பழந்தமிழர் அரசியல்
சாமி. சிதம்பரனார்

அரசியல் உணர்ச்சி

ஆட்சியே அடிப்படை

அரசியலை எவரும் அசட்டை செய்துவிட முடியாது; அதை மறந்துவிடவும் முடியாது. நாட்டின் உயிர் அரசாட்சி தான். நாட்டுக்கு நலம் புரியும் திறமுள்ள அரசியல் வேண்டும். ஒழுங்கான ஆட்சியுள்ள நாடுதான் உயர்ந்து நிற்கும். நல்ல ஆட்சியற்ற நாட்டிலே எந்த நன்மையும் நிலவாது.

மக்கள் நலம் பெறுவதற்கு – முன்னேறுவதற்கு – இன்ப வாழ்க்கை வாழ்வதற்குக் கட்டுப்பாடு வேண்டும்; சட்ட திட்டங்கள் வேண்டும். கட்டுப்பாடுகளையும் சட்ட திட்டங்களையும் கண் காணிக்கும் திறமையுள்ளது அரசாட்சிதான். அரசாட்சிக்கு இத்தகைய திறமையில்லாவிட்டால் அது நேர்மையான ஆட்சியாக நிலைத்து நிற்க முடியாது. மக்கள் முன்னேறுவதற்கான கட்டுப்பாடுகளை விதிப்பதும், சட்ட திட்டங்களைச் செய்வதும் ஆட்சியின் பொறுப்பாகும்; கடமையும் ஆகும்.

அரசாட்சியில்லாத நாடு இருண்டு கிடக்கும்; கதிரவன் அற்ற பகலைப்போல் ஆகும்; நட்சத்திரங்களும், சந்திரனும் இல்லாத இரவைப் போல் ஆகும். இது மட்டுமா? இன்னும் எண்ணிப் பார்த்தால் உயிரற்ற உடம்பைப் போலவும் ஆகும். இவ்வாறு கம்பன் கூறுகின்றான்.

வள்உறு வயிரவாள் அரசுஇல் வையகம்,
நள்உறு கதிர்இலாப் பகலும், நாள்ஒடும்தெள்உறு மதியிலா இரவும், தேர்தரின்உள்உறை உயிர்இலா உடலும் ஒக்குமே.

அரசாட்சியற்ற நாட்டிலே உழவுத் தொழில் வளராது; உணவுப் பண்டம் பெருகாது; ஒழுக்கம் நிலவாது; கலைகள் தோன்றமாட்டா. காவியங்கள் பிறக்கமாட்டா. நல்ல ஆட்சி யுள்ள நாட்டிலேதான் இவைகள் எல்லாம் வளர்ச்சியடையும். இந்த உண்மையை வரலாற்றிலே காணலாம்; பழைய இலக்கியங்களின் வாயிலாக அறியலாம்.

எக்காலத்தில் அரசியல் உருவாகியதோ, அக்கால முதல்தான் மக்கள் சமுதாயம் நாகரிக நெறியிலே முன்னேறிச் செல்லத் தொடங்கியது. இது வரலாறு கண்ட உண்மை.

தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அரசாட்சியிலே கவலை கொண்டிருந்தனர்; கருத்தூன்றி நின்றனர். இந்த உண்மையைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு நவில் கின்றன. அரசாட்சி யில்லாவிட்டால் நாம் வாழ்க்கை நடத்த முடியாது என்பதே பண்டைத் தமிழர்களின் முடிவான கருத்து.

இந்த உண்மையை ஒரு புறநானூற்றுப் பாட்டு விளக்கமாகக் கூறியிருக்கின்றது.

நெல்லும் உயிர் அன்றே. நீரும் உயிர் அன்றேமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்அதனால், யான் உயிர் என்பது அறிகைவேல்மிக தானை வேந்தற்குக் கடனே(புறம், 186)

இது மோசிகீரனார் என்னும் புலவர் பாட்டு. பண்டைத் தமிழ் மக்களின் கொள்கையை எடுத்துக்காட்டுவது.

நெல்லும் இவ்வுலக மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அன்று; தண்ணீரும் இவ்வுலக மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அன்று; மன்னனைத்தான் இவ்வுலகம் உயிராகக் கொண்டிருக்கின்றது. ஆதலால் ஆளும் அரசன் நான் தான் இவ்வுலகத்துக்கு உயிர் என்பதை மறவாமல் எண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்; இதுதான் படைபலம் பொருந்திய அரசனுடைய கடமையாகும்.

நல்ல அரசாட்சி யில்லாவிட்டால் மக்களிடையிலே கட்டுப்பாடும் ஒற்றுமையும் காணப்படமாட்டா. மக்களிடையே ஒற்றுமையும் கட்டுப்பாடும் இல்லாவிட்டால், நாட்டிலே எந்த நல்ல செயல்களும் நடைபெறமாட்டா. உழவுத் தொழில் நடைபெறாது; வீணாகப் போகும் நீரைத் தேக்கி வைத்து அதை வேளாண்மைத் தொழிலுக்குப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். நல்ல ஆட்சியிருந்தால்தான் இக்காரியங்கள் நடக்கும். இக்கருத்தைக் கொண்டதுதான் இச்செய்யுள்.

மன்னவனே மக்கள் உயிர்

ஆரம்ப கால அரசு தனிமனிதனுடைய ஆட்சியாகத்தான் இருந்தது. அத்தனி மனிதனைத் தெய்வப் பிறவியாகத்தான் எண்ணினர். அறிவு வன்மையும், உடல் ஆற்றலும், படைபலமும் பெற்றவர்கள் முதலில் அரசர்கள் ஆயினர். அவர்கள் மக்களு டைய துன்பங்களைத் தவிர்த்தனர்; இன்பமுடன் வாழ்வதற்கு வழி செய்தனர். இக்காரணத்தால் அக்கால மக்கள் தங்கள் மன்னனை இறைவனாக எண்ணினர்.

மன்னன் எது செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்; மன்னன் மொழிக்கு மறுமொழியே கூடாது. அவன் செய்கை பிடிக்காவிட்டால் வாய் மூடித்தான் வாழவேண்டும். வேந்தனுடைய ஆட்சியை விரும்பாவிட்டால் அந்த நாட்டை விட்டுக் காட்டை நோக்கி வெளியேறிவிட வேண்டும்; மன்னனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்வது தவறு என்ற கொள்கை நிலவியிருந்த காலம் ஒன்று உண்டு.

அரசன் மகன்தான் அரசாளவேண்டும் என்ற கொள்கையும் வேரூன்றி நின்றது. அரசன் ஆளுவதற்கே பிறந்தவன்; அவன் உரிமையைத் தடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை என்ற கொள்கையும் நிலைத்து நின்றது.

தனியதிகாரமும், வழிவழியாக ஆளும் உரிமையும் ஏற்பட்டிருந்த காலத்தில்தான் அரசனே நாட்டுக்கு உயிர் என்று கருதி வந்தனர். உலக மக்கள் உடல், அரசன் உயிர் என்று எண்ணினர். மிகப் பழங்காலத்தில் தோன்றிய கொள்கை இது வாகும். மேலே எடுத்துக்காட்டிய புறநானூற்றுப் பாட்டு இந்த உண்மையை விளக்குகின்றது. அரசன் உயிர், மக்கள் உடல் என்பதே அந்தச் செய்யுளில் உள்ள அரசியல் கருத்து.

தனியதிகாரம் படைத்த மன்னர்கள் தந்நலம் கருதாமல், மக்கள் நலம் கருதி ஆட்சி புரிந்தவரையிலும், அவர்களுடைய மதிப்பு குறையவில்லை. அவர்களை மக்கள் தங்கள் உயிராகவே மதித்து வந்தனர். வழிவழியாக ஆளும் உரிமை படைத்திருந்த காரணத்தால், திறமையற்ற மன்னர்களும் தோன்றினர்; தந்நலம் கொண்ட வேந்தர்களும் தோன்றினர். இவர்கள் மக்கள் மதிப்பைப் பெறவில்லை. மக்களால் பழிக்கப்பட்டனர்; தூற்றப்பட்டனர். இத்தகைய மன்னர்களை, வேறு மன்னர்களின் துணை கொண்டு ஆட்சியிலிருந்து விரட்டியடித்தனர் மக்கள்.

தனியாட்சிக்கு எதிர்ப்பு

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்
மக்கட்கு இறைஎன்று வைக்கப்படும். (கு. 388)

நீதிமுறை செய்து, மக்களைத் துன்புறாமல் காக்கும் அரசன்தான், மக்களுக்குத் தலைவன் என்று கொள்ளப்படுவான்.

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில
மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு. (கு. 544)

குடிமக்களை ஆதரித்து ஆட்சி செய்யும் மன்னவன் அடியைத் தான் உலகம் ஆதரித்து நிற்கும்.

இத்தகைய எண்ணம் மக்களிடையிலே பரவிய பின் மன்னனுடைய தனி அதிகாரம் ஆட்டங் கண்டது. மக்களை மறந்து தந்நலத்திலே மூழ்கிய மன்னர்கள் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் என்று மக்கள் நினைத்தனர்; மன்னனுடைய தனி அதிகாரம் குறையவேண்டும் என்றும் மக்கள் எண்ணினர். மக்களிடையிலே மதிப்பு பெற்ற புலவர்களும், தலைவர்களும் அரசன் தவறு செய்யுங் காலத்தில் தாராளமாகக் கண்டிக்கத் தொடங்கினர்.

நேர்மையாக ஆளும் வேந்தன்தான் ஆளுவதற்குத் தகுதி யுடையவன் ஆவான்; அவன்தான் மக்களின் மதிப்புக்கும், பாராட்டுதலுக்கும் உரியவன் என்ற கொள்கை தோன்றியவுடன் ஒரு பெரிய கொள்கை மாற்றமும் ஏற்பட்டது.

தனி அதிகாரம் படைத்த அரசனால் நேர்மையாக ஆள முடியாது; அறிஞர்களின் துணைகொண்டு ஆளுகின்ற மன்னவனே நல்ல ஆட்சியை நடத்த முடியும்.

அரசன் எவ்வளவு திறமையுள்ளவனாயிருந்தாலும் ஆராய்ச்சியுள்ள அறிஞர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்; அவர்கள் கூறும் கருத்தை மதித்து ஆட்சி நடத்த வேண்டும்.

அரசன் தவறு செய்யும் போது, அவனைக் கடிந்து கூறி விலக்கவேண்டும். அவனைத் தவறு செய்யாமல் தடுக்க வேண்டும். இது நாட்டின் நலத்திலே கவலை கொண்ட அறிஞர்கள் கடமை. இத்தகைய அறிஞர்களைத் துணையாகக் கொள்ளாத அரசனுக்கு வேறு பகைவர்களே வேண்டாம்; அவன் தானாகவே அழிந்து போவான்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் (கு. 448)

என்பது போன்ற கருத்துக்கள் தோன்றின. இக்கருத்துகளைப் பொதுமக்கள் மதித்தனர்.

இத்தகைய கொள்கை மாற்றம் ஏற்பட்ட பின்னும், ஆளும் குடியிலே பிறந்தவன்தான் ஆளவேண்டும் என்னும் கொள்கை மட்டும் மாறவில்லை. ஆனால் மற்றொரு பழைய அரசியல் கருத்துத் தலைகீழாக மாறிவிட்டது.

மக்கள் உயிர்; மன்னன் உடல்

மக்கள் உடல், மன்னன் உயிர் என்ற கொள்கை மாறி விட்டது: மக்கள் உயிர், மன்னன் உடல் என்ற கொள்கை ஏற்பட்டது. இது ஒரு பெரிய தலைகீழ் மாற்றம். இந்த மாற்றத்தைப் பற்றித் திருவள்ளுவர் தெளிவாகக் கூறவில்லை. தனி மனிதன் ஆட்சியைவிட, அறிஞர்களின் துணைகொண்டு ஆளும் ஆட்சிதான் சிறந்தது என்பதை மட்டும் தெளிவாகக் கூறிவிட்டார்.

அரசனுடைய சர்வாதிகார ஆட்சியைத் தனியாட்சி என்று கூறலாம். அறிஞர்களின் கூட்டுறவுடன் ஆளும் ஆட்சியைத் துணையாட்சி என்று கூறலாம். தனியாட்சியை விடத் துணை யாட்சியே சிறந்தது என்ற கொள்கையைத் தமிழகத்தில் முதலில் பரவச்செய்த பெருமை திரு வள்ளுவர்க்கே உண்டு.

திருவள்ளுவர்க்குப் பின் வந்த புலவர்கள் வள்ளுவர் காட்டிய வழியிலேயே, துணை யாட்சியைப் பற்றியே, பாராட்டிக் கூறத் தொடங்கிவிட்டனர்.

மன்னன் உடல், மக்கள் உயிர் என்ற கொள்கையை முதலில் எடுத்துக்காட்டிய புலவர், சீத்தலைச் சாத்தனார்; மணிமேகலை ஆசிரியர்.

அரசன் தனது ஆட்சியிலே மாறுபடுவானாயின்- அவனது செங்கோல் கொடுங்கோல் ஆகுமானால்- கிரகங்களின் நிலைமை மாறுபடும். கிரகங்களின் நிலை மாறுபடுமானால் மாநிலம் மழையின்றி வறண்டுபோகும்; மழை பொய்க்குமானால் இவ்வுலகத்து உயிர்கள் வாழ முடியாது; இவ்வுலகத்தில் வாழும் உயிர்கள் எல்லாம் அரசனுடைய உயிர் என்று சொல்வதற்குத் தகுதியற்றதாகும்; அரசன் வாழ்ந்தாலும் அவன் உயிரற்ற உடம்பாவான்.

கோன்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்;
கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூரும்;
மாரி வறங்கூரின் மன்உயிர் இல்லை;
மன்உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்தன்

உயிர் என்னும் தகுதியின் றாகும்.

(மணிமே, கா. 7; வரி 8-12)

மணிமேகலை ஆசிரியர் காட்டிய இவ்வழியைக் கம்பர் வலியுறுத்திக் கூறுகின்றார். மன்னன் ஆட்சியை விட்டு, மக்கள் ஆட்சிக்கு அடிப்படையிட்ட இக் கொள்கை கம்பர் கருத்தைக் கவர்ந்தது. ஆதலால் அவர் இதை வலியுறுத்துவதிலே வியப்பில்லை.

தசரதனுடைய ஆட்சியின் பெருமையைப் பற்றிக் கம்பர் பாராட்டிக் கூறுகின்றார். அப்பொழுது மணிமேகலை ஆசிரியரின் கொள்கையைத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றார்.

தசரதன் வயிரங்கள் பதித்துச் செய்த சிறந்த அணிகலன்களைப் பூண்டவன்; சிங்கம் போன்ற வலிமையை உடையவன்; தனது நாட்டில் உள்ள உயிர்களையெல்லாம் தன்னுயிரைப் போலவே பாதுகாத்து வந்தான். ஆதலால் அவன், குற்றமற்ற இவ்வுலகிலே இறந்தும், இருந்தும் வாழ்கின்ற உயிர்கள் எல்லாம் உறைகின்ற ஓர் உடம்பாக இருந்தான்.

வயிரவான் பூண்அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர்எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர்இலா உலகினில் சென்று நின்றுவாழ்உயிர்

எலாம் உறைவதுஓர் உடம்பும் ஆயினான்.

(பால. அரசியல். 10)

இச்செய்யுள், அரசன் உடல்; மக்கள் உயிர் என்ற சிறந்த கொள்கையை வலியுறுத்திக் காட்டுகின்றது. மற்றோரிடத்திலே இக்கொள்கையை இன்னும் தெளிவாக உரைக்கின்றார் கம்பர்.

இராமனுக்கு முடிசூட்டத் தீர்மானித்தான் தசரதன். அதன்பின் அவனுக்கு அரசியல் அறிவு புகட்டுமாறு வசிட்டனை வேண்டினான். வசிட்டன் இராமனுக்கு அறவுரைகள் கூறுகின்றான். அவ்விடத்திலும் இக்கருத்து வலியுறுத்தப்படுகின்றது.

இவ்வுலகையே நிலையான உயிராகக் கொள்ள வேண்டும்; அவ்வுயிரைத் தாங்கும் உடம்பு நானே என்று மன்னவன் நினைக்க வேண்டும்; அவ்வாறே மன்னவன் உலக உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். இத்தகைய மன்னவனை விட்டு, அறநெறி நீங்காது; அவனையே களைகண்ணாகக் கொண்டு நிற்கும். இரக்கம் என்னும் மெய்ந்நெறியிலே மன்னன் ஒழுகுவானாயின், அவன் வேறு வேள்விகளும் செய்ய வேண்டுமோ?

வையம் மன் உயிராக, அம் மன்னுயிர்உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்குஅய்யம் இன்றி அறம் கடவாது;
அருள்மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ?

(அயோ. மந்தரை. 17)

இச்செய்யுளும், மன்னன் உடம்பாவான், மக்கள் உயிர் ஆவர் என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.

துணை ஆட்சியே சிறந்தது

தனி மனிதனுடைய ஆட்சியிலே தவறு நேர்வது இயற்கை. ஆதலால் பல துறையிலும் தேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் துணைகொண்டு ஆள்வதே சிறந்த ஆட்சியாக இருக்கும் என்ற கருத்து வள்ளுவர் மூலம் பரவிற்று. இக்கருத்தும் பொது மக்களின் உள்ளத்திலே குடிபுகுந்தது.

இதன்பின் மன்னவன் உயிர், மக்கள் உடல் என்னும் பழங்கருத்து வீழ்ந்தது; மக்கள் உயிர், மன்னன் உடல் என்ற புதுக் கருத்து எழுந்தது.

இதன் பயனாகத் தமிழர் அரசியலில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அரசனுக்கு அறிவுரை கூறும் அவைகள் ஏற்பட்டன. பண்டைத் தமிழகத்தின் மன்னர்கள் அறிவுரை கூறும் அவைகளை அமைத்துக் கொண்டனரோ இல்லையோ, அது வேறு செய்தி. அறங்கூறும் அவையோரைக் கொண்ட ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்ற முடிவு தமிழகத்தில் தோன்றிவிட்டது. இம்முடிவைப் பெரியோர்கள், அறிவுள்ளவர், பொதுமக்கள், அனைவரும் வரவேற்றனர்.

இவ்வுண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் நமக்குத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றார். மணிமேகலை ஆசிரியரும் கூறுகின்றார். ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்பவை மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன.

கூட்டாட்சி முறை

சிலப்பதிகாரம், மணிமேகலைகளுக்கு முற்பட்ட தமிழ் நூல்களில் ஐம்பெருங்குழு, எண்பேராயம் காணப்படவில்லை. புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய நூல்களில் அரசியல் பற்றிய கருத்துக்கள் பல காணப்படுகின்றன. அவைகளில், அரசனுக்கு அறிவுரை கூறுவதற்காக இக்குழுக்கள் இருந்தனவென்று கூறப் படவில்லை.

ஐம்பெருங் குழுவையும், எண்பேராயத்தையும் துணையாகக் கொண்ட ஆட்சி, உண்மையான மக்களாட்சிக்கு வழி கோலிற்று என்பதில் ஐயம் இல்லை. ஐம்பெருங் குழு என்பது என்ன? எண்பேராயம் என்பது யாது? என்பவைகளைக் கண்டால் இவ்வுண்மை விளங்கும். ஐம்பெருங் குழுவைப் பற்றியும், எண்பேராயத்தைப் பற்றியும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்கமாகக் கூறியுள்ளார்.

அமைச்சர், புரோகிதர், சேனா பதியர்தவாத்தொழில்
தூதுவர், சாரணர் என்றிவர்பார்த்திபர்க்கு
ஐம்பெரும் குழுவெனப் படுமே

என்பது அடியார்க்கு நல்லார் உரையாகும்.

அமைச்சர்கள், புரோகிதர்கள், சேனாபதியர்கள், தூதுவர்கள், சாரணர்கள் (ஒற்றர்கள்) இவர்கள் அரசனுக்கு ஆலோசனை கூறும் ஐம்பெருங் குழுவினர் ஆவர்.

ஆட்சியை நடத்துவதற்கு வழிகாட்டுகின்றவர்கள்- ஆட்சியை நடத்துகின்றவர்கள்- அமைச்சர் ஆவர்.

காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவோர், இன்ன காலத்திலே இன்ன செயல்களைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவோர், பருவ காலங்களையும், அவற்றின் இயல்புகளையும் எண்ணிக் கூறுவோர் புரோகிதர் என்று அழைக்கப்பட்டனர்.

சேனாபதியர், படைத் தலைவர்கள், உள்நாட்டில் அமைதி நிலவுவதற்கும், வெளிநாடுகளுடன் ஒத்த உறவு கொண்டி ருப்பதற்கும் துணையாக இருப்பவர்கள் படைத் தலைவர்கள்.

வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏதேனும் மாறுபாடு தோன்றினால், அதை மாற்றுவதற்குத் தூதுவர்கள் வேண்டும். நல்ல அரசியல் நுட்பமும், சொல் வன்மையும் உள்ளவர்களே தூதுவர்கள். வெளிநாட்டு உறவுவலுப்பட இத்தகைய தூதுவர்கள் இன்றியமையாதவர்கள்.

சாரணர்கள் என்பவர்கள் ஒற்றர்கள்; இரகசியப் போலீசார் போன்றவர்கள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை அரசாங்கத்திற்கு அறிவிப்பவர்கள். அரசன் எக்காரியத்தைச் செய்வதாயினும் மேற்காட்டிய ஐவரையும் கலந்தே செய்யவேண்டும். இதற்காகவே இந்த ஐம்பெரும் குழு ஏற்பட்டது.

எண்பேராயம்

கரணத்து இயலவர், கரும காரர்,
கனகச் சுற்றம், கடைகாப் பாளர்,
நகர மாந்தர், நளிபடைத் தலைவர்,
யானை வீரர், இவுளி மறவர்,
இனையர் எண்பே ராயம் என்ப

என்பது அடியார்க்கு நல்லார் காட்டும் எண் வகையினரைக் கொண்ட பெரிய அவையாகும்.

தொழிலாளர்கள், அவர்களுடைய தலைவர்கள் இவர்களுக்குக் கரணத்தியலவர் என்று பெயர்.

அரசாங்க அலுவல்களைச் செய்து வருவோர், அவர்களுடைய தலைவர்கள், இவர்களுக்குக் கருமகாரர் என்று பெயர்.

அரசாங்கத்தின் செல்வத்தைப் பாதுகாப்போர் கனகச் சுற்றமாவர்; இவர்கள் நிதித்துறை உத்தியோகதர்கள். கனகம்- பொன்.

கடை காப்பாளர் என்பவர்கள், அரண்மனையையும், ஏனைய அரசாங்க அலுவல் இடங்களையும் காத்து நிற்போர்; போலீஸ் இலாகா போன்ற துறையினர்.

நகர மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் நகர மாந்தர் ஆவர்.

சேனைத் தலைவர்களுக்குப் படைத் தலைவர்கள் என்று பெயர்.

யானையின் மேல் ஏறி ஊர்ந்து போர் செய்யும் வீரர்களுக்கு யானை வீரர் என்று பெயர்.

குதிரையின் மீதேறிச் செலுத்திப் போர் புரியும் வீரர்களுக்கு இவுளி மறவர் என்று பெயர்.

மேலே கூறிய தொழிலாளர், அரசாங்க அலுவலர், நிதி காப்போர், காவல்காரர்கள், நகர மக்கள், படைத் தலைவர், யானைவீரர், குதிரை வீரர் இவ்வெண்மரும் எண்பேராயம் என்று அழைக்கப்பட்டனர்.

ஐம்பெரும் குழு என்பது சிறிய சபை. அரசனுடைய நிர்வாக சபை; அதாவது செயற்குழுவாகும். மந்திரி சபை என்றும் கூறலாம்.

எண்பேர் ஆயம் என்பது பொதுமக்கள் சபையாகும். நாட்டின் முன்னேற்றத்தில் அக்கரையுள்ள அனைவருடைய பிரதிநிதிகளும் எண்பேர் ஆயம் என்னும் சபையில் உறுப்பினரா யிருந்தனர். இந்த எண்பேர் ஆயம் என்னும் சபையிலே அரசாங்கத்தை நடத்தும் பொறுப்புள்ள ஒவ்வொரு துறையின் பிரதிநிதிகளும் இருந்தனர். மக்களின் பிரதிநிதிகளும் இருந்தனர். மக்களும், ஆட்சியினரும் சேர்ந்தே நாட்டை ஆண்டனர் என்று இதனால் தெரிகின்றது.

ஐம்பெரும் குழு, எண்பேராயம் இவைகளின் ஆலோசனை யின்படி நடைபெறும் அரசு சிறந்த அரசாகத்தான் இருக்கும். அந்த அரசாங்கத்தின் தலைவன், ஆளப்பிறந்த அரச குலத்தைச் சேர்ந்தவனாகவிருந்தாலும் அவன் தன் விருப்பப்படி எதையும் செய்துவிட முடியாது. மக்களின் கருத்தறிந்துதான் ஆட்சி நடத்த முடியும்.

வளர்ச்சிக்கு வழிகாட்டியது

இன்று மன்னர் ஆட்சிக்கு இடமில்லை; மக்கள் ஆட்சிக்குத் தான் இடம் உண்டு; இந்நாட்டு மக்கள் அனைவருமே மன்னர்கள் என்று கருதுகின்ற காலம் இது.

பண்டைத் தமிழர்களின் அரசியல் கருத்தும் வளர்ச்சியும், இன்றைய மக்களாட்சிக்கு வழிகாட்டியது; இன்றைய மக்களாட்சியை நோக்கி வளர்ந்து வந்திருக்கின்றது. இது வரலாறு கண்ட உண்மை. வளர்ச்சிதான் மனித சமுதாயத்தின் உயிர்நாடி. வளர்ச்சியில்லாத சமுதாயம் வாழ முடியாது. இதற்குப் பழந்தமிழர் வரலாறு ஆதரவளிக்கின்றது.

மன்னன் தன் எண்ணப்படி எதையும் செய்ய உரிமை படைத்தவன்; அவன் எது செய்தாலும் அதற்கு அடங்கி நடப்பதே நமது கடமை என்று மக்கள் நம்பி வந்தனர். இது ஆரம்ப கால அரசியல். இதை மன்னர் ஆட்சிக் காலம் என்று சொல்லலாம்.

இதன் பின்னர், மன்னன் எவ்வளவு அறிவாற்றல் படைத் தவனாயினும், அவன் மற்றவர்களின் எண்ணங்களையும் கேட்டறிந்து நடக்கவேண்டும் என்று எண்ணினர். இத்தகைய மன்னனே செங்கோலரசனாகச் சிறந்து விளங்க முடியும் என்று நம்பினர். வள்ளுவர் வலியுறுத்தும் இத்தகைய ஆட்சியைத் துணையாட்சி என்று கூறலாம்.

இதன்பின், மன்னன் உயிர், மக்கள் உடம்பு என்ற கொள்கை வீழ்ந்தது; மக்கள் உயிர், மன்னன் உடம்பு என்ற கொள்கை பிறந்தது.

இதன்பின், ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்ற அவையத்தாருடன் இருந்து அரசாளும் மன்னன் ஆட்சியே சிறந்தது என்று கருதினர். இத்தகைய ஆட்சியைக் கூட்டாட்சி என்று கூறலாம்.

மன்னர் ஆட்சி கூடாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் ஆட்சிதான் சிறந்தது என்ற கொள்கையைப் பழந்தமிழ் நூல்களிலே பார்க்க முடியாது.

நல்ல அரசியல்- அரசாட்சி- இல்லாமல், நாடு முன்னேற முடியாது, மக்கள் வாழ முடியாது என்ற பழந்தமிழ் மக்களின் கருத்தே இத்தகைய அரசியல் வளர்ச்சிக்குக் காரணமாகும். பழந்தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்த சிறந்த அரசியல் கருத்துக்கள்- அரசியல் கருத்து மாறுதல்கள்- அரசியல் அமைப்பு முறைகள்- இன்றைய மக்களாட்சி முறையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து வந்திருக்கின்றன.

முதலில் மன்னர் ஆட்சி, அதன்பின் துணையாட்சி, அதன்பின் கூட்டாட்சி. இந்த மாற்றமே, இன்றைய மக்கள் ஆட்சிக்கு மக்களை இழுத்து வந்தது.

பண்டைத் தமிழ் மக்கள் அரசியலைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கவில்லை. நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்னும் நாட்டமுள்ளவராயிருந்தனர். இந்த நாட்டமே அவர்கள் நாகரிகத்திலே முன்னேறுவதற்கு உதவி செய்தது. நமது இலக்கியங்கள் இவ்வுண்மையை விளக்குகின்றன.

மானும் புலியும் ஒரு துறையிலே தண்ணீர் குடித்தன; பசுவும் புலியும் கூடிக் குலாவின; பண்டை ஆட்சியிலே இத்தகைய நிலை இருந்தன. இக் கலிகாலத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பண்டைக் கால இன்ப வாழ்வு இக்காலத்தில் இல்லை. பண்டைக் காலத்தில் தான் நீதியும் நேர்மையும் உள்ள ஆட்சி நடைபெற்றது; இக்காலத்தில் அவ்வாட்சி இல்லை என்று பழம்பெருமை பேசுவோர் உண்டு. மக்கள் அறிவும், வாழ்வும், பண்பும் நாளேற நாளேற வளர்ச்சியடைந்து வருகின்றது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளாதவர்களே இவ்வாறு கூறுவர். நமது அரசியல் வளர்ச்சி ஒன்றே இவர்கள் கூற்று தவறு என்பதை விளக்கும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *