பழந்தமிழர் அரசியல்
சாமி. சிதம்பரனார்

அறப்போர் புரிந்த அரசர்கள்

பழந்தமிழ் நாட்டிலே எப்பொழுதும் அமைதி குடி கொண்டிருந்தது என்று கூற முடியாது. பழந்தமிழ் வேந்தர்கள் அமைதியுடன் வாழ்ந்தனர் என்று சொல்லவும் முடியாது. அவர்கள் அடிக்கடி போர் புரிந்து கொண்டிருந்தனர். முடியுடைய வேந்தர்கள் மூவரும் ஒற்றுமையுடன் உறைந்த காலம் குறைவுதான்; போரிட்டுப் பொழுது போக்கிய காலந்தான் மிகுதி.

இவ்வாறு எண்ணும்படிதான் புறப்பொருள் இலக்கியங்கள் இருக்கின்றன. புறநானூறும், பதிற்றுப்பத்தும் தமிழ் வேந்தர் களின் வீரத்தைப் போற்றும் நூல்கள். அவர்கள் தம் போர் வெற்றியைப் புகழ்ந்து பேசும் பாடல்களே அவற்றுள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

புகழுக்காகப் போர்

புகழ் வேண்டிப் போர் புரிந்த மன்னர்கள் சிலரும் பண்டைத் தமிழகத்தில் இருந்தனர். தமிழ் மன்னர்களிலே சிலர் புகழுக்காகவே போர் புரிந்து வந்தனர். இவ்வுண்மையை விளக்கும் பாடல்கள் பல, பழந்தமிழ் நூல்களிலே காணப்படுகின்றன. உதாரணமாகப் புறநானூற்றுப் பாட்டு ஒன்றைக் காண்போம்.

சிறப்பு மிகுந்த மரபினர் பொருளையும் இன்பத்தையும் உயர்ந்தனவென்று எண்ணமாட்டார்கள்; அவர்கள் அவை களை அறத்திற்குப் பிற்பட்டன என்றே எண்ணுவர். அதுபோல; அறத்தைக் காப்பதற்காகவே உயர்ந்து நிற்கும் உனது குடை, சேர பாண்டியர்களின் குடைகள் பின்னிற்கும்படி சிறந்து முன்னிற்கும். ஒளி மிகுந்த முழுமதியைப்போல் உனது புகழ் உயர்ந்து நெடுந்தூரம் பரவி நிற்கும். நீயும் அப் புகழ்வேட்டையையே விரும்புவாய். அதன் பொருட்டு, பகைவரை வெல்லுவதற்காகப் போர்ப் பாசறையையே நீ விரும்புவாய்; இதைத் தவிர வேறு ஒன்றையும் விரும்பமாட்டாய்.

தமது தந்தங்களின்முனை மழுங்கும்படி, மோதி வலிமை யுள்ள பகைவரின் கோட்டைச் சுவரிலே பாயும், உனது யானை களும் சும்மா அடங்கிக் கிடப்பன அல்ல.

வீர கண்டாமணியை அணிந்த உனது படை வீரர்களோ, போர் என்ற சொல்லைக் கேட்டாலோ இதோ வந்தோம், வந்தோம் என்று குதித்தெழுவார்கள். காடுகளைக் கடந்து செல்லவேண்டிய நாடு; தூரத்தில் உள்ள நாடு; அங்கு நாங்கள் வரமாட்டோம் என்று சொல்லமாட்டார்கள்.

கல் என்ற ஆரவாரத்துடன், விழா நிறைந்த வேற்று நாடாகிய அவ்விடத்திலே தங்குவாய்; அவ்விழாவிலே கலந்து கொள்ளுவாய். கீழ்க்கடல் பின்னே நிற்க, மேற்குக் கடலின் அலைகள் உனது குதிரையின் குளம்புகளை மோதும்படி இந் நாட்டை வலமாக வந்துகொண்டே யிருப்பாய். வடநாட்டு அரசர்கள், நீ இவ்வாறு செய்யக்கூடியவன் என்று நினைத்து அஞ்சுகின்றனர். அதனால் அவர்கள் நெஞ்சத்திலே நடுங்கும் படியான துன்பம் மிகுந்தது. அத் துன்பம் அவர்களைத் தூங்காத கண்களை உடையவர்களாகச் செய்தது.

இதுவே அந்தப் புறநானூற்றுப் பாடலில் அடங்கியுள்ள பொருள். கோவூர் கிழார் என்னும் புலவரால் சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப் பாடப்பட்டது.

சிறப்புடை மரபில், பொருளும், இன்பமும்,
அறத்துவழிப் படூஉம், தோற்றம் போல,
இருகுடை பின்பட ஓங்கிய, ஒருகுடைஉருகெழு மதியின் நிவந்துசேண் விளங்கநல்இசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்பாசறை அல்லது நீஒல் லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்கடிமதில் பாயும்நின் களிறு அடங் கலவே;
போர்எனில் புகலும் புனைகழல் மறவர்காடு இடைக் கிடந்த, நாடுநனி சேஎய,
செல்வேம் அல்லேம் என்னார்; கல்என்விழவுஉடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்குணகடல் பின்னது ஆகக், குடகடல்வெண்தலைப் புணரி, நின் மான்குளம்பு அலைப்பவலம்முறை வருதலும் உண்டு, என்று அலம்வந்துநெஞ்சம் நடுங்கு அவலம் பாயத்துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே. (புறம். 31)

இப்பாடல், புகழ் விரும்பிப் போர் செய்த மன்னர்கள் சிலர் தமிழகத்தில் இருந்தனர் என்பதைக் காட்டுகின்றது.

அவர்கள் புகழை விரும்பிப் போர் புரிந்தார்களாயினும், அவைகள் பெரும்பாலும் அநீதியை எதிர்த்துச் செய்த போர் களாகத்தான் காணப்படுகின்றன; மக்கள் நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு புரிந்த போர்களாகத்தான் காட்சி அளிக்கின்றன. போர் தோன்றுவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அந்தக் காரணம் அறத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கலாம் அல்லாதவைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கலாம்.

பழந்தமிழ் மன்னர்கள் புரிந்த போர்களிலே பெரும் பாலானவை அறத்தை அடிப்படையாகக் கொண்டவை; சிறு பான்மையே அல்லாதவைகளை அடிப்படையாகக் கொண்டவை.

போரால் நாசம்

பண்டைக் காலத்தில் நடந்த சண்டைகளினால் நாட்டின் செல்வங்களுக்கு நாசம் நேர்ந்தது. மக்களால் உழைத்துச் சேர்த்த பண்டங்கள் பாழாக்கப்பட்டன. நாடு நகரங்கள் அழிக்கப் பட்டன. போரினால் இந்தக் காலத்தில் ஏற்படும் நாசம் போலவே அந்தக் காலத்திலும் ஏற்பட்டன என்பதில் ஐயம் இல்லை. இதனை,

வாடுக இறைவநின் கண்ணி ஒன்னார்நாடுசுடு கமழ்புகை எறித்தலானே (புறம் 6)

என்ற பகுதியாற் காணலாம். இறைவனே, நீ அணிந்திருக்கும் மலர்மாலை, பகைவர்களின் நாடுகளைச் சுட்டெரிப்பதனால் எழும் புகை வீசுவதனால் வாடுவதாக. வேறொன்றினாலும் வாடுவதில்லை என்பதே இதன் பொருள். இது பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியது. இதனால் பண்டைக்காலப் போரினால் நாடு நகரங்கள் பாழ்பட்டமை காணலாம். நாடு நகரங்கள் தீக்கிரை யாகும்போது பண்டங்கள் எல்லாம் பாழாகும் என்பதிலும் ஐயம் இல்லை.

வென்ற மன்னர்கள், தோற்ற மன்னர்களின் கோட்டைகளைச் சிதைப்பார்கள். மாடமாளிகைகளை இடித்துத் தரை மட்டமாக்குவார்கள். மாடமாளிகைள் இருந்த இடங்கள் எல்லாம் கழுதைகள் மேயும் குட்டிச் சுவர்களாகிவிடும். அந்த இடங்கள் கழுதைகள் பூட்டிய ஏரால் உழப்படும்.

நல்ல வளம் பொருந்திய வயல்கள் எல்லாம் பாழாக்கப்படும்; நீர் நிறைந்த நஞ்சை நிலங்கள் எல்லாம் குதிரைகள் பூட்டிய தேரோடும் திடல்களாக்கப்படும்.

போரால் இத்தகைய நாசங்கள் நிகழும். பகைவர் மேல் ஆத்திரங் கொண்ட மன்னர்கள் இவ்வாறு செய்வார்கள். வெற்றி வெறி இத்தகைய நாசவேலைகளையெல்லாம் செய்யத் தூண்டும்.

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்பாழ்செய தனையவர் நனம்தலை நல்எயில்,
புள்ளினம் இமிழும் புகள்சால் விளைவயல்வெள்உளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்து. (புறம். 15)

விரைந்து செல்லும் உன்னுடைய தேர்களால் தெருவிலே குழி விழுந்து சேறாகிவிடும். அந்தப் பள்ளங்களில் வெண்மையான வாயையுடைய அற்பமான கழுதைகளை ஏரிலே பூட்டி ஓட்டு வாய். இவ்வாறு எதிரிகளின் கோட்டைகளைப் பாழ்படுத்தினாய். உன்னுடைய பகைவர் நாட்டிலே பறவைக் கூட்டங்கள் நிறைந்து ஓசையிட்டுக் கொண்டிருக்கின்ற சிறந்த விளைநிலங்களை யெல்லாம் பாழ்படுத்தினை; அவ்விளை வயல்களிலே வெண்மை யான பிடரி மயிரையும், செருக்கையும் உடைய குதிரைகளின் குளம்புகள் துவைக்கும்படி உனது தேர்களை ஓட்டினை.

இதுவும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல்.

போர் அறம்

பண்டைக் காலத்தில் இக்காலத்தைப் போலவே போரினால் நாட்டுக்குக் கேடு விளைந்தது என்பதில் ஐயம் இல்லை. ஆனால் ஒன்று; பண்டங்கள் பாழாயினவேயன்றிப் பொதுமக்கள் உயிரை அவர்கள் பாழ்படுத்தவில்லை. போர் முனையில் நிற்போர்தான் உயிரிழந்தனர். போர் முனைக்குத் தகுதி யற்றவர்கள் பாதுகாக்கப் பட்டனர். போரை விரும்பாத மக்களும் தப்பித்துக் கொள்ளலாம். இந்த அறத்தைத் தமிழ் மன்னர்கள் பின்பற்றி வந்தனர்.

போர் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் பொது மக்களுக்கு அறிவித்துவிடுவார்கள். பொதுமக்கள் போர் நிகழும் இடத்திலிருந்து தப்பித்து வெளியேறுவதற்குக் காலங் கொடுப் பார்கள். அவர்கள் வெளியேறிய பின்பே போர் தொடுப்பார்கள். இதுதான் சிறந்த யுத்த தர்மம் ஆகும்.

ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும், பேணித்தென்புலம் வாழ்நர்க்கு அரும்கடன் இறுக்கும்பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்எம்அம்பு கடுவிடுதும். நும் அரண் சேர்மின்(புறம். 9)

பசுவும் பசுக்களின் தன்மையுடைய பார்ப்பனர்களும், பெண்களும், நோயாளிகளும், முன்னோர் முறையைப் பாதுகாத்து, பிதுர் உலகில் வாழ்வோர்க்கு அரிய கடன்களைச் செய்வதற்குரிய புதல்வரைப் பெறாதவர்களும் வெளியேறி விடுங்கள். விரைவிலே எமது கணையைத் தொடுத்துவிட்டுப் போர் செய்யப் போகின்றோம். ஆதலால், உங்கள் உயிருக்குக் கேடு நேராமல் பாதுகாப்பான இடத்தைத் தேடிக்கொண்டு போய் விடுங்கள். இவ்வாறு போர் தொடங்குமுன் அறிவிப்பார்கள்.

இதுதான் தமிழர் பின்பற்றி வந்த போர் அறம். தமிழ் மன்னர்கள் இந்த அறத்தைப் பின்பற்றியே போர் புரிந்து வந்தனர். இக்காலத்தில் போர் நிகழ்ந்தால், படை வீரர்களின் உயிரை விடப் பொதுமக்களின் உயிர்களே மிகுதியாகக் கொள்ளை கொள்ளப்படுகின்றன. அமைதியான வாழ்வை விரும்பும் பொதுமக்களை அழிக்கும் படை வகைகளே இக் காலத்திலே மிகுதியாகக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இது மறப்போருக்கே அடிப்படை. போரிலே தோற்றுப்போன நாட்டை மீண்டும் தலை தூக்கவிடாதபடி நசுக்குவதே இக்கால போர் வெறியர்களின் மனப்பான்மை. பண்டைத் தமிழ் மன்னர்களின் தன்மை இதற்கு மாறானது. பகைவரிடம் கவர்ந்த நாட்டையும் தம்நாடு போலவே பாதுகாப்பார்கள்.

அகநாடு புகுந்து அவர் அருப்பம் வௌவி,
யாண்டுபலகழிய வேண்டுபுலத்து இறுத்து,
மேம்பட மரீஇய வெல்போர்க் குரிசில்.

(மதுரைக்காஞ்சி. 149-151)

பகைவர்களுடைய நாடுகளிலே புகுந்து அவர்களுடைய அரண்களைப் பிடித்துக்கொள்ளுவாய். நீ கைப்பற்றிய அப்பகைவர் களின் நாடுகளிலே பல்லாண்டுகள் தங்கியிருப்பாய். போரினால் பாழ்பட்ட அந்நாடுகள் வளம் பெற்று வாழ்வதற்கான சீர்திருத்தங்களைச் செய்வாய். இத்தகைய பெருமையும் போர் வல்லமையும் பொருந்தியவனே என்று பாண்டிய மன்னன் பாராட்டப்படுகின்றான். இதனால் அக்காலத்து மன்னர்கள் எந்த நாட்டு மக்களிடமும் வெறுப்புக் கொண்டவர்கள் அல்லர் என்பதைக் காணலாம்.

தோற்றாரைத் துன்புறுத்தார்

பண்டைத் தமிழ் வேந்தர்களிடம் மற்றொரு சிறந்த அறம் குடிகொண்டிருந்தது. அவர்கள் தோற்றுப் போனவர்களைத் துன்புறுத்துவது அறம் அன்று என எண்ணினர். போரிலே அஞ்சி ஓடுகின்றவர்களை விரட்டிப் பிடிக்க மாட்டார்கள். தோற்றுப் போனவர்களைச் சிறையிலே பிடித்து வைத்துத் துன்புறுத்த மாட்டார்கள். இப்படிச் செய்வது வீரத்திற்கு- வெற்றிக்கு- ஆண்மைக்கு- அழகன்று என்று கருதினர். போரிலே தோற்றுப் பணிந்தவர்களைத் துன்புறுத்துவதும், ஓடிப் போனவர் களை விரட்டிப் பிடித்துக்கொண்டு வந்து துன்புறுத்துவதும் தமிழர் தகைமை அல்ல என்பதே பழந்தமிழர் கொள்கை. இவ்வுண்மையைச் சிலப்பதிகாரத்தாற் காணலாம்.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டிலே, தான் சிறை பிடித்த வேந்தர்களைக் கொண்டுபோய்த் தமிழகத்து மன்னர்களுக்குக் காட்டும்படி நீலன் என்னும் படைத் தலைவனை ஏவினான். அவன் செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்டுச் சிறை செய்யப்பட்ட கனக- விசயர்களைத் தமிழ் மன்னர்களிடம் அழைத்துச் சென்றான்.

முதலில் சோழநாடு புகுந்தான் நீலன். சோழன் சித்திர மண்டபத்திலே இருந்தபோது, நீலன் அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு சென்றான். சோழனை வணங்கினான். அப்பொழுது சோழன் கூறியது குறிப்பிடத்தக்கது.

பெரிய போர்க்களத்திலே மிகுந்த ஆண்மையுடன் போர் செய்து, தங்கள் வாள் குடை முதலியவைகளைப் போர்க் களத்திலே இழந்தவர்கள்; கொலையாகிய போரை இனிச் செய்யமாட்டோம் என்பதற்கு அடையாளமான கோலம் பூண்டவர்கள்; தங்கள் உயிரைக் காத்துக்கொள்வதற்காக ஓடினவர்கள் ஆகிய இத்தகையோரைப் போர்க்களத்திலே சிறை பிடித்தல் வெற்றியாகாது என்று தன் சேனைத் தலைவனைப் பார்த்து உரைத்தான்.

நின் அமர் அழுவத்து, நெடும்போர் ஆண்மையொடுவாளும், குடையும், மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து, உயிர்உய்த் தோரை,
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று; எனதலைத்தேர்த் தானைத்தலைவற்கு உரைத்தனன்.

(சிலப். நடுகல். 90-94)

இந்நிகழ்ச்சி சிலப்பதிகாரத்திற் காணப்படுவது. போரிலே தோற்றவர்களைச் சிறை செய்வது போர் வெற்றியன்று என்பதைக் குறித்தது இது. இந்த அறத்திற்கு மாறாக நடந்த செங்குட்டுவன் செயலைச் சோழன் வெறுத்தான். ஆதலால் அவன், சேரன் படைத் தலைவனாகிய நீலனிடம் முகங் கொடுத்துக்கூட உரையாடவில்லை; தன் படைத்தலைவன் முகத்தைப் பார்த்து மேலே கூறியவாறு உரைத்தான்.

இந் நீலன், தோற்ற மன்னர்களைப் பாண்டியனிடம் காட்டச் சென்றபோது, பாண்டியன் புகன்றதும் குறிப்பிடத் தக்கது.

போர்க்களத்தின் வெற்றி, பகை மன்னன் பக்கம் ஆகும் படி, போர்க்களத்தைத் துறந்து தவக்கோலம் பூண்டு ஓடியவர் களின் மேல் மிகுந்த சினம் கொண்டு, அவர்களைப் பிடித்துத் துன்புறுத்துகின்றவனுடைய போர் வெற்றி புதுமையான வெற்றி யாகவே இருக்கின்றது! என்றான் வெற்றிவேல் செழியன்.

அமர்க்களம் அரசனது ஆகத் துறந்துதவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல்கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்புதுவது! என்றனன் போர்வேல் செழியன்.

(சிலப். நடுகல். 104- 107)

இவ்வாறு பாண்டியன் தமிழர்களின் போர் நீதியை எடுத்துரைத்தான். செங்குட்டுவன் செயலை இகழ்ந்து பேசினான்.

வெற்றி வீரர்களுக்குப் பாராட்டு

பண்டைத் தமிழரசர்கள். போரிலே மாண்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்து வந்தனர். மாண்டவர்களின் மைந்தர்களைப் பாதுகாத்து வந்தனர். போரிலே வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். காயம்பட்ட வீரர்களை யெல்லாம் காப்பாற்றினார்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் புரிந்தார்கள். இவைகளையும் போர் நீதிகளாகக் கொண்டிருந்தனர்.

இந்த உண்மையைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.

நீள்நில மன்னர் நெஞ்சுபுகல் அழித்துவானவ மகளிரின் வதுவைசூட்டு அயர்ந்தோர்,
உலையாவெம்சமம் ஊர்ந்து அமர் உழக்கி,
தலையும் தோளும் விலைபெறக் கிடந்தோர்.
நாள்விலைக் கிளையுள், நல் அமர் அழுவத்துவாள்வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர்;
குழிக்கண் பேய்மகள் குரவையின் தொடுத்துவழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர்;
கிளைகள் தம்மொடு கிளர்பூண் ஆகத்துவளையோர் மடிய மடிந்தோர், மைந்தர்;
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய தலைத்தார் வாகை தம்முடிக்கு அணிந்தோர்;
திண்தேர்க் கொடிஞ்சியொடு தேரோர் வீழ.
புண்நோய் குருதியின் பொலிந்த மைந்தர்;
மாற்றுஅரும் சிறப்பின் மணிமுடிக் கருந்தலைகூற்றுக் கண்ணோட அரிந்து களம்கொண்டோர்;
நிறம்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்துபுறம்பெற வந்த போர்வாள் மறவர்;
வருக தாம் என வாகைப் பொலம் தோடுபெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து,
தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்து,
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்ஆடுகொள் மார்போடு அரசுவிளக்கு இருக்கையின்

என்பது சிலப்பதிகாரம்- நீர்ப்படைக் காதை. செங்குட்டுவன் போரிலே வெற்றி பெற்றபின் என்ன செய்தான் என்பதை இவ்வடிகள் குறித்தன.

போரிலே எதிர்த்த பகை மன்னர்களின் மன ஊக்கம் அழியும்படி போர் செய்து தமது வீரத்தை வெளியிட்டுச் சுவர்க்கம் புகுந்தவர்கள், அப் போரிலே பின்னிடாமல் நின்று போர் செய்து தலையும் தோளும் துணிபட்டுக் கிடந்தவர்கள், வாளால் வெற்றியுடன் போர் செய்து பகைவர்களை அழித்து மாண்டு போனவர்கள். உறவினர்களும், தமது மனைவி மார்களும், தம்முடன் இறந்து போகும்படி போரிலே மாண்டவர்கள் ஆகிய இவர்களுடைய மைந்தர்களை யெல்லாம் வருக என்று அழைத்தான். எதிர்த்து வந்தோர் போரிலே மடியும்படி வாட் போர் செய்து வாகைமாலை சூடி நின்ற வீரர்கள், பகைவர்களுடைய தேர்ப்படை வீரர்களைக் கொன்று இரத்தத்துடன் காட்சி யளிக்கும் வீரர்கள், எதிரிகளின் கரிய தலைகளைக் கூற்றுவனும் கண்டு இரங்கும்படி அறுத்துத் தள்ளி வெற்றி பெற்ற வீரர்கள், தம் மார்பில் இருந்த கவசம் சிதைந்தும், மார்பிலே புண் பட்டும், அஞ்சாமல் எதிரிகளைப் புறமிட்டு ஓடும்படி செய்துவந்த வீரர்கள்- இவர்களையும் வருக என்று அழைத்தான்.

இவர்களுக்கெல்லாம், அவர்கள் பெற்ற வெற்றிக்கு அடை யாளமாகப் பொன்னாலாகிய வாகைப் பூக்களை அளித்தான். தான் பிறந்த நாளில் கொடுக்கும் கொடையை விட மிகுதியாகப் பரிசளித்தான். நீண்டநேரம் தங்கியிருந்து பரிசளித்து அவர் களையெல்லாம் பாராட்டினான்.

இச்செய்திகளே மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில் கூறப்பட்டன.

போரினால் நாசமடைந்த நாடுகளை மீண்டும் வளப் படுத்துவது பண்டைக்கால மன்னர்களின் பண்பு. போரால் பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்க மாட்டார்கள். அவர்கள் தப்பிப் பிழைக்கும்படி முன்னறிவிப்புக் கொடுத்து விடுவார்கள். போரிலே தோற்றுப் போனவர்களைப் பிடித்துத் துன்புறுத்துவது போர் வெற்றி ஆகாது என்று எண்ணினார்கள். போரிலே மாண்டு போனவர்களின் மைந்தர்களுக்குப் போர் வீரர்களுக்குரிய பெருமையைக் கொடுத்தார்கள்; பரிசும் கொடுத்தார்கள். போரிலே வெற்றி பெற்ற வீரர்களுக்கெல்லாம் அவர்கள் மனம் மகிழும்படி பரிசளித்துப் பாராட்டினார்கள். இவ்வுண்மை களையெல்லாம் மேலே காட்டிய சான்றுகளாற் காணலாம்.

போரிற் கவர்ந்த பொருள்

பண்டைத் தமிழ்மன்னர்கள் பகைவர் நாட்டில் கவர்ந்த செல்வங்களைத் தம் நலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அவைகளையெல்லாம், இரவலர்களுக்கும், கலைஞர்களுக்கும், வீரர்களுக்கும் வழங்கி விடுவார்கள். இந்த உண்மையையும் இலக்கியங்களிலே காணலாம்.

பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற அரிய என்னாது, ஓம்பாது வீசி

என்பது பதிற்றுப்பத்து. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் சிறப்பைக் கூறும் பகுதி இது. ஐந்தாம் பத்து.

எவ்வளவு பெரிய செல்வமானாலும், போரிலே வெற்றி பெற்றுப் பகைவர்கள் நாட்டிலே கவர்ந்தவைகளை, இவைகள் கிடைத்தற்கரியவை; நாமே வைத்துப் பாதுகாக்கவேண்டும் என்று எண்ணமாட்டாய்; இரவலர்களுக்கும் வீரர்களுக்கும் அள்ளிக் கொடுத்துவிடுவாய் என்பதுதான் மேலே காட்டிய அடிகளின் பொருள்.

அரசியல் எதிரிகளுக்கு மன்னிப்பு

பண்டைத் தமிழரசர்களிடம் மற்றொரு பெரும் பண்பு இருந்தது. அவர்கள் தம் நாட்டிலே நல்ல செயல்களைச் செய்யும்போது சிறையில் வைத்திருப்பவர்களையெல்லாம் விடுதலை செய்வார்கள். போரிலே பணியாதவர்களைச் சிறை பிடித்து வைத்திருப்பது அவர்கள் வழக்கம். அவர்களையும் நீண்டநாள் சிறையிலே வைத்துத் துன்புறுத்த மாட்டார்கள். சிறப்பாக, தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் நடத்தத் தொடங்கும் பொழுது, அரசியற் கைதிகளாக இருக்கின்றவர்கள் அனை வரையும் விடுதலை செய்து விடுவார்கள்.

