பழந்தமிழர் அரசியல்
சாமி. சிதம்பரனார்

வேந்தர்களின் வாழ்க்கை முறை

பண்டைத் தமிழ் மன்னர்கள் எப்படி வாழ்ந்து வந்தனர்? ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்து வந்த செயல்கள் யாவை? நாட்டுக்கும் மக்களுக்கும் அவர்கள் செய்து வந்த பணிகள் எவை? இக் கேள்விகளுக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு விடையளிக்கின்றன.

அரசர்களின் அன்றாட வேலைகள்

தமிழரசர்கள் அன்றாடம் செய்து வந்த வேலைகளைப் பற்றிப் புறநானூற்றுப் பாட்டு ஒன்று புகல்கின்றது. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் பாட்டு அது. சோழன் நலங்கிள்ளி ஒவ்வொரு நாளும் செய்யும் வேலைகளைப் பற்றி அச்செய்யுளிலே கூறுகிறார் புலவர். பொதுவாக அரசர்களின் அன்றாட நடவடிக்கைகளை அறிந்து கொள்ள அச்செய்யுள் நமக்குத் துணை செய்கின்றது. இது புறநானூற்றின் 29- வது பாட்டு.

காலையிலே யாவரும் காணும்படி காட்சிக்கு எளியனாய் வீற்றிருப்பாய்! தலை மயிரிலே, பொன்னாலாகிய தாமரையையும் பொன் மாலையையும் அணிந்திருக்கும் பாணர்கள் கூட்டம் உன்னை முற்றுகையிடும். அவர்களுக்கு வேண்டுவன அளித்த பின்னர் அக்கூட்டம் நீங்குவதாக!

பின்னர், உனது மார்பால், உனது உரிமை மகளிரின் தோள்களைத் தழுவிக்கொண்டு சிறிதுபொழுது ஓய்வு எடுத்துக் கொள்வாயாக!

அதன் பின் சிறிதும் வெறுப்பதற்கு இடமில்லாத உனது கோயில் வாயிலிலே இனிதாக முரசொலிப்பதாக! தீயோரைத் தண்டிப்பாய்; நடுநிலையோர்க்கு இரங்கி உதவி செய்வாய். இவ்வாறு இடையறாமல் முறை செய்வதிலே சுறுசுறுப்புடன் இருப்பாய். நல்வினையால் நன்மையில்லை, தீவினையால் தீமையும் இல்லை என்று வீண் வாதம் பேசுவோருடன் தொடர்பு கொள்ளாது ஒழிக!

உன்னுடைய படை வீரர்கள் இன்புற்று வாழும்படி அவர்களுக்கு நல்ல இருக்கையும், வேண்டும் பொருள்களும் அளிப்பாயாக!

உனது சுற்றத்தார் அனைவரும் வறுமையின்றி இன்பத்திலே திளைத்து வாழ்வார்களாக!

நீ தேடிப் பாதுகாத்த செல்வம், உனக்கு இவ்வுலகிலே அழியாத புகழை நிலைநிறுத்தும் வழியிலே செலவழிக!

இக்கருத்துக்கள் முதுகண்ணன் சாத்தனார் பாடலில் காணப்படுவன.

புறநானூற்றில் உள்ள 239- வது செய்யுளும், அரசர்களின் நடத்தையை அறியத் துணை செய்கின்றது. இச்செய்யுள் பேர் எயில் முறுவலார் என்னும் புலவர், நம்பி நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனைக் குறித்துப் பாடிய பாடலாகும். இப்பாண்டியன் குறுநில மன்னனாகக் காணப்படுகின்றான். இவனது வாழ்க்கையைப் பற்றிக் கூறியிருப்பதும், பொதுவாக மன்னர்களின் வாழ்க்கையை அறிவதற்கு உறுதுணையாகும்.

வளையல்களை அணிந்த மகளிரின் தோள்களைத் தழுவிக் கொண்டபின், மலர்ச் சோலைகளின் மலர்களைச் சூடி மகிழ்ந்தான்; குளிர்ந்த நறுமணச் சாந்தைப் பூசிக் கொண்டான்; பகைத்தவர்களை அடியோடு அழித்தான்; நண்பர்களைப் புகழ்ந்து பாராட்டினான்; இவர் நம்மினும் வலியவர் என்று எண்ணி யாருக்கும் வணக்கங் கூறமாட்டான்; இவர் நம்மினும் எளியவர் என்று கருதி யாரையும் பழிக்கமாட்டான்; பிறரிடம் சென்று தனக்கு உதவ வேண்டுமென்று இரந்தறியான்; தன்னிடம் வந்து உதவி கேட்டு இரந்தவர்க்கு இல்லையென்று சொல்லி அறியான்; அரசர்களின் சபைகளில் எல்லாம் தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசும்படி வாழ்ந்தான்; எத்தகைய பெரும் படை எதிர்த்து வந்தாலும் புறங்கொடாமல் போர் செய்தான். போரிட்டுப் புறமிட்டோடும் படைகளைப் பின் சென்று தாக்காமல் அவைகள் ஓடுவதைப் பார்த்து நின்றான்; விரைந்து செல்லும் குதிரையில் ஏறியூர்ந்தான்; நீண்ட தெருவிலே தேரேறிச் சென்றான்; உயரமான யானையிலே ஏறிச் சென்றான். இனிய மது நிறைந்த குடங்களை அனைவர்க்கும் வழங்கினான். பாணர்கள் மகிழும் படி அவர்கள் பசி நீங்க விருந்திட்டான்; தெளிவான அறமொழி களையே கூறினான்; இவ்வாறு உயர்ந்த பண்புள்ளவன் செய்யக் கூடியன எவையோ அவைகளையெல்லாம் செய்தான். இதுதான் அச்செய்யுளிலே அமைந்துள்ள பொருள்.

தொடியுடைய தோள்மணந்தனன்;
கடிகாவின் பூச்சூடினன்;
தண்கமழும் சாந்துநீவினன்;
செற்றோரை வழிதபுத்தனன்;
நட்டோரை உயர்வுகூறினன்;
வலியர்என வழிமொழியலன்;
மெலியர்என மீக்கூறலன்;
பிறரைத்தான் இரப்பு அறியலன்;
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்;
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;
வருபடை எதிர்தாங்கினன்;
பெயர்படை புறம்கண்டனன்;
கடும்பரிய மாக்கடவினன்;
நெடும்தெருவில் தேர்வழங்கினன்;
ஓங்குஇயல் களிறு ஊர்ந்தனன்;
தீம்செறி தசும்பு தொலைச்சினன்;
பாண்உவப்பப் பசிதீர்த்தனன்;
மயக்குஉடைய மொழி விடுத்தனன்;
ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன்.

இதுவே அப்பாடல்.

பண்டைத் தமிழ் மன்னர்களின் வாழ்வு பெரும்பாலும் உலகின்பத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது; தாம் இன்புற்று வாழ்வதையும், தம்மைப் போல் மற்றவர்களையும் இன்புற்று வாழச் செய்வதையுமே அவர்கள் வாழ்வின் பயன் என்று கருதினர். மதத்தைப் பற்றியோ, வேறு ஆத்மீகத் துறை பற்றியோ அவர்கள் அவ்வளவாகக் கவலை கொண்டிருக்க வில்லை. இவ் உண்மையை மேலே காட்டிய புறநானூற்றுச் செய்யுட்களால் காண்கின்றோம்.

ஆயினும், பண்டைத் தமிழ் வேந்தர்கள் கடவுளைப் பற்றிக் கவலையற்றிருந்தார்கள்; அவர்கள் நாத்திகர்களாக இருந்தனர் என்று கூறிவிட முடியாது. அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை யிருந்தது; இறைவழிபாடு செய்து வந்தனர். ஆனால், இறை வணக்கமும் நம்பிக்கையும் தனிப்பட்டவர்களின் உரிமை என்று கருதப்பட்ட காரணத்தால், மன்னர்களைப் பற்றிப் பாடிய புலவர்கள் அவர்களுடைய ஆன்மீக ஒழுக்கத்தைப் பற்றி- கடவுள் கொள்கைபற்றி- அவ்வளவாகப் பாடவில்லை என்று தான் எண்ணவேண்டும்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிக் காரிகிழார் பாடிய பாடல் புறநானூற்றின் ஆறாவது பாட்டு. இதிலே, அம்மன்னனுடைய இறையன்பைப் பற்றியும் புலவர் குறிப்பிட்டுள்ளார்.

பணியியர் அத்தைநின் குடையேமுக்கண் செல்வர் நகர்வலம் செயற்கே

என்பது அப்பாடலின் பகுதி. உனது பூச்சக்கரக் குடை, சிவபெருமானது கோயிலை வலம் வரும்பொழுது மட்டும் தாழ்க என்பதே இதன் பொருள். இதனால் இப் பாண்டியன் சிவனடியான் என்பதை அறியலாம். பண்டை மன்னர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகத்தான் இருந்தனர் என்பதற்கு இப் பாடல் ஒன்றே போதும்.

கலை வளர்த்தனர்

பண்டைத் தமிழ் வேந்தர்கள் கலைகளைச் சுவைப்பவர் களாக இருந்தனர்; கலைகளிலே அவர்களுக்கு அளவு கடந்த ஆர்வம். கலைகளைச் சிறந்த பொழுதுபோக்காகக் கொண்டி ருந்தனர். கலைஞர்களைப் போற்றினர்; அவர்கள் வறுமையால் வாடாமல் காப்பாற்றினர்; கலைஞர்களைப் போற்றுவதால் தான் கலைகள் வளர்ந்தோங்கும் என்ற உண்மையை உணர்ந் திருந்தனர்.

உழைக்கும் பொதுமக்களை ஊக்கப்படுத்துவது கலைகள்; அவர்கள் ஓய்வு நேரத்தை இன்பமாகக் கழிக்க உதவுவது கலைகள்; அவர்களுக்குள் ஒற்றுமையை உண்டாக்குவது கலைகள். இந்த உண்மையை உணர்ந்தே மன்னர்கள் கலைகளை வளர்த்தனர்; கலைஞர்களைப் பாதுகாப்பதை முதற் கடமை யாகக் கொண்டிருந்தனர்.

நரம்பின் முரலும் நயம்வரும் முரற்சிவிறலியர், வறும்கைக் குறுந்தொடி செறிப்பப்பாணர் உவப்பக் களிறுபல தரீஇ (17-19)

என்பது மதுரைக்காஞ்சி.

யாழைப் போன்ற இனிய குரலையுடைய விறலியர்கள் வெறுங்கையிலே பொன் வளையல்களை அணியும்படி செய் வான்; பாணர்கள் மகிழும்படி, யானைகள் பலவற்றைப் பரிசாகக் கொடுப்பான். இதுவே மேலே காட்டிய அடிகளின் கருத்து.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் கலைஞர்களைப் போற்றிய திறத்தை இவ்வாறு குறித்தார் மாங்குடி மருதனார் என்னும் புலவர்.

கரிகாற் சோழன் கலைஞர்களை எவ்வளவு அன்புடன் போற்றிப் பாதுகாத்தான் என்பதைப் பொருநர் ஆற்றுப் படையிலே தெளிவாகக் காணலாம். ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் கரிகாற் பெருவளத்தானுடைய கலையுணர்ச்சியைப் பாராட்டிப் பாடியிருக்கின்றார்.

கரிகாலனிடம் பரிசு பெற்று வந்தான் ஒரு பொருநன். அவன் மற்றொரு பொருநனிடம் கரிகாலன் கொடைச் சிறப்பை எடுத்துரைக்கின்றான். இவ்வாறு அமைந்த பகுதியிலே கரிகாலனின் கலைக் காதலை உணர்த்துகின்றார் முடத்தாமக் கண்ணியார்.

பழங்கள் பழுத்துக் கனிந்த மரத்தை நாடிச் செல்லும் பறவைபோல நான் அவனை நாடிச் சென்றேன். அவனுடைய கோட்டை வாயிற் கதவு இரவலர்க்காக எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கும். கலைஞர்களாகிய இரவலர்களைக் காவலர்கள் தடுக்க மாட்டார்கள். நான் அவனுடைய கோட்டை வாயிலைக் கடந்து உள்ளே சென்ற மகிழ்ச்சியால், இளைத்த என் உடம்பு பருத்தது. விடியற்காலத்திலே என் உடுக்கையை அடித்துத் தாளத்துடன் யான் பாடினேன். உடனே அவன் என்னை இதற்குமுன் பழகிய உறவினன் போல் அன்புடன் அழைத்தான். இனிய சொற்களைக் கூறி வரவேற்றான். தன் கண்ணால் காணும்படி அண்மையிலேயே இருக்கச் செய்தான். அன்புடன் பார்த்தான். ஈரும் பேனும் குடியிருந்த எனது கந்தையுடையைக் களையச் செய்தான். நுண்ணிய மெல்லிய பாம்புச் சட்டை போன்ற வழவழப்பான ஆடையை அளித்தான். நல்ல மாளி கையிலே வைத்து ஏவல் செய்ய மகளிரையும் அமர்த்தினான். அவர்கள் பொற்கலத்திலே இனிய மதுவை நிரப்பித் தந்தனர். வேண்டுமளவு கொடுத்தனர். அதனை உண்டுயானும் சுற்றமும் களைப்பு நீங்கினோம்.

பிறகு மன்னன் என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் அழைத்தான். அருகு சென்றோம். எங்களைப் பற்றி இன்னார் என்று அரசனுக்கு அறிமுகம் செய்தனர். நாங்களும் அரசனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டோம். பின்னர் எங்களுக்கு வேவிறைச்சி, சூட்டிறைச்சி, வெவ்வேறு சுவை பொருந்திய பலகாரங்கள் முதலியவற்றை அளித்து உண்ணச் செய்தான். நாங்களும் உண்டு மகிழ்ந்தோம்.

ஒவ்வொரு நாளும், நாங்கள் எங்கள் கலைத் திறமையைக் காட்டினோம்; எங்கள் பாடல் ஆடல்களையெல்லாம் நடத்திக் காட்டினோம். இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. ஒவ்வொரு நாளும் அவன் அளித்த நல்ல விருந்தை உண்டு மகிழ்ந்து பொழுது போக்கினோம்.

இப்படிப் பல நாட்கள் விருந்திலே திளைத்து வெறுப் படைந்த நானும் என் சுற்றமும், எங்கள் ஊருக்குச் செல்ல விரும்பினோம். இதை அரசனிடம் அறிவித்தோம். அவன் எங்களை விட்டுப் பிரிய மனமற்றவன் ஆனான். எங்களை விட்டுப் பிரிகின்றீரோ வென்று சினந்தவனைப் போல் கேட்டான். பின்னர் யானைகளையும், ஆடை அணிகளையும் ஏராளமாக அளித்தான்; நாங்களும் எங்கள் ஆசை தீர அவைகளை ஏராளமாகப் பெற்றோம். இனி வறுமை எங்களை அணுகாத அளவுக்குப் பரிசு பெற்றோம்.

இவ்வாறு கரிகால் பெருவளத்தான் கலைஞர்களைப் புரந்த செயலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பொருநர் ஆற்றுப் படையின் 64-வது அடிமுதல் 129-வது அடிகள் வரையில் உள்ள பகுதியிலே இதனைக் காணலாம்.

கலைக்காக உயிர் கொடுத்தோன்

பாரி என்னும் வள்ளல், கலைக்காகத் தன் உயிரையே கொடுத்த வரலாறு புறநானூற்றில் காணப்படுகின்றது. பாண்டி நாட்டில், பறம்பு நாடு என்னும் பகுதி பாரிக்கு உரியது. அது முந்நூறு ஊர்களைக் கொண்ட ஒரு சிறுநாடு. பாரி, தன்னைப் பாராட்டிப் பாடி வரும் புலவர்களுக்கும், கலைஞர்களுக்கும், அவ்வூர்கள் அனைத்தையும் பரிசிலாகக் கொடுத்துவிட்டான். அவன் வாழ்ந்த பறம்பு மலை ஒன்று தான் அவனிடம் மீதமாக இருந்தது.

இந்த நிலையில், பாரியின் புகழைக் கண்டு பொறாமை கொண்ட மூவேந்தர்களும், அவன் மீது படையெடுத்து வந்தனர். பறம்பு மலையை முற்றுகையிட்டனர். பாரியைப் பணிய வைக்க முடியவில்லை. அப்பொழுது பாரியின் நண்பராகிய கபிலர் என்னும் புலவர் பெருமான் மூவேந்தர்களிடம் வந்தார். அவர்களிடம் பாரியின் வீரத்தையும், கொடைச் சிறப்பையும் எடுத்துக் கூறினார்.

நீங்கள் எவ்வளவு நாள் முயன்றாலும் பாரியைப் பணிய வைக்க முடியாது. நீங்கள் முறுக்கேறிய நரம்பையுடைய யாழை வாசித்துக்கொண்டு உமது விறலியர் உமது பின்னே வர ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும், அவனிடம் செல்லுங்கள். அப்பொழுது அவன் தனக்குரிய பறம்பு மலையையும், நாட்டையும் ஒன்றாகக் கொடுத்துவிடுவான். பறம்பு மலையை மட்டும் அல்ல; அவனையே கேட்டாலும் கொடுத்து விடுவான்; என்னையும் கூடக் கொடுத்து விடுவான் என்று கூறினார்.

கபிலர் சொல்லியதைத் தவிர, பாரியை வெற்றி கொள்ள அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆதலால், மூவேந்தர் களும் கலைஞர்களைப் போல உருக்கொண்டனர். இரவலர்களாய்ப் பாரியிடம் சென்றனர். பாடினர்; ஆடினர்; பாரி மகிழ்ச்சியடைந்தான். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அவர்கள் உன்னையே எங்களுக்குத் தரவேண்டும் என்று வேண்டினர். அவ்வாறே அவன் தன்னை அவர்களிடம் ஒப்படைத்தான். அவர்கள் அவனை இவ்வாறு ஏமாற்றிக் கொன்றனர்; அல்லது சிறை வைத்தனர். இது பாரியைப் பற்றி வழங்கும் வரலாறு.

மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்தாளில் கொள்ளலிர்; வாளில் தாரலன்;
யான்அறிகுவன் அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சிறுயாழ் பண்ணி,
விரைஒலி கூந்தல்நும் விறலியர் பின்வர,
ஆடினிர், பாடினிர், செலினே,
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே

என்பது புறநானூற்றின் 109- வது பாட்டு. கபிலர் பாடியது.

கடந்து அடு தானை மூவிரும் கூடிஉடன்றனிர் ஆயினும், பறம்புகொளற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும் பாரியும் உளமேகுன்றும் உண்டு; நீர் பாடினீர் செலினே

என்பதும் கபிலர் பாட்டு. புறநானூற்றின் 110-வது பாடல். இப்பாடலில் யாமும் பாரியும் உளமே, குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே என்ற அடிகள் குறிப்பிடத்தக்கது. நீங்கள் அவனைப் புகழ்ந்து பாடிக் கொண்டு சென்றால், பாரி, தன்னையும், பறம்பையும், அவன் நண்பனாகிய என்னையும் உங்களுக்கு அளிப்பான் என்ற கருத்தையுடையன.

இப்பாடல்கள் இரண்டும், மேலே கூறிய பாரியின் வரலாற்றை வலியுறுத்துகின்றன. பாரியின் வரலாற்றால், பண்டைக்காலத் தமிழ் மன்னர்களிலே பலர், கலை வளர்ச்சிக் காகத் தங்கள் உயிரையும் கொடுத்தனர்; அவர்கள் கலைகளைத் தங்கள் உயிரினும் உயர்ந்தனவாக எண்ணினர், வளர்த்தனர் என்பதைக் காணலாம்.

பதிற்றுப்பத்தின் மூன்றாவது பத்து பல்யானைச் செல் கெழுகுட்டுவனைப் பற்றிப் பாடப்பட்டது. பாடியவர் பாலைக் கௌதமனார் என்னும் புலவர். அவர், குட்டுவனுடைய கலை ஆர்வத்தையும், கலைஞர்களைக் கைவிடாமல் காப்பாற்றும் சிறப்பையும் பற்றியே பாராட்டிப் பாடுகின்றார்.

நாட்டிலே மழைவளங்குறைந்து வறட்சியும், பஞ்சமும் தோன்றிய காலத்திலும் நீ வாத்தியங்களை வாசித்துப் பாடும் பாடகர்களைக் கைவிட மாட்டாய்; அவர்களுடைய பசி நீங்க உணவளித்துப் பாதுகாப்பாய்; அவர்கள் மகிழும்படி பெரும் ஆடை அணிகளையெல்லாம் அளிப்பாய். உன்னுடைய கொடை யினால் அக் கலைஞர்கள் பஞ்சம் பசி அறியாமல் உண்டு மகிழ்ந்து கலை வளர்ப்பார்கள் என்ற கருத்தைப் பாலைக் கௌதமனார் வெளியிடுகின்றார்.

அலம்தலை உன்னத்து அம்கவடு பொருந்திசிதடி கரையப், பெருவறம் கூர்ந்து.
நிலம்பைது அற்ற புலம்கெடு காலையும்,
வாங்குபு தகைத்த கலப்பையர், ஆங்கண்மன்றம் போந்து மறுகுசிறை பாடும்வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்பொன்செய் புனைஇழை ஒலிப்பப் பெரிது உவந்துநெஞ்சுமலி உவகையர் உண்டு மலிந்து ஆடச்சிறுமகி ழானும் பெரும்கலம் வீசும்போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ.

(பதிற்றுப்பத்து, 23)

இவ்வடிகள் சேரர்களின் கலைப்பற்றைக் காட்டுகின்றன. அவர், நாட்டிலே பஞ்சம் பரந்திருந்த காலத்திலும் கலைஞர்களைக் கைவிடாமல் காப்பாற்றினர் என்ற உண்மையை உரைக்கின்றன.

மேலே காட்டியவைகளால் தமிழ்நாட்டு மூவேந்தர்களும், பெருநிலக் கிழவர்களாகிய சிற்றரசர்களும் கலை வளர்ச்சியிலே கருத்துள்ளவர்களாயிருந்தனர்; கலைஞர்களுக்கு உதவுவதையே தங்கள் சிறந்த முதன்மையான பணியாகக் கொண்டிருந்தனர் என்ற உண்மையை உணரலாம்.

வீர வாழ்வு

பண்டைக்கால மன்னர்கள், நோயினால் வருந்தி இறப்பதை விரும்பவில்லை. அவ்வாறு இறப்பதை இழிவாக எண்ணினர். இப்படி இறப்போர்க்கு மறுவுலகச் செல்வம் கிடைப்பதும் இல்லையென்று நம்பினர். போரிலே இறப்பவர் களுக்குத்தான் வீர சுவர்க்கம் உண்டென்று கருதினர். போரிலே மாண்டு போகாமல் நோயுற்று மாளும் மன்னர்களின் உடலை அப்படியே அடக்கம் பண்ண மாட்டார்கள். அந்தணர்களால், குறிப்பிடப்பட்ட நல்ல நேரத்திலே, தருப்பைப் புல்லிலே அவ் வுடம்பைக் கிடத்துவார்கள்; வாளால் துண்டாக்குவார்கள். அதன் பின்பே அவ்வுடம்பை அடக்கம் செய்வார்கள். இவ் வழக்கம் தமிழகத்து மன்னர் மரபில் இருந்தது என்பதைப் புறநானூற்றின் 63-வது பாடலால் காணலாம். இப் பாடல் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றி ஔவையார் பாடியது.

உன்னுடன் போரில் எதிர்த்தோர் உன்னை வெல்ல முடியாது. அவர்கள் வீர சுவர்க்கம் செல்வது உறுதி. போரிலே புறமிட்டு ஓடித் தமது வீட்டிலேயே நோயால் இறந்தோர்க்கு மறுமையில் நன்மையில்லை. ஆதலால், நோயால் இறந்த மன்னர்களை அந்தணர்கள் குறித்த நேரத்திலே தருப்பைப் புல்லிலே கிடத்துவார்கள். போரிலே மாண்ட மன்னர்கள் அடையும் நல்லுலகம் செல்க என்று கூறி அவர்கள் உடம்பை வாளால் துண்டு போடுவார்கள்; அதன் பின் அடக்கம் செய்வார்கள். உன்னை எதிர்த்த வேந்தர்கள் இத்தகைய இழிவுக்கு ஆளாக மாட்டார்கள். உன்னால் போரிலே மடிந்து நல்லுலகைப் பெறுவார்கள் என்ற கருத்தை அப் புறநானூற்றுச் செய்யுள் வெளியிடுகின்றது.

திண்பிணி முரசம் இழும்என முழங்கச்சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர்தார் தாங் குதலும் ஆற்றார், வெடிபட்டுஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்,
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்காதல் மறந்தவர் தீதுமருங்கு அறுமார்,
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,
மறம் கந்தாக நல்அமர் வீழ்ந்தநீள்கழல் மறவர் செல்வுழிச் செல் கெனவாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ. (93)

இதுவே அந்தப் புறநானூற்றுப் பாடல்.

வீரப் போரில்தான் மன்னர்கள் மாளவேண்டும் என்று நம்பியதற்குக் காரணம் இருக்கவேண்டும். எல்லா மன்னர்களும் சண்டையில்தான் சாகவேண்டும் என்ற கட்டாயமிருந்தால் நாட்டிலே ஒருநாளும் சமாதானம்- அமைதி- நிலைக்க முடியாது. நாட்டிலே செல்வமோ, கலைகளோ வளர முடியாது. நாட்டு மக்களும் அமைதியுடன் வாழ முடியாது. ஆதலால் இதற்குக் காரணம் வேறு உண்டு என்பதில் ஐயம் இல்லை.

நாம் காக்கும் நாட்டைப் பகைவர்களின் கொள்ளைக்கு இடமாகாதபடி பாதுகாக்கவேண்டும்; நமது நாட்டுக் குடி மக்களுக்கு எவராலும் இன்னலிழைக்க முடியாமல் காப்பாற்ற வேண்டும்; நமது உயிரைப் பெரிதாக எண்ணாமல் நாட்டின் நன்மையையே பெரிதாக மதிக்க வேண்டும் என்பதே பண்டைத் தமிழ் மன்னர்களின் கொள்கை. இதனால் தான் இத்தகைய கொடிய சபதத்தை மன்னர்கள் மேற் கொண்டிருந்தனர் என்பதே உண்மையாகும்.

வேந்தர்கள் நாட்டிற்கு நன்மையான செயல்களைச் செய்வதிலே எப்பொழுதும் ஈடுபட்டிருக்க வேண்டும்; உயிர் போவதாயினும் நற்செயல்களை நிறைவேற்றப் பின் வாங்கக் கூடாது; தம் உடலின்பம் ஒன்றுக்காகவே உயிர் வாழ்ந்து, இறுதியில் நோய்வாய்ப்பட்டு உயிரிழப்போர்க்கு இவ்வுலகில் புகழ் இல்லை; அவர்கள் பிறந்ததனால் யாருக்கும் எப்பயனும் இல்லை என்ற கருத்தையே மேலே காட்டிய நம்பிக்கை வலியுறுத்துவதாகும்.

மும்முரசு முழக்கம்

ஒவ்வொரு நாளும் காலையிலே, அரண்மனை வாசலிலே மூன்று வகையான முரசுகள் முழங்கிக்கொண்டிருக்கும். இம் மூன்று முரசுகளுக்கும் நியாய முரசு, வீர முரசு, தியாக முரசு என்று கூறுவர். இம் முரசுகளின் முழக்கமும், அரசனுடைய அன்றாட வேலைகளைக் குறிப்பன என்றே கூறலாம்.

அரசன் நீதி தவற மாட்டான்; நீதி தவறுவோரைத் தண்டிப்பான்; அறநெறியிலே நடக்கும்படி செய்வான்; ஆதலால், நீதிமுறை வேண்டுவோர், தாராளமாக அரசனிடம் வந்து முறையிட்டுக் கொள்ளலாம் என்பதைக் குறிப்பதற்கே நியாய முரசு அடிக்கப்பட்டது.

அரசன் அக்கிரமம் செய்வோர்க்கு அடிபணிய மாட்டான்; பொதுமக்களை நல்வாழ்வு வாழச் செய்வதற்கே உயிர் வாழ்கின்றவன்; நாட்டின் மீது படையெடுத்து வரும் பகைவர்களுக்கு அஞ்சமாட்டான்; அவர்களை எதிர்த்து விரட்டியடிக்கும் இயல்புள்ளவன் என்பதற்காகவே வீரமுரசு முழங்கிக் கொண்டிருக்கும்.

அரசன் தந்நலங் கொண்டவன் அல்லன்; மக்களின் நன்மைக்காகவே உயிர் வாழ்கிறவன்; மக்களுக்கு வரும் தீங்கை உயிர் கொடுத்து நீக்கும் உள்ளம் படைத்தவன்; வறுமைத் துன்பத்தோர்க்குப் பொருள் வழங்கிக் காப்பாற்றுவான்; புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லையென்னாமல் கொடையளிக்கும் இயல்புள்ளவன்; உடல், பொருள், ஆவி மூன்றையும், நாட்டுக்காகவும், நாட்டு மக்கள் நன்மைக்காகவும் அர்ப்பணிக்கும் பண்புள்ளவன் என்பதற்காகவே தியாக முரசு அடிக்கப்பட்டு வந்தது.

இன்றும் கூட, அர்த்தம் இல்லாமலே, அரசர் இல்லாத பழைய அரண்மனை வாசல்களில் முரசங்கள் முழங்குவதைக் காணலாம். இதைப் பழமையின் சின்னம் என்று தான் கூறவேண்டும்.

பண்டைத் தமிழ் வேந்தர்கள் தங்கள் வாழ்நாளைப் பயன் உள்ள வழியிலே கழித்தனர். வறியோர்க்கு வழங்குவது, கலைஞர்களைக் காப்பது, அறத்தைப் பாதுகாப்பது, தாமும் இன்பம் அனுபவிப்பது, தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்று வள்ளுவர் கூறியதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்வது- இவைகளைப் பழந்தமிழ் மன்னர்கள் பின்பற்றி வாழ்ந்தனர். ஆதலால்தான் அவர்கள் மக்களிடம் மதிப்புப் பெற்றுத் தெய்வப்பிறவியாக மதிக்கப்பட்டு வாழ்ந்தனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *