
பழந்தமிழர் அரசியல்
சாமி. சிதம்பரனார்
குற்றமும் தண்டனையும்
குற்றங்கள் குறையும் வழி
தந்நலத்தையே குறிக்கோளாகக் கொண்ட மனிதர்கள் எதையும் செய்யத் துணிவார்கள்; அவர்கள் பழி பாவங்களுக்குப் பயப்பட மாட்டார்கள். பிறரைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல் தாம் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பதுதான் தந்நலமாகும். ஏனையோரிடம் இரக்கங் காட்டாத இத்தகைய மனிதர்களே பெரிய குற்றவாளிகள்; மனித சமூகத்திற்குத் தீராத நோயாளிகள். இந்த நோயைப் போக்கத் தகுந்த மருந்து கொடுத்தாக வேண்டும்; இந்தக் குற்றவாளிகளைச் சீர்திருத்தம் செய்தாக வேண்டும். திருந்தாத கொடிய குற்றவாளிகளுக்குக் கடுந் தண்டனை கொடுத்தாக வேண்டும்.
மனித சமுதாயத்தில் குற்றங்கள் பெருகாமல் குறைய வேண்டுமானால் குற்றவாளிகளுக்குக் கொடிய தண்டனைகள் கொடுத்தாக வேண்டும்; பெரும் குற்றம் புரிவோரைக் கடுமையாகத் தண்டிப்பதிலே தவறில்லை. குற்றம் புரிகின்றவர் சிலர்; குற்றம் புரியாதவர்கள் பலர். சிலர் செய்யும் பிழைகளால்-குற்றங்களால்- கொடுமைகளால்- பலர் தீமையடைகின்றனர். பலர் நன்மைக் காகச் சிலரைத் துன்புறுத்துவது- தண்டிப்பது- இவைகளின் வாயிலாக அவர்களை நல்லவர்களாக்குவது- அறமாகும்; நீதியும் நேர்மையுமாகும். இதுவே பண்டும் இன்றும் உள்ள அரசியல் அறம்.
அரசாங்கத்தின் கடமை மக்கள் எல்லோரையும் மகிழ்ச்சி யுடன் வாழ வைப்பதாகும். பெரும்பாலான மக்களின் வாழ்வுக்கு ஒரு சிலர் தந்நல நோக்குடன் பாதகம் செய்வார்களானால் அவர்களை விட்டு வைப்பது தவறு; செங்கோல்முறையாகாது. சமுதாயத்திற்கு இடையூறு செய்வோர், அமைதியான வாழ்க்கையின் அடிப்படையைத் தகர்ப்போர் ஆவார்கள். அவர்களை அடக்குவது அறமுறையேதான். அடக்காமல் விட்டால் அவர்கள் மேலும் குற்றங்களையே செய்வார்கள். புதிய புதிய குற்றவாளிகளும் பிறந்து வளர்ந்து கொண்டே யிருப்பார்கள்.
இந்த உண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால் அவர்கள் குற்றம் புரிந்தோர்க்குக் கடுந் தண்டனைகள் கொடுத்து வந்தனர்.
பண்டைக் காலத்து அறநூல்களிலே இன்னின்ன குற்றங் களுக்கு இன்னின்ன தண்டனைகள் கொடுக்கவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளன. இக்காலத்தினர் சிலர் அந்த அறமுறைகளைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். அவைகள் நாகரிகமற்ற காலத்தில் ஏற்பட்டவை; இக்காலத்திற்கு ஏலாதவை; கருணையற்ற கடுந்தண்டனை முறை மிருகத்தனமானது, மனிதத் தன்மைக்கு மாறானது என்று கூறுகின்றனர்.
குற்றம் புரிந்தால் தப்பித்துக் கொள்ள முடியாது; கடுந்தண்டனைக்கு ஆளாகியே தீர வேண்டும்; மக்கள் சமுதாயத்திற்குத் தீங்கிழைத்தால் மாறுகால், மாறுகை வாங்கப் படும்; உயிருக்கு ஆபத்துண்டாகும் அல்லது நமது செல்வம் பறிபோகும், அல்லது நாம் இந்த நாட்டை விட்டு வெளியேற்றப் படுவோம் என்ற அச்சம் மனித சமுதாயத்தில் நிலவ வேண்டும். அப்பொழுதுதான் குற்றம் புரிய நினைப்போர் தவறு செய்யத் துணிய மாட்டார்கள். குற்றங்களுக்கேற்பக் கடுமையான தண்டனைகள் கொடுப்பதன் வாயிலாகத்தான் குற்றவாளி களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். இந்த உண்மையை உள்ளத்திற்கொண்டுதான் முன்னோர் சிறு குற்றங்களுக்குக் கூடப் பெருந் தண்டனை கொடுத்து வந்தனர்.
பண்டைத் தமிழக வேந்தர்கள்- ஆட்சியாளர்கள்- பொது மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். ஆதலால் அவர்கள் தவறு செய்வோர்க்குக் கடுமையான தண்டனைகளைத் தரப் பின்வாங்கவில்லை; இவ்வாறு செய்வதுதான் அரசநீதி- செங்கோல் முறை- நாட்டு மக்களை நல்வாழ்விலே வாழச் செய்யும் அறநெறி- என்பதை மறவாதிருந்தனர். அறிஞர்களும், அறவோர்களும் இத்தகைய அரசுக்குத் துணை செய்தனர்.
ஒரு பசுங்கன்றைக் கொன்றதற்காகத் தன் மகன் உயிரையே வாங்கினான் ஒரு தமிழ் மன்னன். இரவிலே அந்தணர்கள் வீட்டுக் கதவுகளைக் கையால் தட்டிய பாண்டிய மன்னவன் ஒருவன் அக்குற்றத்திற்காகத் தன் கையையே துண்டித்துக் கொண்டான். இவைகள் கடுந் தண்டனைக்குக் காட்டாக வழங்கும் கதைகள்.
ஒறுக்கும் முறை
குற்றமற்றவர்களைத் தண்டிப்பதுதான் கொடுங் கோன்மை; குற்றமுள்ளவர்களை ஒறுப்பது ஒழுங்குமுறை தான். குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பற்றி நன்றாக ஆராயவேண்டும். அவர்கள் குற்றவாளிகள் தாம் என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர்கள் புரிந்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறே பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன.
நீமெய் கண்ட தீமை காணின்ஒப்ப நாடி அத்தக ஒருத்தி
என்பது புறநானூற்றின் 10-வது பாடல்.
நீ மெய்யாக மனத்தான் ஆராய்ந்து அறுதியிடப் பட்ட கொடுமையை ஒருவன்பால் காணின், அதனை நீதி நூற்குத் தக ஆராய்ந்து, அத் தீமைக்குத் தகத் தண்டஞ் செய்வை
என்பது இவ்வடிகளின் பழைய உரை. சிறிதும் கண்ணோட்டம் செய்யாமல் தீமைக்குத் தகுந்தவாறு ஒறுக்க வேண்டும் என்பதை இப்பாடல் எடுத்துக்காட்டிற்று.
கண்ணோட்டம் இன்றிக் குற்றத்துக்குத் தக்கவாறு தண்டனை தரவேண்டும் என்பதை வள்ளுவரும் வலியுறுத்துகின்றார்.
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்
மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை
என்பது திருக்குறள், 541.
தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, யாவர் மாட்டும் கண்ணோடாது நடுவுநிலைமையைப் பொருந்தி அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்
என்பது இத் திருக்குறளுக்குப் பரிமேலழகர் கூறிய உரை.
இங்கே எடுத்துக்காட்டிய புறநூனூற்றுப் பாட்டின் பகுதியும், திருக்குறளும், பழந் தமிழர்களின் நீதிமுறையை விளக்கின. ஒருவன் குற்றவாளிதானா என்பதை நன்றாக ஆராய்ந்து தெளியவேண்டும். அவன் உண்மையான குற்றவாளி யானால், அறநூல் விதியின்படி அவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். குற்றவாளி யாராயிருந்தாலும் சரி; நண்பன், உறவினன் அல்லது பகைவன் என்று கருதாமல், குற்றத்திற்குத் தக்கபடி தண்டிக்க வேண்டும். இதுவே மனித சமுதாயத்தில் குற்றங்கள் வளராமல் தடுக்கும் வழியாகும். இதுவே நீதி முறையாகும். தண்டனை தருவதிலே சிறிதும் நடுநிலை தவறக்கூடாது என்பதை இப்பாடல்கள் வலியுறுத்துகின்றன.
கொலைத் தண்டனை
கொலைத் தண்டனையே கூடாது என்று கூறுவோர் உண்டு. நாகரிகம் பெற்ற மக்கள் சமுதாயத்தில் கொலைத் தண்டனையைப் பின்பற்றுவது அநாகரிகம்; கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவர், பின்னர், குற்றமற்றவர் என்று மெய்ப்பிக்கப்பட்டால், அவரைத் திருப்பிக் கொண்டுவர முடியாது; ஆதலால் கொலைத் தண்டனை கூடாது. கொலைத் தண்டனையை மறுப்போர் கூறும் கருத்துக் களில் இதுவே முதன்மையானது.
கொலையாளிகள் உயிர்வாழ இடங்கொடுத்தால், மேலும் மேலும் கொலைக் குற்றம் பெருகிக் கொண்டே வரும்; கொலையாளிகள் தொகையும் வளர்ந்து வரும்; கொலைக் குற்றத்திற்குக் கொலைத் தண்டனை கொடுத்தால்தான் கொலைக் குற்றங்களைத் தடுக்க முடியும் என்பதே கொலைத் தண்டனை கொடுக்கும் முறையை மாற்றக்கூடாது என்போர் கூறும் கருத்துக்களில் முதன்மையானது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளியா? அல்லவா? என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும். இத்தகைய திறமை படைத்தவர்கள் கையில்தான் அந்த அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும்; நேர்மையும் நுண்ணறிவும் படைத்தவர்கள் அறங்கூறும் அவையங்களிலே அமர்ந்து நீதி வழங்க வேண்டும். இந்த முறை ஒழுங்காகப் பின்பற்றப்பட்டால் குற்றமற்றவர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட மாட்டார்கள். ஆதலால் குற்றமற்றவர்கள், குற்றவாளிகளாகக் கருதப்பட்டுத் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று வைத்துக்கொண்டு, கொலைத் தண்டனையே கூடாது என்பது பொருந்தாது.
கொலைத் தண்டனை இருக்கவேண்டும் என்பதுதான் முன்னோர்கள் கருத்து; அறநெறிக்கு அடங்கி வாழ்ந்த ஆன்றோர்கள் முடிவு; தெய்வத்திற்கும் அநீதிக்கும் அஞ்சி வாழ்ந்த பண்டைய அறிஞர்களின் கருத்து. இன்றைய உலக அறிஞர்களில் பெரும்பாலோர் கொலைத் தண்டனை முறையை ஆதரிப்பவர்கள் என்பதிலே ஐயம் இல்லை.
பழந்தமிழர் அரசியலிலே கொலைத் தண்டனை கையாளப் பட்டு வந்தது. நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக, அரசாங்கங்கள் கடும் குற்றம் புரிந்தோர்க்குக் கொலைத் தண்டனை கொடுக்கப் பின்வாங்கவில்லை. இந்த உண்மையைத் திருவள்ளுவர் தெளிவாக உரைக்கின்றார்.
கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல்
பைங்கூழ்களைகட்டதனொடு நேர்.
என்பது திருக்குறள், 550.
அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல் உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்
என்பது பரிமேலழகர் தரும் உரை.
கொடியவர் என்றது தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார், என்றிவர் முதலா யினாரை; இவரை வடநூலார் ஆததாயிகள் என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லா வழிப் புற்களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப் படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று.
இது கொடியார் என்பதற்குப் பரிமேலழகர் கொடுத் திருக்கும் விளக்கம்.
தீயிட்டு உடைமைகளையும் உயிர்களையும், பாழ் பண்ணுவோர், நஞ்சிட்டுக் கொலை செய்வோர், ஆயுதங்களால் கொலை செய்வோர், திருடுவோர், வழிப்பறி செய்வோர், கூட்டமாக வந்து கொள்ளையடிப்போர், பிறன் மனையாளை விழைவோர்- இவர்களுக்கெல்லாம் கொலைத் தண்டனை விதிக்க வேண்டும் என்பது வள்ளுவர் கருத்தென்று பரிமேலழகர் விளக்கிக் கூறியிருக்கின்றார்.
பண்டைக் காலத்தில், மேற்கண்ட குற்றவாளிகளுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கும் வழக்கம் இருந்தது. அத்தகைய குற்றவாளிகள் சமுதாயக் கட்டுப்பாட்டையும், வாழ்வையும், நிலைகுலைப்போர் ஆவர்; ஆகையால், அவர்கள் கூட்டம் ஒழிய வேண்டுமானால் கொலைத் தண்டனை கொடுப்பதுதான் செங்கோன்மை என்று கருதினர்.
இன்றைய அறிஞர்கள் சிலர், திருவள்ளுவர் கொலைத் தண்டனைக்கு இணங்காதவர்; ஆதலால் இக்குறளுக்குப் பரிமேலழகர் சொல்லும் உரை பொருந்தாது என்று கூறு கின்றனர். இவர்கள், பைங்கூழ்களை கட்டதனொடு நேர் என்று வள்ளுவர் கொடுத்திருக்கும் உதாரணத்தை மறந்து விடுகின்றனர். கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் தான் அறம் என்பதற்கு ஏற்ற உதாரணம் பயிருக்குக் களையெடுத்தல் என்பதாகும்.
பயிர் நன்றாக வளர்ந்து பலன் தரவேண்டுமானால், அதன் இடையிலே முளைத்த களையை அடியோடு பிடுங்கியெறிய வேண்டும். அப்பொழுதுதான் பயிர் வளரும். களையை அடியோடு பிடுங்கி வீசாமல் அதன் தலையை மட்டும் அறுத்து விடுவார் யாரும் இல்லை. சமுதாயம் நன்றாக வாழவேண்டு மானால் சமூகத் தீங்கிழைப்போரை மனித சமுதாயத்திலே வாழ விடாமல் களைந்தெறிய வேண்டும். அவர்களை அழிக்க வேண்டும். அவர்களுக்குக் கொலைத் தண்டனை கொடுப்பது தான் ஒழுங்கு முறை. இதுவேதான் வள்ளுவர் கருத்து. இக்கருத்தைத்தான் பரிமேலழகர் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.
இதனால், கடுங் குற்றவாளிக்குக் கொலைத் தண்டனை யளிப்பதுதான் செங்கோன்மையாகும் என்பதே பழந்தமிழர் கொள்கையென்பதைக் காணலாம்.
திருட்டுக் குற்றத்துக்குக்கூடக் கொலைத் தண்டனை கொடுப்பதைத் தமிழர்கள் அரசியல் நீதியாகக் கொண்டி ருந்தனர். இதற்குச் சிலப்பதிகாரமும் ஒரு சிறந்த உதாரணமாகும்.
கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வழக்காடச் சென்றாள். அவள் தன்னைக் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி என்று அறிமுகம் செய்து கொண்டாள். அப்பொழுது நெடுஞ்செழியன்,
கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்றுவெள்வேல் கொற்றம் காண்
என்று கூறினான். திருட்டுக் குற்றத்துக்குக் கொலைத் தண்டனை கொடுப்பதே அரச நீதி; பழங்காலத்தில் திருடர்களுக்கும் கொலைத் தண்டனை கொடுத்து வந்தனர் என்ற உண்மையையே இவ்வடிகள் காட்டுகின்றன.
பாண்டியன் நெடுஞ்செழியன், கோவலன் குற்றவாளி தானா என்பதை ஆராய்ந்து பார்க்கவில்லை; பொற்கொல்லன் பேச்சை நம்பித் தண்டனை கொடுத்து விட்டான். இதுதான் பாண்டியன் செய்த பெரும் தவறு. திருட்டுக் குற்றத்துக்குக் கொலைத் தண்டனையளித்தல் அரசநீதி என்பதைச் சிலப்பதிகாரம் ஏற்றுக் கொள்ளுகிறது; திருடர்கள் கூட்டம் வளராதிருக்கவே- அவர்களால் மக்கள் சமுதாயத்திற்கு ஏற்படும் தீமைகளைத் தடுக்கவே- அவர்களுக்கு அரசாங்கம் கொலைத் தண்டனை வழங்கி வந்தது. சிலப்பதிகார காலத்தில் இவ்வழக்கம் நடைமுறையில் இருந்தது.
கொலைத் தண்டனைக்கு உரியவர்கள்
தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன் இல் விழைவார் என்று இவர் முதலாயினார் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று பரிமேலழகர் கூறினார். அவர் காலத்துக்கு முன்னிருந்த இளங்கோவடிகள், கொலைத் தண்டனைக்கு உரியார் இன்னார் என்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
தவம் மறைந்து ஒழுகும் தன்மையி லாளர்;
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்;
அறைபோகு அமைச்சர்; பிறர்மனை நயப்போர்பொய்க்கரி யாளர்; புறம்கூற் றாளர்; என்கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்; எனக் காதம் நான்கும் கடும்குரல் எடுப்பிப்பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும்
என்பது சிலப்பதிகாரம்; இளங்கோ தரும் நீதி.
தம்மைப் பிறர் நம்புவதற்குத் தவவேடத்தில் மறைந்து நின்று, அத்தவத்திற்கு மாறான வழியில் நடக்கும் பொய் வேடத்தார்; தம்மைத் தம் கணவர் நம்பும்படி பொய்யொழுக் கத்தில் மறைந்து நின்று ஒழுகும் வீணாண மகளிர்; தம்மை நம்பி, தம் கையில் பொறுப்பை ஒப்படைத்திருக்கும் அரசரைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்யும் அமைச்சர்கள்; தமது மனைவியர் வீட்டிலே தனித்திருக்க விட்டு, பிறர் மனையிலே தனித்திருக்கும் பெண்டிரை விரும்பும் தூர்த்தர்கள்; தமது மனமறிந்த உண்மையை மறைத்து, நீதிமன்றத்திலேறிப் பொய்க்கரி புகல்வோர்; முன்னே நின்று புகழ்ந்து, பின்னே போய்ப் பழிச் சொற்களைக் கூறும் பழிகாரர்கள்- இவர்கள் எல்லாம் என் கையில் உள்ள பாசத்தில் அகப்படுவோர் என்று நான்கு திசைகளிலும் நான்கு காத தூரம் கேட்கும்படி கடுங்குரல் கொடுக்கும் ஒரு பூதம் மேற்கண்ட குற்றவாளிகளை அப் பூதம் தன் பாசத்தாற் பிணித்து நிலத்திலே மோதி அவர்கள் உயிரை உண்ணும். இத்தகைய பூதம் இருத்தலால் அவ்விடத்திற்குப் பூத சதுக்கம் என்று பெயர். மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில் அமைந்துள்ள பொருள் இதுதான்.
போலித் துறவிகள், கணவனை வஞ்சிக்கும் பெண்கள், அரசர்க்குக் கேடு சூழும் அமைச்சர், பிறர் மனைவியை விரும்பு வோர், பொய்க்கரி புகல்வோர், புறம் பேசுவோர்- இவர்கள் எல்லாரும் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று இதனாற் காணலாம்.
காவிரிப்பூம்பட்டினத்திலே இத்தகைய குற்றவாளிகளைப் பிடித்துக் கயிற்றிலே கட்டி, நிலத்திலே அடித்து உயிரைப் போக்கும் மன்றம் ஒன்று இருந்ததாம். இதன் பெயர் பூத சதுக்கம் என்பது; அங்கு நிற்கும் பூதமே இக்குற்றவாளிகளை இவ்வாறு செய்யுமாம்.
நான்கு தெருக்கள் கூடும் இடத்திற்குச் சந்தி என்று பெயர். ஊர் நடுவிலே, நாற்சந்தி கூடுமிடத்திலே, குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை கொடுக்கும் மன்றம் ஒன்று இருந்தது. அந்த மன்றத்தின் தலைவர் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களைக் கைப்படுப்பதிலே வல்லவர்; அவர் அக் குற்றவாளிகளுக்கு மேற்கூறியவாறு கயிற்றால் கட்டி நிலத்திலே அறைந்து கொல்லும் கடுந் தண்டனை கொடுத்து வந்தார். அந்த மன்றத்திலிருந்து மேற்கண்ட குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கப்படும் என்று உரத்த குரலுடன் அறிவித்துக் கொண்டேயிருப்பார்கள்.
இந்த நீதி மன்றத்தைத்தான் பூத சதுக்கம் என்றும், தண்டனையை நிறைவேற்றும் காவலனைத்தான் பூதம் என்றும் சிலப்பதிகாரம் சித்திரிக்கின்றது. பூத சதுக்கத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளுதல்தான் பொருத்தமாகும்.
மேலே காட்டிய திருக்குறள், சிலப்பதிகாரம் இரண்டினாலும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் யார் யார் என்பதைக் கண்டோம்.
1. தீயிடுவோர்; 2. உணவிலே நஞ்சிடுவோர்; 3. கருவியால் கொலை செய்வோர்; 4. கள்வர்; 5. வழியிலே செல்வோரைத் துன்புறுத்துவோர்; 6. கொள்ளைக் கூட்டத்தார்; 7. பொய்த் தவ வேடத்தார்; 8. கணவனை வஞ்சிக்கும் பெண்டிர்; 9. அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சர்; 10. பிறர்மனை விரும்புவோர்; 11. பொய்க்கரி புகல்வோர்; 12. புறங்கூறுவோர்.
இந்தப் பன்னிரண்டு கும்பல்களைச் சேர்ந்தவர்களும் மனித சமுதாயத்திற்குத் தீங்கு செய்வோர்; சமுதாயக் கட்டுக் கோப்பைச் சீரழிப்போர். இவர்கள் கூட்டத்தைப் பெருக விடாமல் தடுத்தால்தான் மக்கள் மன அமைதியுடன் வாழ முடியும். இந்த உண்மையை முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால்தான், இவர்கள் எல்லாம் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று முடிவு செய்யப்பட்டனர்.
பொய்ச்சாட்சி புகல்வோர்க்கும் கொலைத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. சில வழக்குகளில் குற்றவாளிகள் குற்ற மற்றவர்களாக விடுதலை செய்யப்படுகின்றனர்; குற்றமற்றவர்கள் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுகின்றனர். இதற்குச் சாட்சிகளே முதற் காரணமாவர். குற்றவாளிகளிலே, நீதியை அநீதியாக்கும் பெரும் குற்றவாளிகள் சாட்சிகள்தாம். ஆதலால்தான் பொய்ச்சாட்சி புகன்றோர்க்குக் கொலைத் தண்டனை கொடுத்து வந்தனர் முன்னோர். பழந்தமிழ் நூல்களில் கூறப்பட்டிருக்கும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் வரிசையைப் பார்த்தால் நமக்கு வியப்பைத் தருகின்றது. இவர்களிலே பலருக்குக் கொலைத் தண்டனை விதிக்க இக்காலத்தில் சட்டம் இல்லை. குறிப்பாக, கள்வர், வழிப்பறி செய்வோர், பொய் வேடத்தார், கணவனை வஞ்சிக்கும் காரிகையர், பிறர்மனை விரும்புவோர், பொய்க்கரி புகல்வோர், புறம் கூறுவோர் ஆகியோர்க்குக் கொலைத் தண்டனை விதிப்பதில்லை. இதுதான் இக்கால நீதியாக இருக்கின்றது.
இவர்களுக்கெல்லாம் கொலைத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வோரைப் பரிகசிப்போர் சிலர் உண்டு. இன்னும் மக்களாட்சி நடைபெறும் சில நாடுகளிலே, அரசாங்க அலுவலிலே அமர்ந்துகொண்டு கையுறை (லஞ்சம்) வாங்கு வோர்க்குக் கொலைத் தண்டனையுண்டு; அரசாங்கத்தின் பணத்தை வீணாக்குவோர்க்குக் கொலைத் தண்டனை உண்டு. பல நாடுகளிலே இவர்கள் கொலைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை.
குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கும் பழங்கால நீதி முறைகளைக் கண்டு எள்ளி நகையாடுவதில் பயன் இல்லை; அத்தகைய கொடுந்தண்டனை கொடுத்ததன் கருத்தைத்தான் நாம் காணவேண்டும். இத்தகைய கொடுந் தண்டனைகளால் மனித சமுதாயத்துக்கு நன்மை ஏற்பட்டதா தீமை ஏற்பட்டதா என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
கடுந் தண்டனையின் வாயிலாகத்தான் குற்றங்களை ஒழிக்க முடியும்; கடுந்தண்டனை உண்டு என்றால்தான் குற்றவாளிகள் குற்றம் புரிய அஞ்சுவார்கள். இக்கருத்துடன் தான் கொலைத் தண்டனை போன்ற கொடுந் தண்டனைகளைக் கொடுத்து வந்தனர். இதனால் நல்லபலன் ஏற்பட்டது என்பதிலும் ஐயம் இல்லை.
குற்றம் புரிந்தோர், தப்பித்துக்கொள்ளுவதற்கு வழியும், வசதியும் இருந்தால் குற்றங்களைத் தடுக்க முடியாது; குற்றவாளிகள் பெருகிக்கொண்டுதான் இருப்பார்கள். குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளுவதற்கு வழி வகுத்திருக்கும் அரசாங்கம், நாளடைவில், குற்றவாளிகள்- மனித சமுதாயத்தை மதிக்காதவர்கள்- மக்கள் வாழ்வுக்குக் கேடு சூழ்பவர்கள்- ஆகியோரின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்டதாகவே ஆகிவிடும். இந்த நிலைமை வலுப்பெற்று வளர்ந்தால், தந்நலத்தையே குறிக்கோளாகக் கொண்ட குற்றவாளிகளே ஆளும் பதவிகளை அடைந்து விடுவார்கள். இத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கத்தான் சமுதாயப் புல்லுருவிகளுக்குக் கடுந் தண்டனை விதிக்கும் முறையை முன்னோர்கள் அறநெறியாகக் கொண்டனர். இத்தகைய அறநெறியைத்தான் பண்டைத் தமிழ் மன்னர்களும் பின்பற்றினர்.
குற்றங்களுக்குத் தண்டனையளிப்பதிலே பழந்தமிழ் வேந்தர்கள் கைக்கொண்ட அறநெறி மிகச் சிறந்ததாகும். இதனை இக்கால அரசியல் வல்லுநர்கள் சிந்தித்துப் பார்ப்பார் களானால், குற்றங்களைத் தடுப்பதற்கு, முன்னோர் பின்பற்றிய தண்டனை முறைகள் தவறானவை அல்ல என்பதை ஒப்புக் கொள்ளுவார்கள்.