கொடித்தேர் வேந்தனொடு கடவி மன்னர்அடித்தளை நீக்க அருள்சுரந்து ஒருபால்

என்பது சிலப்பதிகாரம்- இந்திர விழவு ஊர் எடுத்த காதை- இந்திர விழாத் தொடங்கும் போது சோழனுடைய பகைவேந்தர்களையும், அவர்கள் கால் விலங்கைக் கழற்றிச் சிறையிலிருந்து விடுதலை செய்வார்கள்; இவ்வாறு அவர்களிடம் இரக்கங் காட்டுவார்கள் என்ற கருத்தை மேலே காட்டிய அடிகள் கூறுகின்றன.

வரி நீக்கம்

நல்ல நாட்களைக் கொண்டாடும் போது, பழந்தமிழ் மன்னர்கள், குடிமக்களின் வரியையும் தள்ளிவிடுவார்கள்.

சிறைப்படு கோட்டம் சீமின்! யாவதும்கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்!

சிறைக் கோட்டத்தைத் திறந்துவிடுங்கள்; வரிச் சுமையால் அவதியுறும் மக்களின் வரிகளைத் தள்ளிவிடுங்கள் என்பது கட்டுரை காதையில் காணப்படும் செய்தி. காளி கோயிலுக்கு விழாச் செய்யத் தொடங்கிய பாண்டியன் இவ்வாறு அறிவித்த தாகக் கதை.

சிறையோர் கோட்டம் சீமின்! யாவதும்கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மின்!

சிறைப்பட்டிருப்பவர்களை, சிறைக் கோட்டக் கதவுகளைத் திறந்து விடுதலை செய்யுங்கள். நாட்டினருடைய வரிச் சுமை களைத் தள்ளுபடி செய்யுங்கள்.

இவ்வாறு செங்குட்டுவன், கண்ணகிக்குக் கல்நாட்டும் போது கட்டளையிட்டான். இவன் கனக- விசயர்களையும், சிறை பட்டிருந்த ஏனைய வேந்தர்களையும் விடுதலை செய்தான் என்றே சிலப்பதிகாரம் சொல்லுகிறது.

சோழன், பாண்டியன், சேரன் ஆகிய மூவேந்தர்களும், நல்ல நாட்களிலே- சிறப்பாகத் திருவிழாத் தொடங்கும் நாட்களிலே- அரசியற் கைதிகளை எல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்து வந்தனர் என்பதைக் காணலாம்.

இவ்வாறு எதிரிகளை மன்னித்து அவர்களை விடுதலை செய்வது ஒரு சிறந்த அரசியல் முறையாகும். எதிரிகளைத் தமது நட்பினர்களாகச் செய்து கொள்வதற்கு இம்முறை வழிகோலுவதாகும்; பகைமை குறைவதற்கும் வழியாகும்.

போர் வெற்றிக்குப் பின்னர், பண்டைத் தமிழ் மன்னர்கள் தம் பகை வேந்தர்கள் பால் எப்படி நடந்து கொண்டனர் என்பதைக் குறிக்க இந்நிகழ்ச்சிகள் போதுமானவை.

அரசியல் எதிரிகளைஅடக்கி ஒடுக்கி, நிலையான எதிரிகளாக வைத்திருப்பது சிறந்த அரசியல் அறிவாகாது. அவர்களை நண்பர்களாகச் செய்து கொண்டு நாட்டு மக்களின் வாழ்வையே சிறந்த குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி புரிவதுதான் உயர்ந்த அரசியலாகும்; மக்கள் ஆட்சிக்குரிய மாண்பாகும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். அரசியற் பகைவர்களுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்த செயலே இதற்குச் சான்றாகும்.

வரிச் சுமையால் வாடும் குடிமக்களுக்கு ஆறுதல் அளிப்பதும் அரச நீதியாகும். பண்டை வேந்தர்கள் இந் நீதியைப் பின்பற்றினர். வரி கட்ட முடியாதவர்களுக்கு, வரியைத் தள்ளிக் கொடுத்தனர். இவ்வாறு செய்து குடிமக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று வாழ்ந்தனர் அரசர்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *