பழந்தமிழர் அரசியல்
சாமி. சிதம்பரனார்

மண்ணாசை கொண்ட மன்னர்கள்

நாடு பிடிக்கும் ஆசை

ஆசைகளிலே மூன்றை முதன்மையாகக் கூறுவர். அவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்பன. நீதி நிலவிய பழங்காலத்திலும் பல மன்னர்கள் இந்த ஆசைகளுக்கு ஆளாகித்தான் இருந்தார்கள். மண்ணாசை அதாவது நாடு பிடிக்கும் ஆசை ஒன்றிருந்தால் போதும்; ஏனைய இரண்டு ஆசைகளும் அதைத் தொடர்ந்து வளர்ந்து வந்து கொண்டே யிருக்கும்.

போதும் என்ற மனம் அரசர்க்கு ஆக்கம் தராது; தனது நாட்டை அகலப்படுத்த வேண்டும் என்ற ஆசை வேண்டும்; இவ்வாசையுள்ள மன்னனே குன்றாத புகழுடன் குறையற்று வாழ்வான் என்பது பழையநீதி. தமிழ் மன்னர்களிலே பலர் இந்த நீதிக்கு விலக்கானவர்கள் அல்லர். இதற்குத் தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்களின் வரலாறே போதுமானதாகும்.

சேரர், சோழர், பாண்டியர் மூவரும் படைப்புக் காலந்தொட்டு வாழும் பழந்தமிழ்க் குடியினர் என்பது தமிழர் கொள்கை. மூவரும் தமிழர்கள். ஒரே மொழியினர்; ஒரே நாட்டினர்; ஒரே பண்பாட்டை யுடையவர்கள். இவர்கள் மூவரும் ஒன்றுபட்டு வாழ்ந்த காலம் மிகவும் குறைவு. பெரும்பாலும் பலகாலம் ஒருவரோடு ஒருவர் போர் புரிந்து கொண்டு தான் இருந்திருக்கின்றனர். இதற்குக் காரணம் மண்ணாசை, பொன்னாசை, புகழ் ஆசையைத் தவிர வேறில்லை.

அதிகாரச் செருக்கு ஆரையும் விடாது. அதிகாரத்தை விட்டுக் கொடுக்க விரும்புகின்ற மக்கள் மனிதத் தன்மையினின்றும் மேம்பட்டவர்கள். தனியதிகார உரிமை படைத்தவர்கள். தாழ்மையுடன் நடந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். மற்றவர்களுடன் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாழக் கூட அவர்கள் மனம் துணியாது. அனைவர்க்கும் தலைவராய் ஆணை செலுத்தவே விரும்புவர். தாம் சொல்பவைகளுக் கெல்லாம் மற்றவர்கள் தலை வணங்க வேண்டும் என்றே நினைப்பார்கள். தனி அதிகார வெறி ஆசைக்கோர் அளவில்லை என்ற இடத்தில்தான் வீற்றிருக்கச் செய்யும். தனியதிகார வெறியைத்தான் ஏகாதிபத்திய வெறி என்று இக்காலத்தினர் இயம்புவர்.

தொல்காப்பியம் கூறுவது

பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திலே புறத் திணையைப் பற்றிக் கூறும் பகுதியினால் நாம் பல உண்மைகளைக் காணலாம். சிறப்பாக, அதில் கூறப்படும் போர் முறை தற்பாதுகாப்புப் போராகவே காணப்படுகின்றது. ஆயினும் தமிழகத்தில் மண்ணாசை கொண்டு போர் செய்த மன்னர்கள் இருந்தனர். தம் வலிமையைக் காட்டிப் புகழ் பெற விரும்பிப் போர் புரிந்த மன்னர்களும் இருந்தனர். இந்த உண்மையையும் தொல்காப்பியம் மறைக்கவில்லை.

வஞ்சி தானே முல்லையது புறனே;
எஞ்சா மண்ணசை வேந்தனை, வேந்தன்அஞ்சுதகத்

தலைசென்று அடல் குறித் தன்றே.

(தொல். பொருள். புறத்திணை இயல்- 6)

வஞ்சித்திணை என்பது முல்லைத்திணையென்னும் அகத்திணையோடு தொடர்புள்ளது; அடங்காத மண்ணாசை கொண்டு நாடு பிடிப்பதற்காகப் படையெடுத்து வந்த அரசனை எதிர்ப்பது; நீதிநெறியைக் கருதும் வேந்தன் வலிந்து படை யெடுத்து வந்த மன்னன் அஞ்சும்படி படைதிரட்டிச் சென்று போர் செய்வதாகும்.

இச் சூத்திரம் மண்ணாசை கொண்டு போர் தொடுத்த மன்னர்கள் தமிழகத்தில் இருந்தனர் என்பதற்குச் சான்று.

தும்பை தானே நெய்தலது புறனே;
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்சென்றுதலை

அழிக்கும் சிறப்பிற்று என்ப.

(தொல். பொ. புறத்திணை. 12)

தும்பை என்பது நெய்தல் திணை என்னும் அகத்திணை யோடு தொடர்புள்ளது; தனது வல்லமையை உலகம் புகழ வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டு வலிந்து போர் செய்ய வந்த அரசனை எதிர்த்துச் சென்று போர் செய்து அழிப்பதாகும். இத்தகைய சிறப்புள்ளதே தும்பைத் திணையாகும்.

இச்சூத்திரம், தமது வீரத்தை வெளியிடுவதற்காகவே போர் புரிந்த மன்னர்களும் தமிழகத்தில் இருந்தனர் என்ற உண்மையை உரைத்தது.

பண்டைத் தமிழகத்து மன்னர்களிடையிலே அறநெறியும், மக்கட் பண்பும் நிறைந்திருந்தன. அவர்கள் சிறந்த செங்கோலர் களாக வாழ்ந்தனர். இது உண்மை. ஆயினும், தனியதிகார வெறி காரணமாகப் பல அரசர்கள் அறநெறியைச் சிதைக்க அஞ்ச வில்லை. இதற்கான எடுத்துக்காட்டுக்கள் சிலவற்றைக் காண்போம்.

அண்ணன் தம்பிச் சண்டை

சோழன் நலங்கிள்ளியும், சோழன் நெடுங்கிள்ளியும் ஒரு குலத்தினர்; ஒரு குடியினர்; அண்ணன் தம்பி முறையினர். நலங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னன்; நெடுங்கிள்ளி உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ அரசன். இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இவர்களில் நலங்கிள்ளி தான் வலிந்து போர் செய்தவனாகக் காணப்படுகின்றான்.

புறநானூற்றில் உள்ள 44, 45 ஆகிய பாடல்கள் இவ் வுண்மையை உரைக்கின்றன. நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டை யுள்ளிருந்த போது நலங்கிள்ளி அக் கோட்டையை முற்றுகை யிட்டான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்காமல் உள்ளேயே பதுங்கியிருந்தான். அப்பொழுது கோவூர்கிழார் என்னும் புலவர் நெடுங்கிள்ளியிடம் சென்றார். கோட்டைக் கதவு அடைபட்டிருப்பதனால், கோட்டைக்குள்ளிருக்கும் மக்கள் வறுமையால் வாடுவதை அவனுக்கு எடுத்துக்காட்டினார். அறநெறியில் நடப்பதானால் கோட்டைக் கதவைத் திறந்துவிடு. நலங்கிள்ளியிடம் இக் கோட்டை உனது என்று சொல்லிவிடு; வீரனானால் நலங்கிள்ளியை எதிர்த்துப் போர் செய் என்று அறிவுரை கூறினார். இச்செய்தியைப் புறநானூற்றின் 44- வது பாடலிலே காணலாம்.

மற்றொரு சமயம் நெடுங்கிள்ளி, உறையூர்க் கோட்டைக் குள்ளிருந்த போது, நலங்கிள்ளி அக் கோட்டையை முற்றுகையிட்டான். அப்பொழுதும் நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்கவில்லை. இப்படியே பல நாட்கள் கழிந்தன. கோட்டைக்குள் வாழ்ந்த மக்கள் வறுமையால் வாடினர். இந்த அண்ணன் தம்பிச் சண்டையால் சோழ நாட்டு மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவில்லை. அப்பொழுதும் கோவூர் கிழார் தோன்றி இரண்டு சகோதரர்களையும் சமாதானம் ஆகும்படி செய்தார்.

உன்னுடன் போர் செய்கின்றவன் பனம்பூ மாலையைத் தரித்த சேரன் அல்லன்; வேப்பம்பூ மாலையைத் தரித்த பாண்டியனும் அல்லன்; உன்னுடைய மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது; உன்னுடன் எதிர்நின்று போர் செய்கின்றவன் மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது. உங்களில் யார் தோற்றாலும் தோற்பது சோழர் குடிதான்; சோழன் தோற்றான் என்றுதான் சொல்லுவார்கள். போரில் இருவரும் வெற்றி யடைவது என்பது இயற்கையன்று. ஆதலால் உங்கள் செய்கை உங்கள் குடிப் பெருமைக்கு ஏற்றது அன்று. நீங்கள் செய்யும் இச் சண்டை உங்கள் போன்ற மன்னர்களுக்குத் தான் மகிழ்ச்சியைத் தரும்.

இவ்வாறு கோவூர்கிழார் இரு மன்னர்களையும் பார்த்துக் கூறினார். பிறகு இருவரும் போரைக் கைவிட்டனர்; இச் செய்தி புறநூனூற்றின் 45- வது செய்யுளில் காணப்படுகின்றது. அச் செய்யுள் கீழ் வருவது:

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கரும்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;

நின்னொடுபொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியேஇருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்குடிப்பொருள் அன்றுநும் செய்தி; கொடித்தேர்நும்மோர் அன்ன வேந்தற்குமெய்ம்மலி உவகை செய்யும் இவ் விகலே.

இவ்வாறு ஒரு குடியிலே பிறந்தவர்கள் பகைத்தெழுந்து போர் புரியத் தொடங்கியதற்குக் காரணம் மண்ணாசையைத் தவிர வேறில்லை; தனியதிகார வெறியைத் தவிர வேறில்லை.

மற்றொரு வரலாறு அனைவரும் அறிந்தது. குமணனும் இளங்குமணனும் உடன்பிறந்தவர்கள்; அண்ணன் தம்பிகள். மண்ணாசையும் பொன்னாசையும் இளங்குமணனை ஆட்டி வைத்தன. உடன்பிறந்த உறவுக்கு உலை வைத்தன.

புறநானூற்றில் உள்ள 165- வது பாடலும் அதன் அடிக் குறிப்பும் இவ்வுண்மையைத் தெளிவாக விளக்குகின்றன.

பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் குமணனைத் தேடிச் சென்றார். தேடிச் செல்லும் வழியிலே காட்டிலே குமணனைக் கண்டார். தன் வறுமையை விளக்கிப் பாடினார். உடனே குமணன் தன் கையிலிருந்த வாளைப் புலவர் கரத்திலே நீட்டினான். புலவரே! என்னிடம் இப்பொழுது என் உடம்பைத் தவிர வேறொன்றும் இல்லை. என் தம்பி என் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பெரும் பரிசு அளிப்பதாக அறிவித் திருக்கிறான். ஆதலால் என் தலையைக் கொண்டு சென்று பரிசு பெற்று உமது வறுமையை விரட்டியடிமின் என்று கூறினான். தன் தலையைக் கொண்டு செல்வதற்காகவே வாளை என் கையில் கொடுத்தான் என்று அந்த 165- வது செய்யுளில் காணப்படுகின்றது.

குமணனுடைய இச் சிறந்த தியாகத் தன்மையைப் பற்றி, இளங்குமணனிடம் பெருந்தலைச் சாத்தனார் இவ்வாறு எடுத்துரைத்தார். இச் செய்யுளின் அடிக்குறிப்பு வருமாறு:

தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து இளங்குமணற்குக் காட்டிப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

இதுவே அச்செய்யுளின் அடிக்குறிப்பு. இதனால் குமணனுடைய ஆட்சியை, அவனுடைய இளைய சகோதர னாகிய இளங்குமணன் வலிந்து கைப்பற்றிக் கொண்டான், குமணன் காட்டில் புகுந்து வருந்தினான் என்ற செய்தி தெரிகின்றது. மேலே காட்டிய நலங்கிள்ளி நெடுங்கிள்ளி வரலாறு, குமணன் இளங்குமணன் வரலாறு இரண்டும் அதிகார வெறி, அண்ணன் தம்பி உறவையும் அழிக்கும் என்ற உண்மையை உணர்த்தின.

தந்தை தநயர்கள் சண்டை

தந்தை, மகன் என்ற உறவுக்கும் உலை வைக்கும் தன்மை அதிகார வெறிக்கு உண்டு. இதையும் தமிழர் வரலாற்றிலே காணலாம்.

கோப்பெருஞ் சோழன் சிறந்த கொடையாளி; தழிழறிஞன்; தமிழ்ப் புலவரைப் போற்றுவோன். பிசிராந்தையார் என்னும் பெரும் புலவரின் ஆருயிர் நண்பன்; பழந்தமிழ்ப் புலவர்கள் நட்புக்குக் கோப்பெருஞ் சோழனையும், பிசிராந்தையாரையுந் தான் எடுத்துக்காட்டாகக் கூறுவர்.

இத்தகைய கோப்பெருஞ் சோழனும், அரசு, பொருள் அதிகாரம் காரணமாகத் தன் பிள்ளைகளுடன் போர் தொடுக்கத் துணிந்தான் என்ற வரலாறு காணப்படுகின்றது. அவன் தன் மக்கள்மேல் போர் செய்யப் புறப்பட்ட போது, புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் அவனைத் தடுத்து அறிவுரை கூறினார். இவ்வரலாறு புறநானூற்றின் 213- வது பாடலில் காணப்படுகின்றது.

போரிலே வெற்றி பெற்ற புகழுடைய வேந்தனே! வெண் கொற்றக்குடையின் நிழலிலே உலகத்தைக் காக்கும் மன்னனே! இவ்வுலகிலே உன்னுடன் போர் செய்யப் புறப்பட்டவர்கள் யார் என்று எண்ணிப் பார்த்தால், அவர்கள் உன் பகைவர்கள் அல்லர்; இன்னும் ஆராய்ந்து பார்த்தால், நீயும் அவர்களுக்குப் பகைவன் அல்லன். நீ தேவருலகை யடைந்தபின் உனது அரசுக் குரியவர்கள் அவர்கள்; உனக்குப் பின் உன் ஆட்சி அவர்களுக்கே உரிமையாகும்.

இது மட்டுமா? இன்னும் சொல்லுகிறேன் கேள். அறியாமையால் முரட்டுத்தனமாகப் போருக்கெழுந்த உன் புதல்வர்கள், போரில் தோற்று மாண்டு விட்டால், அதன்பின் உன் செல்வத்தை யாருக்குத்தான் கொடுப்பாய்? அல்லது நீ உன் பிள்ளைகளால் வெல்லப்படுவாயானால் உன் பகைவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்; உனது புகழ் மறையும்; பழிதான் நிலை நிற்கும்.

ஆதலால் போர் செய்வதை விட்டுவிடு. நல்வினையைச் செய். நீ மறுவுலகம் செல்லும்போது விண்ணோர் உன்னை விருந்தாக ஏற்றுக் கொள்ளத்தக்க நற்பணிகளைச் செய்க என்ற கருத்தைப் புல்லாற்றூர் எயிற்றியனார் வலியுறுத்தினார்.

இவ்வரலாற்றால், தனி அதிகார வெறி, மைந்தனையும் தந்தையையும் பகைவர்களாக நின்று சண்டையிடச் செய்யும் என்ற உண்மையைக் காணலாம்.

அதிகார வெறி காரணமாக நடந்த அடாத செயல்கள் பலவற்றை வரலாறுகளிலே படித்திருக்கின்றோம். அண்ணனைக் கொன்று தம்பி அரியாசனம் ஏறினான்; தம்பிமார்கள் வெளியிலிருந்தால் தனது ஆட்சிக்கு ஆபத்து என்று கருதி, அண்ணன் அவர்களைச் சிறையிலிட்டான்; அரசுக்கு ஆசைப்பட்டுத் தந்தையை மகன் கொலை செய்தான்; மகனைத் தந்தை சிறையிலிட்டான் என்ற கதைகளைப் படித்திருக்கின்றோம். ஆதலால், தனியாட்சி உரிமை இருந்த காலத்தில் தமிழ் மன்னர்களிலும் இத்தகையவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது வியப்புக்குரியது அன்று. இது இயற்கையே யாகும். சரித்திரம் கண்ட உண்மை.

தனியாட்சி வெறி, அறத்தை அழித்து மறத்தை வளர்ப்பதற்கும் தூண்டும். இதற்கும் எடுத்துக்காட்டுக்கள் உண்டு. தமிழ் இலக்கியத்திலிருந்து இதற்கு இரண்டு உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.

அதிகார வெறி

ஒரு சோழ மன்னன். அவன் பெயர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பது. அவனுக்கும் மலையமான் திருமுடிக்காரி என்பவனுக்கும் நீண்டநாள் பகை. பல தடவை போர் புரிந்தும் மலையமான் திருமுடிக்காரியைக் கிள்ளி வளவனால் தோல்வியுறச் செய்ய முடியவில்லை. இதனால் காரியின்மேல் வளவன் அடங்காத ஆத்திரங் கொண்டிருந்தான்.

காரி இறந்து விட்டான். அப்பொழுதும் கிள்ளி வளவனுக்குக் காரியின் மீதுள்ள ஆத்திரம் அடங்கவில்லை. காரியின் குழந்தைகளைக் கொண்டுவந்தான்; காரியின் மீதுள்ள கோபத்தைக் குழந்தைகளின் மேல் காட்டினான். அதிகாரமும் ஆத்திரமும், அவனுடைய அறிவை அடக்கிவிட்டன. காரியின் சிறுவர்களை யானைக்காலிலே கொடுத்துக் கொல்லத் தொடங்கினான். அப்பொழுது கோவூர் கிழார் என்னும் புலவர் வந்தார்; கிள்ளிவளவனுடைய கீழ்மைச் செயலைத் தடுத்தார்; அவனுக்கு அறிவுரை கூறினார். இந்த நிகழ்ச்சியைப் புறநானூற்றின் 46-வது செய்யுளிலே காணலாம். அச் செய்யுளும் அதன் பொருளும் கீழ்வருவன;

நீ சோழர் குடியிலே பிறந்தவன்; உனது முன்னோர், ஒரு புறாவின் துயரத்தை நீக்கியதோடு நிற்கவில்லை; வேறு பல துன்பங்களையும் தீர்த்தவர்கள். இக்குழந்தைகளோ, புலவர்களின் வறுமையைக் கண்டால் அதை ஒழித்து, தம்மிடம் உள்ளதைப் பிறர்க்கும் பகுத்துக்கொடுத்து உண்ணும் மரபிலே பிறந்தவர்கள். இவர்கள், யானையைக் கண்டால் பயந்து அழுகின்ற பருவத்தைக் கூட அடையாதவர்கள்; அவ்வளவு இளம் பருவமுள்ளவர்கள். இந்த இடம் புதிதாக இருக்கிறதே என்று பார்த்து வருந்துகின்றவர்கள். நான் சொல்லும் இவ்வுண்மையை நீ ஆராய்ந்து பார்; பிறகு உன் விருப்பப்படி செய்.

நீயே புறவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண்
பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித்தமது

பகுத் துண்ணும் தண்நிழல் வாழ்நர்;
களிறுகண்டு அழூஉம் அழா அல் மறந்தபுன்தலைச் சிறார் அர்; மன்று மருண்டுநோக்கிவிருந்தில் புன்கண்நோ உடையர்;
கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்ம்மே.

கிள்ளிவளவன் செய்யத் தொடங்கியது படுபாதகம் என்பது அனைவர்க்கும் தெரியும். அதைத் தடுக்க அவனுடைய அமைச்சர்கள் யாரும் முன்வரவில்லை. புலவர் தான் துணிந்து முன்வந்தார். அவரும், நீ இந்த அநீதியைச் செய்யாதே என்று அடித்துப் பேசவில்லை. நான் சொல்வதைக் கேட்பதானால், இதைச் செய்யாதே கேட்காவிட்டால் உன் மனம் போல் செய் என்று தான் வேண்டிக் கொள்கின்றார். கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்ம்மே என்ற அடி இக் கருத்தையே கொண்டதாகும்.

கொடுங்கோல் மன்னன்

நன்னன் என்பவன் ஒரு சிற்றரசன்; சிற்றரசனாயினும் பண்டை நாளில் அவன் ஆண்ட நாட்டில் அவனுக்கு எல்லா அதிகாரமும் உண்டு; நாட்டு மக்களைத் தன் எண்ணப்படி ஆட்டி வைக்கும் உரிமையுண்டு. இந்த நன்னன் ஒரு சிறு குற்றத் திற்காக ஒரு பெண்ணைக் கொலை செய்தான் என்ற வரலாறு ஒன்று வழங்குகின்றது. இதைக் குறுந்தொகையிலும் காணலாம்.

நன்னன் என்பவன், ஆற்றங்கரையில் இருந்த தன் தோட்டத்தில் அரிய மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான். அதன் காயையோ பழத்தையோ அவனைத் தவிர வேறொருவரும் தின்னக்கூடாது என்பது அவன் ஆணை. ஒருநாள் ஒரு பெண் ஆற்றுக்கு நீராடப் போனாள். ஆற்றிலே மாங்காய் ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து அவள் தின்று விட்டாள். உடனே காவலர்கள் அவளைப் பிடித்துக் கொண்டு போய் அரசன் முன் நிறுத்தினர். அரசன் அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். அவள் தந்தை பணக்காரன். தன் மகளைத் கொலைத் தண்டனையிலிருந்து மீட்க எவ்வளவோ முயன்றான். அப் பெண்ணின் நிறையுள்ள பொன் பதுமையும், எண்பத்தொரு யானையையும் ஈடாகக் கொடுக்க முன் வந்தான். அதற்கும் அரசன் இணங்காமல் ஒரு மாங்காய்க்காக அறியாமல் தவறு செய்த அப்பெண்ணின் உயிரை வாங்கி விட்டான்.

இவ்வரலாற்றைக் குறுந்தொகையின் 292-வது செய்யுளிலே காணலாம்.

மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை,
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு,
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்நிறைபொன்செய்

பாவை கொடுப்பவும் கொள்ளான்பெண்கொலை புரிந்த நன்னன்.

நீராடும் பொருட்டுச் சென்ற பெண் நீரிலே மிதந்து வந்த பசுமையான மாங்காயை எடுத்துத் தின்ற குற்றத்திற்காக, எண்பத்தொரு ஆண் யானைகளும், அவள் அளவு நிறையுள்ள பொன்னாற் செய்த பதுமையும் ஈடாகக் கொடுக்கவும் அதை ஏற்றுக்கொள்ளாமல் பெண்ணைக் கொலை புரிந்தான் நன்னன்.

இதுவே அக் குறுந்தொகைப் பாடல். இவ்வரலாறு புறநூனூற்றின் 151- வது பாடலிலும் குறிக்கப்பட்டுள்ளது. இப்பாடல் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவரால் பாடப்பட்டது.

இளங்கண்டீரக்கோ என்னும் சிற்றரசனும், இளவிச் சிக்கோ என்னும் சிற்றரசனும் ஒன்று கூடியிருந்தனர். அப்பொழுது பெருந்தலைச் சாத்தனார் சென்றார். அவர் இளங் கண்டீரக்கோவைத் தழுவி க்கொண்டார்; இளவிச்சிக்கோவைத் தழுவிக் கொள்ளவில்லை. அதுகண்ட இளவிச்சிக்கோ புலவரைப் பார்த்து, இளங்கண்டீரக்கோவைத் தழுவிக் கொண்ட நீர் என்னை ஏன் தழுவிக் கொள்ளவில்லை என்று கேட்டான். உடனே புலவர் இளவிச்சிக்கோவைப் பார்த்துக் கீழ்வருமாறு கூறினார்;

இளங்கண்டீரக்கோ தன்னைப் பாடும் புலவர்க்குப் பரிசில் அளிப்பவன்; அவன் இல்லாவிட்டாலும், அவனைப் பாடி வந்த புலவர்க்கு, அவன் பெண்டிரும் தமது தரத்திற்கேற்ப நன்கொடையளிப்பார்கள். ஆதலால் அவனைத் தழுவிக் கொண்டேன். நீயோ பெண் கொலை புரிந்த நன்னன் மரபிலே தோன்றியவன்; அன்றியும், பாடுநர்க்குப் பரிசில் வழங்காமல் கோட்டை வாசலை அடைத்திருப்பவன். ஆதலால் உன் மலையைப் பற்றிப் புலவர்கள் பாடாமல் நீக்கினர். இக் காரணத் தால்தான், தழுவிக் கொள்ளத் தகுந்தவனாயினும் உன்னை நான் தழுவிக் கொள்ளவில்லை என்று இவ்வாறு கூறினார். இவ் வரலாற்றை இப்பாட்டின் அடிக்குறிப்புத் தெளிவாக உணர்த்து கின்றது.

இளங்கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கிருந்த வழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார், இளங்கண்டீரக் கோவைப் புல்லி, இளவிச்சிக் கோவைப் புல்லாராக, என்னை என்செயப் புல்லீர் ஆயினீர் என அவர் பாடியது.

இதுவே அந்த 151- வது பாட்டின் அடிக்குறிப்பாகும். ஒரு சிறிய மாங்காய்க்காக, ஒரு பெண்ணின் அரிய உயிரை வாங்கி யதற்குக் காரணம் அதிகார வெறியைத் தவிர வேறென்ன?

குழந்தைகளின் உயிரை வாங்கத் துணிந்த கிள்ளி வளவன் செயல், மாங்காய்க்காகப் பெண்ணின் உயிரை வாங்கிய நன்னன் செயல் இரண்டும் படுபாதகச் செயல்கள்; அதிகார வெறியிலே முளைத்தெழுந்த அடாத செயல்கள்.

மேலே கூறியவைகளைக் கொண்டு, கீழ்வரும் உண்மைகளை உணரலாம். தனி அதிகார வெறியால் நாட்டிலே அடிக்கடி போர் நடைபெற்றது. அதனால் நாடு நாசமடைந்தது; மக்கள் செல்வங்கள் பாழ்பட்டன. தனி அதிகாரச் செருக்கால் அறத்தைச் சிதைத்தனர்; மனம் போனவாறு நடந்துவந்தனர்.

பல அரசர்கள் நீதி நெறியைப் பின்பற்றி நடந்துங் கூடச் சில அரசர்கள் இவ்வாறு அடா நெறிகளைப் பின்பற்றியதனால்; மக்கள் தனி அதிகார முறையை வெறுத்தனர். அரசர்கள் அமைச்சர்களுக்கும், அறிஞர்களுக்கும் அடங்கித்தான் வாழ வேண்டும்; அவர்கள் அறிவுரைகளைக் கேட்டுத்தான் ஆட்சி புரியவேண்டும் என்று நினைத்தனர். மன்னர்களின் தனி அதிகார ஆட்சியைவிட, மக்களின் கருத்தைப் பின்பற்றி நடத்தும் மன்னர் ஆட்சியே சிறந்தது என்று எண்ணினர். பழந்தமிழ்ப் புலவர்கள் இக்கருத்தை மக்களிடையிலே பரப்பிவந்தனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *