பழந்தமிழர் அரசியல்
சாமி. சிதம்பரனார்

அறநெறி காத்த அரசர்கள்

பண்டைத் தமிழ் மன்னர்களிலே பலர் அறநெறி தவறாமல் அரசாண்டு வந்தனர். இதை விளக்கும் சான்றுகள் பல பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. தமிழ் மன்னர்கள் தங்களிடம் வந்து குறைகளைத் தெரிவித்துக் கொள்ளும் குடிமக்களின் மனம் மகிழ்ச்சியடையும்படி நலம் புரிந்தனர்; மாறுபட்ட இருவர், தங்களுக்கு முறை செய்யும்படி வேண்டினால் நடுநிலையிலே நின்று அவர்களுக்கு நீதி வழங்கிவந்தனர்.

அக்காலத்திலே நீதி மன்றங்கள் இருந்தன. அவற்றில் அறிஞர்கள் அறம் கூறும் நீதிபதிகளாக அமர்ந்திருந்தனர். இந்த நீதிபதிகள் வாயிலாகவும் மக்களுக்கு நீதி வழங்கி வந்தனர். சில சமயங்களில் மன்னர்கள் தாமேயும், குடிமக்கள் கொண்டுவரும் வழக்குகளை நேரே ஆராய்வர்; வழக்கிட்டோர் மனக்குறை யின்றி – ஒப்புக்கொள்ளும்படி- முடிவு கூறுவர்.

நீதி மன்றம்

நீதி மன்றத்தை அறங்கூறு அவையம் என்று கூறுகின்றது பத்துப்பாட்டு. நீதிபதிகளின் நேர்மை, அவர்கள் நீதி வழங்கும் முறை இவைகளைத் தெளிவாக அதிலே காணலாம்.

பத்துப்பாட்டிலே உள்ள மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனாரால் பாடப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியன் அப் பாட்டின் தலைவன். அதிலே நீதிமன்றத்தைப் பற்றிக் கூறப்படும் பகுதி நமக்கு வியப்பைத் தருகின்றது. அத்தகைய நீதிபதிகள், நீதிமுறை நீதிமன்றம் இக்காலத்தில் இருக்கின்றனவா என்ற ஐயம் பிறக்கின்றது.

பயம், துன்பம், ஆசை இவைகளை நீக்கியவர்கள்; ஒரு பக்கத்தாரிடம் சினமும், மற்றொரு பக்கத்தாரிடம் மகிழ்ச்சியும் காட்டாதவர்கள்; தம்மை நடுநிலையிலேயே நிறுத்திக் கொண்ட வர்கள்; துலாக் கோலைப் போல் நடுநிலையிலேயே நிற்பவர்கள்; சிறந்த ஒழுக்கம் உள்ளவர்கள்; இத்தகையவர்கள் நீதிபதிகளாக அமர்ந்திருந்து நீதி வழங்கும் அறம் கூறும் அவையம்.

அச்சமும், அவலமும், ஆர்வமும் நீக்கிச்செற்றமும்,
உவகையும் செய்யாது காத்து,
ஞெமன்கோல் அன்ன செம்மைத்து

ஆகிச்சிறந்த கொள்கை அறம்கூறு அவையமும்.

(மதுரைக்காஞ்சி, 489-492)

நீதிபதிகளின் நேர்மையை மாங்குடி மருதனார் எவ்வளவு அழகாகச் சித்திரிக்கிறார் என்பது எண்ணத்தக்கது. நீதிபதிகள் உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்குவதில் அஞ்சக் கூடாது. பெருங் குற்றத்திற்குக் கடுதண்டனை விதிக்கும் நிலை ஏற்படும் போதும், துன்புறக் கூடாது. அவர்கள் பேராசை பிடித்தவர்களாக இருக்கக் கூடாது; போதும் என்ற மனம் படைத்தவர்களா யிருத்தல் வேண்டும்; அளவு கடந்த ஆசையுள்ள நீதிபதிகள் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அறத்தை அழிக்கவும் செய்வார்கள். இக்கருத்தை அச்சமும் அவலமும், ஆர்வமும் நீக்கி என்ற ஒரே வரியில் தீட்டியிருக்கின்றார்.

வழக்கிடுவோரில் ஒருவர் உறவினராயிருக்கலாம்; அல்லது நண்பராயிருக்கலாம்; மற்றொருவர் தமக்கோ, தம் குடும்பத்திற்கோ பகைவராயிருக்கலாம்; நீதிபதியாக இருப்பவர்கள் இவற்றைச் சிறிதும் மனத்தில் எண்ணாமல் மறந்து விடவேண்டும். இருவரையும் சமமாகக் கருதி நீதி வழங்க வேண்டும். செற்றமும் உவகையும் செய்யாது காத்து என்ற வரி இவ்வுண்மையை உணர்த்துகின்றது.

ஒழுக்கம் உள்ளவர்களே நீதிபதிக்குத் தகுதியுள்ளவர்கள். ஒழுக்கம் அற்றவர்களால் நீதி நிலைகுலையும். ஒரு நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவரையும் அரசாங்கம் ஒத்த நிலையிலேயே கருதவேண்டும்; ஒத்த நீதியே வழங்க வேண்டும். சாதிக்கொரு சட்டம், மதத்துக்கொரு சட்டம், சாதிக்கு ஏற்ற வாறு நீதி, மதத்திற்கேற்றவாறு நீதி என்று வழங்கும் முறை அறத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது. மக்கள் அனைவரையும் மக்களாகவே மதித்து நீதி வழங்குவதே சிறந்த தாகும். மக்களாட்சி என்று சொல்லுகின்ற இக்காலத்திலும் இம்முறை ஏற்படவில்லை.

நீதி வழங்கும் முறை

பண்டைக் காலத்தில் நீதி வழங்கிய முறைக்கும், இக் காலத்தில் நீதி வழங்கும் முறைக்கும் ஒரு பெரிய வேற்றுமை உண்டு. இந்த வேற்றுமை மிகவும் குறிப்பிடத்தக்கதொரு வேற்றுமை.

பண்டைக் காலத்தில், உண்மையான குற்றவாளியைக் கண்டறிந்து தண்டனை வழங்கினர். குற்றமற்றவர்களுக்குத் துன்பம் உண்டானால் பாதுகாத்தனர். சாட்சியளிப்போரைக் கொண்டு மட்டும் ஒரு வழக்கிலே தீர்ப்பளிக்க மாட்டார்கள். நீதிபதிகளும் தங்கள் நுண்ணறிவைக் கொண்டு குற்றம் யார் பக்கத்தில் என்பதைக் கண்டறிவார்கள். மாறுவேடம் பூண்டு சென்று கூட குற்றவாளிகள் யார்? குற்றம் அற்றவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொண்டு நீதி வழங்குவார்கள். பொய்க்கரி புகல்வோன் ஒரு மரத்தடியில் நின்றால் அம் மரம் பட்டுப் போகும், அவன் குடும்பம் பாழாகும், அவன் செல்வம் பாழாகும், அவன் மீளா நரகுக்கு ஆளாவான் என்றெல்லாம் பொய்க்கரி கூறுவோரைப் பற்றிப் பண்டை நூல்களில் கூறப்பட்டிருக் கின்றன. ஆதலால் தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் பொய்க்கரி புகல அஞ்சினர். ஆயினும், தந்நலம் காரணமாகப் பொய்க்கரி புகல்வோர் சிலரும் இருந்திருக்கத்தான் வேண்டும். பொய்ச் சாட்சி சொல்வோர் அடையும் நிலையைப் பற்றிக் கூறியிருப் பதைக் கொண்டே அத்தகையோரும் இருந்தனர் என்று எண்ண இடந் தருகின்றது. ஆகையால், நீதிபதிகள், முழுவதும் சாட்சிகளையே நம்பித் தீர்ப்புக் கூறாமல் உண்மையைக் கண்டறிய முயன்றனர். மதுரைக் காஞ்சியில் கூறிய தகுதியுள்ள நீதிபதிகளால்தான் துலாக்கோல் போல் நின்று நீதி வழங்க முடியும்.

இக்காலத்தில் உள்ள நீதிமுறை முன்காலத்து நீதி முறைகளுக்கு முரணானது. உண்மையின்மேல் நீதி வழங்க முடியாது; சட்டத்தின் மேல்தான் நீதி வழங்க முடியும்.

இக்காலச் சட்டப்படி, உண்மையான கொலையாளி தப்பித்துக் கொள்ள முடியும்; ஒரு பாவமும் அறியாத அப்பாவி கொலையாளியாகித் தூக்குத் தண்டனை பெறமுடியும். கொலை செய்ததை நேரே கண்டதாகச் சாட்சிகள் – சாட்சியங்கள்- இல்லாவிட்டால் கொலையாளி விடுதலை பெற்றுவிடுவான். குற்றமற்ற ஒருவனைப்பற்றி, இவன் தான் கொலை செய்தான்; அதை நாங்கள் கண்ணால் கண்டோம் என்று கூறும் சாட்சிகள் இருந்தால்- அதற்கான சாட்சியங்கள் இருந்தால்- அவன் கொலையாளியாகி விடுவான். நீதிபதிக்கு, யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்று தெரிந்தாலும் கூட அவர் தன் மனச் சாட்சியின்படி நீதி வழங்க முடியாது. சட்டத்தின் நெறியைப் பற்றியே நீதி வழங்க வேண்டும். சட்டம் சாட்சிகளையும், சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

சுருக்கமாகக் கூறினால், பண்டைக் காலத்தில் உண்மையின் படி நீதி வழங்கப்பட்டது; இக்காலத்தில் சட்டத்தின்படி நீதி வழங்கப்படுகின்றது. பண்டைக் காலத்தில் உண்மையை மறைத்து விட முடியாது; இக்காலத்தில் உண்மையை மறைத்து விட முடியும். இதனால் இக்காலத்தில் சட்டங்களும் நீதிகளும், வலுத்தவர்களுக்கே பெரும்பாலும் துணை செய்யக்கூடியனவா யிருக்கின்றன; இளைத்தவர்களுக்கு நேர்மையும், நீதியும் கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. இதுதான் பழங்கால நீதிமுறைக்கும், இன்றுள்ள நீதிமுறைக்கும் உள்ள தலைகீழ் வேற்றுமை.

கரிகால் சோழன்

நேர்மையாக நீதி வழங்கிய மன்னர்களிலே கரிகாற் சோழன் சிறப்பாகப் பாராட்டப்படுகின்றான். அவன் இளம் பருவத்திலேயே நுண்ணறிவு படைத்தவனாயிருந்தான். வழக்குகளின் உண்மையை உணர்ந்து முடிவு கூறுவதில் ஒப்பற்றவனாயிருந்தான்.

பத்துப்பாட்டுள் ஒன்றான பொருநர் ஆற்றுப்படை என்பது கரிகாலன் மீது பாடப்பட்டது. அதைப் பாடிய ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார். இவர் அவனைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக்காட்டியிருக்கின்றார்;

கரிகாற் சோழன் அரசாட்சி செய்த காலத்தில் இரண்டு முதியவர்களுக்குள் ஏதோ வழக்கு ஏற்பட்டது. அவ்வழக்கை அவர்களால் பேசித் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. கரிகாலனிடம் வழக்கைக் கூறி நீதி பெறலாம் என்று நினைத்து அவனிடம் அணுகினர். தோற்றத்திலே அவன் இளைஞனாயிருப்பதைக் கண்டனர். ஆதலால் இந்த இளைஞனால் நமது வழக்கை ஆராய்ந்து, உண்மையைக் கண்டறிந்து உரைக்க முடியுமோ என்று ஐயுற்றனர். அவர்களின் ஐயத்தைக் குறிப்பால் அறிந்தான் கரிகாலன். அவர்களுடைய வழக்கை அறநூல் அறிந்த முதிர்ந்த நீதிபதி ஒருவரிடம் மாற்றுவதாக உரைத்தான். அவர்களும் மகிழ்ச்சியோடு இசைந்தனர். பின்னர், அவனே, நரை முடியும் தாடியும் தரித்தவனாய் நீதிமன்றத்திலே வந்து அமர்ந்தான். முதியோர்கள் உரைத்த வழக்கைக் கேட்டான். இருவரும் ஒப்புக்கொள்ளும்படி நீதி வழங்கினான். இதனை,

முதியோர், அவைபுகு பொழுதில்,
தம்பகைமுரண் செலவும்(188)

என்ற பொருநர் ஆற்றுப்படை அடியினால் அறியலாம். இந்த வரலாற்றைப் பழமொழிப் பாட்டு ஒன்று தெளிவாகக் கூறுகின்றது.

நாம் சொல்வதைக் கேட்டறிந்து நமது வழக்கிலே முடிவு கூறுவதற்கு அறியாதவன், அனுபவம் இல்லாத இளமைப் பருவம் உள்ளவன் என்று இவ்வாறு ஐயுற்ற முதியவர்கள் மகிழும்படி நரைத்த தாடி மீசைகளை வைத்துக் கொண்டு நீதிபதியாக வந்து உட்கார்ந்தான். அம் முதியவர்களின் சொற்களைக் கேட்டான். உண்மையை உணர்ந்து அவர்கள் வழக்கிலே முடிவு கூறினான். அம்முடிவைக் கேட்டு அவர்கள் உவப்படைந் தனர். ஆதலால் குலவித்தை கற்றுக்கொள்ளாமலே நன்றாக வந்துவிடும்.

உரைமுடிவு காணான் இளமையோன், என்றநரைமுது மக்கள் உவப்ப, – நரைமுடித்துச்சொல்லால் முறை செய்தான் சோழன்;
குலவிச்சைகல்லாமல் பாகம் படும். (பழ. 21)

இப் பழமொழிப் பாட்டும், பத்துப்பாட்டில் கண்ட வரலாற்று நிகழ்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. பண்டைத் தமிழரசர்களின் நீதிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தமிழரசர்கள், தாமே நீதிபதியாக இருந்து வழக்குகளைக் கேட்டு அறநெறிப்படி முடிவு கூறினர் என்பதற்கும் இது ஒரு உதாரணம்.

நீதிக்குக் காலக்கெடுவில்லை

மற்றொரு சோழ மன்னன் வரலாறு பழமொழி, சிலப்பதிகாரம், பெரிய புராணம் முதலிய நூல்களில் காணப்படுகின்றது. பெரியபுராணம் இவனை மனுநீதி கண்ட சோழன் என்ற பெயரால் சுட்டுகின்றது. பழமொழியிலோ சிலப்பதிகாரத்திலோ பெயர் குறிக்கப்படவில்லை.

சோழன் மகன் ஒருவன், பசுங்கன்று ஒன்றின் மேல் தன் தேரை ஊர்ந்து கொன்று விட்டான். இந்நிகழ்ச்சியை அரசனுக்குத் தெரியாமல் அறிஞர்கள் – அமைச்சர்கள் மறைத்து விட்டனர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந் நிகழ்ச்சியை அறிந்தான் அரசன். உடனே, பல்லாண்டுகளுக்கு முன்னே பசுங்கன்றைக் கொன்ற தன் மகன்மேல் தானும் தன்னுடைய தேரை ஊர்ந்து கொன்றான். ஆதலால், நீதிமுறை செய்வதற்கு நீண்டகாலம், குறுகிய காலம் என்ற காலக்கெடு இல்லை.

சால மறைத்துஓம்பிச் சான்றவர் கைகரப்பக்,
காலை கழிந்ததன் பின்றையும், – மேலைக்

கறவைக்கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;
முறைமைக்கு மூப்பு இளமை, இல்.
(பழ. 93)

பழமொழியிலே குறிக்கப்பட்ட இவ்வரலாறு சிலப்பதி காரத்திலே வேறுவிதமாகக் கூறப்படுகின்றது.

சோழன் மகன் பசுவின் கன்றைப் பாராமல் தேர்ச் சக்கரத்தால் அரைத்துக் கொன்று விட்டான். உடனே அரசனுடைய அரண்மனை வாசலிலே கட்டியிருந்த ஆராய்ச்சி மணி அடித்தது. அரசன் வெளியே வந்து பார்த்தான். கன்றை யிழந்த பசு கண்ணீர் சிந்திக் கொண்டு நின்றது. அது அவன் உள்ளத்தைச் சுட்டது. நடந்த நிகழ்ச்சியை அறிந்தான். உடனே தன் மகனைத் தேராழி யால் கொன்று, அப் பசுவைப் போல் தானும் கண்ணீர் சிந்தினான் என்பது சிலப்பதிகாரம். அதனை,

வாயில் கடைமணி நடுநா நடுங்கஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத், தான்தன்அரும்பெறல் புதல்வனை, ஆழியின் மடித்தோன்,
பெரும்பெயர்ப் புகார் என் பதியே.

(சிலப். வழக்குரை. 53- 56)

இவ்வரலாறு பழமொழியின் வரலாற்றுக்கு மாறுபட்டது. இச் சிலப்பதிகார வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் பெரியபுராணக் கதை பிறந்திருக்கின்றது.

பழமொழியிலும் சிலப்பதிகாரத்திலும் பசுங்கன்றுக்காக மகனைக் கொன்ற சோழன் பெயர் சொல்லப்படவில்லை. பெரியபுராணம், சோழனுக்கு மனுநீதிகண்ட சோழன் என்றும், அவன் மகனுக்கு வீதிவிடங்கன் என்று பெயர் வைத்து விடு கின்றது. சிலப்பதிகாரம் இந்த நிகழ்ச்சி சோழர் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்ததாகக் கூறுகின்றது. பெரிய புராணம் திருவாரூரில் நடந்தாகச் சொல்லுகின்றது.

பழமொழியில் கூறும் நிகழ்ச்சியே இயற்கையாகவும் உண்மை போலவும் காணப்படுகின்றது. இந்நிகழ்ச்சி பத்துப் பாட்டு எட்டுத்தொகை போன்ற சங்க நூல்களில் காணப் படவில்லை. எப்படியாயினும் இந்நிகழ்ச்சியும், தமிழ் மன்னர் களின் நீதிமுறைக்குச் சிறந்ததோர் உதாரணமாகும்.

சிபிச் சோழன்

ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைக் கொடுத்தவன் சிபிச் சக்கரவர்த்தி என்பவன். இவன் சூரிய குல வேந்தனாக – இராமனுடைய முன்னோருள் ஒருவனாக- இராமாயணத்தில் குறிக்கப்படுகின்றான். இவனைச் சோழ மன்னன் என்று புறநானூற்றுப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. புறநானூற்றுப் பாடல் ஒன்று இவனுடைய வரலாற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றது.

முனிவர்கள் உலக மக்களின் துன்பம் தீரத் தவம் புரிகின்றவர்கள்; அவர்கள் சுடுகின்ற சூரிய வெப்பத்தைத் தாங்கி நின்று, காற்றையே உணவாகக் கொண்டு தவம் புரிகின்றவர்கள். ஒளியுடன் சூழ்ந்திருக்கின்ற விளங்குகின்ற சடையை உடை யவர்கள். அத்தகைய முனிவர்களும், வியப்பால் திகைப்படையும் படி தியாகம் செய்தவன் சிபிச் சோழன். குறிய நடையை உடைய புறா ஒன்று, வளைந்த சிறகையும், கூர்மையான நகங்களையும் உடைய ஒரு பருந்தின் பாய்ச்சலைக் கண்டு அஞ்சிற்று; அதனிடம் பிடிபடாமல் தப்பித்துக் கொள்ளும் பொருட்டு, சிபிச் சோழனைச் சரணம் அடைந்தது. அவன், அப்புறாவின் மரணத்திற்கு அஞ்சினான்; அதைக் காக்கத் துணிவு கொண்டான். உடனே, அப் பருந்தின் விருப்பப்படி, அந்தப் புறாவின் எடையளவுள்ள சதையை அதற்கு உணவாகக் கொடுக்கச் சம்மதித்தான். தன் எடையும், அப் புறாவின் எடையும் ஒன்றாயிருந்ததால், தானே துலாத் தட்டில் ஏறி நின்றான். தன் உடலையே அந்தப் பருந்துக்குக் கொடுத்து, அப் புறாவின் உயிரைக்காத்தான் என்பது புறநானூற்றுப் பாடலில் காணும் கதை. இது, தாமப்பல் கண்ணனார் என்னும் புலவரால் சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானை நோக்கிப் பாடப்பட்ட பாட்டு.

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்கால் உணவாகச் சுடரொடு கொட்கும்அவிர்சடை முனிவரும் மருளக், கொடும்சிறைக்கூர்உகிர்ப் பருந்தின், ஏறுகுதித்து ஒரீஇத்தன்அகம் புக்க குறுநடைப் புறவின்தபுதி அஞ்சிச் சீரை புக்கவரையா ஈகை உரவோன் மருக. (புறநா. 43)

இதுவே மேலே குறித்த சிபிச் சோழன் கதையை விளக்கும் பாடல்.

புள்உறு புன் கண் தீர்த்த வெள் வேல்சினம்கெழு தானைச் செம்பியன் மருக

என்பது புறநானூற்றின் 37- வது பாடல். மாறோக்கத்து நப்பசலை யார் பாடியது.

புறவின் அல்லல் சொல்லிய, கறைஅடியானை வால்மருப்பு எறிந்த வெண்கடைக்கோல்நிறை துலா அம்புக்கோன் மருக

என்பது புறநானூற்று 39- வது பாட்டு. இதுவும் மாறோக்கத்து நப்பசலையார் பாட்டு.

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை

என்பது புறநானூற்று 46- வது பாட்டு. குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நோக்கிக் கோவூர் கிழார் பாடியது.

இந்தச் சிபிச் சோழன் கதையும், பழங்கால மன்னர்களின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டு: அவர்கள் தியாகச் செயலை விளக்கி நிற்பது.

பொற்கைப் பாண்டியன்

பாண்டிய மன்னன் ஒருவன்; தன்னுயிர் போல் மன்னுயிர் களைப் புரப்பவன்; குடிகள் எவரும் குறையுறாமல் வாழ வேண்டும் என்பதே அவனுடைய குறிக்கோள். அவனுடைய தலைநகரத்தில் கீரந்தை என்ற அந்தணன் ஒருவன் வாழ்ந்தான். அவன் ஒரு நாள் கங்கையாடப் புறப்பட்டான். அவன் மனைவி என்னைத் தனியாக விட்டுச் சென்றால் யார் பாதுகாப்பர் என்றாள்.

அரசன் காப்பான் அஞ்சாதே என்று உரைத்தான் அவன். இதை நகர சோதனை செய்ய வந்த அரசன் காதிலே கேட்டான். அன்று முதல் நாள்தோறும் அவ் வீட்டைப் பாதுகாத்து வந்தான் பாண்டியன்.

ஒருநாள் இரவில் அவ்வீட்டினுள் ஆண் குரல் ஒன்று கேட்டது. உடனே அரசன் கதவைக் கையால் தட்டினான். கங்கையாடச் சென்றிருந்த அந்தணன் அன்று தான் திரும்பி வந்திருந்தான். அவன் கதவு தட்டப்பட்ட ஓசையைக் கேட்டு, யார் அது? என்று உரத்துக் கேட்டான். உடனே, கங்கையாடச் சென்ற கீரந்தை திரும்பி வந்துவிட்டான்; அவன்தான் தன் மனைவியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தான் மன்னன். அந்த வீட்டின் கதவைத் தட்டியது போலவே அவ் வரிசையில் இருந்த ஏனைய வேதியர்கள் வீட்டுக் கதவுகளையும் தட்டிவிட்டு அரண்மனைக்குப் போய்விட்டான்.

மறுநாள் கூடிய அரச சபையிலே இச்செய்தி அரசனுக்கு அறிவிக்கப்பட்டது. அரசன் இத்தகைய தீங்கு செய்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று மறையவர்களைக் கேட்டான். அவர்கள், அவன் கையை வெட்டிவிட வேண்டும் என்றனர். அப்பொழுதே அரசன் தன் உடைவாளை உருவினான்; தன் கையைத் தானே குறைத்தான். அதைக் கண்டு அனைவரும் வியந்தனர். பிறகு அந்தணர்கள் வேள்வி ஒன்று இயற்றினர். அதனால் குறைக்கப்பட்ட அவன் கை பொன்கையாக வளர்ந்தது என்பது பொதுவாக வழங்கும் கதை.

பண்டைத் தமிழ் மன்னர்கள் தமது குடி மக்கள் எந்தக் குறையும் எய்தாமல் காத்து வந்தனர் என்பதற்கே இக்கதை பிறந்தது. இதைப் பற்றியும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களில் காணப்படவில்லை. பழமொழியிலும், சிலப்பதிகாரத்திலும், ஒரு தனிப்பாடலிலுமே இக்கதை காணப் படுகின்றது.

நீதிமுறை செய்யும் எனக்கு இச் செயல் தகுந்தது அன்று என்பதை நினைத்தான்; வேறொரு சாட்சி யில்லாவிட்டாலும் தனக்குத்தானே சாட்சியாக நின்றான்; தன் தவற்றைத் தானே உணர்ந்து தன் கையைத் தானே வெட்டிக் கொண்டான். இவ்வாறு செய்தவன் ஒரு பாண்டியன். ஆதலால் நல்லோர்கள், பிறர் காணமாட்டார்கள் என்று நினைத்துத் தீமை செய்ய மாட்டார்கள்.

எனக்குத் தகவு அன்றால் என்பதே நோக்கித்தனக்குக்
கரிஆவான் தானாய்த், – தவற்றைநினைத்துத்தன்
கைகுறைத்தான் தென்னவனும்; காணார்எனச் செய்யார்,
மாணா வினை

(பழ. 102)

இதுவே பொற்கைப் பாண்டியன் கதைக்கு ஆதரவான பழமொழிப் பாட்டு.

வறுமையிலே வாழ்ந்த கீரந்தை என்பவனுடைய மனைவி யின் வீட்டின் கதவை ஒரு நாள் பாண்டியன் தட்டினான்; உள்ளேயிருந்த அந்தணன், கதவைத் தட்டுவது யார் என்று தன் மனைவியிடம் ஐயத்துடன் கேட்டான். அவள் அரசனுடைய பாதுகாவலைத் தவிர, வேறு குற்றமற்ற பாதுகாவல் இல்லை என்று கூறினீர். பாதுகாப்பற்ற மனையிலே என்னைத் தனித்திருக்க விட்டுச் சென்றீர். அதன்படியே இன்று அந்த அரசாகிய வேலியே பாதுகாத்தது; பாதுகாக்காதோ? என்று கூறினாள்.

இதை அரசன் காதில் கேட்டான். காய்ச்சிய ஆணி போல் இச்சொல் அவன் நெஞ்சிலே புகுந்தது. புகையோடு கூடிய துன்பத் தீ மூண்டு அவன் உள்ளத்தைச் சுட்டது. வேதியன் தன் மனைவியிடம் ஐயம் கொள்ளும் படி செய்து விட்டோமோ என்று அஞ்சி நடுங்கினான். உடனே வச்சிராயுதத்தைக் கையிலே யுடைய தேவேந்திரனது கிரீடத்தில் உள்ள ஒளி பொருந்திய வளையத்தை உடைத்த வலிமை பொருந்திய தன் கையைத் தானே வெட்டிக் கொண்டான். இத்தகைய செங்கோலையும், குறையாத வெற்றியையும் உடைய இறைவன் என்பது சிலப்பதிகாரம். இதனை,

உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவிபுதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்;
அரைச வேலி அல்லது, யாவதும்புரைதீர் வேலி இல், என மொழிந்துமன்றத்து இருத்திச் சென்றீர்; அவ்வழிஇன்று அவ் வேலி காவாதோ? எனச்செவிச்சூட்டு ஆணியில் புகைச்சுழல் பொத்திநெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று,
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தக்கைகுறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறை,

(சிலப். கட்டுரை. 42-53)

இச் சிலப்பதிகாரக் கதைக்கும், மேலே எடுத்துக்காட்டிய வழக்கத்தில் உள்ள கதைக்கும் சிறிது வேறுபாடு காணப்படுகின் றது. பழமொழிப் பாட்டில் உள்ள நிகழ்ச்சியும், சிலப்பதிகாரம் கூறும் நிகழ்ச்சியும் ஒன்றாகவே காணப்படுகின்றன.

கொற்கையான் மாறன் குலசேகர வழுதிபொற்கையான் ஆனகதை போதாதோ?

என்று ஒரு தனிப்பாடல் காணப்படுகின்றது.

கையரிந்தான் மாறன் கதவு இடித்த குற்றத்தால்

என்பது இரங்கேச வெண்பா. இவ்வாறு இப் பொற்கைப் பாண்டியன் வரலாறு இன்னும் பல பாடல்களில் பாராட்டப்படுகின்றது.

மேலே காட்டிய கரிகாலன் வரலாறு, மனுநீதி கண்ட சோழன் வரலாறு, சிபிச் சோழன் வரலாறு, பொற்கைப் பாண்டியன் வரலாறு இவைகள் எல்லாம் உண்மையா? வரலாற்று நிகழ்ச்சியா? என்று ஆராய வேண்டியதில்லை. வரலாறோ, புனைந்துரையோ, எப்படியோ ஆகட்டும். பழந்தமிழ் வேந்தர்கள் குடிமக்களின் குறைகளைப் போக்குவதிலே- அவர்களுக்கு நடுநிலையிலே நின்று நீதி வழங்குவதிலே- கருத்தூன்றி யிருந்தனர். இவ்வுண்மையை விளக்குவதற்கு இக்கதைகள் உதவுகின்றன.

பழந்தமிழ் வேந்தர்கள் நீதிமன்றங்களின் வாயிலாகவும் மக்கள் வழக்குகளைத் தீர்த்தனர். தாமேயும் நேரே வழக்குகளைக் கேட்டறிந்து முடிவு கூறினர். தங்கள் குடி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து- கண்டுணர்ந்து- அவைகளை நீக்கினர். இவ்வுண்மைகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *