
பழந்தமிழர் அரசியல்
சாமி. சிதம்பரனார்
போரும் அமைதியும்
பழந்தமிழ் மக்கள் போரின் கொடுமையை நன்றாக அறிந்திருந்தனர். நாட்டுக்கு நலம் உள்ள செயல் எதையும் போர்க் காலத்தில் செய்ய முடியாது. மக்கள் வாழ்வுக்கு வேண்டிய ஆக்க வேலை போர்க் காலத்தில் நடைபெறாது; நாச வேலைதான் போர்க் காலத்தில் நடைபெறும். இந்த உண்மை நமது முன்னோர் உணர்ந்ததுதான்.
அமைதியால் நன்மை
நாட்டிலே அமைதி குடிகொண்டிருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்களுக்குப் பஞ்சம் உண்டாகாது. அவைகள் வேண்டிய அளவு விளைவிக்கப்படும். மக்கள் விரும்பும் கலைகள் வளரும்; கவிதைகள் வளரும்; வறுமை ஒழியும்; செல்வம் செழிக்கும்; நாடெங்கும் விழாக்களும், விளையாட்டுக்களும் நடைபெறும்; அமைதி நிலவும், எல்லா நாடுகளிலும் இந்த நிலையை நாம் காணுகின்றோம்.
போர்க் காலத்தில் மக்கள் ஒழுக்கமும் கெட்டுப் போகும்; அமைதியான காலத்தில்தான் மக்களிடம் ஒழுக்கம் வளரும்; அமைதியான காலத்தில்தான் கூடாஒழுக்கங்களில் தலைப்படும் மக்களைத் தடுத்து நல்வழியிலே நடக்கும்படி செய்யவும் முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், போரினால் ஒரு நாட்டு மக்களின் ஒழுக்கம் கெடும்; செல்வம் அழியும்; இன்ப வாழ்வு சிதையும். அமைதியால் நாட்டிலே ஒழுக்கம் உயரும்; செல்வம் பெருகும்; இன்ப வாழ்வு வளரும். இந்த உண்மையை என்றும் எவரும் மறுக்க முடியாது.
பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தைப் பாடிய ஆசிரியர் பாலைக் கௌதமனார் இந்த உண்மையை எடுத்துக்காட்டு கின்றார்.
பெரிய வலிமையுள்ள பகைவர்களின், பசுமையான கண் களையுடைய யானைப் படைகள் துண்டு துண்டாகச் சிதையும்படி, மிகுந்த வீரத்துடன் அவைகளை வெட்டி வீழ்த்துவார்கள். அவர்கள் இரத்தம் தோய்ந்த அடிகளை யுடையவர்கள்; வீரக் கழலை அணிந்தவர்கள்; விரைந்து செல்லும் குதிரை வீரர்கள்; இவர்கள் விரைவாக அம்பு தொடுப்பதை மறக்கும்படி உனது நாட்டை நன்றாக அமைதியுடன் காப்பாற்றுகின்றாய்.
நீ இவ்வாறு அமைதி நிலவும்படி அரசு செய்வதனால் உனது நாட்டிலே விளைவுப்பொருள் குறைவதில்லை; உனது நாடும் துன்பமின்றி வாழ்கின்றது.
கோடை நிலைத்து, குன்று வறண்டு, அருவிநீர் விழாமல் வற்றிப்போன, பெரிய மழையற்ற காலத்திலும், உனது பேராற்றில் நீர் குறைவதில்லை. இரு கரைகளும் வழியும்படி நீர் பெருகி வரும். அகன்ற அப் பேராற்றின் பக்கத்தில் உள்ள பெரிய நிலங்களில் தண்ணீர் மிகுந்து பாயும். சும்மா விடப்பட்ட கரம்பு நிலத்திலே உள்ள வெடிப்புக்களில் எல்லாம் தண்ணீர் நிறையும்.
இப்படி நிறையும்படி, தழைகளால் மூடப்பட்டு, விரைந்து வந்து மிகுதியாகப் பாய்கின்ற சிறந்த தண்ணீரின் பூசல்தான்- ஆரவாரந்தான்- உனது நாட்டில் கேட்கப்படுகின்றது. இதைத் தவிர வேறு எந்தப் போரும்- பூசலும் – உனது நாட்டில் இல்லை. ஆதலால் உனது நாடு செல்வம் நிரம்பியிருக்கின்றது.
இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் புகழ்ந்து பாடுகிறார் பாலைக் கௌதமனார்.
திருஉடைத்து அம்ம! பெருவிறல் பகைவர்பைம்கண் யானைப் புணர்நிரை துமியஉரம்துரந்து எறிந்த, கறைஅடிக் கழல்கால்,
கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப,
இளைஇனிது தந்து, விளைவுமுட் டுறாதுபுலம்பா உறையுள் நீதொழில் ஆற்றலின்;
விடுநிலக் கரம்பை விடர் அளை நிறையக்கோடை நீடக், குன்றம் புல்எனஅருவி அற்ற பெருவறல் காலையும்நிவந்துகரை இழிதரும் நனம்தலைப் பேரியாற்றுச்சீர்உடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயல்உவலை சூடி உருத்துவரு மலிர்நிறைச்செந்நீர்ப் பூசல் அல்லதுவெம்மை அரிதுநின் அகன்தலை நாடே.
இதுவே அப்பாடல். அமைதியால் ஒரு நாட்டில் ஏற்படும் நன்மையை உணர்த்திற்று.
ஒற்றுமையின் உயர்வு
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவரின் சிறந்த பாட்டு ஒன்று புறநானூற்றிலே காணப்படு கின்றது. அரசர்கள் தம்முள் போர் செய்யாமல் ஒன்றுபட்டு வாழ்வதனால் உண்டாகும் நன்மையை அப் பாடல் வலியுறுத்துகின்றது. தமிழ்நாட்டு மன்னர்கள் அடிக்கடி ஒருவரோடு ஒருவர் போர் புரிந்த காலத்தில் எழுந்த பாடல் அது. தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அப்பாடல் எடுத்துக் காட்டுகின்றது.
குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன் என்பவன் ஒரு சோழ மன்னன். வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்பவன் ஒரு பாண்டியன். இவ்விருவரும் ஒருநாள் ஓர் இடத்திலே ஒன்றாக இருந்தனர்; பகைமையின்றி அன்புடன் அளவளாவியிருந்தனர். இதைக் கண்ட புலவர் காரிக் கண்ணனார் உள்ளத்திலே பெருமகிழ்ச்சி பிறந்தது. இவ்வாறே தமிழ் மன்னர்கள் உவகையுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தால் தமிழ்நாடு எப்படியிருக்கும்! என்ற சிந்தனை அவர் உள்ளத்திலே வளர்ந்தது. போர் ஒழிந்து அமைதி நிலவினால் நாடும், நாட்டு மக்களும் அடையும் நன்மையைப் பற்றி நினைக்க நினைக்க அவர் நெஞ்சம் மகிழ்ந்தது.
அப்புலவர் தன் மனத்தில் எழுந்த எண்ணங்களை அப்படியே அவர்கள் முன்னிலையில் கொட்டினார்.
நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்!
இவனோ, அடிமரம் தொலைந்த- பூவாது காய்க்கும் மரமாகிய – ஆலமரத்தின் விழுது போன்றவன். அடிமரம் தொலைந்தாலும் அதன் கிளைகளை அம் மரத்தின் விழுதுகள் தாங்குகின்றன. அதுபோல, இவன் தன் முன்னோரால் காக்கப் பட்ட சுற்றத்தாரை, இவன் முன்னோர் மறைந்த பின், அவர்கள் வருந்தாமல் காப்பாற்றுகின்றான்; தான் சிறிதாயிருந்தாலும், பாம்பை அதன் கூட்டத்துடன் நடுங்கச் செய்யும் இடி ஏறுபோல இவன் இளைஞனாயினும் தன் பகைவர்க்கு இடம் கொடாத போர்த்திறம் பொருந்திய பாண்டியர் குடியிலே பிறந்தவன்.
நீ அறம் நிலைத்திருக்கும் உறையூரில் வாழும் அரசன்!
இவனோ, நெல்லும் நீரும் எல்லாருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய பொருள்; ஆதலால் அவற்றை அளிப்பதிலே பெருமையில்லை என்று கருதுகின்றவன். பொதிய மலைச் சந்தனமும், கடல் முத்தும் எல்லோராலும் பெற முடியாது; ஆதலால் அவற்றைக் கொடுப்பதே சிறந்த கொடையென்று கருதுவோன். வீர முரசு, தியாக முரசு, நீதி முரசு என்னும் மூன்று முரசும் தன் அரண்மனை வாயிலிலே முழங்கும்படி தமிழ் பொருந்திய மதுரையிலிருந்து செங்கோல் நடத்துவோன்.
வெண்ணிறமுள்ள உருவினனாகிய, பனைக்கொடியை உயர்த்திய பலதேவன், நீல நிறத்தோனாகிய சக்கராயுதத்தை யுடைய திருமால் என்னும் இரண்டு தெய்வங்களும் ஒன்று சேர்ந்து நின்றாற்போல நீங்கள் காணப்படுகின்றீர்கள். சிறந்த தோற்றத்துடன், காண்போர்க்கு அச்சம் பிறக்கும்படி இந்நிலையில் இருக்கின்றீர்கள். ஆதலின் இதைவிட இனிமையானது வேறு ஒன்றும் இல்லை.
இன்னும் கேளுங்கள்! உங்கள் புகழ் நீடூழி வாழ்க! ஒருவர்க் கொருவர் உதவி செய்துகொண்டு வாழுங்கள்! ஒற்றுமையுடன் என்றும் இவ்வாறே கூடியிருப்பீராயின், உங்களுக்கு வெற்றி யுண்டு. கடல் சூழ்ந்த இவ்வுலகம்- பல செல்வங்களும் பெருகும் இவ்வுலகம்- முழுவதும் உங்கள் கையில்தான் இருக்கும். இது பொய்யாகாது! என்று பாடினார் காரிக்கண்ணனார்.
நீயே, தண்புனல் காவிரிக் கிழவனை;
இவனே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்கொழுநிழல் நெடும்சினை வீழ்பொறுத் தாங்குத்தொல்லோர் மாய்ந்துஎனத் துளங்கல் செல்லாதுநல்இசை முதுகுடி நடுக்கறத் தழீஇ,
இளையது ஆயினும் கிளை அரா எறியும்அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்செருமாண் பஞ்சவர் ஏறே;
நீயே, அறம்துஞ்சு உறந்தைப் பொருநனை;
இவனே, நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியஎனவரைய சாந்தமும், திரைய முத்தமும்இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே;
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்நீல்நிற உருவின் நேமியோனும் என்றுஇருபெரும் தெய்வமும் உடன்நின் றாங்குஉருகெழு தோற்றமோடு உட்குவர விளங்கிஇந்நீர் ஆகலின், இனியவும் உளவோ;
இன்னும் கேண்மின்நும் இசை வாழியவே!
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்! இருவீரும்உடன்நிலை திரியீ ராயின் இமிழ்திரைப்பௌவம் உடுத்த இப் பயம்கெழு மாநிலம்கைஅகப் படுவது பொய் ஆகாதே.
இது காரிக்கண்ணனார் பாடலின் முற்பகுதி. இது அரசர்கள் போர் செய்யாமல் ஒன்றுபட்டு வாழ்வதன் நன்மையை உணர்த்திற்று.
போருக்குத் தடை
இரு மன்னர்களுக்குள் நடக்க இருந்த போர் ஒன்றை நடக்காமல் தடுத்த நிகழ்ச்சி ஒன்று புறநானூற்றில் காணப் படுகின்றது.
அதியமான் நெடுமான் அஞ்சி சிறந்த வீரன்; கொடை வள்ளல்; ஔவையாரிடம் அன்பு பாராட்டும் தமிழ் அன்பன். அவனுடைய வீரத்தையும் புகழையும் கேட்டுத் தொண்டை மான் பொறாமை கொண்டான். அதியமானுடன் போர் செய்ய எண்ணினான். அதன் பொருட்டுப் படை வீரர்களையும், படைக் கலங்களையும் பெருக்கி வந்தான்.
இச் செய்தியை அறிந்த அதியமான், ஔவையாரிடம் ஆலோசனை கேட்டான். அவர் போர் மூளாமல் தடுத்து விடுவதாக உறுதி கூறினார். போர் நிகழ்ந்தால் நாடு நாசமுறும்; ஆதலால் போரைத் தடுக்க வேண்டும் என்பதே அதியமானுடைய கருத்து. இதை அறிந்த ஔவையார் தொண்டைமானிடம் தூதாகச் சென்றார். அவன் ஔவையாரை வரவேற்றான். அவரைத் தனது படைக்கலச் சாலைக்கு அழைத்துச் சென்றான். தான் சேர்த்து வைத்திருக்கும் படைக்கலங்களையெல்லாம் அவருக்குக் காட்டினான்.
அப்பொழுது ஔவையார், அதியமானுடைய வீரத்தையும், அவனுக்குள்ள பொதுமக்கள் ஆதரவையும் தொண்டைமானிடம் எடுத்துக் கூறினார். போர் வராமல் தடுத்தார். இது புறநானூற்றில் காணப்படுவது.
உன்னுடைய படைக்கலங்களாகிய இவைகள் மயிற்பீலி சூட்டப்பட்டுள்ளன; மாலைகள் சூட்டப்பட்டிருக்கின்றன; வலிமையுள்ள நல்ல பிடிகளுடன் காணப்படுகின்றன; எண்ணெய் தடவப்பட்டிருக்கின்றன. அப்படியே புத்தம் புதியனவாக நல்ல பாதுகாப்புள்ள பெரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
அந்த அதியமானுடைய படைக்கலங்களோ இப்படியில்லை. பகைவரைக் குத்தியதனால் கங்கும் நுனியும் முரிந்துவிட்டன. அவைகள் மீண்டும் செப்பனிடும் பொருட்டுக் கொல்லனுடைய வேலையிடமாகிய சிறிய கொட்டகையிலே எந்நாளும் கிடக்கின்றன.
செல்வம் இருக்கும் போது, எல்லோர்க்கும் தாராளமாக உணவளிப்பான். இல்லையானால் உள்ளதனைப் பலரோடும் பங்கிட்டு உண்பான். வறியோரை எல்லாம் காப்பாற்றும் தலைவன் அவன்; இத்தகைய எமது மன்னனுடைய வேற்படைகள் நான் சொல்லிய நிலையில் இருக்கின்றன என்று உரைத்தார்.
இதனால் நீ போர் செய்து பழகாதவன்; இப்பொழுது தான் புதிதாகப் படைக்கலங்கள் சேர்த்திருக்கின்றாய்; எமது மன்னனுக்கு எப்பொழுதும் போர் புரிவதே வேலை. அவன் படைக்கலங்கள் பழமையானவை; அன்றியும் அவன் மக்களுடன் கலந்து வாழ்பவன்; அவனுக்குப் பொதுமக்கள் ஆதரவு உண்டு என்பதை எடுத்துக்காட்டினார் ஔவையார். இதனை,
இவ்வே,
பீலி அணிந்து, மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்துகடிஉடை வியன்நக ரவ்வே,
அவ்வே, பகைவர்க் குத்திக், கோடுநுதி, சிதைந்து,
கொல்துறைக் குற்றுஇலம் மாதோ; என்றும்உண்டாயின் பதம் கொடுத்து,
இல்ஆயின் உடன் உண்ணும்இல்லோர் ஒக்கல் தலைவன்அண்ணல்எம் கோமான், வைந்நுதி வேலே
என்ற பாடலால் காணலாம்.
மேலே எடுத்துக்காட்டியவைகள் சங்க காலத்திலும்- அடிக்கடி போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்திலும்- அதன் கொடுமையை உணர்ந்தவர்கள் இருந்தனர். போரைத் தடுக்க முயன்றனர், அமைதியான வாழ்வை விரும்பும் புலவர்களும் அரசர்களும் இருந்தனர் என்ற உண்மையை உணர்த்துவன.
போர் இல்லாமல் அமைதியுடன் வாழ்வதால்தான் நாட்டுக்கு நன்மையுண்டு; அமைதியை நிலைநாட்டும் மன்னர் களுக்குத்தான் புகழ் உண்டு; போரிலே வென்று வெற்றி வீரர் என்னும் பட்டம் பெறுவதைவிட அமைதியைக் காப்பதனால் தான் பெரும்புகழ் உண்டு, அழியாத நிலைமையும் உண்டு என்பது கம்பன் கருத்து. பண்டைத் தமிழர்களின் கருத்தே கம்பன் உள்ளத்திலும் இவ்வெண்ணத்தை உருவாக்கியது என்று உரைக்கலாம்.
யாரொ டும்பகை கொள்ளிலன் என்றபின்
போர் ஒடுங்கும்; புகழ்ஒடுங் காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்
வேரொ டும்கெடல் வேண்டல்உண் டாகுமோ.
வசிட்டன் இராமனுக்கு அரச நீதி கூறும்போது இவ்வாறு கூறியதாகக் கம்பன் பாடுகின்றான்.
யாரொடும் பகை கொள்ளாமல் சமாதானமாக வாழ முயற்சிப்பதே அரசன் கடமை; இவ்வாறு அரசன் வாழ்கின்றான் என்றபின் அவனுடைய நாட்டிலே போர் தோன்றாது; போர் தோன்றக்கூடிய நிலைமை ஏற்பட்டாலும் அந்நிலைமை மறைந்து போய்விடும்.
போரினால்தான் மன்னர்கள் புகழ்பெற முடியும் என்று சிலர் சொல்லுகின்றனர்; அது உண்மையன்று. போர் மறைந்தாலும், அப்போர் மறைவதற்குக் காரணமாயிருந்த மன்னனுடைய புகழ் மறையாது, குறையாது; வளரும்.
அந்த மன்னனுடைய சேனைகளின் அளவும் ஆற்றலும் குறையாது; பெருகித்தான் நிற்கும். இந்தத் தன்மை உண்டான பின் அந்த மன்னனும், அரசும் அடியோடு அழிந்து போக வேண்டிய நிலைமையும் ஏற்பாடாது. அந்த அரசன் நிலைத்த புகழுடன் வாழ்வான். அவனது நாடும் எல்லாச் செல்வங் களையும் பெற்று இனிது வாழும்.
இதுவே மேலே காட்டிய கம்பன் செய்யுளில் காணும் பொருள்.
போரால் தமிழகம் அடைந்த நிலையை நன்றாக அறிந்தவன் கம்பன்; போரால் நாட்டில் ஏற்பட்ட நாசங்களைக் கண்ணாரக் கண்டவன் கம்பன். ஆதலால்தான் இத்தகைய அரிய நீதியை வசிட்டன் வாயால் உரைத்தான்.
போர்க் கொடுமை!
போரின் கொடுமையைப் பற்றி ஏறக்குறைய நூறு ஆண்டு களுக்கு முன்னிருந்த இராமலிங்க அடிகள் தெளிவாகப் பாடியிருக்கின்றார். போரினால் ஏற்படும் இழப்பும் துன்பமும் அவர் உள்ளத்தை உலுக்கிவிட்டன. அவற்றை எண்ணி எண்ணி ஏக்கம் அடைகின்றார். உலகிலேயே போர் இல்லாமல் என்றும் அமைதி நிலவவேண்டும் என்பதே வடலூர்ப் பெரியாரின் கருத்து.
அரங்கினில் படைகொண்டு உயிர்க்கொலை புரியும்அறக்கடை யவரினும் கடையேன்
போர்க்களத்திலே கொல்லும் கருவியைக் கையில் ஏந்தி நின்று உயிர்க்கொலை புரிகின்றவர்கள் கடைப்பட்ட மனிதர்கள். அவர்கள் நாட்டை நாசமாக்கும் போர் வெறியர்கள் என்று வெறுத்துப் பேசுகின்றார்;
வீணில் போர் இழை வெறியர்புகழ்பெறு வெறியர்.
வீணாகப் போர் புரிகின்றவர்கள்; போர் வெறி பிடித்தவர்கள், வீணர்கள் என்று கடிந்து கூறுகிறார்.
உலகரசு ஆள்வோர்,
உறைமுடிவாள் கொண்டு, ஒருவரை ஒருவர்உயிர்அறச் செகுத்தனர், எனவேதரை உறச் சிறியேன் கேட்ட போதெல்லாம்தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன்
என்று பாடுகின்றார். உலகிலே அரசாளுவோர், உறையிலே கிடந்த வாளை உருவிக்கொண்டு, ஒருவரை ஒருவர் பகைத்து உயிர்களைக் கொன்று குவித்தனர் என்ற செய்தியை நான் கேட்டபோதெல்லாம் நடுங்கினேன்; என் உள்ளம் தளர்ந்து நடுநடுங்கித் திகைப்படைந்தேன் என்று போரிலே தமக்குள்ள வெறுப்பைப் புலப்படுத்துகின்றார்.
போரின் கொடுமையைப் பற்றி இவ்வளவு கடுமையாக வெறுத்துக் கூறிய வேறு புலவர்களைக் காண முடியாது. போரினால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் விளைவைப் பற்றி வடலூர் வள்ளலார் நன்றாக உணர்ந்தவர்.
உலக மக்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும்; சாதி, மத, இன வேறுபாடற்ற சமரச சன்மார்க்கம் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்ற பரந்த நோக்கம் உள்ளவர் இராமலிங்க அடிகள். போர் நிகழ்ந்தால் இத்தகைய ஒற்றுமைக்கு இடமில்லை; உலகம் ஒன்றுபட முடியாது என்பதே அவர் கருத்து.
போரின் பலன் வறுமைதான்; வறுமையால் மக்கள் ஒழுக்கங் கெடும்; வறுமையால் வாடுவோர்பால் மனிதத் தன்மை கூட மறைந்துவிடும்; தாம் வாழ்ந்தால் போதும் என்னும் தந்நலப் பேயைப் பேணி வளர்ப்பது வறுமைதான். இவ்வுண்மையைச் சிந்தித்துத் தெளிந்தவர் இராமலிங்க அடிகள். ஆதலால்தான், போரை- போர் செய்வோரை- போர் வெறி பிடித்தவர்களை- அவ்வளவு வன்மையாகக் கண்டித்துப் பாடினார்.
மேலே கூறியவைகளைக் கொண்டு தமிழகத்துச் சான்றோர்களின் பேரறிவைக் காணலாம். சங்க காலம் முதல் இன்று வரையிலும் போரை வெறுத்து அமைதியை விரும்பும் அறிஞர்கள் தமிழகத்தில் வாழ்ந்தனர், வாழ்கின்றனர் என்பதில் ஐயம் இல்லை.
புறநானூறு, பதிற்றுப்பத்துப் போன்ற நூல்களைப் பார்த்து விட்டுத் தமிழர்கள் போர்வெறி பிடித்தவர்கள் என்று கூறுவோர் உண்டு. இது உண்மை அன்று. தமிழர்கள் செய்த போர்கள் அறத்தை நிலைநாட்டப் புரிந்த போர்களாகத்தான் இருந்தன. இராமலிங்க அடிகள் பாடுகின்றபடி வீணில் போர் இழை வெறியர் களாகத் தமிழர்கள் இருந்ததில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் குறிக்கோள் அமைதி, சமாதானம் என்பது உறுதி.
இதுவரையிலும் கூறியவைகளைக்கொண்டு பண்டைத் தமிழரின் அரசியல் பற்றிய பல உண்மைகளை அறியலாம்.
பண்டைத் தமிழ் மக்கள் அரசியலை அலட்சியம் பண்ணி விடவில்லை. நாட்டிலே நல்லரசாட்சி நிலவவேண்டும் என்பதிலே கவலை கொண்டிருந்தனர். அவர்கள் மக்களுக்கு நன்மை செய்த மன்னர்களைத் தெய்வமாகப் போற்றினார்கள். அம்மன்னர்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.
மன்னர்கள் சர்வாதிகாரம் படைத்தவர்களாயிருந்தால், அவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் அதிகாரச் செருக்கு அவர்களை ஆட்டிவைக்காமல் விடாது. ஆதலால், பண்டை மன்னர்களுக்குச் சர்வாதிகாரம் பிறப்புரிமையாக இருந்தும் அவர்கள் புலவர்களின் அறிவுரைகளைப் போற்றி வந்தனர்; ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்னும் மந்திரி சபையையும், பொதுஜன சபையையும் அமைத்துக்கொண்டு அரசாட்சி நடத்தி வந்தனர்.
பண்டைத் தமிழ் மன்னர்கள், ஆட்சியிலே சிறு குற்றம் புரிவோர்க்கும் பெருந்தண்டனை கொடுத்தனர்.
பண்டை மன்னர்கள் பெரும்பாலும் சமாதானத்தையே விரும்பினர். சமாதான காலத்தில் நாடு செழிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. இவ்வுண்மைகளை நமக்குப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
முற்றும்.
★ ★ ★



