பழந்தமிழர் அரசியல்
சாமி. சிதம்பரனார்

மன்னரும் மக்களும்

நன்றி உணர்ச்சி

நன்றி மறக்காத தன்மை ஒரு சிறந்த பண்பாகும்; இப்பண்பு மக்களிடம் மட்டும் அல்லாமல் ஏனைய உயிர்களிடமும் உண்டு; மாடு, ஆடு, குதிரை முதலிய விலங்கினங்கள் தங்களை வளர்ப்போரிடம் நன்றி காட்டுகின்றன. நாயின் நன்றியறிவை அறியாதார் இல்லை. அதன் நன்றியறிவைப் பற்றி விளக்கிக் கூறும் கதைகள் பல உண்டு; இலக்கியங்களில்கூட நாயின் நன்றி அறிவு பாராட்டப்பட்டிருக்கின்றது.

ஆதலால் பகுத்தறிவுள்ள மனிதன் நன்றியறிவுடன் இருப்பதில் வியப்பில்லை. மக்களிலே நன்றி மறந்தவர்கள் இருப்பதுதான் வியப்புக்குரியது. உதவி செய்தோரை மறக்கும் மனிதர்கள்- அவர்களைப் பற்றி உள்ளத்தில் எண்ணாத மனிதர்கள்- உதவி செய்தோர்க்கு உலை வைக்க முந்தும் மனிதர்கள்- உண்டு. இவர்களை மக்கள் என்று கூறமுடியாது. உருவத்தில்தான் இவர்கள் மக்கள்; செயலில் யாரோ அறியோம் என்றுதான் சொல்லவேண்டும்.

நல்லவர்களிடம் நன்றியறியும் குணம் உண்டு. இதைத்தான் செய்ந்நன்றி அறிதல் என்பார்கள். இதன் சிறப்பை- இன்றியமை யாமையை- வள்ளுவர் விளக்கியிருக்கின்றார்; செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்திலே இதைக் காணலாம்.

பண்டைத் தமிழ் மக்களிடம் இப்பண்பு படிந்திருந்தது. இப்பண்புக்கு நாம் பல சான்றுகளைத் தேடித் திரிய வேண்டாம். அரசருக்கும் மக்களுக்கும் இருந்த தொடர்பை மட்டும் பார்த்தாலே போதும்.

பண்டைத் தமிழ் மக்கள் தங்கள் மன்னர்களைத் தெய்வ மாகவே மதித்துவந்தனர். அரசர் வாழ்வே தங்கள் வாழ்வென்று எண்ணிவந்தனர். அரசர் வாழ்வுக்காகத் தெய்வங்களை வணங்கி வந்தனர். எல்லாப் பெரியோர்களும் அரசர்களை வாழ்த்தி வந்தனர். இதற்குக் காரணம், அரசர்கள் மக்கள் நலமே பெரி தென்று வாழ்ந்ததுதான். இதனாற்றான் மன்னர்கள் மக்கள் மனத்திலே குடியிருந்தனர்.

பண்புள்ள வேந்தர்கள்

முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை வாழ்த்திப் பாடியிருக் கின்றார். அவன் நீடூழி காலம் நிலைத்து வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்தியிருக்கின்றார். மக்கள் சார்பாகவே முடிநாகராயர் மன்னனை வாழ்த்துகின்றார்.

குதிரைப் படைகளையுடைய பாண்டவர்களுடன், கௌரவர் நூற்றுவர் மாறுபட்டனர்; அவர்களுக்குரிய நாட்டையும் தமது நாடாகக் கவர்ந்து கொண்டனர். இதனால் பாரதப் போர் விளைந்தது. இப் போரிலே துரியோதனாதியர் நூறு பேரும் போர் செய்து போர்க்களத்திலே மடியும் வரையிலும் இருபக்கத்துப் படைகளுக்கும் உணவிட்டாய். வேண்டிய அளவு உணவை மிகுதியாக அளித்தாய். இத்தகைய வள்ளன்மை பொருந்திய சேரனே! பால் தன் இனிமை ஒழிந்து புளிப்பேறினாலும், கதிர் தன் விளக்கம் குன்றி இருண்டு போனாலும், நான்கு வேதங்களில் கூறப்பட்ட ஒழுக்கமுறைகள் மாறுபட்டாலும், நீ நெடுங்காலம் அழிவின்றி வாழ்வாயாக! அந்திக் காலத்திலே, சிறிய கன்றுகளுடன், பெரிய கண்களை யுடைய மான் பிணைகள், அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயாகிய விளக்கு வெளிச்சத்திலே தூங்கிக்கொண்டிருக்கும். இத்தகைய காட்சியையுடையன பொன்னொளி பொருந்திய சிகரங்களை யுடைய இமயமலையும், பொதியமலையும்; இந்த மலைகள் என்றும் நிலைத்து நிற்பன; இம் மலைகளைப் போல நீயும், உனது பண்பு வேறுபடாத சுற்றமுடன் நிலைத்து வாழ்வாயாக! என்பதே அவர் கூறும் வாழ்த்து.

அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇநிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பைஈர்ஐம் பதின்மரும் பொதுகளத்து ஒழியப்பெரும்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்;
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேதம் நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கிநடுக்கின்றி நிலியரோ! அத்தை; அடுக்கத்துச்சிறிதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணைஅந்தி அந்தணர் அரும்கடன் இறுக்கும்முத்தீ விளக்கில் துஞ்சும்பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே. (2)

இதுவே புறநானூற்றுப் பாடற் பகுதி.

இச்செய்யுளிலே மன்னனும் வள்ளல்; அவனுடைய அமைச்சர்கள் முதலிய அலுவலர்களும் நல்லவர்கள்; அனைவரும் நாட்டின் நலத்தை நாடுவோர் என்ற குறிப்பைக் காணலாம். திரியாச் சுற்றம் என்ற சொற்றொடர் அமைச்சர் முதலியோரின் பண்பை விளக்கிற்று. அரசன் கருத்துடன் மாறுபடாதவர்கள், அவனுடன் ஒத்துழைப்பவர்கள், தந்நலத்தால் குணங் கெட்டுக் குற்றம் செய்யாதவர்கள் என்ற பொருளை யுடையது இத்தொடர். இத்தகைய மன்னரை மக்கள் ஏன் வாழ்த்தமாட்டார்கள்?

காரி கிழார் என்னும் மற்றொரு புலவர், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமியை வாழ்த்திப் பாடியிருக்கின்றார். இப்பாடலும் மக்கள் மன்னர்களை ஏன் மனமார வாழ்த்தினர் என்பதை விளக்குவதற்குத் துணை செய்யும்.

உன்னுடன் போர் செய்ய முன் வந்த உன் பகைவர்களின் கோட்டைக்குள், கடல் போன்ற உன் படைகள் நுழைவதற்காக முதலில் உனது யானையை ஏவுவாய்; பசுமையான விளை நிலங்களின் பக்கத்திலேயுள்ள கோட்டைகள் பலவற்றையும் கைக்கொள்வாய். அக் கோட்டைகளிலே கைப்பற்றிய அழகாகச் செய்யப்பட்ட அணிகலன்களையெல்லாம் பரிசிலர்க்கு அவரவர் தகுதியறிந்து கொடுத்துவிடுவாய். உனது குடையானது முனிவர் போற்றும் முக்கண் மூர்த்தியான சிவபெருமான் கோயிலை வலம்வரும்போது தாழ்க; சிறந்த நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர்கள் உன்னை வாழ்த்தும்போது எடுத்த கையின் எதிரில் உன் தலை வணங்குக; பகைவர்களின் நாட்டைச் சுடும்போது எழுந்து சுற்றும் புகையினால் மட்டும் உனது மலர் மாலை வாடுக; உனது மனைவிமார்களின் ஊடிய முகத்தைக் காணும் போது, உனது வெகுளி- சினம்- தணிவதாக; இவ்வாறு உனது வெற்றியால் நீ செருக்கடையாமல், அவ் வெற்றியை உன் உள்ளத்திலே அடக்கிக்கொண்டு வாழும் ஆற்றல் அமைந் தவனே! என்றும் குன்றாத கொடையை உடையவனே! மிகுந்த பெருமையை உடைய குடுமியே! நீ இவ்வுலகிலே குளிர்ந்த ஒளியை உடைய சந்திரனைப் போலவும், சுடுகின்ற ஒளி பொருந்திய கதிர்களை யுடைய சூரியனைப் போலவும் நிலைத்து வாழ்வாயாக!

இதுவே காரி கிழார் கூறும் அரச வாழ்த்து. இதுவும் மக்கள் மன்னரிடம் கொண்டிருந்த அன்பை விளக்குவதாகும்.

செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்கடல்படை குளிர்ப்ப மண்டி, அடல்புகர்ச்,
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,
பாசவல் படப்பை ஆர்எயில் பலதந்து,
அவ்எயில் கொண்ட செய்வுறு நன்கலம்பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,
பணியியர் அத்தைநின் குடையே முனிவர்முக்கண் செல்வர் நகர்வலம் செலற்கே;
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்தநான்மறை முனிவர் ஏந்துகை எதீரே;
வாடுக இறைவநின் கண்ணி, ஒன்னார்நாடுசுடு கமழ்புகை எறித்த லானே;
செலியர் அத்தைநின் வெகுளி வால்இழைமங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே;
ஆங்க,
வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்ஒண்கதிர் ஞாயிறு போலவும்மன்னிய பெருமநீ திலமிசை யானே. (புறம். 6)

இதுவே மேலே காட்டிய பொருள் அமைந்த பாடற் பகுதியாகும்.

சுருக்கமாகக் கூறினால், மன்னர்களை வாழ்த்துவதே புறநானூறு ஆகும். புறநானூற்றின் பெரும்பாலான பாடல்கள், மன்னர்களின் வீரம், கொடை, புகழ், நீதி முறை இவற்றைப் பாராட்டிச் சொல்லுகின்றனவாகவே அமைந்திருக்கின்றன.

பதிற்றுப்பத்து நூல் முழுவதும் மன்னர்களை வாழ்த்தும் பாடல்களே. பதிற்றுப்பத்தில், இன்று நமக்குக் கிடைத்திருக்கும் எட்டுப் பத்துக்களும், எட்டுச் சேர மன்னர்களின் பெருமையை எடுத்துக் காட்டுகின்றன.

பத்துப்பாட்டிலே ஏழு பாட்டுக்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் பெருமையைப் பாராட்டும் பாடல்களேயாம்.

பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை இரண்டும் கரிகால் பெருவளத்தானைப் பாராட்டும் பாடல்கள். மதுரைக் காஞ்சியும், நெடுநல்வாடையும் பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்தும் பாடல்கள். பெரும்பாண் ஆற்றுப்படை தொண்டை மான் இளந்திரையனைப் பாராட்டும் பாட்டு. சிறுபாண் ஆற்றுப்படை நல்லியக் கோடனைப் புகழும் பாட்டு. மலைபடு கடாம் நன்னனைப் பற்றிப் பாராட்டும் பாட்டு. இவ்வாறு பத்துப்பாட்டில் ஏழு பாடல்கள் மன்னர்களை வாழ்த்தும் பாடல்களாக அமைந்திருப்பதைக் காணலாம். இதுவும் பண்டைக்கால மக்கள் மன்னர்கள் பால் எவ்வளவு அன்பு கொண்டிருந்தனர் என்பதை விளக்கும்.

படைவீரர் பண்பு

பண்டைக் காலத்தில் அரசன் படையில் இருந்த வீரர்கள், நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்யும் தன்மையுள்ளவர் களாயிருந்தனர். அவர்கள் அரசனையும் நாட்டையும் ஒன்றாகவே எண்ணினர். இத்தகைய உறுதியும், அன்பும் உள்ளவர்களையே படைவீரர்களாகச் சேர்த்து வந்தனர்.

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும்சீர் குன்றல் இலர். (குறள். 778)

போர் மூண்டால், உயிருக்கு அஞ்சாமற் போர் புரியும் வீரர்கள், அரசன் தம்மேல் சினந்தாலும் சிறந்த தம் கடமையில் தவற மாட்டார்கள் என்று வள்ளுவர் படை வீரர்களின் தன்மையை எடுத்துக் கூறுகின்றார்.

பண்டைக் காலப் படைவீரர்கள் அரசன் வெற்றிக்காக உயிர்விடப் பின் வாங்குவதில்லை. இது படைவீரர்களின் நாட்டுப் பற்றையே விளக்குவதாகும்.

அரசன் தெய்வப் பிறவி

அரசனைத் திருமாலுக்குச் சமமாகப் பாராட்டி அவனை வாழ்த்தி வந்தனர். இவ்வழக்கம் தொல்காப்பியர் காலத்திலே தமிழகத்தில் இருந்தது. இதைப் பூவை நிலை என்று குறிப்பிடு கின்றார் தொல்காப்பியர். இதனை,

மாயோன் மேய மன்பெரும் சிறப்பின்தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்

என்ற புறத்திணை இயல் சூத்திரப் பகுதியால் அறியலாம். மாயோனாகிய திருமாலுக்குரிய நிலைத்த பெருமையையும், அழியாத புகழையும், மன்னனோடு இணைத்துப் பாராட்டும் பூவை நிலையும் என்பதே இதன் பொருள்.

இதனால், அரசனைத் திருமாலின் அவதாரம் என்று நினைக்கும் ஒரு நம்பிக்கை பண்டைத் தமிழகத்தில் நிலவி இருந்ததைக் காணலாம்.

பண்டைப் படைவீரர்கள், தம் அரசன் வெற்றி பெற வேண்டும் என்று தெய்வத்தை வேண்டிக் கொள்ளுவார்கள்; தங்கள் தலையைத் தாங்களே தெய்வத்தின் முன்னிலையில் பலிபீடத்தில் அறுத்து வைப்பார்கள். இந்த வழக்கம் தமிழகப் படைவீரர்கள் பால் இருந்தது.

ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர் அமர் அழுவத்துச்சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலைவெற்ற வேந்தன் கொற்றம் கொள்கெனநற்பலி பீடிகை நலம்கொள வைத்து ஆங்கு.

(இந்திர விழவு, 83-86)

ஆரவாரித்து வெற்றி கொண்டவர்கள், போர்க்களத்திலே, பகைவர்க்கு அச்சத்தைத் தந்து, கடைக்கண் சிவந்த கடுமையான பார்வையையுடைய தலையைத் தாமே அறுப்பர்; வெற்றியை யுடைய எமது அரசன் மேலும் வெற்றியடைக என்று வாழ்த்துவர்; நல்ல பலிபீடத்திலே, அரசன் நன்மை அடையும் படி வைப்பர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதனால் பழங்காலத்துப் படைவீரர்கள் தங்கள் வேந்தர்களிடம் வைத் திருந்த உள்ளன்பை உணரலாம்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஇறைஎன்று வைக்கப் படும். (குறள். 388)

நீதிமுறைகளைச் செய்து குடிமக்களைக் காப்பாற்றும் வேந்தன், மக்களுக்குத் தெய்வம் என்றே சிறப்பாக மதிக்கப்படுவான் என்ற வள்ளுவர் கூற்றும் மன்னர்களை- மக்களுக்கு நலம் புரிந்த மன்னர்களை- மக்கள் எப்படிப் போற்றி வந்தனர் என்பதைக் காட்டும்.

வள்ளுவர் கூறிய இவ்வுண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கின்றார். ஆய்ச்சியர் குரவையிலே இதனைக் காணலாம்.

கோவா மலை ஆரம், கோத்த கடல்ஆரம்தேவர்கோன் பூண் ஆரம் தென்னர்கோன் மார்பினவே;
தேவர்கோன் பூண் ஆரம் பூண்டான் செழும்துவரைக்கோகுலம் மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால்.

கோக்கப்படாத பொதியின் மலை ஆரம், கோக்கப்பட்ட கடல் ஆரம், இந்திரண் பூண்ட பூணாகிய ஆரம் இம்மூன்றும் பாண்டியன் மார்பிலே உள்ளன; இவ்வாறு தேவர்கோன் ஆரம் முதலியவற்றைப் பூண்டவன் யார் என்றால், செழிப்புள்ள துவாரகையிலே வளர்ந்தவன்; பசு மந்தையை மேய்த்தவன் குருந்த மரத்தை ஒடித்தவன் ஆகிய கண்ணன் என்பர். இவ்வாறு பாண்டியனைத் திருமாலாக வைத்துப் போற்றி வாழ்த்துகிறது இப்பாடல்.

பொன்இமயக் கோட்டுப் புலிபொறித்து மண் ஆண்டான்மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன்;
மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன்பொன் அம்திகிரிப் பொருபடையான் என்பர் ஆல்.

பொன்னாகிய இமயமலையின் உச்சியிலே தன் புலி முத்திரையைப் பொறித்தவன்; இமயமலையை வடவெல்லையாகக் கொண்டு அதற்கு இப்பால் உள்ள நாட்டையெல்லாம் ஆண்டவன்; மதில் சூழ்ந்த புகார் நகரில் வாழ்கின்ற சோழ மன்னன்; அச்சோழன் யார் என்றால், பொன்னொளி வீசும் சக்கரப் படையைத் தனது போர்ப்படையாகக் கொண்ட திருமாலே என்பர். இப் பாடல் சோழ மன்னனைத் திருமாலின் உருவாகப் போற்றி வாழ்த்துகின்றது.

முந்நீரின் உள்புக்கு மூவாக் கடம்புஎறிந்தான்மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்;
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்கல்நவில் தோள்ஓச்சிக் கடல்கடைந்தான் என்பர் ஆல்.

கடலின் உள்ளே சென்று, முதிராமல் செழித்து நின்ற கடம்ப மரத்தை வெட்டி எரிந்தவன்; வளங்கள் நிறைந்த வஞ்சி மாநகரில் வாழ்கின்ற வேந்தனாகிய சேரன்; அவன் யார் என்றால், மலை என்று சொல்லப்பட்ட தன் தோள்களை வீசிக் கடலைக் கடைந்த திருமால் என்று சொல்லுவர். இப்பாடல் சேரனைத் திருமாலின் அவதாரம் என்று கூறியது.

மேலே காட்டிய சிலப்பதிகாரச் செய்யுள்கள், பாண்டிய, சோழ, சேர மன்னர்களைத் திருமாலின் அவதாரங்கள் என்றே கூறின. தொல்காப்பியக் கருத்தையும், வள்ளுவர் குறளையும் விளக்கும் முறையிலே இப்பாடல் அமைந்திருக்கின்றன.

மன்னர்களைத் திருமாலின் வடிவமாக மக்கள் எண்ணினர் என்பதை நம்மாழ்வார் பாடல் ஒன்றும் கூறுகின்றது.

திருவுடை மன்னரைக் காணில்திருமாலைக் கண்டேனே என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில்உலகளந் தான்என்று துள்ளும்;
கருஉடைத் தேஇல்கள் எல்லாம்கடல்வண்ணன் கோயிலே என்னும்வெருவிலும் வீழ்விலும் ஓவாக்கண்ணன் கழல்கள் விரும்புமே

என்பது திருவாய்மொழி. இதில் உள்ள திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் என்னும் அடி குறிப்பிடத் தகுந்தது. சிலப்பதிகாரப் பாடலின் கருத்தும், இதுவும் ஒத்திருப்பதைக் காணலாம்.

கலிங்கத்துப் பரணியிலே விசயதரனுடைய பிறப்பு வளர்ப் பைப்பற்றி அவதாரம் என்ற பகுதியிலே கூறப்படுகின்றது.

1. அன்று இலங்கை பொருது அழித்த அவனே, அப்பாரதப்போர் முடித்துப், பின்னைவென்றுஇலங்கு கதிர் ஆழி விசயதரன்என உதித்தான்; விளம்பக் கேண்மின்!

2. தேவர் எலாம் குறைஇறப்பத், தேவகிதன்திருவயிற்றில்; வசுதே வற்குமூவுலகும் தொழநெடுமால் முன்ஒருநாள்அவதாரம் செய்த பின்னை,

3. இருள் முழுதும் புவிஅகல, இரவிகுலம்இனிதுஓங்க, இராச ராசன்அருள் திருவின் திருவயிறாம் ஆல்இலையின்அவதரித்தான் அவனே மீள.

இவை செயங்கொண்டார் கூற்று.

இலங்கையைப் போர் செய்து அழித்த இராமனே கண்ணனாகப் பிறந்தான்; பாரதப் போரை முடித்தான்; அவனே வெற்றி பெற்று விளங்குகின்ற சக்கரப் படையையுடைய விசயதரன் என்ற பெயருடன் பிறந்தான்.

தேவர்கள் பூமி பாரத்தை ஒழிக்கும்படி வேண்டிக் கொண்டனர்; அதனால் வசுதேவனுக்குத் தேவகியின் வயிற்றிலே திருமால் பிறந்தான்; மூவுலகும் தொழுது வணங்கும்படி கண்ணனாகப் பிறந்தான்.

அதன்பின் உலகில் உள்ள இருள் நீங்க, சூரிய குலம் புகழ் பெற்று ஓங்க இராசஇராசனுடைய மகள் வயிறாகிய ஆலிலை யிலே விசயதரனாக அவதரித்தான்.

இச்செய்திகளே மேலே காட்டிய கலிங்கத்துப் பரணிப் பாடல்களிலே கூறப்பட்டன.

ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட உலாக்கள் எல்லாம் மன்னர்களைத் திருமால் அவதாரம் என்றே கூறுகின்றன.

கையும் மலர் அடியும், கண்ணும், கனிவாயும்செய்ய கரிய திருமாலை.

(விக்கிரம சோழன் உலா. 158)

கைகளும், மலர் போன்ற அடிகளும், கண்களும், கனி போன்ற வாயும், சிவந்திருக்கின்ற கரிய நிறமுள்ள திருமாலாகிய விக்கிரம சோழனை என்று விக்கிரமச் சோழனைத் திருமாலாகவே கூறுகிறார் ஒட்டக்கூத்தர்.

ஒறுக்கும் மிதிலை ஒருவில்லைத் தொல்லைஇறுக்கும் அவன் இவன் என்பார்மறுக்காமல்சென்று கனைகடல் தூர்த்துத் திருக்குலத்துநின்ற பழிதுடைப்பாய் நீ என்பர்.

(குலோத்துங்க சோழன் உலா. 116-117)

இவைகள் குலோத்துங்க சோழன் உலாவிலே கண்டவை. குலோத்துங்க சோழனை இராமனாக உருவகம் செய்திருப்பதை இக் கண்ணிகளிலே காணலாம்.

சிலையால் வழிபடு தெண்திரையைப் பண்டுமலையால் வழிபட வைத்தோன்

என்று இராசராச சோழன் உலாவிலே இராசராசன் இராமனாகக் கூறப்படுகின்றான். இராசராச சோழன் உலாவிலே பின்னும் அவன் திருமாலின் அவதாரமாகவே கூறப்படுகின்றான்.

மன்னவநீ,

379. முன்பு கருடன் முழுக்கழுத்தில் ஏறுவது;
பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே;- மின்போல்

380. இமைக்கும் கடவுள் உடையினைப்பண்டு; இப்போதுஅமைக்கும் துகிலினை அன்றே; – அமைத்தது ஓர்

381. பாற்கடல் சீபாஞ்ச சன்னியம்பண்டு; இப்போதுகார்க்கடல் சென்று சங்கே;- சீர்க்கின்ற

382. தண் அம் துழாய்பண்டு சாத்தும் திருத்தாமம்; கண்ணிஇன்று ஆரின் கவட்டுஇலையே;- தண்என்ற

383. பள்ளி அறை பாற்கடலே பண்டு; திருத் துயில்கூர்பள்ளி அறை இன்று பாசறையே.

இவ்வடிகளும், இராசராச சோழனைத் திருமாலின் அவதார மாகவே கூறுகின்றன.

செயங்கொண்டாரால் பாடப்பட்ட கலிங்கத்துப் பரணி, ஒட்டக்கூத்தப் புலவரால் பாடப்பட்ட மூவர் உலா இவைகள் எல்லாம் மன்னர்களை வாழ்த்தும் நூல்களேயாகும். மூவருலா என்பது, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா, ஆகிய மூன்றும் சேர்ந்த தொகுதி.

ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணியிலும் மன்னர் புகழைப் பாடாமல் விடவில்லை. சோழ மன்னர்களின் பெருமை யைப் பாராட்டிப் பாடுகின்றார்.

சிவஞானச் செல்வராகிய ஞானசம்பந்தரும் மன்னனை வாழ்த்துகின்றார்.

வாழ்க அந்தணர், வானவர் ஆன்இனம்;
வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;
ஆழ்க தீயஎல்லாம்; அரன் நாமமேசூழ்க; வையக மும்துயர் தீர்கவே

என்பது சம்பந்தர் பாடல். மன்னன் சிறந்து வாழ்க என்று வாழ்த்துகின்றார். மன்னர்களின் பாதுகாவலால்தான் மக்கள் நலம் பெற்று வாழ முடியும் என்ற நம்பிக்கை நிலவியிருந்த காலத்தில் அனைவரும் இவ்வாறு மன்னனை வாழ்த்தினர்.

மேலே கூறியவைகளால், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், திருவாய்மொழி, கலிங்கத்துப்பரணி, மூவர் உலா, தேவாரம் முதலிய நூல்கள் எல்லாம் மன்னர்களை வாழ்த்தின; அவர்களைத் தெய்வப் பிறவியாக மதித்தன என்பதை அறியலாம்.

மக்கள் நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு உழைப்ப வர்கள் எக்காலத்திலும் போற்றப்படுவார்கள்; எல்லோராலும் போற்றப்படுவார்கள். இன்றும் மக்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் போற்றப்படுகின்றனர்; மக்கள் நலங் கருதி உழைக்கும் அரசாங்கத் தலைவர்கள் கொண்டாடப் படுகின்றனர். மக்கள் நன்மை ஒன்றையே கருதி உழைப்பவர்கள், மன்னர்களைவிட இன்னும் மிகுந்த சர்வாதிகாரம் படைத்தவர் களாயிருந்தாலும் அவர்களும் போற்றப்படுகின்றனர்

நமது நாட்டில் வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்திலே அரசாங்கத் தொடர்புள்ள ஒவ்வொரு விழாக்களின் முடிவிலும் அரச வாழ்த்துப் பாடும் வழக்கம் இருந்தது. இன்றும் இங்கிலாந்திலே அவ்வழக்கம் உண்டு; அரசர்கள் ஆளும் நாடுகளில் எல்லாம் அரச வாழ்த்துப் பாடும் வழக்கம் உண்டு. இது போலவேதான் பண்டைத் தமிழகத்தில், மக்கள் மன்னர் களைக் கொண்டாடி வந்தனர். ஆனால் தமிழ் மக்கள் மன்னர் களின் ஆணைக்கு அஞ்சி அவர்களைப் போற்றவில்லை; அவர்களுடைய பணியைப் பாராட்டிப் போற்றினார்கள். இந்த உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.

இனி, மன்னர்களின் ஆட்சி வரப்போவதில்லை; மக்களாட்சி தான் இனித் தொடர்ந்து வாழ முடியும். மக்களாட்சியைத் திறம்பட நடத்திவைக்கும் தலைவர்கள் – தந்நலம் அற்ற சான்றோர்கள்- நாட்டு மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் – மக்களால் போற்றப்படுவார்கள் என்பதில் ஐயம் இல்லை; பழைய மன்னர்கனைப் போலவே பாராட்டத் தான் பெறுவார்கள். இது மக்கள் இரத்தத்தோடு கலந்திருக்கும் பழம்பெரும் பண்பாடு; செய்ந்நன்றி அறிதல் என்னும் சிறந்த ஒழுக்கம்.

மன்னர்களின் மாண்பைப்பற்றி இவ்வாறு பண்டை இலக்கியங்கள் கூறுகின்றன; அவர்களிடம் மக்கள் கொண்ட நம்பிக்கையைப் பற்றிப் பலவாறு பாராட்டியிருக்கின்றன. இந்தப் பழமையை வைத்துக்கொண்டு, சிலர், மீண்டும் மன்னர் ஆட்சி ஏற்படவேண்டும்; மன்னர் ஆட்சி ஏற்பட்டால்தான் பழைய தர்மங்கள் காப்பாற்றப்படும் என்று சொல்லுகின்றனர். இவர்கள் நம்பிக்கையும் பேச்சும் பயன் தராத நம்பிக்கை; வீண் பேச்சு என்பதில் ஐயம் இல்லை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *