

மந்திரங்கள் என்றால் என்ன?
அ. ச. ஞானசம்பந்தன்
இன்றைய உலகில் எந்தப் பகுதியில் வசிப்பவர் களாக இருப்பினும் நம் அனைவருக்கும் பொதுவாக ஒன்று இருப்பதை அறிய முடியும். வறியவர், செல்வர், இளையவர், முதியவர், செல்வம் மிகுந்த நாட்டில் வசிப்பவர், வறுமை மிகுந்த நாட்டில் வசிப்பவர், நாகரிகம் மிகுந்த நாட்டில் வசிப்பவர், அல்லாத பகுதிகளில் வசிப்பவர், கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவரையும் பிடித்து, இன்றைய உலகில் ஆட் கொண்டிருக்கும் ஒன்றுதான் மன இறுக்கம் (Mental Tension) என்பதாகும். பெரியவர்கள் வாழ்க்கையைப் பிடித்து ஆட்டும் இந்த இறுக்கம் துரதிருஷ்டவசமாக இற்றை நாள் குழந்தைகளையும் பற்றிக் கொண்டுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏழு வயது நிறைந்த பாலகனொருவன் கைத் துப்பாக்கி எடுத்து தன் தந்தையைப் பலமுறை சுட்டுக் கொன்று விடுகிறான். அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அந்த மன இறுக்கம் நாகரிகம் வளர வளர தானும் வளர்ந்து கொண்டு வருகிறது.
புத்தர், மகாவீரர், திருவள்ளுவர், நம்மாழ்வார், திருநாவுக்கரசர், தாயுமானார், இராமகிருஷ்ணர், இராமலிங்கர் போன்ற மாமனிதர்கள் தோன்றி மக்களை நல்வழிப் படுத்த முயன்ற பெருநாடுதான் நம் இந்திய நாடு. இவர்கள் செய்த உபதேசங்களும் அவற்றை எழுத்து வடிவில் தாங்கிய நூல்களும் நம் நாட்டில் நிறைந்து உள்ளன. கல்வி வேண்டும்; கல்லாதவர் கண்ணிரண்டும் இல்லாதவர் ஆவார் என்ற கருத்துகள் வள்ளுவர் காலம் தொடங்கி இன்று அறிவொளி இயக்கமாகப் பரிமளித்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட மக்கள் தொகையில் அதிக சதவிகிதத்தினர் இன்று கல்வி அறிவுடன் விளங்குகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு அளவே இல்லை. சந்திர மண்டலத்தில் சென்று இறங்கவும், அணுவைப் பிளந்து அதனுள் அடங்கியிருக்கும் பேராற்றலை வெளிக் கொணரவும் இன்றைய மனிதன் வளர்ச்சியடைந்து இவற்றைச் செய்யும் ஆற்றலையும் பெற்று விட்டான். இவ்வளர்ச்சிகள் அனைத்தும் இவ்வெற்றிகள் அனைத்தும் கல்வியின் துணை கொண்டு புறத்தே நிகழும் செயல்கள் ஆகும்.
இந்த நிலையில் சற்று நின்று நிதானித்துப் பார்க்க சில மணித் துளிகளை எடுத்துக் கொள்வது பொருத்தமுடையதாகும். சிறந்த கல்வியைப் பெற்று சந்திர மண்டலத்தில் இறங்கும் மனிதன், “தான் யார்? இந்த உலகம் எத்தகையது? பஞ்ச பூதங்களின் தன்மை என்ன? தனக்கும் இந்த உலகிற்கும் உள்ள தொடர்பு யாது? தன்னைப் போன்ற சக மனிதர்களிடமும் பிற உயிர்களிடமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எத்தகைய உறவு வைத்துக் கொள்ள வேண்டும்” என்பவை பற்றி ஒரு கண் நேரம் சிந்தித்தானா என்ற வினாவை எழுப்பினால் விடை கிடைப்பது கடினம். இது ஏன்? இவன் கற்ற கல்வி இவ்வினாக்களுக்கு விடை காண உதவாமல் போனது ஏன்?
வள்ளுவன் குறளை வாரி இறைத்து விட்டோம். பரிதியார், பரிமேலழகரில் தொடங்கி குறளுக்கு உரை வகுத்து விட்டோம். ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளுக்கு, 1800 பக்கங்களில் உரை எழுதி வெளியிட்டு விட்டோம். புத்த பகவானுடைய ‘தம்மபதத்தை’ உலகெங்கிலும் பரப்பி விட்டோம். இது ஒரு புறம் நிற்க, திருமுறை பாராயணம் செய்து மணிக் கணக்கில் பூசனை புரிபவர்கள் எத்துணை பேர். ஆறாயிரப்படி, பன்னீராயிரப்படியில் தொடங்கி முப்பத்தாறாயிரப்படி வரை நாலாயிரப் பிரபந்தத்திற்கு விளக்கவுரை கண்டு விட்டோம். அறிவின் வழி உதவி பெற்று குறள், தம்மபதம் என்பவற்றைப் பயின்று பரப்புபவர்களும் பக்திநெறியில் நின்று பூசனை புரிபவர்களும் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்கட் சமுதாய முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்கள். தமிழகத்திலுள்ள மக்களை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட இவ் அறிவுவாதிகளும் பக்தர்களும் சமுதாயத்திற்கு என்ன பயனை விளைவித்தார்கள்? விடை கூறுவது கடினம்.
இந்த வினாக்களை எல்லாம் நாம் இன்றுதான் கேட்கின்றோம் என்றில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவப் பேராசான் “கற்றதனால் ஆய பயன் என்?” (திருக்குறள் 2) என்றும் ‘ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்காப் பேதை’ (திருக்குறள் 834) என்றும் கூறி நொந்து போனார். ஆறாம் நூற்றாண்டில் நாவுக்கரசர் பெருமான் வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்தும் என்? நீதிநூல் பல நித்தம் பயிற்றில் என்?’ (5-999) என்று வருந்தினார். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மணிவாசகப் பெருந்தகை ‘கற்றாரை யான் வேண்டேன். கற்பனவும் இனி அமையும்’ (தி. 556) என்று கூறுகிறார். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்லுவேன்’ (சித்.100) என்று நொந்து கொள்ளுகிறார். நம் காலத்தில் கவிச்சக்கரவர்த்தி பாரதி ‘பல கற்றும் பல கேட்டும் முத்து மாரியம்மா பயனொன்றும் இல்லையடி முத்து மாரியம்மா என்பதோடு நிறுத்தாமல் ‘தோல் வெளுக்க சாம்பல் உண்டு முத்து மாரியம்மா, துணி வெளுக்க மண்ணுண்டு முத்துமாரியம்மா, மணி வெளுக்கச் சாணையுண்டு முத்துமாரியம்மா, மனம் வெளுக்க வழியில்லையே முத்துமாரியம்மா’ என்று நொந்து கொள்கிறார். இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன? புற வளர்ச்சி பெற்றுள்ள மனித சமுதாயம் அகவளர்ச்சி பெறவில்லை. நாம் பெறும் ஏட்டுக்கல்வி மனத்தையோ, பண்பாட்டையோ வளர்க்கவில்லை என்பதையே அறிவுறுத்துகிறது. இவற்றையெல்லாம் சிந்தித்த நம் முன்னோர் பலர் இதற்கொரு வழியைக் காண முனைந்தனர்.
பிளேட்டோ, சாக்ரடீஸ் போன்ற. சமுதாய் நல்வழி காட்டிகள். தனிமனிதனைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் சமுதாயத்தைத் திருத்துவதையே நோக்கமாகக் கொண்டனர்.
ஆனால் அவர்கள் வாழ்ந்த கிரேக்க சமுதாயம் என்ன நிலை அடைந்தது என்பதை வரலாறு காட்டுகிறது. இதன் மறுதலையாக தனி மனிதனை எடுத்துக்கொண்டு அவனைத் திருத்தினால் சமுதாயம் தானே திருந்தும் என்று அன்றே கண்டு அதற்குரிய வழி கோலினார் வள்ளுவப் பெருந்தகை. அறவாழ்க்கை என்ற பெயரில் பலவற்றைக் கூறும் பிறரைப் போலன்றி ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்’ என்று கூறுவதோடு அமையாது ஆகுல நீர பிற’ (தி.34) என்றும் ஆணித்தரமாகக் கூறிச் சென்றார். இன்று நம்மைப் பிடித்து ஆட்டும் மன இறுக்கம் மனத்துக்கண் தோன்றிய மாசு காரணமாகத் தோன்றியதாகும். இதனைப் போக்க வழி யாது? அதற்கும் வழி கண்டனர் நம் முன்னோர். போட்டியும் வேகமும் நிறைந்த வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நாம் நம் முன்னோர் கூறிய இவ்வழியைச் சிந்திக்க மறந்து விட்டோம். ஒருசிலர் சிந்திக்க மறுத்தும் விட்டனர். அந்த வழி யாது என்பதைக் காண முற்படலாம்.
நம் முன்னோர் பலர் மெய்ஞ்ஞானிகளாகத் திகழ்ந்ததோடு அல்லாமல் விஞ்ஞானிகளாகவும் இருந்தனர் என்பதை ஆழ்ந்து நோக்குவோர் எளிதில் அறிய முடியும். ஒலியின் (Sound) பெருமையை, சிறப்பை, ஆற்றலை இன்றைய விஞ்ஞான உலகம் காண்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னரே நம் முன்னோர் அறிந்திருந்தனர். ஒலி (Sound) அலைகளாகச் சென்று பரவுகிறது. ஒவ்வொரு எழுத்திற்கும் உச்சரிக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அதிர்வு (Frequency) உள்ளது. இந்த அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழும் ஒலியை (Hertz) என்ற அளவு கொண்டு கணக்கிடுவர். ஐயாயிரம் ஹெர்ட்ஸ்க்கு குறைந்த ஒலிகளையும், இருபத்தி யிரண்டாயிர ஹெர்ட்ஸ்க்கு மேற்பட்ட ஒலிகளையும் நம் செவிகள் கேட்கமுடியாது. ஆனால் அக்குறைந்த ஒலியை எலிகள் முதலியன கேட்கும். அம் மிகுந்த ஒலியை வேட்டை நாய்கள் கேட்கும். நம் செவி முதலிய பொறிகளின் சிறப்பு இவ்வளவுதான்,ஆனால் ஒலி மாபெரும் வலிமையுடையது என்பதை இற்றை நாள் விஞ்ஞானம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது. மிகு அதிர்வு ஒலி (Ultrosound) என்னென்ன புதுமைகளைச் செய்கிறது என்பதை இன்று நாம் காண முடிகின்றது. மசகு எண்ணெயில் (Lubricant) நனைத்து நன்றாக ஊற வைத்த ஒரு துணியை வேறு வகையில் சலவை செய்ய முடியாது. ஆனால் நீர் நிறைந்த கண்ணாடித் தொட்டிக்குள் அதனைத் தொங்கவிட்டு வெளியே மிகு அதிர்வு ஒலியை உண்டாக்கி அத்தொட்டியின் பக்கம் செலுத்தினால் துணியிலுள்ள அழுக்கு நீக்கப்பட்டு துணி தூய்மை அடைகிறது. துணியைப் பற்றிய நீக்க முடியாத எண்ணெய்ப் பசையுடன் கூடிய அழுக்கையே புறத்தில் உண்டாக்குகிற மிகு அதிர்வு ஒலி போக்குகிறது என்றால், மனித மனத்திலுள்ள அழுக்கை மனமாசை ஏன் அந்த ஒலி போக்க முடியாது? ஒலியின் சிறப்பை அறிந்த நம் முன்னோர் மனமாசைப் போக்க இவ்வொலிகளைப் பயன் படுத்தினர். ஒலி, கேட்கும் ஒலி, கேளா ஒலி என இரு வகைப்படும். கேட்கும் ஒலியும் கேளா ஒலியும் அதிர்வுகளின் அடிப்படையில் தோன்றுபவைதாம். அதிர்வுகளின் எண்களைக் கொண்டு கேட்கும், கேளா என்று பிரிக்கிறோம். இவ்விரண்டைத்தான் இவ் விஞ்ஞானம் கூறுகிறது. விஞ்ஞானத்தோடு மெய்ஞ் ஞானத்தையும் அறிந்த நம் முன்னோர் கேளா ஒலிக்கும் அப்பாற்பட்டதென்று ஓர் ஒலியை அறிந்து அதற்கு ஆதிநாதம் (Pri-Mordial Sound) எனப் பெயரிட்டனர்.
ஒலியுண்டாக்காத பொருளே உலகில் இல்லை. எல்லா அசைவுகளும் ஒலி உண்டாக்கும். அணு தொடங்கி அண்டம் ஈறாக உள்ள அனைத்துப் பொருள்களும் சலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த சலிப்பில் ஒலி தோன்றத்தானே செய்யும். எல்லா வற்றுக்கும் மூலமாக உள்ளது அணு என்று சொல்லுகிறது விஞ்ஞானம். அந்த அணு, பரமாணு (Proton) என்ற கருவையும் அதனைச் சுற்றி ஓயாது வட்டமிட்டுக் கொண்டிருக்கும் மின்னணுக்களையும் (Electron) கொண்டதாகும். இந்த மின் அணு பரமாணுவைச் சுற்றி ஓயாது ஓடிக் கொண்டிருந்தால் அதனால் ஒலி உண்டாகத் தானே செய்யும். இவ்வோட்டத்தில் ஒலி உண்டாகிறதா, உண்டானால் அது எப்படி வெளிப்படுகிறது என்பது பற்றி இன்றுவரை விஞ்ஞானிகள் கவலைப்படவில்லை; அது பற்றி ஆராயவும் இல்லை. ஒரு வேளை இந்த ஒலியைத் தான் ஆதிநாதம் என்று நம் முன்னோர்கள் கூறினார்களோ தெரியவில்லை.
எந்த ஒலியும் அதிர்வுகள் வடிவில் வெளிப் படுகிறது என்று கண்டோம். எழுத்துக்களுக்குள்ள இந்த ஒலி ஆற்றலைக் கண்ட நம் முன்னோர் இவற்றை ஒழுங்குபடுத்தி பல அதிர்வெண்களை உடைய எழுத்துகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் பல புதிய அதிர்வெண்களை உடைய சொற்களைத் தோற்று வித்தனர். இங்ஙனம் ஒன்று சேர்க்கப்பட்ட ஒலிகள் மனமாசைக் கழுவும் ஆற்றலுடையவை என்றும் கண்டனர். அந்த ஒலிக் கூட்டங்களுக்கு மந்திரங்கள் என்று பெயரிட்டனர்.
மந்திர ஒலிகள் நாம் நம் காதால் கேட்கக் கூடிய அதிர்வெண்களைக் கொண்ட ஒலிக் கூட்டமே யாகும். என்றாலும் சில எழுத்துக்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் அதிர்வெண்களின் அளவுகளைக் கணக்கிட்டு அவ்வெழுத்துகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் மந்திரங்கள் புதிய வடிவு பெறுகின்றன; மாபெரும் ஆற்றலைப் பெறுகின்றன.
நாம் காதால் கேட்கும் சாதாரண அதிர் வெண்களை உடைய ஒலிக் கூட்டங்களுக்கு (மந்திரங்களுக்கு) எப்படி இவ்வளவு பெரிய ஆற்றல் வரும் என்ற சந்தேகமும் பலர் மனத்தில் தோன்றுவது யல்புதான். ஓர் உதாரணத்தால் விளக்கலாம். சாதாரண மின்சார பல்பிலிருந்து வெளிப்படும் ஒளி (Light) நாம் பொருள்களைக் காண்பதற்கு உதவுகிறது. அதற்கு மேல் அந்த ஒளிக்கு வேறு ஆற்றல் இல்லை. ஏன் என்றால், அந்த ஒளி ஒரு முகப்படுத்தப்படாமல் சிதறிச் செல்கின்ற (Dissipation) காரணத்தால் இந்நிலை ஏற்படுகிறது. அதே ஒளியைச் சிதறிச் செல்லாமல் ஒருமுகப்படுத்தி ஒரு குறிப்பிட்ட இரசாயனப் பொருள் அல்லது சிகப்புக்கல், வைரம் போன்றவற்றில் செலுத்தி அந்தச் சிதறலை முழுவதுமாகத் தடுத்து ஒரே முகமாக வெளியேற்றினால் அப்படி வெளியேற்றப்பட்ட ஒளி சந்திரமண்டலம் வரை எந்தவித தங்கு தடையும் இல்லாமல் செல்கிறது என்பதையும் அதே ஒளிக் கற்றை கனத்த இரும்புப் பாளங்களில் துளை போட வல்லது என்பதையும் இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துக் காட்டியுள்ளது. இப்பணிகளைச் செய்யும் ஒளிக்கற்றையை லேசர் (Laser) என்று விஞ்ஞானம் கூறுகிறது. விஞ்ஞானம் ஒளியைப் பயன்படுத்திச் செய்யும் இதே செயலை நம் முன்னோராகிய விஞ்ஞானம் அறிந்த மெய்ஞ்ஞானிகள் ஒலியைப் பயன்படுத்திச் செய்யுமாறு பணித்துள்ளனர்.
ஓம்,கம், செளம், ஹ்ரீம், க்ரீம், க்லீம் என்பன போன்ற மந்திரங்களுக்கு எவ்விதப் பொருளும் இல்லை. இவற்றை மூல எழுத்துகள் (பீஜாட்சரங்கள்) என்று நம் முன்னோர் கூறினர். வேறு பொருள் இல்லா விட்டாலும் இம் மந்திரங்கள் ஒருமுகப்படுத்தப் பெற்ற அதிர்வெண்களைக் கொண்ட எழுத்துக்களின் சேர்க்கை ஆதலால் மிகு அதிர்வு ஒலியின் (Ultrasonic) பயனை விளைவிக்கின்றன.
தனி மனிதன் மனம் அடங்கக் கற்க வேண்டும். அதற்கு ஒரே வழி இத்தகைய மந்திரங்களைப் பயன்படுத்துவதே ஆகும். இந்த மந்திரங்கள் மோட்சம் அடைய வழி வகுக்கின்றன என்பதை நம்பாதவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட இதனைப் பயன்படுத்தலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர்களும் கூட மன இறுக்கம் இல்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே இவற்றைப் பயன்படுத்துவது இன்றைய சமுதாயத்தில் அனைவருக்கும் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.
அவசர வாழ்க்கை உடைய இந்நாட்களில் கூட காலை, மாலை இரு வேளைகளிலும் குறைந்தது பத்து நிமிடங்களாவது ஓரிடத்தில் அமர்ந்து மேலே காட்டிய மந்திரங்களோடு ஓம் நமச்சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் சரவணபவ, புத்தம் சரணம் கச்சாமி, தன்மம் சரணம் கச்சாமி என்பன போன்ற பல மந்திரங்களில் தங்கள் மனத்தில் எது அமைதியை உண்டாக்குகிறதோ அம் மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்கினால், வெகு விரைவில் மன இறுக்கம் தளர்வதைக் காணமுடியும். மன இறுக்கம் தளர்ந்தால் இரத்த அழுத்தம் குறையும், சர்க்கரை குறையும், இருதயத் துடிப்பில் சமநிலை ஏற்படும்.
மனிதர்களுள் பல மனநிலை உடையவர்கள், பல்வேறு வகைப்பட்ட வளர்ச்சி நிலை பெற்றவர்கள் உண்டு. எனவே ஒருவருக்குப் பொருத்தமான மந்திரம் மற்றவர்க்குப் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஆகவே தான், நூற்றுக்கணக்கான மந்திரங்களை நம் முன்னோர் நிறுவியுள்ளனர். அவரவர்க்குப் பொருத்த மானதை அவரவர் தேர்ந்து கொள்ளலாம்.
எப்படித் தேர்வு செய்வது என்பது அடுத்து நிற்கும் வினா. இதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மந்திரத்தையும் மூன்று நாட்கள் வீதம் ஜெபம் செய்து பார்க்கலாம். எந்த ஒன்றைச் செய்யும் போது ஒரு அசாதாரணமான அமைதி ஏற்படுகிறதோ அந்த மந்திரமே (அதிர்வெண்களே (Frequency) அவர் களுக்குப் பொருத்தமானது ஆகும்.
இம் மந்திரங்கள் பற்றிய விரிவான கட்டுரையே மந்திரங்கள் என்றால் என்ன? என்ற தலைப்பில் இந்நூலின் முதலில் இடம் பெற்றுள்ளது. ஏதோவொரு தூண்டுதலினால் வாழ்க்கையின் அந்திம காலத்தில் இது பற்றி எழுத வேண்டும் என்ற உள்ளுணர்வு தூண்ட அதன் பயனாக இக்கட்டுரைகள் எழுதப்பெற்று உள்ளன. மந்திரங்கள் என்றால் என்ன? என்பதை ஓரளவு உணர்ந்த பின்பு இம்மந்திரங்களை உண்டாக்கும் சித்தர்கள் பற்றிய கட்டுரை அடுத்துள்ளது.
அடுத்து அமையும் இரு கட்டுரைகளும் கீழை நாடுகள் எத்துனை அளவிற்கு மேலை நாடுகளை விட ஆன்மீகத்தில் மேல் நிலை எய்தி உள்ளன என்று விளக்குவன. விநாயகர் குறித்த கட்டுரை அடுத்து அமைவது.
ஈற்றில் அமைந்தது ஈறிலாச் சிறப்பின் வள்ளலார் குறித்த கட்டுரை – மகாமந்திரம். மந்திரத்தில் தொடங்கி மந்திரத்தில் முடியும் இக் கட்டுரைத் தொகுப்பு நூலைத் தமிழர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை உடையேன்.
அ.ச. ஞானசம்பந்தன்



