

பழந்தமிழர் அரசியல்
சாமி. சிதம்பரனார்
பழந்தமிழர் அரசியல் என்னும் இந்நூல் பல கட்டுரைகளின் தொகுப்பு. கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப் பொழில் என்னும் மாதப் பத்திரிகையில் நான் எழுதிவந்த கட்டுரைகளின் ஒரு பகுதி.
பண்டைத் தமிழகத்தில் மன்னர் ஆட்சிதான் நிலைத் திருந்தது. அவர்கள் ஆளும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் சர்வாதிகாரிகளாகத்தான் விளங்கினார்கள்.
பண்டைத் தமிழ் மன்னர்கள் சர்வாதிகாரிகளாக விளங்கினாலும், நாட்டு மக்களின் நன்மைக்காகவே உழைத்து வந்தனர். நாட்டு மக்களின் நன்மைக்காக வாழ்ந்த மன்னர்களே மக்களின் மதிப்பைப் பெற்று வாழ்ந்தனர்.
மன்னர்கள் சர்வாதிகாரம் பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் அநீதி செய்யும்போது மக்கள் அதைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பிற நாட்டு அரசர்களின் துணை கொண்டாவது கொடுங்கோல் மன்னர்களின் ஆட்சியைத் தொலைக்கப் பின்வாங்க மாட்டார்கள்.
பண்டைக் காலத்துத் தமிழ்ப் புலவர்கள், மன்னர்களுக்கு அவ்வப்போது அறிவுரை கூறி வந்தனர்; அவர்கள் அக்கிரமம் செய்யாமல் தடுத்து வந்தனர். அவர்கள் பொது மக்களின் நல்வாழ்வை முன்னிட்டு, அவ்வப்போது அரசியலில் தலையிடப் பின்வாங்கவில்லை.
பண்டைத் தமிழரசர்களிலே தந்நலம் காரணமாக மக்களுக்குத் தீங்கிழைத்தவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் மக்களால் வெறுக்கப்பட்டார்கள்; புலவர்களால் புகழப்படாமல் ஒதுக்கப்பட்டார்கள்; நல்லவர்களால் பழிக்கப்பட்டார்கள்.
மக்களின் நலத்திற்காகவே வாழ்ந்த மன்னர்கள் தெய்வம் போல் போற்றப்பட்டார்கள்; அவர்கள் தெய்வங்களின் அவதாரமாகவே கருதப்பட்டார்கள்.
பண்டை மன்னர்கள், புலவர்களையும், கலைஞர்களையும் போற்றிப் பாதுகாத்து வந்தனர். கலைகளும், கவிதைகளும், காவியங்களும் வளரத் துணை செய்தனர். கலைக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்த மன்னர்களும் உண்டு.
மனித சமூகத்திற்குத் துரோகம் புரியும் குற்றவாளிகளுக்குப் பண்டைக் காலத்தில் கடும் தண்டனை கொடுக்கப்பட்டது. குற்றங்கள் ஒழிய- குற்றவாளிகள் தோன்றாமலிருக்க- கடுந் தண்டனையே சிறந்த வழி என்பது அவர்கள் நம்பிக்கை.
ஆதியிலே சர்வாதிகாரிகளாக- தெய்வப் பிறப்பினராகக் கருதப்பட்ட மன்னர்கள் நாளடைவில் தங்கள் சர்வாதிகாரத்தை யிழந்தனர்; புலவர்களின் அறிவுரைகளை அமைச்சர்களின் உதவியை நம்பி- துணைக்கொண்டு ஆட்சி புரிந்தனர்.
இதன் பின்னர் ஐம்பெருங் குழு என்னும் மந்திரிசபை, எண்பேராயம் என்னும் ஜனப் பிரதிநிதி சபை இவைகளின் துணை கொண்டு அரசாண்டு வந்தனர். மன்னர்கள் பின்பற்றிய இந்த முறையே வளர்ச்சியடைந்து இன்றைய ஜனநாயக அரசு- குடிமக்கள் ஆட்சி- தோன்றுவதற்கு வழிகாட்டியது.
பண்டைக் காலத் தமிழ் மன்னர்களிலே பலர் தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள்; அறநெறிக்கு மாறாக நடந்தால் தெய்வ தண்டனைக்கு ஆளாவோம் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. இக்காரணத்தால் அவர்கள் நீதி தவறி நடக்க அஞ்சினர். தமது உறவினராயினும் நீதி தவறி நடந்தால், அவர்களுக்குக் கடுந் தண்டனை விதித்தனர்; அறத்தை நிலை நிறுத்தினர்.
அக்கால மன்னர்கள், தாம் செய்தது தவறு, அறத்திற்கு விரோதமானது என்று அறிந்தால் தமக்குத் தாமே கடுந் தண்டனை விதித்துக் கொண்டனர்.
தமிழ் மன்னர்களின் இச்சிறந்த செயல்களைக் காணும் போது, நாம் ஒரு உண்மையை உணராமலிருக்க முடியாது. எந்த ஆட்சியானாலும் சரி- குடியாட்சி ஆனாலும் சரி, முடியாட்சி ஆனாலும் சரி- மக்களுக்கு நீதி வழங்கும் ஆட்சி நிலைத்து நிற்கும்; பொதுமக்களால் போற்றப்படும், வாழ்த்தப்படும் என்பதுதான் அவ்வுண்மை.
போரின் கொடுமையைப் பண்டைத் தமிழ் மன்னர்கள் நன்றாக- தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தனர். ஆதலால் அவர்கள் காரணமின்றிப் போர் புரிய முற்படுவதில்லை. அநீதியை விரட்டவே- அக்கிரமத்தை ஒழிக்கவே- குடிமக்களைப் பாதுகாக்கவே- அறப்போர் புரிந்து வந்தனர்.
இவை போன்ற பல உண்மைகள் இந்நூலில் தக்க உதாரணங்களுடன் – மேற்கோள்களுடன்- எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து திரட்டப் பட்டவைகளே இதில் கூறப்படும் உண்மைகள். பண்டைத் தமிழர்களின் அரசியல் நேர்மையை அறிய இப்புத்தகம் துணை செய்யும் என்பது நிச்சயம்.
சாமி. சிதம்பரன்



