பழந்தமிழர் அரசியல்
சாமி. சிதம்பரனார்

ஆளுவோர்க்கு அறிவுரைகள்

பண்டைக்கால மன்னர்களின் அரசுரிமை பிறப்புரிமை யாகவே இருந்தது. இதனால் அவர்கள் தனி அதிகாரம் பெற்றிருந்தனர். இத் தனி அதிகாரம் காரணமாக அவர்களிலே சிலர் அறநெறி தவறி நடக்கவும் துணிந்தனர்; அதிகார வெறி- அதிகாரச் செருக்கு- அவர்களை அவ்வாறு நடக்கத் தூண்டியது. இது இந்த நாட்டில் மட்டும் அன்று; எந்த நாட்டிலும் இந்த நிலைதான் இருந்தது.

அறத்தைச் சிதைத்த அரசர்களின் செயல் கண்டு அறிஞர்கள் சிறிதும் அஞ்சவில்லை. அக்காலத்தில் அரசர்களைக் காட்டிலும் புலவர்களுக்கு- மக்களுடன் கலந்து பழகும் அறிஞர்களுக்கு- செல்வாக்கு மிகுந்திருந்தது. அவர்களை மக்கள் மதித்துப் பாராட்டி வந்தனர். பொது மக்களின் பாராட்டுக்குரிய புலவர்களிடம் மன்னர்களும் மதிப்பு வைத்திருந்தனர். புலவர்கள் புகலும் அறிவுரைகளை மீறி நடக்க அரசர்களும் அஞ்சினர். இது பண்டைக்கால நிலைமை.

ஆதலால், புலவர்கள் அடிக்கடி அரசர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்; அரசர்கள் அநீதி செய்யத் துணியும்போது அஞ்சாமல் அதைத் தடுத்தும் நின்றனர். இத்தகைய நிகழ்ச்சிகளைப் பழந்தமிழ் இலக்கியங்களிலே காணலாம்.

கடமையை வலியுறுத்தல்

நரிவெரூஉத் தலையார் என்பவர் ஒரு தலை சிறந்த புலவர்; அறநெறிகளை அறிந்தவர். அவர் ஒருநாள் கருவூரிலே இருந்த ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும் பொறையைக் காணச் சென்றார். அவனைப் பார்த்து அரசர்க்குரிய அறம் இன்னதென்று எடுத்துக்கூறினார்.

நீ ஒப்பற்ற வீரன்; நிகரற்ற செல்வங்களையும் பெற்றவன்; உனக்கு நான் சொல்லும் அறமொழி ஒன்று உண்டு. அருளையும், அன்பையும் கைவிட்டவர்கள் எப்பொழுதும் நரகத்திலேயே கிடந்து உழலுவார்கள். ஆதலால், நீ அவர்களுடன் சேர்ந்து, அவர்கள் சொற்களை நம்பிக் கெட்டுப் போகாதே. அரசாட்சியைக் கண்ணும் கருத்துமாக நடத்து. ஒரு குழந்தையை எவ்வளவு அன்போடும், பாதுகாப்போடும் வளர்ப்பார்களோ, அவ்வாறு உனது நாட்டை நீ காப்பாற்று.

நீஒர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி, நீங்காநிரயம் கொள்பவரோடு

ஒன்றாது, காவல்குழவி கொள்பவரின் ஓம்பு மதி!

இதுவே நரிவெரூஉத் தலையார் சேர மன்னனுக்குக் கூறிய அறம். இது புறநானூற்றின் 5-வது பாடல். ஆளுவோர் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை எடுத்துரைத்தது இச்செய்யுள்.

நலங்கிள்ளி என்னும் சோழன் காலத்திலே சோழ நாடு இரண்டாகப் பிரிந்திருந்தது. சோழன் நலங்கிள்ளி என்பவன், அதிகாரத்தில் ஆசை கொண்டவன்; சோழ நாடு முழுவதையும் தானே ஆளவேண்டும் என்னும் ஆவல் கொண்டவன். அதனால் அவன் அடிக்கடி நெடுங்கிள்ளி என்னும் உறையூர்ச் சோழனுடன் சண்டை செய்து வந்தான். இவன் செய்கைக்கு ஊக்கமூட்டிய நண்பர்களும் இவனுக்கிருந்தனர் என்று தெரிகின்றது.

இந்த நலங்கிள்ளியின் செய்கையைப் பொதுமக்கள் அவ்வளவாக ஆதரிக்கவில்லை. இந்நிலையை அறிந்த முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் அவனுக்கு அறநெறியை எடுத்துரைத்தார். அரசர்க்குரிய முதன்மையான கடமை இன்னது என்பதைத் தெளிவாகத் தெரிவித்தார்.

நாட்டுக்கும் மக்களுக்கும் தீமை செய்யும் கொடியோரை அழித்தல் வேண்டும்; அடக்குதல் வேண்டும்; தண்டிக்க வேண்டும். நடுநிலையிலே வாழும் சான்றோர்களிடம் இரக்கம் காட்ட வேண்டும்; அவர்களுக்கு எவ்வித இன்னலும் உண்டாகாமல் காப்பாற்ற வேண்டும். இதுதான் அரசர்க்குரிய அறநெறி. இவ்வறநெறியை எப்பொழுதும் பின்பற்றி நடத்தல் வேண்டும்; இதில் சோர்வு காட்டவே கூடாது. இந்த அறநெறியை நீ தவறாமல் பின்பற்ற வேண்டுமானால் தீயோர் நட்பை- கூட்டுறவை – துணையைக் கைவிட வேண்டும். நல்ல செயல்களால் நன்மையுண்டு. தீய செயல்களால் தீமைதான் விளையும் என்பதை மறுப்போர் கெட்டவர்கள். இத்தகைய கெட்டவர்களுக்கு நீ நட்புள்ளவனாக இருக்கக்கூடாது.

கொடியோர்த் தெறலும், செவ்வியோர்க்கு
அளித்தலும்ஒடியா முறையின் மடிவுஇலை
ஆகிநல்லதன் நலனும், தீயதன் தீமையும்இல்லை,
என்போர்க்கு இனன் ஆகிலியர்!

இதுவே முதுகண்ணன் சாத்தனார் நலங்கிள்ளி என்னும் சோழனுக்குக் கூறிய அறிவுரை. இது புறநானூற்றின் 29-வது பாட்டு. அரசனுடைய கடமை இன்னது என்பதை இவ்வாறு தெளிவாக எடுத்துரைத்தார் முதுகண்ணன் சாத்தனார்.

இந்த உண்மைகளை உள்ளத்தில் கொண்டுதான் திரு வள்ளுவரும், அரசர்கள் சிற்றினத்தார்களுடன் சேரக் கூடாது என்று கூறினார். சிற்றினம் சேராமை என்று ஒரு அதிகாரமே, திருக்குறளில் அரசியலில் தனியாக அமைந்துள்ளது.

அரசர்கள் எவ்வளவுதான் அறிவுள்ளவர்களாயினும்- திறமையுள்ளவர்களாயினும்- தீயோர் தொடர்பால் அவர்கள் தன்மை கெடும் என்பது உண்மை. இதற்கு ஒரு குறளே போதுமான எடுத்துக்காட்டாகும்.

நிலத்தின் தன்மையால், அதில் வீழ்ந்த தண்ணீர் மாறுபடும்; அந்த நிலத்தின் தன்மையைப் பெறும்; அது போல, மக்களுடைய அறிவும் இனத்தால் வேறுபடும்; அவர்கள் சேர்ந் திருக்கும் இனத்தினரின் அறிவைப்போல மாறுபடும்.

நிலத்து இயல்பால் நீர்திரிந்து அற்றாகும்; மாந்தர்க்கு
இனத்து இயல்பு அது ஆகும் அறிவு. (கு. 452)

இக்குறள், அரசர்கள் தீயோருடன் சேரக்கூடாது; சேர்ந்தால் அவர்கள் நல்ல குத்திற்கு நாசம் விளையும் என்ற உண்மையை உதாரணத்துடன் உரைத்தது.

நீர் வளமே நாட்டு வளம்

நீர்வளம் உள்ள நாட்டிலேதான் உணவுப் பஞ்சம் உண்டாகாது; விளைபொருள்கள் மிகுந்திருக்கும்; மக்கள் பசிப்பிணி யறியாமல் உண்டு மகிழ்ந்து வாழ்வார்கள்; தொழில்களும் பெருகி வளரும்; மக்களுக்கு வேண்டிய- அவர்கள் இன்புற்று வாழ்வதற்கு உரிய- எல்லாப் பொருள்களும் எளிதிலே கிடைக்கும்.

இந்த அடிப்படை உண்மையை அரசினர் அறிந்திருக்க வேண்டும். நாட்டிலே நல்ல ஆறுகள் இல்லாவிட்டாலும், மழை நீரையாவது வீணாகாமல் தேக்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பண்டைக் காலத்தில் ஆற்றுப் பாய்ச்சல் இல்லாத பகுதிகளிலே மழை நீரை ஏரிகளிலே தேக்கி வைத்தனர். அந்நீரைக் கொண்டே பயிர் செய்து வந்தனர். இத்தகைய நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தும் வேலையை அரசாங்கமே செய்து வந்தது; ஏற்படுத்திய நீர்த்தேக்கங்களைப் பாதுகாக்கும் வேலையையும் அரசாங்கமே மேற்கொண்டிருந்தது.

இச்செயலிலே கருத்தின்றி இருந்த அரசர்களுக்கும், அரசாங்கங்களுக்கும் புலவர்கள் அடிக்கடி புத்தி புகட்டி வந்தனர். இந்த உண்மையைக் குடபுலவியனார் என்னும் ஒருவர் பாட்டு நமக்கு உணர்த்துகின்றது.

குடபுலவியனார் என்னும் புலவர், பாண்டியன் நெடுஞ் செழியனைப் பற்றிப் பாடியுள்ளார். நீர்ப்பாசனத்திற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று அவர் தம் செய்யுளில் வலியுறுத்துகின்றார்.

செல்வங்கள் நிறைந்த பழமையான ஊரினையுடைய வெற்றி பொருந்திய வேந்தே! நீ இறந்தபின் செல்லும் மறு உலகத்திலே செல்வமுடன் வாழ விரும்பினாலும், இவ்வுலகத்தில் உள்ள அரசர்களின் வலிமையை அழித்து நீயே ஒப்பற்ற மன்னனாக வாழ விரும்பினாலும், சிறந்த நல்ல புகழை இவ்வுலகிலே நிலைநாட்ட விரும்பினாலும் சரி, அதற்கான தகுதியை நீ சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அத்தகுதி என்னவென்று இப்பொழுது சொல்லுகிறேன் கேள். சிறந்தவனே! உடம்புகளுக் கெல்லாம் நீர் இன்றியமையாததாகும்; அவ்வுடம்புகளுக் கெல்லாம் உணவு கொடுத்தவர்கள் தாம் உயிரை கொடுத்தவர்கள் ஆவார்கள்; அவ்வுணவை அடிப்படையாகக் கொண்டதுதான் உடம்பு. ஆதலால் உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்தான். அந்த நிலத்தையும், நீரையும் ஒன்றாக இணைந் திருக்கும்படி செய்தவர்கள் தாம் இவ்வுலகில் உயிரையும் உடம்பையும் ஒன்று சேர்ந்திருக்கச் செய்தவர் ஆவார்; உயிரையும் உடம்பையும் படைத்தவர் ஆவார்.

மல்லல் மூதூர் வயவேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒருநீ ஆகல் வேண்டினும்,

சிறந்தநல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்தகுதிகேள்
இனி! மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்உண்டி கொடுத்தோர்

உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவு எனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர், ஈண்டுஉடம்பும் உயிரும் படைத்திசி னோரே.

இதுவே குடபுலவியனார் நெடுஞ்செழியனுக்குக் கூறிய அறிவுரை.

நீர்ப்பாசன வசதிக்கு வழி செய்தால் நாட்டிலே விளைவுப் பொருள் பெருகும். விளைவுப்பொருள் மிகுந்திருந்தால்தான் மக்கள் பட்டினி பசியின்றி, நோய் நொடியின்றி வாழ்வார்கள். அவர்கள், அரசுக்கோ அரசனுக்கோ பகைவர்களாக மாற மாட்டார்கள்; குடி மக்களின் ஆதரவைப் பெற்ற அரசு எக்காரியத்தையும் எளிதிலே நிறைவேற்றலாம். ஆதலால் பஞ்சத்திற்கு ஆளாகாமல் குடிமக்களைப் பாதுகாப்பதுதான் ஆட்சியின் முதல் கடமை. இக்கருத்துக் குடபுலவியனார் செய்யுளிலே அமைந் திருப்பதைக் காணலாம்.

உழவர்க்குப் பாதுகாப்பு

ஒரு நாட்டின் உயிர்நாடி உழவர்கள் ஆவார்கள். உழவர்கள் வறுமையால் வாடாமல் இருந்தால்தான் உணவுப் பொருள் ஏராளமாக உற்பத்தியாகும். உழவர்கள் வாழ்வு உயர்ந்திருந்தால் தான் நாட்டிலே உண்டாக்கப்படும் கைத் தொழிற் பண்டங்களும் செலவழியும்; பண்டங்கள் செலவழிந்தால் தான் தொழில் வளரும்; தொழில் வளர்ந்தால்தான் தொழிலாளர்களுக்கு வேலையுண்டு. ஆகவே, ஒரு நாட்டின் வாழ்வும் நாகரிகமும் உழவர்களின் வாழ்க்கையைத் தான் அடிப்படையாகக் கொண்டி ருக்கின்றன. இந்த உண்மையை உணர்ந்த அரசாங்கங்கள் தாம் நிலச் சீர்திருத்தம், உழவாளர்களுக்குப் பாதுகாப்பு போன்ற செயல்களைச் செய்து வருகின்றன.

இந்த உண்மையை- உழவினர் வாழ்வே நாட்டு மக்களின் நல்வாழ்வு, அரசாங்கத்தின் வாழ்வு, என்ற உண்மையைப் பண்டைத் தமிழ் சான்றோர்கள் உணர்ந்திருந்தனர். அவர்கள் அரசர்களுக்கு அடிக்கடி உழவினரைக் காக்கும்படி அறிவுரைகள் கூறிவந்தனர்.

வெள்ளைக்குடி நாகனார் என்பவர் ஒரு சிறந்த புலவர். அவர் ஒரு சிறு நிலக்கிழாருங்கூட. அவர் உழவுத் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்தார். மழை பெய்யாமையால் அவருடைய வேளாண்மைத் தொழில் ஒழுங்காக நடக்கவில்லை; நிலமும் விளையவில்லை. ஆனால் அரசாங்கத்திலே வரி தண்டும் அலுவல் பார்ப்போர் அப்புலவரை வரி கொடுக்கும்படி நெருக்கி வந்தனர். நிலத்திலே விளைச்சல் இல்லாத காலத்திற்கும் வரி கேட்டனர். அவரை மட்டும் அல்ல; உழவர்கள் எல்லோரிடமும் அவ்வாறே வரி கொடுக்கும்படி கெடுபிடி செய்தனர். இதைக் கண்ட புலவர் நேரே அரசனிடம் சென்றார். அரசாங்க அலுவலர்கள் உழவர்களிடம் காட்டும் கருணையற்ற தன்மையை எடுத்துரைத்தார். அரசன், புலவர் மொழியைக் கேட்டு மனம் இளகினான். அவருக்கும் ஏனையோருக்கும் வரியைத் தள்ளிக் கொடுத்தான். புலவருக்கு அவர் வைத்திருந்த நிலத்தை என்றும் இறையிலியாகவே (சர்வமான்யமாக) கொடுத்துவிட்டான். இச்செய்தி புறநானூற்றின் 35-வது செய்யுளால் தெரிகின்றது.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர் வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர். அவர் அரசனுக்குக் கூறிய அறிவுரைதான் கீழ்வருவது:

மழை பெய்யுங்காலத்திலே பெய்யாமற் போனாலும் நிலத்தில் விளைவு குறைந்தாலும், மக்கள் தகாத செயல்களைச் செய்தாலும், இப்பெரிய உலகம், இவைகளுக்கெல்லாம் அரசர்கள் தாம் காரணம் என்று பழி சொல்லும். இந்த உண்மையை நீ நன்றாக உணர்ந்திருப்பாயானால் ஒரு காரியத்தை உறுதியாகச் செய்யவேண்டும். கோட்சொல்லுவோரின் உறுதியற்ற சொற்களைக் கேட்காதே! ஏரைப் பாதுகாத்து உழவுத் தொழில் செய்வோர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பாயாக. இவ்வாறு செய்வாயானால் உனக்கு அடங்காதவர்கள்- பகைவர்கள்- அவர்கள் உள்நாட்டினராயினும் சரி, வெளிநாட்டினராயினும் சரி, உன் அடியை வணங்குவார்கள்.

மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்காவலர்ப்

பழிக்கும் இக் கண் அகல் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை ஆயின், நீயும்நொதும லாளர்

பொதுமொழி கொள்ளாதுபகடு புறந்தருநர் பாரம்
ஓம்பிக்குடிபுறந் தருகுவை ஆயின்நின்அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே.

இதுவே வெள்ளைக்குடி நாகனார் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்குக் கூறிய அறிவுரை. இச்செய்யுள் உழவாளர்க்கு உதவி செய்வதே ஒரு நாகரிக அரசாங்கத்தின் முதற்கடமை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

தனிப்பட்ட ஒரு அரசனுக்குரிய கடமையாகக் கூறப் பட்டிருக்கும் இவ்வறிவுரை இக்காலத்து மக்களாட்சிக்கும் பொருந்தும். உழவுத்தொழிலே முதன்மையாக உள்ள நாட்டிலே உழவர்கள் மகிழ்ந்து வாழாவிட்டால் அமைதி நிலவாது; உற்பத்தியும் வளராது. இந்த உண்மையைப் பழந்தமிழர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால் உழவுத் தொழில் புரிவோரைப் போற்றி வந்தனர்; பாராட்டி வந்தனர்; அவர்களுக்கு, முயற்சி செய்வோர், உதவி செய்வோர் என்ற பொருள் உள்ள வேளாளர் என்ற பெயரிட்டனர். சமூகத்திலே உயர்ந்த நிலையும் அளித்தனர்.

வரிக்கொடுமை

பண்டைக்கால மன்னர்களிலே தந்நலங் கருதி, மக்கள் தலையிலே வரிச்சுமையை ஏற்றியவர்களும் உண்டு. தாங்கக் கூடியவர்களிடம் வரி தண்டுவதில் தவறில்லை. கொடுக்கும் சக்தியற்ற ஏழை எளியவர்கள் தலையிலே வரியைச் சுமத்தும் அரசு கொடுங்கோல் அரசாகும். அது அறம் அன்று; நீதியும் அன்று. வரி கொடுக்கும் வல்லமையற்றவர்கள் தங்கள் துன்பத்தைத் தாங்க முடியாத போது ஆட்சிக்கு எதிராகத் திரும்பி விடுவார்கள். இந்த உண்மையைப் பழந்தமிழ் அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். மன்னர்கள் குடிமக்களிடம், அளவுக்குமேல் வரி வாங்க முற்படும்போது புலவர்கள் தலையிட்டனர்; அரசர்களுக்கு அறிவுரை கூறினர்; அவர்கள் செய்கையைத் தடுத்தனர்.

இவ்வுண்மையைப் பிசிராந்தையார் என்னும் புலவர் பாடல் ஒன்று விளக்கமாகக் கூறுகின்றது:

பாண்டியன் அறிவுடை நம்பி என்பவன் குடிமக்களிடம் அளவுக்கு மேல் வரி வாங்கினான். அதைக் கண்ட பிசிராந்தை யார் மன்னனிடம் சென்றார்; அஞ்சாமல் அரச நீதியை எடுத்துக்காட்டினார்; அவன் செய்கையைத் தடுத்தார்.

விளைந்த நெல்லை அறுத்துக் கொண்டு வந்து கவளம் கவளமாகச் சேதப்படாமல் உண்டால், ஒரு மாவுக்கும் குறைந்த நிலத்திலே அறுத்த கதிர் பல நாட்களுக்கு உணவாகும். நூறு வயல்களிலே நெல் விளைந்திருந்தாலும் சரி, ஒரு யானை தனியாக அவ்வயல்களிலே புகுந்து நெற்கதிரை உண்ணுமானால் வீண் சேதமாகும். அதன் வாயில் புகுந்த நெல்லை விட, அதன் காலால் பாழாகும் நெல்லே மிகுதியாக இருக்கும். அதைப் போல, அறிவுள்ள வேந்தன் வரி வாங்கும் முறையை உணர்ந்திருக்க வேண்டும். மக்கள் மனங் கோணாதபடி வரி வாங்க வேண்டும். இவ்வாறு வரி வாங்கினால் அவனுடைய நாடு கோடிக்கணக்கான பொருளைக் கொடுக்கும்; அந்நாடும் சிறப்படையும்; செழிப்படையும். இவ்வாறில்லாமல் அரசன் அறிவிலே குறைந்தவனாகி, தான் கூறுவது தவறானாலும், அதையே சரியென்று சொல்லும் சுற்றத்துடன் கூடியிருப் பானாயின் அவன் வரி கொள்ளும் முறையை அறிய மாட்டான்; குடிமக்களின் அன்பு அழியும்படி- அவர்கள் வெறுக்கும்படி அவர்களிடம், வரியென்னும் பேரால் பொருள்களை வலிந்து கொள்வான். இவ்வாறு வரி வாங்குவானாயின், அம் மன்னன், யானை புகுந்த வயலைப் போலத் தானும் உண்டு இன்புற மாட்டான்; அவனால் ஆளப்படும் நாடும் நாசம் உறும்.

காயநெல் அறுத்துக் கவளம் கொளினேமாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினேவாய்புகு

வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினேகோடி யாத்து நாடுபெரிதும் நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்வரிசை அறியாக் கல்என் சுற்றமொடுபரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்யானை புக்க புலம்போலத்தானும் உண்ணான்; உலகமும் கெடுமே.

இதுவே பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் கூறிய அறிவுரை. அளவுக்குமேல் வரி வாங்குவதனால் வரும் இன்னலைப் பற்றி இதற்குமேல் விளக்கிக் கூற இயலாது. இது புறநானூற்றின் 184- வது பாடல். இப்பாடற் கருத்தை அப்படியே சிந்தாமணி ஆசிரியர் அமைத்துப் பாடியிருக்கின்றார்;

வாய்க்குப் போதுமான கவளம் அகப்படும்; வீண் சேதமும் உண்டாகாது; முறைப்படி அறுத்துக்கொண்டு வந்த நெல்லை ஒவ்வொரு நாளும் கவளமாக உண்பித்தால் இந்நிலை ஏற்படும். யானையே வயலில் புகுந்து மேயத் தொடங்கினால், விளைந்திருக்கும் கதிர் அதன் வாயில் புகாமல் வீணாக அழியும். ஆதலால் அரசன் அறிவில் சிறந்தவனாய், குடிகளின் நெஞ்சம் துன்புறாமல் வரி வாங்குவானாயின் அவன் இன்பம் அடைவான்; அவன் ஆளும் நீர்வளம் நிறைந்த நாடு முழுவதும் செல்வம் நிலையாகப் பெருகி நிற்கும்.

வாய்ப்படும் கேடும் இன்றாம்,
வரிசையின் அறிந்து, நாளும்காய்த்தநெல் கவளம் தீற்றின்;
களிறுதான், கழனி மேயின்,
வாய்ப்படல் இன்றிப் பொன்றும்,
வல்லனாய் மன்னன் கொள்ளின்நீத்தநீர் ஞாலம் எல்லாம்நிதிநின்று சுரக்கும் அன்றே.

(சீவக சிந்தாமணி. 2907)

இதுவே சிந்தாமணிச் செய்யுள். இதுவும், அளவுக்கு மேல் வரிவாங்கும் அரசு நிலைக்காது; குடிகளின் நிலையறிந்து குறைந்த அளவில் வரி வாங்கும் அரசுதான் வாழும்; இத்தகைய ஆட்சியுள்ள நாடுதான் செழிக்கும் என்று கூறிற்று.

திருவள்ளுவரும் மக்கள் தலையிலே வரியைச் சுமத்துவதை ஒத்துக்கொள்ளவில்லை. குடிமக்கள் தலையிலே வரியைச் சுமத்தாமல் வேறு வகையிலே அரசன் பொருள் தேட வேண்டும் என்றே கூறுகின்றார்.

பொருளுக்கு உரியவர் யாரும் இல்லாமல் விடப்பட்ட செல்வம், நீர் வழியாகவும் நிலத்தின் வழியாகவும் வேற்று நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு விதிக்கப் படும் வரி, தன் பகைவர்களிடமிருந்து கப்பமாக வாங்கப்படும் பொருள் இவைகள் தாம் அரசனுக்கு உரிய செல்வம்.

உறுபொருளும், உல்கு பொருளும், ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள். (கு. 756)

இது வள்ளுவர் காட்டும் வழியாகும். இக் குறளும் மக்களிடம் நேர்முகமாக வரி வாங்கும் கொள்கையை ஒப்புக் கொள்ள வில்லை.

இயற்றலும், ஈட்டலும், காத்தலும்
காத்தவகுத்தலும் வல்லது அரசு (கு. 385)

என்ற குறளிலும் நேர்முகமாக மக்களிடம் வரி வாங்கும்படி சொல்லவில்லை. தனக்குப் பொருள் வரும் வழிகளை மேலும் மேலும் உண்டாக்குதல்; அவ்வாறு வந்த பொருளை ஓரிடத்திலே சேர்த்து வைத்தல்; சேர்த்த பொருளைப் பிறர் கவராமல் பாதுகாத்தல்; காத்த பொருளை அறம், பொருள், இன்பங்களுக்காகச் செலவழித்தல் ஆகிய இவைகளில் வல்லவனே அரசன் ஆவான். இதுவே இக் குறளின் பொருள்.

இயற்றல் என்பதற்குப் பரிமேலழகர் கொடுத்திருக்கும் விளக்கம் குறிப்பிடத்தக்கது. பொருள்களாவன: மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன: பகைவரை அழித்தலும், திறை கோடலும், தன் நாடு தலையளித்தலும் முதலாயின. இவ் விளக்கத்திலும், பொது மக்கள் தலையிலே வரியைச் சுமத்தும் செயல் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசனோ, பொதுமக்கள் ஆட்சியோ, எடுத்தவுடனே மக்களின் மேல் அளவுக்கு மீறிய வரி போட்டுப் பொருள் சேர்க்கும் முறையைப் பின்பற்றுவது அறமன்று. இவ்வுண்மையை மேற்கூறியவைகளால் அறியலாம். அறிஞர்கள் மக்கள்மேல் அதிக வரி போடுவதை எதிர்த்துவந்தனர் என்பதையும் காணலாம்.

பொதுமக்கள் ஆதரவு

முடி அரசாயினும் சரி, குடி அரசாயினும் சரி, பொது மக்களின் ஆதரவைப் பெற்ற அரசுதான் நிலைத்துநிற்கும்; எல்லா மக்களும் நல்வாழ்வு பெறத் திட்டம் வகுத்து, அதனை நன்றாக நடத்திவைப்பதே ஆட்சியின் கடமை. சாதி, மத, இன, மொழி வேற்றுமை பாராட்டாமல் அனைவர்க்கும் ஒத்த நீதி வழங்குவதே ஆளுவோர் கடமை. இத்தகைய ஆட்சியே செங்கோல் ஆட்சி, மக்கள் ஆட்சி, ஜனநாயக ஆட்சி என்று சொல்லப்படும்.

படை பலத்தையும், அதிகார உரிமையையும் காட்டி மக்களை அடக்கி ஆண்டுவிட முடியாது; நல்லாட்சிக்கு நாட்டு மக்கள் அனைவரும் அடங்கி நடப்பார்கள்; நல்லாட்சியை எதிர்த்துக் கவிழ்க்க எவராலும் ஆகாது. இந்த உண்மையை மறந்த ஆட்சி எதுவாயினும் அதற்கு ஆயுள் அற்பந்தான்.

இந்த இயற்கை உண்மையைப் பண்டைக் காலத்தமிழ் அறிஞர்கள் அரசர்களுக்கு அடிக்கடி எடுத்துக்காட்டி வந்தனர்; மன்னர்களின் ஆட்சி, கொடுங்கோல் ஆட்சியாக மாறாமல் இருப்பதற்கு அவர்களால் ஆனவரையில் அரும்பாடுபட்டு வந்தனர்.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்பவன் ஒரு பாண்டிய மன்னன். அவனுக்கு, மதுரை மருதன் இளநாகனார் என்ற புலவர் அறிவுரை கூறுவதாக ஒரு செய்யுள் புறநானூற்றில் காணப்படுகின்றது. அச் செய்யுளில் காணப்படும் அரசியல் உண்மை எக்காலத்திற்கும் ஏற்றதாகும்.

கடுமையான கோபத்தையும், கொல்லுந் தன்மையும் உள்ள யானைப்படையிருந்தால் என்ன? விரைந்து செல்லும் நெஞ்சுரம் உள்ள குதிரைப்படையிருந்தால் என்ன? நீண்ட கொடியை உடைய உயர்ந்த தேர்ப்படை இருந்தால் என்ன? அஞ்சாத நெஞ்சும் உள்ள போரை விரும்புகின்ற வீரர்கள் நிறைந்த காலாட்படை இருந்தால் என்ன? இவைகள் எவ்வளவு சிறந்திருந்தாலும் அதனால் ஆட்சிக்குப் பெருமையில்லை. படை பலத்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. அறநெறி தவறாமையே ஆட்சிக்கு அடிப்படையாகும்; அதுவே அரசர்க்கு வெற்றி தருவதாகும்.

கடும் சினத்த கொல்களிறும்,
கதழ் பரிய கலிமாவும்,
நெடும் கொடிய நிமிர்தேரும்,
நெஞ்சுடைய புகல் மறவரும், என,
நான்குடன் மாண்டது ஆயினும், மாண்டஅறநெறி

முதற்றே அரசின் கொற்றம். (புறம், 55)

இதுதான் மதுரை மருதன் இளநாகனார் அரசனுக்கு உரைத்த அறவுரை. இது பழந்தமிழ் மக்களின் அரசியல் அறிவை எடுத்துக்காட்டுகின்றதன்றோ?

பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்தைப் பாடிய புலவர் பெருங்குன்றூர்க் கிழார். குடக்கோ இளஞ்சேரல் இரும் பொறையின் மேல் பாடப்பட்டது இந்த ஒன்பதாம் பத்து. இதில், சேரனுக்கு அப்புலவர் கூறும் அரசியல் அறிவுரை குறிப்பிடத் தக்கது.

மிகுந்த வேற்படைகளையுடைய இரும்பொறையே! உன்னுடைய செங்கோல் முறையைக் கண்டு மகிழ்ந்து, ஒவ்வொரு நாளும் உனது நாட்டினர் உன் மேல் அன்பு மிகுந்து உன்னை வணங்கிப் பாராட்டுவார்களாக! உயர்ந்த இவ்வுலகில் உள்ள சான்றோர்கள் உன்னைப் போற்றுவார்களாக! அரசியலிலே எத்தகைய தவறும் ஏற்படாமல் பாதுகாப்பாயாக! உனக்கு நாட்டு மக்களின் அன்பும் ஆதரவும் இருப்பதனால், உன் பகைவருடன் செய்யும் போரிலே நீ வெற்றி பெறுவாயாக! நீயும் நீண்ட நாள் நோயின்றி- எத்தகைய துன்பமும் இன்றி – வாழ்வாயாக!

பல்வேல் இரும்பொறை! நின்கோல் செம்மையின்நாளின்
நாளின் நாடுதொழுது ஏத்த,
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ,
அரசியல் பிழையாது, செருமேந் தோன்றி,
நோயிலை ஆகியர் நீயே.
(பதிற்றுப்பத்து. 89)

இப்பதிற்றுப்பத்துப் பாடலும் நாட்டு மக்கள் ஆதரவும் அன்பும் பெற்ற அரசனே நிலைத்து வாழ முடியும் என்று கூறிற்று. நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த என்ற வரியில் அமைந்த ஆழமான பொருள், என்றும் அழியாத உண்மையாகும்.

குடிகளின் ஆதரவைப் பெற்ற அரசன்தான் நிலைத்து வாழ முடியும் என்ற கருத்தை வள்ளுவரும் வலியுறுத்துகின்றார்:

தனது நாட்டுக் குடிமக்களின் கருத்தைத் தழுவி, செங்கோல் நடத்தும் அரசனது அடியை உலகம் ஆதரித்து நிற்கும்.

குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (கு. 544)

இக்குறள் குடிமக்களின் கருத்தைத் தழுவி ஆளுவதே சிறந்த ஆட்சியென்பதை எடுத்துக்காட்டிற்று.

அரசனுக்குப் போரிலே வெற்றி தருவது அவனுடைய வேற்படை அன்று. அவனுடைய செங்கோல் தான் வெற்றி தரும்; அதுவும் சிறிதும் வளையாமல் இருக்க வேண்டும்.

வேல் அன்று வென்றி தருவது, மன்னவன்கோல்;
அதூஉம் கோடாது எனின். (கு. 546)

இக்குறள், அரசனுக்கு வெற்றியளிப்பது அவனுடைய செங்கோல் தான்; படை வலிமையால் மட்டும் பயன் இல்லை என்று கூறிற்று.

குடிமக்களைத் தழுவி நடக்காத அரசுக்கு வெற்றியில்லை; எவ்வளவு ஆயுத பலம் படைத்திருந்தாலும் கொடுங்கோல் அரசுக்குக் கொற்றமில்லை; வாழ்வும் இல்லை. இக் கருத்தையே மேலே காட்டிய இரண்டு குறள்களும் வலியுறுத்துகின்றன.

பண்டைத் தமிழ்ப் புலவர்களிலே பலர் சிறந்த அரசியல் அறிஞர்களாக இருந்தனர் என்பதை அவர்கள் பாடல்கள் காட்டுகின்றன. அவர்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டிருந்தனர். அடிக்கடி அரசர்களுக்கு அரசியல் நீதிகளை அஞ்சாமல் எடுத்துரைத்து வந்தனர்.

அரசர்கள் எவ்வளவு வலிமையுள்ளவர்களாக இருந்தாலும், அறிவுள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் சான்றோரைத் துணையாகக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் சொல்வழி ஆட்சி புரியவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

தம்மைக்காட்டிலும் கல்வியறிவுகளிலே சிறந்த பெரியோர்களைத் தமக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்; அப்பெரியோர்கள் காட்டும் வழியிலே நடக்க வேண்டும்; இதுவே அரசர்களுக்கு எல்லா வலிமைகளிலும் சிறந்த வலிமையாகும்.

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையுள்
எல்லாம் தலை. (கு. 444)

தான் தவறு செய்யும்போது சிறிதும் அஞ்சாமல், கண்டித்துப் புத்தி புகட்டுவோரைத் துணையாகக் கொள்ளாத வேந்தன் சிறிதும் பாதுகாப்பற்றவன்; அவனைக் கெடுப்பதற்குப் பகைவர் களே வேண்டாம், அவனே அழிந்து போவான்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பார்
இலானும் கெடும். (கு. 448)

மேலே கூறியவைகளைக் கொண்டு பண்டைப் புலவர்கள் அரசர்களுக்கு வலியுறுத்தி வந்த கருத்துக்களைக் காணலாம்.

படைபலத்தைக் காட்டி மன்னர்கள் மக்களை அச்சுறுத்தித் தங்கள் விருப்பப்படி ஆள முடியாது. மக்கள் ஆட்சியினர் குடிமக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் மக்களாட்சி- குடிமக்கள் ஆட்சி- ஜனநாயக ஆட்சி- சுய ஆட்சி என்ற சொற் களைக் கூறிக்கொண்டு ஏமாற்ற முடியாது. நாட்டு மக்களின் ஒத்துழைப்பைப் பெறாமல் அரசாள முடியாது; ஆட்சியிலே நிலைக்க முடியாது. ஆட்சி பீடத்திலே அமர்ந்திருந்தாலும் நீடித்து வாழ முடியாது. இவ்வுண்மையைப் பழந்தமிழ் இலக்கியங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *