் ஆரியவரசர்களைச் சோழ பாண்டியர்க்குக்காட்டி வருமாறு தன் தூதுவர் ஆயிரவர்க்குக் கட்டளையிட்டனுப்பி, இரவு கழிந்து ஞாயிறு தோன்றியவுடன், தானையுடன் தென்திசை நோக்கிப் பெயர்ந்துவந்து, வஞ்சிமாநகரத்தின் அரண்மனையில் அந்தப்புரத்திலே அமளிக் கட்டிலின்மேல் தன்னைப் பிரிந் துறைதலால் உறக்கமென்பதில்லாமல், செவிலியரும் சேடியரும் முதலாயினர் தன் வடதிசை வெற்றியையும் மீட்சியையும் குறித்துப் பாடி ஆற்றுவிக்கும் பாடல்களையும், குறிஞ்சிநிலத்து வேட்டு மகளிரும், மருதநிலத்து உழவரும், முல்லைநிலத்துக் கோவலரும், நெய்தனிலத்துப் பரதவர் மகளிரும் தன் வெற்றியைச் சிறப்பித்துப் பாடும் பாடல்களையும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தன் கோப்பெருந்தேவியாகிய வேண்மாளின் கழலுதலுற்ற கைவளைகள் செறியும்படியாக, வலம்புரிச் சங்கங்கள் முழங்க, குஞ்சர வொழுகை யோடு கோநகர் முழுதும் வந்தெதிர் கொள்ள, வெண்கொற்றக் குடையின்கீழ் வாகை மிலைந்த சென்னியோடும் பட்டத்து யானைமேற் பொலிந்து வஞ்சி மூதூருட் புகுந்து தன் கோயிலை அடைவானாயினன்.

அப்பொழுது மாலைப்பொழுது வந்து நீங்கக் குடிகளுக்குத் தண்ணளி புரியும் குட்டுவன் திருமுகம்போல நிறைமதி தோன்றிற்று. மங்கல மடந்தையாகிய வேண்மாள், உலகின் நடுவே உயர்ந்து விளங்கும் மேருமலை போன்று அவ்வஞ்சி மூதூரின் நடுவில் விளங்கும் பொன் மாளிகையிலுள்ள நிலா முற்றமாகிய மணியரங்கிற் சென்று அம்மதியின் காட்சியைக் காணவேண்டி, தம்வளைக்கைகளில் விளக்குகளை யேந்திப் பல்லாண்டு கூறியேத்தும் மகளிரும், யாழ் முதலியவற்றுடன் இன்னிசை பாடும் மாதரும், கத்தூரி சாந்தங்களைக் கையிலேந்திய கூன் குறளர்களும், வண்ணமும் சுண்ணமும் மலர்மாலையும் ஏந்திய பெண்ணணியுடைய பேடியரும், பூவும் புகையும் விரையும் சுமந்துளோரும், ஆடியும் ஆடையும் அணிகலன்களும் ஏந்திய சேடியரும் சூழ்ந்துவர வந்தாள். இங்ஙனம் வந்த தன் பெருந் தேவியுடன் கூடி வேந்தர் பெருமானாகிய செங்குட்டுவன் நிலாமுற்றத்தை யடைந்திருந்து, கூத்தில் வல்லவனாகிய சாக்கையன், சிவபெருமான் ஆடிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தினை நடித்துக்காட்ட அதனைக் கண்டு மகிழ்ந்து, பின் அரசியல் மண்டபமாகிய பேரத்தாணியை எய்தியிருந்தான். இருந்தபின், கங்கைக்கரையினின்றும் முன் அனுப்பிய நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் வந்து, அரசன் ஆணைபெற்று உட்சென்று வணங்கி, தாம் சோழ பாண்டியர்களிடம் சென்ற காலையில், அவர்கள், ‘போர்க் களத்திலே ஆண்மையுடன் வாளும் குடையும் ஒழியத் தவக்கோலம் பூண்டு சென்ற ஆரிய மன்னரைப் பற்றிக் கொண்டு வருவது வெற்றியாகாது,’ என இகழ்ந்துரைத்தனர் என்றார்கள். இங்ஙனம் தன் வெற்றியை அவர்கள் இகழ்ந்துரைத்தனர் என்பது கேட்டவளவில் செங்குட்டுவனுக்குச் சீற்றம் பொங்கிக் கண்கள் தழல் நிறங் கொண்டன. அதுகண்டு நிறைந்த கேள்வியையுடைய வனாகிய மாடலன் எழுந்து நின்று, செங்குட்டுவனை வாழ்த்தி, அவனது சீற்றத்தை ஆற்றி, யாக்கை இளமை செல்வம் என்பவற்றின் நிலையாமையை அவனுக்கு விளங்கத்தேற்றி, “நீ, அரியணையேறி ஐம்பதியாண்டு ஆயின பின்னும் அறக்கள வேள்வி செய்யாது எங்கணும் மறக்கள வேள்வியே செய்வாயாயினை; வானோருருவைப் பொருந்திய உயிர் மக்களுரு வெடுத்தலும், மக்கள் யாக்கையிற் பொருந்திய உயிர் விலங்குடம்பெடுத்தலும், விலங்குடம்பினின்ற உயிர் நரகதியடைதலும் கூடாதன வல்ல; ஆடுங் கூத்தர்களைப் போல் இவ்வுயிர்கள் எப்பொழுதும் ஓரிடத்தில் ஒரு கோலத்துடன் நிற்பன வல்ல; செய்வினை வழிப்பட்டு உயிர்கள் மாறிமாறிச் செல்லுமென்பது பொய்யற்ற அறி வினையுடையோர் கூறிய மெய்யுரையாகும்; மிக மேலாகிய யாக்கையைப் பெற்ற ஒரு நல்லுயிர் உலகத்துயிர்கள் செல்லும் பொதுநெறியிற் செல்லுதலைப் பொறேனாய் இவை கூறுகின்றேன்; அரசர்க்குச் சிறந்ததாக மறைகள் கூறுவதும், வானோரும் போற்றும் வீட்டு நெறியையளிப்பது மாகிய வேள்வியை நீ இன்றே இயற்றத் தொடங்குதல் வேண்டும்.” என்று கூறினான்.

இங்ஙனம் மாடலன் கூறிய உறுதிமொழிகளைக் கேட்ட செங்குட்டுவன், சினந்தணிந்து, அவ்வுறுதிமொழியைக் கடைப் பிடித்து வேள்வி இயற்றத் துணிந்து, அதற்குரிய விழாவினைத் தொடங்குமாறு வேதவழிப்பட்ட அறங்களை நன்குணர்ந்த வேள்வியாசிரியர்களை ஏவி, ஆரியவரசர்களைச் சிறையினின்றும் விடுவித்து வேளாவிக்கோ மந்திரத்தில் இருக்கச்செய்து, வேள்வி முடிந்தவுடன் அவர்களைத் தம்மூருக்கு அனுப்புவதாகக் கூறி அவர்கட்கேற்ற உபசாரங்களைச் செய்யுமாறு வில்லவன் கோதைக்குக் கட்டளையிட்டு, மற்றும் சிறைப் பட்டோரனைவரையும் விடுவித்துச் சிறைக் கோட்டங்களைத் தூய்மை செய்யவும் தனது நாட்டிலுள்ள ஊர்கள் தோறும் குடிகள் செலுத்துதற்குரிய இறைப்பொருள்களை வாங்காது விடுக்கவும் அழும்பில்வேள் என்னும் அமைச்சனோடு ஆயக்கணக்கர்களை ஏவி, ஆன்றோர் பலருடன் சென்று சிற்ப நூல்வல்ல கம்மியர்களால் இயற்றப்பட்ட பத்தினிக் கோட்டத்தில், இமயத்தினின்றும் கொணர்ந்த சிலையில் கைத்தொழிலின் திறத்தால் இலக்கண முழுதும் அமையச் சமைத்த பத்தினியின் படிமத்தைப் பிரதிட்டை செய்து, விதிப்படி வேள்வியும் விழாவும் நாடொறும் புரியுமாறு கட்டளைசெய்து, அரசரெல்லாரும் தத்தம் திறைகளுடன் அக்கோயிலில் வந்து வணங்கும்படி பணித்து, அங்கே இருந்தான்.

அப்படி இருக்கும்பொழுது, முன்னம் கோவலன் கொலையுண்டது முதலியவற்றை மாடலனாற் கேட்டறிந்து, மாசாத்துவான் துறவு பூணவும், பெருமனைக்கிழத்தி உயிர் துறப்பவும், அளவுபடாத துன்பத்தை யடைந்தவர்களாய்க் கண்ணகியின் செவிலித் தாயும், அடித்தோழியும், சாத்தன் கோயிலிலிருந்த தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழியும் ஆகிய மூவருஞ் சேர்ந்து கண்ணகியைக் காண வேண்டி மதுரைக்கு வந்து, அங்கு அந்நங்கையைக் காணாது, அவள் சீற்றத்தால் மதுரை எரியுண்டமையறிந்து, மாதரி மகள் ஐயையைக்கண்டு, அவளை யழைத்துக்கொண்டு வையைக் கரைவழியே சென்று, மலைநாட்டிலுள்ள திருச்செங்குன்றென்னும் மலைமீதேறிக் கண்ணகியின் கோயிலிற் புகுந்து, நங்கையைச் சிறப்பியற்றிய செங்குட்டுவனைக் கண்டு, அவனுக்குத் தாங்கள் இன்னா ரென்பதைக் கூறி, பின் பத்தினியை நோக்கி, அவள் தாயும் மாமியும் உயிர் நீத்ததும், தந்தையும் மாமனும் மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் துறவு பூண்டதுமாகிய செய்திகளைச் சொல்லி, ‘தான் அடைக்கலமாகப் பெற்ற நின்னைக் காத்தோம்ப முடியாமல் உயிர் துறந்த மாதரியின் மகள் ஐயையைக் காண்’, என்று அவளைக் காட்டி, அழுது அரற்றினார்கள். அங்ஙனம் அரற்றும் பொழுது, பொற்சிலம்பும், மேகலையும், வளைகளும், வயிரத்தோடும், மற்றும் பல அணிகளும் அணிந்துகொண்டு மின்னற் கொடிபோலும் உருவமொன்று விசும்பின்மேலே தோன்றாநிற்க, செங்குட்டுவன் அதனைக் கண்டு மிக்க அதிசய மடைந்தான். கண்ணகி, செங்குட்டுவற்குத் தன் கடவுணல்லணி காட்டியதுடன், தன்னைக் காணவந்த மகளிரை நோக்கி, ‘தோழிமீர்! தென்னவன் தீதிலன்; தேவர்க்கரசன் கோயிலில் நல்விருந்தாயினான்; நான் அவன் மகளாவேன்; வெற்றி வேலையுடைய முருகனது இவ்வரையில் யான் என்றும் விளையாடுதலை யொழியேன்; நீவிர் எல்லோரும் என்னுடன் விளையாட வருவீராக,’ என்று பழமை பாராட்டிக் கூறினள். இங்ஙனம் பத்தினிக் கடவுள் நேர்நின்று கூற, அவற்றைக் கேட்டிருந்த செங்குட்டுவன் ஆயத்தாராகிய வஞ்சிமகளிர் வியப்புற்றுத் தம்மிற்கூடி, அத் தெய்வத்தையும், அத் தெய்வம் உலாவுதலுற்ற தமிழ்நாடாளும் அரசர் மூவரையும் வாழ்த்தி அம்மானை, கந்துகம், ஊசல், வள்ளைப்பாட்டு என்பவற்றாற் பாடினார். அவர் அவ்வரசர் களைப் பாடியவற்றுள் ஒரோவொன்று பின்வருவன :

அம்மானைவரி

புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவி லுடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை குறைவி லுடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்கா ணம்மானை காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை.

கந்துகவரி

பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைக ளார்ப்ப வார்ப்ப வெங்கணும் தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன் வாழ்க வென்றுபந்த டித்துமே.

ஊசல்வரி

ஓரைவ ரீரைம் பதின்ம ருடன் றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட வாடாமோ வூசல். கடம்பெறிந்த வாபாடி யாடாமோ வூசல்.

வள்ளைப் பாட்டு

தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழ லவைப்பார் புகார்மகளிர்
ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல்
பாவைமா ராரிக்கும் பாடலே பாடல்.

சேரர் பெருமானாகிய செங்குட்டுவன் கண்ணகியின் தெய்வவுருவத்தைத் தரிசித்த பின்னர், தேவந்தி யென்னும் பார்ப்பனியை நோக்கி, ‘நீங்கள் பத்தினியின் முன்பு அரற்றிய பொழுது கூறிய மணிமேகலை யென்பாள் யார்? அவள் துறவு பூண்டதன் காரணம் யாது? என்று வினவ, அவள் மணிமேகலையின் வரலாற்றை அவள் துறவு பூண்டது ஈறாகக் கூறி முடித்தாள். பின்பு அவள்மேல் சாத்தன் என்னும் தெய்வம் ஆவேசித்துக் கட்டளையிட்டவாறு, அங்கிருந்த மாடலன், முன்னொருநாளில் அச்சாத்தனால் தன்னிடம் கொடுக்கப் பெற்றதும் தன் கையிலுள்ளதுமான கமண்டலத்து நீரை அங்கு வந்திருந்த இளம்பெண்கள் மூவர் மீது தெளிப்ப, உடனே அவர்கள் பழம்பிறப்புணர்ச்சி யுடையராய்க் கண்ணகியைக் குறித்துப் புலம்பா நிற்க, அவர்கள் கண்ணகி நற்றாய், கோவலன் நற்றாய், மாதரி என்னும் மூவரின் பிறப்பின ராதலையும், அம்மூவரும் இங்ஙஙனம் பிறப்பதற்குற்ற காரணத்தையும் மாடலன் செங்குட்டு வனுக்கு விளக்கி, ‘நல்லறம் புரிந்தோர் பொன்னுலகடைதலும், ஒன்றிற் பற்றுவைத்துள்ளோர் புவியிற் பற்றுள்ள விடத்தே பிறத்தலும், அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும், பிறந்தவர்கள் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் இவர்கள் வரலாற்றால் இனிது விளங்கும்; நீ ஆனேறுயர்த்தோனாகிய பரமன் அருளினால் தோன்றி, மாநிலத்தை நன்கு புரந்தமன்னவன் ஆகலின் செய்தவப் பயன்களையும் சிறந்தோர் படிவங்களையும் கையிலுள்ள பொருள்போற் கண்டனை; நீ ஊழி யூழிதோறும் உலகங்காத்து நீடு வாழ்வாயாக,’ என்று கூறினன். இவைகளைக் கேட்டு வியப்புற்றிருந்த செங்குட்டுவன், கண்ணகியின் கோயிலுக்கு அருச்சனா போகமாக நிலங்கள் அளித்து நித்தல்விழா நிகழ்த்தி வரச் செய்து, பத்தினியின் பூசை தேவந்தியால் நடந்துவரப் பணித்து, தான் பத்தினிக் கடவுளை மும்முறை வலம் வந்து வணங்கி நின்றான். அப்பொழுது கனக விசயர் என்னும் ஆரிய மன்னரும், முன்னமே சிறைப்பட்டிருந்து விடுபட்ட ஏனையரசரும், குடகக் கொங்கரும், மாளுவவேந்தரும், இலங்கையரசனாகிய கயவாகுவும் செங்குட்டுவனெதிரே வந்து பத்தினிக் கடவுளை வணங்கி ‘இச்சேரர் பெருமான் வேள்வியிற் போல எங்கள் நாடுகளிலும் வந்து அருள் புரியவேண்டும்’, என வேண்டினர். வேண்டலும், ‘தந்தேன் வரம்’ என்று ஒரு தெய்வ வாக்கு எழுந்தது. அதனைக் கேட்டுச் செங்குட்டுவனும் ஏனையரசர்களும் சேனையுடன் ஆரவாரித்து, வீட்டுலகத்தை நேரிற் கண்டவர்போல் மகிழ்வுற்றனர். பின்பு செங்குட்டுவன் அரசர்கள் அடிபணிய மாடலனோடு எழுந்து வேள்விச்சாலைக்குச் சென்றனன். செங்குட்டுவன் தம்பியும் இக்காப்பிய மியற்றிய ஆசிரியருமாகிய இளங்கோவடிகளும், அப்பொழுது அவ்வுழிச் செல்லாநிற்க, பத்தினிக் கடவுள் தேவந்தி மேற்றோன்றி, அவரை விளித்து, அவருடைய வரலாறுகளைச் சொல்லி உவப்பித்தாள் என்று, இங்ஙனமாக இக்கதையை நிறைவி த் தருளிய அடிகள், உலகத்தாரை விளித்து, இவ்வரலாற்றைக் கேட்டமையால் அவர்கள் கடைப்பிடித்தொழுகற் பாலவாய அறங்களைப் பின்னுள்ள அடிகள் முதலியவற்றால் அறிவுறுத் தருளினார்.

பரிவும் இடுக்கணும்; பாங்குற நீங்குமின் தெய்வம் தெளிமின் தெளிர்தோர்ப் பேணுமின் பொய்யுரை யஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்;
ஊனூண் டுறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்;’

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *