
கண்ணகி வரலாறும், கற்புமாண்பும்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
2. கண்ணகி கற்புமாண்பு
‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’.
குமரியொடு வடவிமயத் தொருமொழி வைத்துலகாண்ட வேந்தர் பெருமானாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதற்கு மைந்தரும், ஆரியமன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு ஒருதானாகி அமர்கடந்து இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய சேரன் செங்குட்டுவனென்னும் வீரருள் வீரற்கு இளையாரும் ஆகி, தமிழெனும் அளப்பருஞ் சலதியைக் கடந்து நின்று, சிந்தை செல்லாச் சேணெடுந்தூரத்து அந்தமிலின்பத்து அரசாள் வேந்தாகப் பற்றறத் துறந்த இளங்கோவடிகளென்னும் நற்றவக் குரிசில் தமிழகத்தின் பல்வகைப் பெருமைகளையும், தமிழ் மொழியின் ஒப்புயர்வற்ற மாட்சியையும், விளக்குவதாகத் தமது முத்தமிழ்ப் புலமையும் வித்தகக் கவித்திறலும் தோன்ற ஒரு காப்பியம் இயற்றக் கருதியிருந்தார். இருந்தார்க்குத் தகுந்ததோர் செவ்வியும் வாய்த்தது. அஃதென்னை யெனின், செங்குட்டுவன் மஞ்சுசூழ் சோலை மலைவளங் காணற்பொருட்டுத் தேவியாகிய வேண்மாளுடன் நால்வகைப் படையும் புடை சூழப் புறப்பட்டு வந்து பேராற்றங்கரையிலுள்ள மணற்குன்றிலே தங்கியிருப் பானாயினன். இளங்கோவடிகளும் உடன் வந்து அவணிருந்தார். மலைவாணராகிய வேட்டுவர்கள் ஒருங்கு திரண்டு யானை வெண்கோடும், அகிலின் குப்பையும், மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும், சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும், அஞ்சனத்திரளும், அணியரிதாரமும், ஏலவல்லியும், இருங்கறி வல்லியும், மற்றும் பல பலவுமாகிய மலைபடு பொருள்களைக் காணிக்கையாகச் சுமந்துவந்து தந்து செங்குட்டுவனை நோக்கி, ‘மன்னவர் மன்ன, ஏழ் பிறப்படியேம் வாழ்க நின் கொற்றம்! யாம் வாழும் மலைப்பக்கத்தில் ஒரு வேங்கை மரத்தின் நிழற்கண்ணே கொங்கையொன்றிழந்த நங்கையாகிய பத்தினியொருத்தி வந்து நின்றாள்; அவள் பொருட்டு இந்திரன் றமர் வந்து திரண்டு, அவளுடைய காதற் கொழுநனை அவட்குக் காட்டி, அவளோடும் எங்கள் கண்காணும்படியாக விண்போயது பெரியதோர் வியப்பாயிருந்தது; அவள் எந்நாட்டாள்கொல், யார் மகள் கொல்லோ அறிந்தருள்க, என்று சொல்லிப் போயினர். தண்டமிழாசானாகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் அப்பொழுது அங்கு வந்த செங்குட்டுவனைக் கண்டு களிப்புற்றிருந்தவர், தீவினைச் சிலம்பு காரணத்தாற் கோவலன் கொலையுண்டது முதலாக மதுரையில் நிகழ்ந்த வரலாறனைத்தையும் அரசற்குக் கூறினார்; அவனுடன் கேட்டுக்கொண்டிருந்தார் இளங்கோவடிகள். அடிகளின் மாசற்ற உள்ளத்தில் மூன்று சிறந்த நீதிகள் ஊன்றிப் பதிந்தன. அவை, அரச நீதியிற் சிறிது பிழைப்பினும் அவ்வரசை அறக்கடவுளே கூற்றமாய் நின்று கொல்லுமென்பதும், புகழமைந்த பத்தினியை மக்களேயன்றித் தேவரும் முனிவரும் முதலாயினார் ஏத்துவதியல் பென்பதும், ஊழ்வினையானது அதன் பயனை நுகர்வித்தல் ஒருதலையென்பதும் ஆம். இம்மூன்றும் சிலம்பு காரணமாக நிகழ்ந்தமையின் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஒரு காப்பியம் இயற்றல்வேண்டுமெனத் துணிந்தார். தாம் கேட்ட வரலாற்றிலிருந்து அடிகள் தாம் இயற்றப்போகும் காப்பியத்திற்குப் பாவிகம் எனப்படும் உள்ளுறை அமைத்துக்கொண்ட வியப்பைக் காட்டிலும், அதற்குப் பெயர் தந்த வியப்பு மிகவும் பெரிய தொன்றாகும். வரலாற்றுடன் பொருந்திய மூன்று உள்ளுறைகளை ஒருங்கு தெரிப்பதாய் அதனானே (பெயர்) தன்னை ஆராய்ந்த துணையானே காப்பியத்தின் பண்பினை யுணருமாறு உதவி புரிவதாயுள்ள பிறிதொரு பெயர் யாதுளது? இங்ஙனம் துணிந்து வைத்த அடிகள், சாத்தனாரைப் பார்த்து.
‘அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரமென்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்’
என்று கூறினார். சாத்தனாரோ,
‘முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரியது அடிகள் நீரே யருளுக’
என்றார். என்றலும், இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிச் சிலம்பாகிய இதனைத் தமிழ் மக்களின் செவியகத்தே ஒலித்துக் கொண்டிருக்குமாறு இயற்றி யளித்தார். முத்தமிழ்ப் புலமை சான்று, இதற்கு அரியதோர் உரைவகுத்தருளிய அடியார்க்கு நல்லாரே இக்காப்பியத்தின் பெருமையைக் குறித்து,
‘எழுத்தின் திறனறிந்தோ இன்சொற் பொருளின் அழுத்தந் தனிலொன் றறிந்தோ – முழுத்தும் பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின் றெழுதத் துணிவதே யான்’
என்று கூறியிருப்பரேல் இதன் அருமை பெருமைகளை நாம் எங்ஙனம் அளவிட்டுரைத்தல் சாலும்? இனி இளங்கோவடிகள் இத்தொடர்நிலைச் செய்யுட்குத் தலைசிறந்த மூன்று நீதிகளை உள்ளுறையாகக் கொண்டார் எனினும், அவற்றுள் இடைநின்ற பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலுண்டென்பதில் அவர் பெருநோக்குடையாரென்பது தெளிவாகின்றது. என்னை? பதிகத்தின் பின்னர் இவ்வுரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளின் முதற்கண் நிற்பது உரைபெறு கட்டுரை. அதில் அடிகள்,
1.‘அன்றுதொட்டுப் பாண்டியனாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழைபெய்து நோயுந் துன்பமும் நீங்கியது.’
2. ‘அது கேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவோடு சாந்தி செய்ய மழைதொழிலென்றும் மாறாதாயிற்று.’
3. ‘அது கேட்டுக் கடல் சூழிலங்கைக் கயவாகு வென்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்கள கவயினாங்கோர் பாடிவிழாக் கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்தது வளம்பல பெருகிப் பிழையா விளையுணாடாயிற்று.’
4. ‘அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே.’
எனத் தமிழ்நாட்டரசர்களும் இலங்கையரசனும் கண்ணகியைத் தெய்வமாகவே கொண்டு அவட்குக் கோட்டஞ் சமைத்துத் திருவிழா முதலியன புரிந்தமையையும் அதனால் அவரவர் நாட்டில் மழைவளம் பெருகி, நோயும் துன்பமும் நீங்கினமையையும் கூறியருளினார். கோவலன் கொலையுண்டபின் கண்ணகி மதுரையை எரித்து வையைக்கரை வழியே சென்று மலைநாட்டுத் திருச்செங்குன்று என்னும் மலையை அடைந்து அங்கே தெய்வ வடிவத்துடன் வந்த கோவலனுடன் விமானமேறிச் சென்ற நிகழ்ச்சியின் பின்னே நிகழ்ந்த வரலாறாகிய, அரசர் பலர் பத்தினிக் கோட்டஞ் சமைத்து விழாக் கொண்டாடியதனை, இளங்கோவடிகள் காப்பியத் தொடக்கத்திற்றானே கூறிவைத்தது அவர் பத்தினியையேத்துங் குறிப்பினராதலை நன்கு புலப் படுத்தும். இதனைக் கற்கப் புகுவார்க்கும் அத்தகைய குறிப்பு நிகழவேண்டு மென்பதும் அடிகள் கருத்தாதல் கூடும். இந் நுட்பங்களையுணர்ந்தன்றோ இதற்கு உரைவகுத்த அடியார்க்கு நல்லார் மங்கல வாழ்த்துப் பாடல் உரைக்கண், ‘கண்ணகியை முற்கூறினார்; பத்தினியை யேத்தல் உட்கோளாகலான்’, என்று கூறி வைத்தார். அரும்பதவுரைகாரரும், ‘இவளை முன் கூறிற்று, கதைக்கு நாயகியாதலின்’, என்றார். எனவே, இக்காப்பியத்திற்குப் பிறிதொரு பெயர் கூறவேண்டுமென்னில் ‘கண்ணகி கற்பு’ என்று கூறுதல் சாலும், இராமாயணம் என்பதற்கு, ‘சிறையிருந்தாளாகிய சீதையின் ஏற்றங் கூறுவது’, என்று ஒருசார் அறிஞர் பொருள் கொள்ளுதலுங் காண்க. ஆனால், அங்கே, இராமன் காப்பியத் தலைவனாதற்கு வேண்டிய இலக்கணமெல்லாம் ஒருங்குடையனா யிருத்தலின், ‘இராமாவதாரம்’ என அதற்குப் பெயர் கூறுதல் சாலும். இங்கோ கோவலன் அத்தகை யனல்லன். கண்ணகியே தலைவியாதல் வேண்டுமென்க. இனி, கண்ணகியின் உயரிய பண்புகளாக இக் காப்பியத்தால் அறியலாவனவற்றை எடுத்துக் காட்டுதும்.
கண்ணகி நல்லாள் காவிரிப்பூம்பட்டினத்திலே பெருஞ் செல்வமும் பெருவண்மை யுமுடைய மாநாய்கன் குலமகளென்பதும், திருவிலுஞ் சிறந்த அழகுடையாளென்பதும், அவள் கணவனாய் கோவலன் அரசனோடொருங்கு வைத்தெண்ணப் படும் ஒப்பற்ற குடிகளுக்குள்ளே யாவரினும் மிக்க செல்வமும் ஈகையு முடைய மாசாத்துவான் மைந்தனென்பதும் நாம் அறிந்தனவே. கோவலன் கண்ணகியை மணந்த பின்றை அவன்பால் எவ்வளவு காதலுடையனாயிருந்தா னென்பதும், அவன் அவளை நோக்கி,
‘ மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளேமலையிடைப் பிறவா மணியே யென்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ யாழிடைப் பிறவா இசையே யென்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை’.
என்றிங்ஙனம் கூறும் நலம்பாராட்டுரைகளால் வெளிப்படும். பல்லாற்றானுஞ் சிறந்தவர்களாய் உருவும் திருவும் முதலிய வற்றால் தம்முள் ஒப்புமை யுடையவராய இத்தலைமகனும் தலைமகளும் இங்ஙனம் காதற்கிழமை யுடையராய்க் கூடி இன்பந் துய்த்து இல்லற நிகழ்த்து நாளிலே அதற்கும் ஓர் இடையறவு நேர்ந்தது. உலக இன்பம் எத்துணைச் சிறந்த தொன்றாயினும் நிலைபேறுடைய தன்றே! அழகிற் சிறந்தாளும் ஆடல் பாடல் களில் வல்லாளு மாகிய மாதவி யென்னும் கணிகை வயத்தனாயினான் கோவலன். கண்ணகியோ தனித்திருப் பாளாயினாள். கோவலன் தன் அருமந்த மனைவியைப் பிரிந்து பரத்தை வயத்தனவாய் ஒழுக்கந் துறந்ததேயன்றி, தன் பெற்றோர், தன்னை வேறுபடு திருவின்வீறு பெறக் காண விழைந்தவர் அளித்த பொருட்குவி யலனைத்தையும் இழந்தான். அவ்வளவோ! கண்ணகியின் எண்ணரிய கலன்களையும் தொலைத்தான். இப்போது கண்ணகி எந்நிலையளாவள்! சாவிற் சாதல், நோவின் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கினிது மொழிதல், புணர்வுநனி வேட்டல், பிரிவுநனி யிரங்கல் என்பன அன்புடையார்க் குள்ள ஆறு குணங்கள் என்பர். காதலென்பதோ,
‘யாரினுங் காதல மென்றேனா ஊடினாள் யாரினும் யாரினு மென்று’.
என்றவாறு, காரணமின்றியும் அதனை நுட்பமாகக் கற்பித்துக் கொண்டு ஊடுமியல்பினது. கற்புடை மகளிர்க்குத் தம் கணவரைச் சிறிது பொழுது பிரிந்திருப்பதும் பெரிய துன்பமாம். அவர் நாம் நெடும்பொழுது பிரிந்திருக்கும் படி தம்மை நீத்தகன்றதேயன்றிக் கணிகை யொருத்தியை மருவியும் உறைகின்றாரென்னில், அம்மகளிரின் துன்பத்தை எங்ஙனம் உரைத்தல் சாலும்? தங்கணவர் தம்மைப் பிரிந்திருப்பது, தமக்கே யுரிய உடனுறை வின்பத்தை அவர் பிறர்க்களிப்பது, அவர் அதனை நுகர்வது, கணவருக்குண்டாகிய ஒழுக்கக்கேடு, அதனாலுண்டாகும் பழி, தமது மனையறத்திற்கு நேர்ந்த சிதைவு என்றின்னோரன்னவற்றால் அவரது உள்ளம் எரியினிழுதாகிச் சிதைந்தொழியுமன்றே? இந்நிலைமையில் கண்ணகியின் பண்பிருந்தவாறென்னை? தனது துன்பம் அனைத்தையும் பொறுத்தாள்; அது புறந்தோன்றாமலும் மறைத்தாள்; கணவன் ஒரு கணிகையுடன் நுகரும் இன்பத்திற்குத் தன் அணிகலன்களையெல்லாம் கொடுத்தாள்; அவன் அக்கணிகையை வெறுத்து வந்து, ‘பொய்யை மெய்யாகக் கொண்டொழுகும் சலதியோடாடி, என் குலத்தார் தேடிய மலை போலும் நிதியெல்லாம் இழந்து வறுமையுற்றது எனக்கு மிகுந்த நாணைத் தருகின்றது’, என்று கூறியவழி, மாதவிக்குக் கொடுக்கப் பொருளில்லாது வருந்துகின்றானெனக் கருதி, நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச், ‘சிலம்புள கொள்ளும்,’ என்றிறுத்தாள். கற்பென்பது எவ்வெக் குணங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதென்பதும், அதனியல்பின்ன தென்பதும் யாவரும் அறிதற் கரியனபோலும்! கம்பர்,
‘அன்பென்ப தொன்றின் றன்மை யமரரு மறிந்த தன்றால்?
எனக் கூறியது கற்புக்கும் ஒத்ததெனல் சாலும்.
இனி, கோவலனைப் பிரிந்திருந்த நாளில் கண்ணகியின் மனநிலை எவ்வாறிருந்ததென இனிதறியக்கிடக்கும் சான்று ஒன்றுளது. கண்ணகி யளித்த காற்சிலம்பைப் பெற்ற கோவலன், ‘இச்சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு உலந்த பொருளீட்டு தலுற்றேன்; மலர்ந்த சீர் மாட மதுரையகத்துச் சென்று,’ என்று கூறி, கண்ணகியையும் உடனழைத்துக் கொண்டு ஞாயிறு தோன்றுமுன் புறப்பட்டுக் காவிரி வடகரை வழியாக ஒரு காததூரம் வந்து கவுந்தியடிகள் என்னும் தவமாதைக் கண்டு கண்ணகியோடும் அவரை வணங்கினன். பின் அம்மூவரும் புறப்பட்டு மேற்கு நோக்கி வந்து காவிரியைக் கடந்து உறையூரை எய்திப் பின் அங்குநின்றும் காட்டுவழியாக நடந்து சென்று பாண்டியநாட்டு மதுரை மூதூரைக் கண்டனர். கவுந்தியடிகள் அங்கு வந்த மாதரி என்னும் ஆய்ச்சியர் தலைவியிடம் கண்ணகியை அடைக்கலமாக ஒப்புவிக்க, மாதரி, கோவலன் கண்ணகி இருவரையும் அழைத்துச் சென்று, ஒரு புதிய மனையில் இருக்கச் செய்து, தன் மகளாகிய ஐயை யென்பாளைக் கண்ணகிக்குத் துணையாக இருத்திச் சமைத்ததற்குரிய பல்வகைப் பொருளும் கொண்டுவந்து கொடுத்தனள். கண்ணகி தன் கைவன்மைக் கேற்றவாறு பல்வேறு கறிகளுடன் அடிசிலாக்கிக் கணவனை ஆதனத் திருத்திக் குமரி வாழையின் குருத்தினை விரித்து அமுது படைத்து, ‘அடிகள் அமுதுண்க’ என்று உபசரித்து ஊட்டி, இனிதாக உண்டிருந்த கோவலற்கு வெற்றிலைச் சுருளும் அடைக்காயும் தந்தனள். அப்பொழுது கோவலன் கண்ணகியை வருகவென அருகழைத்தணைத்து, ‘கண்ணகியின் மெல்லிய அடிகள் கற்களையுடைய சுரநெறியைக் கடத்தற்கும் வன்மை யுடையனவோ’ என்று கொடிய காட்டில் நடந்துவந்ததற்கிரங்கி, ‘எம் முதுகுரவர் என்னுற்றனர் கொல்! மாயங் கொல்லோ! வல்வினை கொல்லோ! யானுளங் கலங்கி யாவது மறியேன். வீணரோடும் பரத்தரோடும் கூடி நல்லொழுக்கத்தை இழந்த எனக்குத் தீக்கதி யன்றி நற்கதி யுண்டாமோ; அதுவேயன்றி, இருமுது குரவர்க்கு ஏவல் செய்தலுந் தப்பினேன்; இளமையிலேயே பேரறிவுடையவளாய நினக்கும் சிறுமை செய்தேன்; இவ்வொழுக்கம் வழுவென்பதும் பார்த்திலேன்; நீயோ இங்கே வருவதற்கு எழுக வென்றவளவில் எழுந்தாய்’, என்றிங்ஙனம் இரங்கிக் கூறினான். இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கண்ணகி கூறும் பொருண் மொழிகளே அவளுடைய உயரிய பண்புகளனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கச் செய்கின்றன. அவை,
“அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும் பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் முந்தை நில்லா முனிவிகந் தனனா அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி யளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயுந் துன்பமும் நொடிவது போலும்என் வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப் போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா வுள்ள வாழ்க்கையே னாதலின் ஏற்றெழுந் தனன்யான்.”
என்பன. இதற்குமுன் கண்ணகி கோவலனிடம் பேசிய வார்த்தையாக அறியக் கிடப்பன, அவன் மாதவி மேல் வெறுப்புற்று வந்து இரங்கிக் கூறிய காலையில், ‘சிலம்புள கொள்ளும்,’ எனக் கூறியதும், காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து வழிக்கொண்டு ஒரு காததூரம் வந்த அளவில், ‘மதுரை மூதூர் யாது,’ என வினாவியதுமே யாகும். கணவன் தன்னைப் பிரிந்து மாதவியை மருவியிருந்தமை குறித்தாதல், அதனால் தன் வாழ்க்கைக் குண்டான முட்டுப்பாடு முதலியன குறித்தாதல் ஒரு வார்த்தை யேனும் கூறிற்றிலள்; இப்பொழுதுதான் அவைகளைக் குறித்துப் பேசுதற்கு ஒரு செவ்வி வாய்த்தது. கோவலன் தான் நல்லொழுக்கந் துறந்ததும், தனக்குத் துன்ப மிழைத்ததும் முதலியவற்றைக் கூறிய துடன், அவனுடைய தாய் தந்தையரைப் பற்றியும் நினைக்குமாறு செய்தான். இந்த நிலைமையில், தன்னை அருகழைத்து அணைத்துக் கொண்டிருக்கிற கணவன் முன்பு கண்ணகி யாதும் உரையாடாது எங்ஙனம் வாய்வாளாமை மேற்கொண்டிருத்தல் கூடும்? கணவனுடன் சில சொற்கள் பேசுவது அவளுக்குக் கடப்பாடாயிற்று. இங்கே தன் கணவனால் குறிப்பிடப்பெற்ற தன் வாழ்க்கையைப் பற்றி யன்றி வேறு தான் பேசுதற்கு யாவை யுள? அன்றியும் தன் கணவன் கூறியவற்றிற்கு மறுமொழி யொன்றுங் கூறாதிருப்பது இயற்கையன்றே? இங்கே தன் வாழ்க்கையைப் பற்றி யாது கூறுவது? கணவன் யாதும் பிழை செய்திலன் என்று கூறி அவனைத் தேற்றுவதா? அங்ஙனமாயின், அது சிறிதும் உண்மையோடு பொருந்தியதன்று; கணவன் செய்தது பிழை யென்றும், அதனால் தனக்குண்டாய துன்பம் பெரிதென்றும் கூறுவதா? தான் செய்த தவற்றினை யுணர்ந்து இரங்கிக்கூறுகின்ற தன் ஆருயிர்க் காதலன் முன்பு, அவன் தன் பெருமையெல்லா மிழந்து சிறுமையுற்றிருக்கும் இந்நிலைமையில் தான் அங்ஙனம் கூறுவது பொருந்துவதன்றே? மற்றும், கணவன் இன்புறத் தான் எவ்வகைத் துன்பமும் உழத்தற்கு ஒருப்பட்டிருக்கும் கற்புடை மகள் எங்ஙனம் கணவனெதிரே தன் துன்பத்தைப் பெரிதாகக் கூறி அவனுக்கு மேலும் துன்பம் விளைவிப்பாள்? ஆக, இப்பொழுது கண்ணகி கூறுவன உண்மைக்கு மாறாகாமலும், சமயம் நேர்ந்துழி கணவன் தன் பிழையை உணரும்படி செய்து அவனைத் திருத்த வேண்டிய தன் கடமைக்கும் கற்பிற்கும் பொருந்தவும், கணவற்கு இன்னாமை மிகுதற் கேதுவாகாமலுமுள்ள இரண்டு செய்தி களாம். ஒன்று தன் கணவனது போற்றா வொழுக்கத்தால் தான் ஆற்ற வேண்டிய மனையறமாகிய கடப்பாடு ஆற்றப் படாமை; மற்றொன்று தன் மாமன் மாமிகளுக்கு உண்டாகிய வருத்தம்.
மனையறம் ஆற்றப்படாமை
‘அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’.
என்பதனால் உணர்த்தப்படுகின்றது. இங்கே, முற்கூறிய அறவோர்க் களித்தல் முதலியவற்றை இறுதிக்கட் கூறிய விருந்தெதிர் கோடல் என்பதனுள் அடக்கலும் சாலும். அதுவே ‘தொல்லோர் சிறப்பின் எனவும் விசேடிக்கப் பட்டுள்ளது. இல்வாழ்வார்க்கு இன்றியமையாத அறமாவது விருந்தோம்பலே என்பது ஆன்றோர் துணிபு. தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் இல்லறவியலில் இல் வாழ்க்கையின் சிறப்பும், வாழ்க்கைத் துணைநலமும், மக்கட்பேறும், இல்லறம் புரிவோர்க்குச் சிறந்த குணமாகிய அன்புடைமையும் முறையே கூறிப்போந்து, அவரியற்ற வேண்டிய அறங்களைக் கூறுவான் றொடங்கி முதற்கண் விருந்தோம்பலையே கூறுதலுங் காண்க. அவ்வதிகாரத் தொடக்கத்தே.
‘இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’.
என விருந்தோம்பலின் இன்றியமையாமை கூறப்பட்டது.
பழந்தமிழ்நூல் பலவற்றுள்ளும் இவ்வாறே இவ்வறம் சிறப்பிக்கப்படுவது காணலாகும். குறிஞ்சிப் பாட்டில், தலைவன் தலைவியை வரைந்துகொண்டு இல்லறம் நிகழ்த்துதல் கூறி, அவளைத் தெளிவித்தா னென்னுமிடத்து.
‘வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோ டுண்டலும் புரைவதென் றாங்கு அறம்புணை யாகத் தேற்றி.’
எனக் கூறியிருப்பதுங் காண்க. இவ்வறமானது ஒத்த அன்பினராய கணவனும் மனைவியும் கூடியிருந்தல்லது ஒருவராற் செயற்பாலதன்று. இவ்வுண்மை, சீதாபிராட்டி இராவணனால் இலங்கையிற் சிறைவைக்கப்பட்டிருந்த பொழுது தன் ஆருயிர் நாயகனாகிய இராமபிரானது தனிமைக்கு வருந்தினமை கூறுமுகத்தால்,
‘அருந்து மெல்லட காரிட அருந்துமென் றழுங்கும் விருந்து கண்டபோ தென்னுறு மோவென்றுவிம்மும்’
எனக் கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாடரால் அழகுறப் புலப்படுத்தப் படுகின்றது. தன் அருமந்த நாயகனைப் பிரிந்து கொடியவர்களாகிய அரக்கர்களின் ஊரில் தனியே காவலிலிருந்து கொண்டிருக்கும் தனது துன்பத்தைக் காட்டிலும் தன் நாயகனுக்குள்ளதாம் துன்பமே சீதைக்குப் பெரியதாய்த் தோன்றிற்று. உலக முழுதுக்குந் தலைவனாகிய பெருமான் காட்டிலே மிக எளிமையுற்று அங்கே கிடக்கும் கீரையை உணவாக உண்ணும்படி நேர்ந்ததே என்னும் வருத்தத்தின் மேல், அதனைத்தானும் தானிருந்து முகமன்கூறி ஊட்ட உண்ணுதற் கிலனாயினானே என்னும் வருத்தம் முதற்கண் உளதாயிற்று. எனவே, எளிய புல்லரிசிக் கூழாயினும் அடகாயினும் மாண்புடைய மனைவியால் உபசரித் தூட்டப்படுமேல் அஃது இனிதா மென்பதாயிற்று. உயர்குணனெல்லாம் ஒருங்குடைய தன் நாயகன் தானிருந்து உண்பிக்காமையானெய்தும் வருத்தத்தினும் பிறிதொன்றானெய்தும் வருத்தம் பெரிதாமென்று பின் சீதை ஏங்குகின்றாள். அவ்வருத்தந்தான் விருந்தினரைக் கண்டவிடத்து அவரை உண்பிக்கப் பெறாமை யானெய்துவதாம். இதனானே தாமியற்ற வேண்டும் அறமாகிய கடப்பாட்டினையியற்று தற்கண் நேரும் முட்டுப்பாடே சான்றோர்க்கு எவற்றினும் பெருந் துன்பமாம் என்பது பெறப்படும். நாயகியாகிய தானின்றி நாயகனாகிய இராமபிரானால் விருந்தோம்பலாகிய அறம் இயற்றப்படு வதன்றே யெனவும், அதனால் விருந்தினரைக் கண்டுழி அவன் எங்ஙனந் துயருழக்குமோ வெனவும், சீதை உளம் வெதும்பினா ளென்க. மனைவியின்றிக் கணவனால் அறம் நிகழ்த்தப்படா தென்பது இதனாற் போந்தது. இனி, கண்ணகியோ நாயகனாகிய கோவலன் தன்னைப் பிரிந்திருந்தமையால் விருந்தோம்பலாகிய இல்லறம் தன்னால் இயற்றப்படாமை குறித்து வருந்துவாளாயினாள். ‘விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’, என்பதனால் அதுவே அவட்குப் பெரியதோரிழப்பாகத் தோன்றிற் றென்பதும், தானெய்தலாகும் இன்பத்தை யிழந்தது அங்ஙனந் தோன்றிய தின்றென்பதும் பெற்றாம். இல்வாழ்க்கையிற் புகும் ஒரு நங்கை எத்துணைப் பேரறிவும், பெரு நோக்கமும் உடையளாதல் வேண்டுமென்பதை இது தெளிவுபடுத்துகின்றது.
இனி, மாமன் மாமிகளுக்குண்டாகிய வருத்தம் ஒரு வகை நிகழ்ச்சியின் மேலிட்டு,
‘நும், பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாழ் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் முந்தை நில்லா முனிவிகந் தனனா அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி யளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயுந் துன்பமும் நொடிவது போலும் என் வாயன் முறுவற்கவர் உள்ளகம் வருந்த’
என்பதனால் உணர்த்தப்படுகின்றது. “பெருமை மிக்க நும் தாயும் தந்தையும் என்னைக் கண்டு, நீர் என் முன்பு நில்லாமையால் உளதாம் வெறுப்புச் சிறிதும் புறந்தோன்றாமல் நான் கரந்தொழுகி னேனாக, அவர்கள் அது தெரிந்து தம் உள்ளத்தின் மிக்க அன்போடே அருள் கலந்த மொழியால் என் பொறுமையைப் பாராட்டுதல் செய்து, அவர்கள் வருந்தாமைப் பொருட்டு நான் என் வாயிலே தோற்றுவிக்கும் பொய்ம்முறுவலைக் கண்டு, அஃது என் நெஞ்சிலே ஒளித்த மெய் வருத்தமும் மனக் கவலையும் வெளிப்பட்டு வாய்திறந்து சொல்வதுபோலவிருந்த தென்று உளம் வருந்தாநின்றனர்,” என்பது இதன் பொருள். “இங்ஙனம் அவர் வருந்த நீர் போற்றா வொழுக்கத்தை விரும்பினீர்” என்று கண்ணகி கோவலனை நோக்கிக் கூறினாள். இங்கே கோவலனுடைய தாயும் தந்தையும் தம் புதல்வனைக் குறித்து வருந்துதலின்றிக் கண்ணகியுற்ற துன்பத்திற்கே வருந்துதலும், அவளது பொறையைப் பாராட்டுதலும் அவர்களின் உயர்குணத்தைப் புலப்படுத்துகின்றன. மாமன் மாமிகளாயுள்ளோர் தம் மருகி திறத்து எத்தகைய அன்புடையரா யிருக்க வேண்டுமென்பது இதனாற் பெறப்படும். கண்ணகியே தனக்குண்டாய வருத்தத்தைச் சிறிதும் கருதாது தன் மாமன் மாமிகளுக்குண்டாய வருத்தத்திற்கு இரங்குகின்றாள். இதைப் பார்க்கிலும் அவளது உயர் குணத்திற்கு வேறென்ன சான்று வேண்டும்? கண்ணகி கோவலனது பொருந்தா வொழுக்கத்தை இங்கெடுத்துக் காட்டுந் திறன் மிகவும் போற்றற்குரியது. அவன தொழுக்கம் தீதென்பதனை, அவனுடைய அருமைத் தாயும் தந்தையும் மனம் வருந்துதற்குக் காரணமாயுள்ள தென்பதனாற் குறித்திடுகின்றாள். இதனால் ஒருவன் தன் தாய் தந்தையர் உளம் வருந்துதற்குக் காரணமான தீய வொழுக்கத்தை மேவுதல் சிறிதும் அடாததொன்றெனும் நீதி புலப்படுத்தப்படுகின்றது. “இங்ஙனம் நீர் போற்றாவொழுக்க முடையீராயினும் யான் நுமது வார்த்தையைச் சிறிதும் மாற்றாத உள்ள வாழ்க்கையேனாகலின் யான் அதற்கு மனம் பொருந்தி எழுந்தேன்” என்று கூறினாள். இதனால் ஒரு கற்புடைய மாதின் முதற்கடன் தன் கணவன் சொல்லை மனத்தாலும் மாற்றி நடவாமை யென்பது போதருகின்றது.
‘கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை’
என்னும் அமிழ்தமொழி இங்கே சிந்திக்கற்பாலது.
இனி, கண்ணகியின் கற்புமாட்சியைத் தெரிவிக்கும் பிறிதொரு சான்றுளது. தன் கணவனாகிய கோவலனைப் பிரிந்து தனித் துறையும் கண்ணகி நல்லாள் தீக்கனாக் கண்டு அதனைத் தன் தோழியாகிய தேவந்தியென்னும் பார்ப்பனிக்கு அறிவிக்க, அவள் கண்ணகியை நோக்கி, ‘பொற்றொடீஇ! நீ கண்ட கனவு பற்றி வருந்த வேண்டா; நீ அவனால் வெறுக்கப் பட்டாயுமல்லை; நின் கணவன் காரணமாக ஒரு நோன்பு முற்பிறப்பிலே தப்பினாய்; அதனால் வந்த தீங்கும் ஒழிவதாக; காவிரி கடலோடு கலக்கும் சங்கமுகத் தயலதாகிய நெய்தலங்கானலிடத்துச் சோமகுண்டம் சூரிய குண்டம் என இரண்டு தடாகங்கள் உள்ளன; அவற்றில் நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுகின்ற மகளிர் வாழ்நாள் முழுதும் கணவருடன் பிரிப்பின்றி யிருந்து இன்புறுவர்; மறுமையிலும் போகபூமியிற் போய்ப் பிறந்து கணவருடன் பிரியாதிருந்து இன்பந் துய்ப்பர்; ஆதலின், நாமும் ஒருநாள் சென்று நீராடக் கடவோம்’ என்றாள். ஆனால் கண்ணகியோ, ‘கற்புடை மகளாய எமக்கு அஃது இயல்பன்று’, என்று கூறி விட்டனள். மகளிர் தம் கணவர்க்கு உறுதுணையா யிருந்து இல்வாழ்க்கை நடாத்துதற்கண் மேற்கொள்ளத்தக்க கடன்கள் பலவுளவேனும், கற்புடைமைக்குச் சிறப்பியல்பாவது அவர் தம் கணவரையன்றி வேறு தெய்வத்தை வணங்காதிருத்தலேயாம். தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும்,
‘தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை’
என்று கூறியருளினார்.
‘இன்னிசை யெழிலியை யிரப்பவு மியைவதோ’
‘கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ’
‘வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ’
எனப் பாலைக்கலியில் வருந்தொடர்களும் தெய்வந் தொழாமையை விளக்குவனவாகும். இவ் விலக்கணத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாகக் கண்ணகியின் வரலாறு அமைந்திருப்பது காணற்பாலது.
இனி, கோவலன் கண்ணகி எனும் இருவருடைய குணமேன்மையையும் ஒருங்கு தெரிவிக்கற்பாலதாகிய நிகழ்ச்சி யொன்றுளது. கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் காவிரியின் தென்கரையை யடைந்து ஒரு பொழிலில் இருந்தபொழுது, பரத்தை யொருத்தியும் தூர்த்தன் ஒருவனும் அவ்வழி வந்தவர் காமனையும் இரதியையும் போலும் இவர்கள் யாரென்று கேட்டறிவோமெனச் சொல்லி, கவுந்தியடிகளைப் பார்த்து, ‘மெலிந்த யாக்கையையும் நுண்ணிய தவத்தையும் உடையீர்! நும்மோடு கூடி வழிவந்த இவர்கள் யாவரோ,’ என வினவினர். அவ்விருவரும் இவ்விருவரையும் வினவுதல் கண்ட கவுந்தியடிகள், ‘இவர்கள் என் மக்களாவர்; நீர் சொன்ன காமனும் தேவியு மல்லர்; மானிட யாக்கையர்; வழிவருதலால் மிகவும் வருந்தினர்; அவருழைச் செல்லாதே அகலப்போமின்’, என்னலும், அத்தீயோர் அதுகேட்டு நகைத்து, ‘கற்றறிந்தவரே, ஒரு வயிற்றுப் பிறந்தோர் கொழுநனும் மனைவியுமாய்க் கூடி வாழுமாறு நீர் கற்ற நூல்களிற் சொல்லிக் கிடப்பதுமுண்டோ,’ என இகழ்ந்துரைத்தனர். இத் தீமொழியைக் கேட்டலும் கண்ணகி யானவள் செவிகளைப் புதைத்துக் கொண்டு தன் காதலன் முன்பு நடுங்கி நின்றனள். கவுந்தியடிகளோ, ‘இவர் என் பூங்கோதை போல்வாளை யிகழ்ந்தனர்; இவ் விகழ்ச்சியால் துடக்கு முட்களையுடைய காட்டில் நுழைந்து திரியும் முதுநரியாகக் கடவர்’ எனச் சாபமிட, தவத்தின் விளைவாகிய அச் சாபமானது அக் கணத்திற்றானே அவரைச் சென்று பொருந்திற்று. கோவலனும் கண்ணகியும் நரியின் கூக்குரலைக் கேட்டனர்; அடிகள் மனத்தால் நினைத்து இட்ட சாபமானதால் நிகழ்ந்ததை யறியார்களாகிய அவர்கள் அத்தீயோர் இகழ்ந்து கூறினமையாலும், இவரன்றிச் சபிக்க வுரியார் பிறரின்மையானும் உண்மையை அநுமித்துணர்ந்து, அவருற்ற துன்பத்திற்கு நடுங்கிச் சென்று, ‘நல்லொழுக்க நெறியினின்றும் நீங்கியோர் நீர்மையல்லாத வற்றைச் சொல்லினும், இஃது அவர் அறிவின்மையாற் சொல்லியதன்றோவென உயர்ந்தோர் தமது அறிவால் உணர வேண்டும்,’ என உட்கொண்டு, கவுந்தியடிகளைப் பார்த்து, செய்தவத்தீர், உம்முடைய திருமுன் பிழை செய்த இவர்க்கு இனி, சாபநீங்கி உய்யுங் காலத்தை உரைத்தருள்வீர்’, என வேண்டினர். அவரும் ‘பன்னிரு திங்கள் இவர் இங்ஙனம் துன்பமுற்று, பின்னர் முன்னையுருவம் பெறுவாராக,’ எனச் சாபவிடை செய்தார்.
இங்கே பரத்தையும் தூர்த்தனுங் கூறிய, ‘உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதுமுண்டோ’ என்னும் வார்த்தை கண்ணகிக்கு அளவற்ற வருத்தத்தை விளைத்ததென்பது அவள் தன் செவிகளைப் பொத்திக் கொண்டு நடுங்கினமையால் அறியப் படும். அங்ஙனமாயினும் கண்ணகியாதல், கோவலனாதல் அவர்கள் மேற் செற்றங்கொண்டாரல்லர். கவுந்தியடிகள் சினந்து சாபமிட்டார். சினமென்பது துறவறத்தினருக்கே முற்றிலும் கடியப்பட்டது; இல்வாழ்வார்க்கு அங்ஙனமன்று. இங்கே கவுந்தியடிகள் செயல் எத்தன்மையதென்னும் ஆராய்ச்சியின்று, இல்லறத்திற் குரியவராகிய கண்ணகியும் கோவலனும் நெறி கடந்தோர் கூறிய கொடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொண்டனர் ஆகலின்,
‘துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தார்வாய் இன்னாச்சொ னோற்கிற் பவர்’
என்னும் பொய்யாமொழியின்படி அவர்கள் துறவறத்தோரினும் தூய்மையுடைவராவர் எனல் சாலும். இனி அவர் பொறுத்ததே யன்றி, சாபத்தால் அன்னோர் நரியாயினமை உணர்ந்த மாத்திரத்தில் மிகவும் நடுங்கி விட்டனர். ‘பெறுதற்கரிய மக்கள் யாக்கையைப் பெற்ற இவர் ஒரு சிறு பிழையால், அந்தோ, இவ்விழி பிறப்புற்றனரே,’ என அவர் திறத்து இரங்கினர். ‘நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியாமையென்று அறியல் வேண்டும்,’ என அவர் கருதியது எவ்வளவு பெருந்தகைமையைக் காட்டுகிறது! இதனால்,
‘எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானாம் மாணா செய்யாமை தலை’
என்னுங் கொள்கையை அவர் உடையராதல் தெள்ளிது, எனினும் தவத்துறையினிற்கும் கவுந்தியடிகட்குத் தாம் அது கூறுதல் பொருந்தாமையின், தாம் மனத்தால் அங்ஙனம் சிந்தித்துக் கொண்டு, ‘உய்திக்காலம் உரையீர்’, என்பதனையே வாக்காற் கூறினரென்க. கணவற்கும் மனையாட்கும் நெஞ்சு ஒன்றாய தென்பதும் இதனாற் பெறப்பட்டது.
இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றிலிருந்து, கண்ணகியின் கற்பு மேம்பாடும், பொறுமை முதலிய குணங்களும் இனிது விளங்காநிற்கும். இனி, கோவலன் கொலையுண்ட பின் கண்ணகி பொறுக்கமுடியாத துயரமுடையளாகித் தெய்வமுற்றாள்போன் றாயினளாகலின், அப்பொழுதை நிகழ்ச்சிகள் மக்கட்டன்மையில் வைத்து ஆராய்தற்குரிய வல்ல. எனினும் அந் நிகழ்ச்சிகள்தாம் கண்ணகியை உலகத்தார் அறிந்துகொள்வதற்கும், வீரபத்தினி யென்றும் பத்தினிக் கடவுளென்றும் கொண்டாடுதற்கும் காரணமா யிருந்தன. அவற்றுள் அவட்குக் கணவன்பாலிருந்த அன்பின் மிகுதியையும், அரசன் முன்னரும் அஞ்சாது வழக்குரைக்கும் அவளது வீரத்தையும் புலப்படுத்துவன சில காட்டுதும். கண்ணகி யிருந்த ஆயர் சேரியில் பலவகையான உற்பாதங்களுண்டாக, மாதரி முதலியோரால் உற்பாத சாந்தியாகத் திருமாலைக் குறித்துக் குரவைக் கூத்து ஆடப்பட்டது. சிலம்பு விற்கச் சென்ற கோவலன் பொற்கொல்லன் சூழ்ச்சியால் வாளால் வெட்டுண்டிறந் தான். கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேள்வியுற்றா ளொருத்தி குரவையாடுமிடத்திற்கு வந்து நிகழ்ந்ததனை வாக்காற் சொல்லலாற்றாதவளாய் மெய்ப்பாட்டாற் புலப்படுத்தி நின்றாள். அப்பொழுது கண்ணகி,
‘நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும் அன்பனைக் காணாது அலவுமென் னெஞ்சன்றே அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சாயின் மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ’
என்றிவ்வாறாகக் கூறிக் கலக்கமுற்று வினவலானாள். அப்பொழுது அவள், ‘அரசனது அந்தப்புரத்திற் சிலம்பு திருடியவன் இவனேயாமென்று குரைகழல் மாக்கள் கொலை குறித்தனர்,’ என்றாள். என்னலும் கண்ணகி,
‘பொங்கி யெழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கள் முகிலோடும் சேணிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை எங்கணா வென்னா இனைந்தேங்கி மாழ்குவாள்,’
ஆகி, ‘தம்மோடு இன்புற்ற தம் கணவர் எரியின்கண் மூழ்க அவரோடு அதனிடை மூழ்காது துன்பமுறுந் தன்மையாகிய கைம்மை நோன்புகளை நோற்று இடர்ப்படும் உயவற் பெண்டிரைப் போல அன்பனை யிழந்தேனாகிய யான் இருந்தழுவாள் ஒருத்தியோ,’ என என்றிங்ஙனம் புலம்பினாள். இவையெல்லாம் கணவன்பால் அவட்கிருந்த அன்பு மிகுதியையும், கற்பின் திறத்தையும் காட்டு வனவாம். அவன் அரசன்முன் சென்று வழக்குரைக்கும் பொழுது,
‘தேரா மன்னா செப்புவ துடையேன்.’
என்றும்,
‘நற்றிறம் படராக் கொற்கை வேந்தே’,
என்றும் விளித்து, தன் நாட்டு அரசனாகிய சோழனது நீதியைப் புலப்படுத்தித் தன் வரலாறு கூறிக் கோவலன் குற்றமுடைய னல்லனென உறுதிப்படுத்தியதும்,
‘பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோ டொழிப்பேன் மதுரையும் என் பட்டிமையுங் காண்குறுவாய்’.
என வஞ்சினங் கூறி, மதுரைமாநகரை எரியூட்டியதும் அவளது அஞ்சாமையையும், மறக் கற்பின் பான்மையையும் புலப்படுத்துவன. செங்கதிர்ச் செல்வன் அவளது வினாவிற்கு அசரீரியாக உடன் விடை கூறியதும், அங்கியங்கடவுள் அந்தணவுருத் தாங்கி வந்து, ‘யார் யாரை யழிக்க வேண்டும்’, என அவளது பணியைக் கேட்டு அவள் பணித்தபடியே புரிந்ததும், மதுரைமா தெய்வம் வெளிப் பட்டு அவட்குப் பழம்பிறப்பின் வரலாறு கூறியதும் தெய்வங் களெல்லாம் கற்புடை மகளிரின் உரைவழி நிற்குமென்னும் உண்மையைப் புலப்படுத்துகின்றன. அவள் வெட்டுண்டு கிடந்த கோவலனைத் தழுவி உயிர்பெற்றெழச் செய்ததும், பின் பதினான்காம் நாளில் தெய்வ வடிவுடன் வந்த கோவலனோடு விமானமேறிச் சென்றதும், வெற்றி வேற்செழியன், கொங்கிளங்கோசர் முதலாயினார் விழாச் செய்து வழிபட அவர்கள் நாட்டில் மழைவளம் பெருகச் செய்தருளியதும், இமயத்தினின்றும் கற்கொணர்ந்து தன்னைப் பிரதிட்டித்து வழிபட்ட சேரன் செங்குட்டுவனுக்குத் தெய்வ வடிவத்தோடு வெளிப்பட்டுக் காட்சி தந்து வாழ்த்தியதும், ஆரியமன்னரும் மாளவ வேந்தரும் இலங்கையரசனாகிய கயவாகுவும் அப்பொழுது அங்கு வந்து, ‘இச்செங்குட்டுவனைப் போல எங்கள் நாட்டில் யாங்கள் புரியும் பூசையில் நீ எழுந்தருளி அருள் செய்ய வேண்டும்,’ என்று குறையிரப்ப, அவ்வாறே வரமளித்ததும், தான் தேவந்திமேற்றோன்றி அங்கு வந்த இளங்கோ வடிகட்கு அவரது வரலாறு கூறி உவப்பித்ததும் அவள் வழிபடுவோர்க்கு வேண்டிய வரந்தரும் தெய்வமாயினமையைத் தெரிவிப்பனவாம்.
இனி, கற்புடை மகட்குக் கணவனே தெய்வமாயினும், அவன் தொழுகுலமாகிய தெய்வமும் அவனின் வேறல்லளாகிய அவட்கும் தெய்வமாத லமையும். அவ்வாற்றால் அவளுக்கோர் சமயக் கோட்பாடு முண்டாம். கோவலனும் கண்ணகியும் புகாரினின்று புறப்பட்டு வரும்பொழுது அசோகின் நிழலில் சாவகரால் இடப்பட்ட சிலாதலத்தைத் தொழுது வலங்கொண்டு வந்தன ரென்றும், கவுந்தியடிகள் அவர்களை, ‘பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்’, எனக் கூறினரென்றும், ஒரு பொழிலில் தருமஞ்சாற்றும் சாரணர் தோன்ற, அவர்கள் ‘பண்டைத் தொல் வினை பாறுக’ என்று கவுந்தியடிகளொடு காலுற வீழ்ந்து வணங்கினரென்றும் இளங்கோவடிகள் கூறிச் செல்லுதலால் கண்ணகியின் சமயம் ஆருகத மென்பது அவர் கருத்தாதல் பெறப்படும். சேரன் செங்குட்டுவனோ சிவபெருமான் வரத்தாற் றோன்றியவ னென்றும், ‘தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி’ வைக்கும் சிவபக்தியுடையவனென்றும் அடிகளே கூறுகின்றார். அம்மன்னவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டதும், அங்ஙனமே ஏனை மன்னரெல்லாரும் வழிபட்டதும் நோக்குழி, பத்தினிப் பெண்டிர் முதலாயினர் யாவரானும் போற்றற்குரிய ரென்னும் உண்மை வெளியாகின்றது.
‘கற்றவர்க்கு நலனிறைந்த கன்னியர்க்கும் வண்மைகை உற்றவர்க்கும் வீரரென் றுயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக் கொற்றவர்க்கு முண்மையான கோதில்ஞான சரிதராம் நற்றவர்க்கு மொன்றுசாதி நன்மைதீமை யில்லையால்.’
என்னும் பாரதச் செய்யுள் இங்கே நினைக்கத்தக்கது. இனி, கவுந்தியடிகள் கண்ணகியை மாதரிபால் அடைக்கலமாக ஒப்புவிக்கும் பொழுது கூறிய கற்புடை மகளிரின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் இக்கட்டுரையை முடிப்போம்.
‘இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால் வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது நீணில வேந்தர் கொற்றஞ் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு’.
முற்றும்.
★ ★ ★



