பழந்தமிழர் அரசியல்
சாமி. சிதம்பரனார்

மக்களுக்காகவே மன்னர்கள்

உயிரினும் ஒழுக்கம் சிறந்தது

உள்ளத்திலே தூய்மையுள்ளவர்கள் ஒருபொழுதும் தீங்கு செய்யத் துணியமாட்டார்கள். உள்ளப்போக்குத்தான் நன்மைக்கும் தீமைக்கும் நடைபாதை. மனம் மாசற்றதாக இருந்தால் செயலும் சிறந்ததாக இருக்கும். உள்ளத்திலே அழுக்குப் படிந் திருந்தால் செயலும் பொல்லாமையை நோக்கித்தான் போகும். மக்களுடைய வாழ்க்கையைச் செம்மையாக நடத்திவைப்பது உள்ளந்தான். மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் என்ற பொய்யா மொழி, என்றும் பொய்யா மொழியே யாகும்.

ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது; பொது வாழ்க்கையைப் பற்றித்தான் பேசவேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை வேறு, பொது வாழ்க்கை வேறு என்று கூறுவோர் சிலர் உண்டு. இது உண்மைக்கு மாறானது; பெரிய மனிதர்களின் குற்றங்களை மறைப்பதற்காகப் போடும் திரைச்சீலைகளில் இது ஒன்று. ஒருவருடைய தனிப்பட்ட தன்மையும், நடத்தையும் பொது வாழ்விலே தலைநீட்டாமல் அடங்கி விடமாட்டா. ஆகையால் தான் உயிரினும் ஒழுக்கம் உயர்ந்தது, சிறந்தது என்று உரைத் தனர். ஒழுக்கம் உள்ளவர்களையே உயர்ந்த மக்களாகக் கருதினர். அறிவுள்ளவர்கள் ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று முன்னோர்கள் மொழிந்தனர்.

பண்டைத் தமிழகத்தில் மக்கள் நன்மைக்காகவே வாழ்ந்த மன்னர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தனிப்பட்ட வாழ்விலும் உயர்ந்த பண்பு படைத்தவர்கள்; சிறந்த நடத்தை யுள்ளவர்கள்; அறிவும் ஆற்றலும் அமைந்தவர்கள். இத்தகைய இயல்புள்ள மன்னர்களே மக்களால் மதித்துப் பாராட்டப் பட்டனர்; இறைவன் என்று எண்ணி எல்லா மக்களாலும் போற்றப்பட்டனர்.

அவர்கள் ஒழுக்கமே உயிர் எனக் கொண்டு வாழ்ந்தனர்; ஆதலால் தந்நலத்திற்கு அடிமைப் படவில்லை. தாங்கள் என்ன நினைத்தாலும், எதைச் செய்தாலும், அதைத் தடுக்க யாரும் இல்லாத தனிச் செல்வாக்கிருந்தும் அவர்கள் தவறு செய்யத் துணியவில்லை. நேர்மையான வழியிலே நிலையாக நின்று தங்கள் கடமைகளைப் புரிந்தனர். இவ்வுண்மையைப் பதிற்றுப் பத்துப் பாட்டு ஒன்றிலே காணலாம்.

மன்னர்களின் ஒழுக்கம்

முன்கோபம் பொல்லாதது. அது, ஆகும் செயல்களை யெல்லாம் அடியோடு அழித்துத் தகர்த்து விடும். சிந்திப்பதற்குச் சிறிதும் இடந்தராது.

கண்ட பொருள்களின் மேல் எல்லாம் ஆசை வைப்பது அழிவுக்கே இடமாகும். காமுற்ற பொருள்களைக் கவர்தற்கு நேர்மையற்ற வழியில் செல்லத் தூண்டுவதாகும்; அது அறநெறியைத் தாண்டி அப்பாற் சென்று மறம் புரிவதற்கு அடிப்படையாகி விடும்.

அளவு கடந்த தாட்சணியம் நீதிமுறையைக் கூட நிலை குலைத்துவிடும். நடுவுநிலையிலே உறுதியாக நடப்பதற்கு முட்டுக்கட்டையாக நிற்பவைகளில் கழி கண்ணோட்டந்தான் முதல் தடை.

அச்சம் உள்ளவர்களால் எச்செயலையும் வெற்றியுடன் செய்து முடிக்க இயலாது, அவர்கள் பகைவர்களால் எளிதிலே அழிக்கப்படுவார்கள்; அடக்கப்படுவார்கள்.

பொய்ச்சொல் நன்மைகளை அழித்துவிடும்; நண்பர்களைப் பக்கத்தில் நெருங்கவொட்டாமல் விரட்டியடிக்கும்; பகைவர்களைப் பெருக்கிவிடும். பழிபாவச் செயல்களுக்கு விதையாக நிற்பது வேண்டாத- வீணான- பொய்யுரைகளேதாம்.

பொருளிலே அளவு கடந்த அன்பு வைத்தல் தவறு. அளவு கடந்த பேராசை அல்லலுக்கு ஊற்று. பேராசை பிடித்தவர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, இன்னது இனியது என்று எண்ணிப் பார்க்காமல் எதையும் துணிந்து செய்வார்கள்.

செல்வத்தையும், செல்வத்தைச் சேகரிப்பதற்குரிய துறை களையும், அழித்துவிடுதல் கூடாது. அழித்து விட்டால், அதனால் நாட்டுக்கே பெருந் தீங்கு நேரும்.

யாரிடத்திலும் கடுமை காட்டக்கூடாது; பகைவர்களும் பாராட்டும்படி நடந்துகொள்ள வேண்டும். தன்கீழ் வாழ்வோர், அறியாமல் குற்றம் புரிந்தால் அவர்களை அச்சுறுத்துவதோடு அமையவேண்டும். அவர்கள் மேல் இரக்கங் காட்டி அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும்.

ஆதலால், சினன், காமம், மிகுந்த கண்ணோட்டம், அச்சம், பொய்ச்சொல், பொருளில் மிகுந்த ஆசை, அழித்தல், கடுமை ஆகிய இவைகளும் இவைபோன்ற குற்றங்களும் கூடா ஒழுக்கம்; இவைகள் அறநெறியிலே நடத்தும் ஆட்சிக்கு முட்டுக் கட்டையாகும் என்று உணர்ந்திருந்தனர்.

ஆகையால் தீமைகளையெல்லாம் வெறுத்துச் சேய்மையிலே விரட்டினார்கள்; நன்மையான செயல்களையே எப்பொழுதும் நாடிச் செய்து நலம் பெற்றனர். கடலிலிருந்தும், காடுகளிலிருந்தும் வாழ்க்கைக்கு வேண்டிய பல செல்வங்களையும் முயன்று பெற்று வாழ்ந்தனர்.

மற்றவர்களை- அமைதியுடன் வாழ்கின்ற பொது மக்களைத் துன்புறுத்த மாட்டார்கள். தமது முயற்சியால் பெறுவதைத் தவிர முயற்சியற்ற வேறு முறையிலே பொருளைக் கொள்ளை கொள்ள மாட்டார்கள்.

குற்றமற்ற சிறந்த அறிவினர்களைத் துணையாகக் கொண்டிருப்பர். அவர்கள் ஆராய்ந்துரைக்கும் சிறந்த நெறியிலே தவறாமல் நடந்து நலம் புரிவார்கள்.

தம்மை விரும்பும் சுற்றத்தாரோடு இருந்து, உள்ளதை அவர்களுக்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்பார்கள்.

தமது நாட்டு மக்கள் எல்லாம் நீண்டநாள் நோயின்றி உயிர் வாழ்ந்து இன்புறும்படி நெடுங்காலம் அரசாண்டு வந்தனர். இத்தகைய சிறந்த அறிஞர் குடியிலே பிறந்தவன் நீ.

சினனே, காமம், கழிகண் ணோட்டம்அச்சம்,
பொய்ச்சொல், அன்புமிக உடைமைதெறல்,
கடுமையொடு பிறவும்இவ் வுலகத்துஅறம்தெரி
திகிரிக்கு வழி அடை யாகும்;
தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து;
கடலும், கானமும், பலபயம் உதவப்பிறர்பிறர் நலியாது,

வேற்றுப்பொருள் வெஃகாது;
மையில் அறிவினர் செவ்விதின் நடந்து; தம்அமர்துணைப்

பிரியாது பாத்துஉண்டு; மாக்கள்மூத்த யாக்கையொடு
பிணியின்று கழியஊழி உய்த்த உரவோர் உம்பல்!

(பதிற்று. பா. 22)

இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பற்றிப் பாலைக் கௌதமனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இச் செய்யுள் அச்சேர மன்னனும் அவன் முன்னோர்களும் தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்க்கையிலும் ஒரே விதமான ஒழுக்க நெறியைப் பின்பற்றி வந்தனர் என்பதையே வலியுறுத்தும்.

யானைக்கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை என்னும் சேரனைப் பற்றிய பாட்டு ஒன்றும், நல்ல மன்னர்களின் நடுநிலையைப் பற்றி எடுத்துரைக்கின்றது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் அவனைப் பற்றிப் பாடும் போது அவனுடைய சிறந்த குலப் பெருமையைப் பாராட்டிக் கூறியிருக்கின்றார்.

கொடுமையைக் கடிந்து விரட்டியவர்கள், நல்ல முறையிலே ஆட்சி நடத்தியவர்கள், குடிமக்கள் தாமே மகிழ்ந்து கொடுக்கும் ஆறிலொரு கடமையைப் பெற்று உண்டவர்கள், நடுநிலைமை தவறாமல் ஆட்சி புரிந்தவர்கள் எத்தகைய தடையும் இல்லாமல் இந் நிலமுழுதும் தமது ஆணை செல்லும் படி அரசாட்சி செய்தவர்கள் ஆகிய இத்தகைய சிறந்த மன்னர்களின் குடிப்பெருமையைக் காத்தவனே!

கொடிது கடிந்து, கோல்திருத்திப்படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர்நேமிமுழுது ஆண்டோர் வழிகாவல!

(புற நா. 17)

இப்பாடலும் பண்டைத் தமிழ் மன்னர்களின் மனப்பான்மையை விளக்கிக் காட்டுகின்றது.

சோழன் நெய்தலம் கானல் இளஞ்சேட் சென்னி என்பவன் ஒரு சோழ மன்னன். அவனுடைய சிறந்த பண்பை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார். அவ்வேந்தனுடைய ஆற்றலையும் அறிவையும் பற்றி அப் பாடலிலே காணலாம்.

உனக்கு அடங்கி உன்னை வணங்கி வாழ்வோரை எல்லாம் நீ நன்றாக அறிந்திருக்கின்றாய். எப்பொழுதும் பிறர் மீது குறைகூறுவதையே குணமாகக் கொண்டவர்கள் சிலர் உண்டு. அத்தகையவர்கள் சொல்லும் மொழிகளையெல்லாம் உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பிவிட மாட்டாய். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் குற்றம் உண்டா என்பதை நீயே நன்றாக ஆராய்ந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுவாய். ஒருவன் உண்மையிலேயே குற்றவாளியாக – கொடுமை செய்தவனாக- இருந்ததைக் கண்டால், நீதி நூல்களை ஆராய்ந்து அவன் செய்த குற்றத்திற்கேற்ற தண்டனை விதிப்பாய்; உனக்குக் கொடுமை செய்தவர்கள், தாமே தம் குற்றத்தை உணர்ந்து உன்னிடம் வந்து தஞ்சம் அடைந்தவர்களானால் அவர்களை நீ தண்டிக்க மாட்டாய். அவர்கள் குற்றம் புரியாத காலத்தில் அவர்களிடம் எத்தகைய அன்பு கொண்டிருந்தாயோ, அதைக் காட்டிலும் மிகுந்த இரக்கங் காட்டி அவர்களை மன்னிப்பாய்.

வழிபடு வோரை வல்அறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே!
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி, அத் தகவு ஒருத்தி!
வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதிநீ பண்டையின் பெரிதே.

(புற நா. 10)

இச்செய்யுள் மன்னனுடைய சிறந்த அறிவை விளக்கிற்று: நீதிமுறை செய்யும் திறனைக் காட்டிற்று; பகைவர்க்கும் மன்னிப்பருளும் சிறந்த பண்பையும் குறித்தது.

பத்துப்பாட்டிலே உள்ள பெரும்பாணாற்றுப்படை என்பது இளந்திரையன் என்னும் தொண்டை வேந்தன் மேல் பாடப்பட்டது. அவன் காஞ்சியிலிருந்து தொண்டை மண்டலத்தை ஆண்ட மன்னன். அவன்மீது பெரும்பாண் ஆற்றுப்படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணானார் என்னும் புலவர். அவர் அவ் வேந்தன் பண்பைப் பற்றிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மறம் வளர- அதர்மம் தலையெடுக்கப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். அறமற்றதை முளையிலேயே கிள்ளி யெறிந்துவிடுவான். அறத்திற்கே என்றும் துணையாக நிற்பான். அறம் புரிவதற்கே அவனது செங்கோல் என்றும் உதவி செய்யும். இத்தகைய சிறந்த பண்புள்ள கூர்மையான வேற்படையை உடைய திரையன்.

அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்பல்வேல் திரையன். (பத்து. பெரும். 36-37)

இவ்வாறு திரையன் பண்பைக் கூறிய புலவர், மேலும் அவனுடைய பெருமையைப் பாராட்டுகின்றார்:

நீதிமுறைகளை வேண்டி வந்தோர் யாராயினும், தங்கள் குறையைத் தீர்த்துக் கொள்ள விரும்பி வந்தோர் யாராயினும், அவர்களை வரவேற்பான்; இன் சொற் கூறுவான்; அவர்கள் வேண்டுகின்றவைகளை வேண்டியபடியே கொடுப்பான்; நடு நிலையிலேயிருந்து உண்மையைக் கண்டறியும் குற்றமற்ற நுண்ணறிவு படைத்தவன். வறியோர்க்கும் புலவர்களுக்கும் செல்வத்தை வாரி வழங்குகின்றவன். அவன் ஒருபொழுதும் சோர்வடையமாட்டான்; எப்பொழுதும் ஊக்கத்துடன் இருக்கும் உள்ளம் படைத்தவன். அவனைச் சுற்றிக் கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள் இருப்பார்கள்; சான்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள்.

முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும்,
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி.
இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக்கொடைக்கடன்

இறுத்த கூம்பா உள்ளத்துஉரும்புஇல் சுற்றமொடு இருந்தோன்.

(பத்து. பெரும். 443- 447)

மேலே காட்டியவைகளைக் கொண்டு பண்டைக் காலத் தமிழ் மன்னர்களின் பண்பைக் காணலாம். சிறந்த அறிவும், உயர்ந்த ஒழுக்கமும், ஆழ்ந்த சிந்தனையும் உள்ள வேந்தர்களே, மக்கள் போற்றும் மன்னர்களாக வாழ்ந்தனர்; மக்களுக்கு நலம் புரியும் மன்னர்களாக இருந்தனர்; அவர்களுடைய தனிப்பட்ட பண்பும், ஒழுக்கமும், அறிவுமே அவர்களைச் செங்கோல் வேந்தர்களாகச் சிறந்து வாழும்படி செய்தது. இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்து, புறநானூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலே கண்டோம்.

தந்நலமற்ற மன்னர்கள்

பழந்தமிழ் வேந்தர்களிலே பலர், குடிகளைப் புரப்பதே தம் கடன் என்று கருதியிருந்தனர். குடிகள் நன்மையின் பொருட்டு எதையும் செய்யத் துணிந்து நின்றனர். இதற்கான சான்றுகள் பல உண்டு. அவற்றுள் தலைசிறந்து நிற்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றுண்டு. அப்பாடல் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனாலேயே பாடப் பட்டது. பண்டைத் தமிழ் வேந்தர்களின் ஆட்சிப் பெருமைக்கு அப்பாடல் ஒரு தூண்டா விளக்காகத் துலங்குகின்றது.

என்னையும், எனது நாட்டையும், குடிமக்களையும் இகழ்ந்து பேசிய அந்தப் பகையரசர்களை நான் சும்மா விட மாட்டேன். கொடிய போர்க்களத்திலே அவர்கள் படை அழியும்படி தாக்குவேன். அவர்களுடைய வெற்றி முரசையும், அவர்களையும் பிடித்துக் கொண்டு வருவேன். அப்படிச் செய்யாமல் விடுவேனாயின் என்னுடைய குடை நிழலிலே வாழும் குடிமக்கள் தாங்கள் சென்று வாழ்வதற்குரிய வேறு நிழலைக் காணாமல் வருந்தி எமது அரசன் கொடுங்கோலன் என்று கண்ணீர் விட்டுக் கதறி என்னைத் தூற்றும்படியான கொடுங்கோலன் ஆவேன்.

சிறுசொல் சொல்லிய சினம்கெழு வேந்தரைஅரும்சமம்
சிதையத் தாக்கி, முரசமொடுஒருங்கு அகப்படேன் ஆயின்,
பொருந்தியஎன்நிழல் வாழ்நர்; செல்நிழல்
காணாதுகொடியன்எம் இறை எனக் கண்ணீர்
பரப்பிக்குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக.

(புறநா. 72)

இதே கருத்தைச் சிலப்பதிகாரத்திலும் காணலாம். செங் குட்டுவன் கண்ணகிக்குக் கல் கொண்டுவர வடநாட்டிற்குப் புறப் படுகின்றான். அப்பொழுது அவன், என்னை இகழ்ந்த வடதிசை மன்னர்களின் தலையிலே கண்ணகி சிலை செய்வதற்கான கல்லைச் சுமத்திக் கொண்டு வருவேன். அப்படிச் செய்யாமல் என்னுடைய வாட்படை சும்மா திரும்புமாயின், நான் ஒரு அரசன் அல்லன். வீரக் கழலையணிந்து போர்க்கோலம் கொண்ட பகைவேந்தர்களை நடுங்கச் செய்யாமல், பல நன்மை களையும் தரும் இவ்வுலகிலே, குடிமக்களை நடுங்கச் செய்யும் கொடுங்கோல் வேந்தனாவேன் என்று சூளுரைக்கிறான்.

வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக்,
கடவுள் எழுத. ஓர் கற்கொண்டு அல்லதுவறிது மீளும்என் வாய்வாள் ஆகின்,
செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப்பகைஅரசு நடுங்காது, பயம்கெழு வைப்பில்குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகுஎன.

(சிலம்பு. கால்கோள்.)

மேலே காட்டிய புறநானூறு, சிலப்பதிகாரம் இந்த இரண்டாலும் மன்னர்களின்- பண்டைத் தமிழ் வேந்தர்களின்- கொள்கை, குறிக்கோள் இன்னதென்பதைக் கண்டோம்.

புலவர் பாராட்டை விரும்பிய வேந்தர்கள்

பண்டைத் தமிழ் மன்னர்களின் மற்றொரு கொள்கை அவர்களுடைய சிறப்பை எடுத்துக்காட்டும். அவர்கள் அறிஞர் களின் பாராட்டுதலைப் பெறுவதில் பெரிதும் ஆர்வம் காட்டினர். அக்காலத்திலே பொதுமக்களிடையிலே புலவர்களுக்கு நல்ல மதிப்பிருந்தது. அவர்கள் மன்னர்களிடமும் மதிப்புப் பெற்றிருந்தனர். ஆதலால்தான் மன்னர்கள் புலவர்களின் பாராட்டைப் பெற விரும்பினர்.

புலவர்களால் பாராட்டிப் பாடப்பட்ட மன்னர்களையே மக்கள் உயர்ந்த பண்புள்ள வேந்தர்களாகக் கொண்டாடினர். அக்காலப் புலவர்கள், எல்லா மன்னர்களையும் பாராட்டிப் பாடல் எழுதிவிடமாட்டார்கள். ஒழுக்கமுள்ள மன்னர்களைத் தான் மதித்துப் பாடுவார்கள். செங்கோல் முறை செய்யும் மன்னர்களைத்தான் சிறப்பித்துப் பாடுவார்கள். ஆகையால் அக்கால மன்னர்கள் புலவர்களின் பாராட்டைப் பெறுவதையே முதன்மையாகக் கருதினர்.

புலவர்களின் பாராட்டைப் பெறவேண்டுமாயின் குடி மக்களுக்குக் கொடுமை புரியாமல் நீதியுடன் ஆட்சி புரிய வேண்டும். ஆதலால் மன்னர்களின் இந்த மனப்பான்மையும் அவர்களுடைய ஆட்சியின் சிறப்பை விளக்குவதாகும். இவ் வுண்மையை மேலே காட்டிய பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடலின் மற்றொரு பகுதியில் காணலாம்.

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்விமாங்குடி
மருதன் தலைவனாக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்புலவர்

பாடாது வரைகஎன் நிலவரை.

இவ்வரிகள் பண்டைத் தமிழ் மன்னர்களின் உள்ளத்தில் குடி கொண்டிருந்த உறுதியை எடுத்துரைப்பன. நான் பகையரசர்களை வெற்றிகொள்ளாவிட்டால், கொடுங்கோலனாவது மட்டும் அன்றி, மற்றொரு பெரும்பழிக்கும் ஆளாகுவேன். உயர்ந்த தலைமையும், பெரிய நூற்கேள்வியையும் உடைய மாங்குடிமருதன் என்பவனைத் தலைவனாகக் கொண்ட, உலகம் உள்ளவரையிலும் நிலைத்து நிற்கும் பலரும் புகழும் பெருமை யுள்ள, புலவர்களால் எனது நாடு பாராட்டிப் பாடப்படாமல் ஒழிக என்பதே இவ்வரிகளின் பொருள்.

புலவர்கள் பாராட்டும்படி அரசு செய்யும் நாடே சிறந்த நாடு என்று பண்டைத் தமிழ் வேந்தர்கள் எண்ணினர். இந்த உண்மையை இவ்வரிகள் எடுத்துக்காட்டின.

பண்டைத் தமிழ் மன்னர்களிலே பலர் அறநெறியைப் பின்பற்றி நடந்தனர். மக்களைக் காப்பதே தங்கள் கடமையெனக் கருதியிருந்தனர். குடிமக்களின் பாராட்டைப் பெற வேண்டுமே யன்றி அவர்களுடைய பழிப்பைப் பெறக் கூடாது என்பதிலே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். தங்கள் நாட்டைப் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடவேண்டும் என்று ஆவல் கொண்டிருந் தனர். மன்னர்களுக்குத் தனியாட்சி உரிமை இருந்த காலத்திலும் அவர்கள் செங்கோல் மன்னர்களாகச் சிறந்து வாழ்ந்ததற்குக் காரணம் அவர்களுடைய உயர்ந்த குணமும், சிறந்த உள்ளமுந்தான். இவ்வுண்மையை மேலே காட்டியவற்றைக் கொண்டு அறியலாம்.

புலவர்களின் பாராட்டைப் பெறக்கூடிய ஒரு நாட்டின் சிறப்பென்ன? அந்நாடு எந்நிலையிலிருக்கும்? அந்நாட்டின் ஆட்சியும், அவ்வாட்சியின் தலைவனும் எப்படி இருப்பான்? என்பவைகளை ஒரு சிறந்த செய்யுளால் காணலாம். நேர்மையாகச் செங்கோல் முறையில் ஆட்சி செலுத்திய நாட்டை அப்பாடல் அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது.

பிசிராந்தையார் என்பவர் ஒரு சிறந்த புலவர். பெரிய அரசியல் அறிஞர். அவருடைய பாடல்களிலே பல உயர்ந்த உண்மைகளைக் காணலாம். அவர் நீண்டகாலம் நோய் நொடி யின்றி உயிர்வாழ்ந்த புலவர். அவரைப் பற்றித் தமிழ்நாட்டினர் பலர் பல காலமாக அறிந்திருந்தனர். அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருந்தவர்களிலே பலர், அவர் நரைத்த கிழவரா யிருப்பார் என்று நம்பியிருந்தனர். இப்படி எண்ணியிருந்தவர் களிலே சிலர், ஒரு நாள் அவரை நேரே பார்த்து விட்டனர். அப்பொழுது அவர் நரை திரையில்லாமல் இளைஞர் போல் தோற்றம் அளிப்பதைக் கண்டு வியந்தனர். வயது பலவாகியும் நரையில்லாமலிருப்பதற்கு என்ன காரணம் என்று புலவரையே கேட்டுவிட்டனர். அப்பொழுது அவர் விடையளிப்பதாக அமைந்திருக்கின்றது அச் செய்யுள்.

“வயது பலவாகியும் இன்னும் உமது மயிர் நரைக்க வில்லையே, இந்நிலை எப்படி உண்டாயிற்று? என்று கேட்பீர் களானால், உண்மையை உரைக்கின்றேன் கேளுங்கள். சிறந்த என் மனைவியும், மக்களும் கல்வியும் அறிவும் நிரம்பியவர்கள். ஆதலால் எனக்குக் குடும்பக் கவலையில்லை. என்னிடம் வேலை பார்க்கும் இளைஞர்கள் என்னுடைய குறிப்பறிந்து நடப்பவர்கள். அதாவது எனக்கும் என்னிடம் வேலை செய்வோர்க்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அதனால் நான் செய்யும் தொழில் தடைபடுவதேயில்லை. இவைகளுக்கெல்லாம் காரணம் எனது நாட்டு அரசன் ஒரு பொழுதும் அநீதி செய்யவே மாட்டான்; நேர்மையாக நாட்டைக் காத்து வருகின்றான். அன்றியும் நான் வாழும் நாட்டிலே, நான் வாழும் ஊரிலே பல அறிஞர்கள் உண்டு. அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள்: செருக்கின்றி அடங்கிய அறிவுள்ளவர்கள். புலன் அடக்கமும் உள்ளவர்கள். ஆதலால்தான் நான் நரையில்லாமல் வாழ்கின்றேன். என் குடும்பம் அமைதியாக இருக்கின்றது. எனது நாடு நல்ல அரசாட்சி பெற்று உயர்ந்திருக்கிறது. ஆதலால்தான் நான் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றேன். கவலையற்ற இளைஞனைப் போல் காணப்படுகின்றேன்.

யாண்டுபல ஆக நரையில ஆகுதல்யாங்கு ஆகியர்என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்:
யான்கண் டனையர்என் இளைஞரும்; வேந்தனும்அல்லவை செய்யான் காக்கும்; அதன் தலைஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.

(புறநா. 191)

இந்தப் பாட்டைப் படிக்கும்போது நமக்கு வியப்புண்டாகின்றது. இப்படி ஒரு நாடு பண்டைத் தமிழகத்தில் இருந்ததா என்று எண்ணத் தோன்றுகின்றது. இருந்ததோ இல்லையோ, அதைப்பற்றி நாம் துருவித் துருவி ஆராய்ந்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். இப்படி ஒரு நாடு இருந்தால் அது இன்பங் கொழிக்கும் நாடாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தப் பாட்டு தனியாட்சி உரிமை படைத்த மன்னர்கள் ஆண்ட காலத்திலே எழுந்த பாட்டு. இதைத்தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். பண்டைத் தமிழ் மன்னர்கள் எல்லா மக்களும் கல்வி கற்றிருக்க வேண்டும். வேலைக்காரர்களும் தலைவர்களும் ஒத்து வாழ வேண்டும். அறிவும் அடக்கமும் ஒழுக்கமும் பொருந்திய சான்றோர்களின் அறிவுரைப்படி ஆட்சி நடைபெற வேண்டும் என்று நினைத்தார்கள். இதற்காக முயன்றார்கள் என்பதற்கு இப்பாடலே சான்றாகும். பண்டைத் தமிழரசர்களிலே சிறந்த மன்னர்கள் பலர் இருந்தனர் என்பதற்கு இப் பாடலும் ஒரு எடுத்துக்காட்டு.

இதனாலும் மக்கள் வாழ்வுக்கும், நாட்டின் நன்மைக்கும் அரசாட்சியே அடிப்படை என்பதைக் காணலாம். தனியாட்சி முறை வெற்றியுடன் நடைபெற்றதற்கு அவ்வாட்சித் தலைவர் களின் அரிய பண்புகளே காரணம்; அருங்குணங்களே அப் பழுக்கற்ற நடத்தைக்கு அடிப்படை என்ற உண்மையையும் உணரலாம்.

சில மன்னர்கள் இவ்வாறு சிறந்த பண்புள்ளவராயிருந்தனர் என்பதைக் கொண்டு, தனிப்பட்டவர்களிடமே அதிகாரம் இருக்கவேண்டும் என்று முடிவுகட்டி விடக் கூடாது. அதிகாரச் செருக்கால் தீமை செய்தவர்கள்- செய்கின்றவர்கள்- பலர் உண்டு. பண்டை மன்னர்களிலும் சிலர் இருந்தனர். இவ்வுண்மையைப் பின்னர்க் காணலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *